பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, July 23, 2015

ஜி.சுப்பிரமணிய ஐயர்


தமிழ்நாட்டில் ஏராளமான சுப்பிரமணிய ஐயர்கள் இருந்திருக்கிறார்கள்; எனினும் மகாகவி பாரதியாரை உலகத்துக்குக் காட்டியவர் எனும் பெருமைக்குரியவர்; தி ஹிந்து, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளைத் தொடங்கி தேசபக்தியைத் தூண்டியவர்; சமூக சீர்திருத்தவாதி; உடல் நோயையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தேச சேவையில் ஈடுபட்டவர் இந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் மட்டும்தான். அவர் விதவைகள் மறுமணம், பால்ய வயதுத் திருமண எதிர்ப்பு, பெண் கல்வியின் அவசியம், பெண்கள் சுதந்திரம் போன்ற பல விஷயங்களில் உரக்கக் குரல் கொடுத்தவர். அவற்றைப் பல கட்டுரைகளிலும் கொடுத்திருக்கிறார். இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு உரிய இந்த ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றிய சில விவரங்களை இங்கே கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

நமது தேசத்தில் மக்களுக்காகப் பாடுபட்ட எத்தனையோ மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களை இன்றைய அவசர சூழலில் நாம் நினைக்க நேரம் இருப்பதில்லை; இளைய தலைமுறையினரிடம் இவர்கள் பெயரைச் சொன்னால், அவர்களுக்குத் தெரிவதில்லை. பழம்பெரும் மாளிகையில் வசிக்கும் ஒருவர் தன் இளவயது மகனிடம், இந்த மாளிகை யார் கட்டியது தெரியுமா? என்னுடைய பாட்டனார் அந்தக் காலத்தில் திவானாக இருந்தவர், அவர் கட்டிய மாளிகை இது. இப்போதும் எப்படி உறுதியோடும், அழகோடும் இருக்கிறது பார் என்று சொல்வதைப் போல, நாமும், நம் வாரிசுகளிடம், இன்றைய பாரதம் இப்படி உருவாகத் தங்களுடைய அனைத்து சக்திகளையும் செலவிட்டுப் பாடுபட்ட நமது முன்னோர்களுடைய பெருமைகளை எடுத்துச் சொல்ல வேண்டாமா? விதண்டாவாதம் பேசும் ஒருவர் ஒரு இழையில் வீம்புக்கு எழுதுகிறார், பாரதியாருக்குத் தமிழ் இலக்கணம் தெரியவில்லை, அதனால்தான் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி வேலையிலிருந்து நீங்கி சென்னைக்கு வந்தார் என்கிறார். எத்தனை அபத்தமான வாதம்? இந்த அபவாதத்தைத் தெரிந்தோ தெரியாமலோ சில பண்டித சிகாமணிகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனை மறுத்து வலுவான வாதங்களை முன்வைக்கவென்று 'திருவையாறு பாரதி இயக்கம்' தனது வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் போது, ஓராண்டு முழுதும், ஒவ்வொரு மாதமும் ஒரு அறிஞரின் சொற்பொழிவை வைத்து அதனை "பன்னிருவர் பார்வையில் பாரதி" என்ற ஒரு நூலாகவும் வெளியிட்டது. அதில் ஒரு மாதம் தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் அமைந்திருக்கும் திருவருட் கல்லூரியின் முதல்வராக இருந்த பேராசிரியர் இரா.கலியபெருமாள் "தமிழிலக்கிய வழியில் பாரதியார்" எனும் தலைப்பில் பேசினார். அதில் மகாகவி பாரதியாரின் இலக்கண, இலக்கிய ஞானம் பற்றியும், அவருடைய 'விநாயகர் நான்மணி மாலை'யில் அவருடைய இலக்கண ஞானம் மிளிர்வதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார். 





இந்தக் கட்டுரையில் முதலில் ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றி சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிவிட்டு, அதன் பின்னர் அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் "ஆசாரத்திருத்த வியாசங்கள்" எனும் தலைப்பில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றையும் பார்க்கலாம். இந்த "ஆசாரத்திருத்த வியாசங்கள்" எனும் அவருடைய நூல் 1914இல் முதன் முதலில் வெளியாயிற்று. அதன் பழைய பிரதியை தஞ்சை பாரதி சங்கத்தின் திரு வீ.சு.இராமலிங்கம் பாதுகாத்து வைத்திருந்து டிசம்பர் 2003இல் ஒரத்த
நாடு மருதம் பதிப்பகத்தின் மூலம் மீள்பதிப்பு கொண்டு வந்தார். அதிலிருந்து ஒரு சில கட்டுரைகளை இங்கே பார்ப்போம். முதலில் ஐயரின் வாழ்க்கைக் குறிப்புகள் அமரர் வீ.சு.இராமலிங்கம் மீள்பதிவு செய்த "ஆசாரத்திருத்த வியாசங்கள்" நூலின் முன்னுரையிலிருந்து:

"ஜி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் 19-1-1855 அன்று திருவையாற்றில் பிறந்தார். தந்தையார் வக்கீல் கணபதி ஐயர், தாயார் தனம்மாள். திருவையாறு தாலுக்கா பள்ளியிலும், பின்னர் தஞ்சாவூரில் இருந்த எஸ்.பி.ஜி. மிஷன் பள்ளியிலும் பயின்று மெட்ரிகுலேஷன் தேர்வில் வென்றார். இரண்டு ஆண்டுகள் தஞ்சாவூர் எஸ்.பி.ஜி.கல்லூரியில் படித்து எஃப்.ஏ. யில் தேர்வு பெற்றார். இதுதான் பிறகு செயிண்ட் பீட்டர்ஸ் கல்வி நிலையங்களானது. அவருடைய பதிமூன்றாம் வயதில் தந்தை காலமானார். இவர் மீனாட்சி எனும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1874ஆம் ஆண்டில் சென்னை சென்று அங்கு ஆசிரியர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து அவர் சர்ச் ஆஃப் ஸ்காட்லாண்ட் மிஷன் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் வேலை; அந்த சந்தர்ப்பத்தில் அவர் பி.ஏ. தேர்வு பெற்றார். அவரை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்ற அழைத்தனர். அவரும் அந்தப் பணியை ஏற்றுச் சிறப்புற செய்து வந்தார். கல்விப் பணியே வாழ்நாள் பணியாக அவர் கருதி திருவல்லிக்கேணியில் ஆரியன் உயர்நிலைப் பள்ளி எனும் பள்ளியைத் தொடங்கினார். அன்றைய நாளில் மிகச் சிறந்த கல்வியை அவருடைய பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கினார்.





1878இல் முத்துசாமி ஐயர் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தியர் ஒருவர் நீதிபதியாக நியமித்தது அதுதான் முதல் தடவை என்பதால், ஆங்கில பத்திரிகையான 'தி மெட்ராஸ் மெயில்' ஒரு கருப்பர் எப்படி நீதி வழங்க முடியும் என்று எழுதியதை ஜி.சுப்பிரமணிய ஐயரும், அவரைப் போல ஏராளமான இந்தியர்களும் கடுமையாக எதிர்த்தனர். நமக்கென்று ஒரு பத்திரிகை இல்லாததால் அல்லவோ, ஆங்கிலேயர்கள் இப்படி எழுதுகிறார்கள் என்று கருதி ஜி.சுப்பிரமணிய ஐயரும், அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து 1878இல் 'தி இந்து' எனும் பெயரில் ஒரு ஆங்கில இதழைத் தொடங்கினர். அதற்கு ஐயர் ஆசிரியர். அதன் பின்னர் 1882இல் அதாவது மகாகவி பாரதி பிறந்த ஆண்டில் 'சுதேசமித்திரன்' என்ற பெயரில் ஒரு தமிழ்ப் பத்திரிகையையும் தொடங்கினார். தமிழ்நாட்டில் பத்திரிகை தொழிலில் முதலில் வழிகாட்டியாக இவர் சிறப்பாக வாழ்ந்து காட்டினார். தொடர்ந்து அவர் அரசியலிலும், பத்திரிகை தொழிலிலும் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய தேசிய இயக்கத்திலும் முன்னிலை வகித்து வந்தார்.

1885இல் பம்பாயில் கூடிய முதல் காங்கிரஸ் தொடக்கக் கூட்டத்தில் இவர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தின் முதல் தீர்மானமும் ஐயர் கொண்டு வந்ததுதான். இந்திய சுதந்திரத்துக்காகத் தொடங்கப்பட்ட இந்த காங்கிரசில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். அரசியல், சமூகம் ஆகிய துறைகளில் இவருடைய ஆர்வம் ஒரு புதிய இந்தியாவை நிர்மாணிக்க உதவியது எனலாம்.

ஜாதிப் பிரிவினைகளை அவர் எதிர்த்தார்; தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்காகப் பாடுபட்டார்; பெண் விடுதலைக்கு வித்திட்டவர் ஐயர் என்றால் அது மிகையில்லை; அந்தக் காலத்திலேயே அவர் விதவைத் திருமணத்தை ஆதரித்தார் என்றால் அதிசயிப்பீர்கள்; வாய்ச்சொல்லில் மட்டுமல்ல செயலிலும் அதைத் தன் குடும்பத்தில் தன் மகளுக்கே விதவைத் திருமணம் செய்துவைத்துப் புரட்சியைச் செய்தார். ஆம்! 1899இல் தன் விதவை மகளான சிவப்பிரியாவுக்கு மன்னார்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்குத் திருமணம் செய்வித்தார்.





அவருடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவரைத் கொடிய தோல் நோய் பற்றிக் கொண்டது. உடலெங்கும் கட்டிகள் தோன்றி அது உடைந்து புண்ணாகி ஒரு தொழுநோயாளியைப் போலத் தோற்றமளித்தார். 1915இல் மகாத்மா காந்தி இவரைச் சந்தித்திருக்கிறார். அப்போது ஐயரின் உடலில் கசிந்த நீரைத் தன் மேல் வஸ்திரத்தால் துடைத்து ஆறுதல் சொன்னார் மகாத்மா. கொடிய நோய் அவரை 15-4-1916இல் 61ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீங்கிடச் செய்து விட்டது. 

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எட்டையபுரம் சி.சுப்பிரமணிய பாரதியாரை அடையாளம் கண்டு, தன்னுடைய சுதேசமித்திரனுக்கு உதவி ஆசிரியராக அழைத்துச் சென்ற ஐயரைப் பற்றி பாரதியார் என்ன சொல்கிறார் பார்ப்போம்.

"காலம் சென்ற 'சுதேசமித்திரன்' சுப்பிரமணிய ஐயருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். தமிழ்நாட்டின் உயர்வுக்கு முக்கிய சாதனங்களாக அவர் என்னென்ன விஷயங்களைக் கருதினாரென்று எனக்கு நன்றாகத் தெரியும். அவருடைய உள்ளத்திலிருந்த மூல தர்மங்களை எனக்கு ஞாபகமுள்ள வரை இங்கெழுதுகிறேன்:





1. தமிழ் நாட்டார் விசேஷ அவசரங்கள் நேரிட்டாலொழிய மற்றபடி எப்போதும் தமிழிலே பேசவும், எழுதவும் வேண்டும்.கற்கும் கலைகளெல்லாம் தமிழ் வழியாலே கற்க வெண்டும்.

2. ஜாதி பேதங்கள் பாராட்டி நமக்குள்ளே அர்த்தமில்லாத உயர்வு தாழ்வுகள் கற்பிக்கலாகாது.

3. ஸ்திரீகளைக் கஷ்டப்படுத்தலாகாது. அவர்களுக்கு மேலான அறிவு தந்து மேன்மைப்படுத்த வேண்டும்.

4. வைஷ்ணவம், சைவம் முதலிய மத பேதங்களாலும், வடகலை, தென்கலை போன்ற உட்பிரிவுகளாலும், நமது ஜனங்களுக்குள் விரோதம் பாராட்டுதல் நியாயமில்லை. நாமெல்லோரும் ஹிந்துஸ்தானத்தின் குமாரர். அவரவர் கொள்கை அவரவர்க்கு. மதப்பிரிவுகள் காரணமாகத் தீராத வியாஜ்யங்கள் செய்வதும், கலகங்கள் நடத்துவதும் அறிவில்லாதோர் செய்கையாகும்.

5. உடை, உணவு முதலிய செளகரியங்களுக்கெல்லாம் நமது நாட்டுப் பொருள் கிடைக்கும்போது அன்னியர் பொருளை வாங்கக்கூடாது.

6. எப்பொழுதும் ஸ்வராஜ்யத்துக்குப் பாடுபடவேண்டும்.

இத்துடன் இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை நிறைவு செய்துகொண்டு, அடுதடுத்து அவர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை மீள்பதிவு செய்ய விழைகிறேன். மாமனிதர், மகான் ஜி.சுப்பிரமணிய ஐயரைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தச் செய்தி எல்லா இளைஞர்களுக்கும் எட்ட வேண்டும்; அதுவே நம் பிரார்த்தனை.



No comments: