பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 9, 2020

கண்ணன் பாட்டு - பகுதி 5


                                                       கண்ணன் பாட்டு - பகுதி 5
9. தீராத விளையாட்டுப் பிள்ளை.

            கண்ணனை உரலில் கட்டி தாய் எசோதை அவன் விஷமத்தை அடக்க நினைக்கிறாள். ஆனால் அவனோ ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை என்று மகிழ்ந்து போகிறார் பாரதி. கோகுலத்துப் பெண்களுக்கு இவன் அளிக்கும் அன்புத் தொல்லை அளவற்றதாம்.

            தின்பதற்கென்று ஏதேனும் பழத்தைக் கொண்டு வந்து அவர்களிடம் தருவானாம்; அவர்கள் அதைத் தின்ன முயற்சிக்கும்போது அதைத் தட்டிப் பறித்து விடுவானாம். அவனை முகஸ்துதி செய்து போற்றினால், பழத்தை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பானாம்.

            அவன் பலவிதங்களிலும் செய்யும் விஷமங்களையெல்லாம் படிப்படியாகச் சொல்லி அவன் குரும்புத் தனத்தை அந்த கோகுலத்துப் பெண்கள் மகிழ்ந்ததைப் போலவே கவிஞரும் மகிழ்ந்து போகிறார்.

            தொடர்ந்து அடுத்த ஐந்து பாடல்களும் (10 முதல் 14 வரை) “கண்ணனைக் காதலனாக” வருணித்துப் பாடப்பட்ட பாடல்கள், தொடர்ந்து ஒரு பாடல் (பாடல் 15) அவனைக் காந்தனாக எண்ணிப் பாடுவது. தொடர்ந்து வரும் ஆறு பாடல்கள் (16 முதல் 21 வரை) காதலியாகக் கருதிப் பாடப்பட்ட பாடலாகும். இவை அனைத்துமே அன்பை வெளிப்படுத்தும் அற்புதப் பாடல்களாகும்.

22. கண்ணன் என் ஆண்டான்.

            இதில் கண்ணனைத் தனது எஜமானனாகக் கருதி ஆண்டான் எனும் தலைப்பிட்டுப் பாடிய பாடல். அக்காலத்தில் நிலப்பிரபுக்களை, நிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் “ஆண்டே” என்றழைப்பது வழக்கம். அந்த முறையில் தன்னுடைய எஜமானரை “ஆண்டே” என்றழைத்துத் தன்னை அடிமை என்று சொல்லும் விதமாகப் பாடும் பாடல்.

            வாழும் வகைதேடி தங்களிடம் தஞ்சம் புகுந்தேன் என்று தொடங்கும் அந்தத் தொழிலாளி தான் எந்தெந்த விதங்களிலெல்லாம் தன் முதலாளிக்கு துணையிருப்பேன் என்றெல்லாம் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது பாடல். அவன் வாழும் பகுதெயெங்கும் அவர் பெருமையைப் பறையடித்துப் பாடுவேன் என்கிறான்.

            நிலபுலன்களை நன்கு காத்திடுவதாகவும், கால்நடைகளை மேய்த்து வந்து சேர்ப்பதாகவும், தன்னை பாடுபடச் சொல்லிப் பார்த்துவிட்டு எப்படிச் செய்கிறேன் என்பதைச் சொல்லவேண்டும் என்றும் பணிந்து கேட்டுக் கொள்கிறான்.

            தோட்டம் வளர்ப்பானாம், வானத்துக் குறிகளை வைத்து மழை வரும் வராது என்பதைக் கணித்துச் சொல்வானாம், அப்படி அவன் தவறாகச் சொல்லிவிட்டால் தனக்குத் தண்டனை கொடுக்கலாம் என்கிறான் அவன்.

            தன்னுடைய பெண்டு பிள்ளைகள் கஞ்சி குடிக்க வழிவகை செய்யவேண்டு
மென்பதோடு, அண்டை அயலாருக்கும் தன்னால் உபகாரங்கள் கிடைத்திட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறான்.

            மானத்தைக் காக்கவென்று தனக்கு ஒரு நான்கு முழத் துணி வேண்டுமாம்; தன் பெற்றோர்களுக்கு திவசம் கொடுக்க தானமாக அளிக்க மேலும் சில வேட்டிகளும் வேண்டுமாம். ஒன்பது வாசலுள்ள தன் உடலுக்குப் பல்விதங்களாலும் துன்பங்கள் வருகிறதாம், அதைத் தொலைத்திட ஒரு மார்க்கம் வேண்டுகிறான். தன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பேச், பிசாசு, திருடர்கள் ஆகியோர் பயந்து வாய் பொத்தி கைகட்டி நடக்க வேண்டுமாம். இப்படியொரு அழகான பாடலில் எளிமையை விளக்குகிறார்.

23. எனது குலதெய்வம்.

            கண்ணன் பாட்டு வரிசையில் கடைசியாக வருவது கண்ணனைத் தன் குலதெய்வமாகக் கொண்டாடுவதாக அமைந்தது. அதில் கவிஞர் தெய்வமாம் கண்ணனைச் சரணடைந்ததாகச் சொல்லித் தனக்கு பொன், உயர்வு, புகழ் இவற்றுக்காகக் கவலைப்படா வண்ணம் காத்திட வேண்டுகிறார்.

            தன் மனத்தில் அச்சமும், மடைமையும் குடிபுகுந்து விட்டதால் அவற்றைப் போக்கிட வேண்டுமென்றும், எல்லா செயல்களும் என்னால் முடியும் எனும் ஆணவம் நீக்கி அனைத்துமே நின் செயல் என்று நிறைவேற்றிட வேண்டுமென்கிறார். அப்படி அவன் தாள் பணிந்தால் தனக்குத் துன்பமில்லை, சோர்வு இல்லை, தோல்வி இல்லை, அன்போடு அறங்கள் வளரும் என்கிறார். நல்லது தீயது தான் அறியவில்லை எனவே தீமையை ஓட்டி, நன்மையை நல்குக என்றும் வேண்டுகிறார்.

            இப்படி 23 பாடல்களில் கண்ணனைப் பல்வேறு விதமாக எண்ணிப் பாடி முப்பெரும் பாடல்களில் ஒன்றாக “கண்ணன் பாட்டை” கொடுத்திருக்கிறார் பாரதி.

No comments: