கடந்த 9ஆம் தேதி முதல் மூன்று நாட்களாக திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி திங்கட்கிழமை இரவு திருவண்ணாமலை நடனக் கலைஞர் கலைச்செல்வி சுப்ரமணியம் பரதாஞ்சலியுடன் நிறைவடைந்தது. மகாசிவராத்திரி நாளான ஞாயிற்றுக் கிழமை 15 நடனக் குழுவினர் நிகழ்ச்சிகளை வழங்கினர். இவற்றில் பெங்களூர் தீபா சசீந்திரன் ஆடிய குச்சிபுடி நடனமும் ஸ்வப்னா ராஜேந்திரகுமாரின் மோகினி ஆட்டமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. மும்பை காட்கோபரிலிருந்து வந்திருந்த நடனக் கலைஞர் பத்மினி ராதாகிருஷ்ணன் குழுவினரின் அர்த்தநாரீஸ்வரர் நடனமும் கொல்கொத்தா அயன் பானர்ஜியின் கதக் நிகழ்ச்சியும் பெரிதும் பாராட்டப்பட்டன. குறிப்பாக பரத நாட்டியம் தவிர மற்ற வகை நாட்டியங்களை அதிகம் பார்த்திராத இந்தப் பகுதி மக்களை இந்த நடனங்கள் பெரிதும் கவர்ந்ததன் காரணமாக கலைஞர்களை மக்கள் உற்சாகத்தோடு பாராட்டி மகிழ்ந்தனர்.
சென்னை ஸ்ரீகிருஷ்ண நாட்டியாலயா கலா சீனிவாசன் குழுவினர் காஞ்சிபுரம் அருகிலுள்ள தக்கோலம் எனும் ஊரில் அமைந்துள்ள நந்திகேசுவரர் பற்றிய நாட்டிய நாடகத்தை நிகழ்த்தினர். அங்கு நந்தியின் வாயிலிருந்து நீர் ஊற்றிக் கொண்டிருக்கும் வரலாற்று சுவைமிக்கதாக அமைந்திருந்தது. கடலூர் முனைவர் சுமதி சுந்தர் அவர்களின் தலைமையில் நடந்த பரத நாட்டியமும், செங்கல்பட்டு ஸ்ரீ சரஸ்வதி நாட்டியாலயா சசிகலா வெங்கடேசன் குழுவினரின் பரதமும், சென்னை கவின்கலை அகாதமியின் மீனாட்சி வெங்கடராமனின் பரதநாட்டியம், சென்னை கொரட்டூர் கலைச்செல்வி, விருகம்பாக்கம் சுதா விஜயகுமார் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் கவர்ச்சிகரமாக அமைந்திருந்தன. மன்னார்குடி காரக்கோட்டை மதியழகன் குழுவினர், கடலூர் தர்மேந்திரன் ஆகியோரும் இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
மூன்றாம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பெங்களூர் லக்ஷணா ஸ்ரவண் ஆடிய கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திர நிகழ்ச்சிகள் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டன. தஞ்சை பத்மஸ்ரீ நாட்டியாலயாவின் வடிவுதேவி ஆடிய சிவதாண்டவம் அற்புதமாக அமைந்தது. சிவபெருமானின் ஆனந்த தாண்டவமும், பார்வதி அம்மையுடன் சிவன் ஆடிய தாண்டவ காட்சிகளையும் மிகவும் அற்புதமாக வடிவமைத்து ஆடினார் வடிவுதேவி. மக்களின் பெருத்த ஆரவாரத்தை அவரது நடனம் பெற்றது. சிதம்பரம் மூத்த நடனக் கலைஞர் வி.என்.கனகாம்புஜம் அம்மையாரின் மாணவியரின் நடனமும், கும்பகோணத்தின் தலைசிறந்த நாட்டியக் கலைஞர்களான ஸ்ரீ அபிநயாஸ் கலைக்குழும எஸ்.விஜயமாலதி, ஸ்ரீ சிவசக்தி நடனப் பள்ளியின் கவிதா விஜயகுமார், கீதா அசோக், ஜென்சி, மயிலாடுதுறை ஸ்ரீ சண்முகா நாட்டியாலயாவின் வி.எஸ்.ராஜேந்திரன் இவர்களுடைய நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன.
பல ஆண்டுகள் டில்லியில் தலை சிறந்த நடனக் கலைஞராக விளங்கியவரும், பரதம், குச்சிபுடி ஆகியவற்றில் திறமை மிக்கவரும் வெம்பட்டி சின்ன சத்தியத்தின் மாணவியுமான தஞ்சை அருணா சுப்ரமணியம் அவர்களது சிறப்பான சேவையைப் பாராட்டி ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி சார்பாக முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் அவருக்கு விருது வழங்கி கெளரவித்தார். அவருடைய மாணவிகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழகத்தின் தலைசிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான அனிதா குஹா தனது மாணவிகளோடு அற்புதமானதொரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினார்.
விழாவின் நிறைவில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் எம்.ரத்தினசாமி அவர்களும், திருவையாறு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்மணி, தமிழிசை மன்றத்தின் தலைவர், ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனைக் அறக்கட்டளை உறுப்பினர்கள் வக்கீல் கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், பாரதி இயக்க அறங்காவலர் பி.ராஜராஜன், நா.பிரேமசாயி, இரா.மோகன் ஆகியோரும் விழா குழுவினர்களுக்கும், விழாவுக்காகத் தொண்டு புரிந்த இசைக் கல்லூரி, அரசர் கல்லூரி மாணவ மாணவியருக்கும் அவர்கள் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். திருவண்ணாமலை பானுமதி சுப்ரமணியமும், கலைச்செல்வி சுப்பிரமணியமும் மங்களம் பாடி விழாவை நிறைவு செய்தனர்.
No comments:
Post a Comment