பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 30, 2015

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்

டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களின் நினைவலைகளிலிருந்து சில துளிகள்.



டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கலாம். ஆனால் சுதந்திரப் போராட்ட காலத்தைப் பற்றியும், 1937இல் சென்னை மாகாணத்தில் உருவான காங்கிரஸ் அரசாங்கத்தைப் பற்றியும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் பற்றியும் அறிந்தவர்களுக்கு ராஜன் என்ற பெயர் அவர்கள் ரத்தத்தோடு கலந்த பெயர். அவரை தி.சே.செள.ராஜன் என்றும் அழைப்பர். இதில் "தி" தில்லைஸ்தானம் எனும் ஊரையும், "சே" சேஷு அய்யங்கார் என்ற அவர் தந்தையின் பெயரையும், "செள" என்பது இவருடைய முழுப்பெயரான 'செளந்தரராஜனின்' முதலெழுத்தையும் குறிக்கும். 

இவர் எல்.எம்.பி. எனும் மருத்துவர் பட்டம் பெற்று, ரங்கூன் சென்று அங்கு பணிபுரிந்து, பிறகு லண்டன் சென்று படித்தபோது, அங்கு 'இந்தியா ஹவுஸ்' எனும் இல்லத்தில் புரட்சிக்காரர்களான வீர சவார்க்கர், வெ.வெ.சு.ஐயர் போன்றவர்களோடு பழகியவர். இவர் திரும்ப திருச்சிக்கு வந்து, ஸ்ரீரங்கமெனும் வைஷ்ணவத் தலத்தில் தன் மருத்துவத் தொழில் செய்ய முயன்றபோது, இவருக்கு ஏற்பட்ட தாங்கொணா தொல்லைகள், அனைத்தும் சக மனிதர்கள் கொடுத்தவை, அத்தனையையும் தாங்கிக் கொண்டு, ஜாதிப்பிரஷ்டத்துக்கு ஆளாகி, அரசியலில் மட்டுமல்லாமல், ஜாதீய விஷயங்களிலும் புரட்சிக்காரராக மாறி திருஈங்கோய்மலையில் பண்ணைவீட்டில் இருந்து விவசாயியாக மாறியதையும் தன் சொந்தக் கதையான "நினைவலைகளில்" விவரமாக எழுதியிருக்கிறார். 

அதில் பல்வேறுபட்ட தகவல்கள் இருந்த போதிலும், அவர் கடல் கடந்து போன ஒரே பாவத்துக்காக சக ஜாதியார் அவரைப் படுத்திய பாட்டை இப்போது நினைத்தாலும் ஆத்திரம் வருமளவுக்கு துன்பத்தைக் கொடுத்திருக்கிறது. அத்தகைய துன்பங்களை எதிர்கொள்ள அவர் செய்த குற்றம்தான் என்ன? கடல் கடந்து போனது. அடேயப்பா! நமது சாத்திரக் கொம்பர்கள் மாறவே மாட்டார்களோ என்று அச்சம் கொள்ளத் தூண்டும் வரலாற்று நிகழ்வுகள். அதை மீண்டும் இங்கே, இப்போது அவருடைய நூலிலிருந்து படித்துப் பார்த்து புரிந்து கொள்ளலாமே! வாருங்கள் "நினைவலைகளுக்குள்" செல்லலாம். இந்த நூல் முதன் முதலில் 1947இல் வெளிவந்தது. 2011இல் சந்தியா பதிப்பகம் இதனை வெளியிட்டது. இவர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த விவரங்களை அனைவரும் படித்து இன்புற வேண்டுமென விரும்புகிறோம்.

                                                  
"நினைவலைகள்"


டாக்டர் தி.சே.செள.ராஜன் அவர்கள் லண்டனிலிருந்து இந்தியா திரும்புகிறார். அங்கு சம்பாதித்த பணமெல்லாம் செலவழிந்து ஊர் திரும்ப மட்டும் கையில் பணத்தோடு கப்பல் ஏறி, பின்னர் ரயில் ஏறி திருச்சி வருகிறார். இந்தியாவில் எல்.எம்.பி. பட்டம் பெற்று ரங்கூன் சென்று அங்கு வேலை பார்த்து, பிறகு லண்டன் சென்று படித்து வைத்தியராக ஊர் திரும்புகிறார். லண்டன் சென்றதில் புகழ்பெற்ற சர்ஜனாக முடிந்ததே தவிர கையில் காசு இல்லை.

லண்டனிலிருந்து ஒரு ஜெர்மன் கப்பலில் மூன்றாம் வகுப்பில் பயணம். காரணம் அதில் குறைந்த கட்டணம். அப்படித் திரும்பி வருகையில் கப்பல் பல துறைமுகங்களில் நின்று வந்தது. அப்படி நின்ற அல்ஜீரியா, ஜெனோவா, ரோம், நேப்பிள்ஸ், சூயஸ் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். இருபத்தியெட்டு நாட்கள் பயணம் செய்து கொழும்பு வழியாக தூத்துக்குடி வந்து சேர்ந்தார். இவர் லண்டனில் புரட்சிக்காரர்களோடு இருந்தமையால், கப்பலில் வந்து இறங்கியதும் போலீஸ் சோதனை கடுமையாக இருந்தது. மிகுந்த துன்பப்பட்டு ஊர் திரும்பியபோது அங்கு வறுமையின் பிடியில் தன் மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் அவருக்காகக் காத்திருந்தனர். இவர் புரட்சிக்காரர் ஆகையால் இவருக்கு அங்கு வீடு கொடுக்க யாரும் தயாராக இல்லை. அவர் மனைவி ஊருக்கு வெளியே ஒரு வீட்டை தயார் செய்து வைத்திருந்தார்.

திருச்சி ஜங்ஷனில் இவர் தந்தையும் இவருக்கு ரங்கூனிலிருந்து லண்டன் சென்று படிக்க உதவிய பசுபதி ஐயர் என்பாரும் வரவேற்றனர். மனைவி நோயினால் உடல் வருந்தி இருப்பதைக் கண்டு துன்பப்பட்டார். சுற்றத்தாரோ, நண்பர்களோ இவரைத் தங்கள் இல்லங்களுக்கு அழைக்கவில்லை. அப்போது அரவிந்தர் முதலானோருக்கு நண்பராகவும் பரோபகாரியாகவும் இருந்த கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரின் நட்பும் இவருக்குக் கிட்டவில்லை. இவருக்கு நடந்த வரவேற்பு உபசாரத்தில் ஆசாரசீலர்கள் எவரும் கலந்து கொள்ளவுமில்லை, விருந்து உண்ணவும் இல்லை. சீர்திருத்த வாதியான கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரும் பலர் அறிய இவருடன் உணவு உண்ண துணியவில்லை.

ஸ்ரீரங்கத்தில் தான் சமூக ரீதியாகப் புறக்கணிக்கப்படுவது குறித்து அங்கிருந்த சில வைதீகர்களிடமும், வேத பண்டிதர்களிடமும் விசாரித்ததில் கிடைத்த விவரங்கள். "பிராமணன் சமுத்திரத்தைத் தாண்டக் கூடாது; அது சாஸ்திர விரோதம்; அதற்கு பிராயச்சித்தமும் விதிக்கப்படவில்லை. ராஜன் சீமைக்குப் போகுமுன் சாஸ்திரமறிந்த விற்பன்னர்களிடம் சம்மதமும் பெறவில்லை; ஆகையால் அவர் பிராமண்யத்தை இழந்துவிட்டவராவார். இனி, அவர் பிராமண சமூகத்தில் இடம் பெற முடியாத நிலை. இவருடைய பெற்றோர், உறவினர், நண்பர் யாரேனும் இவருடன் உறவு கொண்டாடினால் அவர்களும் ஜாதிப்பிரஷ்டத்துக்கு உள்ளாவர். ராஜன் மீது தனிப்பட்ட கோப தாபம் எதுவும் இல்லையென்றாலும், சாஸ்திர விரோதச் செயலுக்கு அவர்கள் சம்மதிக்க முடியாது" இதுதான் அவர்கள் அளித்த விளக்கம்.

ஊர் திரும்பி, கற்ற மருத்துவக் கல்வியின் துணையோடு சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற எண்ணியவருக்கு பெருத்த ஏமாற்றம். பிழைப்புக்கு என்ன செய்வது? பேசாமல் ரங்கூன் திரும்பிவிடலாமா என்ற முடிவுக்கு வந்தார். அங்கு ரங்கூனில் இவர் விட்டுச் சென்ற தொழில் மீண்டும் கைகொடுத்தது. வைத்தியத் தொழிலில் அங்கு நல்ல வருமானம். பணம் வரத் தொடங்கியதும் மகளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமென்று மனைவியின் வேண்டுகோள். அவளுக்கு அப்போதைய திருமண வயது வந்துவிட்டது, அதாவது பன்னிரெண்டு வயதாகிவிட்டது. இந்த இளம் வயதில் திருமணமா என்று ராஜன் சிந்தித்தார். மனைவியின் நச்சரிப்பால் அவளுக்குத் திருமணம் செய்துவைக்க மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார் குடும்பத்துடன்.

வங்காள விரிகுடாவைத் தாண்டி ரங்கூன் சென்றவர்களுக்குக் கூட, இவர் இன்னும் அதிக தூரம் கடல் பயணம் செய்து லண்டனுக்குச் சென்றதால் பெரிய குற்றம் செய்துவிட்டவராகக் காட்சி யளித்தார். ஆனால் ரங்கூனில் வசித்த பிராமணர்கள் இவரை அங்கீகரிக்கவே செய்தார்கள். வைதீக கோஷ்டியாரின் ஜாதி விலக்கை எப்படி சமாளிப்பது என்ற பயம் தோன்றியது. மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும். பரம்பரையாக இவருடைய வம்சத்தாருக்குக் குலகுருவாக விளங்கிய அகோபில மடம் ஜீயர் சுவாமிகள் வைதீகர்களுடைய நடவடிக்கைகளைத்தான் ஆதரித்தார். அவரே இவருக்கு எதிராக இருந்ததால், இவருடைய பெரும் கூட்டமான உறவினர்களும் இவரிடமிருந்து விலகியே இருந்தனர். இந்தச் சூழ்நிலையில் ஸ்ரீரங்கத்தில் அவருடைய பெரிய மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டிய நிலை.

பெற்றோர், உற்றார் உறவினர், செல்வந்தர் கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் என்று எவரும் உதவிக்கு வராத நிலையில் பெண்னுக்குக் கல்யாணம் செய்வது எங்ஙனம்? வரன் தேடும் முயற்சிக்கும் ஏகப்பட்ட இடையூறுகள். கையில் இருக்கும் பணம் செல்வாகுமுன்பு கல்யாணம் செய்துவிட வேண்டும். இந்த நிலையில் இவருக்கு ஒரு எதிர்பாராத உதவி கிடைத்தது. இவருடைய பழைய ஆசிரியரும், ஸ்ரீரங்கம் உயர்தர பாடசாலை நிறுவனருமான வீரராகவ ஐயங்கார் இவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.

ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவர்களுக்குள் இரண்டு கட்சி எப்போதும் உண்டு. அவர்கள் வடகலை, தென்கலை. நெற்றியில் கொண்டி நாமம் போடுவோர் வடகலை; கொண்டிக்கு அடியில் மூக்கில் வெள்ளைக் கோடு இழுப்பவர் தென்கலை. 


இவர்களுக்குள் ஏன் சதாகாலமும் சண்டை? இவ்விருவருக்குள்ளும் சமபந்தி உணவு, கொள்வினை, கொடுப்பினை இவற்றில் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்களுக்கிடையே சொந்தங்கள் உண்டு; பங்காளிகள் உண்டு, மாமன், மைத்துனன் உறவுகள் உண்டு. குரு சிஷ்ய பாவத்தில் தென்கலை ஆசாரியர்களுக்கு வடகலைச் சீடர்கள் உண்டு, வடகலை ஆசாரியார்களுக்குத் தென்கலை சீடர்களும் உண்டு. வடமொழி, தமிழ் இரண்டிலும் இவர்களுக்குப் பாண்டித்யம் உண்டு. வடகலையாருக்கு வடமொழியிலும், தென்கலையாருக்குத் தமிழிலும் பழக்கம் அதிகம். இவர்களுக்குள் இத்தனை ஒற்றுமை இருந்தும் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற வைணவ ஸ்தலங்களில் இரு பிரிவினருக்குள்ளும் ஏகப்பட்ட விவாதம், ஓயாத வழக்கு வியாஜ்யம். வக்கீல்களுக்கு இவர்களால் நல்ல வருமானம்.

இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? இவர்களுக்கிடையே உள்ள பிரச்சனைகளில் வைணவமோ, ஆசாரமோ இன்னதென்று தெரியாத நீதிபதிகளிடம் இவர்கள் தீர்ப்பு பெற்று மகிழ்வார்கள். முஸ்லீம், கிருஸ்தவ நீதிபதிகளிடத்திலும் இவர்கள் போய் நின்று நியாயம் கேட்கப் பின்வாங்கமாட்டார்கள். இதுமாதிரியான கோஷ்டிச் சண்டைகளில் பெரிதும் பங்கேற்போர் பழைய காலத்து மடிசஞ்சிகள். படித்த நவீன காலத்து மனிதர்களும் இந்த கேலிக்கூத்தில் பங்கேற்பார்கள். 

இந்த இவ்விரு கலையார்களுமே ராஜன் சீமைக்குப் போய் வந்த குற்றத்தை மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி இரு கோஷ்டியாரும் கோர்ட், கேஸ் என்று அலைந்ததில் இவர்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதை சீர்செய்ய ஒரு வாய்ப்பு கிட்டியது. வாத்தியார் வீரராகவ ஐயங்காரின் மத்தியஸ்தம் இதற்கு ஒரு வழி காட்டியது. ஜாதிப்பிரஷ்டம் ஆன ராஜனை மீண்டும் வைணவ ஜாதியில் சேர்க்க ஒரு சமாதான திட்டம் உருவாயிற்று. அதன்படி:-

1. ராஜன் தன் பாவத்துக்குப் பிராயச்சித்தமாக வடகலை கோஷ்டியாரின் பொதுநிதிக்கு ஐநூறு ரூபாய் நன்கொடை கொடுக்க வேண்டும்.

2. இன்னொரு ஐநூறு ரூபாய், இவருக்குப் பிராயச்சித்தம் செய்யும் முறையைத் தேர்ந்து, அதை செய்து வைப்பதற்காகவும் கொடுக்க வேண்டும்.

3. நான்கு வைதீகப் பிராமணர்களுடன் அகண்ட காவேரிக் கரையில், ராஜன் பிறந்தது முதல் செய்த சகல பாவங்களுக்கும் பரிகாரமாக அவர் மனைவி சகிதமாக புனர் உபநயனம் முதற்கொண்டு எல்லா சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து கொள்ள வேண்டும்.

4. சேது (ராமேஸ்வரம்) வுக்குச் சென்று அந்த நாலு பேருடன் மூன்று நாட்கள் தங்கி முப்பத்தாறு முறை சமுத்திர ஸ்நானம் செய்து அங்கு தானங்கள் வழங்க வேண்டும்.

5. இவற்றையெல்லாம் முறையாக செய்து முடித்த பிறகு ராஜனின் பெண் கல்யாணத்தை வைதீகர்கள் வந்து சடங்குகளை செய்து நடத்தி வைப்பர்.

6. ராஜன் வீட்டில் உணவருந்த இஷ்டமில்லாதவர்களை அவர் வற்புறுத்திச் சாப்பிடச் சொல்லக்கூடாது.

7. அப்படி என்னுடன் கலந்து உண்பவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்யக் கூடாது.

ராஜன் தான் பிறந்த ஜாதியாருடன் சேர்ந்து கொள்ள விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இவை. ஆனால் இவருடைய பெண்ணை மணந்து கொள்ளப்போகும் மணமகனோ அவரைச் சேர்ந்தவர்களோ இவற்றை விரும்பவே இல்லை என்பது ஒரு நல்ல அறிகுறி. இருந்தாலும் வைதீகக் கோட்டைக்குள் புகுந்து மகளின் திருமணத்தை நல்ல முறையில் நடத்திட இவை அனைத்தையும் செய்து முடித்து மீண்டும் வைதீக ஜாதி சம்புடத்தினுள் புகுந்து கொண்டார் ராஜன்.

இதில் இன்னொரு கூத்தும் நடந்தது. நன்கு வேதம் பயின்ற பண்டிதர்கள் சிலர் இந்த நடவடிக்கைகளை ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களின் கருத்து, 'சாஸ்திர சம்மதம் இல்லாத வழிமுறைகளைப் பணம் பிடுங்குவதற்காக சிலர் உபயோகித்துக் கொண்டார்கள்' என்றார்கள் அவர்கள். இதில் கொடுமை என்னவென்றால், ராஜனின் பெண் கல்யாணத்துக்கு ராஜனின் பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை. காரணம் வைதீகம் அல்ல; ராஜனின் மனைவி மீது இருந்த கோபம் தானாம்.

பெண் கல்யாணம் முடிந்து ராஜன் ஸ்ரீரங்கத்தை விட்டுக் கிளம்பிவிட்டார். ஆனால் ஸ்ரீரங்கம் போர்க்களமாகிப் போனது. ஊர் வைதீகர்கள் இரண்டு பட்டுப் போய்விட்டார்கள். ராஜன் வீட்டுத் திருமணத்துக்கு ஒத்துழைத்தவர்களை மற்றவர்கள் நிராகரிக்கத் தொடங்கினர். கல்யாணம் செய்துவைத்த வைதீகர் (பிரம்மா) லண்டன் பிரம்மா என்று பெயர் வைத்தனர். சமையல் செய்த சுந்தரம் லண்டன் சுந்தரம் ஆனார். ராஜன் செய்த பிராயச்சித்தத்தில் பண ஆதாயம் பெற்ற சிலர் எதிரிகளுக்குப் பயந்து வந்த பணத்தை அவர்களோடு பங்கிட்டுக் கொண்டு சமாதானமாகிப் போயினர். இதை ராஜன் "சோற்றுப்பானைப் புயல்" என்று வருணிக்கிறார்.

இத்தனை ஆகியும் அகோபிலமட ஜீயர் சுவாமிகள், ராஜனை அவரது அடியாராக அங்கீகரிக்கவில்லை. ஆனால் 1937இல் ராஜன், ராஜாஜி அமைத்த மந்திரிசபையில் சுகாதார மந்திரியாக பதவியேற்ற சமயம், ஜீயர் மனமிரங்கி அவரை மீண்டும் மடத்தின் சீடராக ஏற்றுக்கொள்ள சம்மதித்தார். ஆனால் ராஜனோ அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அதற்கு வீம்பு மட்டும் காரணமல்ல. தமிழ்நாட்டில் ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக ராஜன் இருந்து வந்ததும், தமிழ்நாட்டில் ஹரிஜனங்களுக்கு ஆலயத்தைத் திறந்துவிட்டு ஆலயப் பிரவேசம் செய்து வைத்ததும், இந்த வைதீக சமூகத்தாருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் தனக்களிக்கப்பட்ட சலுகையைப் பெற ராஜன் விரும்பவில்லை. வைதீக சமூகம் நெறி தவறி வாழ்க்கை நடத்துவதால் பலவீனப்பட்டிருப்பதும், அதை மேலும் கேவலப்படுத்தத் தான் விரும்பவில்லை யென்றும் ராஜன் சொன்னார்.

ராஜன் மனைவி மகளுடன் ரங்கூன் திரும்பினார். அப்போது மனைவி கர்ப்பிணி. ராஜன் சொல்லியும் கேட்காமல் முழுப்பிரசவம் ஆனதும் மனைவி இறந்தாள், ராஜன் குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்டார். வீடா, வேலையா? இந்த சிக்கலில் தவித்தார். முடிவில் ரங்கூன் பிராக்டீசை முடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்ப முடிவு செய்தார். மனைவியைப் பறிகொடுத்துவிட்டு நான்கு குழந்தைகளுடனும் அறுநூறு ரூபாய் பணத்துடனும் 1914இல் ஊர் திரும்பினார் ராஜன். ஸ்ரீரங்கத்தில் கடைசியாகப் பிறந்த ஆண் குழந்தையும் இறந்தது. ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப அவ்வூர் வைதீகர்களைப் போலவே ராஜனும் உச்சுக்குடுமி, பஞ்சகச்சம், நாமம், கோஷ்டியார் நடத்தும் சடங்களில் சங்கமம் இப்படி ஐக்கியம் ஆகிவிட்டார் ராஜன்.

அவர்களோடு ஐக்கியமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களைத் தற்கால நிலைமைக்கு ஏற்ப மாற்றிவிடலாம் என்கிற நப்பாசை ராஜனுக்கு. நாட்டில் அரசியல் மாறுகிறது, ஆட்சிகள் மாறுகின்றன, அரசாங்கத்தில் ஆட்கள் மாறுகிறார்கள். சமூக வாழ்க்கை மாறுகிறது, அப்படியிருந்தும் இவர்களுடைய புராதன வாழ்க்கை முறை மட்டும் மாறாமலே இருப்பது ஏன்? வைதீகர்களை குளிப்பாட்ட என்னவென்ன உண்டோ அத்தனையையும் செய்தார் ராஜன். அவர்களுக்கு வழங்கும் ஊதியத்தை பலமடங்கு அதிகப்படுத்திக் கொடுத்துப் பார்த்தார். வைதீகக் காரியங்களை மிகுந்த சிரத்தையுடன் செய்து அவர்களை மகிழ்விக்க முயன்றார். இருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் செய்யவேண்டிய காரியங்களை சிறப்பாக செய்தார். பாகவதோத்தமர்களை விழுந்து விழுந்து நமஸ்கரித்து அவர்கள் மனங்களைக் குளிர்வித்தார். அவர்கள் மனங்குளிர அவர்களுக்கு அன்பளிப்புகளை வாரி வழங்கினார். தான் இத்தனை செய்தும், அவர்களில் பெரும்பாலோர், ராஜன் ஏதோ செய்யக்கூடாத பாபக் காரியத்தைச் செய்துவிட்டவர் போலவும், அந்த பாவத்திலிருந்து அவர் கடைத்தேறி புனிதராக வேண்டுமென்பதற்காகத் தாங்கள் மனமிரங்கி அவர் கொடுக்கும் தட்சணைகளை கருணையோடு வாங்கிக் கொள்வதாகவும் நினைத்தார்கள். அந்த வைதீகர்கள் பரம ஏழைகள். வேத ஞானமும், ஒழுக்கமும் அவர்களிடம் அறவே இல்லை. சடங்குகளை நடத்திவைக்கும் முறைகளை மட்டும் கற்று வைத்திருந்தார்கள். அதை பிரயோகம் என்பர். வேத சாஸ்திரம் படித்தவர் சிலரும் வறுமை காரணமாக இவர்களோடு இணைந்திருந்தார்கள்.

இப்படி ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவர்கள் வட, தென் என்று பிரிந்திருந்த காரணத்தால், இவர்கள் எப்படியாவது ஒன்று சேர்த்தால் என்ன என்ற மடமையான எண்ணம் ராஜனுக்கு ஏற்பட்டுவிட்டது. ரயில்வேயில் பணியாற்றிய ஒரு தென்கலை வைஷ்ணவரின் உதவியோடு "ஸ்ரீரங்கம் பாரதீய வைஷ்ணவ சபா" என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் பல உபதேசங்களை செய்வித்து அவர்களுக்கெல்லாம் சன்மானம் வழங்கினார். சன்மானம் பெற்றவர்களுக்கு சந்தோஷம், ஆனால் படித்த வைதீகர்களுக்கு இதில் சம்மதமில்லை. ஆதரவில்லாமல் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

எப்படியும் கடல் நீரில் உப்பை எடுத்துவிட வேண்டுமென்பது போன்ற முயற்சியில் ராஜன் ஈடுபட்டார். மக்களைக் கவர இலவசமாக வைத்தியமும் செய்தார். அதனால் செல்வாக்கு பெருகியதே தவிர வைதீகர்கள் மாறவில்லை. வடகலையாரில் பெரும்பாலோருக்கு அகோபில மடமே குரு பீடம். ஸ்ரீரங்கம் கோயில் தென்கலையாருடையது என்பது அந்தக் கலையாரின் கட்சி. ஆகையால் வடகலை நாமம் போட்ட சின்னங்கள், யானை, குடை, எடுபிடி சாமான்கள் இவைகளுடன் ஸ்ரீரங்கத்தினுள் நுழையக்கூடாது என்பது தென்கலையார் கட்சி. அதைப் பின்பற்றி ஒரு ஆங்கிலேய ஜில்லா கலெக்டர் நூறு வருஷங்களுக்கு முன்பு (இது சொல்லப்பட்டது 1947இல்) ஸ்ரீரங்கம் தென்கலையாருடையது என்றும், அதில் வடகலையாருக்கு எந்தவித பாத்தியமும் இல்லை என்றும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதுதான் தென்கலையார் உரிமை கொண்டாடுவதற்கான மூல சாசனம்.

ராஜன் ஸ்ரீரங்கத்தில் இருந்த சமயம் அகோபில மடம் ஜீயர் சுவாமிகள் அங்கு எழுந்தருளினார். பல ஆண்டுகள் கோர்ட், வழக்கு ஆகியவை மூலம் ஸ்ரீரங்கம் வீதிகள் பொதுத்தெருக்கள் என்று தீர்ப்பான பிறகு சுவாமிகள் தன் மடத்திற்கு வருவதற்கான தடை நீக்கப்பட்டிருந்தது. அவருக்குக் கோயிலில் பெருமாள் தரிசனம் தக்க மரியாதைகளுடன் நடத்தி வைக்கவேண்டுமென்று வடகலையார் விரும்பினர். ராஜனும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, ஜில்லா சப் ஜட்ஜ் உத்தரவின் பேரில், போலீஸ் பாதுகாப்புடன் மூன்று நாள் மரியாதைகளுடன் சேவை நடந்தேறியது. மூன்றாம் நாள் தென்கலையார் சென்னை ஹை கோர்ட்டில் ஒரு தடை உத்தரவை பெற்றார்கள். அதற்குள் மூன்றாம் நாள் சேவையும் நன்கு நடந்தேறிவிட்டது. இதனாலெல்லாம் ஸ்ரீரங்கத்தில் யாதொரு புரட்சியும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் முக்கியம்.

அகோபில மடம் ஜீயர் இரண்டு மாதகாலம் ஸ்ரீரங்கத்தில் தங்கினார். சீடர்கள் தினசரி கைங்கர்யங்களைச் செய்து வந்தனர். எனினும் ராஜனையும் அவர் தந்தையையும் நன்கு தெரிந்த ஜீயர் சுவாமிகள் இவர்களைத் தன் அருகில்கூட சேர்க்கவில்லை. ராஜனின் தந்தை ஓரிரு முறை ஜீயர் சுவாமிகளிடம் சென்று தனக்குப் பரந்யாசம் (இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரை வைத்தல் - சரணாகதி) செய்துவைக்க வேண்டுமென்று பிரார்த்தித்தார். பரந்யாசம் எனும் சரணாகதி வைஷ்ணவர்களுக்கு ஒரு புனிதமான சடங்கு. 

பரந்யாசம் செய்து கொள்பவர் முதல் நாளே வைதீகச் சின்னங்களோடு மடத்துக்குச் சென்று சுவாமிகளின் முன்பாக இடைவிடாது சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டிருக்க வேண்டும். சுவாமிகளின் கவனம் அவர் பக்கம் திரும்பியதும் போதும் என்றதும் நமஸ்காரத்தை நிறுத்தி, பரந்யாசம் செய்துகொள்ள பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். இதற்காக குறைவான தொகை பத்து ரூபாய் மடத்தில் செலுத்த வேண்டும். மறுநாள் காலை சுவாமிகள் லக்ஷ்மிநரசிம்மருக்கு ஆராதனம் செய்யும் வேளையில் கோஷ்டியில் காத்திருந்து பிறகு சுவாமிகளிடம் தனித்துச் சென்று அவரிடம் உபதேசம் பெற்றபின்பு, மடத்துக்குத் தன்னால் இயன்ற காணிக்கை அளித்துவிட்டு, அல்லது செலவுகளை ஏற்றுக் கொண்டு, மடத்தில் அன்று உணவு அருந்திப் பின் செல்ல வேண்டும்.

ராஜன் கடல்கடந்து சென்றவர் என்பதால் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டதும், மகள் கல்யாணத்துக்காக அவர் பட்ட சிரமங்களும் தெரிந்திருந்த சுவாமிகள், அவருடைய தகப்பனார் என்பதால் இவருக்குப் பரந்யாசம் செய்யத் தயங்கினார். அவரை சமாதானம் செய்ய, அவரிடம் "நீர் சேதுஸ்நானம் செய்துவிட்டு வாரும், பிறகு பரந்யாசம் செய்துவைப்பதைப் பற்றி யோசனை செய்வோம்" என்று சொன்னார். ராஜனின் தந்தை முன்கோபி. தானே ஸ்ரீரங்கம் மடத்து ஏஜெண்டாக இருந்த காலத்தில் இப்போது சந்நியாசம் வாங்கி சுவாமிகளாக இருப்பவர் மடத்தில் அப்போது பூஜை செய்துவந்தார். அப்படி இருந்தவர், இப்போது தனது ஒரு விதி வகுத்தது ராஜன் அப்பாவுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. 

"ஓய்! உம்மை எனக்குத் தெரியாதா? இன்று ஆச்சாரியாராகிவிட்டீர். ஆராதனம் பண்ணிக்கொண்டிருந்த ஜமாச்சாரியார்தானே நீர்? நான் என்ன பாவம் செய்ததற்காக எனக்குச் சேது ஸ்நானம் விதிக்கிறீர்? நான் இருமுறை இதற்கு முன்பாக சேதுஸ்நானம் செய்திருக்கிறேன். கங்கை, யமுனை, சிந்து முதலான புனித தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்திருக்கிறேன். இமயமலை முதல் கன்யாகுமரி வரை எல்லா க்ஷேத்திரங்களிலும் தரிசனம் செய்திருக்கிறேன். தினமும் வைதீக கர்மாக்களைக் கிரமமாகச் செய்து வருகிறேன். என்னிடம் குறை சொல்ல எதுவுமே இல்லை. என்னைக் காட்டிலும் பலவித பாவங்களைச் செய்துவருபவர்களுக்கெல்லாம் நிபந்தனையின்றி பரந்யாசம் செய்து வைக்கிறீர். நான் ஏதோ மகாபாதகம் செய்துவிட்டவன்போல் எனக்கு விதி ஏற்படுத்துகிறீர்களே? இது என்ன நியாயம்?" என்று கூச்சலிட்டார்.

"சரி சுவாமி! சீமைக்குச் சென்று திரும்பிய என் மகன் உதவியினாலேதானே நீங்கள் இந்த ஊருக்கு வந்து நூறு வருஷங்களாகப் பெறமுடியாத மரியாதைகளையெல்லாம் கோயிலில் பெற்று, இந்த மடத்தில் எழுந்தருளியிருக்கிறீர். இது என் மகனுடைய செல்வாக்கினால் உங்களுக்கு நடந்தது. அவன் தங்களிடத்துப் பரந்யாசம் கோரவில்லை. நான் என் மகனிடத்தில் வசிக்காமல் எங்கே போவது? என் மகன் துன்மார்க்க செயல் ஒன்றிலும் ஈடுபட்டவன் அல்ல. அவனுடன் தங்குவது பாவமென நீங்கள் கருதினால் பரந்யாசம் ஆனபிறகும் நான் அவன்கூடத்தானே இருக்க வேண்டும். ஆகையால் எனக்குப் பரந்யாசம் தேவையில்லை." என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். மகன் ராஜனிடமும் நடந்ததை எடுத்துச் சொன்னார்.

பரந்யாசம் செய்துகொண்டு மகனைப் பிரிய ஒப்புக்கொள்ளாமல், மகனுடன் தான் இருப்பேன் அதனால் பரந்யாசம் இல்லையென்றால் அது தேவையில்லை என்று வந்துவிட்ட தந்தையிடம் ராஜனுக்கு அன்பு மேலிட்டது. 

இது நடந்து சில வருஷங்களுக்குப் பிறகு அகோபில மடம் ஜீயர் பரமபதம் அடைந்தார். அவர் ஸ்தானத்துக்கு அவரைப் போலவே படித்த வேத விற்பன்னரும், நல்லொழுக்கம், சீலம், உயரிய வாழ்வு இவை உடையவரும், செல்வருமான திருநெல்வேலி வீரவநல்லூர்க் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியார் எழுந்தருளினார். பரம வைதீகர்; உலகப் போக்கை ஒன்றும் அறியாதவர். மடத்தை நன்கு பரிபாலித்து வந்தார். அவர் ஸ்ரீரங்கம் வர விரும்பியபோது பழையபடி கோர்ட், கேஸ் என்று சண்டை தொடங்கிவிட்டது. அவர் பயந்து போய் காவிரிக்கரையில் உள்ள திருப்பராய்த்துறை எனும் ஊரில் தங்கிவிட்டார். என்னதான் முயற்சி செய்தும் அவரால் ஸ்ரீரங்கம் வந்து தரிசனம் செய்ய முடியாமல் கோர்ட், வியாஜ்யம் தொடர்ந்தது. கடைசியில் ஜீயர் சுவாமிகள் ராஜனை அழைத்துப் பேசி, அவரும் சர் டி.தேசிகாச்சாரியார் எனும் பிரபலமான மனிதருடன் சேர்ந்து ஒரு சமரச உடன்பாட்டுக்கு கோர்ட் மூலம் பெற்று, அந்த ஜீயர் தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்கி அங்கேயே முக்தியும் அடைந்தார்.

ஆக, இப்படி இந்த விவகாரங்கள் தொடர்ந்து நடந்தன ......


1915இலேயே தி இந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கிய ஜி.சுப்பிரமணிய ஐயர் "ஆசாரத் திருத்த வியாசங்கள்" எனும் தலைப்பில், சுதேசமித்திரனில் தான் எழுதிய தலையங்கங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். அதில் அவர் சொல்ல வந்த கருத்து 'பாட்டன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்பு நீரைக் குடிக்காதீர்கள்' காலத்துக்குத் தக்கபடி தங்கள் போக்கையும் நடவடிக்கைகளையும் ஆசாரத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள் என்கிறார். நாம் எதைக் கேட்டுப் பின்பற்றியிருக்கிறோம், இதை மட்டும் பின்பற்றுவதற்கு? காலம்தான் நம்மை மாற்ற வேண்டும்.












No comments: