பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 18, 2015

பகவத் கீதை -- மூன்றாம் அத்தியாயம்

                                                             
                                                     ஸ்ரீமத் பகவத் கீதை
                                                               மூன்றாம் அத்தியாயம்
                                             கர்ம யோகம்

ர்மயோக, ஞான யோகங்களுள் ஞானயோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும், கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு தொழிலைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிருந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டு வந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே செய்யக் கடவன். ஏனெனில், இவனது உண்மை நிலையறியாத பாமரர்களும், இவனைக் கண்டு தாங்களும் கர்மங்களைவிட்டு ஞானத்துறையில் துணிவுறுவார்கள். அதனால் அவர்கள் கர்மயோகத்தையிழந்ததுமின்றி ஞானயோகத்தையுமிழந்து முன்னிலும் தாழ்ந்த நிலைமைக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் கெடுவதற்கு இவனே காரணமாவான். ஆகையால் ஞான யோகத்தில் திறமையுள்ளவனுக்கும், திறமையில்லாதவனுக்கும், கர்மயோகமே மேலானது. கர்மங்களைச் செய்யும்போது, 'இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும் ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடைய பிரீதிக்காகவே செய்கிறோம்', என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. ஜநார்த்தன! செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?

2. குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

3. பாபமொன்றுமில்லாத அர்ஜுனா, இவ்வுலகத்தில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது, ஸாங்கியர்களின் ஞானயோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.

4. தொழில்களைத் தொடாமலேயிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.

5. எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் தொழில் புரிவிக்கின்றன.

6. கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யொழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.

7. அர்ஜுனா! எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக் கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.

8. விதிக்கப்பட்ட தொழிலை நீ செய். தொழில் தொழிலின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? தொழிலின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டு செலுத்துதல்கூட உனக்கில்லாமல் போய்விடும்.

9. வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றை களைந்து தொழில் செய்து கொண்டிரு.

10. முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: "இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.

11. இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர்; (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

12. வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாம் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனேயாவான்.

13. வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லாப் பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள்.

14. அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது. மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.

15. செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுகிறது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.

16. இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான், புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.

17. தன்னிலே தான் இன்புறுவான், தன்னிலே தான் திருப்தியடைவான், தன்னிலே தான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை.

18. அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.

19. ஆதலால் எப்போதும் பற்று நீங்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் தொழில் செய்து கொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.

20. ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.

21. எதனையெதனை உயர்ந்தோன் செய்கிறானோ, அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதைப் பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.

22. பார்த்தா! மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் இயங்குகிறேன்.

23. நான் சோம்பரில்லாமல் எப்போதும் தொழில் செய்து கொண்டிராவிடின், பார்த்தா, எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுவார்கள்.

24. நான் தொழில் செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்; குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களையெல்லாங் கொல்வோனாவேன்.

25. பாரதா! அறிவில்லாதார் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்.

26. அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது. அவன் யோகத்தில் நின்று தொழில் செய்து எல்லாத் தொழில்களையும் கவர்ச்சியுடையனவாக்க வேண்டும்.

27. எங்கும் தொழில்கள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், "நான் செய்கிறேன்" என்று நினைக்கிறான்.

28. குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், 'குணங்கள் குணங்களில் இயலுகின்றன' என்று கருதிப் பற்றற்றிருப்பான்.

29. இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் தொழில்களிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மனிதர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக்கூடாது.

30. எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.

31. என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப் பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் தொழில்களிலிருந்து விடுபடுகிறார்கள்.

32. என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களொ, எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்து கொள்.

33. ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது. 

34. இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித் தடைகளாம்.

35. நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும், ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பர தர்மம் பயத்துக்கிடமானது.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

36. விருஷ்ணி குலத் தோன்றலே! மனிதனுக்கு இச்சையில்லாதபோதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவது போல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?

பகவான் சொல்லுகிறான்:

37. இஃது விருப்பமும் சினமும், ரஜோ குணத்திற் பிறப்பது; பேரழிவு செய்வது; பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.

38. புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசு படுவது போலவும், கர்ப்பத்தைக் கருப்பை சூழ்ந்திருப்பது போலவும் இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.

39. குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.

40. இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர். இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.

41. ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்த பாவத்தைக் கொன்று விடு.

42. இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்; மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).

43. இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிப்படுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!

No comments: