பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, March 17, 2015

பாரதியாரின் பகவத் கீதை உரை. தொடர்ச்சி.....2

மகாகவி பாரதியாரின் பகவத் கீதை உரை.  தொடர்ச்சி.....

சென்ற பகுதியில் முன்னுரையின் 6 பகுதிகளைப் படித்தீர்கள். இந்தப் பகுதியில் 7 முதல் 12 பகுதிகளைப் படிக்கலாம். இனியும் தொடர்ந்து வரும்.            

                                                     
                                         

                                                               
7.

குந்தியின் மகனே, சீதளம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பனவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து போகும் இயல்புடையன. அநித்யமாவன; அவற்றைப் பொறுத்துக் கொள், பாரதா!"
(பகவத் கீதை,2-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்)

"ஆண்காளையே!  இவை எந்த மனிதனைத் துன்புறுத்தமாட்டாவோ, இன்பத்தையும் துன்பத் தையும் நிகராகக் கருதும் அந்தத் தீரன் சாகாதிருக்கத் தகுவான்" (
மேற்படி 15-ஆம் சுலோகம்)

இஃதே பகவத் கீதையின் சிகரம்.

சாகாதிருத்தல், மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல், இதுவே கீதையின் ரஸம்.

அமரத்தன்மை;  இஃதே வேத ரகஸ்யம்.

இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.

இறந்து போன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவர்களாகவே கருதப் படுதல்வேண்டும். நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்திய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்திய மென்று மேற்கூரிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதித்திருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பிட்டிருக்கிறார். குளிர் - வெம்மை,  இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருபையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடைய கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்.

                                                         
8.

'அமிர்த சாஸ்திரம்' - அதாவது சாகாமலிருக்க வழி கற்றுக் கொடுக்கும் சாஸ்திரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச் சில மூடர் கருதுகின்றில‌ர்.

துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.
இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.

க்ஷத்திரய அரசர் படித்துப் பயன்பெறச் செய்ய வேண்டுமென்பதே இந்த நூலில் விசேஷ நோக்கம். பூ மண்டலத்தாரனைவருக்கும் பொதுமையாகவே விடுதலைக்குரிய வழிகளை உணர்த்த வேண்டுமென்று கருதி எழுதப்பட்டதே பகவத் கீதை. இதில் ஐயமில்லை. எனினும், இந்த நூல் க்ஷத்திரிய மன்னருக்கு விசேஷமாக உரியது. இது அவர்களுக்குள்ளேயே அதிகமாக வழங்கி வந்தது.  வேதங்கள், எப்படி உலகத்துக்கெல்லாம் பொதுவே ஆயினும், பிராமணர்களுக்கு விசேஷமாக உரியனவோ, அதுபோலே புராணங்கள் க்ஷத்திரியர்களுக்கு உரியன.

மேலும் கீதையைச் சொன்னவன் ராஜா; கேட்டவன் ராஜா. 

ஆதலால் க்ஷத்திரிய அரசருக்கு இதில் ரஸம் உண்டாகும் பொருட்டாக இது போர்க்களத்தை முகவுரையாகக் கொண்ட மகா அற்புத நாடகத் தொடக்கத்துடன் ஆரம்பிக்கிறது. இஃது, இந்நூல் ஞான சாஸ்திரங்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்த தென்பதற்குச் சான்றாகும்.

ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை யென்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.

"முகவுரையில் மாத்திரமன்று? நூலில், நடுவிலும் இடையிடையே, 'தஸ்மாத் யுத்யஸ்வ பாரத'- 'ஆதலால், பாரதா, போர் செய்', என்ற பல்லவி வந்துகொண்டேயிருக்கின்றதன்றோ? என்று கூறிச் சிலர் ஆக்ஷேபிக்கலாம். அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன். அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன். துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவசிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா.

                                                         
9.

இந்த ரகசியம் உனக்கு எங்ஙனம் தெரிந்ததென்று கேட்பீர்களாயின், சொல்கிறேன்.

கண்ணனை நோக்கி அர்ஜுனன் சொல்லுகிறான்:

"நீ வாயு:, நீ சந்திரன்; நீ வருணன்; நீ அனைத்திற்கும் பிதா; பிதாமகன்" (
கீதை 11-ஆம் அத்தியாயம், 39-ஆம் சுலோகம் )

கண்ணன் சொல்லுகிறான்: 'மறுபடியும், பெருந்தோளுடையாய், எனது பரம வசனத்தைக் கேட்பாய். என் அன்புக்குரிய நினக்கு நலத்தைக் கருதி அதனைச் சொல்லுகிறேன்.' (
கீதை 10-ஆம் அத்தியாயம், முதல் சுலோகம்)

'நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடு கிறான்' -
(கீதை 10-ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)

எனவே, கீதையில் கேட்பான் சொல்வான் என்ற இரு திறத்தினரும் ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்பதை வற்புறுத்துகிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா என்ற மாத்திரத்திலே அர்ஜுனன் ஜீவாத்மா என்பதும் துரியோதனாதியர் காமக் குரோதிகளென்பதும் சாஸ்திரப் பயிற்சியும் காவியப் பயிற்சியும் உடையோரால் எளிதில் ஊகித்துக் கொள்ளத்தக்கனவாம்.

'பிரபோத சந்திரிகை' என்ற ஒரு நாடக நூல் இருக்கிறது. அதில் விவேகன் என்ற ராஜன் உலோகாயதன், பௌத்தன் முதலியவர்களுடனே யுத்தம் செய்து வென்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. வேதாந்த சாஸ்திரப் பயிற்சியில்லாத ஒரு குழந்தை அந்த நூலைப் பார்த்துவிட்டு, அதாவது, முன்பின் பாராமலே நடுவிலே மாத்திரம் பார்த்துவிட்டு, மேற்படி யுத்தம் எந்த வருஷத்தில் நடந்ததென்றும், அதில் இரு திறத்திலும் எத்தனை உயிர்கள் மடிந்தவென்றும் கேட்கப் புகுவதுபோல், சிலர் துரியோதனாதியரைக் கொல்லும் புறப் பொருளிலே கீதையின் உபதேசத்தைக் கொள்ளுகின்றனர்.

ஹிந்துக்களாலே ஹிந்து தர்மத்தின் மூன்று ஆதார நீதிகளாகக் கருதப்படும் பிரஸ்தான திரவியங்களாகிய உபநிஷத், பகவத் கீதை, வேதாந்த சூத்திரம் - என்பவற்றுள் கீதை இரண்டாவதென்பதை இந்தச் சில மூடர் மறந்து விடுகின்றனர். 'இதற்கு - அதாவது, பகவத் கீதைக்கு - சங்கரர், ராமானுஜாசாரியார், மத்வாசாரியார் என்ற மூன்று மத ஸ்தாபகாசாரியரும் வியாக்கியானமெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள்' என்பதை இந்த மூடர் அறிகின்றிலர். கொலைக்குத் தூண்டும் நூலொன்றுக்கு சங்கராச்சாரியார் பாஷ்யம் எழுதுவதென்றால், அஃது எத்தனை விநோதமாக
இருக்குமென்பதைக் கருதித் தம்மைத் தாமே நகைக்குந் திறமையிலர்.

கொலை எவ்வளவு தூரம்! பகவத்பாத சங்கராசாரியார் எவ்வளவு தூரம்!

மேலும், நாம் மேலே கூறியபடி, பகவத் கீதையைக் கொலை நூலென்று வாதாடுவோர், அதில் முகவுரை மாத்திரம் படித்தவர்களேயன்றி, நூலின் உட்பகுதியில் நுழைந்து பார்த்தவரல்லர் என்பதில் சந்தேகமில்லை.

ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.

                                                          
10.

இங்ஙனம் மோக்ஷத்தை அடைய விரும்புவோனுக்கு முக்கியமான சத்துரு - ஒரே சத்துரு - அவனுடைய சொந்த மனமேயாம். 'தன்னைத்தான் வென்றவன் தனக்குத் தான் நண்பன், தன்னைத்தான் ஆளாதவன் தனக்குத் தான் பகைவன். இங்ஙனம் ஒருவன் தானே தனக்குப் பகைவன், தானே தனக்கு நண்பன்' என்று கடவுள் சொல்லுகிறார்.

தன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் தனக்குப் பிறிதில்லை. தன்னையொழியத் தனக்குப் பகையும் வேறு கிடையாது. ஒருவன் தனக்குத்தான் நட்பாகியபோது, உலக முழுதும் அவனுக்கு நட்பாய் விடுகிறது. அங்ஙனமின்றித் தான் கட்டியாளாமல் தனக்குத் தான் பகையாக நிற்போனுக்கு வையகமெல்லாம் பகையாகவே முடிகிறது. உள்ளப் பகையே பகை, புறப் பகை பகையன்று. உள்ளப் பகையின் வெளித் தோற்றமே புறப் பகையாவது. உள்ளப் பகையை களைந்து விட்டால், புறப்பகை தானே நழுவிப் போய்விடும்.

புறத்தே எல்லாம் கடவுளாகப் போற்றத் தக்கது. உள்ளப் பகையாகிய அஞ்ஞானம் - அதாவது வேற்றுமை உணர்ச்சி - ஒன்று மாத்திரமே அழித்தற்குரியது.

வேற்றுமையுணர்ச்சியை நீக்கி, நம்மைச் சூழ நடைபெறும் செயல்களெல்லாம் ஈசன் செயல் களென்றும், தோன்றும் தோற்றங்களெல்லாம் ஈசனுடைய தோற்றங்களென்றும் தெரிந்து கொள்ளுமிடத்தே பய நாசம் உண்டாகிறது.

"சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே?
'சொல்'லென்று ஹிரண்யன் தான் உறுமிக்கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் 'தூணி லுள்ளான்,
நாராயணன் துரும்பினுள்ளா' னென்றான்,
வல்லமை சேர் கடவுளிலா இடமொன்றில்லை,
மகா சக்தி யில்லாத வஸ்து இல்லை,
அல்ல லில்லை, அல்ல லில்லை, அல்ல லில்லை,
அனைத்துமே தெய்வ மென்றா லல்ல லுண்டோ ?"

'தன் மனமே தனக்குப் பகையென்பது பேதைமையன்றோ? எல்லாம் கடவுளாயின், என் மனமும் கடவுள் அன்றோ? அதனைப் பகைவனாகக் கருதுமாறென்னே?' எனில் - தன்னைத்தான் வென்று தனக்குத்தான் நன்மை செய்யும்போது, தன்னுடைய மனம் தனக்குத்தான் தன்மையுடையாதாகக் கருதிப் போற்றத் தக்கது. மற்றப்போது பகையாம்.

எல்லாம் கடவுளாயின், மனம் தீமை செய்யும்போது கடவுளாகுமன்றோ? 'எப்பொருள் யாது செய்யுமேயாயினும் அப்பொருள் கடவுள், அதன் செய்கை கடவுளுடைய செய்கை' யென்னும், விதி மாறாதன்றோ? எனில் - அவ்விறை மெய்யே எனினும், நமக்கு லோகானுபபவத்தில் மனம் நமக்குத் தீமை செய்கிறது. அதை வென்று நன்மை செய்யத் தக்கதாகப் புரிதல் சாத்தியம்.

அங்ஙனம் செய்யும் பொருட்டாகவே, சாத்திரங்களும், வேதங்களும் எண்ணிறந்தனவாச் சமைக்கப் பட்டிருக்கின்றன.

மனம் துன்பமிழைப்பதையும், அதனால் உயிர்கள் கோடானு கோடியாக மடிவதையும் நாம் கண் முன்பு காணும்போது, அதை ஒரேயடியாக மறுத்து விடுவதில் பயனில்லை.

மனம் இயற்கையாலும், தீய சகவாசத்தாலும் ஆத்மாவுக்குத் துன்பமிழைத்தல் பிரத்தியக்ஷம். நல்ல கூட்டத்தாலும், நல்ல பயிற்சியாலும் அதனை உபகார வஸ்துவாகச் செய்தல் சாத்தியமென்பது யோகிகளின் சர்வ சாதாரண அனுபவம்.

எல்லாம் கடவுளுடைய செயலென்பது பொது உண்மை. பரம சத்தியம். ஆயினும் மனிதனுக்குத் துன்பமுண்டு, எல்லாம் கடவுளுடைய வடிவமென்பது பரம சத்தியம். எனினும், ஜீவர்கள் துயரப்படுவதைப் பிரத்தியக்ஷமாகக் காண்கிறோம்.

அதாவது, கடவுளுக்கு எல்லாம் ஒன்றுபோலவேயாம், எத்தனை கோடி உயிர்கள் வாழ்ந்தாலும், எத்தனை கோடி உயிர்கள் மடிந்தாலும், கடவுளுக்கு யாதொரு பேதமுமில்லை. அண்ட கோடிகள் சிதறுகின்றன. பூகம்பமுண்டாகித் தேசங்களழிகின்றன.

சூரிய கோளங்கள் ஒன்றோடொன்று மோதித் தூளாகின்றன. இவையனைத்தும் புதியன புதியனவாகத் தோன்றுகின்றன. கோடிப் பொருள்கள் -

கோடியா? ஒரு கோடியா? கோடி கோடியா? கோடி கோடி கோடிகோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடியா? அன்று. அநந்தம். எண்ணத் தொலையாதன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணந்தோறும் தோன்றுகின்றன. எண்ணத் தொலையாத பொருள்கள் க்ஷணந்தோறும் மடிகின்றன. எல்லாம் கடவுளுக்கு ஒரே மாதிரி. சலித்தல் அவருடைய இயல்பு. அவருடைய சரீரமாகிய ஜகத் ஓயாமல் சுழன்று கொண்டிருத்தல் இயற்கை. இதனால் அவருக்கு அசைவில்லை. அவருக்கு அழிவில்லை.

கடவுள் எங்குமிருக்கிறார், எப்போதுமிருக்கிறார், யாதுமாவார். எனினும், தனி உயிருக்கு இன்பமும் துன்பமும் இருப்பதைக் காண்கிறோம். ஜீவர்கள் அஞ்ஞானத்திலேதான் துன்பங்களேற்படுத்திக் கொள்ளுகிறார்களென்பது மெய்யே. அவர்களுக்கு யதார்த்தத்தில் தீமைகளேனும் துன்பங்களேனும் இல்லை என்பது மெய்யே.

ஆனாலும், அந்த அஞ்ஞானம் ஒரு தீங்குதானே? அதைத் தொலைக்கத்தானே வேண்டும்? மனத்தைக் கட்டுதல், மனத்தை வெல்லுதல் என்பதெல்லாம் அஞ்ஞானத்தைத் தொலைத்தல் என்ற பொருளன்றி வேறு பொருள் இலதாம்.
                                                                           
                                                                        11

‘அஞ்ஞானமும் கடவுள் மயந்தானே? அதை ஏன் தொலைக்க வேண்டும்? என்று கேட்டால் -நீ 'எல்லாம் கடவுள், ஞானமும் கடவுள், அஞ்ஞானமும் கடவுள்' என்பதை உண்மையாகத் தெரிந்த அளவில் உன்னைப் பரம ஞானம் எய்திவிட்டது. உனது அஞ்ஞானமும் நீங்கிப் போய்விட்டது. அஞ்ஞானமும் அதனாலாகிய துன்பமும் கடவுள் மயம் என்பது மெய்யே எனில் பின்னர் அவை நீங்கி, நீ ஞானமும் இன்பமும் எய்தியதும் கடவுள் செயலென்பதை மறந்து விடாதே. அவ்விடத்து அஞ்ஞானம் நீங்கியது பற்றி வருத்தப் படாதே.

                                                                      
12  

கடவுளை உபாஸனை செய்தவற்குரிய வழி எங்ஙனமெனில் :- ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் - 'நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடை யோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்' (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)

எந்த ஜந்துவுக்கும் இம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த்தொண்டர் ஆகார், எந்த ஜீவனையுங்கண்டு வெறுப்பெய்துவோர் ஈசனுடைய மெய்யன்பரென்று கருததத்தகார். மாமிச போஜனம் பண்ணுவோர் கடவுளுக்கு மெய்த்தொண்டராகார். மூட்டுப் பூச்சிகளையும்,  பேன்களையும் கொல்வோர் தெய்வ வதை செய்வோரேயாவார்.

'அஹிம்ஸா பரமோ தர்ம' :- 'கொல்லாமையே முக்கிய தர்மம்' என்பது ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கைளில் ஒன்றாம். கொல்லாமையாகிய விரதத்தில் நில்லாதவன் செய்யும் பக்தி அவனை அமரத் தன்மையில் சேர்க்காது. மற்றோருயிரைக் கொலை செய்வோனுடைய உயிரைக் கடவுள் மன்னிக்க மாட்டார். இயற்கை கொலைக்குக் கொலை வாங்கவே செய்யும்.

இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் 'common sense' என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.

சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொன்ன‌ மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொதுவென்று விளங்குகிறது. ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்கவொட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், 'நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது. நேசத்தாலே நேசம் பிறக்கிறது. அன்பே அன்பை விளைவிக்கும்.

நாம் மற்ற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டிலும், நம்மிடம் மற்ற உயிர்கள் அதிக அன்பு செலுத்த வேண்டுமென்று விரும்புதல் சகல ஜீவர்களின் இயற்கையாக இயல் பெற்று வருகிறது. இந்த வழக்கத்தை உடனே மாற்றிவிட வேண்டும். இதனால் மரணம் விளைகிறது.

நாம் மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். அதனால் உயிர் வளரும், அதாவது நமக்கு மேன்மேலும் ஜீவசக்தி வளர்ச்சி பெற்றுக் கொண்டு வரும். நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டு மிருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை.



No comments: