பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, March 17, 2015

பாரதியாரின் ஸ்ரீமத் பகவத் கீதை உரை.

     காகவி பாரதியார் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார். எளிமையாகவும் நல்ல தமிழிலும் அமைந்துள்ள அவரது உரையைப் பலரும் சிறந்த உரை என்று சொல்லியிருக்கிறார்கள். அவருடைய உரையை இங்கு தொடர்ந்து வெளியிடவிருக்கிறேன். முன்னுரையே பல பகுதிகளைக் கொண்டது; தொடர்ந்து 18 அத்தியாயங்களின் சுருக்கத்தையும் அத்துடன் ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் நல்ல தமிழில் பொருளையும் கொடுத்திருக்கிறார் பாரதியார். இது நிச்சயம் கீதையைப் படிக்க விரும்பும் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும். இப்போது முன்னுரையின் முதல் பகுதி வெளியாகிறது. தொடர்ந்து மற்ற பகுதிகளும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அவருடைய உரையும் வெளியாகும். படிப்பவர்கள் தயைகூர்ந்து பாரதி உரையின் சிறப்பு குறித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி. இனி படியுங்கள்.....

மகாகவி  ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாரின் ஸ்ரீமத் பகவத் கீதை                                                   உரை.          
               
                        ஸ்ரீமத் பகவத் கீதை
                                                      பாரதியாரின் முன்னுரை

                                                                            
1.

புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்து விடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையாவது. (கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்)

இஃதே, கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந்  தெளிவாக மாசுமறுவின்றி வைத்திருத்தல், தெளிந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே புத்தி என்று சொல்லப்படுகிறது. அறிவைத் தெளிவாக நிறத்திக் கொள்ளு தலாவது யாதென்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்குக்காதாரமான பாவ நினைப்புகளு மின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.

"நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்த மாட்டீர்கள்" என்று இயேசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான்.

'குழந்தைகளைப் போலாய்விடுங்கள்' என்றால், உங்களுடைய லௌகிக அனுபவங்களை யெல்லாம் மறந்து விடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைக் போலவே தாய்ப்பால் குடிக்கவும், மலழைச் சொற்கள் பேசவுந் தொடங்குங்கள்' என்பது கொள்கையன்று. 'ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போல நிஷ்களங்கமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்' என்பது கருத்து.

ஹிருதயம் தெளிந்தாலன்றி புத்தி தெளியாது. ஹிருதயத்தில் பரிபூரணமான சுத்த நிலை யேற்படும் வரை, புத்தி இடையிடேயே தெளிந்தாலும், மீண்டும் மீண்டும் குழம்பிப் போய்விடும். 

ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிறார் :- 'அந்த அறிவுத் தெளிவிலே நிலைபெற்று நில், அர்ஜுனா' என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும் அது நற்செய்கையாகும். நீ ஒன்றும் செய்யாதே மனம் போனபடியிருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச் செய்கை என்ற பேதத்தை மறந்து உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும், உனக்குப் புத்தி தெளிந்து
விட்டதன்றோ? புத்தி தெளிவுற்ற இடத்தே, உனக்குத் தீயன செய்தல் ஸாத்தியப் படாது. ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம்.

இனி, இங்ஙனம் உரை கொள்ளாதபடி, நற்செய்கை, தீச்செய்கை, அதாவது எல்லாவிதமான செய்கையையுந் துறந்து விட்டு, 'அர்ஜுனா, நீ எப்போதும், தூங்கிக்கொண்டேயிரு' என்று கடவுள் உபதேசம் பண்ணியதாகக் கருதுதல் வெறும் மடமையைத் தவிர வேறொன்றுமில்லை.

ஏனென்றால், கடவுளே மேலே மூன்றாம் அத்தியாத்தில் பின்வருமாறு சொல்லுகிறார் :- 'மேலும், எவனும் ஒரு க்ஷணமேனும் செய்கையின்றிருந்தல் இயலாது, எல்லா உயிர்களும், இயற்கையில் தோன்றும் குணங்களால் தமது வசமின்றியே தொழிலில் பூட்டப்படுகின்றன' என.

ஆதலால், மனிதன் தொழில் செய்துதான் தீரவேண்டும். எப்போதும் தூங்கக் கும்பகர்ணனாலே கூட இயலாது. அவனுக்கும் கூட ஆறு மாத காலம் விழிப்பு உண்டு. ஆனால், நீ தொழில் செய்யுமிடத்தே, அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு மனமுடைந்து, ஓயாமல் துன்பப்பட்டுக் கொண்டே தொழில் செய்யும் உலகத்தாரைப் போல தொழில் செய்யாதே. ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் : 'அர்ஜுனா, உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரமுண்டு, பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதுமில்லை' என.

ஆதலால், கடவுள் சொல்லுகிறார் :- 'கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி, அவனே யோகி' என்று.

அறிவுத் தெளிவைத் தவறவிடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும், அப்போது உன் மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும். உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று. மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். ஜபம் தொழில் இல்லையா? படிப்பு தொழில் இல்லையா? மனனம் தொழில் இல்லையா? சாஸ்திரங்களெல்லாம், கவிதை களெல்லாம், நாடகங்களெல்லாம், சட்டங்களெல்லாம், வேதங்களெல்லாம், புராணங்களெல்லாம், கதைககௌல்லாம், காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? இவையெல்லாம் உடம்பாற் செய்வதன்றி மனத்தாற் செய்யப் படுவன அன்றோ?

அறிவுத் தெளிவைக் கலங்க விடாதே.

அப்பால், யோகம் பண்ணு. எதன் பொருட்டெனில், யோகமே செய்கையில் திறமையாவது? என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார்.

தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.

யோகமாவது சமத்துவம். 'ஸமத்வம் யோக உச்யதே' அதாவது, பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும், சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி.

நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.

'யோகஸ்த: குரு கர்மாணி' என்று கடவுள் சொல்லுகிறார். 'யோகத்தில் நின்று தொழில்களைச் செய்' என.

யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கம் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. 

எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதைக் காண்கிறான்.


                                                       2.

வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது.  ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, 'இஃதெல்லாம் கடவுள்' என்று. இக்கருத்தை யொட்டியே கீதையிலும் பகவான், 'எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்' என்கிறார்.

நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.

'ஆனால் நான் எதற்காகத் தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும்படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?' என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கோட்கிறோம், 'முக்தியாவது யாது?'

எல்லாத் துயரங்களும், எல்லா அம்சங்களும், எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்யை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை' என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. 'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா
வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் - எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக் கொன்று சமானம்.) 'ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' என்று ஈசாவாஸ்யோபநிஷத் சொல்லுகிறது. அதாவது :- 'இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது' என்று பொருள்படும்.

இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில், 'இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்' என்று சொல்லுகிறார்.

எனவே எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில், எவனும் கவலைப்படுதலும், துயர்ப்படுதலும் அறியாமையன்றோ?

'எல்லாம் சிவன் செயல்' என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? 'இட்டமுடன்' என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ?'

நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே ''ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்'' - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்த்த மற்ற உலகத்தை யெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ
காரணமாக  நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?"

                                                             
3.

டவுள் சொல்லுகிறார் :- ''லோபமும் பயமும் சினமும் அழிந்து, என் மயமாய், என்னைச் சார்ந்தோராய், ஞானத் தவத்தால் தூய்மை பெற்றோர் பலர் எனது தன்மை எய்தியுள்ளார்'' (கீதை 4-ஆம் அத்தியாயம், 10-ம் சுலோகம்) இந்த சுலோகத்தில் ஒருவன் இகலோகத்திலேயே ஜீவன் முக்தி பெற்று ஈசுவரத் தன்மையடைதற்குரிய உபாயம் பகவானால் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ''ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. விருப்பத்தை விடு. என்னையே சரணமாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய்'' என்று கடவுள் சொல்லுகிறார்.

எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று சமர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர் போலே.
(கீதை, 5-ஆம் அத்தியாயம், 10ஆம் சுலோகம்)

சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு! பாவத்தை செய்யாமலிருக்கும் வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே! உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக் கின்றான் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகாச் செயல் படுவதென்றும் நன்கு தெளிவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரையிலை மீது நீர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல் உங்கள் மதியைப் பாவம்
கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும்.

                                                                
4.

''மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவதுமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.''
(கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்)

எனவே, அவன் செய்கைகளில் எவ்விதப் பொறாமையும் சஞ்சலமும் எய்த வேண்டா. தன் செயல்களுக்கு இடையூறாக நிற்குமென்ற எண்ணத்தால், அவன் பிற உயிர்களுடன் முரண் படுதலும் வேண்டா.

''கல்வியும் விநயமுமுடைய அந்தணனிடத்திலும், மாட்டினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், அதையுண்ணும் சண்டாளனிடத்திலும் அறிஞர் சமமான பார்வையுடையோர்''
(5-ஆம் அத்தியாயம், 18-ஆம் சுலோகம்) என்று பகவான் சொல்லுகிறார்.

எனவே, கண்ணபிரான் மனிதருக்குள் ஜாதி வேற்றுமையும், அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாதென்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராதிருத்தலே ஞானிகளுக்கு லக்ஷணமென்று சொல்லுகிறார்.

எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரிலும் விஷ்ணுதானே நிரம்பியிருக்கிறான்? 'ஸர்வமிதம் ப்ரஹ்ம, பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்', இப்படியிருக்க ஒரு ஜந்து மற்றொரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தல் அஞ்ஞானத்துக்கு லக்ஷணம். அவ்வித மான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைவுகளுடை யோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார். வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு. எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி. 

                                                                 
5.

பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமை யாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோக்ஷ மார்க்கத்துக்கு விரோதமென்று பல வாதிகள்
கருதலாயினர். அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத் 'தொழில் செய்' 'தொழில் செய்' என்று போதிக்கின்றார். இதனின்றும், அதனை வெறுமே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்குத் தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது.

பற்று நீக்கித் தொழில், பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி, பற்று நீக்கி - இது தான் முக்கியமான பாடம். தொழில்தான் நீ செய்து தீரவேண்டியதாயிற்றே? நீ விரும்பினாலும் விரும்பாவிடினும் இயற்கை உன்னை வற்புறுத்தித் தொழிலில் மூட்டுவதாயிற்றே? எனவே அதை மீட்டும் சொல்வது கீதையின் முக்கிய நோக்கமன்று. தொழிலின் வலைகளில் மாட்டிக் கொள்ளாதே. அவற்றால் இடர்ப்படாதே. அவற்றால் பந்தப் படாதே. தளைப்படாதே. இதுதான் முக்கியமான உபதேசம். எல்லாவிதமான பற்றுகளையுங் களைந்துவிட்டு, மனச் சோர்வுக்கும் கவலைக்கும் கலக்கத்துக்கும் பயத்துக்கும் இவையனைத்திலுங் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடாதிரு. 'ஸம்சயாத்மா விநச்யதி' - 'ஐயமுற்றோன் அழிவான்' என்று கண்ணபிரான் சொல்லுகின்றான்.

"ஆத்மாவுக்கு நாசத்தை விளைவிப்பதாகிய நரகத்தின் வாயில் மூன்று வகைப்படும். அதாவது காமம், குரோதம், லோபம். ஆதலால் இம்மூன்றையும் விட்டு விடுக." இவற்றுள் கவலையையும் பயத்தையும் அறவே விட்டுவிடவேண்டும். இந்த விஷயத்தை பகவத் கீதை சுமார் நூறு சுலோகங்களில் மீட்டும் மீட்டும் உபதேசிக்கிறது. அதற்கு உபாயம் கடவுளை நம்புதல், கடவுளை முற்றிலும் உண்மையாகத் தமது உள்ளத்தில் வெற்றியுற நிறுத்தினாலன்றி, உள்ளத்தைக் கவலையும் பயமும் அரித்துக்கொண்டுதான் இருக்கும். கோபமும் காமமும் அதனை வெதுப்பிக் கொண்டுதானிருக்கும். அதனால் மனிதன் நாசமடையத்தான் செய்வான்.

                                                             
6.

"பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம்;  நலியும் நரகமும் நைந்த நமனுக்கு யாதொன்றுமில்லை; கலியுங்கெடும், கண்டு கொண்மின்" என்று நம்மாழ்வார் திருவாய்மொழியிற் கூறிய நம்பிக்கையை உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்குப் பக்திதான் சாதனம். பக்தியாவது, "ஈசன் நம்மைக் கைவிட மாட்டான்" என்ற உறுதியான நம்பிக்கை.

"வையகத்துக் கில்லை மனமே, யுனக்கு நலஞ்
செய்யக் கருதியது செப்புவேன் - பொய்யில்லை,
எல்லா மளிக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லா லழியுந் துயர்" 

இவ்விஷயத்தைக் குறித்து ஸ்ரீ பகவான் பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறான் :-

"எல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டுமொருமுறை சொல்லுகிறேன், கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனானதால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்"
(கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்)

"உன் மனதை எனது ஆக்கிவிடு. என் பக்தனாயிரு. எனக்குப் பூஜை செய். என்னைக் கும்பிடு. நீ என்னையே எய்துவாய். இஃதுண்மை. உனக்குப் பிரதிக்கினை செய்து கொடுக்கிறேன். நீ எனக்குப் பிரியமானவன்." (கீதை 18-ஆம் அத்தியாயம், 65-ஆம் சுலோகம்)

"எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக்கிறேன். துயரப் படாதே." (
கீதை 18-ஆம் அத்தியாயம்,     66-ஆம் சுலோகம்)

நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கி விடுவதுபோல, சம்ஸார வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவனும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு (அதாவது, எவ்விதப் பொறுப்புமின்றி எல்லாப் பொறுப்புகளும் ஈசனுக்கென்று துறந்துவிட்டு) கடவுளைச் சரண்புக வேண்டும் என்று ஸ்ரீ ராமாநுஜாசாரியர் உபதேசம் புரிந்தனர்.

பிரகலாதன் சரித்திரத்திலும், திரௌபதி துகிலுரியும் கதையிலும் இந்த உண்மையே கூறப்பட்டிருக்கிறது. இடுப்பு வஸ்திரத்தில் அவள் வைத்திருந்த இடது கையையும் விட்டுவிட்டு இரண்டு கைகளையும் தூக்கி முடிமீது குவித்துக்கொண்ட பிறகுதான், கண்ணபிரான்
அருளால் திரௌபதிக்கு மானபங்கம் நேராமல், அவளுடைய ஆடை மேன்மேலும் வளர்ச்சி பெறத் துச்சாதனன் கைசோர்ந்து வீழ்ந்தான். இக்கருத்தைப் பிள்ளைப் பெருமாளையங்கார் -

"மெய்த்தவளச் சங்கெடுத்தான் மேகலை விட்டங்கை தலை
வைத்தவளச் சங் கெடுத்தான் வாழ்வு"

என்ற வரிகளில் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். "உண்மையாகிய வெண் சங்கைத் தரித்தவன் பாஞ்சாலி தன் கைகளை மேகலையினின்றும் எடுத்து முடிமீது வைத்த போதில் அவளுடைய அச்சத்தைக் கெடுத்தவன் ஆகிய திருமாலுக்கு வாழ்விடம் (திருவேங்கடமலை) என்பது அவ்வரிகளின் பொருளாம்.

"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச் சிவாய வே"

என்று நாவுக்கரசரின் உறுதி சான்ற சொற்களும் பரமபக்தியின் இலக்கணத்தைக் குறிப்பவன வாம். "தம்மை ஒரு கற்றூணுடன் சேர்த்துக் கட்டிக் கடலுக்குள் வீழ்த்திய போதிலும் தமக்கு நம்புவதற்குரிய துணை நமச்சிவாய (சிவனைப் பணிகிறேன்) என்ற மந்திரமல்லது வேறில்லை” என்று திருநாவுக்கரசர் சொல்லுகிறார்.

இனி,  ‘இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகக் கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுளை நம்புவதெதன் பொருட்டு? கடவுள் நம்மை அச்சந்தீர்த்துக் காப்பானென்று எதிர் பார்ப்பது எதன் பொருட்டு? நமக்குத் தீங்கு நேர்ந்தாலும், நன்மை நேர்ந்தாலும், வாழ்வு நேர்ந்தாலும், மரணம் நேர்ந்தாலும் – எல்லாம் கடவுள் செயலாகையாலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருத வேண்டுமென்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்குக் கடவுள் துணை எதன் பொருட்டு? நம்மைக் கற்றூணுடன் வலியக் கட்டி யாரேனும் கடலுள் வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயலென்று கருதி அப்படியே மூழ்கி இறந்து விடுதல் பொருந்துமன்றி, நமச்சிவாய, நமச்சிவாய என்று கூறி நம்மைக் காத்துக்கொள்ள ஏன் முயல வேண்டும்? என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம்!   இந்த ஆக்ஷேபம் தவறானது.  எங்ஙனமெனில், சொல்லுகிறேன். முந்திய கர்மங்களால் நமக்கு விளையும் நன்மை தீமைகளைச் சமமாகக் கருதி நாம் மனச்சஞ்லத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மைச் சில வலிய சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் மனஞ்சோர்ந்து கடவுளிடம் நம்பிக்கையை இழந்து விடாமல் இருப்போமாயின், அப்போது நமக்குள் ஈசனே வந்து குடிபுகுகிறான். அப்பால் நமக்குத் துன்பங்களே நேர்வதில்லை. ஆபத்துக்கள் நம்மை அணுகா. மரணம் நம்மை அணுகாது. எல்லாவிதமான ஐயறவுகளும், கவலைகளும், துயரங்களும், தாமாகவே நம்மை விட்டு நழுவி விடுகின்றன. இந்த உலகத்திலே நாம் விண்ணவரின் வாழ்க்கை பெற்று நித்தியானந்தத்தை அனுபவிக்கிறோம்.

மேலும், எல்லாவற்றையும் ஞானி சமமாகக் கருதவேண்டுமென்ற இடத்தில், அவன் மனித வாழ்க்கைக்குரிய விதிகளையெல்லாம் அறவே மறந்து போய் பித்தனாய்விட வேண்டுமென்பது கருத்தன்று.

ஒரு குழந்தையைக் கொல்லுவதும், சிவ பூஜை செய்வதும் - இரண்டும் கடவுளுக்கு ஒரே மாதிரிதான். அவன் எல்லா இயக்கங்களும், எல்லாச் செயல்களும் தன் வடிவமாக உடையவன், எனினும், மனித விதிப்படி சிசு ஹத்தி பாவமென்பதையும், சிவபூஜை புண்ணியமென்பதையும் கண்ணபிரான் மறுக்கவில்லை. மனிதன் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனோ தைரியத்தாலும் தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்ட மேனும் நஷ்ட மேனும் விளைவிக்கக்  கூடாது. உலகத்துக்கு நன்மை செய்து கொண்டேயிருக்க வேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரைப் பேணவேண்டும். நாம் உலகப் பயன்களை விரும்பாமல், நித்திய சுகத்தில் ஆழ்ந்த பின்னரும், நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டுப் புண்ணியச் செயல்களையே செய்து கொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கிறார்.

மேலும், நமக்கே துன்பங்கள் நம்மை மீறி எய்தும்போது நாம் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நன்மையையுந் தீமையையும் நிகராகக் கருதவேண்டுமென்ற உபதேசத்தின் கருத்தாகுமல்லாது, ஒரேயடியாக ஒருவன் தனக்கு மிகவும் இனிய காதலியை மருவும் இன்பத்துக்கும்,  தீராத க்ஷயரோகத்தால் நேரும் துன்பத்துக்கும் யாதொரு வேற்றுமையுந் தெரியாமல் புத்தி மண்ணாய் விட வேண்டுமென்பது அவ்வுபதேசத்தின் கருத்தன்று. ஏனென்றால், சாதாரண புத்தியிருக்கும் வரை ஒருவன் காதலின்பத்துக்கும் க்ஷயரோகத் துன்பத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை உணராதிருத்தல் சாத்தியமன்று. ஆத்ம ஞானமெய்தியதால் ஒருவன் சாதாரண புத்தியை இழந்து விடுவானென்று நினைப்பது தவறு. க்ஷயரோகம் நேரும்போது சாமன்ய மனிதன் மனமுடைந்து போய்த் தன்னை எளிதாகவும், அந்நோயை வலிதாகவும் கருதி, ஆசையிழந்து நாளடைவில் மேன்மேலும் தன்னை அந்த நோய்க்கிரையாக்கிக் கொண்டு, க்ஷயரோகி என்று தனக்கொரு பட்டஞ் சூட்டிக்கொண்டு வருந்தி மடிவதுபோல் ஞானி செய்யமாட்டான். ஞானி அத்தகைய நோய், ஏதேனும் பூர்வ கர்ம வசத்தால் தோன்றுமாயின், உடனே கடவுளின் பாதத்தைத் துணையென்று நம்பித் தன் ஞானத் தீயால் எரித்துத் தள்ளி விடுவான்.

"ஞானாக் நிஸ் ஸர்வ கர்மாணி பஸ்மஸாத் குருதே" - ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பலாக்குகிறது.  கடவுளிடம் தீராத நம்பிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். அகவாயிலாவேனும் புறவாயிலா லேனும் நமக்கு எவ்வகை துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண் புகுந்து விட்டோ மாதலின்.

அவனன்றி ஓரணுவு மசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான். தீங்கு செய்யவல்லான் அல்லன். ஏன்? நாம் அவனை முழுவதும் நம்பிவிட்டோ மாதலின்.

"கடவுளை நம்பினோர் கைவிடப் படார்" இதுவே பக்தி.

அந்தக் கடவுள் எத்தன்மையுடையான்? எல்லா அறிவும், எல்லா இயக்கமும், எல்லாப் பொருளும், எல்லா வடிவமும் எல்லாந் தானேயாகி நிற்பான்.

அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? எதற்கும் துயரப்படாதிருத்தல். எதற்கும் கலவைப்படா திருத்தல். எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல்.

"ஸம்சயாத்மா விநச்யதி" - ஐயமுடையோன் அழிவான், நம்பினவன் மோக்ஷமடைவான்.




2 comments:

Anonymous said...

அருமை.....

grp said...

Great...thx