பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 18, 2015

பகவத் கீதை -- பதிநான்காம் அத்தியாயம்

                                                      பகவத் கீதை
                                                         பதிநான்காம் அத்தியாயம்
                                                    
குணத்ரய விபாக யோகம்

தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முன்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தைப் படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும் ஜீவனையும் சேர்க்கிறார். பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மை காமத்துக் கேற்ப தேவ மனுஷ்ய பசு பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது. ரஜஸ், அவா, பற்றுதல் முதலிய குணங்களை யளித்து கர்மங்களில் தூண்டுகிறது. தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளை தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

1. ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீண்டும் உரைக்கிறேன். அதையறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள்.

2. இந்த ஞானத்தையடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர் படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.

3. பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா! எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.

4. எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா.

5. சத்துவம், ரஜஸ், தமஸ் -- இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய்! இவையே உடம்பினுடன் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.

6. அவற்றுள்ளே சத்துவம் நிர்மலத் தன்மையால் ஒளி கொண்டது; நோவற்றது. பாவமற்றோய்! அது இன்பச் சேர்க்கையாலும், ஞானச் சேர்க்கையாலும் கட்டுப் படுத்துவது.

7. ரஜோ குணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்தி மகனே! அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.

8. தமோ குணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். (இதுவே) எல்லா ஜீவர்களையும் மயங்கச் செய்வது. தவறுதலாலும், சோம்பராலும், உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது, பாரதா!

9. சத்துவம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா! ரஜோ குணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில் பிணிக்கிறது.

10. பாரதா! (சில வேளை) ரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் அடக்கி சத்துவம் இயல்கிறது. (சில வேளை) சத்துவத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது. அங்ங்கனமே, சத்துவத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.

11. இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின், அப்போது சத்துவ குணம் வளர்ச்சி பெற்றதென்றறியக் கடவாய்.

12. அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம், இவை ரஜோ குணம் மிகுதிப்படுவதிலிருந்து தோன்றுகின்றன, பாரதர் காளையே!

13. ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம், இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன, குருகுலச் செல்வமே!

14. சத்துவம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றனவாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.

15. ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமசில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.

16. சத்துவ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.

17. சத்துவத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவா; தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

18. சத்துவ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.

19. குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான். 

20. உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையுங் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

21. இறைவனே, மூன்று குணங்களையுங் கடந்தோன் என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?

கடவுள் சொல்லுகிறான்:

22. ஒளி, தொழில், மயக்கம், இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.

23. புறக்கணித்தான் போலேயிருப்பான், குணங்களால் சலிப்படையான், "குணங்கள் சுழல்கின்றன" என்றெண்ணி அசைவற்று நிற்பான்.

24. துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன், தன்னிலையில் நிற்பான், ஓட்டையும் கல்லையும் பொன்னையும் நிகராகக் காண்பான், இனியவரிடத்தும் இன்னாதவரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்;

25. மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான், நண்பரிடத்தும் பகைவரிடத்தும் நடுநிலைமை பூண்டான், எல்லாவிதத் தொழிலெடுப்புக்களையுந் துறந்தான் -- அவனே குணங்களைக் கடந்தவனென்றும் சொல்லப்படுகிறான்.

26. வேறுபாடில்லாத பக்தி யோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத் தன்மை பெறத் தகுவான்.

27. சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமை யின்பத்துக்கும் நானே இடம்.

No comments: