பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, December 30, 2017

சிறுகதை -- பையனுக்கு ஏற்ற வரன்.

சிறுகதை
தஞ்சை வெ.கோபாலன்
 “பிரகலாத சரித்திரம் இன்னிக்கு, அவசியம் வந்துடுங்கோ” என்று குரல் கொடுத்தார் மெலட்டூர் மகாலிங்கம். தஞ்சாவூர் ஜில்லாவில் மெலட்டூர் நாயக்கர் காலத்திலிருந்து “பாகவத மேளா” எனும் தெலுங்கு நாட்டிய நாடகத்துக்குப் பெயர் பெற்ற ஊர். அந்த ஊரில் நடைபெறும் பாகவத மேளா எனும் நாட்டிய நாடகம் நரசிம்ம ஜெயந்தியை யொட்டி இருவேறு குழுக்கள் நடத்திக் கொண்டு வருகின்றனர். அப்படிப்பட்ட குழுவொன்றின் தலைவர்தான் மகாலிங்கம்.

இந்த மெலட்டூரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சுவையானவை. தஞ்சையை விஜயநகர சாம்ராஜ்யாதிபதிகளின் வாரிசுகளாக இருந்து சில நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். அவர்களில் சேவப்ப நாயக்கர் என்பவர்தான் முதல் நாயக்க மன்னர். இவர் விஜயநகர பேரரசின் சக்கரவர்த்தியும் கிருஷ்ணதேவராயரின் தம்பியுமான அச்சுத தேவராயரின் மைத்துனியின் கணவன். இவரைத் தொடர்ந்து அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என்று நாயக்க மன்னர்கள் தஞ்சாவூர் ராஜ்ஜியத்தை 130 வருஷ காலம் ஆண்டு வந்தார்கள்.

இவர்களுடைய காலத்தில் இசை, நாட்டியம் ஆகிய கலைகள் சிறந்து விளங்கின. தெலுங்கு தேசத்திலிருந்து பற்பல கலை வல்லுனர்கள் தஞ்சையை நாடி வந்தனர். அப்படி வந்தவர்களில் இந்த பாகவத மேளா எனும் கலையைத் தெலுங்கில் ஆடிப்பாடி நடித்து வந்தவர்கள் இவர்களது பரம்பரையினர். இந்தக் கலைஞர்களுக் கென்று இரகுநாத நாயக்கர் உருவாக்கிய ஊர்தான் மெலட்டூர்.

இந்த ஊரிலிருந்து இப்போது வேலை செய்யவென்று வெளியூர்களுக்கும், வெளி நாடுகளுக்கும் சென்றுவிட்ட இளைஞர்களெல்லாம் கூட இந்த பாகவத மேளா சமயத்தில் இந்த ஊருக்கு வந்து ‘நரசிம்ம ஜயந்தி” அன்று நடக்கும் பிரஹலாத சரித்திரத்தில் நடிப்பார்கள். வெளியூர் ரசிகர்கள் எல்லோரும் கூட இரவு பத்து மணிக்கு மெலட்டூரில் கூடிவிட்டால், நாட்டிய நாடகம் முடிந்து ஊர் திரும்ப விடியற்காலை ஆகிவிடும்.

உள்ளூரில் மட்டும் நடந்து வந்த இந்த நாட்டிய நாடகத்தை வெளியூர்களிலும் நடத்த வேண்டுமென்று பலர் விரும்பியதால் இந்தக் குழு சென்னை, திருப்பதி, தஞ்சை போன்ற ஊர்களுக்கும் சென்று நாடகங்களை நடத்தினர்.

திருப்பதியில் வெங்கடேசப் பெருமான் சந்நிதியில் நடைபெற்ற பாகவத மேளாவுக்கு பெரிய வரவேற்பு காணப்பட்டது. உடனே சென்னையில் இருந்த ஒரு சபாவின் செயலாளர் தங்கள் சபாவில் நாடகத்தை நடத்த விருப்பம் தெரிவித்தார். உடனே பாகவத மேளா குழு சென்னைக்குச் சென்றது.

சென்னை சபாவில் நாடகம் நடக்கவிருந்த நாள். மாலை ஐந்து மணியிலிருந்தே மக்கட் கூட்டம் அவை நிரம்ப இருந்தது. சரியாக ஆறு மணிக்கு நாடகம் தொடங்கியது. இதுபோன்ற நாடகங்களை அதிகம் பார்த்திராத சென்னைக் கூட்டம் இதனை பெரிதும் ரசித்துப் பாராட்டியது.

கர்நாடக சங்கீதக் கச்சேரி, வாத்திய இசைக் கச்சேரி, பரத நாட்டியம் என்று மட்டுமே இயங்கி வந்த சபாக்கள் அவ்வப்போது அமைச்சூர் நாடகங்களையும் அரங்கேற்றுவது வழக்கம். ஆனால் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க நாட்டிய நாடகம் இதுவே முதல் தடவை என்பதால் பெண்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. பாகவத மேளா நாடகங்கள் தெலுங்கு மொழியில் தான் இருக்கும். பாடல்களும், வசனங்களும் கூட தெலுங்கு மொழியில் தான்.
நாடகத்தில் ஒரு பெண் வேஷம் தரித்தவர் மிக அழகாக பரதநாட்டியம் ஆடிக்கொண்டு ஒரு காட்சியில் தோன்றினார். அந்தப் பெண் பார்க்க மிக அழகாகவும், இளமையாகவும் இருந்ததோடு, பரத முத்திரைகளை மிகச் சிறப்பாகச் செய்ததன் மூலம், அவள் பரதநாட்டியம் பயின்றவள் என்பதை நிரூபித்தன.

நாடகம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாமி அருகிலுருந்த மற்றொரு மாமியிடம் சொன்னாள், “இந்தப் பெண் பார்க்க எத்தனை லட்சணமாக இருக்கிறாள். என் புள்ளைக்கு நாலு வருஷமா பெண் பார்த்துக் கொண்டிருக்கேன். ஒண்ணுமே சரியா வரல. தனக்கு வரப்போற பெண்டாட்டி பரதநாட்டியம் ஆடத் தெரிஞ்சவளா இருக்கணும்கறான் அவன். இந்தப் பெண்ணைப் பார்த்தா எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு, இவளை என் மகனுக்குப் பெண் கேட்டால் என்ன” என்றாள்.

உடனிருந்த அந்த மாமியும் சம்மதம் தெரிவித்து, நாடகம் முடிந்ததும் நாடகக் குழுத் தலைவரிடம் பேசி, அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடிவு செய்தனர்.

நாடகம் ஒருவழியாக ஒன்பதரை மணிக்கு முடிந்தது. நடிகர்கள் தங்கள் மேக்கப்பைக் கலைத்துக் கொண்டிருந்தனர். நாடகக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் அங்கு கூடிநின்று அன்றைய நிகழ்ச்சி எப்படி நடந்தது என்பது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
மாமி மெதுவாக அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் சென்று “இந்த நாடகத்தில நாட்டியம் ஆடி நடிச்சாளே, அந்தப் பெண்ணைப் பத்தி கேட்டுத் தெரிஞ்சுக்கணும்னு வந்திருக்கேன்” என்றாள்.
அவர் முகத்தில் சிரிப்பு. அவர் சொன்னார், “அந்தப் பெண்ணா? அவளோடு அப்பாவும் இங்கேதான் இருக்கார், அவரைக் கூப்பிடறேன்” என்று சொல்லிவிட்டு “சுப்புணி! சுப்புணி!! என்று யாரையோ அழைத்தார்.

அப்போது சுப்புணி என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணியம் அங்கு வந்து சேர்ந்தார். “என்ன விஷயம்?” என்று அழைத்தவரிடம் கேட்டார்.

“இதோ பாரு. இந்த மாமிக்கு சில விவரம் தெரியணுமாம். நம்ம நாடகத்துல நடிச்சாளே, அந்தப் பெண்ணைப் பத்தி தெரிஞ்சுக்கணுமாம்” என்று சொல்லிவிட்டு கேலியாக கண்களைச் சிமிட்டினார்.

சுப்பிரமணியமும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டு சிரித்துக் கொண்டே, அந்த அம்மையாரிடம், “என்ன மாமி!’ அந்தப் பெண்ணைப் பற்றி என்ன தெரியணும்?” என்றார்.

“என் பையனுக்கு நான் வரன் பார்த்துண்டு இருக்கேன். பரதநாட்டியம் ஆடத் தெரிஞ்ச பொண்ணுதான் வேணுமாம். இந்தப் பொண்ணு ரொம்ப நன்னா நாட்டியம் ஆடறா, ரொம்ப அழகாவும் இருக்கா. இவளை என் பையனுக்குப் பார்க்கலாம்னு நெனைக்கறேன். நீங்க அவளுக்கு அப்பாவா? ” என்றாள் மாமி.

இது ஏதோ விபரீதமான கேஸ் என்பதைப் புரிந்து கொண்டு நடக்கும் கேலிக்கூத்தை இன்னும் சிறிது தொடர எண்ணிய சுப்பிரமணியன் அந்த மாமியிடம் “நான் அவளோடு அப்பாதான்” என்றார்.

“அப்போ நல்லதா போச்சு. நீங்க அவளோட ஜாதகம் இருந்தா கொடுங்கோ. என் பிள்ளை ஜாதகத்தோடு பொருத்தம் பார்த்துட்டு சரியா இருந்தா கலியாணம் செஞ்சுடலாம்” என்றாள்.
சுப்பிரமணியனுக்கு தர்ம சங்கடம். “மாமி! அவள் இல்ல, அவன். என்னோடு மகன் அவன். பெண் வேஷம் போட்டு நடிச்சான்” என்றார்.

மாமிக்கு அவர் பதில் திருப்தியாக இல்லை. கோபம் வேறு வந்துவிட்டது. மாமி சொன்னாள். “ஏதோ என் புள்ளைக்கு கல்யாணம் தடைபட்டுண்டே போறதேன்னு இந்தப் பொண்ணப் பார்க்கலாம்னா நீங்க கிராக்கி பண்ணிக்கிறேளே. அவள் பொண்ணா, பையனான்னு கூடவா எனக்குத் தெரியாது. எத்தனை நன்னா அவ ஆடினா? பொண்ணும் நல்ல அழகு” என்று விடாமல் பேசினாள் மாமி.

சுப்பிரமணியனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. அருகிலிருந்த பெரியவரை அழைத்து, “நீங்க சொல்லுங்கோ, இந்த மாமி என் பையனை பொண்ணுன்னு நெனச்சுண்டு ஜாதகம் கேட்கறா?” என்றார்.

பெரியவர் வாயிலிருந்த வெற்றிலைப் பாக்கை மென்றுகொண்டே, “மாமி அவன் இவரோட பையன் தான். சந்தேகமே வேண்டாம்” என்றார்.

மாமி சொன்னாள் “இஷ்டமில்லைன்னா, இல்லைன்னு சொல்லிட்டுப் போங்களேன். எதுக்கு பொண்ணைப் போய் பையன்னு சொல்லி பொய்யெல்லாம் சொல்லிண்டு” என்று கோபப்பட்டுக் கொண்டு திரும்பிப் போக எத்தனித்தாள்.

அப்போது சுப்பிரமணியன் குறுக்கிட்டு, “மாமி கொஞ்சம் இருங்கோ, இதோ மேக்கப் கலைச்சுட்டு அவனே வருவான். நீங்களே பார்த்து முடிவு பண்ணிக்குங்கோ” என்றார்.
அப்போது மேக்கப் கலைத்துவிட்டு தலையில் இருந்த விக்கையும் எடுத்துவிட்டு ஆணுடையில் வந்த ஆனந்தைப் பார்த்ததும், மாமிக்கு வியப்பு. “ஐயயோ, இவன் பையனா? அப்படியே பொண்ணு மாதிரி நல்ல அழகா இருந்தானே. நன்னாவும் பரதம் ஆடினானே” என்றாள்.
“ஆமாம் மாமி. அவன் ஒரு எஞ்ஜினீயர். எங்க பாகவத மேளாவுல பெண்கள் யாரும் நடிக்கறது இல்லை. பெண் வேஷம் எல்லாம் ஆண்களே போடறதுதான். அதோட இல்லாமல் அவன் பரத நாட்டியத்தை முறையா கத்துண்டு ஆடறவன். நான்கூட பாகவத மேளா நாடகங்கள்ள பெண் வேஷம் போடறவன் தான். அது தெரியாம நீங்க அவனைப் பொண்ணுன்னு நெனச்சு கேட்டேள். நாங்க சொல்றதையும் நீங்க நம்பல” என்றார்.

“அப்படியா! இது தெரியாமத்தான் நான் போய் பொண்ணு கேட்டேனா? ஆனா, சும்மா சொல்லக்கூடாது, பொண்ணுகூட தோத்தா, இவன் அப்படி நன்னா நடிச்சான், அற்புதமா நாட்டியம் ஆடினான். நீங்க கொடுத்து வச்சவர்” என்று சுப்பிரமணியத்தை வாழ்த்தி விட்டுப் புறப்பட்டுச் சென்றாள் மாமி.




சிறுகதை -- பரிகாரம்



 தஞ்சை வெ.கோபாலன்.

ந்த கிராமத்து அக்கிரகாரத்தில் வெளியிடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் போக மிச்சமுள்ள ஏழெட்டு வீடுகளில் மட்டும் இன்னமும் அங்கு நிலமோ, வேலையோ உள்ளவர்கள் மட்டும் மிச்சமிருந்தார்கள். அதே பழைய, தழைந்த ஓட்டு வீடுகள், முற்றம், தாழ்வாரம், கூடம் பின்புறம் கிணறு என்று பழைய பாணியில் அமைந்த வீடுகள். அதில் ஹெட்மாஸ்டர் வீடு என்றழைக்கப்பட்ட வீட்டில் அந்த காலத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த ஒருவரின் வாரிசுகள் இன்னமும் இருந்தனர். அதில் கடைசி தலைமுறையச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்த சிலருக்கு அவர் வாயைக் கிளறினால் மிகப் பழைய காலத்தில் அந்த கிராமத்தில் இருந்தவர்கள், அவர்களது கதைகள் இவைகளை அவர் அவிழ்த்து விடுவார், பொழுது போவது தெரியாது. ஆகையால் அவர் ஓய்வாக வாயில் திண்ணையில் அமர்ந்திருக்கும் போது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரிடம் சென்று அவரோடு திண்ணையில் அமர்ந்துகொண்டு சாவகாசமாகப் பேச்சைத் தொடங்குவார்கள். அவரும் இவர்களது ஆசையைத் தீர்க்கவென்று பழைய நிகழ்ச்சிகளை அசைபோட்டுச் சொல்லிக் கொண்டு வருவார். அவை கற்பனையா, நடந்தவையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவர் அந்த வரலாறுகளைச் சொல்லும் பாங்கு அத்தனை சுவையாகவும், கண்ணெதிரே நடப்பது போலவும் இருக்கும்.
அந்த கிராமத்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ராகவன் என்பார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அவர் கேட்டார், “என்ன மாமா? ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்க போல இருக்கே. என்ன விஷயம்?” என்றார்.
அதற்கு அந்தப் பெரியவர், “அதெல்லாம் ஒண்ணுமில்லைடா! நேற்று பம்பாயிலிருந்து என் சொந்தக்காரர் ஒருத்தர் வந்திருந்தார் இல்லையா?” என்று தொடங்கவும்.
“அப்படியா! தெரியாதே, யார் அவர், உங்களுக்கு என்ன உறவு, என்ன விசேஷமா இங்கே வந்தார்” என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் ராகவன். கூட உட்கார்ந்திருந்த மேலும் இருவரும் இந்த உரையாடலில் ஆர்வம் கொண்டவர்களாகத் தெரிந்தனர்.
பெரியவர் சொன்னார், “அவரும் நம்ம ஊரைச் சேர்ந்தவர்தான். மேற்கே பஜனை மடம் இருக்கிறது அல்லவா? அந்த இடமும், அதையொட்டி உள்ள வீடும் இவர்களுடையது. அதை இன்னமும் அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. அந்த இடம் எப்படி இருக்கு, என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வந்திருந்தார்” என்றார்.
“அப்படியா, நீங்க சொல்றதைப் பார்த்தா, இங்கே ரொம்ப வசதியா வாழ்ந்தவங்கன்னு தெரியுது. வீடும், சொந்தமா பஜனை மடமும் கட்டி வச்சிருக்காங்கன்னா நிச்சயமா வசதி படைச்சவங்கதான், சரி, என்ன முடிவு பண்ணினார்?” என்றார் ராகவன்.
பெரியவர் சொன்னார், “அவருக்கு இருக்கும் சொத்தில் இது ஒண்ணும் கணக்கே இல்லை. அந்த மடத்தையும், அந்த இடிந்து பாழடைந்து கிடக்கும் அவரது பழைய வீட்டையும் இங்கே ஏதாவது நல்ல காரியத்துக்கு தேவைன்னா கொடுத்துவிட தயாரா இருக்கிறார். அவர் ஒண்ணும் சாமானிய மனிதர் இல்லை. அவரோட அப்பா 1930ல ராஜாஜி தலைமையில் திருச்சிலேருந்து வேதாரண்யத்துக்கு பாதயாத்திரையா போய் அங்கே உப்பு எடுத்து சத்தியாக்கிரகம் செய்தாங்க இல்லையா, அதில ஒரு தொண்டரா போயி, புளிய மிளாறுல அடிபட்டு ஜெயிலுக்குப் போனவர், தியாகி. ஒரு சமயம் ராஜாஜிகூட இங்க பக்கத்துல எங்கேயோ கூட்டம்னு வந்தப்போ அவர் வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கார், அப்படின்னு சொல்லுவாங்க.” என்றார் பெரியவர்.
“ஓ! அத்தனை பெரியவங்களா, அப்படின்னா, அவங்க குடும்பத்தைப் பற்றியும், அவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க, கேட்போம். நம்ம ஊரும் சாதாரண ஊரு இல்லை, தேச சுதந்திரத்துக்காக ஒரு தியாகியை உருவாக்கின ஊருங்கறது பெருமைக்குரிய விஷயம் இல்லையா?” என்றார் ராகவன்.
“சரி, சொல்றேன், கேளுங்க. நேத்து வந்தவரோடு அப்பா தியாகி குருமூர்த்தின்னு பேரு. அவரை எல்லோரும் ஆச்சா ஆச்சான்னுதான் கூப்பிடுவாங்க. ஆளு, நல்லா வெள்ளை வெளேர்னு வெள்ளைக்காரன் போல இருப்பாரு. அவரைத் தொட்டா அந்த இடம் சிவப்பா போயிடுமாம், அத்தனை கலர். அந்தக் காலத்திலே அவர் கதர்தான் போடுவாராம். அவரைப் பார்க்க அடிக்கடி மாயவரத்திலேர்ந்து நாராயணசாமி நாயுடுங்கற தியாகியும் வருவாரம். இவுங்க இரண்டு பேருமாத்தான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமா கலந்துகிட்டவங்க.”
“இந்த ஆச்சாவுக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் இருந்தாங்க. பெண்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடணும்னு ஆசைப்பட்டாரு. பையன் மட்டும் மாயவரத்துல படிச்சுட்டு பம்பாய்க்கு வேலைக்குப் போய்விட்டான். அவந்தான் நேத்து இங்கே வந்தது. “
“இந்த ஆச்சாவோடு பெரிய பொண்ணு வீட்டோட இங்கேயே இருந்தா. அவ வளர்ந்திருந்தாளே தவிர ஒரு குழந்தை மாதிரி, சின்ன குழந்தைகளோடு விளையாடுவா. பின்னால தெருவில இருக்கறவங்களோடு ஆடு மாடு இதையெல்லாம் அக்கறையா கவனிச்சுக்குவாளாம். தெருகோடில ஒரு சாவடியும், அதையொட்டி மஞ்சவாய்க்காலும் ஓடுதில்லையா, அங்கேதான் அவ சின்னச் சின்ன பெண்களைக் கூட்டி வச்சு விளையாடிக் கொண்டிருப்பாளாம்.”
“அவளுக்கும் வயசாயிடுச்சின்னு, அவர் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இங்கே பக்கத்துல இருக்கற நாகங்குடி கிராமத்துல ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்துல வாத்தியாரா ஒரு பையனும், அவன் அம்மாவும் நம்ம ஊருல வந்து குடியேறினாங்க. அந்த பையனும் நல்லவனா இருந்ததால, அவன் அம்மாகிட்ட பேசி மெதுவா பெரிய பொண்ணை அந்தப் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டார் அவர். வீட்டோட மாப்பிள்ளை என்கிற மாதிரி ஊரோட மாப்பிள்ளை. ஆனா அந்தப் பொண்ணு, மத்த பெண்களைப் போல இல்லாம, சின்னக் குழந்தை போல, குழந்தைகளையெல்லாம் கூட்டி வச்சு, அவங்களுக்கு சாதம் போடறது, மஞ்சவாய்க்காலுக்குக் கூட்டிகிட்டு போயி குளிப்பாட்டி விடறது, அதுல இருக்கற மீன்களுக்கு ஆகாரம் போடறது, இப்படி குழந்தைத் தனமாகவே இருந்தாளாம். அந்த மாப்பிள்ளைப் பையனும் ரொம்ப சாதுவானதால, சின்ன கிராமம்தானே, அவ அப்படித்தான் இருப்பாங்கற நினைப்புல அவளைப் பத்தி அதிகமா கவலைப் படறதில்லை. அவன் அம்மாவுக்கும் மருமகளா இல்லாம வீட்டுல அவ ஒரு குழந்தை மாதிரி இருந்து, சீக்கிரமே இறந்தும் போயிட்டா”
“அடப் பாவமே! அப்புறம் என்ன ஆச்சு” என்றார் ராகவன் ஆர்வத்துடன்.
“அந்த வாத்தியார் பையன் முதல்ல ரொம்ப வருத்தப்பட்டான், அவன் அம்மாவும் அவனை வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவன் செஞ்சுக்கல. அந்த சமயத்துல இங்கே பக்கத்துல இருக்கே மங்கலஞ்சேரிங்கற ஊர், அந்த ஊரைச் சேர்ந்த மகமது யூசுப் மறைக்காயர் இந்த வாத்தியாருக்கு ரொம்ப சிநேகம். அவர் அடிக்கடி இங்கே வந்து வாத்தியாரோட இருப்பார். வாத்தியாரோட அம்மாவை அவரும் அம்மா, அம்மான்னுதான் கூப்பிடுவார். அதே அன்போடத்தான் பழகிவந்தார்.”
“அவர் நல்ல செல்வந்தர் குடும்பம். அவர்களுக்கு மலேயாவில் கோலாலம்பூரிலும், இந்தோசைனாவில சைகோனிலும் வியாபாரம் இருந்தது. நம்ம வாத்தியாருக்கு இங்கிலீஷ், ஃப்ரெஞ்சு பாஷை இதோட கைரேகை சாஸ்திரமும் நல்ல தெரியும். அதனால, பெண்டாட்டியை இழந்துட்டு இந்த எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் வேலைல இருக்கறதைவிட, வா எங்க அப்பாவோட வியாபாரத்துல எங்கேயாவது வேலைக்குப் போயிடலாம். நானும் அங்கே வரேன் என்று சொல்லி வாத்தியாரை முதலில் கோலாலம்பூருக்கும், பிறகு அங்கேயிருந்து சைகோனுக்கும் கூட்டிக் கொண்டு போய்விட்டார்.”
“போன இடத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு. சைகோனில் ஒரு தெருவே இவுங்களுக்குச் சொந்தமா இருந்தது. எல்லா வகை வியாபாரத்திலும் இவுங்க இருந்ததால, நம்ம வாத்தியாரையும் ஒரு இடத்தில இருக்க வச்சுட்டாங்க. அவருக்குத் தனியா தங்க இடம், அவரே சாப்பாடு செஞ்சு சாப்பிடறமாதிரி ஏற்பாடு. இதைத் தவிர ஓய்வு நேரத்துல கைரேகை சாஸ்திரம் பார்க்க அனேகம் பேர் வருவாங்க, அதிலயும் வாத்தியாருக்கு நல்ல வருமானம்”
“கொஞ்ச நாள்ல, ஊர்ல நிலம், வீடுன்னு வாங்கி போட்டு அம்மாவை அங்கே இருக்க வச்சுட்டு, இவர் மாத்திரம் அங்கே இருந்தாரு. நண்பர் மகமது யூசுபும் அவுங்க அப்பாவும் இவரை அவுங்க வீட்டுப் பிள்ளை மாதிரி கவனிச்சுக் கிட்டாங்க. அப்போல்லாம் வெளிநாட்டுக்குப் போறது ஒண்ணும் கஷ்டம் இல்ல. இங்கேயிருந்து நாகப்பட்டணம் போயிட்டா, கப்பல் டிக்கட் வாங்கி படகுல போயி, கொஞ்சம் எட்டத்துல கடலில் நிற்கிற கப்பல்ல ஏறி, எங்கே போகணுமோ, அங்கே போகலாம். அப்படித்தான் அந்தக் காலத்துல தென்னாப்பிரிக்கா, பிஜித் தீவு, லட்சத் தீவுகள் இப்படி பல ஊர்களுக்கும் நம்ம ஆளுங்க போயிருக்காங்க. இப்போ போல பாஸ்போர்ட், விசா அப்படியெல்லாம் எதுவும் இல்ல இல்லையா?”
“ஒரு தடவை அந்த வாத்தியார் லீவுல ஊருக்குத் திரும்பி வந்திருந்தார். அப்போ மாயவரத்துல அவரோட சித்தப்பா ஒருத்தர், நல்ல வைதீகர் அவருக்கு சஷ்டியப்த பூர்த்தின்னு இவுங்களை அழைச்சிருந்தார். லீவுல வந்திருந்த வாத்தியாரும் அம்மாவை அழைச்சிகிட்டு மாயவரம் போய் அவுங்க வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கற சமயம், உள்ளேயிருந்து அந்த வைதீகர் உரத்த குரலில், அங்கேயே நில்லு” என்று குரல் கொடுத்தார்.
“இது என்ன கொடுமை. விசேஷத்துக்கு அழைச்சுட்டு, வெளில நிக்கச் சொல்றது அவமானமில்லையோ?” என்றார் ராகவன்.
“ஆமாம் ஆமாம். அவமானம்தான். ஆனா, அவரோ சித்தப்பா, ஆசாரசீலர், போதாதற்கு ஒரு வைதீகர். இவரோ கப்பல் ஏறி வெளிநாடு போயி வந்தவர். அப்படி கப்பல் ஏறி கடலைக் கடந்து போனா, அவுங்க தீண்டத் தகாதவங்க ஆயிடுவாங்க, அவுங்க சாஸ்திரப்படி. அதனால, தீட்டுப் பட்டவரை உள்ளே விட அவர் விரும்பவில்லை. அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொல்லிவிட்டு, அந்த வைதீகர் வாசலுக்கு வந்து வாத்தியாரிடம், நீ கடல் கடந்து போயிட்டு வந்ததால, தீட்டுப் பட்டுப் போயிட்டே. அதனால, நீ ராமேஸ்வரம் போய், கடல் ஸ்நானம் செஞ்சுட்டு, ராமநாத சுவாமியை தரிசித்துவிட்டு பிரசாதத்தோட இங்கே வா, இன்னிக்கு விசேஷம் முடிஞ்சாலும் இன்னும் பதினைந்து நாளுக்கு தொடர்ந்து ஜபம் எல்லாம் நடக்கும். அது முடியறதுக்குள்ள நீ வந்துடு. போ! இப்பவே கிளம்பி ராமேஸ்வரம் போய் ஸ்நானம் செஞ்சுட்டு வந்துடுன்னு சொல்லி அனுப்பிட்டார்.”
“பாவம் வாத்தியார், சரின்னு சொல்லிட்டு நம்ம ஊருக்கே திரும்பி வந்தவர் விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாம, நேரே மஞ்சவாய்க்காலுக்குப் போய் ஒரு சொம்புல வாய்க்கால் ஜலத்தைப் புடிச்சுட்டு வந்து வீட்ல வச்சுகிட்டார். நாலைந்து நாள் நம்ம ஊர்லேயே இருந்துட்டு வாரக் கடைசில ஒருநாள் காலைல கிளம்பி மாயவரம் போயி, அங்கே ‘லாகடத்துல’ ஒரு கடைல மஞ்சவாய்க்கால்ல புடிச்ச தண்ணி இருக்கற சொம்புக்கு ஈயப் பத்து வச்சு சீல் பண்ணி கையில எடுத்துகிட்டு, நெற்றில விபூதிப் பட்டைப் போட்டுக்கொண்டு சித்தப்பா வீட்டுக்குப் போனார்.”
“பையன் சமத்தா ராமேஸ்வரம் போய்ட்டு, நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கையில சீல் வைத்த ராமேஸ்வரம் புனிதநீர் இவற்றோடு வந்ததைப் பார்த்து மகிழ்ந்த வைதீகர் இவருக்கு ராஜ உபசாரம் செய்து விருந்து வைத்து, வாத்தியாரோடு அம்மாவிடம், அவளுடைய மகனுடைய பெருமைகளைச் சொல்லி மகிழ்ந்து போனாராம். இந்த விவரங்களையெலாம் நேற்று வந்த பம்பாய்க்காரர் தன் அக்காள் வீட்டுக்காரர் செய்த வேலையைச் சொல்லிச் சொல்லிச் சிரித்துவிட்டு, அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் மூட நம்பிக்கையிலே வாழ்ந்திருக்காங்க, இப்போ, உலகம் எப்படிச் சுருங்கிப் போச்சு, தினம் ஆயிரக் கணக்குல வெளிநாடு போறாங்க வறாங்க, அவுங்கள்ளாம் ராமேஸ்வரம் போயா ஸ்நானம் பண்ணி புனிதநீரா கொண்டு வராங்க என்றார்”
பெரியவர் கதை சொல்லி முடிக்கும் வரை ராகவன் உள்ளிட்ட எல்லோரும் சிரித்துக் கொண்டே கதைகேட்ட சுவாரசியத்தோடு வீடுகளுக்குப் புறப்பட்டனர். பெரியவரும் திண்ணையைக் காலி செய்துகொண்டு அவர் வேலையைப் பார்க்க உள்ளே போய்விட்டார்.
பின் குறிப்பு
ந்துக்கள் கடல்கடந்து போனால் சாத்திர விரோதம் என்ற கருத்து இருந்தது என்பதையும், அந்தக் கருத்தைச் சில பண்டிதர்கள் ஆதரித்தார்கள். முன்னாளில் ராஜாஜி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களும் இதுபோன்ற சிரமத்துக்கு ஆளானார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


சிறுகதை -- கீசகன் வதம்



தஞ்சை வெ.கோபாலன்.

பாரத புண்ணிய பூமியின் தலைசிறந்த இதிகாசங்களுள் மகாபாரதம் ஒன்று. அதில் பாண்டவர்களின் மூத்தவன் யுதிஷ்டிரன் சகுனியோடு சூதாடி தோற்றதன் விளைவாக ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் அதாவது தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமறைவாக இருத்தல் வேண்டுமென விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு மறைந்திருந்த காலம். தாங்கள் யார் கண்ணிலும் படாமல் ஒரு வருஷ காலத்தை ஓட்ட வேண்டுமானால் அதற்குத் தக்க இடம் விராட மன்னன் ஆண்ட மத்சிய நாடு என்பதை முடிவு செய்தார்கள். அவர்கள் அந்த ஊரினுள் நுழையுமுன் ஊருக்கு வெளியே இருந்த ஒரு வன்னிமரப் பொந்தில் தங்களுடைய ஆயுதங்களையெல்லாம் மறைத்து வைத்துவிட்டுத் தனித்தனியாகப் பிரிந்து போய் நகரத்தினுள் நுழைந்தார்கள். தங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று யுதிஷ்டிரன் துர்க்கையிடம் வேண்டிக் கொண்டான்.
விராட ராஜாவிடம் சென்று யுதிஷ்டிரன் தன்னை கனகன் எனும் பெயர் கொண்ட ஒரு பிராமண பண்டிதன் என்று சொல்லிக் கொண்டு பகடை ஆட்டத்திலும் வல்லவன் என்று சொல்லி அரசனின் தோழனாகச் சேர்ந்து கொண்டான். பீமன் தன்னை வல்லாளன் என்று சொல்லிக் கொண்டு, மல்யுத்தமும் செய்வேன் என்று சொல்லி விராட ராஜாவின் அரண்மனையில் சமையல் செய்பவனாகச் சேர்ந்தான். அர்ஜுனன் பெண் வேடமணிந்து கொண்டு சற்று ஆண்மை வெளிக்காட்ட தன் பெயர் பிரஹன்னளை என்றும் தான் ஒரு பேடு எனத் தெரிவித்து அந்தப்புரத்தில் வேலைக்கு அமர்ந்தான். நகுலனோ தமக்ரந்தி எனும் பெயரோடு அரண்மனை குதிரை லாயத்தில் குதிரைகளைப் பழக்கும் பணியில் ஈடுபட்டான். சகாதேவனோ தந்திரிபாலன் எனும் பெயரோடு மாட்டுத் தொழுவத்தில் பணியாற்றத் தொடங்கினான்.
இப்படி பாண்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விராட மன்னனிடம் வெவ்வேறு பணிகளில் அமர்ந்து கொண்ட அதே நேரத்தில் விராட நகரத்து வீதிகளில் ஒரு வேலைக்காரி போல பாஞ்சாலி நடந்து செல்கிறாள். வேலைக்காரி என்பதை ‘சைரந்திரி’ என்று தன்னைக் கூறிக் கொண்ட பாஞ்சாலி அதற்கேற்ப கிழிந்த உடைகளை அணிந்திருந்தாள். பேரழகியான திரெளபதி என்னதான் கந்தை உடைக்குள் தன்னை மறைத்துக் கொண்டாலும் அழகு வெளிப்படாமல் போகுமா? தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அவள் மீது கவனம் செலுத்தினார்கள். அரண்மனை மேல்தட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ராணி சுதேசனா என்பாள் கண்களில் இந்த சைரந்திரி தென்பட்டாள். அவள் நிலைமையைக் கண்டு மனமிரங்கி அவளை அழைத்துவரச் செய்து அவள் வரலாற்றைக் கேட்டாள். அதற்கு சைரந்திரி சொன்னாள், “மகாராணி! எனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவன்களாக இருக்கிறார்கள். ஒரு சாபத்தின் காரணமாக ஒரு வருஷ காலம் நான் அவர்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும். இந்த ஒரு வருஷ காலம் முடிந்ததும் அவர்கள் என்னை வந்து அழைத்துச் செல்வார்கள். அதுவரை எனக்கு அடைக்கலம் தாருங்கள். நான் தங்களுக்கு மலர்மாலைகள் தொடுத்தும், அழகுபடுத்தியும் தோழியாக இருந்து பணிவிடை செய்வேன்” என்றாள்.
ராணி சுதேசனா உடனே ஒப்புக்கொண்டாலும், இவளது அழகு தொல்லை கொடுத்தால் என்ன செய்வது என்று யோசனை செய்தாள். அவளது சந்தேகத்தை சைரந்திரியிடமே கேட்டாள் ராணி. அதற்கு அவள் சொன்னாள், “தாயே! நான் தங்களுடனேயே தங்கிக்கொள்கிறேன். பிரிந்து சென்றாலல்லவோ தொல்லை. இருந்தாலும் எனது கந்தர்வக் கணவர்கள் எனக்கு எப்போதும் காவலாக இருந்து காப்பாற்றுவார்கள். முறைதவறி யாரேனும் நடக்க முயன்றால், அவர்களை என் கணவன்மார்கள் கொன்றுவிடுவார்கள், ஆகையால் அஞ்ச வேண்டாம்” என்றாள். ராணியின் பரிபூரண சம்மதத்தோடு சைரந்திரி அங்கேயே ராணியின் தோழியாகத் தங்கிக் கொண்டாள்.
விராட நாடு, அற்புதமான வளம் மிகுந்த நாடு. அங்கு எப்போதும் திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கும். மகாசிவராத்திரி அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பல போட்டிகள் நடக்கும். அவற்றில் மற்போரும் ஒன்று. பல தேசங்களில் இருந்தெல்லாம் மல்லர்கள் வந்து அங்கு குவிந்தனர். அந்த ஆண்டில் நடந்த மற்போரில் வேற்று நாடு ஒன்றிலிருந்து வந்திருந்த மல்லன் ஒருவன் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்க்க எவரும் இல்லையென்று முழக்கம் செய்து கொண்டிருந்தான். மன்னருக்கு இந்தச் செய்தி மனவருத்தத்தைக் கொடுத்தது. அயலானான இவனை எதிர்த்து மல் யுத்தம் செய்ய நம் நாட்டில் எவரும் இல்லையா? என வருந்தினான். அப்போது கனகன் எனும் பெயரில் மன்னனிடம் நண்பனாக விளங்கிய யுதிஷ்டிரன் சொல்கிறார், “மன்னா! கவலை வேண்டாம். தங்கள் அரண்மனை மடைப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமையற்காரன் வல்லாளன் சிறப்பாக மற்போர் புரிவதை நான் பார்த்திருக்கிறேன். அவனை இந்த வேற்று நாட்டானோடு போட்டியிட்டு வேற்றி பெறச் செய்யலாம், அவன் நிச்சயம் வெல்வான்” என்றார்.
அரசர் உடனே வல்லாளனை அழைத்தார். அவனை புதிய மற்போர் வீரனை எதிர்த்து மற்போர் புரிய முடியுமா என்றார். வல்லாளன் ஒப்புக்கொண்டான். அங்ஙனமே வல்லாளன் புதியவனை எதிர்த்துக் களம் இறங்கினான். இரண்டு யானைகள் மோதிக்கொண்டது போல இருவரும் மோதிக் கொண்டனர். எடுத்த எடுப்பில் வல்லாளன் தன் திறமைகளை வெளிக்காட்டவில்லை. மெல்ல மெல்ல அவன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தான். ஆணவத்தோடு புதியவன் போரிடத் துவங்கும் சமயம் வல்லாளன் தன் திறமையை எடுத்து விட்டான். கூட்டம் ஆர்ப்பரிக்க புதியவன் மண்ணைக் கவ்வ, வல்லாளன் வெற்றி வீரனாக மார்பில் முஷ்டியால் குத்திக் கொண்டு தன் வெற்றியைக் கொண்டாடினான்.
விராட தேசத்து ராணி சுதேசனாவுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் பெயர் கீசகன். பயங்கரமான பலசாலி அவன். அந்த நாட்டுப் படைத்தலைவன், அதோடு அரசரின் மைத்துனன் என்கிற திமிர் உண்டு அவனுக்கு. பாண்டவர்களின் அக்ஞாத வாசம் பத்து மாதங்கள் முடிந்த நிலையில் அவர்களுக்கு ஒரு சோதனை உண்டானது கீசகன் வடிவத்தில். ஒரு நாள் அவன் தன் சகோதரியின் அந்தப்புரத்துக்குச் சென்றான். அங்கு ராணிக்கு உதவி புரிந்து கொண்டிருந்த தோழி சைரந்திரியைப் பார்த்து விட்டான். அவளுடைய அழகில் மயங்கி அந்தப் பணிப்பெண்ணைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி சகோதரி சுதேசனாவிடம் கேட்டான். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக அந்த வேலைக்காரிதான் வேண்டுமென்று கீசகன் அடம் பிடித்தான். அவளுடைய கணவன்மார்கள் தீங்கு செய்வார்கள் எனும் எச்சரிக்கை செய்தும் அவன் கேட்பதாயில்லை.
வேறு வழியறியாத ராணி தன் சேடியான சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று சிறிது மதுபானம் எடுத்து வரும்படி கட்டளையிட்டாள். மறுத்துப் பேசமுடியாத சைரந்திரி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள், தனக்குப் பதிலாக வேறு யாரையாவது அனுப்பும்படி, ராணி கேட்கவில்லை, பிடிவாதமாக அவளையே போகச்சொன்னாள். கீசகன் கொடுத்த அழுத்தம் அல்லவா? வேறு வழியில்லை. இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் தன் கணவன்மார்கள் மீதிருந்த நம்பிக்கையில் தாம் எப்படியும் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் சைரந்திரி கீசகன் அரண்மனைக்குச் சென்றாள்.
தான் விரும்பிய பெண் தன் அரண்மனைக்குள் வருவது கண்டதும் இன்ப உணர்வு மேலிட கீசகன் தன்னை மறந்து அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பினாள் சைரந்திரி. ஓடி அரண்மனையின் சபைக்கு நடுவே சென்று உதவி கேட்டு அலறினாள். அப்போது அங்கு குழுமியிருந்த விராட ராஜா உட்பட அனைவரும் பயத்தில் உறைந்து போயிருந்தனர். கீசகனைக் கண்டு அவர்களுக்கெல்லாம் அத்தனை பயம். அருகிலிருந்த யுதிஷ்டிரரும், பீமனும் கூட தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாளாவிருந்தனர். பீமன் கட்டுப்பாட்டை இழந்து பொறுமை இழக்கும் நிலைக்கு வந்தது கண்டு அருகிலிருந்த யுதிஷ்டிரர் அவனை சமையற்கட்டில் விறகு பிளக்க வேண்டுமாம் போ என்று அனுப்பி வைத்தார்.

எப்படியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த சைரந்திரி சமையற்கூடத்தில் பீமனை ரகசியமாகச் சந்தித்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டினாள். சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து பீமன் சைரந்திரியிடம் சொன்னான், “கீசகன் ஆசைக்கு இணங்குவது போல பாசாங்கு செய்து, நள்ளிரவில் தனித்து வந்து உன்னை சந்திக்கும்படி சொல். நான் அங்கு மறைந்திருந்து மற்றவைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்றான்.
வலாளனாக இருந்த பீமன் சொன்ன ஏற்பாட்டின்படி திரெளபதி எனும் சைரந்திரி நடந்து கொண்டாள். அவள் சம்மதத்தைக் கேட்டு கீசகன் மட்டற்ற இன்ப அதிர்ச்சி அடைந்தான். இரவை எண்ணி தவமிருந்தான். இரவும் வந்தது. சைரந்திரி சொன்ன நாட்டியசாலைக்குள் எதிர்பார்ப்புகளோடும், இன்பக் கனவுகளோடும் நுழைந்தான். உள்ளே மங்கிய வெளிச்சம். அருகில் கட்டிலில் ஒரு உருவம் போர்வையால் மூடிக்கொண்டு படுத்திருந்ததைப் பார்த்தான் கீசகன். அவன் இதயம் மிக வேகமாக படபடவென்று அடித்துக் கொண்டது. உடலெங்கும் இன்ப உணர்பு பரவியது. கட்டிலுக்கருகில் சென்றான், மெல்ல போர்வையால் மூடிய தேகத்தைத் தொட்டான், அந்த உருவம் அசைந்தது, எழுந்தது பலம் மிகுந்த ஒரு ஆண் கீசகனோடு போரிடத் தொடங்கினான்.
இருவரும் பலமாக மோதிக் கொண்டார்கள். ஒருவன் உள்ளம் காம இச்சையால் களி கொண்டிருந்தது. மற்றொருவன் உள்ளமோ பழிவாங்கும் உணர்வில் ரத்தப்பசி கொண்டு போராடியது. கையில் கிடைத்த கீசகனை மாவு பிசைவது போல பிசைந்து கொன்றான் வல்லாளன். பிறகு சென்று குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு உடலெங்கும் சந்தனம் பூசிக் கொண்டு படுத்து நன்கு உறங்கினான்.
பொழுது விடிந்தது. ஊரெங்கும் செய்தி பரவியது. காம வெறி பிடித்த கீசகனை ஏதோ கந்தர்வர்கள் வந்து பிசைந்து கொன்றுவிட்டார்கள் என்று. விராட ராஜாவும், ராணி சுதேசனாவும், நாட்டு மக்களும், அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐந்து ஜீவன்களைத் தவிர அனைவருமே கீசகனை கந்தர்வர்கள் வந்து கொன்றுவிட்டார்கள் என்று நம்பினார்கள். பாண்டவர்களும் எஞ்சியிருந்த ஒரு மாத காலத்தை அஞ்சாத வாசமிருந்து முடித்துக் கொண்டார்கள். கீசகன் வதம் மகாபாரதத்தில் வரும் ஒரு சுவையான கதை.



சிறுகதை -- முயற்சியால் ஆகாதெனினும்!…



தஞ்சை வெ.கோபாலன்

சுபதிக்கு அந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது. அலுவலகத்தில் முக்கியமான பணியில் ஈடுபட்டிருந்த அந்த நேரத்தில் இந்த தந்தி வந்திருக்க வேண்டாம். தஞ்சையிலிருந்து அந்த தந்தியை அனுப்பியிருந்தவர் அங்கு மேம்பாலத்தின் அருகிலுள்ள காது கேட்காதோர் வாய் பேசாதோருக்கான தனிப் பள்ளியின் தலைமை ஆசிரியர். பசுபதியின் மகன் கண்ணன் அங்குதான் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பிறவியிலிருந்தே காதும் கேட்காது, வாயும் பேசமுடியாது. பன்னிரெண்டு வயது வரை வீட்டில் வைத்து எல்லா வைத்தியங்களும் பார்த்த பிறகு நரம்பியல் நிபுணர் ஒருவர் பார்த்துவிட்டு இனி இவனுக்கு வைத்தியம் செய்ய பணத்தைச் செலவு செய்யாதீர்கள். இவன் இப்படியே இருந்து ஏதாவது தொழிலைக் கண்ணால் பார்த்துக் கையால் செய்யத் தக்க வகையில் கற்றுக் கொடுத்து பிழைக்க ஒரு வழியைக் காட்டிவிடுங்கள். அவ்வளவுதான் நீங்கள் இனி செய்யக் கூடியது என்று சொன்னதால் தஞ்சாவூரில் இவனைப் போன்றவர்கள் தங்கி படிக்கும் வசதி கொண்ட பள்ளியில் இவனைக் கொண்டு போய் சேர்த்தார். அவனும் இப்போது கிட்டத்தட்ட ஐந்தாறு ஆண்டுகளாக அங்குதான் இருந்தான். இப்போது இன்று இந்த அவசரத் தந்தி சொன்ன செய்தி அவனைக் காலை முதல் காணவில்லை என்பதுதான். பசுபதிக்கு கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அடுத்த சீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராகவனிடம் விஷயத்தைச் சொன்னார்.
இருவரும் பசுபதியின் மேலதிகாரியிடம் சென்று தன்னுடைய காது கேட்காத வாய் பேசமுடியாத மகனை அவர்களைப் போன்றவர்க்கென்று நடக்கும் போர்டிங் பள்ளியில் இருந்து காணாமல் போய்விட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. என் மகனை உடனே போய் தேடவேண்டும், இப்போதே தஞ்சாவூர் போக அனுமதியும் இரண்டு நாள் விடுப்பும் தேவை என்று கேட்டார்கள். வேதாரண்யத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பசுபதியின் அந்த அதிகாரி சற்று அலட்சியமாக “ஏன்யா! அவனைக் காணும்னா எங்கே போயி தேடுவீங்க? அவனுக்கோ காதும் இல்லை வாயும் இல்லை; என்னய்யா பண்ணப் போறீங்க? போய் பேசாம போலீசிலே ஒரு புகார் கொடுங்க, அவுங்க கண்டுபிடிச்சி கொடுப்பாங்க” என்றார்.
பசுபதிக்கு ஆத்திரம் வந்தது. காணாமல் போனது அவர் மகன் இல்லை, தன்னுடைய மகன். அவருடைய மகனாக இருந்தால் இப்படிப் பேசுவாரா? அலுவலகங்களில் ஏதோ ஒரு அதிகாரி என்று உட்கார்ந்து விட்டால் தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை இப்படியெல்லாம் பேச யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இவர்களுக்கு மனிதாபிமானமே இருக்காதா? இவர்தான் தூக்கிப் பிடித்து அந்த துறை பணிகளைச் செய்யப் போகிறாரா? என்ன செய்வது தன்னுடைய எதிர்காலம் இந்த ஆள் கையில் இருப்பதறிந்து பசுபதி சற்று தணிந்து போக தீர்மானித்தார்.
“அதெல்லாம் சரிதான் சார். அவனுக்குப் பேசமுடியாது, காதும் கேட்காது என்கிறேன், அவன் யார்கிட்டே போயி தான் யார் என்பதையெல்லாம் சொல்ல முடியும். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகவேண்டியது என் கடமை, சொல்லிவிட்டேன், நான் வரேன் சார்” என்றார் பசுபதி.
“ஆபீஸ் விஷயங்களில் எல்லாம் இப்படி தூக்கி எறிந்து பேசமுடியாது மிஸ்டர் பசுபதி. இப்படிப்பட்ட ஒரு மகனை இருட்டில் குருட்டுப் பூனை குறுக்குச் சட்டத்தில் பாய்ந்ததைப் போல பிள்ளையைத் தேடப்போறேன்னு சொன்னா, எங்கே போயி தேடுவீங்க?” என்றார் அவர் மறுபடியும்.
“நீச்சல் தெரியாம தண்ணில விழுந்துட்டா என்ன செய்வோமோ அதைச் செய்வோம் சார். காலையும் கையையும் அசைத்து நீந்த முயற்சிப்பது இல்லையா, அப்படி. அவன் போகக்கூடிய இடங்கள், அவனுக்குத் தெரிந்தவர்கள் வீடுகள், இப்படி பல இடமும் போய் தேடிப்பார்த்துத்தான் கண்டுபிடிக்க முடியும். எல்லாம் தானா வருவான் என்று உங்களைப் போல அலட்சியமா நானும் உட்கார்ந்திருக்க முடியாது சார். அவன் உடம்பில் ஓடறது என் ரத்தம். இங்கே என் ரத்தம் கொதிக்குது சார்” என்றார் பசுபதி.
அதிகாரி விட்டபாடில்லை. “அதெல்லாம் சரிதான்யா! அப்படி தேடியும் அவன் கிடைக்கலைன்னா என்ன சார் பண்ணப் போறீங்க?” என்றார்.
பசுபதிக்கு ஆத்திரம் தலைக்கேறியது, “அங்கேயே தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துப் போவேன் சார்” என்றார் சூடாக.
“சரி, சரி இது போல நாடகபாணில பேசாதீங்க. போயிட்டு வாங்க. உங்க சவுகரியம்” என்றார் வெறுப்புடன்.
“இவர் கிடக்கிறார் விடுங்க பசுபதி, இவர் புள்ளையா இருந்தா இப்படி பேசுவாரா, வாங்க நீங்க, நானும் உங்களோடு வரேன். உங்களைத் தனியா விட கவலையா இருக்கு” என்றார் நண்பர் ராகவன்.
இருவரும் உடனே பேருந்து நிலையம் சென்று வேதாரண்யத்திலிருந்து திருச்சி செல்லும் பஸ்சில் ஏறி தஞ்சைக்குப் பயணமானார்கள். அங்கு சென்ற இருவரும் அந்த பள்ளிக்கூடத்துக்குச் சென்று என்ன நடந்தது என்று விசாரித்தார்கள்.
அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், அன்று பள்ளித் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அன்றைக்கு ஆங்கில பாடத்தில் தேர்வு. இவனிடம் கேள்வித் தாளைக் கொடுத்த சில நிமிஷங்களில் இவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெறும் விடைத்தாளை ஆசிரியையிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டானாம். திரும்பி வருவான் என்று காத்திருந்த ஆசிரியர்கள் அவன் வராதது கண்டு பயந்து போய் தந்தி கொடுத்ததாகச் சொன்னார்கள்.
இவனுக்கு இங்கு யாரையுமே தெரியாதே. எங்கு போயிருப்பான். அந்த பள்ளிக்கூடத்துக்கு அருகில் இருந்த மேம்பாலம் வழியாக பெரிய கோயிலுக்குப் போகவும், மறுபாதையில் சென்றால் மருத்துவக் கல்லூரி இருக்கும் பகுதிக்கும் போகலாம். அங்கிருந்து இறங்கி போகும் ஒரு பாதை ரயில் நிலையம் போகும். அந்தப் பாதையில் போய் பார்க்கலாம் என்று பசுபதியும் நண்பரும் போனார்கள்.
சற்று தூரத்தில் ஒரு டீக்கடை. அந்த டீக்கடைக் காரரிடம் பசுபதி கேட்டார், “ஏன்யா, காது கேட்காத வாய் பேசமுடியாத ஒரு பையன் மேம்பாலம் பள்ளிக்கூடத்திலிருந்து இந்த பக்கமா வந்தானா? அப்படி யாரையாவது பாத்தீங்களா?” என்றார்.
அவர் சொன்னார், “அமாங்க, அப்படியொரு ஊமைப் பையனை அழைத்துக் கொண்டு யாரோ ஒரு ஆள் இங்கே வந்து டீ வாங்கி குடிச்சாங்க. அவங்களைப் பார்த்தா அந்தப் பையனுக்கும் அந்த ஆளுக்கும் சம்பந்தம் இருக்கறதா தோணலீங்க. சந்தேகமா இருக்கு, ஸ்டேஷன் பக்கமா போனாங்க ரெண்டு பேரும் போய் அங்கே பாருங்க”.
இருவரும் ஸ்டேஷன் பக்கம் போய் சுற்றிப் பார்த்தார்கள். கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் இங்கே ஒரு ஊமைப் பையனைப் பார்த்தீங்களா என்று கேட்டார்கள். எல்லோரும் கைவிரித்துவிட்டார்கள். பையனைத் தேடும் பரபரப்பில் இருவரும் ஒன்றுமே சாப்பிடவில்லை. நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. வேறு வழியில்லை போலீசில் போய் ஒரு புகாரைக் கொடுத்துவிடலாம் என்று அங்கு போனார்கள். நல்ல காலம் அந்த பள்ளி தலைமை ஆசிரியரும் தங்கள் விடுதியிலிருக்கும் இந்த மாணவனைக் காணவில்லை என்று புகார் கொடுக்க வந்திருந்தார். இவர்களும் அந்தப் புகாரில் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு பஸ்சைப் பிடித்து வேதாரண்யம் போக முடிவு செய்தனர்.
வழிநெடுக பசுபதி புலம்பிக் கொண்டே வந்தார். என்ன செய்கிறானோ, வாய்கூட பேசமுடியாம என்ன பாடு படுகிறானோ என்றெல்லாம் புலம்ப ராகவன் ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்தார். வேதாரண்யம் பஸ் தஞ்சையிலிருந்து புறப்பட்டு போய்க்கொண்டிருந்தது.
வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் கோபுரம் தெரிந்தது. பசுபதி “அம்மா! மாரியம்மா! என் புள்ளைய நீதான் காப்பாத்திக் கொண்டு சேர்க்கவேணும் அம்மா. உன்னை விட்டா எனக்கு ஏது கதி” என்று சொல்லிக் கொண்டே ஓவென அழத் தொடங்கினார்.
பஸ்சில் இருந்தவர்கள் இவரைத் திரும்பிப் பார்த்தனர். பாவம் என்ன கஷ்டமோ என்று அவர்களும் வருந்தினர். ராகவன் நிலைமையைச் சமாளித்து மெல்ல அழைத்துக் கொண்டு போனார். திருவாரூரில் இவருக்கு ஒரு உறவினர் இருந்தார். அங்கு ஒருக்கால் இவன் போயிருக்கலாமோ, அங்கேயும் போய் பார்த்துவிட்டு ஊருக்குப் போய்விடலாம் என்று திருவாரூர் போனார்கள். அங்கு அவரது உறவினர் வீட்டுக்குப் போனதும் அவர்கள் இவர்களை வரவேற்று என்ன விசேஷம் இப்படி திடீர்னு வந்திருக்கீங்க என்று விசாரித்த போதே அவன் இங்கு வரவில்லை என்பது தெரிந்து போயிற்று.
அவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு ஒருக்கால் அவன் இங்கு வந்தால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு நாகப்பட்டினம் பஸ் ஏறி அங்கிருந்து வேதாரண்யம் போய்ச் சேர்ந்தார்கள். வீட்டுக்குப் போகும்போது மணி இரண்டைத் தாண்டியிருக்கும். பசுபதியின் மனைவி வாசலில் நின்று கொண்டு இவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தாள் பாவம். பையனை எங்கும் காணவில்லை என்றதும், அவள் அந்த நள்ளிரவிலும் வாய்விட்டு ஓவென்று கதறினாள். அருகிலிருந்த சில வீட்டுக்காரர்கள் இவள் அழுகையைக் கேட்டு வாசல் விளக்கைப் போட்டு என்னவென்று அறிந்து கொள்ள வந்து சேர்ந்தனர்.
அப்படி வந்திருந்தவர்களிடம் நடந்த காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது அவ்வூர் சப் இன்ஸ்பெக்டர் அங்கு மோட்டார் பைக்கில் வந்து சேர்ந்தார்.
வந்தவர், “சார், இங்கே பசுபதிங்கறது யாரு?” என்றார்.
போலீசைக் கண்டதும் துடிப்போடு பசுபதி, “நாந்தான் சார் பசுபதி, என்ன சார் விசேஷம்?” என்றார்.
“இல்லை, இந்த நேரத்துல என்ன இங்கே இப்படி கூட்டமா நிக்கறீங்க?” என்றார்.
“தஞ்சாவூர்ல இருந்த எங்க வாய்பேசமுடியாத பையன் காணாம போயிட்டான் சார். அவனைப் போய் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துட்டு இப்பதான் சார் வரேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சேதி சொல்லிக்கிட்டிருக்கேன், அதான் கூட்டம்” என்றார் பசுபதி.
“கவலைப் படாதீங்க பசுபதி. அந்த விஷயமாத்தான் நான் வந்தேன். உங்க பையன் பத்திரமா இருக்கான். இப்பதான் சேதி வந்தது. அதைச் சொல்லிட்டுப் போகத்தான் உங்களைத் தேடி வந்திருக்கேன். அவனை அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன்லேர்ந்து ஆட்கள் அழைச்சிட்டு வராங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்துடுவாங்க” என்றார் எஸ்.ஐ.
“என்ன ஆச்சு சார், ஏதாவது விவரம் தெரியுமா சார்” என்றார் ராகவன்.
“இருங்க, அவுங்க வந்ததும் தெரிஞ்சுடுது. பையன் கிடைச்சுட்டான்ல சந்தோஷமா இருங்க, இப்ப வந்துடுவாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து இரு போலீஸ்காரர்களும், பையனும் அவருடன் கூட வேதாரண்யத்து இளைஞர் ஒருவரும் வந்து இறங்கினார்கள்.
பசுபதியும் குடும்பத்தாரும் ஓடிப்போய் பையனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஓவென்று அழுதார்கள். அனைவரையும் ராகவனும் எஸ்.ஐ.யும் சமாதானப் படுத்தி ஆசுவாசப் படுத்தினார்கள்.
பசுபதி மட்டும் சற்று சமாதானமடைந்து ஜாடையில் பையனிடம் ஏதோ கேட்க அவனும் ஜாடையில் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் பேசிய விவரம் அவர்களைத் தவிர மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது ஜீப்பில் வந்திறங்கிய வேதாரண்யத்து இளைஞன் மட்டும் பேசினான்.
“ஐயா! நான் வேதாரண்யத்துக்காரந்தான். நான் பூண்டி காலேஜ்ல எம்.ஏ. படிச்சுகிட்டு இருக்கேன். அங்கே ஹாஸ்டலில்தான் இருக்கேன். நான் அடிக்கடி புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குப் போவேன் சார். அப்படி அங்கே போனபோது, செறுப்பு போட்டுட்டுப் போனா பார்த்துக்கன்னு ஒருத்தர் வாசலில் உட்கார்ந்திருப்பார். செறுப்பு பார்த்துக் கொள்ள அவருக்கு எல்லோரும் காசு கொடுப்பாங்க. கடைகளிலும் போடலாம் ஆனா, அங்கு டோக்கன் எல்லாம் கிடையாது, இந்த ஆள் டோக்கன் போட்டுக் கொடுப்பான்.
அப்படி நான் போனபோது அந்த ஆளுக்குப் பக்கத்துல செறுப்புக்குள்ள டோக்கன்களைச் செறுகிக் கொண்டு இந்தப் பையன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன். பையனைப் பார்த்தா இந்த வேலை செய்யறவனா தெரியலையே இவன் ஏன் இங்க உட்கார்ந்திருகான் என்று அவனை நீ யாருடான்னு கேட்டேன். அவன் நான் சொன்னதைக் கவனிச்சதாகவே தெரியல. அந்த செறுப்புக் காவல் காக்கும் நபரைக் கேட்டேன், அந்த ஆள், நீங்க உங்க வேலைய பாருங்க தம்பி, அவன் யாராயிருந்தா உங்களுக்கு என்ன? என்றான்.
அதனால் எனக்குச் சந்தேகம் வந்தது. உடனே போய் பூண்டி போலீசிலே போய் விஷயத்தைச் சொன்னதும் அவங்கள்ள ஒருத்தர் எங்கூட வந்து செறுப்பு காவலரிடம் கேட்க அவன் விஷயத்தைக் கக்கிவிட்டான். இந்த பையனை தஞ்சை மேம்பாலம் பக்கம் பார்த்து, இவனுக்குப் பேசமுடியாதுன்னு தெரிஞ்சு தனக்கு உதவியா இருக்கட்டும்னு கூட்டிக்கிட்டு வந்துட்டதாக சொன்னான்.
அவர்கள் தஞ்சாவூர் போலீஸ் நிலையத்துக்குக் கேட்டாங்க போலிருக்கு. அவங்க, ஆமாம் அங்க ஒரு புகார் வந்திருக்கு, இதப் போல ஒரு பையனைக் காணும்னு, அவன் ஊர் வேதாரண்யம்னு அவன் அப்பா விலாசம் எல்லாம் கொடுத்திருக்கார். பையனைப் புடிச்சிட்டிங்கன்னா உடனே வேதாரண்யத்துக்குத் தகவல் கொடுக்கச் சொன்னாங்க.
அப்போது அம்மாபேட்டை போலீஸ் ஜீப் ஒண்ணு வந்தது. அதில் இருந்தவர்கள் தாங்கள் வேதாரண்யம்தான் போகிறோம் என்று சொன்னதால, பையனை பத்திரமா அவங்க கிட்ட ஒப்படைச்சி வேதாரண்யம் அழைச்சுப் போகச் சொன்னாங்க. நானும் பையனோடு அப்பா விலாசத்தைப் பார்த்துட்டு, அடடே நம்ம வீட்டுக்கு அடுத்த தெருதான், எனக்குத் தெரியும்னு நானும் அவுங்க கூடவே வந்துட்டேன் என்று விவரங்களைச் சொன்னார்.
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? புன்னை நல்லூர் மாரியம்மன் செய்த மாயமா, இதெல்லாம் எதேச்சையாக நடந்த செயலா? அதென்னவோ, எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் பசுபதி மட்டும் நிச்சயமாக நம்பினார், நான் உன் கோயிலைத் தாண்டி வரும்போது உன்னிடம் கெஞ்சி வேண்டிக் கொண்டேன் அல்லவா, நீ அனுப்பி வச்சுட்டியே அம்மா, தாயே, மகமாயி, நீயே எனக்குக் கண்கண்ட தெய்வம் என்று சொல்லி உருகிப் போனார்.


சிறுகதை -- காசிக்குப் போன வைகாவூர் வைத்தா!



தஞ்சை வெ.கோபாலன்

வைகாவூர் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அங்குள்ள சிவன் கோயிலையொட்டி இருந்த வடக்கு மடவளாகத் தெருவில் பத்துப் பதினைந்து வீடுகள், அவை அத்தனையும் இன்றோ நாளையோ கீழே விழத் தயாராக இருப்பது போல காட்சி தந்து கொண்டிருக்கிறன. அதில் ஒரு வீட்டின் திண்ணையில் பொழுது விடிந்து சூரியன் சுள்ளென்று சுடும் வரை வாயில் திண்ணையில் படுத்துறங்கிக் கொண்டிருந்த வைத்தா என அழைக்கப்படும் வைத்தியநாதன் அப்போதுதான் கண் விழித்து எழுந்தான்.
இந்த வைத்தாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். இவனுக்கு முப்பது வயதுக்கு மேல் இருக்கலாம். சரியாக அவனுக்கும் தெரியாது, அந்த ஊர்க்காரர்களுக்கும் தெரியாது. அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள் யாரும் கிடையாது. அவனுக்குச் சுமார் பத்து வயதிருக்கும்போது அவனுக்கு உறவு என்று இருந்த அவன் அம்மாவும் காலமாகிவிட்டாள். அவனுக்கென்று அந்த பாழடைந்த வீட்டைத் தவிர வேறு சொத்து பத்து என்று எதுவும் கிடையாது. அந்த வீடும் திண்ணையும் அதன் உட்புறம் அமைந்துள்ள ரேழி, காமரா உள் தவிர வீட்டின் மற்ற பகுதிகள் கூடம் தாழ்வாரம் அனைத்தும் கீழே விழுந்து ஓடுகள் சரிந்து பாழடைந்து போய் கிடந்தது. அதை எடுத்து திரும்ப கட்ட பணத்துக்கு எங்கே போவது? அவன் பிழைப்பே அன்றாடம் கையேந்திப் பிழைக்கும் பிழைப்பு.
அவன் பள்ளிக்கூடம் போனதாகவோ, படித்ததாகவோ அவனுக்கே நினைவில்லை. அம்மா இருந்தவரை அவள் யார் வீட்டுக்காவது சமையல் வேலைக்குப் போவாள். அருகிலுள்ள டவுனுக்கு அந்த அம்மாள் அடிக்கடி கல்யாணம், கார்த்தி, தெவசம் என்று எங்கெல்லாம் கூப்பிடுகிறார்களோ அங்கெல்லாம் போய் சமையல் வேலை செய்து சம்பாதித்து மகனைக் காப்பாற்றி வந்தாள். பள்ளிக்கூடம் போகாமல் அம்மாவோடு சமையல் வேலைக்கு உதவி செய்து கொண்டு இவனது பால பருவம் ஓடிவிட்டது. அந்த அம்மாள் இறந்து போன பிறகு இவன் டவுனில் உள்ள கல்யாண காண்ட்டிராக்ட் சமையல்காரர்கள் விசேஷ தினங்களில் பரிமாறுவதற்கென்று ஆட்களைக் கொண்டு வருவார்கள். அப்படி பரிமாறுவதற்காகச் சென்று வரும் பரிஜாரகக் கோஷ்டியில் வைத்தாவும் ஒருவனாக இருந்து பிழைப்பு நடத்தி வந்தான்.
கல்யாண முகூர்த்த நாட்கள் அனைத்திலும் அவனுக்கு வேலை இருக்கும். வெளியூர்களுக்கெல்லாம் சென்று வருவான். அப்போதெல்லாம் அவனுக்கு சாப்பாட்டுக் கவலை இல்லை. ஆடி மாதமும், மற்ற மாதங்களில் முகூர்த்தம் இல்லாத நாட்களிலும் யார் வீட்டில் என்ன வேலை சொன்னாலும் செய்துவிட்டு அவர்கள் வீட்டிலேயே சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு அவனுடைய பூர்வீக இடிந்த வீட்டின் திண்ணைக்கு வந்துவிடுவான் படுத்துறங்க.
இன்று அவனுக்கு வேலை இல்லை, ஆகையால் நிதானமாக உறங்கி எழுந்தான். திண்ணையைவிட்டு கீழே இறங்கி ஒரு முறை சோம்பர் முறித்தான். அப்போது மிராசுதார் சாமா ஐயர் வந்து கொண்டிருந்தவர் இவன் இந்த நேரத்தில் இங்கு இருந்தால் வேலை கிடையாது என்று அர்த்தம் என்பதைப் புரிந்து கொண்டு, “எலே! வைத்தா, நம்மாத்துல மாமி மச்சுலேர்ந்து பித்தளை சாமான்களையெல்லாம் கீழே இறக்கி சுத்தம் செய்யணும்னு சொல்லிண்டுருக்கா, போய் பார்த்து அதுக்கு உதவி பண்ணு. அப்படியே மத்தியானம் நம்மாத்துலேயே சாப்பிட்டுக்கோ” என்று சொன்னார்.
“சரி மாமா! நான் போய் பார்த்துக்கறேன்” என்று இன்றைய பிரச்சனை முடிந்தது என்று மனதுக்குள் மகிழ்ந்தான்.
அப்போது அந்த ஊர் வாத்தியார் சுப்பிரமணியன் வந்து வைத்தாவிடம், “என்னடா வைத்தா! இன்னிக்கு வேலை இல்லியா?” என்றார்.
“பரிஜாரக வேலை இல்லை, சாமா ஐயராத்துல பாத்திரம் இறக்கணும் போகணும்” என்றான்.
“சரி சரி, நீ என்னவோ காசிக்கு போகணும்னு சொல்லிண்டு இருந்தியே, எப்போ போகப்போறே?” என்றார் சுப்பிரமணியன்.
“நீங்க சொல்லிட்டேள். என்னால உங்களை மாதிரியெல்லாம் நெனச்ச உடனே காசிக்குப் போகணும்னா முடியுமா? எத்தனை ஏற்பாடுகள் பண்ணனும். முதல்ல பணம் காசு வேணும். அப்புறம் அங்க எனக்கு யாரைத் தெரியும், போனா அங்கே தங்க ஏற்பாடு பண்ணணும். எத்தனை வேலை இருக்கு” என்றான் வைத்தா.
“டேய் வைத்தா! உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளு. கோடியாத்துல பார்வதி பாட்டி இருக்காளோல்லியோ? அந்த பாட்டி காசிக்குப் போறாளாம். துணைக்கு யாராவது இருந்தா தேவலாம்னு சொல்லிண்டு இருக்கா. போயி அந்தப் பாட்டிய பாரு. அவகிட்ட நெறைய பணம் காசு இருக்கு உனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிடுவா. காசிக்கு போனா, அங்கே அந்த பாட்டிகூடவே நீயும் தங்கிக்கலாம். ஒரு வயசான கிழவிக்கு உதவினா மாதிரியும் இருக்கும், உன்னோட காசியாத்திரை முடிஞ்ச மாதிரியும் இருக்கும்” என்றார் சுப்பிரமணியன்.
அப்போது அந்தத் தெரு இளைஞர்கள் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வைத்தாவிடம் சுப்பிரமணியன் பேசியதைக் காதில் வாங்கிக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் சுப்பிரமணியனிடம் கேட்டான் “என்ன சார், வைத்தா காசிக்கு போறானா?” என்று.
“ஆமாம்” என்றார் சுப்பிரமணியன்.
“போகட்டும், அங்கேதான் நரேந்திர மோடி இந்த தேர்தல்ல போட்டி போடப்போறாராம். வைத்தா போனா அவருக்குக் கூடமாட ஒத்தாசை செய்யலாம், நிறைய பணமும் கிடைக்கும், இரண்டு மாசம் பொழப்பும் நடக்கும். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய். காசி யாத்திரையும் நிறைவேறும், மோடிக்கு உதவி செஞ்சா இவனுக்கு நல்ல பணமும் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
அவர்கள் போனபிறகு வைத்தா சாமா ஐயர் வீட்டுக்குப் போய் அந்த வீட்டு அம்மாள் சொன்ன வேலைகளையெல்லாம் செய்துவிட்டு, அவர்கள் வீட்டு கிணற்றடியிலேயே இரண்டு வாளி இறைத்துத் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு அன்றைய சாப்பாட்டை முடித்துக் கொண்டான்.
மறுநாள் செய்தித் தாள்களில் எல்லாம் செய்தியொன்று வெளியாகியிருந்தது. வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட தமிழ்நாட்டிலிருந்து வைகாவூர் வைத்தா என்பவர் காசி போகிறார்” என்பது செய்தி. தெருவில் பலரும் செய்தித் தாள்களோடு வந்து வைத்தாவை குசலம் விசாரித்தனர்.
“என்னடா வைத்தா இது. ஆனானப்பட்ட மோடியை எதிர்த்து நீ தேர்தல்ல நிக்கப் போறியாமே. அதுவும் காசில போய். இதெல்லாம் என்னடா கூத்து?” என்றனர் ஊரார்.
வைத்தா திகைத்துப் போய் வாயடைத்து நின்றான். என்ன ஆயிற்று? யார் செய்த வேலை இது. நேற்று வந்த பசங்கதான் ஏதோ விஷமம் பண்ணியிருக்கான்கள் என்று அவர்களில் ஒருவனை அழைத்து “என்னடா இது நீங்க ஏதாவது சொல்லி தொலைச்சீங்களா, இப்படி பேப்பர்ல வந்திருக்கே” என்று கேட்டான்.
அவன் சொன்னான், அவர்களில் ஒருவனுடைய உறவுக்காரன் பக்கத்து டவுனில் பத்திரிகை நிருபராம். அவனிடம் விளையாட்டா எங்க ஊர்லேருந்து வைத்தா காசிக்குப் போறான். அங்கே எலக்ஷனுக்கு நிக்கற மோடிக்கு எதிரா நாமினேஷன் போடப்போறான் என்று சொன்னான். அதை அவன் நியூசா போட்டுட்டான் போல இருக்கு” என்றான்.
சரி நடப்பது நடக்கட்டும் என்று வைத்தா கோயில் திருக்குளத்துக்குக் குளிக்கப் போய்விட்டான். குளித்து முடித்துவிட்டு இடுப்பில் மடித்துக் கட்டிய ஈர வேட்டியும், தலைக்கு மேலே விரித்த குடைபோல துண்டை காயவைத்துக் கொண்டு மடவளாகத் தெரு திரும்பினான், அங்கே அவன் கண்ட காட்சி அவன் கண்களை நம்பவே முடியவில்லை.
அவன் வீட்டுக்கு எதிரில் நாலைந்து வேன்கள் மோட்டார் பைக்குகள் வீட்டு வாசலில் காமிரா, மைக் சகிதமாக ஏழெட்டு பேர் நிற்பதையும் கண்டான். போச்சு, இன்னிக்கு என்ன ஆகப்போகுதோ, எவனோ போய் என்னவோ கொளுத்திப் போட இப்போ இத்தனை பேர் என்னை தேடி வந்துட்டாங்களா? என்ன பதில் சொல்லுவது என்று கவலையடைந்தான் வைத்தா.
வைத்தா வீட்டை நெருங்கவும், நிருபர்கள் கூட்டம் மைக்கை நீட்டிக் கொண்டு அவனை மொய்த்துக் கொண்டார்கள்.
“சார்! நீங்கதானே வைகாவூர் வைத்தா? வாரணாசில மோடியை எதிர்த்து தேர்தல்ல நிக்கப் போறீங்களாமே?”
“எந்த கட்சி சார்புலசார் நிக்கப் போறீங்க”
“மோடிக்கு எதிரா நின்னா, ஏராளமா செலவு செய்ய வேணுமே, உங்களால முடியுமா சார்”
“அங்கெல்லாம் இந்திதான் பேசுவாங்க. உங்களுக்கு இந்தி தெரியுமா சார்”
இப்படி மூச்சு விடாம நிருபர்கள் கேள்வி அம்புகளை வீச, வைத்தா ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். சரி, கடவுள் நமக்கு ஏதோ வழி காட்டத்தான் இப்படியொரு அக்கப்போர்ல நம்ம சிக்க வைச்சிருக்கார். இந்த மனிதர்கள் தள்ளுகிற பாதையில் போய்த்தான் பார்க்கலாமே என்ன நடக்குதுன்னு என்று மனதை திடப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான் வைத்தா.
“எல்லோரும் கேளுங்க! நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் ஒரே பதில்ல எல்லாத்தையும் சொல்றேன். நான் காசிக்குப் போறது வாஸ்தவம். அங்கே மொடி தேர்தல்ல நின்னா, அவருக்கு எதிரா நான் நாமினேஷன் ஃபைல் பண்ணப் போறேன். சுயேச்சையாதான் நிப்பேன். எனக்கு பணம் கொடுத்து எல்லா ஒத்தாசையும் பண்றேன்னு அங்க சில பணக்காரா பிராமிஸ் பண்ணியிருக்கா. அதனால அங்கே போகப்போறேன். அங்க நம்ம தமிழ் நாட்டுக்காரா நெறய பேர் இருக்காங்களாம். அவுங்க ஓட்டு எல்லாம் எனக்குத்தான் விழும். அது தவிர மோடியை எதிர்த்துத் தோத்தாலும், அதிலயும் எனக்கு பேர் கிடைக்குமில்லையா. இந்த சின்ன வைகாவூர்ல இருந்துண்டு பரிஜாரகனா வேலை பார்க்கறதைக் காட்டிலும் ஒரு பெரிய தலைவரை எதிர்த்து நின்னா நானும் பிரபலமாயிடுவேன். அப்புறம் சாதாரண கல்யாணத்துக்கு எல்லாம் போயி பரிஜாரகனா வேலை செய்யறதை விட்டுட்டு கோடீஸ்வரன் வீட்ல நடக்கற விசேஷங்கள்ள யூனிபாரம் போட்டுணு பரிஜாரகம் பண்ணுவேன்” என்றான் பெருமையோடு வைத்தா.
எல்லோரும் அவனை புகைப்படம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். மறுநாள் எல்ல செய்தித் தாட்களிலும், தொலைக்காட்சிகளிலும் வைத்தா பற்றிய செய்திதான். ஊர் பேர் தெரியாம வைகாவூர் மடவளாகத் தெருவில் முடங்கிக் கிடந்த வைத்தா இன்று நாடு முழுக்கவும் தெரிந்த வி.ஐ.பி.யாக மாறிவிட்டான். எல்லா பத்திரிகையில் கட்டுரைகள், தலைப்புச் செய்திகள். ஒரு தமிழ்நாட்டு பிராமண பரிஜாரகன் மோடியை எதிர்த்துப் போட்டியாம். வைத்தாவுக்கு வானத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி.
இதற்கடுத்த சில நாட்கள் கழிந்து கொடிகட்டிய பெரிய கார்கள் சில வைகாவூர் மடவளாகத்துள் நுழைந்தது. கண்ணில் தென்பட்டவர்களிடம் அந்தக் காரில் வந்தவர்கள் இங்கே யார் வைத்தா என்பது என்று விசாரித்தார்கள். ஊர் பெரியவர்கள் வந்தவர்களை அழைத்துச் சென்று, அவன் நேற்றே கோடிவீட்டு பார்வதி பாட்டியோடு காசிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான் என்று செய்தி சொன்னார்கள். வந்தவர்கள் ஏதோவொரு அரசியல் கட்சிக்காரர்கள் போலிருக்கிறது. இவனைப் பற்றி முழுவதும் விசாரித்துவிட்டு அலட்சியமாக இவனெல்லாம் என்ன செய்துவிட முடியும் என்று போய்விட்டார்கள்.
பார்வதி பாட்டியோடு வாரணாசியில் போய் இறங்கிய வைத்தாவுக்கு அங்கு மக்கள் பேசும் மொழி புரியவில்லை. அங்கு உலாவும் மக்கள் தோற்றத்திலும் மொழியிலும் மாறுபட்டவர்களாக இருந்தார்கள். ஒரு டோங்கா வண்டியை பாட்டி பிடித்து ஹனுமான் காட் போகச்சொன்னாள். டோங்கா அங்கு காமாட்சி அம்மன் கோயில் எதிரில் இருந்த ஒரு சாஸ்திரிகள் வீட்டு வாசலில் போய் நின்றது. தமிழ் நாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்களுக்கு தேவைப்பட்ட காரியங்கள் செய்து கொடுக்க அங்கு தமிழ்நாட்டு சாஸ்திரிகள் பலர் இருந்து வந்தனர். அப்படிப்பட்ட ஒருவர் வீட்டில் பார்வதி பாட்டி தங்க ஏற்பாடு செய்திருந்தாள்.
அன்று மாலை அந்த வீட்டின் சாஸ்திரிகளின் மகன் வந்து வைத்தாவிடம் “நம்ம ஊர்லேர்ந்து யாரோ ஒருத்தர் வைகாவூர் வைத்தாவாம் இங்கே போட்டியிடும் நரேந்திர மோடிக்கு எதிரா எலக்ஷன்ல நிக்கப்போறாராம், இங்கே பேப்பர்ல சேதி வந்திருக்கு” என்றான்.
அதற்கு வைத்தா, “வைகாவூர் வைத்தாங்கறது நாந்தான். அப்படி யாரோ நம்ம ஊர்ல கிளப்பி விட்டிருக்காங்க. அது இந்த ஊர் வரையில செய்தி வந்தாச்சா, சரிதான்” என்று சொல்லவும், அந்த இளைஞர் வெளியே ஓடிவிட்டான். சற்று நேரத்தில் ஒரு பெரிய கூட்டம் வாயில் வந்து நின்றது.
கூட்டத்தினர் வைகாவூர் வைத்தாவைப் பார்க்க வேண்டுமென்று கூச்சலிட்டார்கள். வைத்தா பயந்து கொண்டே போய் வாசலில் நிற்கவும், கூட்டத்தில் ஒருவர் வந்து ஒரு காந்தி குல்லாயை வைத்தாவின் தலையில் கவிழ்த்துவிட்டு “வைகாவூர் வைத்தா ஜிந்தாபாத்” என்று குரலெழுப்பினார். கூட்டத்தினரும் கோஷமிட அங்கு சாஸ்திரிகள் வீடு களைகட்டிவிட்டது.
சிறிது நேரத்தில் மோடி கட்சியினர் கூட்டங்கூட்டமாக வந்து வாசலில் குழுமத் தொடங்கினர். இவர்களெல்லாம் மோடி கட்சிக்காரர்கள். எதிர்த்து போட்டி போட வந்திருக்கும் வைத்தாவைப் பார்க்கணுமாம் என்று அந்த வீட்டுப் பையன் சொன்னான். சாஸ்திரிகள் வீட்டில் இருப்பவர்கள் கதிகலங்கிப் போயிருந்தனர். இது என்ன சங்கடம். பார்வதியம்மா, உங்களுக்கு இடம் கொடுத்தா, இப்படியொரு ஆளையும் எதுக்குக் கூடவே கூட்டிண்டு வந்தீங்க, இப்ப பாருங்க, கூட்டம் வாசலில் வந்து நிக்கறத. இங்க ஏதாவது ஏடாகூடமா நடந்துட்டா நாங்க என்ன செய்யறது. நாங்களே பொழைக்க வந்தவா, அரசியல், தேர்தல் இதெல்லாம் நமக்கு எதுக்கு, நீங்க எதுக்கும் வேற இடம் பார்த்துண்டு போறது நல்லது” என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்.
தலையில் கவிழ்த்த காந்தி குல்லாயோடு வெளியே போனான் வைத்தா. வெளியில் நின்றிருந்த கூட்டம் அவனை அப்படியே மொய்த்துக் கொள்ள, கூட்டத்தில் வைத்தாவையும் காணோம், அவன் போட்டிருந்த குல்லாவையும் காணோம். சிறிது நேரம் நடந்த கசமுசா தள்ளுமுள்ளுவை அடுத்து தெருவில் கூட்டம் கலைந்து வெரிச்சோடியது. வைத்தாவை வீட்டின் உள்ளேயும் காணோம், வெளியேயும் காணோம். அப்போது கங்கையில் தண்ணீர் மிகக் குறைவாக ஓடிக் கொண்டிருந்தது. அனுமான் காட்டிலிருந்து சற்று தொலைவில் தண்ணிரிலிருந்து மெல்ல வெளியே வந்த வைத்தா கையை நீட்டிக் கொண்டு, “ஐயா, என்னை யாராவது காப்பாத்துங்களேன். தண்ணீல போட்டு முக்கி முக்கி எடுத்துட்டாங்க. மூச்சு முட்டுது. எனக்கு தேர்தலும் வாணாம், காசி யாத்திரையும் வாணாம். எங்க ஊருக்கே போயிடறேன். அங்க உள்ள பரிஜாரக வேலையே பொதும், என்ன காப்பாத்துங்க ஐயா” என்று அலறிக் கொண்டிருந்தான்.
தமிழ் தெரிந்த ஒரு சிலர் அவனது பரிதாப நிலையைப் பார்த்து ஓடிவந்து அவனைக் கரையேற்றி, மாற்று உடைகொடுத்து, டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்து, சென்னைக்கு ரயிலேற்றி விட்டுவிட்டுச் சொன்னார்கள் “தம்பி வைத்தா, இனிமே இதுபோல அசட்டுக் காரியம் எதையும் பண்ணி வைக்காதே. ஊருக்குப் போயி ஒழுங்கா உன் சமையல் தொழிலை கவனி. விரலுக்குத் தக்கபடிதான் வீங்கணும். புலியப் பாத்து பூனை கோடு போட்டுண்ட புலியாயிடுமா என்ன? அது தவிர இதெல்லாம் உன்னைப் போலவங்களுக்கு எதுக்குப்பா, வேளா வேளைக்கு வயித்துப் பாட்டுக்கு என்ன பண்றதுன்னு பாத்துகிட்டு இருக்கற இடத்துல இரு. இப்படி வந்து இனிமே எங்கேயும் மாட்டிக்காதே. ஏதோ உங்க அம்மா செஞ்ச புண்ணியம், உசுரோடு திரும்பறே. ஜாக்கிரதை என்ன சரியா?” என்று புத்திமதி சொல்லி ஊருக்குத் திருப்பி அனுப்பினார்கள். காசிக்குப் போன வைத்தா கைகால்களோடு முழுசா ஊருக்குத் திரும்பினான்.


சிறுகதை -- வினைப் பயன்



தஞ்சை வெ.கோபாலன்   
                           ’
கோயிலில் புராணிகர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் ஒன்றும் அதிகமில்லையென்றாலும், கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அக்கறையோடு கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் அந்த வழியாகப் போகும்போது ஒலிபெருக்கியில் அவர் பேச்சு காதில் விழுந்தது. அவர் பேசிக் கொண்ர்ருக்கும் விஷயம் பூர்வ ஜன்ம வினைப் பயன் மறுபிறவியிலும் வந்து உறுத்தும் என்பது. ‘சிலப்பதிகாரம்’ காப்பிய நோக்கத்திலும் இதைத்தான் சொல்லுகிறது என்பதால் நான் சற்று கோயில் வாயிலில் நின்று புராணிகரின் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினேன்.
அவர் சொன்னார் முந்தைய பிறவியின் கர்ம பலன்கள் அடுத்தடுத்தப் பிறவியிலும் அவனையே வந்து சேருவதோடு, இந்தப் பிறவியிலும் செய்தவைகளும் சேர்ந்து கொள்ளும். பழைய பாக்கியைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுவதோடு, இந்தப் பிறவியிலும் புதிதாக அவனுக்கு கர்ம வினைகள் வந்து சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எத்தனைதான் உயர்ந்தவன், மேலானவன், நல்லவன் இப்படி எல்லாம் இருந்தபோதும் அவனுக்கும் ஒரு தீங்கு வருகிறது என்று சொன்னால் அது வினையின் பயன் என்றார். அவர் பேச்சில் ஒரு சித்தரைப் பற்றி குறிப்பிட்டார். அவர் காலில் ஒரு புண், ஆறாத புண் அதில் ஏராளமான சின்னஞ்சிறு புழுக்கள். அவர் அவற்றைப் பார்த்து ஊம் தின்னுங்கள், சண்டைபோடாமல் அவரவருக்குத் தேவையானதைத் தின்னுங்கள் என்று தன் உடம்பைத் தின்ன அந்த புழுக்களுக்கு அன்போடு உபசரிப்பாராம். தான் அனுபவிப்பது கர்ம வினை என்பதால் அதை அனுபவித்தே ஆகவேண்டுமென்பது அவருக்குத் தெரியும் என்றார்.
அப்போது மற்றொரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. ஒரு முறை காஞ்சிப் பெரியவர் கண் பொறைக்காக சென்னையின் பிரபல கண் மருத்துவரிடம் அறுவை சிகிச்சை மடத்திலேயே செய்து கொண்டாராம். அப்போது சீடர்களில் ஒருவர் தாங்கள் நினைத்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து கொள்ள முடியாதா என்று வெகுளித்தனமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு சுவாமி சொன்னாராம், “ஏண்டா, நான் மறுபடியும் வந்து பிறந்து அவஸ்தை படணும்கிறியா?” என்றாராம். தனக்கு விதிக்கப்பட்ட கர்ம வினையைத் தான் அனுபவிக்காவிட்டால் அது மீண்டும் தொடராதோ என்பது அவரது வினா.

அந்த கதையில் அந்த புராணிகர் சொன்ன செய்திகள் எனக்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இப்படியும் இருக்க முடியுமா? அல்லது இவைகள் எல்லாம் இவருடைய கற்பனைகளா? இவர் சொல்வதற்கு ஏதேனும் ஆதாரங்களை இவர் காட்டுவாரா, எந்த புராணத்திலாவது அவர் சொன்ன அந்த கற்பனைக் கதைகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.
என் மனவோட்டத்திற்கு பதில் சொல்வதைப் போல புராணிகர் தொடர்ந்து கதை சொல்லலானார். மகாபாரதக் கதையில் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கர்ணன் மகாவீரன், அர்ஜுனனும் அவனுக்குச் சற்றும் குறைந்தவனல்ல. இவ்விருவருக்கும் நடக்கும் யுத்தத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதைக் காண அனைவருக்கும் ஆவல். கர்ணனின் கடுமையான தாக்குதல்களில் அர்ஜுனன் திணறுகிறான்.
பீஷ்மர் படைத்தலைமை ஏற்றிருந்தவரை போர் புரியாமல் ஒதுங்கியிருந்த கர்ணன் துரோணரும் மாண்டபின் 16ஆம் நாள் யுத்தத்தில்தான் தலைமை ஏற்கிறான். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வரையில் அர்ஜுனனின் தேரை கர்ணன் இருந்த இடத்துக்கு ஓட்டிக்கொண்டு வராமல் கிருஷ்ணன் தவிர்த்து வந்தார். இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று அர்ஜுனனுக்குக் கவலை. அர்ஜுனனுடைய கவலையைப் புரிந்து கொண்டு கிருஷ்ணன் சொல்கிறார் கர்ணன் இப்போது உச்சகட்ட வீரத்துடன் போர் புரிகிறான். அவனுக்குச் சில சாபங்கள் உண்டு. அவை அவனை சரியான தருணத்தில் பாதித்து அவனுடைய வீரத்துக்குப் பின்னடைவு ஏற்படும் அப்போது போய் அவனோடு நீ மொதினால் உனக்கு ஜெயம் கிட்டும் என்று கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனும் ஏற்றுக் கொண்டானாம்.
கர்ணன் பரசுராமரிடம் அஸ்திர வித்தைகளைக் கற்றானாம். ஒரு சமயம் பரசுராமர் தன்னிடம் இந்த அஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொள்ளும் கர்ணன் ஒரு தேரோட்டி மகன் என்பதைத் தெரிந்து கொண்டு, தன்னை ஒரு க்ஷத்திரியன் என்று சொல்லியல்லவா போர்க்கலையைப் பயின்றாய், நீ பொய் சொல்லி என்னை ஏமாற்றி கற்றுக் கொண்டதால், இந்த வித்தைகள் உனக்கு ஆபத்து ஏற்படுகின்ற சமயத்தில் உன்னை கைவிட்டுவிடும். அஸ்திர வித்தைகள் மந்திரங்கள் உனக்கு நினைவுக்கு வராது என்று சாபம் இட்டுவிட்டாராம் பரசுராமர். அப்படியொரு நிலை அவனுக்கு இப்போது போர்க்களத்தில் உண்டான நேரத்தில் அர்ஜுனன், கர்ணனுடைய தேர் சக்கரம் மண்ணில் புதைந்தபோது அதை எடுக்க முயன்ற நேரத்தில் அவனை அம்பு எய்து கொல்கிறான்.
இந்த அதர்மமான முறையில் அர்ஜுனன் கர்ணனைக் கொன்றது சரியா என்ற கேள்வியை புராணிகர் எழுப்பினார். அர்ஜுனனுடைய குமாரன் அபிமன்யுவையும் கர்ணன் உள்ளிட்ட துரியோதனாதியர்கள் அதர்மமான முறையில் அல்லவா கொன்றார்கள். சகல சாஸ்திரங்கள், தர்மங்கள் அனைத்தையும் அறிந்த பீஷ்மரும், துரோணரும், கிருபாச்சாரியாரும் அல்லவா அவனைக் கூடி நின்று கொன்றார்கள். அதுபோலவே கர்ணன் கொல்லப்பட்ட முறையும் தர்மத்துக்கு மாறானதுதான் என்று சொல்லிவிட்டு அப்படி ஏன் ஒரு நிலைமை அவனுக்கு நேர்ந்தது தெரியுமா? அது அவனது கர்ம வினை என்றார். அது என்ன விவரம் என்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.
இதற்கு புராணிகர் அளித்த விவரம் சற்று புதிதாக இருந்தது. அப்படியொரு விளக்கம் நான் கேள்விப் பட்டதில்லை. அவர் சொன்னார், இராமாவதாரத்தில் தேவர்கள் இந்த பூமியில் பல்வேறு பாத்திரங்களாக வந்து அவதரித்தார்கள். நாராயணன் இராமனாகவும், இலக்குமி சீதையாகவும் வந்து அவதரித்தார்கள். இந்திரன் வாலியாகவும், சூரியன் அம்சமாக சுக்ரீவன், வாயுவின் அம்சம் அனுமன் இப்படி பலரும் பலவிதங்களில் இராம கைங்கர்யத்தை நிறைவேற்ற பூமியில் அவதரித்தார்கள்.
இராமவதாரத்தில் சூரியனுடைய குமாரனான சுக்ரீவன் இராமபிரான் மூலமாக இந்திரன் மகனான வாலியைக் கொன்றான். இந்த செயலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்தப் பிறவியில் இந்திரன் மகனான அர்ஜுனன் மகாவிஷ்ணு அவதாரமான ஸ்ரீகிருஷ்ணன் உதவியால் சூரியகுமாரனான கர்ணனைப் போரில் வஞ்சமாகக் கொல்கிறான், இது பழிக்குப் பழியாக பூர்வ ஜன்ம வினையால் செய்யப்பட்டது என்றார்.
கதை என்னவோ சரிதான், ஆனால் அவர் சொன்ன லாஜிக் எனக்கு அதிசயமாக இருந்தது. நம் பண்டைய புராணங்கள் எத்தனை ஆழமாக தெளிவாக தர்மங்களையும், வினைப் பயன்களையும் அழகாக எடுத்துரைக்கின்றன, அவைகள் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல, வரலாறும் அல்ல, ஆனால் தர்மங்களை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைக்கும் பொக்கிஷங்கள் என்பதை என் மனம் உறுதியாக ஏற்றுக் கொண்டது.