'முப்பெரும் பாடல்கள்' எனப் போற்றப்பெறும்
மகாகவியின் பாடல்களில் கண்ணன் பாட்டும் ஒன்று.
மற்ற இரண்டும் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவையாகும். இந்தப் பகுதியில் 'கண்ணன் பாட்டின்' சிறப்புக்களைச் சிறிது பார்க்கலாம்.
கண்ணன் பாட்டின்
சிறப்பு என்ன தெரியுமா? பண்டைய நாட்களில் மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர்
தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப்
பாடல்களை இயற்றினர். இறைவன் ஒருவன். உயிர்கள் பல. அந்த ஒருவனான இறைவனை அடைய உயிர்களெல்லாம்
நாயக நாயகி பாவங்களைக் கொண்டு பாடல்கள் வெளிவந்தன.
ஆனால் மகாகவி பாரதி அந்தப் பழைமையை தவிர்த்துவிட்டு புதிய பாதை வகுத்தான். இங்கு பாரதி
தன்னைத் தலைவனாகவும், இறைவனைத் தன் காதலியாக, காதலனாக, சேவகனாக, அரசனாக, அமைச்சனாக,
தோழனாக இப்படிப் பற்பல முறையில் பாவித்துப் பாடியிருக்கிறான். இதுதான் அவனைப் புரட்சிக்கவியாகப்
பார்க்க உதவுகிறது. இந்தப் புரட்சி உள்ளத்தைப் போற்றும் விதத்தில்தான் "கண்ணன்
பாட்டை" நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
கண்ணன் பாட்டு
என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே, கண்ணனைத் தோழனாக,
தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக,
காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார்.
மற்ற தலைப்புகளில் எல்லாம் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதி காதலன் எனும் தலைப்பில்
5 பாடல்களையும், காதலி எனும் தலைப்பில் 6 பாடல்களையும் எழுதியிருக்கிறார். "கண்ணம்மா
என் காதலி" என்ற பாடல்களில் பண்டைய தமிழிலக்கிய அகத்துறை மரபு சார்ந்ததாக, காட்சி
வியப்பு, பின்னே வந்து கண் மறைத்தல், முகத்திரை களைதல், நாணிக்கண் புதைத்தல், குறிப்பிடம்
தவறியது, யோகம் எனும் தலைப்பில் பாடல்களை அமைத்திருக்கிறார். பொதுவான விளக்கமாக இல்லாமல்
கண்ணன் பாட்டு ஒவ்வொன்றின் கருப்பொருளையும் சிறிது கவனமாக இங்கு பார்க்கலாம். கண்ணன்
பாட்டை முதன் முதலில் பாரதியாரின் சீடர் பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917இல் பதிப்பித்தார்கள்.
அவருடைய பதிப்பின் முன்னுரையில் அவர் பாரதி பற்றி கூறும் கருத்து மனதில் நிறுத்திச்
சிந்திக்கத்தக்கது. அந்த பகுதி இதோ:-
"பாரதியார் பாடல்களின் பெருமையைப் பற்றி யான்
விரித்துக் கூறுவதென்றால், இந்த முகவுரை அளவு கடந்து பெரிதாய் விடும். ஒரு வார்த்தை
மட்டும் கூறுகிறேன். இந்த ஆசிரியர் காலத்திற்குப் பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப்
பின், இவர் பாடல்களைத் தமிழ்நாட்டு மாதர்களும் புருஷர்களும் மிகுந்த இன்பத்துடன் படித்துக்
களிப்படையும் காட்சியை யான் இப்பொழுதே காண்கிறேன்"
பரலி சு.நெல்லையப்பர்
அவர்களின் கூற்று எவ்வளவு தீர்க்கதரிசனமானது. இன்று பாரதியாரின் பாடல்கள் மேற்கோளாகக்
காட்டப்படாத மேடைகளே இல்லை. பாரதியாரைக் குறிப்பிடாத பேச்சாளர்களே இல்லை என்ற நிலை
ஏற்பட்டுவிட்டது. பரலி சு.நெல்லையப்பர் வெளியிட்ட முதல் பதிப்பிற்குப் பின் அதன் இரண்டாவது
பதிப்பு 1919இல் வெளியானது. இந்த இரண்டாம் பதிப்பிற்கு வீர விளக்கு வ.வெ.சு.ஐயர் அவர்கள்
முன்னுரை எழுதியிருக்கிறார்கள். அந்த முன்னுரையில் ஐயர் அவர்கள் குறிப்பிடுவதாவது:-
"கவிதை அழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு, இந்நூலின்
பண்ணழகை மறந்து விடக்கூடாது. இதிலுள்ள பாட்டுகளிற் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்
காகவே எழுதப்பட்டவையாக இருக்கின்றன. கடற்கரையில் சாந்திமயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும்,
மோக வயப்படுத்தி நீலக்கடலையும், பாற்கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக்
கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில்
பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலில் உள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்"
வ.வெ.சு.ஐயர்
அவர்கள் இப்படிக் கூறியிருப்பதிலேயே பாரதியார் புதுவை கடற்கரையில் இந்தப் பாடல்களைப்
பாடும்போது உடனிருந்து கேட்டு அனுபவித் திருக்கிறார் என்பது புலனாகிறதன்றோ? இங்கு ஐயர்
கூறும் சொற்களைக் கவனிக்க வேண்டும். பாரதி பாடும்போது 'கற்பனா கர்வத்தோடும்' 'சிருஷ்டி
உற்சாகத்தோடும்' பாடியதாக விளங்குகிறது. ஆம் உலக மகா கவிகளுக்கொப்பாகத் தானும் ஓர்
அரிய பாடலை இயற்றிய அந்த மகாகவிஞனுக்கு கர்வமும், அப்படியொரு பாடலை சிருஷ்டித்ததாலேயே
உற்சாகமும் கொள்ளுவதும் இயற்கையன்றோ? பாரதியின் குரல் மிகமிக இனிமையானது என்று
அவர் பாடும்போது கேட்ட அனைவருமே சான்று.
பகர்கின்றனர். அப்படியொரு
இனிமையான, கம்பீரமான குரலில் அவர் பாடும்போது கேட்டவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
இதில்
ஒரு வருத்தமான செய்தியும் உண்டு. மகாகவியின் இந்த அற்புதமான பாடல்களை அவர் காலத்தில்
தமிழ்நாட்டு மக்கள் சரிவர ஆதரிக்கவில்லை. இதனைப் பலரும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
இதைக் குறிப்பிட்டு வ.வெ.சு.ஐயர் அவர்களேகூட இப்படிச் சொல்லியிருக்கிறார்:-
"........ஆசிரியரின் நூல்களை நம்
நாட்டவர் சரிவர ஆதரிக்காததனாலே, "சுற்றி நில்லாதே போ, பகையே - துள்ளி
வருகுது வேல்" , "கைதனில்
வில்லும் உண்டு காண்டீபம் அதன் பேர்"
என்றும் உள்ள அக்ஷர லக்ஷம் பெறுமான பாக்களை எழுதியிருக்கும்
அவருடைய உற்சாகம் குன்றிப்போயிருக்கிறது".
"வ.வெ.சு.ஐயர்
அவர்கள் இப்படி எழுதியிருப்பதிலிருந்து கண்ணன் பாட்டு அக்காலத்தில் எப்படி மதிக்கப்பட்டிருக்க
வேண்டுமோ அப்படி மதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது" என்று "வழி வழி பாரதி"
எனும் நூலில் சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களும் எழுதுகிறார்.
அவர் மேலும் சொல்லுகிறார்:- "போப் ஐயர் வரைந்த "இலக்கண நூற் சுருக்கம்"
அவர் காலத்திலேயே இலட்சக் கணக்கில் விலை போயிற்று. ஆனால் பாரதியாரின் கவிதை நூல் சில
நூறு பிரதிகள் என்ற அளவில்கூட விலை போகவில்லை. இன்று தமிழ் பெற்றுள்ள எழுச்சிக்கு மூல
காரணம் பாரதியாரே என்றாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை மதித்தவர் ஒரு சிலரே. குருவிந்தக்
கல்லுக்கும் கோமேதகத்திற்கும் உள்ள வாசியை, கண்ட அளவிலே உணர்பவர் ஒரு சிலர்தாமே. அதுபோலத்தான்
மேதைமையை உணர்தல் என்பதும்" என்று.
கண்ணபிரானை
தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், சீடனாய், சற்குருவாய், குழந்தையாய், ஒரு விளையாட்டுப்
பிள்ளையாய், காதலனாய், கணிகைக்கும் காந்தனாய், காதலியாய், ஆண்டானாய், குலதெய்வமாய்
தரிசிக்கும் வழக்கம் ஆழ்வார்கள் காலத்திலிருந்தே நம் பண்பாட்டில் இருந்திருக்கிறது
என்கிறார் சேக்கிழாரடிப்பொடி. அதுமட்டுமல்ல, இந்திய இலக்கிய மரபில் கிருஷ்ண பக்தி எனும்
இலக்கிய மரபு தனது அழுத்தமானச் சுவடுகளைப் பல மொழிகளில் பதித்துள்ளது என்றும், பக்தி
இயக்கம், இலக்கிய இயக்கமாகவும் விளங்கிய காலம் அது என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இடைக்குலச்
சிறுவனின் வேய்ங் குழலும், ஆநிரையும், அவன் அன்பும், அருளொளியும் கொண்ட சொல்லோவியங்களை
வங்கம், மராட்டியம், இந்திப் பிரதேசம், தமிழ்நாடு முதலான பிரதேசங்களைச் சார்ந்த கவிஞர்கள்
தங்கள் பாடல்களில் படைத்ததைப் பாரதியார் குறிப்பிடுகிறார். வ.வெ.சு.ஐயர் அவர்கள் கூறுகையில்,
"பாரத நாட்டின் குல தெய்வமாகிவிட்ட கண்ணனுக்கும் மாலை சூட்டாத கவிகள் அருமை"
எனத் தமிழ் இலக்கிய விமர்சன முதல்வர் வ.வெ.சு.ஐயர் அவர்களும், பாரதியின் கண்ணன் பாட்டின்
இரண்டாம் பதிப்பிற்கு 1919இல் எழுதிய முன்னுரையில் சுட்டிக் காட்டினார். கண்ணனை ஆயர்பாடியில்
குழலூதும் கண்ணனாகவும், மகாபாரத யுத்தத்தில் கீதோபதேசம் செய்த கிருஷ்ணனாகவும் பார்க்கிறோம்.
பாரதியாரை முதலில் கவர்ந்தது, குருக்ஷேத்திரக் கிருஷ்ணனே என்பதையும் வ.வெ.சு.ஐயர் கண்ணன்
பாட்டு முன்னுரையில் கூறுகிறார். அடிமைப்பட்டிருக்கும் நாட்டிற்கு குருக்ஷேத்திர யுத்த
களத்தில் சங்கொலிக்கும் கிருஷ்ணனே தேவை; குழலூதும் கண்ணன் அல்ல என சுவாமி விவேகானந்தர்
கூறியதை வ.வெ.சு.ஐயர் எதிரொலித்தார். 1909இல் பாரதியார் பதிப்பித்த "ஜன்மபூமி"யில்
இரு பாடல்களுக்கு "ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்" என்றுதான் பெயரிட்டார்.
"கண்ணனைப்
பாடிய ஆழ்வார்கள் அவன் பிள்ளைப் பருவத்தில் ஆய்ச்சியர் இல்லங்களில் புகுந்து வெண்ணெய்
திருடி உண்டதையும் காளைப் பருவத்தில் கோபிகையரின் ஆடைகளைக் கவர்ந்ததையும், சுவைபட வருணித்துச்
சொல்லியுள்ளனர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி பாரதியார் "கண்ணன் பாட்டி"லே
குறிப்பாகக்கூட எதையும் கூறவில்லை என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. எழுதுகிறார்.
கண்ணன் பாட்டில்
அமைந்துள்ள சிருங்கார ரசப் பாடல்களான "கண்ணன் - என் காதலன்", "கண்ணன்
- என் காதலி" ஆகிய பாடல்களைப் பற்றி பாரதி புகழ் பரப்பிய கவிஞர் திருலோக சீதாராம்
அவர்கள் கூறும் கருத்துக்கள் கவனிக்கத் தக்கன. "எல்லாவற்றிலும் சிகரமாக விளங்குவது
கண்ணனின் காதல் காட்சிகள்தாம். சாதாரண ஆண், பெண் காதல் நெகிழ்ச்சியின் பல்வேறு கவசங்களையே
கையாண்டு தெவிட்டாத தேவ சுகத்தைப் பாடும் அந்தக் கவிதையின் கற்பனை, தமிழ் இலக்கியம்
அகத்துறைக் காட்சிகளிலும், பக்தி இலக்கியப் பண்புகளிலும் எந்நாளும் அழியாத மகா கவிதை"
என்கிறார் தனது "புது யுகக் கவிஞர்" எனும் நூலில்.
கவிஞர் திருலோக
சீதாராம் அவர்கள் கூறும் கருத்து: "பாரதி, "கண்ணம்மா என் காதலி" என்று
அழைப்பது அவருடைய பரபக்தி அனுபவத்தின் முதிர்ச்சி என்றே கொள்ள வேண்டுமே அல்லாமல் வெறும்
கவிதை அழகுக்காக அவர் படைத்த கற்பனையென்று தள்ளக்கூடாது". "கண்ணம்மா என்
காதலி-6" எனும் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து "In Each Other's
Arms" எனும் தலைப்பில் வெளியிட்ட பொழுது, பின்வரும் குறிப்பையும் மகாகவி பாரதியார்
இணைத்துள்ளார். (Note:- In the following verses, the Supreme Divinity styled
here Krishna is imaged as the beloved woman and the human soul as the lover -
CSB).
கண்ணன் பாட்டின்
காதலன் காதலி பாடல்கள் பற்றி சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இவை தமிழிலக்கிய அகத்திணை
நெறியைப் பின்பற்றி எழுதப்பட்டதாகக் கூறுகிறார். "ஐந்திணை ஒழுக்கப்படி கண்ணன்
பாடல்களைப் புனைந்த பாரதியார் அதற்குள்ள துறைகள் பலவற்றையும் கையாண்டுள்ளார்.
"கண்ணன் என் காதலன்" என்ற தலைப்பிலே நாயகி பாவத்தில் ஆறு பாடல்களையும்,
"கண்ணம்மா - என் காதலி" என்ற தலைப்பிலே நாயக பாவத்திலே ஆறு பாடல்களையுமாக
பன்னிரண்டு பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். தலைவன்பால் தோழியைத் தூது விடுதல், சிறைப்புறத்திருத்தல்,
நாணிக் கண்புதைத்தல், குறிப்பிடம் தவறுதல் ஆகிய அகப்பொருள் இலக்கியத் துறைகளைக் கண்ணன்
பாட்டில் பாரதியார் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியம் அகத்திணையில் வரும் உள்ளப்
புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி ஆகியவையும் கண்ணன் பாட்டிலே கூறப்பட்டுள்ளன. முன்கூறப்பட்ட
அகத் திணைத் துறைகளோடு, "முகத்திரை களைதல்" எனும் புதிய துறை ஒன்றையும் பாரதியார்
சேர்த்து வைத்துள்ளார்" எனக் கூறி ம.பொ.சி. தமது புதுமை நாட்டத்தைப் புலப்படுத்துகிறார்.
( கண்ணன் பாட்டுக்கள் உரை தொடரும்)
No comments:
Post a Comment