பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 18, 2015

பகவத் கீதை ‍‍-- இரண்டாம் அத்தியாயம்

                                                                                          
                                                       பகவத் கீதை                                                              
                                                     இரண்டாம் அத்தியாயம்
                                                      
ஸாங்கிய யோகம்

போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்: "அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப்பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆத்மாவின் இயற்கையை எண்ணி ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம், அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்ம ஞானம் பெருகி அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவரப் ப்ரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக் கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது."

சஞ்ஜயன் சொல்லுகிறான்:

1. அவ்வண்ணம் இரக்கமிஞ்சியவனாய் நீர் நிரம்பிய சோக விழிகளுடன் வருந்திய அர்ஜுனனை நோக்கி மதுசூதனன் சொல்லுகிறான்:

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்.

2. இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

3. பார்த்தா! பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தது. இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!

அர்ஜுனன் சொல்லுகிறான்:

4. மதுசூதனா! பீஷ்மரையும், துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன். இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரையழிப்போய்!

5. பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்.

6. மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -- இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.

7. சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தனவாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திச் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.

8. பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர் மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மைவிட்டு நீங்குமென்று தோன்றவில்லை.

சஞ்ஜயன் சொல்லுகிறான்:

9.      "பகைவரைக் கொளுத்தும் பார்த்தனங்கு
          பசுநிரை காக்கும் பகவனை நோக்கிப்
         "போரினிப் புரியேன்" என்று
          வாய் புதைத்திருந்தான்."

10. பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசன முரைக்கிறான்:

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

11.     "துயர்ப்படத் தகாதார் பொருட்டுத்
           துயர்ப்படுகின்றாய்!
           ஞான வுரைகளு முரைக்கின்றாய்!
           இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந்
           துயர் கொளார் அறிஞர்."

12. இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேண்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற்போகவும் மாட்டோம்.

13. ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும், இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ, அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புத் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.

14. குந்தியின் மகனே, குளிரையும், வெப்பத்தையும், இன்பத்தையும், துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன, என்றுமிருப்பனவல்ல. பாரதா! அவற்றைப் பொறுத்துக்கொள்.

15. யாவன் இவற்றால் துயர்ப்படான். இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான், அந்த தீரன் சாகாதிருக்கத் தகுவான்.

16. இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.

17. இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அறிவற்றதென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.

18. ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான் எனினும் அவனுடைய வடிவங்கள் கிறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.

19. இவன் கொல்வானென்று நினைப்போனும், கொல்லப்படுவானென்று நினைப்போனும் -- இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை.

20. இவன் பிறப்பதுமில்லை; எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிலிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான். அனவரதன். இவன் சாசுவதன்; பழமையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.

21. இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது -- இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பது எவனை?

22. நைந்த துணிகளைக் கழற்றியெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறது.

23. இவனை ஆயுதங்கள் வெட்டமாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.

24. பிளத்தற்கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன். எங்கும் நிறைந்தவன்; உறுதிய்டையான்; அசையாதான்; என்றுமிருப்பான்.

25.      "தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான்
             மாறுத லில்லாதா னென்ப!
            ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்துநீ
            துயர்ப் படாதிருக்கக் கடவாய்."

26. அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும் பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.

27. பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனி, இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.

28. பாரதா! உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துஅர்ப்படுவதென்ன?

29. இந்த ஆன்மாவை,

          "வியப்பென ஒருவன் காண்கிறான்,
           வியப்பென ஒருவன் சொல்லுகிறான்,
           வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும்
           இதனை அறிவான் எவனுமிலன்."

30. பாரதா! எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால் நீ எங்க உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!

31. ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.

32. தானே வந்தெய்வது, திறந்து கிடக்கும் பொன்னுலகவாயில் போன்றது. இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!

33. அன்றி நீ இந்தத் தர்ம யுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று பாவத்தை யடைவாய்.

34. உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

35. நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.

36. உனக்கு வேண்டாதார் சொல்லதகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?

37. கொல்லப்படினோ வானுலகெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.

38. இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக்கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வண்ணம் புரிந்தால் பாவமெய்தாய்.

39. இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறி விடுவான்.

40. இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செயற்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

41. குருகுல தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.

42. வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையொழிய மற்றது பிழையென்கிறார்கள்.

43. இவர்கள் காமிகள், சுவர்க்கத்தைப் பாரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.

44. இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும், ஆட்சியிலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலை பெறாது.

45. மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா! நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. *இருமைகளற்று (*நன்மை-தீமை; ஒளி-இருள்; குளிர்-வெப்பம் போன்ற இரட்டை நிலைகள்) எப்போதும் உண்மையில் நின்று, யோக க்ஷேமங்களைக் கருதாமல் ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக.

46. எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்ன பொருளே ஞானமுடைய பிராமணனுக்கு வேதங்களுமுடையன.

47. தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.

48. தனஞ்ஜயா! யோகத்தில் நின்று பற்றை நீக்கி வெற்றி தோல்விகளை நிகரெனக்கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.

49. தனஞ்ஜயா! *புத்தி யோகத்தைக் காட்டிலும் (புத்தியில் லயித்து நிற்றல்) கர்மம் (தொழில்) நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை, பயனைக் கருதுவோர் லோபிகள்.

50. புத்தியுடையவன் இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்திவிடு. யோகம் செயல்களில் திறமையாம்.

51. புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீங்கி, ஆனந்தப் பதவி அடைகிறார்கள்.

52. உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப்போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.

53. உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

54. கேசவா! உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

55. பார்த்தா! ஒருவன் தன் மனத்தில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.

56.           "துன்பங்களிலே மனங்கெடா தவனாய்,
                 இன்பங்களிலே ஆவலற் றவனாய்
                அச்சமும் சினமுந் தவிர்த்தவனாயின்
                அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப."

57. எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

58. ஆமை தன் அவயவங்களை இழுத்துக் கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷய பதார்த்தங்களினின்று புலன்களை யொருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலை கொண்டது.

59. தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.

60. குந்தியின் மகனே! (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலேகூட இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.

61. அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.

62. மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.

63. சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவுத் தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.

64. விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத் தான் உட்பட்ட மனிதனின் ஆறுதலடைகிறான்.

65. சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.

66. யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோ பாவனையில்லை. மனோ பாவனையில்லாதவனுக்குச் சாந்தியில்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?

67. இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின் அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல் அறிவை மோதுகிறது.

68. ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலைகொண்டது.

69. எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.

70. கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரிதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

71. இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்திநிலை அடைகிறான்.

72. பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலைகொள்வோன் பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.


No comments: