பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, February 24, 2013

உலக சர்வாதிகாரிகள்.

உலக சர்வாதிகாரிகள்.

உலக வரலாற்றில் எத்தனையோ ரத்தக் கறை படிந்த சர்வாதிகாரிகள் இருந்திருக்கின்றனர். அவர்களில் சிலரது வரலாற்றுச் சுருக்கத்தை இந்தப் பகுதியில் தொடர்ந்து படிக்கலாம். முதலில் பெல்ஜியத்தை ஆண்ட 2ஆம் லியோபால்டு பற்றிய வரலாற்றைப் படியுங்கள். நன்றி.

1. பெல்ஜியம் நாட்டின் சர்வாதிகாரி 2ஆம் லியோபால்டு.

பெல்ஜியம் நாட்டை ஆண்ட இந்த சர்வாதிகாரியின் தந்தை லூயி லியோபால்டு I என்பவர். தாய் பிலிப்ஸ் மரியா விக்டர் இவர் டச்சுக்காரர். இவர்களுக்குப் பிறந்த லியோபால்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவை உண்டு இல்லையென்று செய்தவர். இவர் 1835 ஏப்ரல் 9ஆம் தேதி தன் பெற்றோர்களுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிரசல்ஸ் நகரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை காலமான பிறகு இவர் 1865 டிசம்பர் 17இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். தன்னுடைய 30ஆம் வயதில் அனுபவக் குறைவோடு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இவர், தன்னுடைய 74ஆம் வயதில் 1909 டிசம்பர் 17இல் இறக்கும் வரை பெலிஜியம் நாட்டுக்கு ராஜாவாகத் திகழ்ந்தார். அரச பதவி, அளவற்ற அதிகாரம், கண் பார்வையில் பட்டவைகளையெல்லாம் கவர்ந்து கொள்ளும் திறமை, இத்தனை வசதி இருந்தால் இவருடைய வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்பதைக் கேட்கவும் வேண்டுமா என்ன? மனிதன் காமக் கேளிக்கைகளை ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை. அத்தனை காதலிகள் அவருக்கு, காதலிகளா அல்லது காமக் கிழத்திகளா எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும், இந்தத் தகுதியினால் இவருக்குக் கிடைத்த பெயர் என்ன தெரியுமா? பெல்ஜியத்தின் பொலிகாளை என்பது.

இவர் போன்றவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை என்னவென்பது. அப்போதெல்லாம் ஆப்பிரிக்கா கண்டம் ஒரு இருண்ட கண்டம். காடும், மலைகளும், இயற்கை வளங்களும் கொட்டிக் கிடக்கும் அந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் வெளியுலகம் அறியாத அப்பாவிகள். அடித்துவிட்டுக் கையில் கொடுத்தாலும் வாங்கத் தெரியாதவர்கள். கல்வி அறிவு கேட்க வேண்டுமா? பாவம் அந்த அப்பாவி மக்கள் வாழ்ந்த பிரதேசத்தைத் தன் சொந்த முறையில் அபகரித்துக் கொண்டு அரசாங்கத் தொடர்பின்றி தனது சொந்த சொத்தாகக் கபளீகரம் செய்து கொண்டார். ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி என்பவர் இவருடைய இந்த நில அபகரிப்புக்கு, அல்ல அல்ல நாடு அபகரிப்புக்குத் துணை போனவர்.

1884-85இல் ஆப்பிரிக்க பிரதேசங்களைத் தங்கள் காலனிகளாக ஆக்கிக் கொண்ட ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு மகாநாட்டை நடத்தின. அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன்படி தாங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற ஆப்பிரிக்கர்களின் கருப்பர் நாடுகளில் வாழும் மக்களின் வாழ்வை உயர்த்திடவும், கல்வி அறிவினைக் கொடுத்து அவர்களுடைய வாழ்வில் விளக்கேற்றிடவும் தீர்மானித்து உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டது. நல்ல எண்ணத்தோடு நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தைக் காலுக்கடியில் போட்டுவிட்டு, லியோபால்டு தன் வசம் இருந்த காங்கோ நாட்டை அடியாட்களைக் கொண்டு உருட்டி மிரட்டி அடிபணிய வைத்திருந்தார். தன் சுய லாபம் மட்டுமே அவருக்குக் குறியாக இருந்ததே தவிர, தனக்காகப் பாடுபட்டு உழைக்கும் அந்த கருப்பு இன மக்களை மிருகங்களிலும் கீழாக நினைத்திருந்தார்.

நமக்கெல்லாம் தெரியும், காங்கோ காடுகள் நிறைந்த வளமான நாடு. காடுகளில் ஏராளமான யானைகள் இருந்தன. அந்த யானைகளின் தந்தங்கள்தான் லியோபால்டுவின் கஜானாவை நிரப்பிக் கொண்டிருந்தன. அது போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அங்கு காடுகளில் வளர்ந்த ரப்பர் மரங்களிலிருந்து பாலை எடுத்து உலகத் தேவையைக் கருத்தில் கொண்டு ரப்பர் பொருட்களைத் தயாரித்து செல்வச் செழிப்பில் மிதந்தார். 1890க்குப் பிறகு ரப்பரின் தேவை அதிகரிக்கவே, இவர் காங்கோ காட்டு மனிதர்களை மிருகங்களைப் போலப் பிழிந்தெடுத்தார். வேலை செய்ய மறுத்தவர்களின் கைகள் வெட்டப்பட்டன. அத்தனை கொடூரம் அங்கே!

இவருடைய கொடுமையின் அளவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு புள்ளி விவரம் போதும். இவருடைய கட்டுப்பாட்டுக்குள் காங்கோ இருந்தவரை சுமார் 2 மிலியன் முதல் 15 மிலியன் வரை காங்கோவினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இந்த படுகொலை உலகின் மிகப் பயங்கரமான படுகொலையாகக் கருதப்படுகிறது. இவருடைய அக்கிரமம் அளவுகடந்து சென்றுவிட்ட நிலையில் இவருக்குப் பயங்கரமான எதிர்ப்பு ஏற்பட்டு, காங்கோ பிரதேசத்தை பெல்ஜியம் அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படி நிர்ப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த கொடுங்கோலன் 2ஆம் லியோபால்டு குறித்த வரலாற்றுச் செய்திகளைச் சிறிது பார்க்கலாம். இவன் பெல்ஜியம் மன்னரான 1ஆம் லியோபால்டுவின் இரண்டாவது மகனாக 1835 ஏப்ரல் 9இல் பிறந்தான். இவன் பிறப்பதற்கு ஓராண்டு முன்னர் மன்னரின் முதல் மகன் இறந்து போனதால் இவனுக்குத்தான் ராஜ சிம்மாசனம் கிடைத்தது. தன் 9ஆம் வயதிலேயே இளவரசு பட்டம் பெற்றுத் திகழ்ந்தான்.

பெல்ஜியம் நாட்டின் ஆட்சி மன்றமான செனட்டில் 1855இல் தனது இருபதாம் வயதில் உறுப்பினராக ஆனான். அப்போதுதான் பெல்ஜியம் நாடு தனக்குக் காலனி நாடுகளை உருவாக்கிக் கொண்டது. தன் பதினெட்டாம் வயதில் திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளை, மூன்று பெண்கள், ஒரு மகன் பெற்றான். ஆனால் அவன் துரதிருஷ்டம் அந்த மகன் 9 வயதில் இறந்து போனான்.

1865இல் தன் 30ஆம் வயதில் பெல்ஜியத்தின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் லியோபால்டு II. இவர் காலத்தில் லிபரல் கட்சியார் 1857 முதல் 1880 வரை பதவியில் இருந்தனர். இவர்கள் இயற்றிய சட்டத்தின்படி கட்டாயக் கல்வி அறிமுகமானது. இலவசமாக அனைவருக்கும் கல்வி எனும் இந்த சட்டத்தினால், ரோமன் கத்தோலிக்கர்களால் நடத்தப்பட்ட பள்ளிகளுக்கு அளித்துவந்த ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் 1880இல் கத்தோலிக்கர்களின் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி புரிந்தபோது மீண்டும் கத்தோலிக்க பள்ளிகளுக்கான சலுகைகள் திரும்ப அளிக்கப்பட்டன. இப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கட்சிகள், அரசில் மதம் புகுந்ததன் பின் பல கட்சிகள் ஒன்று சேர்ந்த தொழிலாளர் கட்சி எனும் அமைப்பைத் தோற்றுவித்தனர். நாட்டில் நிலவிய அமைதியின்மையும், தொழிலாளர் கட்சி ஏற்படுத்திய விழிப்புணர்வும் சேர்ந்து 1893இல் வயது வந்த ஆண்களுக்கு வாக்குரிமை எனும் நிலைமை ஏற்பட்டது. அரசன் லியோபால்டு இந்த போக்கைத் தடை செய்ய முயன்றும் உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கேற்ப பெல்ஜியத்தில் உருவான மாற்றங்களை அவரால் தடுக்க முடியவில்லை.

அவர் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல் போன்றவை உலகெங்கும் தங்களுக்கென்று காலனி நாடுகளை உருவாக்கிக் கொண்டிருந்ததைப் போல பெல்ஜியமும் காலனி நாடுகளை உருவாக்கிட எண்ணம் கொண்டார். பெல்ஜியம் நாட்டின் சார்பில் காலனி உருவாவதைவிட, தனது சொந்த பொறுப்பில் தனது சொந்த சொத்தாக காலனி உருவாக்கிடவே அவர் பெரிதும் விரும்பினார். இவர் அந்த நாட்டின் அரசர் அல்லவா, பெல்ஜியம் அரசிடமிருந்து போதுமான நிதியைப் பெற்றுத் தனக்குச் சொந்தமாக காலனி அமைத்துக் கொள்ள உதவிகளைப் பெற்றார்.

ஆசை வந்துவிட்டால் போதாதா? பல்வேறு வழிமுறைகளைக் கண்டுபிடித்து விடுவார்களே! 1866இல் லியோபால்டு ஸ்பெயின் நாட்டிலிருந்த பெல்ஜிய தூதரை அழைத்து ஸ்பெயின் நாட்டு அரசியான 2ஆம் இசபெல்லாவிடம் பேசி எப்படியாவது ஆசியாவிலிருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டை பெல்ஜியத்துக்குத் தந்துவிடும்படி கேட்கச் சொன்னார். இந்த மனிதனுடைய சூதை அறிந்து கொண்ட அந்த தூதர் அப்படி எதையும் செய்துவிடவில்லை. அந்த தூதரைப் பதவியைவிட்டுப் பந்தாடிவிட்டார் மன்னர் லியோபால்டு.

1868இல் ஸ்பெயின் இளவரசி 2ஆம் இசபெல்லா புரட்சியின் மூலம் தூக்கி எறியப்பட்டார். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் எப்படியாவது பிலிப்பைன்ஸ் நாட்டை கபளீகரம் செய்துவிட முயன்றார் லியோபால்டு. அப்படி செய்ய பணம் வேண்டுமே! என்ன செய்வது? ஒரு சதிவேலை செய்தார். பிலிப்பைன்சை ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திர நாடாக ஆக்கிவிட்டால் அங்கு ஒரு பெல்ஜியனைக் கொண்டு போய் வைத்து ஆளவைக்கலாமே. இதுவும் தோல்வியில் முடிந்தது. சரி, இந்த ஆசிய ஆசை இனி செல்லுபடியாகாது, இருண்ட கண்டமான ஆப்பிரிக்கா மீது கண் வைக்கலாம் என்று தன் குறியை அங்கு திருப்பினார் லியோபால்டு.

ஆப்பிரிக்காவில் ஒரு காலனியை அமைத்திட இவர் பிரம்ம பிரயத்தனம் செய்தும் ஒன்றும் செல்லுபடியாகவில்லை. அரசியல் ரீதியாக அப்படியொரு காலனி அமைப்பது இயலாது என்பதை உணர்ந்து இவர் ஒரு தந்திரம் செய்தார். 1876இல் ஆப்பிரிக்கா கண்டத்தை முன்னேற்றும் நோக்கில், அறிவியல் கண்ணோட்டத்தோடு, தர்ம அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி அதற்கு சர்வதேச ஆப்பிரிக்க சங்கமென்று நாமகரணம் செய்து அந்த இருண்ட கண்டத்தை ஆராய்ந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்காகப் பாடுபடுவதாக பிரகடனம் செய்தார்.

இவருடைய இந்த நரித் தந்திர வலை வீச்சிற்கு முன்பே இவருக்கு அறிமுகமான ஹென்றி ஸ்டான்லியைப் பயன்படுத்திக் கொண்டார். இவர் ஆப்பிரிக்கா போன்ற இருண்ட கண்டங்களில் ஆய்வு மேற்கொண்டிருந்தவர். நம்மூர் ரியல் எஸ்டேட் புரோக்கர் போல இவர் லியோபால்டுவுக்கு உதவலானார். அவருடைய முயற்சியின் பயனாக பெர்லின் நகரில் நடந்த ஐரோப்பாவின் 14 தேசங்களும் அமெரிக்காவும் சேர்ந்து ஒரு பிரகடனம் வெளியிட்டது. அதன்படி லியோபால்டு காங்கோவின் மீது உரிமை கொண்டாடிய பகுதிகளுக்கு லியோபால்டை அதிபதியாக ஏற்றுக் கொண்டது. 1885 பிப்ரவரி 5இல் காங்கோ தனி நாடு 2ஆம் லியோபால்டின் ஆளுகையின் கீழ் சகல உரிமைகளோடும் வந்து சேர்ந்தது. அப்போது அவருக்குக் கிடைத்த நிலப் பகுதி எவ்வளவு தெரியுமா? அவன் ஆளும் பெல்ஜியம் நாட்டைப் போல 76 பங்கு அதிக பரப்பளவு கொண்டது. நினைத்துப் பாருங்கள். எத்தனை பெரிய நில அபகரிப்பு, அதுவும் அமெரிக்காவின் ஒப்புதலோடு. கொடுமை. சாதாரண நிலையிலேயே அண்ணன் சண்ட பிரசண்டன், இப்படியொரு அதிர்ஷ்டம் அவரைத் தேடிவந்தவுடன் கேட்க வேண்டுமா? காங்கோவை ஆட்சிபுரிய சொந்த முறையில் ஒரு தனிப்படையை உருவாக்கிக் கொண்டார் லியோபால்டு.

இதற்கு முன்பு யாரும் எந்த நாட்டாரும் கைவைக்காத அந்த கன்னி பூமியை முடிந்த மட்டும் சுரண்டி கொள்ளை அடித்தார் லியோபால்டு. இந்த நாட்டில் கிடைத்த தந்தங்கள் அவருடைய பெரிய வேட்டை. ஆப்பிரிக்க யானைகளின் தந்தங்கள் அவருக்கு ஈட்டித் தந்த செல்வம் கணக்கிட முடியாதவை. இது போதாதற்கு காங்கோ காடுகளில் இருந்த ரப்பர் மரங்கள் இவருக்குக் கைகொடுத்தன. காங்கோ கூலிகளைக் கொண்டு ரப்பர் பால் இறக்கி ரப்பர் தயாரித்து, உலகில் அப்போது ஏற்பட்டிருந்த ரப்பர் கிராக்கிக்கியை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

உலக நாடுகளில் பரவி வந்த தொழிலாளர் நலன், வேலை நேரம், கூலி அளவு, நலத் திட்டங்கள் இவை எதையும் லட்சியம் செய்யாமல் கொத்தடிமைகளைக் கொண்டு தன்னுடைய சுரண்டல் வேலையில் ஈடுபட்டு செல்வத்தில் கொழித்தார் லியோபால்டு. ரப்பர் காடுகளில் பணிபுரிந்த ஆப்பிரிக்கர்கள் மிருகங்களிலும் கேவலமாக நடத்தப் பட்டனர். அடி, கொலை, கை கால்களை வெட்டுவது, குறிப்பிட்ட அளவு ரப்பர் சேகரிக்காவிட்டால் கடுமையான தண்டனைகள் இப்படி பலப்பல கொடுமைகள். ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டில் தங்கள் சொந்த மண்ணில் அந்த கருப்பின மக்கள் பட்ட வேதனையை அங்கு வீசிய காற்றுகூட வெளியே கொண்டு செல்ல முடியவில்லை. அத்தனை கெடுபிடிகள்.

காலனிகள் தோன்றிய இடங்களில் எல்லாம் தங்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்யச் சென்ற கிருஸ்தவ பாதிரிமார்கள் கூட அங்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு நெஞ்சம் பதைத்து, இவர்களை இப்படி வதைப்பதைவிட கொன்றுவிடுங்கள் என்று கெஞ்சினர். அங்கு இந்தக் கொடுமைகளால் இறந்தவர்கள் எத்தனை பேர்? பத்து லட்சம், இருபது லட்சம், இல்லை இல்லை ஒன்றரை கோடி மக்கள் இவர்கள் கொடுமைகளால் உயிரிழந்தனர். இங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தபோதும், அங்கு நடந்த படுகொலை உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு வழியாக பெல்ஜியம் அரசு தங்கள் கணக்கை வெளியிட்டது. அவர்கள் கணக்குப்படி அங்கு மாண்டுபோனவர்கள் எண்ணிக்கை 10 மிலியன்.

சுகாதரமற்ற சூழல். பெரியம்மை தொற்று நோய் பரவி பலரை பலிகொண்டது. அது தவிர பல்வேறு நோய்கள் உயிர்களை பலிகொண்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கோவில் நடைபெற்ற படுகொலை பற்றி பலத்த சர்ச்சை ஏற்பட்டது. காங்கோ புனரமைப்பு சங்கம் எனும் பெயரில் ஒரு அமைப்பு தோன்றியது. மனித உரிமை மீறல்கள் பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உலக நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இதற்கொரு முற்றுப் புள்ளி வைக்க வற்புறுத்தல் அதிகமாகியது.

இந்த மனித இன கொடுமைகளுக்குக் கதாநாயகனாக இருந்த 2ஆம் லியோபால்டு மீது கண்டனக் கணைகள் வீசப்பட்டன. ஆர்தர் கானந்தாயில் உட்பட மிகப் பெரிய எழுத்தாளர்கள் இதைப் பற்றி எழுதினார்கள். ஆப்பிரிக்க மக்களை ஆள்வதில் கருணையும், மனிதாபிமானமும் இரக்கமும் காட்டப்படவேண்டும் என குரல் எழத் தொடங்கியது. இத்தனை எதிர்ப்புகளுக்கிடையில் 2ஆம் லியோபோல்டின் தனியுடமையாக இருந்த காங்கோவை பெல்ஜியம் அரசாங்கமே 1908இல் ஏற்றுக் கொண்டது.

காங்கோவை "பெல்ஜியம் காங்கோ" என்று புதிய பெயர் சூட்டி அழைத்தனர். காங்கோவைப் பிடித்த சனியன் அத்தோடு ஓயவில்லை. பின்னர் அந்த நாட்டில் நடந்த உள்நாட்டுக் கலவரமும், அதில் மொபுட்டு, லுமும்பா போன்றவர்களுக்கிடையே நடந்த போர், பின்னர் நாடு காங்கோ என்றும், சாய்ரே என்றும் பிரிந்ததும் வரலாற்றுச் செய்திகள். இப்போது அந்த நாட்டை "ஜனநாயக காங்கோ குடியரசு" என்று அழைக்கிறார்கள்.

1902 நவம்பர் 15 அன்று ரூபினோ என்ற இத்தாலியர் 2ஆம் லியோபால்டை கொல்ல முயற்சி செய்தார். அவர் சுட்ட குண்டுகள் குறி தவறியது; அவரும் கைது செய்யப்பட்டார். தன் மீதான கொலை முயற்சியிலிருந்து தப்பிய இந்த சர்வாதிகாரி, மனிதாபிமானமற்ற அரசர் 1909 டிசம்பர் 17ஆம் தேதி இறந்தார். அரச பதவி அவருடைய சகோதரனுடைய மகனான அல்பர்ட் என்பாருக்குப் போயிற்று. காலங்கள் ஓடி மறைந்தாலும், மனித இனத்துக்கு இவர் இழைத்த கொடுமைகளும், படுகொலைகளும் வரலாற்றில் ரத்தக் கறை படித்த பக்கங்களாக நின்றுவிட்டன.



















1 comment:

kmr.krishnan said...

It is a frog jump from Aiyaarappar to Leobald.

The information about this cruel Belgium king is
well documented . A nice compilation.