பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, July 24, 2015

ஆசாரத்திருத்த வியாசங்கள். பகுதி 1.

                              
                                       இரண்டு பெரியோரின் அபிப்பிராயங்கள்.

மிஸ்டர் ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் செய்த பிரசங்கம். 1910ஆம் வருஷம் ஏப்பிரல் மாசம் சென்னை சர்வகலா சங்கத்தார் வித்யா பட்டங்கள் கொடுக்கக்கூடின போது, மிஸ்டர் ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் செய்த சிறந்த பிரசங்கம் நீண்ட பிரசங்கமாயிருந்தாலும், அதில் அவர் ஒரே விஷயத்தைப் பற்றித்தான் விசேஷமாய்ப் பேசினார். நமது காலேஜ்களில் பிள்ளைகள் பெறும் கல்வியில், ஆஸ்திக்ய பக்தியுண்டாகும்படி அவர்கள் கற்பிக்கப் படுவதில்லையென்று தெரிந்தவர் பலர் குறை சொல்லி வருகிறார்கள். சமீபத்தில் சென்னையில் கிறிஸ்தவ மதாசாரியரான லார்டு பிஷப் அப்படியே குறை சொன்னார். அப்படி அவரும் மற்றவர்களும் சொல்லுவதைத் தாம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், ஆங்கிலப் படிப்பினால் ஆஸ்திக்ய புத்தியும், மதாபிமானமும் கிளர்ச்சி பெற்று வருகின்றனவேயன்றிக் குறைந்து போகவில்லை என்றும் மிஸ்டர் ஜஸ்டிஸ் ரஹீம் வாதித்துப் பேசினார்.

இதற்குத் திருஷ்டாந்தங்களாக, மகமதியருள் "ஆலிகர் நிகழ்ச்சி" ஒன்று புதிதாய்த் தோன்றியிருப்பதையும், ஹிந்துக்களில் "பிரம்ம சமாஜம்" போன்ற நவீன மதக் கொள்கைகள் தோன்றியிருப்பதையும் சொன்னார். பொதுவாய், மகமதியர் ஹிந்துக்கள் இவ்விரு வகுப்பாரும் பிரிட்டிஷ் ராஜாங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னால், தங்கள் தங்கள் மதாசாரங்களில் எவ்வளவு பற்றும் உற்சாகமும் கொண்டிருந்தார்களோ, அவைகளை விட இப்போது அதிகமாகவே கொண்டிருக்கிறார்கள். மதப் பயிற்சியும், ஒழுக்கப் பயிற்சியும் வித்தியா சாலைகளில் மாத்திரம் பிள்ளைகள் பெறவேண்டிய தில்லை. அவரவர் குடும்பங்களிலும் பெறுகிறார்கள். மகமதியக் குடும்பங்களில் பிள்ளை "கடவுள் ஒருவரே, அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை" என்ற வேதவாக்கியத்தை எப்போதும் காதிற் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். எந்தக் காரியம் செய்தாலும் கடவுளை நம்பியே செய்கிறார்கள். சரீர கிலேசத்தின் பொருட்டு வருஷத்துக்கு ஒரு மாசம் விரதம் கொண்டாடப் படுகின்றது. தான தர்மங்களும் செய்யப்படுகின்றன. இவ்வாறே, ஹிந்து சிறுவர்களும் அவர்கள் குடும்பங்களிற் பயிற்சி பெறுகிறார்கள்.

இவ்வாறு பயிற்சி பெறும் சிறுவர்கள் காலேஜ்களில் மேல்நாட்டு லெளகிக சாஸ்திரங்களைக் கற்கும்போது, தாங்கள் வீட்டிற் கற்பதையும் காலேஜ்களில் கற்பதையும் சமரஸப்படுத்திக் கொள்கிறார்கள். எப்போது கல்வியால் புத்தி பயிற்சி பெறுகின்றதோ, அப்போது மதாபிமானமும் நவீன வேகத்தை அடைகின்றது. அவ்வாறே இந்தியாவில் ஆதிமுதல் மனக் கிளர்ச்சியும் மதக் கிளர்ச்சியும் ஒன்றாகவே தோன்றி வந்திருக்கின்றன. ஒன்று மறைந்த காலங்களில் மற்றொன்றும் மறைந்து போயிருக்கின்றது. ஒன்று தோன்றின காலங்களில் மற்றொன்றும் தோன்றி வந்திருக்கின்றது. ஆகையால் தற்காலம் மேற்றிசை நாகரிகத்தை நாம் அங்கீகரித்து, நாம் எல்லா வழிகளிலும் புதுக் கிளர்ச்சியைக் காட்டி வரும்போது, பூர்வீக சனாதன தர்மங்களில் நம்பிக்கையும் அன்பும் குறையாமல் அதிகப்பட்டு வருகின்றன. ஆகையால், லார்டு பிஷப்பும் மற்றவர்களும் சொல்லுவது தமக்குச் சம்மதமில்லை. சென்னை சர்வகலா சங்கத்தார் நம் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் கல்வியானது நாஸ்திக்கியத்தை உண்டு பண்ணுகிறதென்று தாம் நம்பினவராயிருந்தால், அந்தச் சமயத்தில் பிள்ளைகளைப் பார்த்துப் பிரசங்கம் செய்ய ஒப்புக் கொண்டிருக்க மாட்டாரென்று ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் சொன்னார். 

இப்படிச் சொன்னதெல்லாம் பெரும்பான்மையும் சரி. தற்காலம் ஹிந்து ஜனங்களுக்குள் மதாபிமானம் புதிதாயுண்டாகி வருகிறதென்பது உண்மை. உயர்ந்த ஆங்கிலக் கல்வி கற்ற சிலர், நமது பூர்வீக மதாசாரங்களைச் சோதித்து அவைகளின் உட்கருத்துக்களை அறிந்து, அவைகளில் நம்பிக்கை பாராட்டி வருகிறார்கள். சுமார் 25 வருஷங்களுக்கு முன்னால், ஆங்கிலம் கற்ற ஹிந்துக்கள் சிறிதும் பாரமார்த்திக புத்தி இல்லாமல் அர்த்த பராளாய்ப் பொருள் தேடுவதிலேயே நோக்கங் கொண்டவர்களா யிருந்தார்கள். இப்போது இந்த இயல்பு சிறிது மாறி வருகிறதென்பதிற் சந்தேகமில்லை. நம் முன்னோர்களின் பெருமைகளை அறியாமல் அவர்கள் இயற்றி வைத்துப் போன நூல்களையும் அவர்கள் விதித்திருந்த தருமங்களையும் அசட்டை செய்து, மேல்நாட்டு நாகரிகமே சரியென்று நம்பியிருந்தது போய் சிலர் அந்த நூல்களையும், தர்மங்களையும் அறிந்து முன்னோருடைய பெருமைகளை மதித்து வருகிறார்கள். ஆனால் இதற்குக் காரணம், ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் சொன்னது போல், காலேஜ்களிற் கற்பிக்கும் கல்வியல்ல வென்பது நமது அபிப்பிராயம். இந்தக் கல்வியினால் சிறுவர் மனதிலுண்டாகும் உணர்ச்சியானது நாஸ்திக்கிய புத்தி கொண்டதாயும், பெரியோரிடத்தில் மதிப்பில்லாததாயும், பிரத்தியட்சமே பிரமாணம், பரோட்சம் கற்பனை என்பதாயும் இருக்கின்றது. இந்த உணர்ச்சியினாலேயே நம் சிறுவர்கள் முன்னோர்களினுடைய வழிகளை நீக்கித் தாறுமாறான புது வழிகளிற் பிரவேசிக்கிறார்கள். பெரும்பான்மையோரும் முதுமைப் பருவம் வந்தபோதுங் கூட இவ்வழிகளிலேயே நிற்கிறார்கள். சிறுபான்மையோர் நம் தேசத்தில் இப்போது புதிதாய்த் தோன்றி வரும் தேசாபிமானத்தால் தூண்டப்பட்டு முன்னோரது சரித்திரத்தை அறிய விரும்பி, நமது மதத்திலும், ஆசாரங்களிலும் மதிப்புக்குரிய பாகங்கள் இருக்கின்றனவென்று தெரிந்து கொள்ளுகிறார்கள். இந்தப் புது தேசாபிமானத்துக்கு, ஆங்கிலக் கல்வி ஒருவாறு காரணமென்று சொல்ல வேண்டுமாயினும், அது முக்கிய காரணமல்ல. இந்தப் படிப்பினால், நமக்கு உண்டாகிவரும் அன்னிய தேசத்தாருடைய சரித்திர ஞானமும் அனுபோகமுமே முக்கிய காரணம். உலகத்தாரைப் போல் நாமும் உயர்ந்த தன்மையை அடைய வேண்டுமென்ற விருப்பமே இந்தப் புதிய தேசாபிமானத்துக்கு முக்கிய காரணம். ஆங்கிலப் படிப்பினால் இந்தத் தேசாபிமானம் உண்டாயிருக்கிற தென்று சொல்லக் கூடுமாயினும், அந்தப் படிப்பு மதப் பயிற்சியும், ஒழுக்கப் பயிற்சியும் கொண்டு ஆஸ்திக்ய பக்தி உண்டாக்கக் கூடியதா யிருக்குமாயின், இந்தத் தேசாபிமானம் குறையுமென்று யார் சொல்லுவார்கள். அப்போது சிறுவர்கள் அடக்கமும், பெரியோரிடத்தில் மதிப்பும், பெரியோர் காட்டின வழிகளில் நோக்கமும் கொண்டவர்களாவார்கள்.

மகமதியச் சிறுவர்கள் அவர்கள் குடும்பங்களிற் பெறும் மதப் பயிற்சியைப் பற்றி மிஸ்டர் ஜஸ்டிஸ் அப்துர் ரஹீம் சொன்னார். ஹிந்துக் குடும்பங்களிலும் அவ்விதப் பயிற்சிக்கு இடம் அமைக்கப் பட்டிருந்தாலும் அது இப்போது இல்லாமலே போய்விட்டது. ஹிந்துச் சிறுவர்கள் தங்கள் வீடுகளில் இப்பயிற்சியை எவ்விதமாயும் பெறுவதில்லை. பெரியோரும் செய்து காட்டுவதில்லை. செய்து காட்டும் பெரியோரைச் சிறுவர் மதிப்பதுமில்லை. இந்த விஷயத்தில் மகமதியக் குடும்பங்களுக்கும் ஹிந்துக் குடும்பங்களுக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதுபோல் காணுகின்றது. சிறுவர்கள் பிற்காலத்தில் மத ஆராய்ச்சி முதலியவைகள் செய்வதற்குக் காலேஜ் படிப்பினால் வசதிகளும் உண்டாவதில்லை. தமிழிலாவது சமஸ்கிருதத்திலாவது ஞானமில்லாமல் வளரும் சிறுவர்கள் இந்த ஆராய்ச்சிகளை எப்படிச் செய்வார்கள்? இப்போது நடந்து வரும் வித்தியாப்பியாச முறையால் ஹிந்து நாகரிகத்தின் பெருமைகள் சில காலத்திற்குள் மறைந்து போகுமென்று சிலர் பயப்படுவது முற்றிலும் காரணமற்றதல்ல.



No comments: