பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 9, 2015

இந்தி எதிர்ப்புப் போராட்டம் - 2


1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாடு அரசியலில் பெரும் திருப்பத்தை உண்டாக்கியது. திராவிட முன்னேற்றக் கழகம் 1967இல் நடந்த பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அது முதல் இன்று வரை காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை மீண்டும் பெறமுடியாமல் போய்விட்டது. இந்திய ஆட்சிமொழிச் சட்டம் இறுதியாக 1967இல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி இந்தி மொழியோடு, ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்குமென்று உறுதியளிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சட்டம் உருவான நாளிலிருந்து ஆட்சிமொழி அந்தஸ்து நிரந்தரமில்லாமலிருந்த நிலை மாறி இந்த திருத்தத்துக்குப் பிறகு ஓரளவு ஆங்கிலம், இந்தி இரண்டுமே ஆட்சிமொழியாக நீடிக்க உத்தரவாதம் அளித்தது. இதன் பிறகு 1968லும் பின்னர் 1986லும் இரு முறை மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தபோதும், அவை முந்தைய 1965 போராட்டம் போல தீவிரமடையவில்லை.
இந்திய குடியரசில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. 2001 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி, 1635 மொழி பேசும் மக்களும், சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் பேசக்கூடிய மொழிகள் 122ம் நாட்டில் இருப்பது தெரியவந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழி அந்தஸ்தைப் பெற்றிருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் சுதந்திரப் போராட்டம் வலுவடைந்து வந்த நேரத்தில் இந்தியாவில் பேசப்படும் பல மொழிக்காரர்களையும் ஒருங்கிணைத்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட இந்துஸ்தானி மொழி உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டது. 1918ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தென் இந்தியாவில் இந்தி மொழியைப் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் தென் இந்தியாவில் இந்தி பிரச்சார சபாவைத் தொடக்கி வைத்தார்.
1925இல் இந்திய தேசிய காங்கிரஸ் தங்களது கட்சிக் கூட்டங்கள், மகாநாடுகளில் இந்தி மொழியை உபயோகிக்கத் தொடங்கியது. மகாத்மா காந்தியும் சரி, ஜவஹர்லால் நேருவும் சரி இருவருமே இந்துஸ்தானி மொழி ஆதரவாளர்கள் என்பதால், இந்தி மொழி பேசாத மாநில மக்கள் மத்தியில் இந்துஸ்தானியைப் பரப்புவதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் இந்துஸ்தானியோ, அல்லது இந்தியோ பொது ஆட்சி மொழியாக ஆக்கப்படுவதில் பெரியாருக்கு சம்மதமில்லை. அவர் இந்த முயற்சியை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். அவர் கருத்துப்படி வடக்கத்தியர்கள் தமிழன் மீது அவர்கள் மொழியைத் திணித்து, வடவர்களுக்கு தமிழன் கீழானவன் எனும் நிலையை உருவாக்கும் சதி என்று கருதினார்.
1937-40 ஆண்டுகளில் இந்தி எதிர்ப்பு.
காங்கிரஸ் கட்சிக்குள் சட்டமன்ற தேர்தலில் கலந்து கொண்டு, சட்டமன்றங்களுக்குச் செல்வதில் இருவேறு கருத்துக்கள் நிலவி வந்தன. அதில் தேர்தல்களில் கலந்து கொண்டு சட்டசபைகளுக்குச் செல்லவேண்டுமென்று ஒரு கட்சி, தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று இன்னொரு கட்சி. இவ்விரு கட்சியாரும் முட்டி மோதிக்கொண்டு ஒருவழியாக தேர்தலில் நிற்பதே சரி என்ற முடிவுக்கு வந்தபின்னர் 1937இல் நடந்த தேர்தலில் காங்கிரஸார் போட்டியிட்டனர். அதில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராஜாஜி முதன் மந்திரியானார். 1937 ஜூலை 14இல் ராஜாஜி சென்னை மாகாண முதல் மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். தென் இந்தியாவில் இந்தி மொழியைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டவர் ராஜாஜி. 1937 ஆகஸ்ட் 11இல் அதாவது அவர் பதவி ஏற்றுக்கொண்ட ஒரு மாத காலத்திற்குள் மாகாணத்திலுள்ள எல்லா உயர் நிலைப் பள்ளிக்கூடங்களிலும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக ஆக்கப்படும் என்று தன்னுடைய அரசின் கருத்தை வெளியிட்டார். அவருடைய அந்த தீர்மானத்தின்படி சென்னை மாகாணத்தின் கீழ் இயங்கும் 125 உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டார்கள். இந்த முடிவை ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம் கடுமையாக எதிர்த்தார்.
உடனடியாக மாகாணம் முழுவதும் ராஜாஜிக்கும், இந்திக்கும் எதிராக ஒரு பலமான எதிர்ப்புப் போராட்டத்தைத் துவக்கினார்கள். இந்தப் போராட்டத்தை சுயமரியாதைக் கட்சியின் தலைவராக இருந்த பெரியாரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் ஆதரவு கொடுத்து நடத்தினர். இவர்களைத் தவிர அப்போது வாழ்ந்த தமிழறிஞர்களான மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதி, பன்மொழிப் புலவர் கே.அப்பாதுரை, கவிஞர் முடியரசன், இலக்குவனார் ஆகியோரும் இந்திக்கு எதிரான இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். 1937 டிசம்பர் மாதத்தில் வேலூரில் நடந்த சைவ சித்தாந்த சபையின் மகா நாட்டிலும் சைவ அறிஞர்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் பெண்களும் அதிக அளவில் பங்கேற்றனர். அவர்களில் மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், நாராயணி, வா.பா.தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர் தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதம்மாள் போன்ற சிலரைக் குறிப்பிடலாம். இவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார்கள். 1938 நவம்பர் 13இல் தமிழ்நாடு பெண்கள் மகாநாடு கூடி பெண்களின் ஆதரவை வெளிப்படுத்தியது. இந்தி எதிர்ப்பில் தொடங்கிய இந்தப் போராட்டம், மெல்ல பிராமண எதிர்ப்பாக மாறியது. காரணம் பிராமணர்கள்தான் இந்தியைத் தமிழர்கள் மீது திணிப்பதன் மூலம் சம்ஸ்கிருதத்தை வளர்க்கலாம் என்று இப்படிச் செய்கிறார்கள் என்ற கருத்துப் பரப்பப் பட்டது. இந்த போராட்டமே இந்தி எதிர்ப்போடு பிராமண எதிர்ப்பும் கலந்திருந்தாலும், ஒருசில பிராமணர்கள், குறிப்பாக காஞ்சி ராஜகோபாலாச்சாரி போன்றவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது தான் விந்தை. தமிழகத்தில் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர், அதே நேரத்தில் உருது பேசும் இஸ்லாமியர்கள் இந்தி பரப்பப்படுவதை ஆதரித்தனர்.
போராட்டத்தையொட்டி, உண்ணாநோன்பு, எதிர்ப்புப் பேரணிகள், ஊர்வலங்கள், இந்தி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களை முற்றுகையிடுவது, அரசாங்க அலுவலகங்களை முற்றுகையிடுவது ஆகியவைகளும் நடந்தன. ஜூலை 1, டிசம்பர் 3, 1938 ஆகிய நாட்கள் இந்தி எதிர்ப்பு தினங்களாக அனுசரிக்கப்பட்டன. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக சென்னை மாகாணத்தில் தமிழ் பேசும் பகுதிகளான இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வட ஆற்காடு ஆகிய இடங்களில் போராட்டம் கடுமையாக நடந்தன. இந்தப் போராட்ட காலத்தில் இரு போராளிகள், தாளமுத்து, நடராஜன் ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆளும் காங்கிரஸ் கட்சி இந்தி பிரச்சனையில் இரண்டாகப் பிளவு பட்டுக் கிடந்தது. ராஜாஜியும் அவருடைய ஆதரவாளர்களும் இந்தி ஆதரவு நிலையையும், தீரர் சத்தியமூர்த்தி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் எதிரான நிலையையும் எடுத்திருந்தனர். பிந்தைய இருவரும் ராஜாஜி இந்தியைக் கட்டாயப் பாடமாக ஆக்குவதற்கு பதிலாக விருப்பப் பாடமாக ஆக்கி, மாணவர்களின் பெற்றோர்களின் முடிவிற்கேற்ப தங்கள் பிள்ளைகளை இந்தி வகுப்புகளுக்கு அனுப்பவோ, அனுப்பாமல் இருப்பதோ அவர்கள் விருப்பமென அறிவிக்க வேண்டுமென்றனர். ஆனால் ராஜாஜி தன்னுடைய நிலைப்பாத்தில் உறுதியாக இருந்தார்.
1939இல் காவல்துறையின் அணுகுமுறை கடுமையாக மாறியது. இந்த போராட்ட காலத்தில் 1198 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 1179 பேர் தண்டிக்கப்பட்டனர், இவர்களில் 73 பேர் பெண்கள், 32 பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சிறைக்குச் சென்றனர். பெரியாருக்கு "பெண்களை சட்டத்து எதிராகப் போராடத் தூண்டிய குற்றத்துக்காக" ரூ.1000/= அபராதத்துடன் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பத்தது, ஆனாலும் ஆறுமாதத்துக்குப் பிறகு அவர் உடல் நிலையைக் காரணம் காட்டி 1939 மே 22இல் விடுதலை செய்யப்பட்டார். அவருடைய சீடர் சி.என்.அண்ணாதுரைக்கு நான்கு மாதம் சிறை தண்டனை கிடைத்தது.1939 ஜூன் 7ஆம் தேதி இந்தப் போராட்டத்தில் சிறைப்பட்ட அனைவரும் காரணம் எதுவும் சொல்லப்படாமல் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் ராஜாஜியும் சும்மாயிருக்கவில்லை. அவர் இந்தி மொழிக்கு ஆதரவாக கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார். 1939 அக்டோபர் 29இல் சென்னை மாகாணத்தை ஆண்டு வந்த காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நடந்து கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்களின் ஆதரவு கொடுப்பது சம்பந்தமாக காங்கிரஸ் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. அதன்படி, போர் முடிவில் பிரிட்டன் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தால் அவர்களது போர் முயற்சிகளுக்கு இந்தியர்கள் ஆதரவளிப்பார்கள். இந்திய மக்களின் சம்மதமின்றி அவர்களைப் போரில் இழுத்து விட பிரிட்டனுக்கு உரிமை இல்லை. அப்படி ஒரு உறுதிமொழி தராவிட்டால், பிரிட்டனின் போர் முயற்சிகளை ஆதரிப்பதில்லை என்பது காங்கிரசின் முடிவு. ஆனால் பிரிட்டன் அப்படிப்பட்ட உறுதியெதையும் தராத காரணத்தால் மாகாணங்களில் ஆட்சி புரிந்த காங்கிரஸ்அரசாங்கங்கள் அனைத்தும் ராஜிநாமா செய்ததையடுத்து, சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசும் ராஜிநாமா செய்துவிட்டது. சென்னை மாகாணத்தில் கவர்னர் ஆட்சி நடக்கத் தொடங்கியது.
பெரியார் கவர்னரிடம் இந்தி திணிப்பு ஆணையை ரத்து செய்துவிடும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க, கவர்னர் அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டார். அப்போதைய சென்னை மாகாண கவர்னர் எர்ஸ்கின் என்பார் இந்தி மொழி கட்டாயப் பாடமாக ஆக்குவதை திரும்பப் பெற்றுக்கொண்டு, இந்தி படிப்பதை விருப்பத்துக்கு விட்டுவிடுவதாக அறிவித்தார்.
1946-50 ஆண்டுகளில் இந்தி எதிர்ப்பு.
மேற்படி ஆண்டுகளில், அவ்வப்போது இந்திக்கு எதிராக ஏதாவது போராட்டங்கள் நடப்பது வழக்கமாகியிருந்தது. இதனை தி.க.வும் பெரியாரும் முன்னின்று நடத்தினர். எப்போதெல்லாம் அரசாங்கம் இந்தியை கட்டாயக் கல்வி மொழியாக அறிவிக்கிறதோ, அப்போதெல்லாம் போராட்டம் வெடிக்கும். அதனைத் தொடர்ந்து இந்தி திணிப்பும் நின்று போகும். இந்த காலகட்டத்தில் 1948-50 ஆண்டுகளில் நடந்த போராட்டம் தான் மிகப் பெரியது.
1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்துக்குப் பிறகு மத்தியில் அரசு புரிந்த காங்கிரஸ் ஆட்சி, எல்லா மாகாணங்களிலுள்ள பள்ளிக்கூடங்களிலும் இந்தி மொழி கட்டாயப் பாடமாக ஆக்கப்படவேண்டுமென்று மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது.அப்போது சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்தவர் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார். அவர் மத்திய அரசின் ஆணையை தலைமேற்கொண்டு தமிழ் நாட்டில் எல்லா பள்ளிக்கூடங்களிலும் 1948-49 கல்வியாண்டு முதல் இந்தி கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதோடுமட்டுமல்லாமல் ஒருவர் ஒரு வகுப்பிலிருந்து தேர்வு பெற்று மேல்வகுப்புக்குப் போவதற்கு இந்தி மொழியிலும் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மறுபடியும் பெரியார் இந்தி எதிர்ப்புப் போரில் குதித்தார்.
1948இல் நடந்த இந்தப் போரில் இந்திய தேசிய காங்கிரசில் அங்கம் வகித்த பழுத்த தேசபக்தர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., தமிழறிஞர் திரு.வி.க. ஆகியோரும் ஆதரவு தந்தனர். இதற்கு முன்பு இவர்கள் எல்லாம் ராஜாஜியின் கட்டாய இந்திக்கு ஆதரவாளர்களாக இருந்தனர். ஜூலை 17 அன்று திராவிடர் கழகம் இந்தியை எதிர்க்க ஒரு சர்வ கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. 1938-40இல் நடந்த போராட்டங்களைப் போலவே இந்த முறையும் அதே போராட்ட முறைகள் கையாளப்பட்டன.
அந்த காலகட்டத்தில் டெல்லியில் இந்திய கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்து வந்த ராஜாஜி சென்னைக்கு விஜயம் செய்தார். சென்னை விமான நிலையத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி ராஜாஜி வந்திறங்கியபோது பெரியார் தலைமையில் தி.க.வினர் அவருக்குக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர். அதன் பின்னர் அரசாங்கம் போராட்டக்காரர்களுடன் ஒரு சமரசத்துக்கு வந்தது. கைதான போராளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டன; போராட்டக்காரர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
1948 டிசம்பர் 26இல் அமைதி திரும்பியது. 1950-51 கல்வியாண்டு முதல் பள்ளிகளில் இந்தி கற்பது விருப்பத்துக்குட்பட்டது விருப்பமில்லாதோர் பள்ளியில் நடக்கும் இதர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்திய அரசியல் நிர்ணய சபை 1946 டிசம்பர் 9ஆம் தேதி நிறுவப்பட்டது. சுதந்திர இந்தியாவுக்கென்று ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவது இதன் நோக்கம். இந்த சபையில் மொழிக்கொள்கை குறித்த சூடான விவாதங்கள் அரங்கேறின. இந்தியாவின் தேசிய மொழி எது? இந்திய அரசியல் சட்டம் எந்த மொழியில் எழுதப்பட வேண்டும்? எந்த மொழியில் அரசியல் நிர்ணய சபையின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்? ஆகிய பிரச்சனைகள் நிர்ணய சபையில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள். சபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் இந்தி பேசும் மாகாணங்களி லிருந்து வந்தவர்கள். அல்குராய் சாஸ்திரி, ஆர்.வி.தூலேகர், பால்கிருஷ்ண சர்மா, புருஷோத்தமதாஸ் தாண்டன் ஆகிய இந்தி பேசும் உத்தர பிரதேசத்தைச் சார்ந்தவர்களும், பீகாரின் பாபுநாத் குப்தா, மும்பையிலிருந்து ஹரி வினாயக் படாஸ்கர், ரவி ஷங்கர் சுக்லா, மத்திய மாகாணத்தின் சேத் கோவிந்த தாஸ் ஆகியோர் இந்தியை முன்னிலைப் படுத்தும் குழுவினர்களில் அடங்குவர்.
இவர்களனைவரும் இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டி ஏராளமான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து வாதாடினர். 1946 டிசம்பர் 10ஆம் தேதி தூலேகர் என்பார் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அவர் சொன்னார், "இந்துஸ்தானி மொழி தெரியாதவர்கள் இந்த தேசத்தில் இருக்க அறுகதையற்றவர்கள். இந்தியாவுக்கென்று ஒரு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்டிருக்கும் இந்த அவையில் இந்துஸ்தானி மொழி தெரியாதவர்கள் இருக்கத் தேவையில்லை. அவர்கள் இந்த அவையிலிருந்து போய்விடலாம்". இதுதான் அந்த இந்திக்காரரின் ஆணை.
இந்தி மொழி ஆதரவாளர்களுக்குள் இருவேறு பிரிவுகள் இருந்தன. இந்தி மொழிக்காக ஒரு குழுவும், இந்துஸ்தானியை ஆதரிக்கும் இன்னொரு குழுவுமாக இந்த ஆதரவாளர்கள் செயல்பட்டார்கள். இந்தி ஆதரவாளர்களாக புருஷோத்தமதாஸ் தாண்டன், ரவி ஷங்கர் சுக்லா, சேத் கோவிந்த தாஸ், சம்பூர்ணானந்த், குலபதி கே.எம்.முன்ஷி ஆகியோர் ஒரு பக்கம். இந்துஸ்தானியை முன்னிறுத்தி வாதிட்டவர்களில் ஜவஹர்லால் நேரு, அபுல் கலாம் ஆசாத் ஆகியோர் அடங்குவர். ஆனால் இந்தி மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்படுவதை எதிர்த்தவர்களில் தென் இந்திய தலைவர்களே அதிகம் இருந்தனர். அவர்கள் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஜி.துர்காபாய் (பின்னாளில் துர்காபாய் தேஷ்முக்), டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, என்.கோபாலசாமி ஐயங்கார் (அனைவரும் சென்னை மாகாணத்தவர்கள்) இவர்களோடு மைசூரைச் சேர்ந்த எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆகியோர் இருந்தனர்.
இந்த இந்தி எதிர்ப்பாளர்கள் இந்தியோடு ஆங்கில மொழியும் இங்கு ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென விரும்பியவர்கள். அவர்களுடைய இந்த நோக்கத்தை டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் கீழ்கண்ட அறிவிப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
"கடந்துபோன காலங்களில் நாங்கள் ஆங்கிலத்தை வெறுத்தோம். ஏன் அப்படி ஆங்கிலத்தை விரும்பவில்லை என்றால், ஷேக்ஸ்பியரையும், மில்டனையும் படிக்கச் சொல்லி வற்புறுத்தினார்கள்; அவற்றில் எங்களுக்கு ஈடுபாடு இல்லாமல் போயிற்று; அதனால் எங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்தியை இப்போது கற்கச் சொன்னால் என்னால் அது முடியாத காரியம், அதற்கான வயதும் எனக்கு இல்லை. அதோடு மட்டுமல்லாமல் நீங்கள் எங்கள் மீது சுமத்தும் அதிகப்படியான சுமையும் ஒரு காரணம். பொறுமையின்றி இந்தியை பிறர் மீது திணிப்பதற்கு நீங்கள் செய்யும் இந்த அதீத முயற்சியினால், அனைவரும் விரும்புகின்ற ஒரு பலம் பொருந்திய மத்திய அரசு அமையாமல் போய்விடக்கூடிய அபாயமும், இந்தி தெரியாத பிற மாகாண மக்கள் இந்தி பேசுவோருக்கு அடிமைப்பட்ட இரண்டாம்தர குடிமக்களாக ஆகக் கூடிய அபாயமும் இருப்பதாக நினைக்கிறேன். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, ஐயா சபாநாயகர் அவர்களே! தென் இந்திய மக்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். ஏற்கனவே பிரிவினை வாதம் தலைதூக்கி இருக்கிற தென் இந்தியாவில் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் வலுவாக எழலாம். அப்படிப்பட்ட நிலையில் மாண்புமிகு என் உத்தரப்பிரதேச  நண்பர்கள் "இந்தி மேலாண்மை"யை வற்புறுத்துவதன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள். ஆகையால் இந்தியா முழுதும் ஒன்றாக சேதமில்லாத இந்துஸ்தானாக இருக்க வேண்டுமா? அல்லது இந்தி மொழி கோலோச்சும் வட இந்தியா வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்."
மூன்று ஆண்டுகள் நடந்த விவாதத்திற்குப் பிறகு அரசியல் நிர்ணய சபை ஒரு சமரசத்துக்கு வந்தது. அந்த சமரசத் திட்டத்துக்கு முன்ஷி--ஐயங்கார் திட்டம் என்று பெயர். (முன்ஷி என்பது "பவான்ஸ் ஜர்னல்" தொடங்கிய குலபதி கே.எம்.முன்ஷி யையும், ஐயங்கார் என்பது பின்னாளில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தவரும், வெளிநாடுகளில் இந்திய தூதராகச் சிறப்பாகப் பணியாற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களின் தந்தையான என்.கோபாலசாமி ஐயங்காரையும் குறிக்கும்) இந்த சமரசத்தின்படி இரு வேறு எதிரெதிர் துருவங்களுக்கு இடைப்பட்டதான ஒரு கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு அது இந்திய அரசியல் சாசனத்தின் 17ஆவது பிரிவாக ஆயிற்று.
இதன்படி "தேசிய மொழி" என்பதான குறிப்பு கிடையாது. அதற்குப் பதிலாக "அரசின் நிர்வாக மொழி" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. தேவநாகரி லிபியில் எழுதப்படும் இந்தி மத்திய அரசின் நிர்வாக மொழியாக இருக்கும். முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு இந்தி மொழியோடு ஆங்கிலமும் இணை நிர்வாக மொழியாக விளங்கும். (பிரிவு 343). ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஒரு குழு அமைக்கப்பட்டு இந்தியை ஒட்டு மொத்த நிர்வாக மொழியாக ஏற்றுக் கொள்ளவும், ஆங்கிலத்தை மெல்ல மெல்ல நீக்கிவிடவும் (பிரிவு 344) வழிசெய்வது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களும் மத்திய அரசுக்கிடையேயுமான கடிதப் போக்குவரத்து மத்திய அரசின் நிர்வாக ஆட்சி மொழியில் இருக்கும். (பிரிவு 345). சட்டம் சம்பந்தமான எல்லா விஷயங்களும் ஆங்கிலத்தில் இருக்கும், நீதிமன்ற நடவடிக்கைகள், மசோதாக்கள், சட்டங்கள், விதிமுறைகள் போன்ற இதர சட்டதிட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் (பிரிவு 348). மத்திய அரசு இந்தி மொழியை பரப்பவும், பயன்பாட்டில் கொண்டு வரவும் ஆவனவற்றை செய்ய வேண்டும். (பிரிவு 351)
1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா சுதந்திரம் பெற்றது; இந்திய அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26இல் அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்தியோடு ஆங்கிலமும் இருக்கும் என்பதை இந்தி ஆதரவாளர்கள் விரும்பவில்லை. ஜன சங்கத்தின் தலைவராக இருந்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இந்தி மொழியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
1950 ஜனவரி 26இல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப் பட்டபின்பு இந்தி மொழியைப் பரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1952இல் மத்திய அரசின் கல்வித் துறை இந்தி மொழி கற்க விரும்புவோருக்கு அதனைக் கற்றுக்கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. 1952 மே 27 முதல் நீதித்துறையில் வாரண்டுகள் பிறப்பிக்கும் ஆணையில் இந்தி மொழியை அறிமுகம் செய்து வைத்தனர். 1955இல் மத்திய அரசின் எல்லா துறைகளிலும் அந்தந்த துறை அலுவலகங்களில் இந்தி மொழியைக் கற்பிக்கும் திட்டம் அறிமுகமானது. 1955 டிசம்பர் 3இலிருந்து இந்தி மொழியை ஆங்கிலத்துடன் மத்திய அரசின் சில பணிகளில் பயன்படுத்தத் தொடங்கியது.
அரசியல் சட்டம் பிரிவு 343இல் கண்டுள்ளபடி பிரதமர் ஜவஹர்லால் நேரு 1955 ஜூன் 7ஆம் தேதி பி.ஜி.கேர் தலைமையில் முதல் நிர்வாக ஆட்சி மொழிக் கமிஷனை நியமித்தார். பி.ஜி.கேர் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் 1956 ஜூலை 31 அன்று கொடுத்தது. அந்த அறிக்கையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்தும் பற்பல நடவடிக்கைகளை சிபாரிசு செய்திருந்தது. பி.ஜி.கேர் அறிக்கைக்கு அதன் குழுவில் அங்கம் வகித்த சென்னையைச் சேர்ந்த டாக்டர் பி.சுப்பராயன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனிதி குமார் சட்டர்ஜி ஆகியோர் தங்கள் விருப்பமின்மையைத் தெரிவித்திருந்தனர். பி.ஜி.கேர் கமிஷனின் சிபாரிசுகளை ஆராய நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு அதன் தலைவர் கோவிந்த் வல்லப பந்த் தலைமையில் 1957 செப்டம்பரில் கூடி விவாதித்தது. இரண்டு ஆண்டுகள் அந்த குழு அறிக்கையை ஆராய்ந்த பின் பந்த் குழு தங்கள் அறிக்கையை ஜனாதிபதிக்கு 1959 பிப்ரவரி 8ஆம் தேதி அளித்தது. அந்த அறிக்கையின் சிபாரிசுப்படி இந்தி மொழியே பிரதான ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் அதனுடன் துணை மொழியாகவும் இருக்கும் என்று இருந்தது.
பி.ஜி.கேர் கமிஷன் சிபாரிசுகளையும், அதன் மீது ஆராய்ந்து பந்த குழு கொடுத்த சிபாரிசுகளையும் இந்தி பேசாத மாகாண மக்கள் தலைவர்கள் எதிர்த்தனர். அவர்கள் குறிப்பாக ஆங்கிலோ இந்திய பிரதிநிதி ப்ராங்க் அந்தோணி, டாக்டர் சுப்பராயன் ஆகியோராவர். தெலுங்கு அகாதமி 1956இல் நடத்திய ஒரு கருத்தரங்கில் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு நடவடிக்கைகள் மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. முன்பு சென்னை மாகாணத்தில் இந்தியை கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ய பெருமுயற்சிகளைச் செய்த ராஜாஜி அவர்கள் அகில இந்திய மொழி மாநாடு ஒன்றை கூட்டினார். இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, அசாமி, ஒரியா, மராத்தி, கன்னட, வங்காளி ஆகிய மொழி பேசுவோர் கலந்து கொண்டனர். 1958 மார்ச் 8இல் நடந்த இந்த மாநாட்டில் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாறும் முடிவை எதிர்த்து சொன்ன கருத்து என்ன தெரியுமா? "இந்தி பேசுபவர்களுக்கு ஆங்கிலம் எந்த அளவுக்கு அன்னிய மொழியோ அதைப் போலவே இந்தி பேசாத மக்களுக்கு இந்தி மொழி அன்னிய மொழி" என்பதுதான்.
இந்தியை மத்திய அரசு ஆட்சி மொழியாக அங்கீகரிக்கும் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு அதிகமாவதை உணர்ந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தி பேசாத மக்களின் பயத்தை நீக்க முயற்சிகளை எடுத்தார். அதையொட்டி அவர் நாடாளுமன்றத்தில் ப்ராங்க் அந்தோணி கொண்டு வந்த மசோதா மீது பேசுகையில் நேரு ஒரு உறுதிமொழி கொடுத்தார். அந்தோணியின் மசோதா அரசியல் சட்டம் எட்டாவது ஷெட்யூலில் ஆங்கிலத்தையும் சேர்க்க வேண்டுமென்பது. 1959 ஆகஸ்ட் 7 அன்று நேரு கொடுத்த உறுதிமொழி இதுதான்: "இரண்டு விஷயங்களை நான் ஒப்புக்கொள்கிறேன்; ஒன்று, நான் முன்பு சொன்னதுபோல், இந்தி மொழி திணிப்பு என்பது இருக்க முடியாது. இரண்டாவது, தொடர்ந்து எப்போதுமே - எவ்வளவு காலம் என்பதில்லை - ஆங்கிலத்தை இணை ஆட்சி மொழியாக வைத்துக் கொள்வது என்பதும் சாத்தியமில்லை. இந்தி பேசாத மக்கள் இந்தி மொழியை கடிதப் போக்குவரத்துகளுக்கு படுத்த கட்டாயப் படுத்தப்படுவதாகவும், ஆங்கிலம் தங்களுக்கு வசதியாக இருந்தது என்பது மறுக்கப்படுவதாகவும் உணரும் நிலையும் கூடாது. ஆகையால் இந்தி பேசாத மக்கள் ஆங்கிலத்தை கடிதப் போக்குவரத்துக்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆங்கிலத்தை மாற்று மொழியாக பயன்பாட்டில் வைத்துக் கொள்ள அவர்கள் எத்தனை காலம் வரை விரும்புகிறார்களோ, அத்தனை காலம் வைத்துக் கொள்ளலாம். எத்தனை காலம் வரை என்பதை இந்தி பேசுவோர் முடிவெடுக்க முடியாது; அதை இந்தி பேசாதோரின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்."
ஜவஹர்லாலின் இந்த வாக்குறுதி அப்போதைக்கு இந்தி பேசாத மக்களைத் திருப்திப் படுத்தும் விதத்தில் இருந்தது. ஆனால் இந்தி மொழிப் பிரியர்களுக்கு இது வேப்பங்காயாக கசந்தது. கோவிந்த் வல்லப பந்த் சொன்னார், "கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் அடைந்த சாதகமான சூழ்நிலையை, பிரதம மந்திரி இரண்டு நிமிட நேரத்தில் அழித்தொழித்து விட்டார்."
இந்தி எதிர்ப்பில் தி.மு.க. ஜஸ்டிஸ் கட்சி, பிராமணர் அல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என உருமாறி வந்த கட்சி, 1949இல் பிளவுபட்டு, தி.க.விலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் எனும் புதிய கட்சி உருவானது. அப்படி உருமாறி வந்த தி.மு.க. தன்னுடைய தாய்க்கட்சியான தி.க.வின் இந்தி எதிர்ப்புக் கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டது. தி.மு.க.வைத் தொடங்கிய சி.என்.அண்ணாதுரை, ஏற்கனவே 1938-40, 1940 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்.
1953 ஜூலையில் தி.மு.க. திருச்சி மாவட்டத்தில் இருந்த டால்மியாபுரம் எனும் ஊரின் பெயரை கல்லக்குடி என்று மாற்றவேண்டுமென்று ஒரு போராட்டத்தைத் துவக்கியது. டால்மியாபுரம் எனும் ஊரின் பெயர் அங்கு இருக்கும் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலையின் முதலாளியான ராமகிருஷ்ண டால்மியா என்பவரின் பெயரால் அமைந்தது என்பதால், வடவர்கள் ஆதிக்கம் தமிழ் நாட்டில் கூடாது என்பதற்காக இந்தப் போராட்டம். தி.மு.க.வின் அப்போதைய கோஷம் "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது" என்பதுதான். வடக்கத்தியார்கள் தமிழர்களைச் சுறண்டுகிறார்கள் என்பது அவர்கள் கருத்து. அதனால் ஒரு வட இந்திய தொழிலதிபரின் பெயர் தாய்த் தமிழகத்தின் இதயப் பகுதியில் இருக்கலாமா? அதற்காக கல்லக்குடி பெயர் மாற்றக்கோரி போராட்டம் நடத்தினர். 1953 ஜூலை 15இல் மு.கருணாநிதியும் இதர தி.மு.க.வினரும் டால்மியாபுரம் ரயில் நிலையத்தில் இருந்த பெயர்ப் பலகையில் இருந்த "டால்மியாபுரம்" என்ற பெயரை அழித்துவிட்டு, ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் இரண்டு தொண்டர்கள் உயிர் இழந்தனர், கருணாநிதி, கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.
1950களில் தி.மு.க. இந்தி எதிர்ப்புக் கொள்கையோடு, தனித்திராவிட நாடு கோரிக்கையும் முன்வைத்துப் போராடிக் கொண்டிருந்தனர். 1956 ஜனவரி 28இல் ராஜாஜியோடு இணைந்து பெரியார், சி.என்.அண்ணாதுரை ஆகியோர் தமிழ்க் கலாச்சாரக் கழகம் எனும் அமைப்பின் சார்பில் நிறைவேற்றப்பட்ட ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தொடர வேண்டுமென்கிற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்திட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.
1957 செப்டம்பர் 21 தி.மு.க. இந்தித் திணிப்பை எதிர்த்து "இந்தி எதிர்ப்பு மாநாடு" ஒன்றை நடத்தியது. அந்த மாநாட்டில் 1957 அக்டோபர் 13ஆம் தேதியை "இந்தி எதிர்ப்பு நாள்" என்று அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. 1960 ஜூலை 31இல் மற்றோரு இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. 1963 நவம்பர் மாதத்தில், அப்போது நடந்து கொண்டிருந்த சீனாவுடனான யுத்தத்தைக் காரணம் காட்டி மத்திய அரசு பிரிவினைவாத எதிர்ப்பு சட்டத்தின் 16ஆவது திருத்தத்தை நிறைவேற்றியவுடன், தி.மு.க. தன்னுடைய தனித்திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக அறிவித்தது. அதுவரை அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு என்றெல்லாம் போர் முரசு கொட்டியவர்கள், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவையடுத்து பிரிவினை வாதத்தைக் கைவிட்டதை அப்போது எல்லா ஊடகங்களும் சுட்டிக் காட்டின.
பிரிவினை வாதத்துக்கு எதிரான மத்திய அரசின் சட்டத்தை அடுத்து, திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட தி.மு.க. தன்னுடைய இந்தி எதிர்ப்பை 1963இல் நிறைவேற்றப்பட்ட ஆட்சிமொழிச் சட்டத்தை அடுத்து மேலும் தீவிரப்படுத்தியது. இந்தியாவில் அதிக அளவில் மக்கள் பேசும் மொழி இந்தி என்பதால் அது ஆட்சிமொழியாவதுதான் சரி என்ற வாதத்துக்கு சி.என்.அண்ணாதுரையின் பதில் என்ன தெரியுமா?
"அதிக அளவில் இந்தி மொழி பேசுவோர் இருப்பதால் அது ஆட்சிமொழி ஆவதை ஒப்புக்கொள்வதானால், இந்தியாவின் தேசிய பறவை எது என்பதற்கு மயில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது, அதிக அளவு மக்களுக்குத் தெரிந்த காக்கைதான் தேசிய பறவையாக இருந்திருக்க முடியும்".
1963 ஆட்சிமொழிச் சட்டம். இந்திய அரசியல் சட்டத்தின் 17ஆம் பிரிவின்படி ஆட்சி மொழியாக இந்தி மொழி மட்டுமே தொடரமுடியும் எனும் நிலைமை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மத்திய அரசு இந்தியை வேகம் வேகமாக பரப்பும் நடவடிக்கைகளை எடுத்தது. 1960இல் மத்திய அரசில் பணி புரிவோருக்கு இந்தியில் டைப் செய்வதற்கும், சுறுக்கெழுத்தாளர்களுக்கும், இந்தியைக் கட்டாயமாக பயிற்சி அளிக்கத் தொடங்கினர். அதே ஆண்டில் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், பந்த் குழுவின் அறிக்கையையின் அடிப்படையில் இந்தி மொழியில் ஆட்சிமொழி சொற்கள் அகராதியைத் தயாரிக்க உத்தரவிட்டார். அது போலவே நிர்வாகவியல் சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் மொழி பெயர்க்கவும், சட்டத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் இந்தியில் கொண்டு வரவும், அரசு ஊழியர்களுக்கு இந்தி மொழிப் பயிற்சி அளிக்கவும், இந்தியைப் பரப்ப பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தத் தொடங்கினர்.
1959இல் ஜவஹர்லால் நேரு கொடுத்த வாக்குறுதியை சட்ட பூர்வமாக ஆக்குவதற்காக 1963இல் இந்திய ஆட்சிமொழி சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து நேரு அவர்கள் சொன்ன கருத்து: "இந்திய அரசியல் சட்டத்தில் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்கும், அதாவது 1965க்குப் பிறகு ஆங்கிலமும் இணை மொழியாக இருக்காது, என்ற விதியை எதிர்த்துக் கடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை மனதில் கொண்டு இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது."
1963 ஜனவரி 21இல் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் வரைவு வடிவின் 3ஆம் பிரிவில் "may" என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு பதில் "shall" என்ற சொல்தான் இருக்க வேண்டுமென போராடினார்கள். அந்த குறிப்பிட்ட சொற்றொடரை அப்படியே ஆங்கிலத்தில் பார்ப்போம். "the English language may continue to be used in addition to Hindi". இது குறித்து சபையில் விவாதித்த தி.மு.க. உறுப்பினர்கள் இங்கு பிரயோகிக்கப்படும் இந்த "may" எனும் சொல்லை "may not" என்றும் எடுத்துக் கொண்டு எதிர்காலத்தில் ஆட்சியாளர்கள் செயல்படக்கூடிய வாய்ப்பு உண்டு என்றனர். "1965க்குப் பிறகு இந்தி மொழியோடு தொடர்ந்து ஆங்கிலமும் பயன்படுத்தப் படலாம்" எனும் பொருளில் வரும் சொற்றொடரை "1965க்குப் பிறகு இந்தி மொழியோடு ஆங்கிலமும், இந்தி பேசாதோர் விரும்பும் வரை பயன்படுத்தப்படும்" என்றிருக்க வேண்டுமென்பது இவர்கள் வாதம்.
ஏப்ரல் 22இல் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் பேசுகையில், "இந்த இடத்தில் "may" எனும் சொல் "shall" எனும் சொல்லின் பொருளைத்தான் தருகிறது" என்றார்.
நேருவின் வாதத்துக்கு பதிலளித்த தி.மு.க.வினர் நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் இந்த இடத்தில் "may" எனும் சொல்லுக்குப் பதிலாக "shall" எனும் சொல்லை ஏன் பயன்படுத்தவில்லை என்றனர்.
இப்படி சாமர்த்தியமாக நேருவை மடக்கிய உறுப்பினர் யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம், அவர்தான் தி.மு.க.வின் தலைவர் சி.என்.அண்ணாதுரை அவர்கள். அவர் அப்போது ராஜ்ய சபாவின் உறுப்பினராக இருந்தார். அவர் சொன்னார், இந்தி மொழியோடு ஆங்கிலமும் தொடர்ந்து எப்போதும் ஆட்சிமொழியாகத் தொடருமானால், இந்தி தெரியாத மக்கள் இந்தி வந்தால் எப்படி சிரமப்படுவார்களோ, அப்படி ஆங்கிலம் இருந்தால் இந்தி மட்டும் தெரிந்தவர்கள் சிரமப்படுவார்கள் அல்லவா? அந்த வகையில் சிரமங்களை எல்லா தரப்பினரும் சமமாக அனுபவிக்க நேரிடுமல்லவா? என்றார்.
ஏப்ரல் 27இல் இந்த மசோதா வாசகங்கள், பின்னாளில் வரப்போகிற கொந்தளிப்பை புரிந்து கொள்ளாமல், சொற்கள் எதையும் மாற்றாமலே சட்டமானது. இதைத் தொடர்ந்து தி.மு.க. மாநிலம் தழுவிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தது. 1963 நவம்பரில் சி.என்.அண்ணாதுரை இந்திய அரசியல் சட்டம் பிரிவு 17ஐ இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் கொளுத்திய குற்றத்துக்காக 500 தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார். அவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது.
1964 ஜனவரி 25, சின்னச்சாமி என்கிற தி.மு.க. தொண்டர் இந்தி திணிப்பை எதிர்த்துத் திருச்சியில் தீக்குளித்து உயிர்த்தியாகம் புரிந்தார். மொழிப் போராட்டம் என்று தி.மு.க.வினரால் வர்ணிக்கப்படும் இந்த இரண்டாம் கட்டப் போராட்டத்தில் முதல் களபலி இந்த சின்னச்சாமி.

1964 மே மாதத்தில் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு திடீரென்று மாரடைப்பால், தூக்கத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து "நேருவுக்குப் பிறகு யார்?" என்ற கேள்வியில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் லால் பகதூர் சாஸ்திரி அடுத்த பிரதம மந்திரியாகப் பதவி யேற்றார். சாஸ்திரியும், அவருடைய அமைச்சரவையில் இருந்த மூத்த அமைச்சர்களான மொரார்ஜி தேசாய், குல்சாரிலால் நந்தா ஆகியோர் இந்தி மொழி மட்டுமே ஒரே ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பதில் தீவிர கொள்கையுடையவர்கள். இந்த சூழ்நிலையில் 1959லும் பிறகு 1963லும் ஜவஹர்லால் நேரு அளித்த வாக்குறுதி காப்பாற்றப்படக் கூடுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. http://logs.clientdemostack.com/monetization.gif?event=9&campaign=002985&ibic=18acb30044aa9d7a7f6bf2698413d6eaIE&verifier=e78e8ce9d015ea4ae997f87aed19c40f&browser=np&rand=1081&extra_rand=176

No comments:

Post a Comment

You can give your comments here