சிறுகதையில் சின்னஞ்சிறு கதை
இது ஒரு சிறுகதை அல்ல. சின்னஞ்சிறுகதை. இதில் நீதி ஒன்றும் கிடையாது. இருப்பதாகக் கருதினால் அது உங்கள் மன வளத்தைக் காட்டுகிறது.
இந்த சின்னஞ்சிறுகதையின் தளம் ஒரு சின்னஞ்சிறிய கிராமம். அந்த கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் இருந்தால் பெரிது. விவசாயம் மட்டுமே முக்கிய தொழில். அனைவருக்கும் நஞ்சை நிலம் இருந்தது. காவிரி நதியின் கிளைநதி பாய்ந்து வயல் வெளிகளை வளமாக வைத்திருந்த கிராமம். இங்கு அடிமட்ட ஏழைகள் என்று எவரும் இல்லை. செல்வத்தில் அடிமட்டத்தில் இருப்பதாகச் சொல்லக் கூடியவருக்கே சகல வசதிகளும் இருந்தன.
இங்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். தினம் அந்திப் பொழுதைத் தாண்டியபின் அவரவர்கள் தங்கள் இல்லங்களில் உணவை முடித்துக் கொண்டு ஊருக்குக் கிழக்கே இருந்த சாவடியின் திண்ணையில் அமர்ந்து ஊர், உலக நிலவரம் குறித்து பேசி, விவாதித்துவிட்டுத்தான் தங்கள் வீடுகளுக்குப் படுக்கச் செல்வார்கள். அப்படியொரு நாள் இவர்கள் பேசி முடித்து வீடுகளுக்குக் கிளம்ப சற்று காலதாமதம் ஆகிவிட்டது. எல்லோரும் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள்.
அன்றிரவு முதல் ஜாமம் முடியும் நேரத்தில் அருகில் பத்து கி.மீ. தூரத்திலிருந்த ஒரு சிறு நகரத்துக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த இருவர் வரும் வழியில் ஊருக்குக் கிழக்கே சாவடிக்கு அருகில் ஒரு புதரில் ஒளிந்திருந்த ஆளைப் பார்த்துவிட்டனர். உடனே கூச்சல் எழுப்பாமல் இவ்விருவருமே புதருக்கு அருகில் சென்று அங்கு ஒளிந்திருந்தவனைப் பிடித்துவிட்டனர்.
பிடித்தவுடன், அவன் யார் ஏன் அங்கு ஒளிந்திருக்கிறான் என்று விசாரித்தனர். அவன் அத்தனை எளிதில் இவர்களுக்கு பதில் சொல்வதாக இல்லை. ஏதேதோ முன்னுக்குப் பின்னாக உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான். இவன் மீது சந்தேகம் கொண்ட அவ்விருவரில் ஒருவர் மட்டும் உரக்கக் குரலெழுப்பி அருகிலிருந்த வீடுகளிலிருந்த ஆட்களை வரவழைத்து விட்டார். சிறிது நேரத்தில் அந்த கிராமமே விழித்துக் கொண்டுவிட்டது. ஆண்கள் அனைவரும் சாவடியில் கூடிவிட்டார்கள்.
விசாரணை நடந்தது. பிடிபட்ட ஆளைக் கொண்டு வந்து நிறுத்தி ஆளாளுக்குக் கேள்வி கேட்டனர். அவன் யார், எந்த ஊர், எதற்காக இந்த ஊருக்கு வந்தான், இந்த இரவு வேளையில் அவன் சாவடிக்கருகில் புதரில் ஒளிந்திருப்பானேன் என்று கேள்விக் கணைகள் அவனைத் துளைத்தெடுத்தன. அவன் எதற்கும் அசையவில்லை. தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று சாதித்தான்.
அவன் சொன்னான், நீங்கள் ஊர்க்காரர்கள் இத்தனை பேர் சேர்ந்து என்னை கேள்வி கேட்கிறீர்கள். நான் யாருக்கு சொந்தமான இடத்திலும் புகவில்லை, எதையும் களவாடவில்லை, என்னிடத்தில் இப்போது எதுவும் கையில் இல்லை, அப்படி இருக்கையில் நான் வழிப்போக்கனாக இவ்வூர் வழியாகப் போகக் கூடாதா? வழியில் சிறுநீர் கழிக்க ஒதுங்கக் கூடாதா? அதற்காக இத்தனை பெரிய கூட்டம் கூடி ஆளாளுக்குக் கேள்விகளைக் கேட்கிறீர்களே!
ஊர்க்காரர்கள் கோபமடைந்தனர். என்னடா நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நீ பாட்டுக்கு வாதம் செய்து கொண்டிருக்கிறாய் என்றார்கள்.
அவன் சொன்னான், சரி நீங்கள் ஒவ்வொருவராக உங்கள் குற்றச்சாட்டுகளைச் சொல்லுங்கள், நானும் கடைசியில் உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுகிறேன். நான் எந்த விவாதத்துக்கும் தயார். இதுவரை பெரிய இடங்களில் கூட நடக்கும் விவாதங்களுக்கு முடிவு ஏற்பட்டதாகவோ, விடை கிடைத்ததாகவோ தகவல் இல்லை. இங்கு நடக்கும் விவாதத்துக்கு மட்டும் விடை கிடைக்கவா போகிறது. உங்கள் தூக்கத்துக்குக் கேடு. என் வழிப் பயணத்துக்கும் கேடு அவ்வளவுதான். வாருங்கள் நான் எந்த விவாதத்துக்கும் தயார். விவாதம் செய்து முடிவு செய்து கொள்வோம் என்றான்.
ஊர்க்காரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதென்னடா இது இவன் விவாதம் செய்யலாம் என்கிறான். திருடனைப் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தினால், அவன் விவாதம் செய்யலாம் வாருங்கள் என்றால் என்ன அர்த்தம். பிடித்தவனை காவல் துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்கள் விசாரிக்கும் முறையில் விசாரித்தால் இவன் பதில் சொல்லிவிட்டுப் போகிறான். இவன் நம்மையெல்லாம் வெட்டிப் பயல்கள் என்று நினைத்து விவாதத்துக்கு அழைக்கிறான் என்றார் ஒரு பெரியவர்.
அவர் சொல்வதிலும் உண்மை இருப்பதை பலரும் உணர்ந்தனர். அப்போது ஒருவர் சொன்னார், ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒரு கிராமத்தானாக நடிப்பார். அவர் மீது குற்றம் சாட்டி அவரை ஊர் பஞ்சாயத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்கள். பஞ்சாயத்தார் அவரைக் கேள்விகளைக் கேட்பார்கள். குற்றம் செய்தவராக இருந்த போதிலும் மிகவும் சாமர்த்தியமாக அவர் அந்த கேள்விகளையெல்லாம் திரும்ப திருப்பி விடுவார். எப்படி தெரியுமா? 'நீதான் இந்த குற்றத்தைச் செய்தியாப்பா?' உடனே அவர் 'என்னத்தைச் செய்தியாப்பா?' என்பார், இப்படியே கேட்கப்படும் கேள்விகளையெல்லாம் அதற்கு முன்பு "என்ன" என்ற விகுதியோடு மீண்டும் கேள்விகளை பஞ்சாயத்தார் மீதே திருப்புவார். ஒரு கட்டத்தில் பஞ்சாயத்தார் வெறுத்துப் போய் அழுதுகொண்டு அவரை விரட்டிவிடுவார்கள்.
அதுபோல விவாதம் செய்வது என்பது மனிதனை வெறுப்பேற்ற செய்யும் காரியம். இப்போது மாட்டிக் கொண்ட திருடனும் நன்றாக விளைந்த திருடன் போல இருக்கிறது. அதனால்தான் விஷயம் முடிவுக்கு வரமுடியாமல், நியாயம் நிலைநிறுத்த முடியாமல் எதையும் விவாதிக்கலாம் என்று சவால் விடுக்கிறான் என்றுணர்ந்த கிராமத்தார், கிடக்கிறான், இவனைப் போக விடுங்கள். இவனோடு விவாதித்தால் நம் தூக்கம்தான் கெடும். நாளை நமது வேலைகளும் கெடும் என்று அவனை விரட்டிவிட்டனர். தனது சாமர்த்தியம் பலித்துவிட்டதை நினைத்து அந்தத் திருடனும் மகிழ்ச்சியோடு அந்த இரவு வேளையில் விசில் அடித்துக் கொண்டு வழியோடு போய்ச்சேர்ந்தான்.
இந்தக் கதையில் நீதி எதுவும் இல்லை என்று சொன்னேனல்லவா, அவரவர்க்குத் தோன்றிய நீதியை எடுத்துக் கொள்ளலாம் என்பதால் இதில் எனக்குத் தோன்றிய நீதி என்னவென்றால், குற்றங்களோ, குறைகளோ அல்லது நிறைகளோ எதுவானாலும், குற்றம் என உணர்ந்தால் உடனடியாக சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துவிட வேண்டும். நிறை இருந்தால் பாராட்டிவிட வேண்டும். அதை விட்டுவிட்டு வீண் விவாதம் என்பது நேரத்தைக் காலத்தைக் கடத்தும் செயல் என்பதை உணர வேண்டும். குற்றவாளியை விவாதம் என்ற பெயரில் குற்றத்தை நீர்த்துப் போக விட்டுவிடாமல் மீண்டும் அவன் குற்றம் செய்யும் இடத்துக்கு வரமுடியாமல் தூர விரட்டியடித்துவிடுவதே சரி என்பதுதான் நீதி.

No comments:
Post a Comment