பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 18, 2015

பகவத் கீதை -- பதினொன்றாம் அத்தியாயம்


                                                      பகவத் கீதை
                                                        பதினொன்றாம் அத்தியாயம்
                                                          
விசுவரூப தரிசனம்

ங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட அவன் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறான். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான். விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான். பிறகு அர்ஜுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தனது விசுவரூபத்தைச் சுருக்கிக் கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு சக்கரங்களையுமேந்தி நின்று, தனது உண்மையான சொரூபத்தைக் காணவும் தன்னைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தன்னையே நேசித்திருக்கும்படி அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. என் மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு, என் மயக்கம் தீர்ந்து போயிற்று.

2. உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.

3. பரமேசுவரா, புருஷோத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே, நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.

4. இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

5.           பல நூறாகவும், பல்லாயிரமாகவும்
             வகை பல, நிறம் பல, அளவு பலவாகும்
             என் திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா!

6. ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார். மருத்துக்களைப் பார்; பாரதா! இதற்குமுன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.

7. அர்ஜுனா! இன்று, இங்கே, என்னுடலில் சராசரமான உலக முழுதும் ஒருங்கு நிற்பதைப் பார்; இன்னும் வேறு நீ எதைக் காண விரும்பினும், அதை இங்கு காண்.

8. உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்:

9. அரசனே இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத் தலைவனாகிய ஹரி பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.

10. (அவ்வடிவம்) பல வாய்களும், பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது.

11. திவிய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவ ரூபம்.

12. வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.

13. அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுதும் அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.

14. அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

15. தேவனே! நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன். பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்கு காண்கிறேன்.

16. பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நின்னை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும், தொடக்கமேனும் காண்கிலேன்.

17. மகுடமும் தண்டும் *வலயமும் தரித்தாய். ஒளித்திரளாகி யாங்கணும் ஒளிர்வாய். தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன். (*வலயம் = சக்கரம்)

18. அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தாய்; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்றுமியல் அறத்தினைக் காப்பாய்; 'சநாதன புருஷன்' நீயெனக் கொண்டேன்.

19. ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறவினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாகக் கொண்டனை; எரியுங் கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙன முன்னைக் காண்கிறேன்.

20. வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசையும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.

21. இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றனர்.

22. *ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவே தேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர், இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.

(*இங்கே கூறப்படும் ருத்திரர் முதலானோர் தேவ வகுப்புகளாவார்)

23. பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. யானும் அங்ஙனமே.

24. வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது. திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது. இனைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை. யான் அமைதி காணவில்லை.

25. அஞ்சு தரும் பற்களையுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே, எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க!

26. இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்த கர்ணனும் நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்,

27. கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர்.

28. பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல் இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.

29. விளக்குப் பூச்சிகள் மிகவும் விரவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போல, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.

30. கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் தங்கதிர்களால் வைய முழுதையும் நிரப்பிச் சுடுகின்றன.

31. உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக, தேவற்களிற் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள் புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

32. உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிருதிறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்ச மாட்டார்கள்.

33. ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள். நான் இவர்களை ஏற்கனவே கொன்றாய் விட்டது. *இடக்கை வீரா, நீ வெளிக்காரணமாக மட்டும் நின்று தொழில் செய். 

(*இடக்கைவீரன் என்பது பார்த்தனுக்கு ஒரு பெயர்)

34. துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல்; அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்.

சஞ்சயன் சொல்லுகிறான்:

35. கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீட்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

36. *இருஷிகேசா! உன் பெருங்கீர்த்தியில் உலகங் களிப்பதும் இன்புறுவதும் பொருந்தும். ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள். சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.

(இருஷிகேசன் (ரிஷிகேசன்) என்பது கண்ணனுக்கு ஒரு பெயர்)

37. மகாத்மாவே! நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய். அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம்.

38. நீ ஆதிதேவன், தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம். நீ அறிவோன், நீ அறிபடு பொருள். நீ பரமபதம். அநந்த ரூபா நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்.

39. நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டனாகிய பிரமன் நீ. உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீண்டு மீண்டும் உனக்கு "நமோ நம:"

40. உன்னை முன்புறத்தே கும்பிடுகிறேன்; உன்னைப் பின்புறத்தே கும்பிடுகிறேன். எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலியுடையாய், சர்வத்திலும் நிறைந்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன்.

41. இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல் நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, "ஏ கண்ணா! ஏ யாதவா! ஏ தோழா!" என்று தவறுதலாவேனும் அன்பாலேனும் நான் சொல்லியிருப்பதையும்,

42. விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னே யெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் -- அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன், அளவற்றோய்!

43. சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய், இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை, எனில் உனக்கு மேல் வேறு யாவர்? மூன்று உலகங்களையும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

44. ஆதலால், உடல் குனிய வணங்கி நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா, வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனை தோழன் போலும், அன்பனை யன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.

45. இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்ச்சியுறுகிறேன் எனினும், என் மனம் அச்சத்தால் சோர்கிறது. தேவா, எனக்கு, நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே, எனக்கருள் செய்க.

46. முன்போலவே, கிரீடமும், தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே, ஆயிரந்தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

47. அர்ஜுனா! யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய், அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ்வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது. 

48. வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா!

49. இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே. அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை இதோ பார்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்:

50. இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடம் கூறி மீண்டும் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

51. ஜனார்த்தனா! நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

52. காண்பதற்கரிய என் வடிவத்தை இங்கு கண்டனை, தேவர்கள்கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள்.

53. என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும், தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது.

54. பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும், என்னுட் புகுதலும் இயலும்.

55.           என் தொழில் செய்வான், எனைத்தலைக் கொண்டோன்
                 என்னுடை அடியான், பற்றெலாம் இற்றான்
                 எவ்வுயிரி டத்தும் பகைமை யிலாதான்
                 யாவன், பாண்டவ! அவனென்னை எய்துவான்.


No comments: