பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, March 13, 2013

மகா சிவராத்திரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும்.மகா சிவராத்திரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும்.

மாசி மாதம் வந்துவிட்டால் மகாசிவராத்திரியும் அதனையொட்டி சிதம்பரம், மாயூரம், திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய இடங்களில் சிவாலயங்களில் "நாட்டியாஞ்சலி" எனும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் சிறப்பு என்னவென்றால், ஆயிரக் கணக்கான இளம் நடனக் கலைஞர்கள் முதல் நன்கு தேர்ச்சி பெற்ற கலைஞர்களும் பங்கேற்கிறார்கள். தாங்கள் கற்ற இந்த அபூர்வ கலைக்குச் சொந்தக்காரர் தில்லை நடராஜர் அல்லவா? எனவேதான் இந்த நாளைத் தேர்ந்தெடுத்து, ஆட்ட நாயகனான அந்த நடராஜப் பெருமானுக்கு குரு தக்ஷிணையாக தாங்கள் கற்ற கலையை அர்ப்பணிக்கிறார்கள்.

நாட்டிய வகைகளை எட்டு என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். அதில் பரதநாட்டியம் தவிர ஆந்திர மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குச்சிபுடி, கேரள மாநிலத்தின் மோஹினி ஆட்டம், ஒடிஷா மாநிலத்தில் பிறந்த ஒடிசி, டில்லி பாதுஷாக்களின் அவையில் ஆடப்பட்ட கதக் போன்றவைகளும் இந்த நாட்டியாஞ்சலி விழாக்களில் ஆடப்படு கின்றன. பொதுவாக ஆட்டமும், அதற்காகப் பாடப்படும் பாடல்களும் சிவபெருமான் பெருமையைப் பேசுவனவாக அமைந்திருக்கும். தமிழகத்தில் குறிப்பாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்ட எல்லைக்குட்பட்ட ஆலயங்களில்மட்டும் தான் இந்த நாட்டியாஞ்சலி சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. விடிய விடிய நடைபெறும் இந்த நாட்டிய விழாவில்தான் எத்தனை விதம். மிகச் சிறிய குழந்தைகள் முதல், வயதில் மூத்த தலைசிறந்த கலைஞர்கள் வரை..... அப்பப்பா! அந்த அழகைப் பார்க்கக் கொடுத்து வைத்தவர்கள் பாக்கியசாலிகள்.

மிகப் புகழ்பெற்ற கலைஞர்கூட இந்த நாட்டியாஞ்சலி மேடையில் ஏறியவுடன் தில்லை நடராஜனை மனதில் வைத்து, பக்தி சிரத்தையோடு பரவசமூட்டும்படியாக ஆடுவதைக் கண்டு ஆனந்தம் மிகுதியால் கண்ணீர் சிந்தி பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டேன். சிவனை நினைந்து கலைஞர்கள் புகழ்ந்து, வாழ்த்திப் பாடும்போது, தலை வணங்கி இறைவனை கைகூப்பி தொழுகின்ற பெண்களைப் பார்த்தேன். மிகச் சிறிய வயது குழந்தைகள் தாங்களும் மேடையில் ஆடும் கலைஞர்களைப் போலவே 'தத்தக்கா' என்று ஆடி பார்ப்போரைப் பரவசப் படுத்துவதையும், பெற்றோர்கள் அந்தக் காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்ந்து கண்ணீர் மல்க நிற்பதையும் பார்த்தேன்.

இந்தக் கலையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் கலைஞர்கள் இங்கு வந்ததும், எத்தனை பணிவு, எத்தனை அன்பு, ஆர்வம், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் விதம், உற்சாகப் படுத்தும் திறம் இவற்றையும் பார்த்தேன். காரணம் இப்படியொரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளன் அடியேன் என்பது இப்படி உறுதியாகச் சொல்ல காரணம்.

தமிழ் நாட்டைப் பொறுத்த வரை பரத நாட்டியம்தான் பொதுவாக மக்கள் அறிந்த கலை. பொதுவாக அனைத்துக் கலைகளையும் உணர்ந்த பெரியோர்களை விட்டுவிட்டு, சாதாரண பாமர மக்களைப் பற்றிய கணிப்பு இது. ஆனால் இந்த நாட்டியாஞ்சலியில் ஆந்திர மாநிலத்தின் குச்சிபுடி, கேரளத்தின் மோஹினி ஆட்டம், ஒடிஷாவின் ஒடிசி, டில்லி முதலான வட மாநிலங்களின் கதக் போன்ற நாட்டிய வகைகளும் ஆடப்படுகின்றன. அப்படி இவர்கள் புதியதொரு நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும்போது, பரதம் மட்டுமே பார்த்திருந்தவர்களுக்கு இவைகள் வேறு மாதிரியாகத் தென்படுவது இயற்கை. அவர்கள் ஏன் இப்படி இந்த வகை நடனங்கள் பரதத்தினின்றும் சற்று வேறுபட்டிருக்கிறதே என்று எண்ணக் கூடும். (தேவன் எனும் எழுத்தாளர் துப்பறியும் சாம்பு எனும் கதை வரிசையில் சாம்பு என்பவரை அசட்டுத் தனத்தோடு செய்யும் காரியங்களில் வெற்றி அடையும் துப்பறியும் சிங்கமாக வர்ணித்து எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு கதையில் சாம்பு ஒரு திருடனைப் பிடிக்க முயற்சி செய்வார். அந்தத் திருடன் பெண் வேடமிட்டு சாம்புவை ஏமாற்ற முயற்சி செய்து அவரை மயக்க முயல்வான். அந்த பெண் வேடமணிந்த திருடனின் கன்னத்தை சாம்பு தடவிவிட்டுச் சொல்லுவார், இது என்ன உன் கன்னம் சொற சொறவென்றிருக்கிறதே (தன் மனைவி) வேம்பு கன்னம் போல் வழவழவென்று இல்லையே என்று அப்பாவியாகச் சொல்வார். அவன் திருடன் என்பது வெளிப்பட்டு மாட்டிக் கொள்வான்.) இங்கு எதற்கு துப்பறியும் சாம்பு கதை என்று நினைக்கிறீர்களா? எனக்கு இதுபோன்ற நடனங்களின் வேறுபாடுகள் தெரியாதபோது சாம்புவைப் போல, இது என்ன குச்சிபுடியின் அசைவுகள் பரத நாட்டியம் போல இல்லையே, மோஹினி ஆட்டத்தில் வேகம் குறைந்து, பாவங்களும், கண் அசைவுகளும், உடையும் மாறுபடுகிறதே என்று "அப்பாவியாக" நினைத்ததுண்டு. அதனால்தான் சாம்புவோடு ஒரு ஒப்பீடு. எனது இந்த சொந்த அனுபவம் காரணமாக பரதநாட்டியம் தவிர ஆடப்படும் குச்சிபுடி, மோஹினி ஆட்டம் இவற்றைப் பற்றிய சிறு குறிப்பைப் படித்து அறிந்து கொண்டேன். ஒருக்கால், என்னைப் போல அறியாமையில் இருப்போர், அல்லது அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவோருக்குப் பயன்படலாம் என்பதால், இவ்விரு வகை நாட்டியங்களைப் பற்றிய சிறு குறிப்பை இங்கு கொடுத்திருக்கிறேன். நான் என்னவோ, இந்த கலைகளில் கரை கண்டுவிட்டது போல அல்ல, நான் படித்த அரிச்சுவடி பாடத்தை உங்களுக்கு மனப்பாடம் பண்ணி சொல்லிக் காட்டுகிறேன். அவ்வளவுதான். சரியென்றால் ஏற்றுக் கொள்ளுங்கள், தவறு இருந்தால் என்னை திறுத்துங்கள், நிச்சயம் திறுந்தி விடுகிறேன்.

இனி குச்சிபுடி:
குச்சிபுடி நடனம்: 

இந்த குச்சிபுடி நடனம் ஆந்திர பிரதேசத்தில் பிறந்த, பெரும்பாலும் அங்கு நிகழ்த்தப்படும் நடனக் கலை. இந்த குச்சிபுடி எனும் பெயர் குசேலபுரம் எனும் கிராமத்தின் பெயரிலிருந்து வந்தது. இந்த கிராமம் விஜயவாடாவிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த குச்சிபுடி நடனத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் கலைஞர்களின், அசைவுகள், அந்த அசைவுகள் மூலமாக சொல்லவந்த ரஸம், ஆகியவை நாடகத்தின் நடிப்பு அம்சம் கொண்டவை. 

இந்த குச்சிபுடி நடனம் பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் அருகில் ஒரு கிராமத்தில் அனாதை ஒருவர் இருந்தார். இங்கெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது. அப்படிப்பட்ட ஒருவர் உடுப்பி நகரத்துக்கு வேதம் பயில்வதற்காகச் சென்றார். அங்கு அவர் படித்த காலத்தில் அவர் சிதேந்திர யோகி எனும் பெயர் பெற்றார். இவர் வேதம் பயின்று ஸ்ரீகாகுளம் திரும்பினார். அப்போது அவ்வூர் பெரியவர்கள் அவரை இளமையில் திருமணம் செய்துகொண்ட பெண் வீட்டிற்குச் சென்று குடித்தனம் செய்யுமாறு சொன்னார்கள். அவர் தன் மனைவியின் ஊருக்குச் செல்லும் வழியில் ஒரு ஆற்றைக் கடக்க நேர்ந்தது. ஆற்றை நீந்திக் கடக்கும் போது இவரால் இனி மீதி தூரத்தை நீந்திக் கடக்க முடியாது என்பதை உணர்ந்தார். வேறு வழியில்லை. தன்னைக் காப்பாற்றும்படி கடவுளிடம் வேண்டிக் கொண்டார். தான் காப்பாற்றப்பட்டு விட்டால், தன்னை இறைவன் பணியில் அர்ப்பணித்துக் கொள்வதாக சபதம் ஏற்றார். அவருக்குத் தெம்பு வந்து மீதி தூரத்தையும் கடந்து கரையேறினார். அப்போது அவர் சந்நியாசம் பூணுவதாக அறிவித்து விட்டார்.

சந்நியாசம் ஏற்றுக் கொண்ட அவர் குசேலபுரம் எனும் கிராமத்தை அடைந்தார். அங்கு அவர் வேதம் போதிக்கத் தொடங்கினார். புராண இதிகாசங்களிலிருந்து குழந்தைகளுக்கு நாட்டியங்களையும், நாடகங்களையும் போதிக்கத் தொடங்கினார். நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைந்த இந்த நாட்டிய நாடகங்கள் 'குச்சிபுடி' எனப் போற்றப்பட்டன. குசேலபுரத்தில் பிறந்ததால் அந்த ஊரின் பெயரிலேயே வழங்கப்பட்டு பின்னர் மறுவி குச்சிபுடி என ஆயிற்று.

நூற்றுக் கணக்கான வருடங்களில் இந்தக் கலை வளர்ந்து அரியதொரு கலையாக மிளிரத் தொடங்கியது. தக்ஷிணத்தை ஆண்ட மன்னர்கள் இதைப் போற்றிக் காத்தனர். 1678இல் ஒரு மன்னர், குச்சிபுடி நடத்தும் சிறுவர்களுக்காக நிலங்களை மானியமாக அளித்ததாக வரலாறு கூறுகிறது.

இப்போது நடத்தப்படும் 'குச்சிபுடி' நடனம் 20ம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சியடைந்து இன்றைய சிறப்பு நிலையை அடைந்தது. இந்த நடனத்தைப் பிரபலப்படுத்திய பல பிரபல கலைஞர்கள் இதற்கு பொறுப்பானவர்களாக இருந்தார்கள். லக்ஷ்மிநாராயண சாஸ்திரி எனும் குரு அவர்களில் முதன்மையானவர். அவருக்குப் பின் வேம்பட்டி சின்ன சத்யம், சி.ஆர்.ஆச்சார்யலு, டாக்டர் நடராஜ ராமகிருஷ்ணா ஆகியோரை இந்தப் பெருமைக்கு உரியவர்களாகச் சொல்லலாம்.

நான் பொறுப்பு வகிக்கும் நாட்டியாஞ்சலியில் இவ்வாண்டு ஆடிய கலைஞர் 'சங்கராபரணம்' படத்தில் நடித்த மஞ்சு பார்கவி அவர்களின் மாணவி. அந்த நடனம் இன்னும் என் மனதிலிருந்து அகலாத நிலையில் இதனை எழுதுகிறேன். இந்த குச்சிபுடிக்கு மிருதங்கம், ஜால்ரா, வீணை, வயலின், கஞ்சிரா, புல்லாங்குழல் தவிர சுருதிப் பெட்டியும் தம்பூரும் பக்க வாத்தியங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. இந்த சின்ன முன்னுரையுடன் குச்சிபுடி நடனத்தை ரசியுங்கள்.

மோஹினியாட்டம்.

இது கேரள மாநிலத்தில் தொடங்கிய நடன வகை. 16ம் நூற்றாண்டில் தோன்றியது. பாரத நாட்டில் வகைப்படுத்தப்பட்ட எட்டு நாட்டிய வகைகளில் இதுவும் ஒன்று. பெண்கள் தனித்து ஆடக்கூடிய மென்மையான உணர்வுகளையும் பாவங்களையும் காட்டும் நாட்டியம். திருவாங்கூர் மகாராஜா சுவாதித் திருநாள் மகாராஜா காலத்தில் 19ம் நூற்றாண்டில் தஞ்சை நால்வர் எனப்படும் நட்டுவனார்களில் வடிவேலு என்பவரால் வகைப்படுத்தப் பட்டது. பிரபல மலையாளக் கவிஞர் வள்ளத்தோல் கேரள கலாமண்டலம் எனும் அமைப்பைத் தோற்றுவித்து 1930இல் மோஹினியாட்டம் சிறப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல பாடுபட்டார்.

மோஹினி என்பவர் அழகான வசீகரமான பெண். அப்படிப்பட்ட அழகான மோஹினி ஆடுகின்ற ஆட்டம் என்பதால் இது மோஹினி ஆட்டம். மனத்தை மயக்கும் அழகியின் ஆட்டம் என்பது மோஹினியாட்டத்தின் பொருள். மகாவிஷ்ணு, பாற்கடலைக் கடையும்போது தேவாசுர போட்டியில் குரங்கு மத்தியஸ்தம் செய்ய ஒரு முறை மோஹினியாக வந்தார். மற்றொரு முறை தாருக வனத்து முனிவர்கள் அகந்தையால் இறைவனை மறந்தபோது சிவன் பிக்ஷாடனராகவும், விஷ்ணு மோஹினியாகவும் வந்தனர். வேடிக்கை என்னவென்றால் நிர்வாணமாக, கையில் மண்டையோட்டை ஏந்தி தலையில் சடாமுடியோடு பிக்ஷாடனர் நடந்து செல்ல முனிபத்தினிகள் அவர் அழகில் மயங்கி அவருக்குப் பின்னால் செல்லத் தொடங்கினர். அங்கு மோஹினி தாருக வனத்து முனிவர்கள் தவச்சாலை அருகில் நடந்து செல்லும்போது, முனிவர்கள் அவள் அழகில் மயங்கி பின்னால் சென்றனர். தொடர்ந்தது கதை. இறுதியில் பிக்ஷாடனரைக் கொல்ல ஒரு கெட்ட யாகம் செய்து அதிலிருந்து ஒரு மதயானையை உருவாக்கி பிக்ஷாடனரை வதம் செய்ய ஏவினர். அது சிவனை விழுங்க உலகம் இருண்டது. அதன் வயிற்றினுள் சென்ற சிவன் அந்த யானையைக் கொன்று கஜ சம்ஹாரம் செய்துவிட்டு வெளிவந்தார் என்பது புராணம்.

மோஹினியாட்டத்தில் ஆடும் பெண்கள் தங்க ஜரிகை பார்டர் இட்ட வெண்பட்டு உடை அணிந்து, தலையில் வெள்ளை மலரை, குறிப்பாக மல்லிகை மலரணிந்து அதற்கேற்ற தலை கொண்டை அலங்காரம் செய்துகொண்டு இனிமையாக பாவத்தோடு ஆடுவது சிறப்பு. கால்களின் சிலம்பொலி காதுகளுக்கு இனிமை தரும். இந்த ஆட்டத்தில் ஆடும் பெண்களின் கண்கள் அசைவுகள் சிறப்பானவை. கண்களால் பேச முடியுமா, பார்க்கத்தானே முடியும்? ஆனால் மோஹினி ஆட்டத்தில் இந்த ஆடல் அழகிகளின் கண்களும் பேசும். எப்படி? பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். நான் பார்த்த மயக்கத்தில் இருக்கிறேன். இந்த ஆட்டத்துக்குப் பாடப்படும் பாடல்கள் சம்ஸ்கிருதமும் மலையாளமும் கலந்த மணிப்பிரவாள நடையில் இருக்கும்.

இனி நீங்கள் நாட்டிய நிகழ்ச்சி பார்க்கும்போது கவனியுங்கள் இந்த வேறுபாடுகள் உங்களுக்குப் புரியும். கதக் நிகழ்ச்சியைப் பார்க்கும்போது உங்களுக்கு சாந்தாராம் எடுத்து வெளியிட்ட "ஜனக் ஜனக் பாயல் பாஜே" எனும் படத்தின் நினைவு வரலாம். பாருங்கள் அதில் கால் பாதங்கள் எப்படி தாளமிடுகின்றன, அவர் உடல் எத்தனை வேகமாக சுற்றி வருகிறது, அசைவுகள் எத்தனை லாவகமாக அமைந்திருக்கின்றன என்பதை. பாரத நாட்டின் நடனக் கலையும், பாரசீக நடனமும் இணைந்து, டில்லி சுல்தான்களின் அவைகளில் நடனமணிகளால் ஆடப்பட்ட கலை கதக். கல்கத்தாவிலிருந்து வந்திருந்த ஒரு இளைஞர் இந்த கதக்கை ஆடி முடித்தவுடன், நாட்டியாஞ்சலி பார்க்க வந்த நம்ம ஊர் கூட்டத்தினர் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்த காட்சியை நான் எப்படி வர்ணிப்பேன். அவர் ஆடியது பெரிதல்ல. அந்த ஆடலின் சிறப்பை உணர்ந்து ரசித்த நம் ஊர் மக்களின் ரசனையை தலை வணங்கி போற்றுகிறேன். கலை என்பது நம் உள்ளங்களைக் கனியச் செய்வது. ஒரு முறை இதில் ஈடுபட்டுவிட்டால் நாம் இந்த இனிய உணர்வுகளிலிருந்து கரை ஏறுவது முடியாது. கலைகளைக் கற்பது சிரமம். அது எல்லோராலும் முடியாது. ஆனால் ஆயிரத்தில் அல்லது லட்சத்தில் ஒருவர் கற்றுக் கொண்டு தலை சிறந்து விளங்கினால் அப்படிப் பட்டவரை நாம் போற்றி பாராட்டி ஆதரிக்க வேண்டும். அதனால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் ரசித்துப் பாராட்டுவது மட்டும்தான். அந்தக் கலைஞர்களை சாட்சாத் சரஸ்வதி தேவியாக எண்ணி அவர்களை வணங்குவது மட்டும்தான் நாம் செய்ய வேண்டியது. "நடனக் கலைஞர்கள் நாள்" என்றுகூட ஒரு நாளை ஏற்பாடு செய்து, அன்றைய தினமாவது நாம் அவர்களைப் போற்றி, வாழ்த்தி கொண்டாடலாமே. கடந்த சில நாட்களாக சிறு பொடிசு முதல் பெரிய கலைஞர் வரை அத்தனை பேர் ஆட்டத்தையும் பார்த்து மனம் நெகிழ்ந்ததன் விளைவாக இந்த ஆலோசனையைச் சொல்கிறேன். யாராவது முன்முயற்சி எடுத்துச் செய்யலாமே.

No comments:

Post a Comment

You can give your comments here