சென்னை மாகாணம்
என்றழைக்கப்பட்ட பகுதியில் தமிழகத்திலும், பிறகு மாநிலங்கள் மொழி வாரியாகப் பிரிக்கப்பட்ட
பிறகு தமிழ் நாட்டிலும் சுதந்திரத்துக்கு முன்பும், அதன் பிறகும் இந்தியை எதிர்த்துப்
பல போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. இத்தகைய போராட்டங்கள் பல்வேறு விதங்களில்
நடைபெற்றிருக்கின்றன. கூட்டம் கூடி ஆர்ப்பாட்டங்கள்
நடத்துவது, ஊர்வலம் வந்து கல்லெறிதல், காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவது, அரசாங்க
அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தல்,
கல்வி நி லையங்களைப் புறக்கணித்தல், தீயிடல் போன்ற வன்முறை சம்பவங்கள், ஆகியன இவற்றுள்
அடங்கும். இவை அத்தனையும் இந்தி மொழி இந்திய பேரரசின் ஆட்சி மொழியாக ஆவது குறித்த பிரச்சினைகளால்
ஏற்பட்டவை.
முதன் முதலாக தமிழ்
நாட்டில் புயலாக உருவான இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி 1937ஆம் ஆண்டில் இந்தியை கட்டாயமாகப்
பயிற்றுவிக்க சென்னை மாகாணத்தில் கல்வி நிலையங்களில் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி முயற்சி
செய்தபோது நடந்தது. அப்போது சென்னை மாகாண முதல்வராக
ராஜாஜி பதவி ஏற்றிருந்தார். அவருடைய ஆட்சியில் இப்படியொரு முயற்சி நடந்த சமயம் அதனை
உடனடியாக எதிர்த்தவர் அப்போது ஜஸ்டிஸ் கட்சியாக இருந்து பின்னாளில் திராவிடர் கழகம்
என பெயரிடப்பட்ட இயக்கத்தின் தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர். அப்போது அவர் தொடங்கிய
அந்த போராட்டம் சுமார் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து நடைபெற்றது. பெருந்தலைவர்கள்
கருத்துக்களைக் கூறுவது, தமிழறிஞர்கள் கருத்து கூறுவது , கூட்டமாக உண்ணாவிரதம் இருப்பது,
ஒவ்வொரு ஊரிலும் மாநாடுகள் நடத்தி இந்திக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றுவது, ஊர்வலங்கள்
நடத்துவது, அரசாங்க அலுவலகங்கள் முன்பாக மறியல் செய்வது, போன்ற எதிர்ப்புகளைக் காட்டி
வந்தனர்.
அப்போது பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலம். மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி
பெற்று ஆட்சியை யேற்று நடத்தி வந்தது. அரசாங்கத்தில் அடக்குமுறை இவ்வகை போராட்டங்களுக்கு
எதிராக கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. அப்போது நடந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள்,
குழந்தைகள் என்று சுமார் 1198 பேர் இறந்து போனதாக அரசாங்க குறிப்புகள் சொல்லுகின்றன.
ஆனால் இந்த நிலைமை
நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 1939இல் காங்கிரஸ் அரசாங்கம் கட்சியின் முடிவின்படி ராஜினாமா
செய்த பிறகு அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த எர்ஸ்கின் என்பார் ஆணைப்படி இந்தி
கட்டாயமாகப் படிக்கவேண்டுமென்கிற ஆணை திரும்பப் பெறப்பட்டு விட்டது. போராட்டமும் தேவையில்லாமல்
போய்விட்டது.
இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து
சுதந்திரம் பெற்ற பிறகு நமக்கென்று புதிதாக ஒரு அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க வேண்டியதன்
அவசியம் உணரப்பட்டது. அப்போது புதிதாக உருவாகியுள்ள பாரத நாட்டுக்கு என்று ஆட்சி மொழியாக
எந்த மொழி இருக்க வேண்டுமென்பது பற்றிய விவாதம் சூடாக நடந்து கொண்டிருந்தது.
ஆட்சி மொழி பற்றி
மிக விரிவாகவும், பல்வேறு ஆலோசனைகள் பற்றியும் விவாதம் நடத்தப்பட்டது. மிக கடுமையான,
எதிரெதிர் கருத்துக்களை முன்வைத்து நடத்தப்பட்ட விவாதத்துக்குப் பின் ஒரு வழியாக இரு
தரப்பாரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டது. அது இந்தி மொழி ஆட்சி
மொழியாகவும், பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாகவும் இருப்பது என்பது
அந்த முடிவு.
அவர்கள் தீர்மானித்த
பதினைந்து ஆண்டுகள் முடிந்தவுடன் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆகிவிடும்
என்பதுதான் இந்த தீர்மானத்தின் நோக்கம். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 ஜனவரி
மாதம் 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி பார்த்தால் 1950 ஜனவரி தொடங்கி
பதினைந்து ஆண்டுகள் முடிந்ததும், அதாவது 1965 ஜனவரி 26க்குப் பிறகு இந்தி மொழி மட்டுமே
ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பது அப்போது எடுத்த முடிவு. ஆனால் இந்தி மொழி பேசாத
பல மாநிலங்கள் இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்
கொள்ளவில்லை. தொடர்ந்து ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பது அவர்களது
விருப்பம்.
தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி தேய்ந்து திராவிடர் கழகமாகி, பின்னர் அதுவும்
உடைந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. பெரும்பாலும் இளைஞர்கள் உறுப்பினர்களாக
இருந்த தி.மு.க. இந்தி எதிர்ப்பில் முன்னணியில் இருந்து வந்தது. தமிழ் நாட்டில் இப்படியொரு
எதிர்ப்பு இந்திக்கு இரும்மென்று எதிர்பார்க்காத டெல்லி ஆட்சியாளர்கள் இந்திக்கு இங்கு
யேபட்டிருக்கிற எதிர்ப்பைக் கண்டு திகைத்தனர். பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒரு உத்தரவாதம்
கொடுத்தார். 1963இல் அவர் கொண்டு வந்த ஆட்சி மொழி சட்டத்தின்படி முன்பு தீர்மானித்தபடி
1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதற்கு மாறாக, 1965க்குப் பிறகும் இந்தி மொழியோடு
ஆங்கிலமும் இணை ஆட்சி ஒழியாக நீடிக்கும் என்பது நேரு கொடுத்த உத்தரவாதம். ஆனால், அந்த
சட்டத்தின் இந்த வாசகம் தி.மு.க. தலைவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. காரணம் இது நேரு
பிரதமர் என்கிற முறையில் கொடுக்கிற உத்தரவாதம், அவருடைய உத்தரவாதத்தை இவருக்குப் பிறகு
பிரதமராக வருபவர்கள் ஒப்புக்கொண்டு அதை நடை முறை படுத்துவார்கள் என்பதற்கு என்ன உறுதி
என்றார்கள்.
இந்தியோடு ஆங்கிலமும்
நீடிக்கும் என்கிற உறுதிமொழி காலாவதியாகும் 1965 ஆம் ஆண்டு நெருங்கியதும் தி.மு.க.வினர் தாங்கள் சந்தேகித்தபடி இந்தி தங்கள்
மீது திணிக்கப்படு
மென்கிற சந்தேகம் அதிகமாக கொள்ளலாயினர். வெள்ளம் வந்த பிறகு அணை கட்டுவதைவிட
வெள்ளம் வருமுன்பே அதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்கிற உணர்வு மேலோங்க அவர்கள் போராட்டங்களைத்
துவங்கிவிட்டனர். முந்தைய போராட்டங்களுக்கும்
இப்போது உருவான போராட்டங்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம். இந்த முறை போராட்ட களத்தில்
கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் குதித்தனர்.
1965 ஜனவரி
25. குடியரசு தினத்துக்கு முந்தைய தினம். இருமொழி ஆட்சி மொழி என்ற நிலை முடிவுக்கு
வந்து இந்தி மட்டும் தான் என்கிற நிலை உருவாகப்போகும் நாள். திடீரென்று மதுரையில் வன்முறை
வெடித்தது. இந்த திடீர் போராட்டத்துக்குக் காரணம் கல்லூரி மாணவர்களுக்கும் காங்கிரஸ்
காரர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான். அன்று கண்ணகி மதுரையை எரித்ததும் தமிழ்நாடே
பாதிக்கப்பட்டது. இன்றும் மதுரையில் வெடித்துச் சிதறிய தீப்பொறி தமிழ் நாடு முழுதும்
பரவியது. அப்படி பரவிய போராட்டம் ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல இடைவெளியோ, சோர்வோ
இல்லாமல் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்தது.
போராட்டம் என்றால் கூட்டம்
கூடுவது, ஊர்வலம் போவது, கோஷமிடுவது என்பது போல இருந்தால்தான் பரவாயில்லையே, இப்போது
இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராடுவது மாணவர்கள், இளைஞர்கள், இளங்கன்று
பயமறியாது என்றபடி அவர்கள் விளைவுகளை சிந்திக்காமல் கல்லெறிதல், கட்டடங்களை சேதப்படுத்துவது,
கண்ணாடிகளை உடைப்பது, தீயிட்டு எரிப்பது போன்ற பயங்கரமான போராட்டத்தில் இறங்கி விட்டனர்.
போராட்டக்காரர்கள் இப்படி வன்முறையில் இறங்கியதைப் பார்த்துக் கொண்டு காவல் துறை வாய்
மூடி சும்மா இருக்க முடியுமா, அவர்களும் இந்த வன்முறையை அடக்க தடியடி, கண்ணீர் புகை,
துப்பாக்கிச் சூடு என்று இறங்கி விட்டனர். விளைவு எப்படியிருக்கும் யோசித்துப் பாருங்கள்.
இப்படிப்பட்ட போராட்டங்களில் இழப்பு என்பது இரு பக்கத்திலும் அதிகமென்றாலும், அதிகம்
பாதிக்கப்பட்டது பொது மக்கள் தான். வியாபாரிகளும், அரசாங்க கட்டடங்களும் இந்தப் போரில் அதிகமாக அழிவினை சந்தித்தன.
மாநிலத்தில் ஆட்சிப்
பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் தங்கள் போலீஸ் படைகளால் இந்த கலவரத்தை அடக்க
முடியாத நிலையில் துணை ராணுவப் படைகளை வரவழைத்து விட்டது. ராணுவத்தினர் போலீசைப் போல
மனிதாபிமானம் பார்க்கக் கூடியவர்கள் இல்லையல்லவா? அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி
கலவரத்தை அடக்குவது. அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணைப்படி தடியடி, துப்பாக்கி
சூடு போன்றவற்றைப் பயன்படுத்தினர். இப்படி வன்முறையை வன்முறையால் அடக்கும்போது மனித உயிர் இழப்புகள் தவிர்க்க முடியாதவை
அல்லவா? பலர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பலர் காயங்களுடன் வீட்டுக்கு ஓடிவிட்டனர். காவல் துறையில் இருவர் மரணம் அடைந்தனர்.
போராட்டக்காரர்கள் எழுபதுக்கும் மேல் உயிரிழந்தனர். இது அரசாங்கம் கொடுக்கும் கணக்கு.
போராட்டக் காரர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகம் என்கின்றனர்.
அப்போது மத்தியில்
பிரதம மந்திரியாக இருந்தவர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள். தமிழ் நாடு இப்படி பற்றி
எரிவதைக் கண்டு அவர் ஒரு வாக்குறுதி கொடுத்தார். அது இந்தி பேசாத மக்கள் விரும்பும்
வரை இந்தியோடு ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என்பதுதான் அது. பற்றி எரியும்
தீயில் லால் பகதூர் சாஸ்திரி தண்ணீர் ஊற்றி அணைத்தார். தமிழ் நாடு அமைதியானது. போராட்டமும்
நிறுத்திக் கொள்ளப்பட்டது. அமைதி திரும்பியது. லால் பகதூர் சாஸ்திரியின் வாக்குறுதியில்
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது.
To be continued........
No comments:
Post a Comment