பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 16, 2015

"தினமணி" ஏ.என்.சிவராமன்.

தஞ்சை பாரதி சங்கத்தில் நான் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்:




மகாத்மா காந்தியடிகளுடைய கருத்து ஒன்றைச் சொல்லி இந்த உரையைத் தொடங்க விரும்புகிறேன். அவர் சொல்கிறார் "அநீதியை எதிர்த்துப் போராடத் தயங்குகிறவன் உண்மையான ஜனநாயகவாதி அல்ல. சத்தியாக்கிரகம் சுதந்திர மனிதனின் பிறப்புரிமை. அரசாங்கத்திற்கு அடங்கி நடப்பது ஜனநாயகமல்ல. அரசாங்கம் தவறு செய்யுமானால், குற்றம் இழைக்குமானால் -- அதாவது லஞ்சமும் ஊழலும் தாண்டவம் ஆடுமானால் -- மக்கள் அச்சமின்றி அந்த அட்சியை எதிர்த்து நின்று சுதந்திரமாக நடந்து கொள்ளும் சக்தி படைத்தவர்களாக இருந்தால்தான் உண்மையான ஜனநாயகம் அங்கே நிலவுகிறது என்று சொல்ல முடியும்."

இந்த வாக்கிற்கேற்ப தன் வாழ்வை அமைத்துக் கொண்டு கடைசி வரை தன் எழுத்துக்களால் போராடிக்கொண்டிருந்தவர்தான் தினமணியில் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன். அவரைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை இன்றைய என் உரையில் கொடுக்க விரும்புகிறேன்.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பல அரிய அரசியல் தலைவர்களையும், இலக்கியத் துறையில் பல ஜாம்பவான்களையும் கொடுத்த பூமி. காவிரி தண்ணீர் குடித்தவன் என்று தஞ்சை மாவட்டத்துக் காரர்கள் பெருமை பேசிக்கொள்வதைப் போல தாமிரபரணி ஆற்று நீரைப் பருகியவன் என்று அவர்களுக்கு ஒரு பெருமிதம் உண்டு. அப்படிப்பட்ட ஒருவர் தினமணி பத்திரிகையில் ஆசிரியராக இருந்து ஓராண்டு அல்ல இரண்டு ஆண்டுகள் அல்ல 53 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த பெருமை இவருக்கு உண்டு.

இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது, இந்த 53 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களே கிடையாதா என்ன எனும் ஐயப்பாடு உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இவருடைய இந்த 53 ஆண்டுகால பணி, அதன் பின்னர் அவர் எழுதிய எழுத்துக்கள், அந்த எழுத்துக்களைப் படித்துப் பயன்பெற்ற ஏராளமான தமிழ் உள்ளங்களுக்குத் தெரியும் இவருடைய பணியின் முக்கியத்துவம்.

இவர் எழுதாத துறைகளே இல்லை எனலாம். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இப்போது போல கல்வி அறிவு பெருகிக் கிடக்காத நேரத்தில் பல தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் ஏராளம் ஏராளம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பெருமை இவரது கட்டுரைகளுக்கு உண்டு. இவரை ஒரு சாதாரண பத்திரிகை ஆசிரியர் என்று மட்டும் ஒரு சம்புடத்தில் அடக்கிவிட முடியாது. இவருடைய விஸ்வரூபத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால், இவருடைய ஒருசில கட்டுரைகளையாவது படித்துப் பார்க்க வேண்டும்.

இவர் ஒரு பட்டதாரியா? இல்லை. பத்திரிகை துறைக்கென்று சிறப்புப் பயிற்சி எதுவும் பெற்றவரா? இல்லை. தமிழ் தவிர வேறு மொழி படித்துத் தேறியவரா? இல்லை, ஆனால் அவர் அறிந்த மொழிகள் ஏராளம். மகாகவி பாரதி சொன்னதைப் போல "யாமறிந்த மொழிகளிலே" என்று தலை நிமிர்ந்து சொன்னது போல இவருக்கும் தமிழ் தவிர, ஆங்கிலம், ப்ரெஞ்சு, ஜெர்மன், சம்ஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளில் திறமை பெற்றிருந்தார். ஆச்சரியமாக இருக்கிறதா? அடிப்படைக் கல்வி மிக அதிகமில்லாவிட்டாலும் பட்டறிவும், தானே கற்றுத் தேர்ந்த மொழி அறிவும் இவரது பெருமைக்குச் சான்றளிக்கக் கூடியவை. இவருடைய சாதனை என்று சொல்லக்கூடியது, இவர் தனது 93ஆம் வயதில் சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் ஒருவருடைய உதவியோடு அராபிய மொழியையும் கற்றார் என்பதுதான். நம்ப முடிகிறதா? ஆம், உண்மை.

இதோடு முடிந்து விட்டதா, இவரது பெருமை? இல்லை இன்னும் இருக்கிறது. வேதங்களை வழுவற அத்யாயனம் செய்து முடித்தவர். அதோடு அவைகளில் ஆராய்ச்சியும் செய்தவர். தமிழ் வேதங்களான தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றை மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு, தினமும் பாராயணம் செய்து வந்தவர்.

அவர் வெறும் ஏ.என்.சிவராமன் எனும் தனி மனிதரா? பெருமை மிக்க பத்திரிகை ஆசிரியரா? கட்டுரைகள் மூலம் மக்களுக்கு பொது அறிவை வளர்க்கப் பாடுபட்டவரா? வேத வேதாந்தங்களைக் கரைத்துக் குடித்து அதன் சாரத்தைப் பிழிந்து கொடுத்த வள்ளலா? ஆம்! இவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு பெருமைக்குரிய பல்கலைக் கழகம். இவரைப் பற்றிச் சொல்லும்போது பலரும் இவரை "He is an Institution" என்பார்கள். அப்படிப் பல்முனை திறமை படைத்த ஒரு அதிசய மனிதர் இவர்.

பத்திரிகை ஆசிரியர் என்றால், பத்திரிகையில் என்னென்ன விஷயங்களை பிரசுரிப்பது, தலையங்கம் எழுதுவது, நிர்வாகத்தை நடத்துவது அதோடு முடிந்து விட்டது என்று நினைத்தால், இவரைப் பொறுத்த வரையில் அப்படி அல்ல. அந்தக் காலத்தில் இப்போது போல மின்னணு இயந்திரத்தில் டைப் செய்து செய்திகளையும் மற்ற கதை கட்டுரைகளையும் வெளியிடுவது போல இருக்கவில்லை. ஒவ்வொரு பக்கத்தையும், அச்சுக் கோத்து வடிவமைத்து பக்கங்கள் தயாரிக்கப்படும். அப்படி அச்சுக் கோர்க்கும் வித்தை முதல், அது அச்சாகி, முழு வடிவம் பெற்று, இதழ்கள் வெளிவந்து விற்பனை செய்வது வரையிலான அந்த Production and Marketing வரையிலான அத்தனை விஷயங்களிலும் கரை கண்டவர் நமது ஏ.என்.சிவராமன். இத்தனை தகுதிகள், பெருமைகள் இருந்த போதிலும் தலைகனம் என்பது சிறிதுகூட தன்னிடம் இல்லாத பார்வைக்கும், பழகுவதற்கும், மிக மிக எளிமையானவர். இவர் எளிமை சில சமயங்களில் இவரது உயர்ந்த அந்தஸ்தை வெளிக்காட்டாமல் போய்விடும். இவரை சாதாரண பணியாள் என்றுகூட இவரிடம் சிலர் வேலை ஏவியதும் நடந்திருக்கிறது.

முழு வாழ்வு வாழ்ந்த முடித்தவர் ஏ.என்.எஸ். தொண்ணூறு வயதைக் கடந்த பின்னரும் கூட தினமும் பல மணி நேரம் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தவர். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், அதைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வார். தெளிந்த சிந்தனை படைத்தவர். எதற்கும், யாருக்கும் அஞ்சாத துணிச்சலும், நேர்மையும் இவரது சிறப்பு குணாதிசயங்கள். இத்தனைக்கும் இடையில் இவரது தேசப் பற்று மிக உன்னதமானது. உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டது. "சும்மா, ஒப்புக்கு 'வந்தேமாதரம்' என்று சொல்லக்கூடிய போலி சுதேசி அல்ல ஏ.என்.எஸ்.

'தினமணி' பத்திரிகையில் அவர் பணியாற்ற சேருவதற்கு முன்பாகவே அவர் தன்னை தேச சேவையில் ஈடுபடுத்திக் கொண்டவர். தினமணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து இவர் கட்டுரைகளை தினமணியில் வெளியிட்டு வந்தார்கள் என்றால், அவருக்கும் அந்த பத்திரிகைக்கும் இருந்த உறவு பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

மிகவும் சீரியசான விஷயங்களை எடுத்து விலாவாரியாக விளக்கும் ஆற்றல் படைத்திருந்த இவர் 'நகைச்சுவை'க்கும் மன்னராகவே விளங்கி வந்தார். அவருடைய நகைச்சுவையில் தரமே சிறப்பானது. தடுக்கி விழுந்தவனைப் பார்த்து சிரிக்கும் நகைச்சுவை மாதிரி அல்ல அவருடைய நகைச்சுவை. நையாண்டிக்குப் பெயர்போன கல்கியும் இவரைப் போன்ற நகைச்சுவைப் ப்ரியர்.

அவருடைய நகைச்சுவைக்கு ஒரு சாம்பிள் இதோ: இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது. அந்த இக்கட்டான நிலையில் பிரிட்டன் எப்படி நடந்து கொண்டது என்பதை விளக்கி ஒரு கட்டுரை எழுதினார் ஏ.என்.எஸ். யுத்தம் முடிவில் இந்தியாவுக்கு சுயாட்சி தரவேண்டும் என பிரிட்டன் நினைத்ததாம். அப்போது இந்தியாவில் ஒரு இடைக்கால நிர்வாகத்தில் இந்தியர்களை சேர்த்துக் கொள்ள வலியுறுத்தி வந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது வைஸ்ராய் என்ன சொன்னார் என்பதற்கு ஏ.என்.எஸ். ஒரு உதாரணம் சொல்லி விளக்குகிறார். அது என்ன தெரியுமா?

"கேரளத்தில் ஒரு கதை உண்டு. ஒருவர் ஒரு ஆவணி மாதத்தில் தன் நண்பரிடம் நூறு ரூபாய் கடன் கேட்டார். மூன்று மாதத்தில் திருப்பித் தந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தார். ஆனால் அவர் சொன்னபடி மூன்று மாதத்தில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை. கார்த்திகை மாதத்தில் போய் கடன் கொடுத்தவர், தான் கொடுத்த கடனை திரும்பிக் கேட்டார். அப்போது கடன்காரர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "தை மாதம் வரட்டும், அப்போது வாய்தா சொல்லுகிறேன்" என்றாராம். அதாவது மலையாளத்தில் (ஸங்க்ராந்தி வரட்டே, அவதி பறையாம்) என்றாராம்.

சரி! இனி நம் கதாநாயகரான ஏ.என்.சிவராமன் அவர்களுடைய வாழ்க்கை பற்றி சில விவரங்களைச் சொல்லிவிட்டு, மீண்டும் அவருடைய அனுபவங்கள், எழுத்துக்கள் இவற்றையும் சிறிது பார்க்கலாம். இவருடைய முழுப் பெயர் கீழாம்பூர் நாணுவையர் சிவராமன் என்பதாகும். இவர் 1904ஆம் வருஷம் மார்ச் மாதம் 1ஆம் தேதி கொச்சி-எர்ணாகுளத்தில் பிறந்தார். இவருடைய தொடக்கக் கல்வியை பிறந்த ஊரான எர்ணாகுளத்திலும் திருநெல்வேலி மாவட்டம் சொந்த கிராமமான கீழாம்பூரிலும் தொடர்ந்தார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை அம்பாசமுத்திரம் தீர்த்தபதி பள்ளியிலும், கல்லூரி படிப்பை 1921இல் நெல்லை இந்து கல்லூரியிலும் படித்தார். இவர் காலத்தில் சுதந்திர இயக்கம் பெருமளவில் பரவவில்லை என்றாலும், வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் தலைமையில் ஒரு பெரிய கூட்டம் சுதந்திர வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தது. அதன் தாக்கம் சிறு பையனாக பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த சிவராமனுக்கும் உண்டாகியது.

இவரை முதன் முதலில் பாதித்த தேசிய நிகழ்ச்சி அன்னி பெசண்ட் அம்மையாரைக் கைது செய்த நிகழ்ச்சிதான். இந்திய சுதந்திரப் போரில் "ஹோம் ரூல்" இயக்கத்தைத் தொடங்கி நடத்தியவர் இந்த அன்னி பெசண்ட். அப்போது இவரையும் வாடியா, அருண்டேல் ஆகியோரையும் கைது செய்து ஊட்டிக்கருகிலுள்ள குன்னூரில் சிறையில் அடைத்தனர். அப்போது அவர்களுக்கு மக்கள் எழுச்சியோடு தங்கள் ஆதரவை கொடுத்த நிகழ்ச்சிதான் ஏ.என்.சிவராமனை பாதித்த அரசியல் நிகழ்வு. இவருடைய 17ஆம் வயதில் இவர் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வேளையில் 1921இல் நடைபெற்ற மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். போராட்டத்தில் கலந்து கொண்டால் பிரிட்டிஷ் அரசு சும்மா விடுமா? இவரை நீதிமன்றம் கொண்டு சென்று விசாரித்து இவருக்கு 18 மாதம் சிறை தண்டனை கொடுத்து விட்டனர். சிறைக்குப் போவது இருக்கட்டும், இவருடைய கல்லூரி படிப்பும் அதோடு நின்று போனது. இவர் கிராமத்திலிருந்து முதன் முதலாக கல்லூரியில் படிக்கச் சென்றவரே இவர்தான். இவருக்கு இப்படியொரு நிலைமை. இப்படி அந்தக் காலத்தில் கல்லூரி படிப்பை விட்டுவிட்டு சுதந்திரப் போரில் குதித்து சிறை சென்றவர்கள் ஏராளம். இன்றைக்கும் அன்றைக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால், இப்போதெல்லாம் போராட்டம் செய்து காலையில் கைதாகி திருமண மண்டபத்தில் வைத்து, ஸ்டார் ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைத்துக் கொடுத்து, மாலையில் வீட்டுக்கு அனுப்பிவிடும் போராட்டம் போன்றது அல்ல, அந்த நாள் போராட்டம். அப்போது படிப்பை இழந்தவர்கள் ஏராளம்; வேலை இழந்தவர்கள் ஏராளம். படிப்பை இழந்தார், தேச சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், அதற்கு அப்போது சாதனமாக இருந்தது காங்கிரஸ் இயக்கம். அப்போது காங்கிரசுக்கு ஒரே நோக்கம் தேச சுதந்திரம். பதவி, வருமானம், செல்வாக்கு இவை போன்ற எண்ணங்களே அன்றைய காங்கிரசாருக்கு இருந்ததில்லை. எத்தனை கடுமையான சோதனைகள் வந்தாலும், சிறையில் கிரிமினல் குற்றவாளிகளோடு அடைக்கப்பட்டாலும், சித்திரவதைக்கு ஆளானாலும் இந்த நாட்டுக்காக அவை யாவையும் ஏற்றுக் கொண்டவர்கள் அன்றைய காங்கிரசார். போகட்டும் வரலாற்றுக்கு வருவோம்.

படிப்பை இண்டர் முடிக்காமல் பாதியில் விட்டாலும் அப்போது அவர் படித்த பள்ளிக் கல்விக்கே நல்ல தகுதி இருந்தது. அதனால் இவர் ஆசிரியர் பணியில் அமர்ந்தார். அப்போது இவர் கல்லிடைக்குரிச்சி திலகர் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். இந்த பள்ளிக்கு பழைய பெயர் ஜார்ஜ் மன்னர் மிடில் ஸ்கூல் என்பதாகும். பால கங்காதர திலகரின் பெயர் பின்னர் இந்த பள்ளிக்குச் சூட்டப்பட்டது. அந்தக் கால ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு சிந்தையுடன் மாணவர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வந்ததுடன், தங்கள் அறிவு வளர்ச்சிக்கு நல்ல நூல்களையும் படித்தனர். அப்படிப் படித்த செய்திகளைத் தங்கள் மாணவர்களுடன் பரிமாறிக் கொண்டு அவர்களையும் நல்வழிப்படுத்தினர். அதனால்தான் அன்றைய ஆசிரியர்கள் மதிக்கப்பட்டார்கள்.

ஆசிரியர் பணி காலத்தில் இவர் ஏராளமான நூல்களைப் பயின்றார். வரலாறு, பொருளாதாரம், பொலிடிகல் சயின்ஸ் போன்ற தலைப்பிலான நூல்களை ஏராளமாகப் பயின்றார். 1921 - 29க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரையில் புத்தகம் படிப்பது என்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் படித்துத் தன் தலையில் ஏற்றிக் கொண்ட செய்திகள் தான் பிற்காலத்தில் அவர் அரிய பல கட்டுரைகளை எழுத வாய்ப்பாக அமைந்தது. அப்படி எழுதியதன் பலன் தான் அவர் ஒரு தன்னிகரற்ற பத்திரிகை ஆசிரியராகவும் மிளிர்ந்தார். அவருடைய படிக்கும் பழக்கம் அவர் இறுதி காலம் வரை தொடர்ந்து வந்தது. தொண்ணூறு வயதைக் கடந்த காலத்திலும் அவர் ஒரு நாளில் சுமார் எட்டு மணி நேரம் படிப்பில் கழிப்பாராம்.

தேசிய சிந்தனையும், நல்ல படிப்பறிவும், எழுத்தாற்றலும் படைத்த ஏ.என்.சிவராமன் அப்போது மிக பிரபலமாக இருந்த பத்திரிகாசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களிடம் போய்ச்சேர்ந்தார். அப்போது டி.எஸ்.சொக்கலிங்கம் "காந்தி" என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். அப்படி அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேளையில் 1930இல் ராஜாஜி வேதாரண்யம் சென்று உப்பு எடுக்கவென்று திருச்சியிலிருந்து நூறு தொண்டர்களுடன் நடந்தே சென்று அகத்தியம் பள்ளியில் கைதானார் அல்லவா, அந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் நமது ஏ.என்.சிவராமனும் சென்று கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்திலும் இவருக்கு 20 மாத சிறை தண்டனை. சற்று நினைத்துப் பாருங்கள். ஒரு வருஷமும் எட்டு மாதமும் சிறையில் அடைந்து கிடப்பது எப்படிப்பட்ட துன்பம் என்று. நாட்டுக்காக அந்தத் துன்பங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டவர்கள் நமது முந்தைய தலைமுறையில் வாழ்ந்த தேசபக்தர்கள். அவர்கள் அத்தனை பேரையும் நினைந்து அவர்களுக்காக நம் மரியாதையைத் தெரிவித்துக் கொள்வோம்.

ஏ.என்.சிவராமன் தான் பத்திரிகை துறைக்கு வந்தது பற்றி குறிப்பிடும்போது சொன்னார்: "1932 தொடங்கின பிறகு ஒரு கிராமத்தில் தடை உத்தரவை மீறியதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டேன். முதலில் மதுரை சிறையிலும் பிறகு கேரளத்திலுள்ள கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தேன்.

கண்ணனூர் சிறையை விட்டு வெளியே வரும்போது பிளாட்பாரத்தில் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" என்ற பெயருடன் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவை ஆசிரியராகக் கொண்ட ஆங்கிலப் பத்திரிகையைப் பார்த்தேன். சில மாதங்களுக்குள் அந்தப் பத்திரிகையை பம்பாயில் உப்பு சத்தியாக்கிரக காலத்தில் Free Press Journal எனும் பத்திரிகையைத் தொடங்கியபோது சதானந்த் என்பவர் விலைக்கு வாங்கி முழுவதுமாக அதையொரு காங்கிரஸ் பத்திரிகையாக நடத்தி வந்தார். அதன் ஆசிரியர் கே.சந்தானம்.

1931 இறுதியில் "காந்தி" என்ற காலணா பத்திரிகையைச் சென்னையில் நடத்திக் கொண்டிருந்தார் டி.எஸ்.சொக்கலிங்கம். நான் 1932 செப்டம்பரில் விடுதலையான பின் இடையிடையே கார்லைல் எனும் பிரிட்டிஷ் ஆசிரியரின் Past and Present, எமர்சன் எனும் அமெரிக்க ஆசிரியர் எழுதிய Self Reliance போன்ற நூல்களிலிருந்து ஏதேனும் ஒரு பாராவை மொழிபெயர்த்து "காந்தி" பத்திரிகைக்கு அனுப்புவது வழக்கம். ஒரு நாள் திடீரென்று ஒரு கடிதம் வந்தது. "சிவராமன், இங்கே எனக்குத் துணை புரிய யாருமில்லை. நீங்கள் இங்கு வந்துவிடுங்கள்" என்று டி.எஸ்.சொக்கலிங்கம் எழுதியிருந்தார். உடனே போனேன். அவருடன் அவருக்குத் துணை ஆசிரியராகவும், மானேஜராகவும் பணியாற்றத் தொடங்கினேன். இப்படி எழுதுகிறார் ஏ.என்.சிவராமன்.

இவருக்கும் தினமணிக்கும் ஏற்பட்ட உறவு குறித்தும் இவர் எழுதுகிறார். "1934ஆம் ஆண்டு என்பது இந்திய சுதந்திரப் போரில் ஒரு முக்கியமான வருஷம். மத்திய சட்டசபைக்குத் தேர்தல் நடந்த வருஷம் அது. சென்னை நகரில் திரு சத்தியமூர்த்தி, திரு ஏ.ராமசாமி முதலியார் ஆகியொர் போட்டியிட்டனர்.

அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்குப் பிரசாரம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு திரு சதானந்த், தினமணிப் பத்திரிகையை ஆரம்பித்தார். 1934இல் தினமணி பத்திரிகை தொடங்கும் பூர்வாங்க வேலைகளைத் திரு கே.சந்தானம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டுக்காக சுதந்திரப் போரில் சிறைசென்று திரும்பியவர்களாகப் பார்த்து ஒருவரை ஆசிரியர் பணிக்கும் நாலைந்து பேரை உதவி ஆசிரியர் பணிக்கும் அவர் தேர்ந்தெடுத்தார்.

திரு சதானந்த் கே.சந்தானத்திடம் எப்படியாவது டி.எஸ்.சொக்கலிங்கத்திடம் பேசி அவரை தினமணிக்கு ஆசிரியராக நியமித்துவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அப்படி கே.சந்தானம் அவர்கள் டி.எஸ்.சொக்கலிங்கத்தைச் சந்தித்துப் பேசியபோது அவர் ஏ.என்.சிவராமனையும் உடன் அழைத்து வர சம்மதித்தால், தான் தினமணிக்கு வருவதாக வாக்களித்தார்.

அதற்கு சந்தானம் மிகப் பெருந்தன்மையுடன் சொன்னார். "நானும் சிவராமனும் திருச்சி சிறையில் ஒன்றாக இருந்தவர்கள். தினமணிக்கு ஆசிரியர், துணை ஆசிரியர் நியமனம் என்று வந்தபோது நான் உங்களையும், சிவராமனையும்தான் மனதில் வைத்திருந்தேன். ஏற்கனவே "காந்தி" பத்திரிகையில் இருக்கும் உங்கள் இருவரையும் எப்படிப் பிரிப்பது, ஆகையால் இருவரையும் தினமணிக்குக் கொண்டு வருவதே என் எண்ணம்" என்றார் சந்தானம்.

அன்றிருந்த சூழ்நிலையில் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டுமானால் டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றதொரு திறமையான மனிதர் பத்திரிகையில் ஆசிரியராக இருந்துதான் தீரவேண்டுமென்பதால், சொக்கலிங்கத்தை சிவராமனும் தினமணிக்குப் போகச் சொல்லி வற்புறுத்தினார். இறுதியில் இவ்விருவருமே தினமணிக்குச் சென்று பணியாற்றத் தொடங்கினர்.

அன்றைய சூழலில் தமிழ்நாட்டில் இருந்த பத்தாயிரம் கிராமங்களில் ஏழாயிரம் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பத்திரிகை என்றாலே என்னவென்று தெரியாமல் இருந்த நேரம். 1925இல் சுதேசமித்திரனைப் படிக்கும் மொத்த வாசகர் எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டவில்லை என்கிறார் ஏ.என்.சிவராமன்.


இந்த நிலையில் 1934இல் "தினமணி" இதழ் தொடங்கப்பட்டபோது அதற்கு ஆசிரியராக டி.எஸ்.சொக்கலிங்கம் சென்றார். அவருடன் உதவி ஆசிரியராக ஏ.என்.சிவராமனும் சேர்ந்து "தினமணி"யில் சேர்ந்தார். இதுதான் அவருடைய ஒரு Marathan பத்திரிகை உலக வாழ்வின் அரிய தொடக்கம். சுமார் பத்து ஆண்டுகள் தினமணியில் டி.எஸ்.சொக்கலிங்கமும், ஏ.என்.சிவராமனும் இணைந்து பணியாற்றிய பின்னர் சொக்கலிங்கம் 1944இல் தினமணியை விட்டு வெளியேறினார். அந்த இடத்துக்கு ஏ.என்.சிவராமன் "தினமணி" பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த உயரிய பதவியில் அவர் 43 ஆண்டுகள் அதாவது 1987 வரை தொடர்ந்து இருந்து அந்த பத்திரிகைக்கும், தனக்கும் இந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்து வந்தார். ஆக மொத்தம் அவர் தினமணியில் பணியாற்றியது 53 ஆண்டுகள்.

ஏ.என்.சிவராமன் அவர்கள் தினமணியில் பணியாற்றிய அந்த 53 ஆண்டுகள், அதாவது 1934 முதல் 1987 வரையிலான காலகட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த காலம். "தினமணி" பத்திரிகை சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு ஒரு கெசட் போல மதிப்பு மிக்கதாக விளங்கியது. தினமணியில் வரும் செய்திகளைப் படித்து நாட்டு நடப்பை அறிந்து கொண்டவர்கள் ஏராளம். சுதந்திரத்தைத் தனது தொலை நோக்காகக் கொண்டு செயல்பட்ட தினமணி, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் சோர்ந்து போய்விடவில்லை. இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், அரசியல் நடவடிக்கைகளில் நேர்மை, நியாயம், தர்மம் நிலைத்திட இடைவிடாமல் தனது பங்கை செலுத்தி வந்திருக்கிறது. ஒரு பத்திரிகையில் நோக்கம் நிறைவேறிய பிறகு அதன் செயல்பாட்டின் அவசியம் தேவையில்லாததாகி விடுகிறது. ஆனால் தினமணிக்கு அப்படிப்பட்ட நிலைமை ஏற்படவில்லை. சத்திய சிந்தனையோடும், முன்னேற்றத் துடிப்போடும் அது பீடுநடை போட்டுக் கொண்டிருந்தது.

தினமணியில் ஏ.என்.சிவராமன் துணை ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்ததன் பின் அவருக்குப் பல காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரே குறிப்பிடும் ஒருசில காங்கிரஸ்காரர்களின் பெயர்களை இப்போது பார்க்கலாம்.

நெல்லை ஜில்லாவில் தூத்துக்குடி மகாதேவ ஐயர், திருநெல்வேலி டவுனில் திருகூடசுந்தரம் பிள்ளை, தம்பி சைலப்பன், ஸ்ரீவைகுண்டம் கோபாலய்யர், தினத்தந்தி ஆதித்தனின் சகோதரர் சுப்பிரமணிய ஆதித்தன், மதுரையில் ஏ.வைத்தியநாதய்யர், மட்டப்பாறை வெங்கட்டராமையர், மெளலான சாஹிப், ரா.சிதம்பர பாரதி, மதுரை ஜில்லா பத்மாசினி அம்மாள், அவர் கணவர் சுந்தரவரத ஐயங்கார், திருச்சி சுவாமிநாத சாஸ்திரி, டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், ஹாலாஸ்யம் ஐயர், விருதுநகர் கே.காமராஜ், முத்துசாமி திருமங்கலத்தில் புலி மீனாட்சிசுந்தரம், தியாகராஜ சிவம் கும்பகோணம் பந்துலு ஐயர், அம்மாபேட்டை வெங்கட்டராமய்யர், சக்கரவர்த்தி சிதம்பரம் அண்ணாமலை, திருவண்ணாமலையில் அண்ணாமலை பிள்ளை, வேலூர் வி.கே.குப்புசாமி முதலியார், சென்னையில் அட்வகேட் ஜெனரல் பதவியை வேண்டாம் என்று நிராகரித்த ஸ்ரீநிவாச ஐயங்கார், தொழிற்சங்கத் தலைவர் சர்க்கரைச் செட்டியார் ஆகியோர் பெயர்களை நினைவுகூர்கிறார் ஏ.என்.சிவராமன்.

பொறுப்புள்ள ஒரு தேசிய பத்திரிகைக்கு ஏராளமான கடமைகள் உண்டு. உண்மையான, நம்மகத் தன்மையுள்ள, சரியான செய்திகளை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது ஒன்று. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்குத் தங்கள் கடமைகளை வலியுறுத்தியும், நேர்மையும், நாணயமும் பொதுவாழ்வில் நிலைக்கும்படியான சூழ்நிலையை உருவாக்குவதிலும், நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்டு நடக்கும், நடக்க வேண்டிய முன்னேற்ற பணிகளை விளக்கியும் செய்திகள் தரவேண்டியது அடுத்த கடமையாகும். ஏ.என்.சிவராமன் அளித்த ஒரு பத்திரிகை பேட்டியில் அவர் சொல்லியிருக்கிற செய்தி எல்லா காலத்துக்கும், எல்லா பத்திரிகைகளுக்கும் பொறுந்தக் கூடியது. அவர் சொன்னார், ஆங்கில நாளேடுகளுக்குச் சமமாக, தமிழ் தினசரிகளும் செய்தி சேகரிப்பதில் உலகளாவிய அளவில் செய்திகளைக் கொணர்ந்து கொடுத்து, தமிழ் வாசகர்களை ஆங்கிலம் படித்த மேதாவிகளுக்குச் சமமாக ஆக்கிட வேண்டும், அந்த பணி தமிழ் பத்திரிகைகளின் தலையாய கடமை என்றார் அவர்.

அப்படித் தன் கருத்தை வெளியிட்டதோடு நின்றுவிடவில்லை அவர். தமிழ் பத்திரிகைகள் தங்கள் கடமைகளைச் செய்திட, உலகளாவிய செய்திகளைத் தமிழ் வாசகர்களுக்குக் கொடுத்து அவர்களையும் சர்வதேச அரசியல், பொருளாதாரம், அறிவியல், நாட்டு நடப்புகள் ஆகிய துறைகளில் ஞானமிக்கவர்களாக ஆக்கிட வேண்டிய செயல்களில் அவரே ஈடுபட்டார். அதற்காக அவர் எழுதிய கட்டுரைகளின் வகைகளில் வான்வெளி சாதனைகள் தொடங்கி, அரசியல் நிகழ்வுகள், தேர்தல் சீர்திருத்தங்கள், விவசாய மேம்பாடுகளுக்கான பணிகள், பொருளாதார பிரச்சனைகள், நெருக்கடிகள், அவற்றை சமாளிக்கும் விதம், கல்வி, கலாசார விஷயங்கள் போன்ற பல தலைப்புகளில் அவர் தமிழில் எழுதித் தள்ளினார். இவருடைய கட்டுரைகள் வெளியாகும் நாளில் பத்திரிகைகளை வாங்கி ஆர்வத்தோடு படிக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனதோடு, பின்னர் அந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் பற்றி அறிவார்ந்த விவாதங்களும் நடந்தன என்பதுதான் அவர் எந்த அளவுக்கு மக்கள் உள்ளங்களில் ஊடுருவியிருக்கிறார் என்பதற்கு எடுத்துக் காட்டு. இவருடைய தமிழ் மிக எளிமையானது, பாமரன் கூட படித்து பொருளாதாரத்தையும், வான்வெளி சாகசங்களையும், உலக நாடுகளிடையே நிலவும் பிரச்சனைகள் குறித்தும் புரிந்து கொள்ள முடிந்தது என்றால் மிகையல்ல.

இவர் தன்னுடைய பிரச்சாரத்திலும் சொற்பொழிவுகளிலும் இரண்டு முக்கியமான கருத்துக்களை வலியுறுத்துவது வழக்கம். இவர் படித்த புத்தகங்களில் ஒன்று "ஸீலி" Seeley என்ற பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் எழுதிய நூல். அதுலுள்ள ஒரு கருத்து என் மனதில் பதிந்துவிட்டது என்கிறார் அவர். அந்த வரி When the feeling spreads in India that is shameful to live under a foreign rule -- we may have to leave India. அதாவது அந்நிய ஆட்சியில் வாழ்வது அவமானம் எனும் உணர்ச்சி இந்திய மக்களின் உள்ளங்களில் ஏற்பட்டுவிட்டால், பின்னர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நீடிக்க முடியாது, ஓடிவந்துவிட வேண்டும் என்பது அது.

மகாகவி பாரதியார் மாஜினியின் பிரதிக்ஜை எனும் பாடலில் "மற்றை நாட்டினர் முன் நின்றிடும் பொழுது, மண்டும் வெட்கத்தின் மீது ஆணை" என்கிறான். இதே 'வெட்கம்' எனும் நிலைமையைத்தான் சீலியும் தன் வரிகளில் குறிப்பிடுகிறார். ஆகவே இந்த கருத்தையே தன் சொற்பொழிவுகளில் சிவராமன் வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இவர் பெங்களூர், டெல்லி, சண்டிகர், விஜயவாடா, மதுரை ஆகிய ஊர்கலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிப்புகளைத் தொடங்கும் பணிகளைச் செய்துள்ளார். சில காலம் இவர் இந்தியன் எக்ஸ்பிரசின் பொறுப்பாளராகவும், தினமணி வெளியிட்ட நூல் பிரசுரங்களின் பதிப்பாசிரியராகவும், தினமணி நாளிதழின் வெளியீட்டாளராகவும் கூட பணி புரிந்திருக்கிறார்.

இவர் பல புனைபெயர்களில் எழுதியிருக்கிறார். அவற்றுள் 'கணக்கன்', 'ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி', 'குமாஸ்தா', அரைகுறை வேதியன்', அரைகுறை பாமரன் (அகுபா)', போன்றவை நினைவுகூரத் தக்கவை.

இவருடைய கட்டுரைகளையும், பத்திரிகை தலையங்கங்களையும் எடுத்துக் கொண்டு பலர் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படி பல முனைவர்களை உருவாக்கிய பெருமையும் இவரைச் சேரும். பல புதிய விஷயங்களை, புதிய பரிமாணங்களை இவர் எளிய தமிழில் எழுதிய் பாமரனுக்கும் புரிய வைத்ததால், தமிழ் மொழிக்கும் புதிய சொற்கள், புதிய சொல்லாக்கங்கள் கிடைத்தன. தமிழ் வளம் பெற இவரது பணியும் ஒரு காரணியாக இருந்தது என்பதில் ஐயமில்லை. இவரைப் பார்த்து வேறு சிலரும் கூட சில சிக்கலான விஷயங்களை மிக எளிமையாக பாமரனும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதத் தொடங்கியது, இவருடைய எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.

பத்திரிகை படிப்பது என்பது ஏதோ உலக நடப்பைத் தெரிந்து கொள்ளத்தான்; பத்திரிகையை படித்தவுடன் தூர எறிந்து விடும் பழக்கம் தினமணியில் ஏ.என்.சிவராமன் கட்டுரை எழுதத் தொடங்கிய பின் மாறத் தொடங்கியது. பள்ளிக்கூட, கல்லூரி பாடப் புத்தகங்களைப் போல இவருடைய கட்டுரைகள் பாதுகாக்கப்படும் வழக்கமும் உருவாகியது.

மாணவப் பருவம் தொடங்கி இந்திய சுதந்திர வேள்வியில் தன்னை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துப் பாடுபட்டுக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்த ஏ.என்.எஸ். சுதந்திரத்துக்குப் பிறகு 1960களில் நாட்டில் வறுமை ஒழிந்த பாடில்லை; வேலையில்லாத் திண்டாட்டம் அதிமாவது; ஊழல், லஞ்சம், லைசன்ஸ் பர்மிட் ராஜ் ஆகிய செயல்பாடுகளும், நாடு எதிர்பார்த்த வகையில் முன்னேறாமல் தடைபட்டு நிற்கக் காரணங்களை ஆய்ந்து பார்த்து இவர் அதுநாள் வரை தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட காங்கிரசை ஆதரிப்பதை விட்டுவிட்டு ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியை ஆதரித்து எழுதத் தொடங்கினார்.

1885இல் காங்கிரஸ் ஒரு வெள்ளைக்காரரால் ஏ.ஓ.ஹ்யூமால் ஆரம்பிக்கப்பட்டு, ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் மன்னருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு தேவைகளுக்கு மனுக் கொடுத்து, பின்னர் திலகர் காலத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று குரல் கொடுத்து வந்த காலம் தாண்டி, சுதந்திரம் பெற என்ன வழி என்பது தெரியாமல் தனிநபர் கொலைகள் நடந்த காலத்தையும் கடந்து, மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை, சத்தியாக்கிரக மார்க்கத்தில் பயணித்து, 1942இல் விழிப்புணர்வு பெற்று வெள்ளையனே வேளியேறு என குரல் கொடுத்து சுதந்திரம் பெற்றபின் குடியரசாகப் பிரகடனமாகி நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துப் போவதில் சுணக்கமும், சோர்வும், ஊழலும், கறைபடித்த மனிதர்களும் அரசியலில் இருப்பதை எதிர்த்து முதன் முதலாக மாபெரும் இயக்கமான காங்கிரஸ் பிளவுண்டது இந்த சுதந்திரா கட்சி தோன்றிய போதுதான். அதிலும் அதைத் தோற்றுவித்தவர் சாமானியர் அல்ல. சி.ராஜகோபாலாச்சாரியார். காந்தியின் மனசாட்சி என்று போற்றப்பட்டவர், நேரு கால்த்திய திட்டமிடும் அரசியல் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தது போல இல்லை; நாட்டில் கட்டுப்பாடுகள் விதித்து லைசண்ஸ், பர்மிட் மூலம் வளர்ச்சி தடைப்பட்டதும் ராஜாஜி நேருவின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வெளியேறச் செய்தது. இது காங்கிரசுக்கு முதல் அதிர்ச்சி. பின்னர் எத்தனையோ பிளவுகள். இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.

காங்கிரசின் சரிவு தொடங்கியதும் அப்போதுதான். எதிர் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு தனிப்பாதை அமைத்து போராடத் தொடங்கியதும் அப்போதுதான். 1967இல் நாட்டில் ஒரு பொதுத் தேர்தல் வந்தது. பல மாநிலங்களில் இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து எதிர் வரிசைக்குப் போனது. தமிழ் நாட்டிலும் தி.மு.க. சுதந்திராவுடன் இணைந்து காங்கிரசின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது. அதோடு தமிழ் நாட்டில் 1965இல் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக தி.மு.க. வலுப்பெற்றது; காங்கிரஸ் பலம் இழந்தது. இந்த காலகட்டத்தில் ஏ.என்.சிவராமன் காங்கிரசுக்கு எதிராக ஒரு மாபெரும் போரையே பிரகடனம் செய்து எழுதித் தள்ளினார். 1967 தேர்தலில் தங்கள் வெற்றியைப் பற்றியும், காங்கிரசின் வீழ்ச்சியைப் பற்றியும் பேசிய சி.என்.அண்ணாதுரை அவர்களே, இந்தத் தேர்தலில் காங்கிரசின் வீழ்ச்சிக்கு ஏ.என்.சிவராமனின் எழுத்துக்களும் பெருமளவில் துணை புரிந்தன என்றார் என்றால், அவரது எழுத்தின் வேகத்தையும் தாக்கத்தையும் புரிந்து கொள்ளலாம்.

ஏ.என்.சிவராமன் தன்னுடைய காலத்தில் இருந்த சமுதாய சூழ்நிலையைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். அவர் கூறுவது என்ன தெரியுமா? "அந்தக் காலத்தில் இருந்த சூழ்நிலைக்கு உதாரணமாக இரண்டு அனுபவங்களைச் சொல்கிறேன்.

1. எனக்குக் கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி இவ்விரண்டுமே சொந்த ஊர்கள் மாதிரி. ஆம்பூர் என் தாய் தந்தையர் வாழ்ந்த ஊர். ஆழ்வார்குறிச்சி (மேலக் கிராமம்) என்னை தத்து எடுத்துக் கொண்ட தாத்தாவின் ஊர்.

ஆழ்வார் குறிச்சியில் ஒரு நாள் ஒரு பெரியவரை அணுகி அவரைக் காங்கிரஸ் உறுப்பினராக்குவதற்குப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன வார்த்தையை அப்படியே சொல்கிறேன். "ஏண்டாப்பா! வெள்ளைக்காரன் நன்றாகத்தானே ஆள்கிறான். கட்டவேண்டிய நில வரையை நாலு தவணைகளாகப் பெற்றுக் கொள்கிறான். வேறு நமது சமாச்சாரங்களில் அவன் தலையிடுவதில்லை. அந்த ஆட்சியை ஏன் எதிர்க்கிறீர்கள்? காந்தி, பூந்தி என்று என்னத்தையோ சொல்ல ஆரம்பித்து வந்தேமாதரம் என்று கோஷம்போட ஆரம்பித்ததால்தான் நாட்டில் சர்க்கார் வேலை பிராமணர்களுக்குக் கிடைக்காமல் போக்றது. காங்கிரசும் வேணாம், ஒண்ணும் வேணாம், ஆளை விடு!"

இது அன்றிருந்த சூழ்நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

அவருக்கு சிவராமன் சொன்ன பதில்: "சர்க்கார் வேலை இல்லை என்றால் பிழைக்க முடியாதா? இந்தத் தெருவில் உள்ள முப்பது வீட்டில் யாராவது சர்க்கார் வேலையில் இருக்காங்களா? மனுச் செய்திருக்காங்களா? இல்லையே! கீழாம்பூரிலுள்ள 220 வீடுகளில் சர்க்கார் வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இருக்கிறார்களா? இல்லையே" இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பினேன் என்கிறார் ஏ.என்.எஸ்.

மற்றொரு ருசிகரமான அனுபவத்தையும் ஆசிரியர் ஏ.என்.எஸ். பதிவு செய்திருக்கிறார். அது
"ஏ.என்.எஸ்., கோமதிசங்கர தீக்ஷதர், அம்பாசமுத்திரம் சிதம்பரம் பிள்ளை ஆகியோர் பிரசாரத்துக்குச் சென்றனர். அத்தாழநல்லூர் எனும் கிரமாம். பிராமணர்களும் பிள்ளைமார்களும் வசித்த சிறிய ஊர். அங்கு 50 வீடுகள் உள்ள பிராமண அக்ரகாரத்தில் நாலைந்து பேரைக் காங்கிரஸ் உறுப்பினர்களாகச் சேர்ந்த்துவிட்டோம். பிறகு பிள்ளைமார்கள் வசிக்கும் தெருவுக்குச் சென்றோம். அங்கு சிதம்பரம் பிள்ளைக்குத் தெரிந்தவர் வீடு ஒன்று. அந்த வீட்டுக்காரரிடம் டி.எஸ்.சொக்கலிங்கத்தை தென்காசி மடத்துக்கடை சங்கரலிங்கம் பிள்ளையின் மகன் என்று அறிமுகம் செய்து வைத்தார் சிதம்பரம் பிள்ளை.

"சரி, இந்த ரெண்டு பாப்பனையும் கூட்டிக் கொண்டு எங்கே வந்தீங்க நீங்க?" என்றார் அந்த வீட்டுக்காரர். டி.எஸ்.சொக்கலிங்கத்துக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. எனக்கோ சிரிப்பு என்கிறார் ஏ.என்.எஸ். சொக்கலிங்கம் உடனே அவ்விருவரையும் கூட்டிக் கொண்டு கோபமாகத் திரும்பிவிட்டார்.

அன்றைய சமூக சூழ்நிலையையும் படம்பிடித்துக் காட்டுகிறார் ஏ.என்.எஸ். இவரும் இவருடைய நண்பர்களும் காங்கிரஸ் பிரச்சாரத்துக்குப் போகும்போதெல்லாம் கிராமங்களில் சாப்பாட்டுப் பிரச்சனை பெரும் பிரச்சனை என்கிறார் இவர். அப்படியானால் சாப்பாட்டுக்கு என்ன வழி? பிராமணர் வீட்டில் போய்ச் சாப்பிடலாம் என்றால் சிவராமனையும் டி.எஸ்.சொக்கலிங்கத்தையும் பந்தியில் ஒன்றாக உட்கார வைத்துச் சாப்பாடு போடுவார்களா என்று சந்தேகம். பிராமணர் அல்லாதார் வீட்டில் போய் சிவராமன் சாப்பிட்டால், "இவன் யாரடா இவன்! சாதி கெட்ட பாப்பான்" என்பார்களாம். நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இன்று மாறியிருக்கிறதா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

1975இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது ஒரு மாபெரும் தவறை இழைத்தார். தன்னுடைய பதவிக்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் வேட்டு வைத்தவுடன், எதிர் கட்சிகளின் குரல்வளையை நெரிக்க இந்திரா காந்தி கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். பத்திரிகைகள் கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், பத்திரிகை ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டார்கள். இவைகள் எல்லாம் ஏ.என்.சிவராமனை எரிச்சல் அடையச் செய்தன. நெருக்கடி நிலை காலத்தில் நடந்த ஜனநாயக விரோத, பத்திரிகை தனிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிராக துணிந்து நின்றவர்களில் இவரும் ஒருவர். பத்திரிகை தலையங்கள் எழுதும் உரிமை இருக்கிறது. அதை அரசாங்க அதிகாரிகள் சென்சார் செய்து, தணிக்கை செய்து, வெட்டி, ஒட்டி வெளியிடுவதை எதிர்த்து இவர் தலையங்கம் பகுதியை அச்சிடாமல் வெரும் வெட்டவெளியாக விட்டு எதிர்ப்பைக் காண்பித்தார்.

அப்படி வெற்றிடமாக விடுவதை அரசாங்க அதிகாரிகள் குற்றம் என்றனர். அதனால் சிவராமன் இந்திய அரசின் அடாவடிகளைச் சொன்னால்தானே சென்சார், சரி உலக நாடுகள் பலவற்றில் எப்படி ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. மக்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பிய செய்திகளைப் படிக்கலாம் என்பது போன்ற வெளிச் செய்திகளைச் சொல்லத் தொடங்கினார். அதன் மூலம் இந்தியாவில் அப்படிப்பட்ட வெளிப்படையான போக்கு இல்லை என்பதைச் சுட்டிக் காட்டத் தொடங்கினார்.

நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடனப் படுத்தப்பட்ட மூன்று மாதங்கள் கழித்து மிகவும் ஏமாற்றத்துக்கும், வருத்தத்துக்கும் ஆளான தமிழகத்தின் மாபெரும் தலைவர் கே.காமராஜ் அவர்கள் அதே துக்கத்தில் காலமாகிவிட்டார். பெருந்தலைவர் காமராஜரின் இறப்பைப் பற்றி குறிப்பிடுகையில் ஏ.என்.சிவராமன் பிறரிடம் உரையாடும்போது சொன்னார், "இதோ, நெருக்கடி நிலைமையின் முதல் பலி நம் காமராஜ்" என்று. ஆனால் அந்த கருத்தை எழுத்தில் எழுத முடியவில்லை. அப்போதைய நெருக்கடி அப்படி. ஆகையால் அவர் எழுதினார்: "பெருந்தலைவர் காமராஜ் சில காலமாகவே மன வருத்தத்துக்கு ஆளாகி விரக்தியில் இருந்தார். இப்போது எனது பேனாவும் மேலே எழுத முடியாமல் குத்திட்டு நின்று போய்விட்டது" இப்படி எழுதியதை மக்கள் புரிந்து கொண்டார்கள்; அரசாங்கம் செய்வதறியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

பலத்த எதிர்ப்பும், அரசியல் புரட்சியும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியதும் இந்திரா காந்தி நெருக்கடி நிலைமையை திரும்பப் பெற்றுக் கொண்டு, தேர்தலையும் அறிவித்தார். அப்போது ஏ.என்.சிவராமன் எழுதினார் இந்த நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்புக் கோர வேண்டும். அதுமட்டுமல்ல 1975-77 காலகட்ட நெருக்கடி நிலைமை இனி எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையும் கொண்டு வரமுடியாதபடி பாதுகாப்பு சட்டம் வேண்டும் என்று எழுதினார்.

இவர் ஒரு தீவிரமான பத்திரிகையாளர் என்பதாலும், அரசாங்கம் செய்யும் தவறுகளைத் தயவு தாட்சண்யமின்றி விமர்சனம் செய்பவர் என்பதாலும் இவர் அரசு கொடுக்க விரும்பிய எந்த விருதையும் ஏற்றுக்கொள்ள வில்லை. மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளைக் கொடுக்க விரும்பியபோது அதனை ஏற்க மறுத்து விட்டார். அரசு விருதுகளைத்தான் ஏற்க மறுத்தாரே தவிர, திருக்கோயிலூரில் இவருடைய பத்திரிகை பணியைப் பாராட்டி 'கபிலர் விருது' வழங்கியபோது அதனை ஏற்றுக் கொண்டார். 1988ஆம் ஆண்டி பி.டி.கோயங்கா பெயரால் கொடுக்கப்பட்ட ஒரு விருதையும், அண்ணா பல்கலைக் கழகத்தில் வா.செ.குழந்தைசாமி அவர்கள் நிறுவிய வளர்தமிழ் மன்ற விருதையும் பெற்றிருக்கிறார். அண்ணா பல்கலைக் கழகம் அறிவியல் தமிழ் ஆக்கப் பணிக்காக ஒரு விருதை வழங்கி வருகிறது, அந்த விருதையும் இவர் பெற்றிருக்கிறார்.

இவர் எழுதிய கட்டுரைகள் ஆயிரக் கணக்கில் இருக்கும், தலையங்கம் கேட்கவே வேண்டாம். இவர் எழுதி வெளியான நூல்கள் என்றால், சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவை 1. சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணயம் 2. ரஷ்யப் புரட்சி 17ஆண்டு அனுபவம். 3. இந்தியாவின் வறுமை பற்றி கணக்கன் ஆராய்ச்சி 4. அப்பல்லோ கண்ட விண்வெளி விஞ்ஞானம் 5. சுதந்திரப் போராட்ட வரலாறு ஆகியவை இவருக்கு பெருமை சேர்க்கும் நூல்கள்.

1980களில் நாட்டு நடப்பு பலவும் அவருக்கு ஏமாற்றத்தையும், எரிச்சலையும், கோபத்தையும் உண்டாக்கியது. போஃபார்ஸ் ஊழல், குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்குக்கும் பிரதமர் ராஜிவ் காந்திக்குமிடையே இருந்த கருத்து வேற்றுமைகள்; இவைகள் இவருக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் குடியரசுத் தலைவரும் பிரதம மந்திரியும் எதிரும் புதிருமாக இருந்தால் இந்த நாட்டின் ஜனநாயகம் பிழைக்க முடியாது, அழிவைத்தான் கொண்டு வரும் என்று எழுதினார் அவர். வயது மூப்பும், நாட்டு நடப்பில் நாட்டமில்லாமல் மனம் கசந்து போன நிலையில் இவர் 1987இல் போதும் இந்த பத்திரிகை தொழிலும், எழுத்தும், நான் போய் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு தோன்றும் போது எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு பத்திரிகை தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஓய்வெடுக்கப் போய்விட்டார். எனினும் படிப்பதையும், எழுதுவதையும் மட்டும் இறுதி மட்டும் விடவே இல்லை.

அரசியலில் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல், அரசியல் சீர்கேடு பற்றியெல்லாம் தன்னுடைய மனக்கசப்பை இப்படி வெளியிடுகிறார் ஏ.என்.எஸ்.

என் மனச்சோர்வின் பின்னணி என்ன தெரியுமா?

1. பிரதமராகப் பதவிக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே இந்திரா காந்தி காங்கிரசைப் பிளந்தது.
2. முன்னதாக அவருக்குத் தெரிவிக்காமலே மொரார்ஜி தேசாயைப் பதவியிலிருந்து நீக்கியது.
3. ஜனாதிபதி தேர்தலில் சஞ்சீவ ரெட்டியின் வேட்பு மனுவில் ஆதரவாளராகக் கையெழுத்திட்டு விட்டு, பிறகு வி.வி.கிரிக்கு ஆதரவு திரட்டி மனசாட்சிப்படி வாக்களுக்கும்படி வேண்டிக் கொண்டது.
4. தனது தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் corrupt practices அடிப்படையில் தீர்ப்புஅளித்தபின் அதற்கு தடையுத்தரவு வாங்கியதோடு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடும் செய்துவிட்டுஅரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தி "பிரதமராக இருப்பவர் மீது தேர்தல் வழக்கு போட்டால் வழக்கு செல்லுபடி ஆகாது" என்று 39ஆவது திருத்தத்தை இயற்றினார். அது முந்தேதியிட்டு அமுலுக்கு வருகிறது என்றும் ஒரு வரியைச் சேர்த்தார். அனைத்தும் சுயநலம்.
5. 1975இல் நெருக்கடி நிலை பிரகடனம். அடிப்படை சுதந்திரம் பறிக்கப்பட்டு, அது நீதிமன்றங்களிலும்விவாதிக்கமுடியாது என்று கொண்டுவந்த சர்வாதிகாரம்.
6. இந்திரா மறைவுக்குப் பின் அவர் மகன் ராஜிவ் காந்தி பதவிக்கு வந்த ஓரு ஆண்டு முடிந்ததுமே 2000 கோடி போஃபார்ஸ் ஊழல். ஜனாதிபதி ஜெயில் சிங்குடன் மோதல், அவரைக் கண்ணியக் குறைவாகப் பேசியது

இப்படிப் பல காரணங்களை அடுக்குகிறார் சிவராமன்.
இவர் 2001ஆம் வருஷம் மார்ச் மாதம் முதல் தேதி வியாழக்கிழமை காலை 8.45 மணிக்கு மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் தனது 97ஆம் வயதில் காலமானார். இவருக்கு நான்கு மகன்கள் உண்டு. பத்திரிகை உலகில் தனக்கென ஒரு மரியாதையையும் தனி இடத்தையும் பெற்றவர் ஏ.என்.சிவராமன். இவருடைய வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.

மகாத்மா காந்தி அழைப்பு விடுத்ததை அடுத்து ஏ.என்.சிவராமன் திருநெல்வேலியில் தான் படித்துக் கொண்டிருந்த கல்லூரியை விட்டு வெளியேறி காங்கிரஸ் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது நெல்லையில் சங்கர ஐயர் என்பாரும், கல்லூரி பேராசிரியராக இருந்தவருமான யக்ஞேசுவர சர்மா என்பவரும் ஒரு கூட்டத்தில் பேசினார்கள். அவர்களுடைய ஊர் கல்லிடைக் குறிச்சி என்பதைத் தெரிந்து கொண்டு அந்த ஊருக்கு ரயிலில் போய் இறங்கினார் சிவராமன். ரயில் நிலையத்திலேயே யக்ஞேசுவர சர்மா வீடு எங்கே என்று விசாரித்தார். எதிரிலுள்ள ஒரு பெரிய வீட்டைக் காட்டினார்கள். அங்கு போன இவரை யார் என்ன எதற்காக வந்திருக்கிறார் என்றெல்லாம் விசாரித்தார்கள். அப்போது யக்னேசுவர சர்மாவும் அங்கு வந்துவிட்டார். இவரை விசாரித்த பின் ஆக, நீ காலேஜை விட்டு வெளியேறிய பிறகு இன்னும் வீட்டுக்குப் போகவில்லை, நாட்டுக்கு சேவை செய்ய வந்திருக்கிறாய், அப்படித்தானே என்றார் அவர். அப்போது சங்கர ஐயர் என்பாரும், கோமதிசங்கர தீட்சதர் என்பாரும் அங்கு வந்தனர்.

சங்கர ஐயர் தன் மனைவி லட்சுமி அம்மாளை அழைத்து, 'அம்மா, இங்கே பார், நம் வலைக்குள் இன்னொரு பட்சியும் விழுந்திருக்கு' என்றார், இவர் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட வந்திருப்பதை அறிந்து அவர் அப்படிச் சொன்னார். அப்படி ஏ.என்.எஸ். சுதந்திரப் போர் இயக்கத்தில் பாடுபட்ட 1920 -- 1929 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவரை உருவாக்கியவர்கள் நான்கு பேர். அவர்கள்:

1. டாக்டர் சங்கர ஐயர்: கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்த ஒரு செல்வந்தர். மருத்துவர். படிக்கின்ற காலத்திலேயே பாரதியார் அழைத்து வந்து சென்னையில் பேசவைத்த விபின் சந்த்ர பால் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டவர். 1919இல் நடந்த அமிர்தசரஸ் காங்கிரசுக்குப் போனவர், தலைசிறந்த தேசபக்தர்.

2. லட்சுமி அம்மாள்: சங்கர ஐயரின் மனைவி, தேசபக்தை, தேசத் தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பெண்மணி. நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்மணி இப்படி அரசியலில் ஈடுபட்ட செய்தி வியப்பளிக்கிறது.

3. கோமதிசங்கர தீட்சதர்: இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட தேசபக்தர். அன்னியத் துணி எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர். இவர் தன்னுடைய நிலங்களை விற்று, கைத்தறி சுதேசி ஆடைகள் உற்பத்தி செய்யும் ஆலையைத் தொடங்கினார்.

4. யக்ஞேசுவர சர்மா: எம்.ஏ. படித்தவர், கல்லூரி ஆசிரியராக இருந்தவர். காந்திஜி அழைப்பை ஏற்று காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்.

இப்படிப்பட்ட தீவிரமான தேசபக்தர்களுடன் இணைந்து பணியாற்றியவர் ஏ.என்.சிவராமன்.

இவர் 1942இல் காங்கிரஸ் நடத்திய Quit India போராட்டத்தில் பங்கு வகித்தவர். அது சுவாரசியமான கதை. அதை சற்று சுருக்கமாகப் பார்ப்போம். தினமணி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவின் தலைவர் ராம்நாத் கோயங்கா ஒரு தேசியவாதி. தீவிர அரசியலில் பங்கு பெற்றவர். Quit India Movementஇல் பங்கெடுத்தவர். பிரிட்டிஷ் இந்திய அரசின் ராணுவ தளவாடங்கள் எடுத்துச் செல்லும் ரயிலை வெடிவைத்து தகர்க்க இவர் ஒரு ஏற்பாடு செய்தார். நெல்லூரிலுள்ள எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிருபர் மூலம் அங்குள்ள மைக்கா சுரங்கத்திலிருந்து டைனமைட்டுகளை வரவழைத்தார். அந்த டைனமைட்டை எங்காவது ஒரு முக்கிய ரயில்வே பாதையில் வைத்து வெடிக்கச் செய்து பிரிட்டிஷ் இந்திய அரசை நிலைகுலைய வைப்பது அவர்கள் கருத்து.

இந்த வெடிகுண்டு சம்பவம் குறித்து ஏ.என்.சிவராமன் தன் கருத்தைச் சொல்லுகிறார். எவருக்கும் உயிர்சேதம் ஏற்படக்கூடாது, ஆனாலும் இனியும் இந்த நாட்டை ஆள்வது என்பது இயலாத காரியம் என்று பிரிட்டிஷார் உணரவேண்டும். அப்படி அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்வதுதான் இந்த வெடிகுண்டு வெடிப்பின் நோக்கம்.

டைனமைட், வெடிகுண்டு திரி Fuse wire ஆகியவற்றை வரவழைத்து இரண்டு கள்ளிப்பெட்டியில் வைத்து எடுத்துக் கொண்டு போய் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் நண்பர் ராமாந்த மிஸ்ரா மூலம் பம்பாய்க்கு கொஞ்சம் அனுப்பிவிட்டு, மிச்சத்தை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தனர்.

இந்த வெடிகுண்டு வெடிப்பை சீர்காழியில் இருந்த குன்னம் மிராசுதார் ரகுபதி ஐயர் என்பாரின் மகன் சுப்பராயன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து இந்த வெடிகுண்டை சீர்காழி ரயில் நிலையம் அருகில் உப்பனாறு பாலத்தில் வைத்தனர். இந்த பணியில் தினமணி ராமரத்தினம், கும்பகோணம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருக்கருகாவூர் பந்துலு ஐயரின் மகன்களான சேஷு ஐயர், மற்றொரு மகன் கணேசன் ஆகியோரும் ஈடுபட்டனர். இந்த கணேசன் தினமணியில் ஒரு உதவி ஆசிரியராக இருந்தார்.'

உப்பனாற்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டை அப்போது இரண்டு மைலுக்கு இருவர் என்று காவல் இருந்த போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து சீர்காழியில் சுப்பராயனும் அவரது நான்கு தோழர்களும் கைதாயினர். தினமணி ராமரத்தினமும், டி.வி.கணேசனும் சென்னையில் கைதாயினர். கணேசனின் அண்ணன் சேஷு ஐயரும், கிருஷ்ணய்யர் என்பவரும் கும்பகோணம் அருகில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குக்கு Sirkazhi Sabotage Case என்று பெயர். வழக்கு செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றவாளிகளாக கொண்டுவந்து நிறுத்தப்பட்டவர்களில் இருவர் நிரபராதிகள் என விடுதலையாகினர். அதில் ராமரத்தினமும் ஒருவர். ஒருவர் தடுப்புக் காவலில் உள்ளே வைக்கப்பட்டார். மற்ற ஐந்து பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை. அதில் சுப்பராயன் முதல் குற்றவாளி. அவர் தந்தையார் மகனை வெளிக்கொணர முயன்றபோது சுப்பராயன் தடுத்துவிட்டார். தான் சிறையில் இருப்பது என்று முடிவெடுத்தார். நல்ல காலம் 1946இல் ஒரு இடைக்கால சர்க்கார் சென்னையில் டி.பிரகாசம் தலைமையில் பதவி ஏற்றதும், அவர் முதல் காரியமாக இந்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மூன்றாண்டு சிறையோடு போயிற்று.

சீர்காழியைப் போலவே திருநெல்வேலி அம்பாசமுத்திரத்துக்கும் கல்லிடைகுறிச்சிக்கும் இடைப்பட்ட ரயில்வே லைனில் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் தவிர ஏ.என்.சிவராமன் அந்தக் காலத்தில் சா.கணேசன் நடத்திய கம்பன் விழாக்களில் பங்கெடுத்து வந்தார். இவரும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களும் நெருங்கிய நண்பர்கள், இருவரும் கம்பன் விழாவில் பங்கெடுத்து வந்தனர். பொதுவாக அ.ச.ஞா.வின் காரில்தான் சிவராமன் காரைக்குடிக்குப் பயணம் செய்வது வழக்கம். அப்படி 1962 வாக்கில் கம்பன் விழாவுக்கு அ.ச.ஞா. புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஏ.என்.சிவராமனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு அ.ச.ஞாவுக்கு வந்தது. அப்போது ஏ.என்.எஸ். பேராசிரியரிடம் "டேய்! சம்பந்தா! நானும் உன்னோடு காரைக்குடிக்கு உன் காரிலேயே வருகிறேன்" என்றார்.

ஆனால் பேராசிரியரிடம் இருந்தது பியட் கார். அதில் ஏற்கனவே சில நண்பர்களை அழைத்துப் போவதாகச் சொல்லியிருந்தார். இப்போது திடீரென்று ஏ.என்.எஸ். வருவதாகச் சொல்லவும் பேராசிரியர் செய்வதறியாது திகைத்துப் போனார். ஏ.என்.எஸ்.சிடம் விஷயத்தைச் சொல்லி அவரைத் தனியாக வருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் "இல்லைடா, இடமில்லைன்னா, நான் உன் மடியிலாவது உட்கார்ந்துதான் வருவேன்" என்று சொல்லிவிட்டார். வேறு வழியின்று தன் கார் ஓட்டுனரை அழைத்து காரை எடுத்துக் கொண்டு சிவராமன் இல்லம் சென்று அவரை அழைத்து வரும்படி சொல்லிவிட்டு, அவர் வீட்டுக்குப் போகும் வழியையும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பேராசிரியர் மனைவி வந்து ஓட்டுனரிடம், "குப்புசாமி, அவரைப் பார்த்தால் மிகவும் அப்பாவியாகத் தெரிவார். அவரை அடையாளம் கண்டுகொண்டு மரியாதையுடன் அழைத்து வா" என்றார்.

ஓட்டுனர் ஏ.என்.எஸ். வீட்டுக்குச் சென்றார். அப்போது அவர் தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு ஒரு கைக்கு அணையாக ஒரு தலையணையை வைத்துக் கொண்டு ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவர் தோற்றத்தைப் பார்த்து அவர் அந்த வீட்டுச் சமையற்காரன் என்று நினைத்து ஓட்டுனர் அவரிடம் "ஓய்! ஐயரே!" என்று அழைத்து தான் இன்னார் வீட்டிலிருந்து வருவதாகவும், இந்த வீட்டு ஐயாவை அழைத்துப் போக வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அப்படிச் சொல்லிவிட்டு ஓட்டுனர் காருக்குத் திரும்பி விட்டார். சிறிது நேரத்தில் ஏ.என்.எஸ். ஒரு ஜமக்காளத்தில் ஒரு தலையணையை வைத்து எடுத்துக் கொண்டு வந்து டிக்கியைத் திறக்கும்படி ஓட்டுனரிடம் கேட்டார். ஓட்டுனர் அவரிடம் "ஓய், ஐயரே! அங்கே படுக்க தலையணையெல்லாம் தருவார்கள், ஐந்து பேர் போகவேண்டும், இந்த படுக்கைக்கெல்லாம் இடமில்லை" என்று சொன்னார்.

அதற்கு ஏ.என்.எஸ். "நீ சொல்வது சரிதான்" என்று சொல்லிவிட்டுத் தன் படுக்கையை உள்ளே கொண்டுபோய் போட்டுவிட்டு வந்தார். வீட்டு ஐயா இனிமேல்தான் வரப்போகிறார் என்ற நினைப்புடன் ஓட்டுனர் பயபக்தியோடு காருக்கு அருகில் நின்று கொண்டார். அவருக்கு அப்போது ஒரு அதிர்ச்சி. யாரைப் பார்த்து "ஓய், ஐயரே!" என்று அலட்சியமாக விளித்தாரோ, அந்த மனிதர் ஒரு சிறு கைப்பெட்டியுடன் காருக்குள் வந்து அமர்ந்து விட்டார். ஓட்டுனருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. காரை ஓட்டிக் கொண்டு பேராசிரியர் வீட்டுக்கு வந்து விட்டார்.

வீட்டு வாயிலில் காரை நிறுத்திவிட்டு, வீட்டின் பின்புறமாகப் போய் "அம்மா, அம்மா" என்று பேராசிரியரின் மனைவியைக் கூப்பிட்டார். அப்போது அ.ச.ஞா.வும் அவர் மனைவியும் சிவராமனை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தனர். ஓட்டுனரின் குரல் கேட்டு அம்மையார் பின்புறம் சென்றார். அப்போது அவர் அம்மாவிடம் "அம்மா, அம்மா, ஒரு பெரிய தப்பு நடந்துட்டுது" என்று தொடங்கி நடந்தவற்றைத் தெரிவித்தார். சரி போ, நான் போய் அவரிடம் சொல்லி சமாளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே சென்று நடந்த எல்லா விவரங்களையும் பேராசிரியர், ஏ.என்.எஸ். இருவரிடமும் சொல்லி ஓட்டுனர் சார்பாக மன்னிப்பு வேண்டினார்.

அடுத்த வினாடி சிவராமன் என்னும் அந்த மாமனிதர் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, ஓட்டுனரை அழைத்தார். அவரும் பவ்யமாக வந்து நின்றார். "குப்புசாமி! எல்லாத்தையும் மறந்துவிடு. இப்போதிலிருந்து நாம் காரைக்குடி போய் திரும்பி வரும் வரை ஐந்து நாளும் இந்த வண்டி என்னுடையது. நீ என்னுடைய ஓட்டுனர். நான் சொல்வதை மட்டும் கேட்டால் போதும், வேறு யார் பேச்சையும் கேட்க வேண்டியதில்லை. நான் சொல்வதை மட்டும் சரியாக செய்து கொண்டிரு. இந்தா இதை வைத்துக் கொள் என்று சொல்லி ஒரு ரூபாய் தாள் அடங்கிய ஒரு கட்டை அவனிடம் கொடுத்து, இந்தா இதை வைத்துக் கொண்டு காரைக்குடி போய்ச்சேரும் வரையில் வேர்க்கடலை, நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு எல்லாம் வழியில் எங்கெல்லாம் கிடைக்கிறதோ, அங்கு வாங்கிக்கொண்டு வரவேண்டியது உன் வேலை. காருக்கு பெட்ரோல் எல்லாம் ஞான்சம்பந்தம் பொட்டுடுவார்" என்றார். இது ஒரு நிகழ்ச்சி.

இன்னொரு நிகழ்ச்சி. ஏ.என்.எஸ். பல்மொழி வித்தகர் என்பது அனைவருக்கும் தெரியும். நான்கு வேதங்களையும் நன்கு அத்யயனம் செய்த பண்டிதர்களை வைத்து பாராயணம் செய்ய வைத்து அதனைப் பெரிய ஒலி நாடாக்களில் பதிவு செய்து வைத்திருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதை போட்டுக் கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒரு முறை அ.ச.ஞா. அவர்களுக்கு ஸ்ரீ ருத்ரம் பற்றிய ஆய்வு நூல் விளக்கம் எழுத வேண்டியிருந்தது. அப்போது அவருக்கு ஒரு ஐயப்பாடு எழுந்தது. ஸ்ரீ ருத்ரத்தின் அடிப்படை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஸ்ரீ ருத்ரம் எப்போது யாரால், எதற்காக பாடப்பட்டது என்பது தெரிய வேண்டும். ஏ.என்.எஸ். எல்லா வேதங்களையும் ஒலிப்பதிவு செய்து வைத்திருப்பவர் அல்லவா? அதை அவர் தன் காதுக்கு மட்டும் கேட்கும்படியாக இயர் போஃனை பயன்படுத்திக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அப்படி காரைக்குடியில் தங்கியிருந்த ஏ.என்.எஸ். அவர்களிடம் பேராசிரியர் "எப்போதும் யஜுர் வேதம் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்களே, ஸ்ரீருத்ரம் எப்போது செய்யப் பெற்றது என்பதைச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார். அதற்கு அவர் ஒவ்வொரு ஒலி நாடாவும் 1200 அடி நீளமுள்ளது. அதைப் போல 19 நாடாக்கள் இருக்கின்றன. இதில் நீ கேட்கும் வினாவுக்கு விடையை எங்கு போய் தேடுவது? என்றார்.

எப்படியாவது நீங்கள்தான் உதவி செய்ய வெண்டும் என்று பேராசிரியர் கேட்க, அவரும் கண்களை மூடிக் கொண்டிருந்துவிட்டு சொன்னார், "சம்பந்தா! நீ ஒன்று செய். கண்களை இறுக மூடிக் கொண்டு இங்கிருக்கும் ஒலி நாடாக்கள் உள்ள பெட்டியில் கையை வைத்து ஒரு நாடாவை எடு." என்றார். இது என்ன கண்கட்டி வித்தை என்று பேராசிரியரும் ஒன்றை எடுத்தார். அதை வாங்கி ஏ.என்.எஸ். ஒலிநாடாவை இயந்திரத்தில் வைத்து இயர் போனைக் காதில் மாட்டிக் கொண்டு இயக்கினார்.

கேட்டுக் கொண்டிருந்தவரின் முகம் அப்போது மலர்ந்தது. "சம்பந்தா! நீ அதிர்ஷ்டக்காரன். நீ கேட்டது கிடைத்துவிட்டது" என்றார். அவர் சொன்னார், "கருட சயனம் என்ற யாகம் ஆயிரத்தெட்டு செங்கற்களை கருடன் வடிவில் வைத்து அதன் வயிற்றுப் பகுதியில் இருந்து கொண்டு யாகம் செய்யப் பெறுவது. யாகம் செய்யும் ஆச்சாரியன் கருடன் வயிற்றுப் பகுதியில் அமர்ந்திருக்கிறான். பணம் கொடுத்து யாகம் செய்யும் தலைவன் வெளியில் இருந்து கொண்டு "யாகத்தைத் தொடங்கலாமா?" எனக் கேட்கிறான். அப்போது ஆச்சார்யன் சொல்கிறான். "ஏனைய யாகங்களில் ருத்திரனுக்கு அவிற்பாகம் இல்லாதது போல, இந்த யாகத்திலும் அவனுக்கு அவிற்பாகம் கிடையாது. ஆனால் மிகக் கொடியவனாகிய ருத்திரன் இந்த யாகம் நிறைவேறாமல் ஏதேனும் குழப்பம் விளைவிப்பான். எனவே அவனைத் திருப்தி படுத்தும் படியாக இந்தக் கருடப் பறவையின் இடது இறக்கைக்கு வெளியே அவனுக்கு ஒரு ஹோமம் செய்ய வேண்டும். அப்படி நடத்தும் யாகத்தில், பொதுவாக எந்த யாகத்திலும் பயன்படுத்தக் கூடாத பொருட்களைக் கொண்டு அங்கு ஹோமம் செய்ய வேண்டும். இந்த யாகத்தில் செப்புப் பாத்திரத்தைப் பயன்படுத்துகிறோம் மண் சட்டி கூடவே கூடாது. இந்த யாகத்தில் காராம்பசுவின் பாலைப் பயன்படுத்துகிறோம், ஆடுப்பால் பக்கத்தில்கூட வரக்கூடாது. இந்த யாகத்தில் பாலை நெருப்பில் எடுத்துச் சொரியும் 'சுரு' என்ற கரண்டிபோல மாவிலையைப் பயன்படுத்துகிறோம், எருக்கலையைத் தொடவே கூடாது. இப்போது இடப்புற இறக்கைக்கு வெளியே அமர்ந்து கொண்டு, ருத்திரனுக்கு ஒரு ஹோமம் செய்யப் போகிறேன். மண் சட்டியில், ஆட்டுப்பாலைக் கொண்டு, ஸ்ரீருத்திர மந்திரங்களைச் சொல்லி ருத்திரனுக்கு இதைச் செய்துவிட்டல், அவன் திருப்தி அடைந்துவிடுவான். எனவே, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்" என்று கட்டளையிடுகிறான். இந்த பகுதியில்தான் ஆச்சார்யன் வாக்காக ஸ்ரீருத்ரத்தின் அனுவாகமாக இருக்கிறது எனும் செய்தியைச் சொன்னவர் ஏ.என்.சிவராமன் என்கிறார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம்.

இப்படிப்பட்ட பெருமக்கள் இந்த மண்ணில், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பதே நாம் பெருமைப்பட வேண்டிய செய்தியாகும். வாழ்க ஏ.என்.சிவராமன் புகழ்!

























1 comment:

துரை செல்வராஜூ said...

வெகுநாட்களுக்குப் பிறகு.. தங்கள் தளத்தில் பதிவு!..

தினமணி ஏ.என்.சிவராமன் அவர்களைப் பற்றிய விரிவான பதிவு.. ஸ்ரீருத்ரம் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி ஐயா..