மத்திய அரசாங்கப் பணிகளுக்கும், மற்ற
ஆட்சிப் பணி போன்றவற்றுக்கும் தேர்வாக வேண்டுமானால் இந்தி மொழி அவசியம் என்கிற பயமும்
மெல்ல மெல்ல ஆங்கிலம் ஓரங்கட்டப்பட்டு அதன் இடத்தை இந்தி மொழி பயிற்று மொழியாக ஆகக்கூடும்
என்கிற அச்சமும், மாணவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி அவர்களை இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ளும்படி செய்தன.
1964 மார்ச் மாதம் 7ஆம் தேதி அப்போதைய
சென்னை மாகாண முதன் மந்திரி எம்.பக்தவத்சலம் அவர்கள் சென்னை சட்ட மன்றத்தில் மும்மொழித்
திட்டத்தைச் சிபாரிசு செய்தார். மும்மொழித் திட்டமென்றால், ஆங்கிலம், இந்தி, மாநில
மொழி (தமிழ் போன்றவை) ஆகிய மூன்று மொழிகளையும் பயன்படுத்துதல். இந்த மும்மொழித்
திட்டமும் மாணவ சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறாமல் போனதும் இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்த காரணிகளாக அமைந்தன.
நாட்டைக் குலுக்கிய 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
நாட்டைக் குலுக்கிய 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
1965ஆம் ஆண்டு குடியரசு தினம் நெருங்கி
வந்து கொண்டிருந்த நேரம். தமிழகத்தில் நடந்து வந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்தும்,
பல்வேறு பகுதிகளுக்கும் பரவிக்கொண்டும் இருந்தது. தமிழ்நாடு மாணவர் இந்தி எதிர்ப்புக்
கவுன்சில் என்ற அமைப்பு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின்கீழ் தமிழ்நாடு
மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த மாணவர்
அமைப்பில் பி.சீனிவாசன், கே.காளிமுத்து, ஜீவா கலைமணி, நா.குமரேசன், செயப்பிரகாசம்,
ரவிச்சந்திரன், திருப்பூர் எஸ்.துரைசாமி, சேடப்பட்டி முத்தையா, துரை முருகன், கே.ராஜா
முகமது, நாவளவன், எம்.நடராசன், எல்.கணேசன் ஆகியோர் இருந்தனர்.
மாநிலம் முழுவதிலும் இந்தித் திணிப்பை
எதிர்த்து மாநாடுகள் கூட்டப்பட்டன. 1965 ஜனவரி 17இல், சென்னை மாநில இந்தி எதிர்ப்பு
மாநாடு திருச்சியில் நடைபெற்றது. அதில் சென்னை, மகாராஷ்டிரா, கேரளா, மைசூர் ஆகிய பகுதிகளிலிருந்து
சுமார் 700 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் அரசியல் அமைப்புச் சட்டத்தின்
ஷரத்து 17ஐ நீக்க வேண்டுமென்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் எரியும்
நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல ஒரு நிகழ்ச்சி டெல்லியில் மத்திய அரசின் உள்துறை
அமைச்சர் குல்சாரிலால் நந்தாவும், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் இந்திரா காந்தியும்
ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டனர். அதன்படி அந்த ஆண்டு அதாவது 1965 ஜனவரி 26 முதல்
ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி மொழியே பயன்படுத்த வேண்டுமென்பதுதான் அந்த அறிக்கை.
1965 ஜனவரி 16இல் தி.மு.க.தலைவர் சி.என்.அண்ணாதுரை
அவர்கள் அந்த ஆண்டு குடியரசு தினம் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.
முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதத்தில், குடியரசு
நாளின் புனிதத்தைக் கெடுக்கும் விதத்தில் எடுக்கப்படும் எந்த முடிவையும் அரசாங்கம்
சகித்துக் கொள்ள முடியாது, மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டு போராடினால் மிகக் கடுமையான
விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார். போராட்டக்காரர்கள் குடியரசு தினத்துக்கு ஒரு
நாள் முன்னதாக அதாவது 25-1-1965இல் போராட்டத்தைத் தொடங்கி விட்டனர். அந்த தினத்தில்
சி.என்.அண்ணாதுரை 3000 தி.மு.க. தொண்டர்களுடன் கைதானார்.
அடுத்த நாள் சென்னை நகர கல்லூரிகளிலிருந்து
சுமார் ஐம்பதாயிரம் மாணவர்கள் ஊர்வலமாக நேப்பியர் பூங்காவிலிருந்து (தி.மு.க. உதயமானதும்
இந்த பூங்காவில்தான் என்பதையும் நினைவில் கொள்வோம்) செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில்
இருந்த மாநில தலைமைச் செயலகம் நோக்கிச் சென்று முதலமைச்சரைச் சந்தித்து மனு கொடுக்க
முயன்று முடியாமல் போயிற்று. மதுரையில் 25-1-1965 அன்று காங்கிரஸ் தொண்டர்களுக்கும்
மாணவர்களுக்குமிடையே கைகலப்பு கலவரம் நடந்தது. இதன் விளைவாக நகரம் போர்க்களமாக மாறிப்போனது.
மதுரையில் பற்றிய தீ மாநிலத்தின் எல்லா பகுதிகளுக்கும் மளமள வென்று பரவியது. கலவரத்தை
அடக்க காவல்துறை அடக்குமுறைகளைக் கையாண்டது. ஊர்வலம், கலவரம், தீ வைப்பு, ரயில் நிலையம்,
மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் புகுந்து தீ வைத்தல், பெயர் பலகைகளை
உடைத்தல் போன்றவை நடந்தேறின. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன, ரயில் தண்டவாளங்கள்
பெயர்க்கப்பட்டன. எம்.பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு கலவரங்களை அடக்க துணை
ராணுவப் படையை அழைத்தது. போலீசாரின் அடக்கு முறைக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கூட்டம்,
இரு போலீஸ்காரர்களின் உயிரைப் பறித்தது. சில போராட்டக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு
மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன்னைத் தானே எரித்துக் கொண்டனர். சிலர் விஷமருந்தி உயிரை
விட்டனர்.
இரண்டு வாரங்கள் நடந்த கலவரங்களில்
70 பேர் வரை உயிரிழந்தனர். இது அரசாங்கத்தின் கணக்கு; இன்னும் சிலர் இறந்தவர்கள் தொகை
500ஐத் தாண்டும் என்றனர். ஏராளமான மாணவர்கள் கைதாயினர். சொத்துக்களுக்கான இழப்பு சுமார்
ஒரு கோடி இருக்கலாம். ஜனவரி 28 முதல் சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம்
ஆகியவற்றுக்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகள், இதர கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் இவை அனைத்துக்கும்
விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டு
விட்டது. பெருந்தலைவர் கே.காமராஜ் தலைமையில் பலர் இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது
என்றனர். ஆனால் மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. முதல்வர் பக்தவத்சலம்
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றிய விதத்தை உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா
பாராட்டினார். பிப்ரவரி முதல் வாரத்திலும் கலவரங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தன.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் போராட்டம்
மாணவர்கள் கையிலிருந்து நழுவிப் போய்விட்டது. அறிஞர் அண்ணாவின் வேண்டுகோளையும் புறக்கணித்து
போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. இரு தரப்பாருக்கும் இதையே ஒரு உடன்பாடு எட்ட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1965 பிப்ரவரி 11இல் மத்திய அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியமும்,
ஓ.வி.அழகேசனும் மத்திய அரசின் மொழிக் கொள்கையை எதிர்த்துத் தங்கள் அமைச்சர் பதவிகளை
ராஜிநாமா செய்தனர். இவர்களுடைய ராஜிநாமாக்களை ஏற்றுக்கொள்ள பிரதமர் செய்த சிபாரிசை
அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டார். பிரதமர் லால் பகதூர்
சாஸ்திரி அன்று இரவே அகில இந்திய வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு ஒரு உரையாற்றினார்.
அவர் தன் உரையில் நடைபெறும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்தார்; அதோடு முன்பு
ஜவஹர்லால் நேரு இந்தி பேசாத மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார்.
குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதி ஆங்கிலமே மத்திய அரசுக்கும்,
மாநில அரசுக்கும் இைைடயேயான கடிதத் தொடர்புகளுக்கும், மத்திய அரசு பதவிகளுக்கான தேர்வுகளுக்கும்
பயன்படுத்தப்படும் என்று சொன்னார்.
பிரதமரின் வாக்குறுதிகளை அடுத்து அமைதி மீண்டும்
திரும்பியது. மறுநாள் பிப்ரவரி 12இல் மாணவர்களின் போராட்டக் குழு போராட்டத்தை ஒத்தி
வைத்தது. பிப்ரவரி 16இல் சி.சுப்பிரமணியமும், ஓ.வி.அழகேசனும் தங்கள் ராஜிநாமா கடிதங்களை
வாபஸ் பெற்றனர். இருந்தபோதும் பிப்ரவரி முழுவதும் மார்ச் தொடக்கத்திலும் ஆங்காங்கே
சிற்சில இடங்களில் வன்முறை நடந்து கொண்டுதான் இருந்தது. மார்ச் 7இல் நிர்வாகம் மாணவர்கள்
மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதையடுத்து
மார்ச் 14இல் மாணவர்கள் போராட்டக் குழு தங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டதாக
அறிவித்தது.
பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் இந்த நடவடிக்கைகள்
வட இந்திய இந்தி ஆதரவாளர்கள் மத்தியில் ஆத்திரத்தை உண்டு பண்ணியது. அவர்கள் டெல்லி
நகரம் முழுவதும் கூட்டமாகச் சென்று கண்களில் பட்ட ஆங்கில பெயர் பலகைகளில் ஆங்கிலத்தை
தார் கொண்டு அழித்தனர். இந்தப் போராட்டம் சிறுகச் சிறுக காங்கிரஸ் எதிர்ப்புப் போராட்டமாக
உருவெடுத்தது. 1967இல் பொதுத் தேர்தல் நடந்தது. சென்னை சட்ட மன்றத்துக்கு விருதுநகர்
தொகுதியில் பெருந்தலைவர் காமராஜ் காங்கிரஸ் வேட்பாளர். அவரை எதிர்த்து பி.சீனிவாசன்
எனும் மாணவர் தலைவர் தி.மு.க.சார்பில் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் பி.சீனிவாசனை
ஆதரித்து மாநிலம் முழுவதிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் விருதுநகரில் குவிந்தனர். விளைவு,
தோல்வி கண்டறியாத காமராஜ் அவர்கள் இளம் மாணவர் தலைவர் சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.
சென்னை சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக தி.மு.க. அமோக வெற்றி பெற்றது; காங்கிரஸ்
தோல்வியைத் தழுவியது.
தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப்
போராட்டம் அண்டை மாநிலங்களான
கேரளம், ஆந்திரம், மைசூர் ஆகிய இடங்களிலும் எதிரொலித்தது.
கர்நாடகத்திலுள்ள பெங்களூர் நகரத்தில் தமிழ்நாட்டில் நடந்த போராட்டம் பாதிப்பை ஏற்படுத்தியது.
மைசூரில் 2000 பேர் இந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அது வன்முறையாக
மாறவே காவல்துறை தடியடி நடத்த நேர்ந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் ரயில்கள் தாக்கப்பட்டன,
கல்லூரிகள் மூடப்பட்டன.
1967ஆம் ஆண்டில் ஆட்சிமொழிச் சட்ட திருத்தம். 1965இல் இந்தி
பேசாத மக்களுக்குப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கொடுத்த வாக்குறுதிக்கு இந்தி பிரதேசங்களில்
எதிர்ப்பு கிளம்பியதை முன்பே பார்த்தோமல்லவா? எட்டு வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர், மொழிக் கொள்கையில் மாற்றம் செய்வதை கடுமையாக எதிர்த்தனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து மொழிச்
சட்டத்தில் மாற்றம் செய்வதை எதிர்த்து கருத்துத் தெரிவித்தனர். ஆனால் சென்னை மாநில
காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த விஷயத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லையாயினும் பிரதமரை
சந்தித்துப் பேசினர்.
அனேகமாக காங்கிரஸ் உட்பட எல்லா கட்சி
எம்.பி.க்களும் இந்த விஷயத்தை விரிவாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயங்கினர். காரணம்
இதனால் பல்வேறு மொழி பேசுவோரிடையே விரோதம் வந்துவிடும் என்கிற அச்சம். இந்த சூழ்நிலையில்
பிப்ரவரி 22இல் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜ்
அவர்கள் ஆட்சிமொழிச் சட்டத்தைத் திருத்தி நேரு, சாஸ்திரி உறுதிமொழிகளை சட்டமாக்க
வேண்டுமென்று வற்புறுத்தினார். அப்போதே அவர் கருத்துக்கு மொரார்ஜி தேசாய், பாபு ஜகஜீவன்ராம்,
ராம்சுபாக் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி காங்கிரஸ் மொழிக் கொள்கையில்
பிளவுபட்டுக் கிடந்ததால் ஒரு சமரசத் திட்டம் உருவானது. அதன்படி இந்தி மயமாக்குவதைச்
சற்று நிதானமாக செய்துகொள்ளலாம் என்பதாகவும், அதற்கிடையே இந்தி பேசும் மாநிலம், இந்தி
பேசாத மாநிலம் அனைத்திலும் மும்மொழித் திட்டத்தை அமல்படுத்தவும், பொதுத் தேர்வுகள்
அனைத்தும் அந்தந்த பிரதேச மொழிகளில் நடத்தலாம் என்றும் முடிவு செய்தது. பின்னர் நடந்த
முதலமைச்சர்கள் மாநாட்டிலும் இந்தத் திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டது. சமரசத் திட்டமாக
உருவான மும்மொழித் திட்டம், தெற்கிலாகட்டும், வட மாநிலங்களிலாகட்டும் எங்கும் பின்பற்றப்படவில்லை.
பொதுத் தேர்வுகளில் மொழிமாற்றம் சாத்தியமில்லை என்று அதிகார வர்க்கம் கருத்து கொண்டிருந்தது.
இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியில் இந்தி எதிர்ப்பாளர்களுக்கு ஒரே சமாதானம், ஆட்சிமொழிச்
சட்டம் திருத்தம் செய்யப்படும் எனும் நம்பிக்கை ஒன்றுதான். ஆனால் அந்த திருத்தம் கொண்டுவருவதற்கு
பலத்த எதிர்ப்பு இருந்து கொண்டுதான் இருந்தது.
1965 ஏப்ரலில் மத்திய அமைச்சரவையின்
குழுக் கூட்டத்தில் குல்சாரிலால் நந்தா, ஏ.கே.சென், சத்யநாராயண் சின்ஹா, மகாவீர் தியாகி,
எம்.சி.சாக்ளா, எஸ்.கே.பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்தனர். ஆனால் இதில்
தமிழ்நாட்டுக் காரர்கள் எவரும் கலந்து கொள்ளவுமில்லை, விவாதிக்கவுமில்லை. ஆகையால்
இதில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.
பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 1965 ஜனவரியில்
தாஷ்கண்ட்டில் காலமானார். அவரைத் தொடர்ந்து நேரு பாரம்பரியத்தில் இந்திரா காந்தி பிரதமரானார்.
1967 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து போயிற்று.
சென்னையில் காங்கிரஸ் தோற்று தி.மு.க. ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் 1967 நவம்பரில்
ஆட்சிமொழி திருத்தச் சட்டம் அறிமுகமானது டிசம்பர் 16இல் அது 205 வாக்குகள் சாதகமாகவும்
எதிராக 41ம் பெற்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி 8-1-1968இல் ஒப்புதல் அளித்தார்.
இருமொழிக் கொள்கை உறுதிசெய்யப்பட்டது.
1968இல் மீண்டும் கிளர்ச்சி.
1968இல் மீண்டும் கிளர்ச்சி.
எதிரணியில் இருந்து போராடியபோது இருந்த
ஒற்றுமை தி.மு.க. ஆட்சி பீடம் ஏறியபின் இந்தி எதிர்ப்பு மாணவர் அணியில் பல பிளவுகள்
தோன்றின. ஒரு குழுவினர் அறிஞர் அண்ணா இவ்விஷயத்தை கவனித்துக் கொள்வார் என்றது. ஆனால்
மற்றொரு அணியோ போராட்டத்தைத் துவக்கியது. இப்போது அவர்கள் கோரிக்கைகளாவன: மும்மொழி
கொள்கை கைவிடப்பட வேண்டும்; இந்தி பயிற்சிகள் நிறுத்தப்பட வேண்டும்; என்.சி.சி. போன்ற
அமைப்புகளில் இந்தியில் ஆணையிடுவது நிறுத்தப்பட வேண்டும்; தமிழ் நாட்டில் இந்தி படங்கள்
திரையிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும்; இந்தி பாடல்கள் ஒளிபரப்பக்கூடாது, தட்சின பாரத
இந்தி பிரசார சபா மூடப்பட வேண்டும் ஆகியவை கோரிக்கைகள். போராட்டம் வன்முறையில் முடிந்தது.
முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் தலையீட்டால் கீழ்கண்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. அவை,
மும்மொழித் திட்டம் கைவிடப்பட்டது. இந்தி படிப்பது கல்வித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.
ஆங்கிலமும் தமிழும் மட்டும்தான் மொழிப்பாடத்தில் கற்பிக்கப்படும். என்.சி.சி.யின்
இந்தியில் ஆணை நிறுத்தப்படும். எல்லா கல்லூரிகளிலும் தமிழிலும் பாடங்கள் கற்பிக்கப்படும்;
அடுத்த ஐந்தாண்டுகளில் அரசு நிர்வாகம் அனைத்தும் தமிழில் நடக்கும். மத்திய அரசு இந்திக்குச்
சிறப்பிடம் கொடுப்பதுபோல் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கவேண்டுமென்று கேட்டுக்
கொள்ளப்படும். எல்லா மொழி வளர்ச்சிக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் ஆகியவை.
போராட்டக்காரர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டனர்.
1986இல் ராஜீவ் காந்தி காலத்தில் தேசிய
கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அதன்படி நவோதயா பள்ளிகள் தொடங்க திட்டமிடப்பட்டன.
அதில் இந்தி கற்பிக்கப்படும் என்பதால் தி.மு.க. நவோதயா பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
அப்போது தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது. தி.மு.க.
எதிர்கட்சி. தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அதில் மத்தியில் ஆங்கிலம்
மட்டுமே ஆட்சி நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. 1986 நவம்பர்
17இல் தி.மு.க. நடத்திய கிளர்ச்சியில் 20,000 தி.மு.க. தொண்டர்களுடன் மு.கருணாநிதியும்
கைது செய்யப்பட்டார். அப்போது சிலர் தீக்குளித்து மாண்டார்கள். கருணாநிதிக்கு பத்து
வாரம் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. கே.அன்பழகன் உள்ளிட்ட பத்து தி.மு.க. சட்டமன்ற
உறுப்பினர்களை சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் சபையிலிருந்து நீக்கம் செய்தார்.
டெல்லியில் ராஜீவ் காந்தி, தமிழ்நாட்டு
எம்.பி.க்களிடம் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று மீண்டும் உறுதியளித்தார். தமிழ்நாட்டில்
நவோதயா பள்ளிகள் வராது என்றும் அறிவித்தார். ஆக, இன்றைய நிலையில் இந்தியா முழுவதிலுமுள்ள
மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் நவோதயா பள்ளிகள் இல்லை.
2014இல் மீண்டுமொரு சலசலப்பு.
மத்திய அரசு உள்துறை அமைச்சகம் 2014இல் ஒரு ஆணை பிறப்பித்தது. அதன்படி எல்லா துறைகளிலுமுள்ள அரசு ஊழியர்கள், பொதுத்துறை, வங்கிகள் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் பணியாற்றுவோர் இந்தி அல்லது இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைப் பயன்படுத்தலாமென்றாலும் கூடியவரை இந்தியை உபயோகிக்க வேண்டும் என்பது அந்த ஆணை. இந்த ஆணைக்கு தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த முடிவு மிகவும் ஆபத்தானது ஆகவே இந்த ஆணையை பலம் கொண்ட மட்டும் எதிர்க்க முடிவு செய்தார் முதல்வர் ஜே.ஜெயலலிதா. அவர் பிரதமருக்கும் ஒரு கடிதம் எழுதினார். மொழிக் கொள்கையில் பிரச்சனை கிளப்ப வேண்டாம் என்று எச்சரித்தார். தமிழ்நாடு காங்கிரசும் பிரதமருக்கு மொழிப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டுமென கேட்டுக் கொண்டபின் மத்திய அரசு இந்தி திணிப்பை நிறுத்திக் கொண்டது.
2014இல் மீண்டுமொரு சலசலப்பு.
மத்திய அரசு உள்துறை அமைச்சகம் 2014இல் ஒரு ஆணை பிறப்பித்தது. அதன்படி எல்லா துறைகளிலுமுள்ள அரசு ஊழியர்கள், பொதுத்துறை, வங்கிகள் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் பணியாற்றுவோர் இந்தி அல்லது இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளைப் பயன்படுத்தலாமென்றாலும் கூடியவரை இந்தியை உபயோகிக்க வேண்டும் என்பது அந்த ஆணை. இந்த ஆணைக்கு தமிழ் நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த முடிவு மிகவும் ஆபத்தானது ஆகவே இந்த ஆணையை பலம் கொண்ட மட்டும் எதிர்க்க முடிவு செய்தார் முதல்வர் ஜே.ஜெயலலிதா. அவர் பிரதமருக்கும் ஒரு கடிதம் எழுதினார். மொழிக் கொள்கையில் பிரச்சனை கிளப்ப வேண்டாம் என்று எச்சரித்தார். தமிழ்நாடு காங்கிரசும் பிரதமருக்கு மொழிப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டுமென கேட்டுக் கொண்டபின் மத்திய அரசு இந்தி திணிப்பை நிறுத்திக் கொண்டது.
இப்படியாக, இந்திய சுதந்திரத்துக்குப்
பிறகு இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டு வரும் முயற்சிக்கு, தொடக்கம் முதலே தமிழ்நாடு
முட்டுக்கட்டையாக இருந்து ஆங்கிலத்தையும் இந்தியோடு நிரந்தரமாக இருக்க வழிவகை செய்தது.
அந்த வகையில் திராவிட கட்சிகள் தொடக்க காலம் முதலே முன்னணியில் இருந்து வந்திருக்கிறது.
போராட்ட பாதையில் சிலவிடங்களில் வன்முறை தலைவிரித்து ஆடினாலும், போராட்டம் இவர்கள்
கையிலிருந்து நழுவிப் போன நிலையிலும், தொடர்ந்து விழிப்புடன் இருந்து இன்றும் மத்தியில்
ஆங்கிலமும் தொடர்ந்து இருந்து வருவதால், இந்தி பேசாத மக்களின் உணர்வுகள், உரிமைகள்
பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நிறைவாக இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, உணர்ச்சிவசப்பட்டுத் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களைத்
தியாகம் செய்தவர்களின் நினைவைப் போற்றி இந்த தலைப்பிலான கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
வணக்கம்.
No comments:
Post a Comment