பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, May 9, 2020

கண்ணன் பாட்டு (பகுதி 2)



                                                   கண்ணன் பாட்டு (பகுதி  2)
4. கண்ணன் - என் சேவகன்.

வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும் அவர்களால் ஏற்படும் தொல்லைகள் கணக்கில்லை. கூலி அதிகம் வேண்டுமென்பார்கள். அப்படிக் கேட்கும் போதெல்லாம் கொடுத்த அனைத்தையும் மறந்து நன்றி கொல்வார்கள். ஒரு நாள் வேலை அதிகமாக வைத்திருந்தால் வேலைக்கு வராமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்வார்கள். மறுநாள் வரும்போது, “ஏனடா நேற்று நீ வேலைக்கு வரவில்லை?” என்று கேட்டால் போதும் எத்தனை பொய்! பானைக்குள் இருந்து தேள் பல்லால் கடித்து விட்டது என்பார். வீட்டில் பெண்டாட்டி மீது பூதம் வந்து விட்டது என்பார். பாட்டி செத்துப்போய் பன்னிரண்டாவது நாள் என்பார். ஓயாமல் பொய் கூறுவார், ஒரு வேலையைச் சொன்னால் அதற்கு மாறாக வேறு வேலையைச் செய்வார். தாயாதியர்களோடு தனியாகச் சென்று பேசுவர்; நம் வீட்டுச் செய்திகளையெல்லாம் ஊரெல்லாம் சென்று பறை அடிப்பது போல் விளம்பரம் செய்வர்; வீட்டில் மிகச்சாதாரணமான பொருளான “எள்” இல்லை என்றால்கூட, விஷயம் தெரியுமா அவர்கள் வீட்டில் “எள்” இல்லை என்று பிரச்சாரம் செய்வார்.

              இப்படி வேலைக்காரர்களால் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருந்த போதும், சேவகர்கள் இல்லாமல் வேலை நடக்கவில்லை. இப்படி நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஒருவன் வந்து சேர்ந்தான், என்னிடம் வந்து நான் இடைச்சாதியைச் சேர்ந்தவன், மாடுகன்றுகளை மேய்ப்பேன், வீட்டிலுள்ள பிள்ளை குட்டிகளைக் காப்பேன். வீடு பெறுக்குவேன், விளக்கேற்றி வைப்பேன், நீங்கள் சொல்லும் வேலைகளையெல்லாம் அட்டியின்றி செய்வேன்; துணிமணிகளை துவைத்து காயவைத்து பத்திரப்படுத்தி வைப்பேன், வீட்டிலுள்ள கைக்குழந்தைகளுக்கு இனிமையான பாட்டுப்பாடி ஆட்டங்கள் ஆடி அவை அழாதபடி பார்த்துக் கொள்வேன். வெளியூர் செல்லவேண்டும் என்றால் அது காட்டு வழியாக இருந்தாலும், வழியில் திருடர் பயம் இருந்தபோதும், இரவோ, பகலோ எந்த நேரமாக இருந்தாலும் சிரமத்தைப் பார்க்காமல் தேவரீர் தம்முடன் வருவேன். உங்களுக்குத் துன்பம் எதுவும் ஏற்படாமல் காப்பேன். ஐயா, நான் எதுவும் படித்ததில்லை, நாட்டுப்புறத்தில் வளர்ந்த காட்டு மனிதன். இருந்தாலும் எனக்குச் சில வித்தைகள் தெரியும். சிலம்பம் சுற்றுவேன், மல்யுத்தம் தெரியும், குத்துப் போர் தெரியும், ஆனால் நயவஞ்சனை புரிய எனக்குத் தெரியாது. இப்படிப் பலப்பல சொல்லிக்கொண்டு நிற்பான்.

"அது சரி உன் பெயர் என்ன? சொல்" என்று கேட்டதற்கு, " ஐயனே! ஒண்ணுமில்லே கண்ணன் என்று ஊரில் உள்ளோர் சொல்வார்கள்" என்றான்.  
     
அவனை ஏற இறங்கப் பார்த்தேன். நல்ல கட்டான உடல். கண்களில் நல்ல குணம் தெரிந்தது. அன்பும் பாசமும் பொங்க அவன் பேசும் சொற்கள் இவைகளால் 'சரி, இவன் நமக்கு ஏற்ற பணியாள்' என்று மனம் மகிழ்ந்து "தம்பி! நல்லாத்தான் பேசுகிறாய், உன்னைப் பற்றி வானளாவப் புகழ்ந்து கொள்கிறாய், அது கிடக்கட்டும் கூலி எவ்வளவு கேட்கிறாய்? சொல்" என்று கேட்டதற்கு அவன் சொல்லுகிறான்.

"ஐயனே! எனக்கு தாலிகட்டிய பெண்டாட்டியோ, பிள்ளை குட்டிகளோ எவரும் கிடையாது. நான் ஒரு தனிக்கட்டை. எனக்கு நரையோ, உடலில் சுருக்கமோ ஏற்படவில்லையாயினும் எனக்கு ஆன வயதுக்கு அளவில்லை, தேவரீர் என்னை ஆதரித்தால் போதும், நீங்கள் தரப்போகும் காசு எனக்குப் பெரிசில்லை, நெஞ்சிலுள்ள அன்புதான் எனக்குப் பெரிசு" என்றான்.

சரி சரி! இது ஓர் பழையகால பைத்தியம், பிழைக்கத் தெரியாதவன் என்று எண்ணிக்கொண்டு, மனத்தில் மகிழ்ச்சியோடு, அவனை நான் எனது பணியாளாக ஏற்றுக் கொண்டு விட்டேன்.

அன்று முதல் அவனுக்கு எங்கள் மேல் அன்பு அதிகமாகிக்கொண்டே வரத்தொடங்கியது. அவனால் நாங்கள் அடையும் நன்மைகளைப் பட்டியலிட்டுச் சொல்லமுடியாது. கண்களை இமைகள் எப்படிக் காக்கின்றதோ அப்படி அவன் எனது குடும்பத்தைக் காக்கின்றான். ஒரு தடவையாவது வேலையில் சலிப்படைந்து முணுமுணுப்பதைக் காணவில்லை. வீடு வாசல் பெருக்குகிறான், வீட்டை நன்கு துடைத்து சுத்தம் செய்கின்றான், வேலைக்காரர்கள் செய்கின்ற குற்றங்களையெல்லாம் கண்டித்து அடக்குகின்றான்.

அதுமட்டுமா? குழந்தைகளுக்கு அவன் ஆசிரியராக விளங்குகிறான். வளர்ப்புத்தாய் போல் அவர்களுக்கு அனைத்துப் பணிகளையும் தயங்காமல் செய்கின்றான். உடல்நலக் குறைவு என்றால் வைத்தியரைப் போல அதற்கேற்ற மருந்து கொடுத்து மருத்துவனாகவும் இருக்கின்றான். எல்லோருடனும் சகஜமாக நடந்து கொள்கிறான். ஒரு வேலையிலும் குறை வைக்காமல் வீட்டுக்கு வேண்டிய சாமான்களையெல்லாம் வாங்கி தயாராக வைத்து விடுகிறான். பால், மோர் இவற்றை வாங்கி வைக்கிறான். வீட்டுப் பெண்களுக்கு தாயைப் போல பிரியத்தோடு பரிந்து ஆதரித்து நடந்து கொள்கிறான்.

ஒரு நல்ல நண்பனைப் போலவும், ஒரு மதியூகி அமைச்சன் போலவும், நல்ல ஆசிரியர் போலவும், தெய்வப் பண்புகளோடும், பார்ப்பதற்கு மட்டும் ஒரு வேலைக்காரனாகவும் நடந்து கொள்ளும் இவன் எங்கிருந்தோ வந்து சேர்ந்தானே! இடைச்சாதி என்றல்லவா சொன்னான்!

இங்கு இப்படிப்பட்ட தூயவனை நான் வேலைக்காரனாகப் பெற என்ன தவம் செய்து விட்டேன். கண்ணன் என் அகத்தில் கால் வைத்த நாள் முதலாக எண்ணம், விசாரம் (கவலை) எதுவும் அவன் பொறுப்பு என்று விட்டுவிட்டேன். அவன் காலடி எடுத்து என் இல்லத்தில் வைத்த நாள் முதலாய் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், தெளிவே வடிவாம் சிவஞானம், எப்போதும் சிறந்து விளங்கும் நலன்கள் அனைத்தும் ஓங்கி வளர்கின்றன. கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்ணனைக் கொண்டதால் கண் கொண்டேன். கண் கொண்டேன். கண்ணன் என்னை வந்தடைந்து ஆட்கொள்ள காரணமும் இருக்கின்றனவே!

5. கண்ணன் - என் அரசன்.

எங்கள் அரசன் இருக்கிறானே கண்ணன், அவன் என்ன செய்வான் தெரியுமா? எதிரிகளால் பகை முற்றி முதிர்ந்திடும் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பான்; எதற்கும் ஓர் புன்னைகை அவ்வளவுதான், இப்படியே நாட்களை, மாதங்களை, ஆண்டுகளை ஓட்டிக் கொண்டிருப்பான். இந்த கண்ணன் என்று பகைவர்களோடு போர் புரிவது, என்று எதிரிகளை அழிப்பது இது நடக்காத காரியம் என்று நாம் மனம் சோர்ந்து போவோம். இப்படி எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம் சோர்ந்து நாட்கள் யுகங்களாகக் கழிந்து போகும்.

எதிரிகளோடு போர் என்றால் படை வீரர்களைச் சேர்க்க வேண்டாமா? துணைவர்கள் ஏவலர்கள் இவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா? போருக்கு அதிகமாக செலவு ஆகுமே, அதற்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டாமா? இவற்றுக்கான எந்த வேலையையும் செய்யமாட்டான். மாடு மேய்ப்பவன் தானே, இவன் வீரமில்லாதவன், பயந்தாங்கொள்ளி என்று மற்றவர்கள் பேசும் ஏச்சுக்கெல்லாம் இவன் வெட்கப்படுவதே யில்லை.

கண்ணனைக் கொல்ல பூதகியை அனுப்பிய இவனது மாமன் உல்லாசமாக செங்கோல் ஏந்தி இந்த பூவுலகை ஆளுகின்றபோது, இவன் ஆயர்குல பெண்டிரோடும், அவர்கள் ஆடுகின்ற ஆட்ட பாட்டங்களில் மனம் களித்து அதில் மனத்தைச் செலுத்திக்கொண்டு பொழுதைக் கழிப்பான். மழை வராதா என்று ஏங்கும் பயிர்கள் போல மக்கள் இவன் மனம் திருந்தி போருக்குத் தயாராக மாட்டானா என்று தவிக்கும்போது, இவனோ, சங்கீதம், தாளம், கூத்து, தனிமையில் அமர்ந்து குழலூதுதல் என்று இவற்றில் மனம் செலுத்துவான்.

அவன் காலைப் பிடித்துக்கொண்டு எங்களுக்கு ஒரு வழிகாட்டு என்று கெஞ்சினால், நாலில் ஒன்று பலித்திடும் பார் என்பான், இதற்கு என்ன பொருள் என்று எப்படி உணர்வது? நாமெல்லாம் அவனது பலத்தை நம்பி இருக்கையில், இவனோ வெட்கமின்றி பதுங்கிக் கிடப்பான், சிலநேரம் தீமைகளை ஒழித்துக்கட்டவும் செய்வான், சில நேரம் ஓடி ஒளிந்துகொண்டு சிறுமைப் படுவான். தந்திரங்களும் நன்கு செய்வான், செளரியங்களையும் ஏற்படுத்திக் கொள்வான், மந்திரசக்தியையும் காட்டுவான், வலிமை இல்லாமல் சிறுமையிலும் வாழ்வான்.

சரியான காலம் வந்து சேரும்போது, ஓர் கணத்தில் புதிய மனிதனாக உருவெடுத்து விடுவான். ஆலகால விஷத்தைப் போல இவ்வுலகமே அஞ்சி நடுங்கி ஆடும்படி சீறுவான். வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் பகை வெந்து போகும்படி பொசுக்கி விடுவான். உலகமும் வானமும் ஆயிரமாண்டுகள் பட்ட துன்பங்களை நொடியில் மாற்றிவிடுவான். கையிலுள்ள சக்கரத்தை ஓர் கணத்தில் எடுப்பான், அடுத்த கணம் பாரில் தர்மம் ஓங்கி வளர்ந்து விடும். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரம் ஏதேனும் உண்டோ? இல்லை கண்ணிமைப்பில் இவை முடிந்துவிடும். இந்த குறுகிய காலத்துக்குள் பகையை ஒழித்துக் கட்டிவிடுவான்.

கண்ணன் எனும் எங்கள் அரசனின் புகழினை கவிதையால் வடித்து எந்தக் காலமும் போற்றுவேன். திண்ணை வாசல் பெருக்க வந்த என்னை இந்த தேசம் போற்றும் வகையில் தன் மந்திரியாக நியமித்தான். அன்றாடச் சோற்றுக்கு ஏவல் செய்ய வந்த எனக்கு, நிகரற்ற பெரும் செல்வத்தைக் கொடுத்து உதவினான். வித்தை யொன்றும் கற்காத எனக்கு வேத நுட்பங்கள் யாவையும் விளங்கிடுமாறு செய்தான். கண்ணன் எனும் இந்த அருளாளனின் அருள் வாழ்க. கலியின் கொடுமை அழிந்து இந்த பூமியின் பெருமை வாழ்க. கண்ணன் எனும் அண்ணலின் அருள் பெற்ற நாடு அவலமெல்லாம் நீங்கி புகழில் உயரட்டும்!

                         (கண்ணன் பாட்டு தொடரும்)

No comments: