பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 30, 2012

கவி குஞ்சர பாரதி

கவி குஞ்சர பாரதி (1810 - 1896)

கர்நாடக சங்கீத உலகில் இந்தப் பெயர் அறிமுகமான பெயர். இவர் பாடல்கள் இசைக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருபவை. பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர் இந்த கவி குஞ்சர பாரதியார்.

இவருடைய முன்னோர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து குடிபெயர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெருங்கரை எனும் ஊருக்குக் குடியேறினார்கள். 17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தை ஆண்ட ரகுநாத சேதுபதி மஹாராஜா இவருடைய முன்னோர்களுக்கு இந்த கிராமத்தை கொடையாக அளித்திருக்கிறார்கள். கவி குஞ்சர பாரதியின் தந்தை வழித் தாத்தாவின் பெயர் கோட்டீஸ்வர பாரதி. தந்தையார் பெயர் சுப்பிரமணிய பாரதி. தாத்தாவின் பெயரே இவருக்கும் கொடுக்கப்பட்டதால் இவரை பெயர் மாற்றி அழைத்தனர். இந்தக் குடும்பத்தில் அனைவருமே இசையில் வல்லவர்கள். கவி குஞ்சர பாரதியின் தாய்வழி பாட்டனார் பெயர் நந்தனூர் நாகபாரதி. இவருடைய தந்தை பாட்டனார் அனைவருமே தமிழ், சமஸ்கிருத மொழிகளில் வல்லுனர்கள். 

இவருடையெ பெற்றோர்கள் குழந்தைக்காக தவமிருந்து பெருங்கரைக்கு அருகிலுள்ள கொடுமாலூர் எனுமிடத்தில் உள்ள முருகனை வழிபட்டு இந்தக் குழந்தை பிறந்ததனால், இவன் முருகனின் கொடை என்று கருதினார்கள். இவரது இளம் வயதிலேயே தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் முறையாகப் படித்தார். இவருக்கு மொழியில் புலமையும், கவி இயற்றும் திறமையும் இயற்கையிலேயே அமைந்திருந்தது. இசையிலும் இவர் நன்கு தேர்ச்சி பெற்றார். இவர் இப்படி பல்துறை வித்தகராகப் பரிமணிக்கத் தொடங்கியதுமே அப்போது பிரபலமாக இருந்த மதுரகவி பாரதியார் என்பவருடன் அறிமுகமானார். இவ்விருவரின் நட்புறவின் பயனாக கவிகுஞ்சர பாரதி தனது 12ஆவது வயதிலேயே கவிதைகளை இயற்றத் தலைப்பட்டார். தமிழில் கீர்த்தனங்களும், பிரபந்தங்களும் பாடத் தொடங்கினார். இவர் பாடல்களின் கருவாக விளங்கியவர் முருகப் பெருமான். மீனாட்சியம்மையும் இவர் பாடல்களில் இடம்பெற்றிருந்தார். 

இவருக்கு 18 வயதாக இருந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் இருந்த போது, இவரது கனவில் அந்த ஊரின் கிராம தேவதை தோன்றி தன்னைப் பற்றி பாடுமாறு கேட்டுக் கொண்டது. மறுநாள் அவரது உடல் நிலை தேறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தேவதை கேட்டுக் கொண்டபடி அவர் அந்த கிராம அம்பாள் மீது பிரபந்தங்களைப் பாடத் தொடங்கினார். 1840இல் இவர் இயற்றிய "அழகர் குறவஞ்சி" மிகப் பிரபலமடைந்தது. இந்த குறவஞ்சி இலக்கியம் முதன்முதல் சிவகங்கை ஜமீன்தார் அவையில் அரங்கேற்றப்பட்டது, பின்னர் இது நாடு முழுவதும் பரவி இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. 

அப்போதைய சிவகங்கை மன்னர் கெளரிவல்லபர் தன்னுடைய அவையில் புலவர்கள், பண்டிதர்கள் நிரம்பிய சபையில் வந்து தனது பாடல்களைப் பாடும்படி கேட்டுக் கொள்ள இவரும் சென்று பாடினார். அங்கு இவரது திறமையைப் பாராட்டி இவருக்கு "கவி குஞ்சரம்" எனும் விருதினை வழங்கி இவரை சிவகங்கை ஆஸ்தான வித்வானாக நியமித்தார்கள். அது முதல் கவி குஞ்சர பாரதியார் சிவகங்கை சமஸ்தானத்துப் புலவராக கெளரிவல்லபருக்குப் பிறகு வந்த சத்ரபதி போதகுரு என்பவரின் காலத்திலும் தொடர்ந்து இருந்தார். "வேங்கைக் கும்மி" என்ற பெயரில் ஒரு கும்மிப் பாட்டையும் இவர் இயற்றினார். சிவகங்கை மன்னர் ஒரு முறை 16 அடி நீளமுள்ள ஒரு வேங்கையை வேட்டையாடிய திறமையைப் பாராட்டி இந்த இலக்கியம் பிறந்ததாம். இந்த கும்மிப் பாட்டைப் பாராட்டி மன்னர் இவருக்கு கொட்டாங்கச்சியேந்தல் எனும் கிராமத்தைத் தானமாகக் கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் இவரை ஒரு பல்லக்கில் உட்காரவைத்து பரிசுப் பொருட்களுடன் அந்த கிராமம் வரை அரச குடும்பத்தார் பின்சென்று மரியாதை செய்தனர்.

இவரது புகழைக் கேள்விப்பட்டு இராமநாதபுரம் சேதுமதி மகாராஜா இவரைத் தங்கள் ஊருக்கு அழைத்து அந்த சமஸ்தானத்து ஆஸ்தான வித்வானாகவும் அங்கீகரித்தார். இராமநாதபுரம் சேதுபதியின் வேண்டுகோளை ஏற்று இவர் "ஸ்கந்தபுராண கீர்த்தனை"களை சுப்பிரமணியசுவாமி மீதி இயற்றிப் பாடினார். அப்போது இவருக்கு 55 வயது ஆகியிருந்தது. அதன் பிறகு இவர் அமைதியாகத் தன் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். 

ஒருவர் பிரபலமடைந்துவிட்டாலே அவரைப் பற்றிய பல செய்திகள் வெளிவருவது உண்டு. அதைப் போல இவர் ஒரு முறை வெண்பா ஒன்றைப் பாடி மழையை வரவழைத்தார் என்பதும் ஒரு செய்தி. இவர் தனது 86ஆம் வயதில் சுற்றத்தார் சூழ்ந்திருக்க இப்பூவுடலை நீங்கினார்.

இவரது படைப்புகளாக விளங்குபவைகள், அழகர் குறவஞ்சி. இது திருமலிரும்சோலைமலை அழகர்மேல் பாடப்பட்டது. அடைக்கலமாலை, கயற்கண்ணி மாலை இவை மதுரை மீனாட்சியம்மையின் மீது பாடப்பட்டவை. திருவேங்கட மாலை திருப்பதி ஏழுமலையான் மீதான பாடல். "பேரின்ப கீர்த்தனைகள்" என்பது இவரது படைப்புகளில் சிறப்பானதொன்று. இவரது திறமைக்குப் பல பாடல்களை எடுத்துக்காட்டாகக் காட்டமுடியும். 

இவருடைய பாடல்களில் "கவி குஞ்சரம்" எனும் சொல்லை முத்திரையாகப் பயன்படுத்தியிருக்கிறார். 






Friday, January 27, 2012

அலுவலகங்கள் முதலான இடங்களில் ஆயுத பூஜை

அலுவலகங்கள் முதலான இடங்களில் ஆயுத பூஜை

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடுவது என்பது காலங்காலமாக தொழில் நடக்குமிடங்கள், அலுவலகங்கள் முதலான இடங்களில் நடைபெற்று வந்ததுண்டு. சமீப காலமாக இதுபோன்ற பூஜைகள் "செகூலரிசம்" எனும் பெயரில் அரசாங்க அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஆண்டு முழுவதும் தொழிலாளிகள் உபயோகப்படுத்தி வரும் இயந்திரங்கள், பயன்படுத்தும் கருவிகள், அலுவலக இயந்திரங்கள் இவற்றை அன்றொரு நாள் சுத்தப்படுத்தி எங்களுக்கு உணவு படைக்கும் கருவிகளே உங்களை வணங்குகிறோம் என்று சொல்லி ஆயுத பூஜையன்று வணங்குவதில் என்ன தவறு? இதைப் பிரச்சினையாக்குபவர்களுக்கு இதனால் என்ன ஆதாயம். இவற்றையெல்லாம் நம்பாதவர்கள் நம்பாமலே இருக்கட்டும். அரசாங்க அலுவலகங்களில் இதுபோன்ற பூஜைகள் நடத்தக்கூடாது என்று சிலர் நீதிமன்றம் போனார்கள். அங்கு என்ன தீர்ப்பு கிடைத்தது என்பதை தமிழகத்தின் பத்திரிகைகளில் பலரும் வெளியிடவில்லை. ஆனால் தீர்ப்பு வந்துவிட்டது என்பது "விஜயபாரதம்" வார இதழில் எழுதியுள்ள தலையங்கம் (3-2-2012) மூலம் தெரிய வருகிறது. அந்தத் தலையங்கத்தைப் பார்ப்போம். 

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை 
பரபரப்பான நீதிமன்ற தீர்ப்பு.

"அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது என்பது, அரசின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது என கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது. 

எஸ்.பி.முத்துராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் மேற்படி தீர்ப்பை நீதிபதிகள் ஆர்.சுதாகர், அருணா ஜெகதீசன் ஆகியோர் அளித்தனர். இந்த இரு நீதி அரசர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.

ஆயுத பூஜையை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடுகின்றனர். தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கருதக்கூடிய கருவிகளை வணங்குவதுதான் ஆயுதபூஜையாகும். எனவே அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கலும் ஆயுத பூஜை கொண்டாடுவதை தவறு எனக் கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

மதச்சார்பின்மை என்பதே நமது பண்பாடு, கலாச்சாரத்திற்கு விரோதமானது என கருதுபவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு சவுக்கடியாகும்.

ஒரு விழாத் துவக்கத்தில் விளக்கு ஏற்றுவதும், இறைவணக்கம் பாடுவதும் இந்த நாட்டின் பண்பாடு, கலாச்சாரத்தை ஒட்டியதாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியார் தீபாவளி வாழ்த்து அட்டைகளை அனுப்பும்போது அதில் காயத்ரி மந்திரத்தை அச்சிட்டிருந்தனர். அதை எதிர்த்து தி.க. தலைவர் வீரமணி வழக்கு தொடர்ந்தார். சென்னை நீதிபதி தனது தீர்ப்பில் (1991 அக்டோபர் 15) காயத்ரி மந்திரம் எந்த ஒரு சமூகம், வகுப்பு, இனம் ஆகியோர்களுக்குச் சொந்தமானது இல்லை. ஆண்டவனிடம் ஆசிர்வாதம் கேட்பது தவறல்ல என சொல்லி வழக்கினைத் தள்ளுபடி செய்தார்.

'இந்துத்துவம்' என்பதுகூட மத ரீதியானது என்பது இல்லை. பண்பாட்டோடு தொடர்புடையது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது."

நன்றி: "விஜயபாரதம்"

இது சரியல்ல

விழாக்களின் போது குத்து விளக்கு ஏற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மெழுகுவத்தியை உபயோகிப்பதைத் தவிர்த்து, சிறு அகல் விளக்கின் மூலம் குத்து விளக்கு ஏற்றுவது நல்லது. மேலும், விளக்கு ஏற்றும் போது கைதட்டுகிறார்கள். இது சரியான செயல் அல்ல. - ஆலயம் எஸ்.ராஜா

நன்றி: "விஜயபாரதம்"

Thursday, January 26, 2012

வியக்க வைக்கும் விந்தை!


           வியக்க வைக்கும் விந்தை!            
   (உருது “கஜல்கள்மொழியாக்கக் கவிதைகள்)
                                                                                           என்.வி.சுப்பராமன்
சென்னை
துள்ளித் திரியும் புள்ளிமானை
கட்டிப் போடக் கதவும் கூறையும்
வைத்து எழுப்பும் மாளிகை ஒன்று
வியக்க வைக்கும் விந்தையன்றோ!                      (1)

தென்றல் காற்றில் வீசும் வாசம்
மன்றில் மலர்ந்த வலிமை வேகம்
வண்ணக் கூண்டில் வாழும் இனிமை
பண்ணிய புண்ணிய விளைவின் பெருமை!               (2)

இலக்கினை அடையும் அந்நேரத்தில்
இறப்பினை ஒத்தது ஓய்வு வேண்டுதல்!
பயணம் தொடரும் வழிநடைப் பயணியர்
பறந்து செல்வர்! விரைந்து முயல்வர்!                    (3)

உனது நினைவை உயர்வாய்த் தழுவி
தனதுகண் நீரைக் காலம் சொறியும்!
உலகின் எடையில் உறைந்து விழுந்தவர்
உணர்ந்து கொள்வர்! உயர்ந்து செல்வர்!                   (4)

ஊனைச் சுருக்கி உயிரைத் தந்தவர்
வானினும் உயர்ந்த அன்னவர் தாள்களில்
நிலவெனக் குளிர்ந்த நிழலைத் தந்திடும்
அரச மரத்தின் நிழலைஅற் பணிப்போம்!                    (5)


மின்மினிப் பூச்சி நிலவாகுமென
எண்ணிப் பார்ப்பது இயலாதொன்றே!
சிறுதீப் பொறியும் பெருந் தீயாக
விரைவாய் மாற வேண்டியே நிற்போம்!                     (6)


முதிர்ந்த முகந்தனில் புதிதாய் மலர்ந்த
விரிந்த சுருக்கமும் அழகாய்த் தெரியும்!
சிறந்த திரையில் அமுதக் கைப்பட
நிறைந்த ஓவியம் நிறைவாய் அமையும்!                    (7)

சிலுவைதனிலும், திரிசூலத்திலும்
பெருமையாய் நிற்கும் பெரியோர் தலைகள்!
சரியும் கோட்டையில், சாயும் வீட்டிலும்
சிறந்து நிற்க அருள்வாய் இறைவா!                          (8)

இதயம் அங்கே மூடும் நேரம்
இதோ திறப்பது அழகிய வாயில்!
உலகம் உன்னை மறந்திடும் நேரம்
திரும்பிடு உந்தன் திருமுகம் காட்டி!                        (9)

P.S. இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களைக் கூர்ந்து கவனியுங்கள். இவை திரு என்.வி.சுப்பராமன் அவர்களுடைய கவிதைகளுக்காக ஒரு ஆர்வலரால் எடுக்கப்பட்டவை. கவிஞருடைய பெயரும் அதில் இருக்கிறது.

வைணவமும் வாழ்வியலும்

வைணவமும் வாழ்வியலும்
(கடந்த 23, 24-1-2012 ஆகிய தேதிகளில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கில் படிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை)

இந்து மதம் என்பது அநாதியான வாழ்க்கை முறையென்றாலும், காலத்தால் இந்து மத வழிமுறைகளில் பற்பல பிரிவுகள் தோன்றத்தான் செய்தன. ஆதி சங்கரர் ஷண்மத ஸ்தாபனம் செய்வித்து அவரவர் விரும்பியபடி, அவரவர் வழிபடும் கடவுளை வணங்க வழிவகுத்துச் சென்றிருக்கிறார். சிவனை வழிபடுவோர் சைவமென்றும், பரம்பொருளான விஷ்ணுவை வழிபடுவோர் வைணவம் என்றும், முழுமுதற் கடவுளான கணபதியை வணங்குவோர் காணாபத்தியம் என்றும், அறுமுகக் கடவுளை வணங்குவோர் கெளமாரம் என்றும், சக்தியை வழிபடுவோர் சாக்தம் என்றும் தத்தமக்கு ஏற்ற வழிகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். இதில் எதுவும் எவராலும் தொடங்கப்பட்டு பெயரிடப்பட்டது இல்லை என்றாலும், அவரவர் கொள்கைகளுக்கேற்ப இந்தப் பிரிவுகள் காலத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. 

ஸ்ரீபெரும்புதூர் எனும் திருத்தலம். காஞ்சி மாநகருக்கு அருகில் அமைந்த ஊர். அங்கே ஒரு பெருமைமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீ ராமானுஜர். ஆதி சங்கரர் உபதேசித்தருளிய "அத்வைதம்" எனும் தத்துவம் பரம்பொருள் ஒன்றே, அதுதான் பரமாத்மா மற்ற உயிர்களெல்லாம் ஜீவாத்மாக்கள் என்றும், அவைகள் எல்லாம் பரம்பொருளின் துகள்கள் என்றும் சொல்வது அத்வைத சித்தாந்தம்.

ஸ்ரீ ராமானுஜர் கொண்ட கருத்து "த்வைதம்" என்பதாகும். அதில் பரம்பொருள் ஒன்று. அதனை அடைய வேண்டி மற்ற எல்லா உயிர்களும் அந்தப் பரம்பொருளின்பால் சரணாகதி அடைந்து ஜீவாத்மாக்கள் அந்தப் பரம்பொருளை அடைய முயற்சிக்க வேண்டுமென்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. 

ராமானுஜர் பரப்பிய இந்த த்வைதக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாத சோழ மன்னன் அவரை சோழ நாட்டைவிட்டு ஓடிவிடும்படி செய்தான். ஆனாலும் அவர் வழிநெடுக தனது த்வைதக் கொள்கையைப் பரப்பிக் கொண்டு கர்நாடகத்திலிருந்த மைசூருக்கு அருகில் சென்று குடியமர்ந்து தனது கொள்கையை பரப்பினார். அதுவே வைணவம், எனும் விஷ்ணுவை வழிபடும் சித்தாந்தமாகக் கருதப் படுகிறது.

இந்த வைணவத்துக்கு வியாக்கியானம் எனும் பெயரில் பல மகான்கள் பல தத்துவங்களைத் தந்திருந்தாலும் இவற்றுக் கெல்லாம் உச்சமாக ஸ்ரீ கிருஷ்ணன் அருளித்தந்த பகவத் கீதையே உலகத்தாரின் போற்றுதலுக்கு ஏற்றதாக இருக்கிறது. இந்த பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு யுத்த களத்தில் போதித்ததாகக் கருதப்படும் கருத்துக்கள் மட்டுமே மனிதனுக்கு வாழ்வியலைக் கற்றுத்தரும் முதல் பாடமாக அமைந்திருப்பதை காணமுடியும்.

யுத்த களத்தில் தனக்கு எதிரில் தனது உறவினர்கள், ஆச்சாரியார்கள் அனைவரும் எதிர்த்து நின்றிருக்கும் தருணத்தில் கையிலிருந்த காண்டீபம் எனும் வில் நழுவ, அர்ஜுனன் சோர்ந்து தேர்த்தட்டில் சரிந்து போகிறான். அவனை எழுப்பி கண்ணன் தரும் உபதேசமே பகவத் கீதை எனப்படும் வாழ்வியல் பாடமாகும்.

உறவு என்பது என்ன? உண்மையையும் தர்மத்தையும் நிலைநாட்ட வேண்டிய க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அர்ஜுனன், இதுபோன்ற சந்தர்ப்பத்தில் தான் எதிர்க்க வேண்டியது தன் பாட்டனாரை, தன் உறவினர்களை, தனக்குப் பாடமும் வில்வித்தையும் போதித்த ஆச்சார்யார்களை என்று நினைத்து சோர்வு அடையக் கூடாது. பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணன் இந்த உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வந்து பிறந்தவன் என்பதால், தர்மத்தை நிலைநாட்டும் கடமையில் எதிர்ப்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் செயல்பட வேண்டும் என்பதை கிருஷ்ணன் நிலைநாட்டுகிறார்.

உலக சமய இலக்கியங்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது பகவத் கீதை எனலாம். வாழ்வின் சிக்கல்கள், பிரச்சனைகள் பற்றியெல்லாம் அர்ஜுனன் வினவிட அதற்கெல்லாம் விளக்கம் அளித்து அவனைத் தெளிவு பெறச் செய்கிறான் கண்ணன். வாழ்வியல் என்பதே கிருஷ்ணன் காட்டும் பாதைதான். லோகாயத வாழ்க்கையில் நாம் தினந்தினம் நல்லவைகளையும், தீயவைகளையும் கேட்டும் பார்த்தும் சந்தித்தும் வளர்கிறோம். அத்தகைய சந்தர்ப்பங்களில் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் எவை எவை எனும் அறிவை நாம் பெற்றிருத்தல் மிகவும் அவசியம்.

சில நேரங்களில் சந்தர்ப்ப வசத்தால் நேர்மைக்கு மாறான செயல்களை நாம் செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். அப்படிச் செய்தால் என்ன? அதனால் நமக்கு என்ன நேர்ந்துவிடப் போகிறது. நாம் செய்யும் தவறைப் பிறர் கண்டுகொள்ளாத நேரத்தில் நாம் செய்யும் தவறுக்கு யார் சாட்சி சொல்ல முடியும்? என்றெல்லாம் நாம் நினைக்கிறோம். ஆனால் மனித ஆன்மா என்பது இறைவனின் ஓர் அங்கமே. அது நாம் செய்யும் எந்த நல்ல செயலையும், தீய செயலையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆன்மாவை மீறி மனம் செயல்படும்போது ஆன்மா அந்த தவறை மன்னிக்காது என்பதுதான் கீதை தரும் உண்மை.

பரமாத்மா என்பவர் அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் உள்ளடக்கி ஆள்பவராகவும், ஜீவன்கள் எனப்படுபவை அந்த பரமாத்மாவினால் ஆளப்படுபவர்களாகவும் உணர்ந்திருக்கிறோம். அப்படியானால் அந்த பரமாத்மா சொன்ன வழிமுறைகளிலிருந்து மாறுபடும் எந்த வாழ்வியல் செயலும் நமக்குச் சரியான தண்டனையைக் கொடுத்தே தீரும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை. உலகில் நடந்த பல கொடுமைகளையும், அந்தக் கொடுமைகளைச் செய்த மனிதர்களையும் நாம் அறிவோம். அத்தகைய கொடுமைக்காரர்களுக்கு மனிதன் தண்டனை கொடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அவன் மன்னிக்கப் படவில்லை. யாரால்? பரம்பொருளால் என்று சொன்னால், அது உனக்கு எப்படித் தெரியும் என்பீர்கள். சரி இவ்வுலகில் அந்தப் பரம்பொருளின் அம்சங்களாக உருப்பெற்றிருக்கும் ஜீவன்கள் எவையும் அந்தக் கொடுமைகளை அங்கீகரிக்கவில்லை என்பதே பரம்பொருள் அந்த கொடுமைக்காரர்களுக்குக் கொடுத்த தண்டனைதான்.

தவறு செய்தவன் எவனும் நாட்பட்டு சுகம் அடைந்ததில்லை. அந்தத் தவறுக்கு ஏற்ற தண்டனை அவனுக்குக் கிடைத்தே தீரும் என்னும் உண்மையை சமயம் நமக்கு வழிகாட்டுமானால், அந்த வழிமுறையிலிருந்து விடுபட்டு தவறிழைக்க எந்த ஜீவனும் துணியமாட்டான். 

வைணவ சம்பிரதாயங்களும் சரி, அதன் சாரங்களைத் தன்னுள் அடக்கிய பகவத் கீதையாகட்டும் எந்த ஒரு மனிதனும் சாதாரண உலக வாழ்க்கையில் தவறு செய்யாமல் வாழ்வதற்காக நாட்டை நீங்கி காட்டுக்குச் சென்று தவம் இரு என்று சொல்லவே இல்லை. மாறாக இந்த சமயக் கருத்துக்கள் கூறும் நல்வழி என்ன தெரியுமா? அவரவர்க்கு இட்ட தொழிலை அவரவர் செய்து கொண்டிருப்பதே தர்மம் என்கிறது வைணவம்.

செய்ய முடியாத அல்லது நடைமுறை சாத்தியமில்லாத எதையும் வைணவம் உபதேசிக்கவில்லை. கடவுள் தத்துவத்திலும் அப்படியொரு கருத்து இருக்க வில்லை. ஆன்மா வேறு, இந்த பெளதீக உடல் வேறு என்பதை அறிஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆன்மாவுக்கு சம்பந்தமில்லாத இந்த உடல் செய்யும் தவறும் அந்த ஆன்மாவைத்தான் சென்றடைகிறது என்கிறது சமயம்.

மனிதனாகப் பிறந்து விட்ட எந்த ஜீவனும் இந்த உடலெடுத்த பூமியில் தத்தமக்கு இட்ட பணிகளைச் செய்வது மட்டுமல்ல அதில் சிறந்து விளங்க வேண்டுமென்று எண்ணுவதும் இயல்பே. அப்படி இல்லாமல் மற்றவர்களைப் போல முன்னேற முடியாமல் தவறுகளையும், தர்மத்துக்கு எதிரான காரியங்களையும் ஒருவன் செய்வானேயானால் அவன் அந்தத் தவற்றுக்கான தண்டனையை இப்பிறவியிலேயே அடையும்படியான வழிமுறைகளை இறைவன் உண்டாக்கித் தந்திருக்கிறான்.

அப்படியொருக்கால் அவனுக்கு ஒரு பிறவியில் தண்டனை கொடுக்க முடியாமல் போய்விட்டாலும், அவன் இறுதி காலம் வரை தவறுகளையே செய்து கொண்டிருந்துவிட்டு மாய்ந்து போனாலும், அந்த ஜீவனுக்குக் கிடைக்கும் அடுத்த பிறவி அவன் செய்த பிழைகளுக்கெல்லாம் தண்டனையாகத்தான் இருக்கப் போகிறது. இந்த உண்மையை மட்டும் நமது சமயம், குறிப்பாக வைணவமும் பகவத் கீதையும் சொல்வதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்களானால் எவனும் நேர்மை தவறி நடக்க வாய்ப்பில்லை.

உலகில் ஜீவராசிகள் அனந்த கோடி உண்டு. புல் பூண்டு, புழு பூச்சிகள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என்று இந்த ஜீவன்கள் பலவாறாகப் பிரிந்து கிடந்தாலும் பகுத்தறிவு படைத்த மனிதன் தங்கள் மனித ஜாதிக்கென்று சில வரைமுறைகளை, கட்டுப்பாடுகளை விதித்து வாழும் முறையைக் கடைப்பிடிக்கிறான்.

மிருகங்களும், பறவைகளும் தங்களுடைய இனப்பெருக்கத்துக்காக கூடுகின்றன. அதில் எந்த சட்ட நியதிகளோ, உறவின் முறைகளோ அவைகளுக்குக் கிடையாது. ஒரே மிருகம் பல அதே இனத்து மிருகங்கலுடன் கூடி இன விருத்தி செய்து கொள்கிறது. அதில் அவைகளுக்கு எந்த தர்ம விரோதமும் கிடையாது. இறைவன் விதிக்கவும் இல்லை. ஆனால் ஜீவன்களுக்குள் இருக்கும் உறவு, வாழ்வு, இவற்றை உத்தேசித்து மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொண்டு சில கட்டுப்பாடுகள் தெய்வீகத் தன்மை வாய்ந்ததாகத்தான் நமது சமயங்கள் போதிக்கின்றன.

சில குறிப்பிட்ட உறவுகளில் ஒரு ஆண் பெண் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இறைவன் படைக்கும்போது அப்படிப்பட்ட சட்டம் எதையும் உருவாக்கி அனுப்பவில்லை என்றாலும், நாகரிக வாழ்க்கைக்காக மனிதன் தனக்குத் தானே இயற்றிக் கொண்ட சட்டம் அது. ஆனால் அதையும் மீறலாம் என்று தங்களைப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் மாற்ற முயலாலம். அப்படிச் செய்யவும் செய்யலாம். ஆனால் அதனால் எந்த பிரளயமும் ஏற்பட்டுவிடுவதில்லை. இறைவன் தண்டிப்பதும் இல்லை. ஆனால் சமயம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமயம் ஏற்றுக் கொள்ளாததை உலகம் ஏற்றுக் கொள்வதும் இல்லை.

எடுத்துக் காட்டாக சில உறவுகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் பெரும்பாலும் இல்லை. குறிப்பாக தந்தையின் அண்ணன் அல்லது தம்பி மகள் ஒருவனுக்குத் தங்கை முறையாகிறது. அதே நிலை தாய் வழியில் கிடையாது. தாயின் அண்ணன் அல்லது தம்பி மகளை ஒருவன் திருமணம் செய்து கொள்கிறான். இந்த சமுதாயக் கொள்கையை இறைவன் நியமிக்கவில்லை. ஆனால் சமயம் நமக்கு அறிவுறுத்திச் சொல்கிறது. சிலவற்றைத் தவறுகள் என்று.

அறிவியல் வளர்ச்சியின் பயனாக மனிதன் நிலவை எட்டிப் பிடித்து விட்டான். ஆனால் ஜீவன்கள் சம்பந்தப்பட்ட ஆன்மீக வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள அத்தனை முயற்சிகளை செய்துவிடவில்லை. வாழ்நாளில் ஒருவன் இறை சிந்தனையோடு மட்டுமே இருப்பானால் இக வாழ்வில் அவனால் வாழ முடியாமல் போகலாம். வாழ்க்கைக்கு அவனுக்கு ஒரு வழி வேண்டும். பிழைக்க வேண்டும். ஆகவே ஒரு தொழிலை ஏற்றுக் கொள்கிறான். ஆனால் அந்தத் தொழிலை செய்கையில் அவன் சில தர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடிக்காமல் போவானேயானால் அவன் தர்மத்திலிருந்து பிறழ்ந்தவனாக ஆவான். இதை இறைவன் சொல்லவில்லை. இறைவன் பெயரால் உருவாகியிருக்கும் சமய தர்மம் சொல்கிறது.

சிவனை வழிபடுவோர் சைவர்கள் என்றும் விஷ்ணுவை வழிபடுவோர் வைஷ்ணவர்கள் என்றும் முதலில் குறிப்பிட்டேன். இவர்களில் வைஷ்ணவ சமயப் பெரியோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆச்சார்யார்கள் என்றும் இரு வகையாகக் குறிப்பிடுவர். இவர்களது பணி மக்களை நல்வழிப் படுத்தி, நல்ல ஆச்சாரங்களைச் சொல்லிக் கொடுத்து இந்த வையத்தில் வாழ்வாங்கு வாழச் செய்வதுதான்.

மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களாகச் சொல்லப்பட்டவை அன்பு, பணிவு, பாசம், கடமை, நட்பு இவை முக்கியமானவை. சமயம் என்பது ஏதோ தொடக்கூடாத தீட்டு அல்ல. சமயம் என்பது மனிதனை வாழ்வாங்கு வாழவைக்கும் பாதை. அதில் வைணவம் என்பது இந்த பாரத நாட்டில் பல இதிகாச புராணங்களைத் தந்திருக்கிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற தர்மங்களை உபதேசிக்கும் நூல்கள் மனிதனை நல்வழிப்படுத்தவே உருவானவை.

இந்த இதிகாசங்களில் மகாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். காரணம் இதில் வைணவத்தின் பிதா கண்ண பரமாத்மாதான் கதாநாயகன். இதில் வலியுறுத்தும் கருத்துக்களை வாழ்வியலில் யார் யார் எப்படி நடைமுறைப் படுத்தினார்கள் என்பதை இந்த இதிகாசத்தில் காணலாம். குறிப்பாக மனித இயல்பில் நாம் கடைபிடிக்க வேண்டிய குணம் பொறுமை. இந்த பொறுமையை தருமன் மூலமாகக் காட்டுகிறார்கள். துடிதுடிப்பான செயலுக்கு பீமன், ஆண்மைக்கும் வீரத்துக்கும் அர்ஜுனன், மூத்தோரைப் பின்பற்றி நேர்வழியில் நடக்க நகுலனும் சகாதேவனும், பஞ்ச பூதங்களின் அரசியாகப் பரிமணிக்கும் பாஞ்சாலி, தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் தானம் செய்ய ஒரு கர்ணன், தீமைகளின் உருவகம் சகுனி, தாய்ப்பாசத்துக்கு ஒரு குந்தி, நேர்மையின் உருவகமாக ஒரு விதுரன், தீய எண்ணங்களின் காட்சியாக துரியோதனன், பாசத்தால் நெறி தவறும் திருதராஷ்டிரன், ராஜதந்திரியாக கண்ண பரமாத்மா என்று இந்தப் பாத்திரப் படைப்புகளில் பலரை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த இதிகாசங்கள் நமக்குச் சொல்லும் நீதிதான் என்ன? இப்படி வாழ வேண்டும் என்பதற்கு சில கதா பாத்திரங்கள், இப்படி வாழக்கூடாது என்பதற்குச் சில பாத்திரங்கள். புராணங்கள் கதைகள் தானே என்ற எண்ணம் எழலாம். ஆம் கதைகள்தான் ஆயினும் அவை சொல்லும் தர்மத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும், புராணத்தில் காணப்படும் தேவையற்றவற்றை அன்னப் பறவை பாலை எடுத்து நீரை விட்டுவிடுவதைப் போல விட்டு விட வேண்டும்.

நமக்கு தர்மத்தை உபதேசிக்க இந்தந்த குணங்களை நீக்கிவிட வேண்டும். இந்த இந்த வழிகளில் வாழ வேண்டும் என்று சமயங்கள் உபதேசிக்குமானால் அதில் ஜீவன்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட வாய்ப்பு உண்டு. எனவேதான் அந்த நீதிகளை, தர்மங்களை கதை வடிவில் நமக்குக் கொடுத்திருக்கிறது சமயங்கள். வைணவ சம்பிரதாயத்தைப் பின்பற்றுவோர் கண்ண பரமாத்மாவின் உபதேசங்களைத் தலைமேற்கொண்டு நடப்பார்களானால் அவர்களது வாழ்வியலில் எந்த தவறும் ஏற்பட வாய்ப்பே இல்லை.

மகாபாரதக் கதையில் வரும் குருக்ஷேத்திரப் போர் என்பது மனிதர் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படக்கூடிய போர்தான். இந்த பதினெட்டு நாள் போரின் இறுதியில் நாம் மேலே சொன்ன குணாதிசயங்களைக் கொண்டவர்கள் அடையும் கதி, அவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு நமக்கெல்லாம் வாழ்வியல் நெறிகளைக் காட்டும் விதமாக அமைந்திருப்பதைக் காண முடியும்.

பகவத் கீதையெனும் நீதி நூலை இடையில் புகுத்தி, இனிப்பான கதையை நமக்குக் கொடுத்திருக்கும் யுக்தியை நாம் பாராட்ட வேண்டும். கண்ணன் கடவுளா? தேவையில்லை. அப்படிக் கருதித்தான் ஆகவேண்டுமென்கிற கட்டாயம் எதுவும் இல்லை. அவன் மனிதனாகவே இருக்கட்டும். அவன் விஷ்ணுவின் அம்சமாகவோ அல்லது விஷ்ணுவைப் பின்பற்றும் ஒரு வைஷ்ணவனாகவோகூட இருக்கட்டும். அவன் எப்படிப்பட்டவனாக இருக்கிறான் என்பது முக்கியமல்ல. அவன் சொன்னது என்ன என்பதுதான் இப்போது நமக்கு முக்கியம்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர் பெருமான். அப்படி வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவனை தெய்வத்தோடு ஒப்பிட்டுப் பேசுவதில் என்ன தவறு இருக்க முடியும்? பகவத் கீதை கடவுள் படைத்தது என்று ஒதுக்கத் தேவையில்லை. மனிதன் தனது சக ஜீவன்களுக்கு நல்வழிகாட்ட ஏற்படுத்திக் கொடுத்ததாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.

வைணவம் விரோதத்தையோ, வெறுப்பையோ, சண்டையையோ தூண்டவில்லை. மாறாக அந்த தீய செயல்களிலிருந்தெல்லாம் மக்களைக் காக்க எப்படி இருக்க வேண்டுமென்று போதிக்கிறது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்கிறது சமண சமய நூலான சிலப்பதிகாரம். அதே கருத்தைத்தானே வைணவமும் இந்த மகாபாரதம் மூலம் நமக்குத் தெளிவாக்குகிறது.

வாழ்வியலில் பல தடங்களை இந்த வைணவம் சில நீதிநூல்கள் மூலமாகக் குறிப்பாக மகாபாரதம் மூலம் தெளிவு படுத்துகிறது. தீமை புரிந்தால் தீமை நமக்கே வரும் எனும் நீதியைத் தெரிந்து கொள்ளலாம். விதையொன்று போட்டால் வேறொரு செடி முளைக்குமா, செஞ்சோற்றுக் கடன் என்பது என்ன எப்படிப்பட்ட தியாகத்தையும் அதற்காகச் செய்ய முடியுமா, பாரதம் பதில் சொல்லுகிறது. உறவு, பந்தம், பாசம் என்று மனம் அலை மோதுகிறதா, கடமையைச் செய்யும் போது அவற்றைத் தூக்கி எறிந்துவிடு என்கிறது மகாபாரதம்.

மகாபாரதம் மட்டுமல்ல, இராமாயண காப்பியமும் ஒரு வைணவக் காப்பியம்தான். அது றும் வாழ்வியல்தான் என்ன? காதலில் ஒன்றுபட்ட தம்பதியினரின் ஒற்றுமை இராமன் சீதையிடம் காணலாம். ஒரு நண்பன் எப்படியிருக்க வேண்டும்? பயன் எதிர்பார்க்காத தொண்டுள்ளம் கொண்ட குகனைப் பாருங்கள் என்கிறது இராமாயணம். ஒரு நல்ல ஊழியன் எப்படி இருக்க வேண்டும்? மகாகவி பாரதியின் "கண்ணன் என் சேவகன்" பாடலில் வரும் வேலைக்காரன் போலவா? அல்ல அல்ல. அனுமனைப் போல குறிப்பறிந்து செயல் புரியும் ஆற்றல் மிக்கவனாக இருக்க வேண்டும்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இராமனைப் பிரிந்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் தன் கணவன் பெருமைக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தன் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்த சீதையைப் போல மனைவி அமைய வேண்டும்.

தீமைக்கும், அக்கிரமங்களுக்கும் இடையே வாழ்ந்த போதும் தர்ம நெறி தவறாமல் நடக்க வேண்டுமா? அப்படி நடக்க முடியுமா? ஏன் விபீஷணனைப் பாருங்கள். அநீதிக்கு அடிபணிய மறுத்த அவன் நேர்மையைப் பாருங்கள். இராமாயணம் சொல்லும் நீதி இது.

செஞ்சோற்றுக் கடன் கழிக்க பாரதத்து கர்ணன் போல இராமாயணத்தில் கும்பகர்ணன். தன் அண்ணனுக்காக அவன் செய்வது அநீதி என்ற போதிலும், தன்னை உறக்கத்திலும் காத்துவந்த அந்த மேன்மைக்காகத் தன் இன்னுயிரை ஈந்த அந்த மேன்மகனைப் போற்றலாம் இராமகாதையில்.

வைணவக் காப்பியங்களும், வைணவ நீதி நூல்களும் மனிதனை நல்வழிப்படுத்தவும், நேர்மை நியாயம் இவற்றிலிருந்து இம்மியளவும் விலகாமல் வாழ்ந்திட நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். வைணவம் சமயம் மட்டுமல்ல, மனிதனை வாக்கையில் மேம்படுத்த வாய்த்த ஒரு வழிகாட்டி. மனித வாழ்வு மேன்மையுற வைணவம் செய்திருக்கும் பணி மகத்தானது என்ற எனது கருத்தை வலிறுத்தி என் உரையை நிறைவு செய்கிறேன்.

Thursday, January 19, 2012

என் உயிரின் கீதம் நீ!


"என் உயிரின் கீதம் நீ" என பல கவிதைகள் பல கவிஞர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் நண்பர் ஆலாசியம் அவர்களின் கவிதை இதோ! படித்தபின் அன்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறுமாறு வேண்டுகிறேன். 

கோ.ஆலாசியம்.

என் உயிரின் கீதம் நீ!
என் உணர்வுகளின் நாதம் நீ!
என் ஆனந்தத்தின் ஆரோஹனம் நீ!
என் ஆசைகளின் அவரோகணம் நீ!
 
சுருதி நீ! சுலோகம் நீ! சுரத்தோடு தாளம் நீ!
பெருகி ஓடும் இசையின் இனிமை நீ!
வீணையின் ஒலியில் வாழும் நீ!
வேணு கானம் நீ! வேதங்களின் சாரமும் நீ!
 
காலை மாலை கடும்பகல் யாவும் நீ!
இரவின் கருமை நீ! இரவியின் ஒளியும் நீ!
கடலின் ஆழம் நீ!
கவின்மிகு மலைமுகடும் நீ!
 
தேடல் நீ! பாடல் நீ!
தேனூறும் மலரும் நீ!
தில்லையின் அம்பலம் நீ!
திகட்டாத அமுதம் நீ
தேவாதி தேவன் நீ!
 
நடனம் நீ! நடராஜனும் நீ!
நடமாடும் நதியலையும் நீ!
நர்த்தனமாடும் கடலும் நீ!
நாரத கானமும் நீ!
 
தென்றல் நீ! திசையெல்லாம் நீ!
திங்கள் நீ! எனது கண்கள் நீ!
மங்கலப் பொருள்கள் யாவும் நீ!
மங்காத சங்கொலியும் நீ!
மணியோசை நீ! 
மாணிக்கப் பேரொளியும் நீ!
 
உயிர்களின் மூலம் நீ!
உயர் பிரபஞ்ச சக்தி நீ!
அன்பின் வடிவினன் நீ!
ஆனந்த மயமானவன் நீ!
 
வானம் நீ! வான் மேகம் நீ!
நீரும் நீ! நெருப்பும் நீ!
நிஜமான இருப்பும் நீ!
இயக்கம் நீ! காட்சிகளில் மயக்கம் நீ!
அணுவும் நீ! அண்டமும் நீ!
காணும் யாவும் நீ!
 
இல்லாததும் நீ! இருப்பதுவும் நீ!
சொல்லில் நில்லாதவனும் நீ!
சொல்லின் அழகானவனும் நீ!
இடியும் மின்னலும் நீ!
அமைதியும் அதனாழமும் நீ!
 
எல்லாமும் நீ! எல்லாவற்றிலும் நீ!
எல்லையில்லாப் பிரபஞ்ச இதயம் நீ!
காரணம் நீ! காரியம் நீ! காலம் நீ! 
காரண காரிய காலம் கடந்தவனும் நீ!
 
தாயும் நீ! சேயும் நீ!
தண்மையும் நீ! உண்மையும் நீ!
அன்பும் நீ! அறிவும் நீ!
பண்பும் நீ! பரிவும் நீ!
 
எல்லையில்லா பேருரு நீ!
என்னுள் உறையும் நீ!
என் உயிரோவியம் நீ!
என்னுள் ஒளிர்வாய் நீ!
என்னுயிரானவனே நீ!
என்னுயிரே நீ!

கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற சில மேதைகள்:--

கர்நாடக இசையுலகில் புகழ்பெற்ற சில மேதைகள்:--

1.அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்.




அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரியக்குடி எனும் ஊரில் 1890ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி பிறந்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். புதுக்கோட்டை மலையப்ப ஐயர் என்பவரிடம் தொடக்க காலத்தில் இசை பயின்ற இவர் பிறகு நாமக்கல் நரசிம்ம ஐயங்காரிடம் இசை பயின்றார். இவரை ஒரு தலைசிறந்த இசைக் கலைஞராக உருவாக்கிய பெருமை பூச்சி ஐயங்கார் என அழைக்கப்பட்ட ராமநாதபுரம் ஸ்ரீனிவாச ஐயங்கார்தான்.


இவர் 1938ஆம் ஆண்டிலேயே மியுசிக் அகாதமியில் தலைமை வகித்து சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றவர். இவர் சுமார் அறுபது ஆண்டுகள் கர்நாடக இசையுலகின் முடிசூடா மன்னராக விளங்கியவர். இன்றைய சங்கீதக் கச்சேரிகளை நடத்தும் முறையை இவர் உருவாக்கித் தந்தார். புகழ்பெற்ற பக்க வாத்தியக்காரர்களும் இவருடன் வாசித்திருக்கின்றனர். இவர் திருவையாறு சற்குரு ஸ்ரீ தியாகபிரம்ம உத்ஸவத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் கலந்துகொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்தியதோடு, ஆராதனையன்று நடக்கும் உஞ்சவிருத்தியிலும் பல பிரபல வித்வான்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். அவருடன் செம்மை வைத்தியநாத பாகவதர், முசிறி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்பாலசுப்பிரமணியம், ஆலத்தூர் ஸ்ரீநிவாசய்யர் போன்ற மேதைகள் எல்லாம் உஞ்சவிருத்தி எடுத்துக் கொண்டு பாடிச்செல்லும் காட்சியைப் போல இப்போதெல்லாம் இன்றைய பிரபல வித்வான்கள் செய்வதில்லை. மகான் தியாகராஜருக்குச் செய்யும் அஞ்சலியாக அவர்கள் செய்ததைப் போல இன்றைய வித்வான்களும் தங்களது தகுதிகளை மறந்து உஞ்சவிருத்தியில் கலந்து கொள்வதுதான் ஸ்ரீ தியாகராஜருக்குச் செய்யும் முறையான அஞ்சலியாக இருக்க முடியும்.

2. முசிறி சுப்பிரமணிய ஐயர்


எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்து இசை மேடைகளில் இன்னிசை விருந்து அளித்து வந்தவர் முசிறி சுப்பிரமணிய ஐயர். சுமார் இருபது ஆண்டுகள் இவர் இடைவிடாது கச்சேரிகள் செய்து வந்தவர். இவருடைய காலத்தில் இவர் ஒவ்வோராண்டும் திருவையாறு ஆராதனையில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் அந்த நாளில் இருந்துவந்தது. 1940 வாக்கில் இவர் இசை விரும்பிகளுக்கு வழிகாட்டியாகவும், நல்ல இசை ஆசிரியராகவும் இருந்து வரத் தொடங்கிவிட்டார்.


இவர் திருச்சி மாவட்டம் முசிறிக்கு அருகிலுள்ள பொம்மலபாளையம் எனுமிடத்தில் 1899 ஆகஸ்ட் 9ஆம் தேதி பிறந்தார். 1975 மார்சி 25இல் இவரது கடைசி மூச்சு வரை கர்நாடக இசையைப் பரப்பியவர். மிகச் சாதாரண குடும்பத்தில் தோன்றிய இவர் தனது 14ஆம் வயதில் நாகலக்ஷ்மி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்த நாளில் நாடக உலகில் கொடிகட்டிப் பறந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் பாட்டுக்கள் இவரைப் பாட்டு கற்றுக்கொள்ளத் தூண்டியது. 


எஸ்.நாராயணஸ்வாமி அய்யர் என்பவர்தான் இவருடைய முதல் இசை ஆசிரியர். அதன் பின் சென்னைக்குச் சென்று அங்கிருந்த வயலின் மேதை கரூர் சின்னசாமி ஐயரிடம் பயின்றார். அவருடைய வழிகாட்டுதலின்படி டி.எஸ்.சபேச ஐயர் என்பவரிடம் இசை பயின்றார். 1920இல் இவருடைய முதல் கச்சேரி சென்னையில் நடந்தது. அப்போது பல சுப்பிரமணியர்கள் இருந்ததால் இவரை அடையாளம் காட்ட இவரது ஊரான முசிறி இவருடைய பெயருக்கு முன்பு சேர்க்கப்பட்டது. சரஸ்வதி ஸ்டோர்ஸ் கிராமபோன் இசைத்தட்டுக்கள் தயாரித்து வந்தனர். இவருடைய பாடல்கள் கிராமபோன் இசைத்தட்டுகள் மூலமும் பிரபலமாயின. இவருடைய உடல்நிலை சீர்கெட்டுவிட்ட படியால் ஒரு கட்டத்தில் கச்சேரிகள் செய்வதை நிறுத்திக் கொண்டார்.


இவர் திருவையாறு ஸ்ரீ தியாகபிரம்ம சபாவின் செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்திருக்கிறார். இவருடைய சிஷ்ய பரம்பரை பெரியது. மணி கிருஷ்ணசாமி, டி.கே.கோவிந்த ராவ், சுகுணா புருஷோத்தமன் போன்றவர்கள் இவரது இசை வாரிசுகள். இவருக்கு மியுசிக் அகாதமியின் சங்கீத கலாநிதி, தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், இந்தியன் ஃபைன் ஆர்ட்சின் சங்கீத கலா சிகாமணி ஆகிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. 1971இல் இவர் பத்ம பூஷன் விருதினைப் பெற்றார்.



பட்டியல் தொடரும் .....

ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆராதனை

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சங்கீத ஆராதனை

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட மகான்களில் இசையாலும், பக்தியாலும் சதாசர்வ காலமும் இராமனை வழிபட்டு முக்தியடைந்த ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 165ஆவது ஆராதனை விழா திருவையாற்றில் ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்றது. 

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை என்பது ஓர் புனிதமான விழா. பக்தியோடும், சிரத்தையோடும் செய்யப்பட வேண்டிய இசை ஆராதனை. காரணம் அவர் இசையை மட்டும் முன்னிலைப் படுத்திய இசை வல்லுனராக மட்டும் இல்லாமல் அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் பக்தியை முன்னிலைப் படுத்தி, அந்த பக்தி பரவசத்தைத் தன் சங்கீத ஞானத்தால் அற்புதமான கீர்த்தனைகளைப் பாடி தன் இஷ்ட தெய்வமான ஸ்ரீ இராமபிரானை வழிபட்ட மகான். இவருக்கு அவர் வாழ்ந்த திருவையாற்றின் பனி பொழிந்து குளிர்ந்திருக்கும் காவிரிக் கரையில் அவர் பூதவுடல் சமாதியடைந்த அதே இடத்தில், அவர் இசைத்த அற்புதமான இனிய பாடல்களைப் பாடி ஆராதனை செய்வதென்பது இசை வல்லுனர்கள் செய்யும் ஸ்ரத்தாஞ்சலியாகக் கருதப்படுகிறது.

திருவையாறு என்றதும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும் அவரது இசையும் நினைவு வரும். இந்த திருவையாறு எனும் பெயரால் எங்கு எப்போது இசை விழாக்களோ அல்லது ஆராதனைகளோ நடந்தாலும்கூட அசல் திருவையாற்றில் நடைபெறும் இந்த தெய்வீக சூழ்நிலைக்கு நிகராக ஆகமுடியாது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு முன்பும் சரி, பின்னரும் சரி ஏராளமான வாக்யேயக்காரர்கள், இசை வல்லுனர்கள், மேதைகள் இருந்திருக்கிறார்கள்; வரலாறு படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். பக்தியிலோ, சங்கீத ஞானத்திலோ, அற்புதமான குரல் வளத்தால் மக்களை இசையில் ஆழ்த்துவதிலோ எந்த குறையுமில்லாத அந்தப் பலரில் ஸ்ரீ தியாகராஜர் மட்டும் மிக உயர்ந்து காணப்படுவதோடு, அவர் நினைவு தினத்தில் ஆராதனை செய்து வழிபடுமளவுக்கு உயர்ந்திருப்பது ஏன் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளல் வேண்டும். 

திருவையாற்று ஆராதனையில் மேலோங்கியிருப்பது பக்தி. ஸ்ரீ தியாகராஜரின் பக்தி உணர்வினாலும், அவர் பல மேதைகளின் அனுக்கிரகத்தோடு கற்றுக்கொண்ட இசை நுட்பங்களினாலும் ராமனை தனது பக்திரசம் சொட்டும் இசையினால் அபிஷேகம் செய்தார். இனிய இசையெனும் தேனாபிஷேகம். அதனை ஸ்ரீ ராமபிரான் ஏற்றுக் கொண்டதால்தான் இன்று அவருக்கு மட்டும் இத்தனை பெரிய விழாவும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது. எப்போதோ, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் இதுபோன்ற மகான்களின் பெருமையைப் போற்றி வழிபடாவிட்டால் இறைவன் வேறொரு மகானை நமக்கு அளிப்பது என்பது துர்லபம்.

அவருடைய ஆராதனை விழாவில் கலந்து கொள்ளும் இசை விற்பன்னர்களும், மேதைகளும் இந்த புண்ணிய பூமியில் கால் வைத்து நடக்கும் ஒவ்வொரு கணமும், இந்த பூமியில் தான் அந்த மகான் நடந்திருக்கிறார் , இங்குதான் காற்றில் அவரது கானம் கலந்திருந்தது என்ற உணர்வில் இருத்தல் வேண்டும். அவர் பக்தியை, இசையைப் போற்றி ஸ்ரீ ராமபிரான் காட்சியளித்ததும் இங்குள்ள அவரது இல்லத்தில்தான் என்பதை அதே பக்தி உணர்வோடு வணங்கி அந்தப் புனிதரின் கால்கள் நடந்த மண்ணில் அவரைப் போலவே உஞ்சிவிருத்தி செய்து ஆராதனை செய்து வழிபட வேண்டும். அவர் நினைவு மனங்களில் கோலோச்சும் நேரத்தில் தத்தமது வித்வத், மேதைமை, ஆற்றல் இவைகளை அந்த மகானுக்கு என்று அர்ப்பணிக்கும் உணர்வைக் கொண்டிருக்க வேண்டும்.

எத்தனையோ மன்னர்களின் சபைகளில் அந்தக் காலத்தில் இசைக் கச்சேரிகள் நடந்திருக்கும். அங்கெல்லாம் மன்னரின் பெருமையும், இசைக் கலைஞரின் ஆற்றலும்தான் வெளிப்பட்டிருக்கும். ஆனால் திருவையாற்று ஆராதனையில் ஸ்ரீ தியாகராஜரின் அர்ப்பணிப்பும், பக்தியும், அவரது இசையும்தான் எங்கும் பரவியிருக்கும். அவரது கீர்த்தனைகளின் சிறப்பு அவர் எந்தெந்த உணர்வில் அந்தக் கீர்த்தனைகளைப் பாடினாரோ, அந்த ரஸம், நவரஸங்களில் அமைந்த அந்தச் சூழ்நிலை மட்டுமே வெளிப்படும். அவர் வாழ்ந்த மானசீகமான வாழ்க்கை நம்மைப் போன்றவர்கள் வாழும் புற வாழ்க்கையைப் போன்றதல்ல. அங்கு அவருடைய ராமன், சீதை, அனுமன் ஆகியோரும், அவர்கள் கருணைக்காக ஏங்கி, மனம் உருகிப் பாடும் இவரது இசை மட்டும்தான் இருக்கும். அப்படிப்பட்ட மகான் வாழ்ந்த இடத்தில் அவருக்கு அஞ்சலி, ஆராதனை என்பது நாட்டில் பல பகுதிகளிலும் வாழ்பவர்களுக்கு ஓர் புனிதப் பயணமாக இருக்க வேண்டும். அவருடைய புனித இசை வாழ்க்கைக்கு நாம் செய்யும் அஞ்சலி மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டும்.

கர்நாடக சங்கீதத்துக்கு மும்மூர்த்திகள் என்று ஸ்ரீ தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரைச் சொல்லுகிறோம். இவர்கள் மூவரின் சங்கீதத்திற்கு பக்தி மட்டுமே மூலதனமாக இருந்திருக்கிறது. ஸ்ரீ தியாகராஜர் தவிர மற்ற இருவருக்கும் தமிழ்தான் தாய்மொழியாக இருந்திருக்கிறது. அவர்கள் இருமொழிப் புலமை பெற்றவர்கள். தாய்மொழியாம் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை அடைவது என்பது அவர்கள் காலத்தில் பெரும்பாலும் இருந்து வந்த நிலைமை. ஆகவே தமிழைப் போலவே சம்ஸ்கிருத மொழியிலும் வல்லமை படைத்திருந்ததால் அவ்விருவரும் பெரும்பாலும் அந்த மொழியிலேயே பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் தாய்மொழி தெலுங்கு. அவருக்கு தமிழ் தெரியும். சம்ஸ்கிருதமும் நன்கு பழக்கமிருக்கலாம். எனினும் அவர் உள்ளத்தில் அரும்பி, போதாகி, மலர்ந்து மனத்தை உருக்கிய பக்தி எனும் உணர்வு இசையாக வெளிப்பட்ட பொது அது அவரது தாய்மொழியில் இயல்பாக வந்திருக்கிறது. பொதிகை மலையில் உருவாகும் தென்றல் காற்று, நீர்நிலைகளையும் மலர்வனங்களையும் வருடிக்கொண்டு வந்து நம் மீது படும்போது அந்தக் குளிர்ச்சியும், மலர்களின் மணமும் வீசுவது போல், ஸ்ரீ தியாகராஜரின் பக்தியில் உருவாகி அவர் தாய்மொழியில் வெளிவந்த அவருடைய சங்கீதத்தின் உயர்வு, பெருமை அளவிடர்கரியதாக விளங்குகிறது.

மகாகவி பாரதியார் குயில் பாட்டில் கூறுவது போல், காட்டிலுள்ள விலங்குகளும், பாம்புகளும்கூட இசையை ரசிக்குமாம். அப்படியிருக்கும் போது ஆறறிவு படைத்த மனிதர்கள் இசையை ரசிப்பதில் வியப்பு என்ன இருக்கிறது. உலகத்தில் சங்கீதத்தை ரசிக்காத மனமும் உண்டா என்ன? ஆனால் அவர்களின் ரசிப்புத் தன்மை நாம் கொடுக்கும் இசைக்கேற்ப அமைகிறது. நல்ல பண்பட்ட மனங்களை உருவாக்க வேண்டுமானால் நல்ல பக்தி ரஸம் ததும்பும் சாஸ்திரியமான இசையை அவர்களுக்கு இளமையிலேயே புகட்ட வேண்டும். மனங்களைப் பக்குவப் படுத்தும் பண்பு அந்த இசைக்கு உண்டு.

ஸ்ரீ தியாகராஜரைப் போலவே பக்தி எனும் உணர்வைப் பிழிந்தெடுத்து சங்கீத ஞானத்தால் பல கீர்த்தனங்களைப் பாடியவர்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தியாகராஜருக்கு முன்பும், பின்பும் இருந்திருக்கிறார்கள். ஆனால் உலகம் முழுவதும் இசைக்கு மூலமாக, குருநாதராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பவர் ஸ்ரீ தியாகராஜர் மட்டுமே. இவர் கிருஹஸ்தராக இருந்தவர்தான். திருமணமாகி குழந்தை பெற்று வளர்த்துத் திருமணம் செய்து கொடுத்தவர்தான். ஆயினும் அவருடைய வாழ்க்கை முழுவதும் 'விட்டு விடுதலையாகி நின்று' இவ்வுலகின் பந்த பாசங்கள், ஆசைகள் இவற்றை அகற்றி ஒரு சந்நியாசியாகவே வாழ்ந்து இறுதியில் ஆபத் சந்நியாசம் வாங்கிக் கொண்டவர். சாதாரண மனிதர்களைப் போல தேவைகளை உண்டாக்கிக் கொண்டு, அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகத் தன்னிடம் நிரம்பி வழியும் இந்த சங்கீத ஞானத்தை விலை பேசாதவர். வலிய வந்த செல்வத்தையும், இவைகளெல்லாம் சால சுகமா, இராமா நின் சந்நிதி சேவை சுகமா என்று கேட்டு செல்வங்களை நிராகரித்தவர். இவரும் மற்றவர்களைப் போல நிதியே சாலச் சிறந்தது என்று இருந்திருந்தால், இன்றைய பெருமைகள் அவருக்கு வந்து சேர்ந்திருக்குமா?

இவருடைய கீர்த்தனைகள் அவ்வப்போது அவர் இருந்த மனநிலைமையை யொட்டி, அந்தந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய ராகத்தில் அமைந்திருக்கின்றன. அவருடைய பாடலின் சொற்கள் அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் பொங்கியெழுந்த உணர்ச்சிப் பிரவாகத்தின் வெளிப்பாடாகவே இருந்திருக்கிறது. இதில் பண்டிதர்கள் இலக்கணைத்தையோ, மொழியின் தனித் தன்மைகளையோ எதிர்பார்க்கத் தேவையில்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு நடந்த சில நிகழ்வுகள் அவரை மிகவும் பாதித்திருக்கின்றன என்பது அவருடைய சில பாடல்களிலிருந்து தெரிய வருகிறது. அதே நேரத்தில் அவர் உருவகமாகச் சொல்லிப் பாடிய சில கருத்துக்களை அவரது வாழ்க்கையின் பாதிப்பு என்று எண்ணி அவரது சரித்திரத்தில் அவற்றைப் புகுத்தத் தொடங்கிவிட்டார்கள். எது எப்படியாயினும் அவரது பாடல்களின் மூலம் வெளிப்படுவது துன்பமோ, துயரமோ, ஏமாற்றமோ இல்லை. அங்கு வியாபித்திருப்பது பக்தி ரஸம் மட்டுமே.

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!" என்று வாழ்க்கையில் சந்தித்த அனேக துன்பங்களுக்கிடையில் பாரதி இன்பங்களை மட்டுமே பார்த்து வியந்து பாடினான். ஸ்ரீ தியாகராஜரும் தனது சொந்த வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், பாதிப்புகள் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு தன்னுடைய ராமன் மட்டுமே தனக்கு எல்லாம் என்று ராமபக்தி சாம்ராஜ்யத்துள் மூழ்கிக் கிடந்தார். எல்லோரும் வாழும் இந்த புவி வாழ்வின் தளத்துக்கு மேலே ஏதோவொரு கற்பனை ராஜ்யத்தை உருவாக்கி அதில் ராம லக்ஷமண சிதா, அனுமன் இவர்களைப் பிரதிஷ்டை செய்து அவர்களை நோக்கிப் பாடிக் கொண்டிருந்திருக்கிறார். எத்தனை வேண்டுகோள். எத்தனை கழிவிரக்கம். அத்தனையையும் ராமன் கவனிக்காமலா இருந்திருக்க முடியும். ஆனால் இவர் மீண்டும் மீண்டும் அவனிடம் வைக்கும் வேண்டுகோளை நிறுத்தவேயில்லை.

ஐயாற்று ஆராதனைக்கு வரும் பக்தர்கள், இசைக் கலைஞர்கள் ஒரு புனிதமான ஆலயத்திற்குள் பக்தன் வருவதுபோல, தான் தனது என்கிற சொந்த பந்த நினைவுகளை பலிபீடத்தில் இட்டுவிட்டு, பக்திப் பரவசத்தோடு, இங்கு என் நாதனின் கொடிபறக்கும் பிரதேசம் என்ற உணர்வுடன் ஸ்ரீ தியாகராஜரின் இசைக்கடலில் சங்கமிக்க வேண்டும். அதுதான் சரியான உணர்வாக இருக்கும். இங்கு, தான் என்கிற உணர்வுக்கோ, தனது வித்வத்தின் மீதுள்ள பெருமைக்கோ இடமில்லை. அவை அத்தனையும் அந்த குருநாதரின் தாமரைப் பாதங்களுக்கு என்று அர்ப்பணித்திடல் வேண்டும்.

அவர் சந்நிதியில் அவருடைய கீர்த்தனைகளை, பஞ்சரத்னக் கீர்த்தனைகள் உட்பட அனைத்தையும் பாடும்போது இறைவனுக்கு அளித்திடும் நிவேதனமாக எண்ணிடல் வேண்டும். அந்த மகானுபாவருடைய சந்நிதியில் பெரியவர் சிறியவர் பேதங்கள் கிடையாது. இசையின் புனிதமும், இனிமையுமே அந்த குருநாதருக்கு நாம் தரும் புனித நெய்வேத்தியம். இதில் பிசிறுதட்டுதல் கூடாது.

அவருடைய சாஹித்தியங்களைப் பாடும்போது மொழிச் சிதைவு கூடாது. பாடும் ராகத்தின் பாவம் என்ன என்பதை உணர்ந்து அதற்கேற்ற மன நிலையோடு பாடுதல் அவசியம். பாரதி சங்கீத விஷயம் எனும் கட்டுரையில் கூறுவது போல 'ராஜபாட்டை இருக்கும்போது என்னை ஏன் சந்திலும் பொந்திலும் வரச்செய்கிறாய்?' எனப் பொருள் படும் பாட்டை (சக்கனி ராஜ மார்க்கமு) அந்த ராகத்திலேயே அதன் ரஸம் வெளிப்பட வேண்டுமென்று எழுதியிருப்பதைப் போல, அத்தனை ராகங்களிலும் அதனதன் ரஸம் வெளிப்படப் பாடவேண்டும்.

இது ஒரு புனித யாத்திரை ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை யாத்திரையைப் போல இசைக் கலைஞர்களுக்கும், இசை விரும்பிகளுக்கும், இது ஒரு புனித யாத்திரை. இந்த யாத்திரை அந்த மஹானின் பெருமைக்கு ஏற்ப சிறப்பாக விளங்கிட வேண்டும்.

இவருடைய பாடல்கள் பெரும்பாலும் ஸ்ரீ ராமபிரான் மீது இருந்தாலும் அவ்வப்போது பிற மூர்த்தங்களையும் பாடியிருக்கிறார். அவர் வாழ்ந்த திருவையாறு ஈசராம் பஞ்சநதீஸ்வரர் எனப்படும் ப்ரணதார்த்திஹரன் மீதும், அங்கு கோயில் கொண்டருளும் தர்மஸம்வர்த்தினி அம்மை மீதும் சில கிருதிகளைப் பாடி வைத்திருக்கிறார். ஸ்வாமி ப்ரணதார்த்திஹரன் மீது நான்கு பாடல்கள், அம்மை மீது எட்டு பாடல்கள் என்று இவருடைய திருவையாற்று கீர்த்தனங்கள் புகழ் பெற்றவை. தர்மஸம்வர்த்தினி என்றும் அறம்வளர்த்த நாயகி என்றும் வணங்கப்படும் திருவையாற்று அம்பிகை மீதான இவருடைய பாடல்களில் "அம்மையை தரிசிக்கும் காட்சி தேவர்களுக்கும் கிடைக்கக்கூடியதா?" என்கிறார் இவர்.

இவர் தந்தையின் நண்பரான உபநிஷத் பிரம்மம் எனும் பெரியோரின் அழைப்பை ஏற்று காஞ்சிபுரம் செல்கிறார். அங்கு கோயில் கொண்டருளும் வரதராஜப் பெருமாளையும், காமாக்ஷி அம்மனையும் தரிசித்து அங்கும் மூன்று கீர்த்தனைகளை இயற்றியருளியிருக்கிறார்.

ஸ்ரீ தியாகராஜருடைய சீடர்களில் ஒருவரான வீணை குப்பையர் என்பவர் அழைப்பின் பேரில் ஆதிபுரம் என வழங்கப்பெறும் திருவொற்றியூருக்குச் செல்கிறார். அங்கு அருள்பாலிக்கும் திரிபுரசுந்தரி அம்பாளைத் துதித்து ஐந்து கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார். அவை ஒரு பஞ்சரத்தினமாக ஸாவேரி, ஆரபி, பேகட, கல்யாணி, சுத்தசாவேரி ஆகிய ராகங்களில் அமைந்திருக்கின்றன.

கோவூர் எனும் ஊரில் வாழ்ந்த பெருநிலக்கிழாரான கோவூர் சுந்தர முதலியார் அழைப்பின் பேரில் இவர் அங்கு செல்கிறார். அங்கு கோயில்கொண்டருளும் சுந்தரேஸ்வரரை இவர் ஐந்து கிருதிகளால் போற்றிப் பாடுகிறார். அவைகளும் கோவூர் பஞ்சரத்தினம் என வழங்கப்படுகின்றன. இவை சஹானா, கரஹரப்பிரியா, பந்துவராளி, கல்யாணி, சங்கராபரணம் ஆகிய இராகங்களில் அமைந்தவை.

இவருடைய திருமலை திருப்பதி விஜயம் புகழ்பெற்றது. அங்குதான் பெருமாளுக்கு முன்பிருந்த திரை விலகுமாறு பாடியதாகக் கூறப்படுகிறது. "தெரதீயகராதா" எனும் கெளளிபந்து ராகக் கீர்த்தனை மனிதனின் மனதில் விரிந்திருக்கும் அஞ்ஞானமெனும் திரை விலகி இறையருள் தரிசனம் கிடைக்காதா எனும் உணர்வில் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சந்நிதியிலிருந்த திரை அறுந்து விழப் பாடியதாகச் சிலர் தவறாகப் பொருள் கொண்டு சொல்லி வருகின்றனர்.

திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி, திரைக்கையால் அடிவருட பள்ளி கொண்ட அரங்கத்துப் பெருமானையும் இவர் சென்று தரிசித்து வந்திருக்கிறார். அந்தத் தலம் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுகிறது. காரணம் வைணவ திவ்ய தேசங்களில் 106 மட்டுமே இந்த பூமியில் உள்ளது. வைகுண்டம் எனும் 108ஆம் திவ்ய தேசம் அமைந்திருப்பது பெருமாளின் வைகுண்டத்தில். திருப்பாவை பாடிய ஆண்டாள் நாச்சியாரை அந்த 108ஆவது திவ்ய தேசத்துக்கு ஸ்ரீ அரங்கப்பெருமான் ஆட்கொண்டு அழைத்துச் சென்றவிடம் அது என்பதால் இவ்வூர் அந்தப் பெயரைப் பெற்றது. இவ்வூரிலும் ஸ்ரீ தியாகராஜர் ஐந்து அற்புதமான கீர்த்தனைகளால் பெருமானை வணங்கியிருக்கிறார். அவை ஆரபி, காம்போஜி, ஸாரங்கா, தோடி, தேவகாந்தாரி ஆகிய இராகங்களில் அமைந்தவை.

திருத்தவத்துறை எனும் க்ஷேத்திரம். அதற்கு இப்போது லால்குடி என்று பெயர். தியாகராஜருடைய சீடர்களின் அழைப்பை ஏற்று அவர் இந்த ஊருக்கு விஜயம் செய்து அங்கு எழுந்தருளியுள்ள ஸப்தரிஷீஸ்வர ஸ்வாமியைக் குறித்தும் பிரவிருத்தஸ்ரீமதி அம்மனைக் குறித்தும் பாடியிருக்கிறார். அந்த ஐந்து கீர்த்தனங்களும் தோடி, பைரவி, மத்யமாவதி, காம்போஜி, கல்யாணி ஆகிய ராகங்களில் அமைந்தவை.

இவர் நாகப்பட்டணம் சென்று அங்கு தோடி, ஸாவேரி ராகங்களில் இரு கிருதிகளைச் செய்திருக்கிறார். இவை தவிர இவர் வேறு சில ஊர்களுக்கும் சென்று ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் சுவாமி பெயரால் பாடல்களைப் பாடியிருக்கிறார். 

இராம பக்தியில் திளைத்த பக்த ராமதாஸ், துளசிதாசர் ஆகிய பெரியோர்களின் வழியில் வந்த மற்றொரு ராக பக்தர்தான் ஸ்ரீ தியாகராஜர். நமது பாரம்பரிய பக்தி வழிபாட்டில் ஒன்பது முறைகளைப் பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அவை ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம் என்பவை. அவரவர்க்குரிய இஷ்ட தேவதைகளை மேற்கண்ட வழிமுறைகளில் வழிபடுவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இதில் நமது தியாகராஜ ஸ்வாமிகள் வழிபடும் தெய்வமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை பல நிலைகளில் வைத்துப் பாடி புகழ்ச்சி செய்திருக்கிறார். 

அத்தகைய பெரும்புகழ் வாய்ந்த ஒரு மஹானின் ஸ்ரத்தைக்குரிய இந்த இசைவிழா இனிது நடைபெற ஸ்ரீ தியாகராஜரின் கருணையும், அவர் வழிபட்ட ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும் அருள்பாலிக்க வேண்டுமாய் பணிந்து வேண்டுகிறோம்.




திருவையாறு தியாகபிரம்ம ஆராதனை விழா
கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்ச்சித் துளிகள்

1. தியாகபிரம்ம ஆராதனைக் கமிட்டிக்குப் பெரும்பாலும் கபிஸ்தலம் மூப்பனார் குடும்பத்தினர்தான் தலைமையேற்று நடத்தி வந்திருக்கிறார்கள். காலம் சென்ற ஜி.கே.மூப்பனார் 36 ஆண்டுகள் தலைவராக இருந்திருக்கிறார். விழாக் காலங்களில் அவர் இங்கே வந்து எல்லா நாட்களிலும் முன்னால் இருந்து கவனித்துக் கொள்வது அவர் காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது. அவருடைய முன்னோர்களும் பல இசைக் கலைஞர்களுக்கும், வடநாட்டிலிருந்து ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்திருப்பது தமிழ்த்தாத்தா தனது சுயசரிதையில் சொல்லும் விவரங்களிலிருந்து தெரிய வருகிறது.

2. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரொருவர் காசிக்குத் தன் பரிவாரங்களுடன் சென்றிருந்தாராம். இவர்களுடைய பரிவாரங்களைப் பார்த்த காசிவாசிகள் அந்த மன்னரிடம் தாங்கள் எந்த ராஜ்யத்தின் ராஜா என்று கேட்டார். அதற்கு அவர்கள் தஞ்சாவூர் ராஜ்யம் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். அது எங்கே இருக்கிறது என்ற அவர்கள் கேள்விக்கு தஞ்சாவூர் ராஜ்யம் தெற்கே காவிரிக் கரையில் அமைந்திருக்கிறது, வட இந்திய மக்கள் ராமேஸ்வரம் செல்வதற்கு அந்த ராஜ்யத்தின் வழியாகத்தான் போகவேண்டும் என்று பதில் சொன்னார்கள். அப்போது அந்த காசிவாசிகள் சொன்ன பதில், "ஒகோ! நீங்கள் மூப்பனார் தேசத்து ராஜாவா?" என்றார்களாம். தஞ்சை மன்னருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அது என்ன மூப்பனார் தேசத்து ராஜா என்றார். நாங்கள் காசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் யாத்ரீகர்களுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்து உபசரிப்பது கபிஸ்தலம் மூப்பனார் குடும்பத்தினரின் வழக்கம். ஆகையால் நாங்கள் அவர் பிரதேசத்தை மூப்பனார் தேசம் என்றால்தான் அறிவோம் என்றார்களாம். அந்த அளவுக்குப் பிரபலமாக விளங்கியவர்கள் அவர்கள்.

3. எப்போதுமே தியாகராஜர் ஆராதனை இசை விழா நடக்கும் காலத்தில் பனிதான் பொழிந்து கொண்டிருகும். வெளியூர்களிலிருந்து குறிப்பாக ஆந்திர தேசத்திலிருந்து மிக அதிக அளவில் மக்கள் வந்து கலந்து கொள்வார்கள். அதிலும் பாலமுரளிகிருஷ்ணா செயலாளராக இருந்த காலத்தில் ஆந்திர இசை ரசிகர்களும், தியாகராஜர் பக்தர்களும் பெருமளவில் வந்து சேருவார்கள். அத்தனை பேரும் வசதியாகத் தங்குவதற்கு இந்த சிறு ஊரில் இடமில்லாமையால், அவர்கள் அத்தனை பேரும் விழா பந்தலிலேயே மூட்டை முடிச்சுக்களை வைத்துக் கொண்டு காவிரியில் நீராடி, துணிகளை உணர்த்தி, விழா தொடங்கியதும் அங்கேயே உட்கார்ந்து கச்சேரிகளை ரசிப்பார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் விழா கூடத்தில் உணவும் அளிக்கப்பட்டு விடும். ஆகையால் ரசிகப் பெருமக்களுக்கு எந்த தொல்லையும் இருக்காது.

ஒரு முறை விழா நேரத்தில் மிகக் கடுமையாக மழை பொழியத் தொடங்கிவிட்டது. புஷ்ய பகுள பஞ்சமியன்று ஆராதனையும், பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் பாடி வழிபட வேண்டும். காலையில் தொடங்கிய மழை விடாமல் பெய்தது. அப்போது விழா நடக்கும் இடம் தென்னங் கீற்று மட்டையால் வேயப்பட்டிருக்கும். மழை நீர் கொட்டகையில் எங்கும் கொட்டிக் கொண்டிருக்க தரையெல்லாம் மழை நீர். வந்திருந்த அனைவரும் மழையில் நனைந்து குளிரில் நடுங்கினர். அந்த கொட்டும் மழையிலும் உஞ்சிவிருத்தி நடந்து, பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகளை கொட்டும் மழையில் பாடி ஆராதனையை முடித்தனர். வந்திருந்த ஆந்திர தேசத்து இசை ரசிகர்கள் பாவம், உடனடியாக ஊர் திரும்ப நேர்ந்து விட்டது.

4. திருவையாற்று ஆராதனை விழா சற்குரு ஸ்ரீ தியாகராஜருக்கு அஞ்சலி செய்யும் முகத்தான் நடத்தப் படுகிறது. ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் பிறந்து திருவையாற்றில் வசித்து வந்தவர். தன்னுடைய ஆயிரக்கணக்கான பாடல்களால் ஸ்ரீ ராமபிரானை வணங்கி வந்தவர். அவருடைய தாய் மொழி தெலுங்கு. அவருடைய முன்னோர்கள் ஆந்திர தேசத்திலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள். ஆகையால் அவருக்குத் தெலுங்கும், வடமொழியும் நன்கு தெரியும். அவர் பாடல்கள் அனைத்துமே அவர் தாய் மொழியான தெலுங்கில் அமைந்தவை. அவருக்கு அஞ்சலி செய்யும் விழாவில் அவருடைய அந்த தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடித்தான் அஞ்சலி செலுத்த முடியும். ஆனால் விவரம் புரியாமல் சில தனித் தமிழ் இயக்கத்தார் ஒரு வருடம் விழா நடக்குமிடத்துக்கு வந்து இங்கு பாடுபவர்களைப் பார்த்து தமிழில் பாடு என்று கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தியாகராஜர் பாடிய தெலுங்கில் பாடாமல் அவர் பாடல்களை எப்படித் தமிழில் பாட முடியும் என்று நிர்வாகிகள் சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை. ஆர்ப்பாட்டம் அமைதியான அந்த சூழலைன் புனிதத் தன்மைக்கு இடையூறாக மாறிக் கொண்டிருந்த நிலையில் அப்போது தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டக் காரர்களிடம் சென்றார். இப்போது நீங்களாகக் கலைந்து செல்லவில்லையானால், நானும் களத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்றார். அவர் அப்படிக் கோபப்பட்டு எவருமே பார்த்ததில்லையாதலால் அவருடைய உரத்த குரலைக் கேட்டதும் கூட்டம் அடங்கியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். விழாவும் தொடர்ந்து அமைதியாக நடைபெற்றது. அமைதியின் உருவமான மூப்பனாரா இப்படி? என்று அனைவரையும் வியப்படைய வைத்த நிகழ்ச்சி இது.

5. பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடி ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு ஆராதனை செய்ய வித்வான்கள் இரு வரிசையில் சந்நிதிக்கு எதிரில் அமர்ந்து பாடுவார்கள். அவர்களைச் சுற்றிலும் பல ஊர்களிலுமிருந்து வந்த வித்வான்கள் அமர்ந்து பாடுவார்கள். பல வாத்தியக்காரர்களும் சேர்ந்து கோரசாக வாசிப்பார்கள். மிருதங்கம், வயலின், புல்லாங்குழைல் ஆகிய வாத்தியங்கள் வாசிக்கப்படும். ஒரு முறை பித்துக்குளி முருகதாஸ் வந்திருந்தார். அவருடன் பிறந்தது போலவே அவர் கையில் ஒரு ஆர்மோனிய வாத்தியம் வைத்திருந்தார். அப்போது பாலமுரளிகிருஷ்ணா செயலாளர். பித்துக்குளி முருகதாசிடம் ஆராதனையில் ஆர்மோனியம் வாசிக்கக்கூடாது என்று சொல்லப்பட்டது. அவரும் சரியென்று அந்த வாத்தியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இந்த வாத்தியத்துக்கு கமகங்கள் வாசிக்க இயலாது என்பதால் டாக்டர் கே.எம்.முன்ஷி நேரு அமைச்சரவையில் செய்தி ஒலிபரப்பு அமைச்சராக இருந்த காலத்தில் ஆர்மோனியம் வானொலியில் பயன்படுத்தக்கூடாது என்று தடைவிதித்திருந்தார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய செய்தியாகும்.

6. முன்பெல்லாம் பழம்பெரும் வித்வான்களான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஆலத்தூர் சீனிவாசய்யர், ஜி.என்.பாலசுப்பிரமனியம் போன்ற பிரபல வித்வான்கள் எல்லாம் ஆராதனையன்று காலையில் ஸ்ரீ தியாகராஜர் வசித்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி எடுத்துக்கொண்டு தெருவில் பாடிக்கொண்டு விழா பந்தலுக்கு வருவார்கள். இப்போதெல்லாம் உள்ளூர் பாகவதர்களிடம் இந்தப் பணியைக் கொடுத்து விடுகிறார்கள். பெரிய அளவில் வித்வான்கள் இதில் கலந்து கொள்வதில்லை என்பது மக்கள் மத்தில் நிலவுகின்ற அதிருப்தியாக இருக்கிறது. எத்தனை பெரிய வித்வானாக இருந்தாலும் உஞ்சவிருத்தியில் கல்ந்து கொள்வதுதான் ஸ்ரீ தியாகராஜருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

7. ஆராதனை நாட்களில் ஊரின் சில இடங்களில் வெளியூர் இசை ரசிகர்களுக்கென்று சில கல்யாண மண்டபங்களிலும், ஸ்ரீ தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலும் உணவளிப்பது என்பது நடைபெற்று வருகிறது. இதற்காக சில டிரஸ்ட்டுகள் இருக்கின்றன. அதில் முக்கியமானது செல்லம் ஐயர் எனும் ஸ்ரீநிவாசராவ் பள்ளியில் ஆசிரியராக இருந்த செல்லம் ஐயர் என்பவரின் பணி மகத்தானது. மிகவும் வயது முதிர்ந்த செல்லம் ஐயர் இப்போதும் சென்னையிலிருந்து திருவையாற்றில் வந்து தங்கிக் கொண்டு இந்த உணவளிக்கும் தர்ம காரியத்தை நடத்திக் கொண்டு வருகிறார். 


தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர் பாரதி இலக்கியப் பயிலகம்,
தஞ்சாவூர் 



நன்றி: "தினமணி" ஸ்ரீ தியாகராஜ ஆராதனை சிறப்பிதழ் 13-1-2012







Friday, January 13, 2012

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

Indian River Marina


பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கி வரட்டும்!
நல்லதொரு எதிர்காலம் அமையட்டும்!
வாழ்த்துக்கள்!   ==  தஞ்சை வெ.கோபாலன்





பொங்கலைக் கொண்டாடு !
 
போகிப் பொங்கலில் 
 நீ பழையதை  
எரிப்பதற்கு முன்-உனது 
பிழைகளையும் குறைகளையும் எரித்துவிடு.

பெரும் பொங்கலில்
 நீ  பச்சரிசியைப் புதுப் பானையில்
பொங்க  வைக்கு முன் 
உன்  ஈகையால் 
 மகிழ்ச்சி பொங்கும்
 முகத்தையும் மனங்களையும் பார்த்துவிடு.

சர்க்கரைப் பொங்கலை 
நீ சாப்பிடு முன் 
சக மனங்களில் இருக்கும் 
கசப்பை நீக்கிவிடு.

காணும் பொங்கலை 
நீ கொண்டாடு முன் 
உன்னைக் காண்போர் 
உன்னைக் கொண்டாட வைத்துவிடு.

-தனுசு

Sunday, January 8, 2012

  எங்கே போகும் இந்த பயணம்.  
   
எங்கே போகும் இந்த பயணம்.
எங்கே போகும்  இந்த பாதை. 
யாதும் ஊரோ? அந்தம் காடோ?   
படைப்பின் பொருளென்ன?
படைத்தவன்  பொறுப்பென்ன ?

தாயென்றும்  தந்தையென்றும்              
ஒன்றை ஒன்று நம்பி 
போகும் இந்த  ஊர்கோலம் -இது  
இந்த ஊர்க் கோலமோ?.

ஊரின்றி உறவின்றி வீடின்றி வழியின்றி
வீதிவழி போகும் விதியோ? 
சேய்யீன்ற தாயொன்று -காக்கும் அதன் நலம்  போன்று 
துணைதன்னை காக்கும் 
உத்தமி செல்லும் சபையோ? 

யார் கேட்டு பிறந்தார்கள்? -இவர்கள் 
யார் கெட்டு  பிறந்தார்கள்?
பிள்ளைகள் கை விட்டார்களா? இவர்களை 
பிள்ளையில் கை விட்டார்களா? 

எட்டடுக்கு  மாளிகைக்கும் 
கோலோச்சும்  மன்னனுக்கும் 
கிட்டாதபாசம்  எட்டாதநேசம் -இங்கு 
ஒட்டிக்கொண்டு  இருப்பது நிஜமே! 
.
 விலைமகளின்  வீட்டுக்கு -கணவனை 
கூடையில் கொண்டுசென்ற 
திருமகளின் கதையை கேட்டு
பத்தினி  பாசம்  அறிந்தோம் கதையினிலே.

கண்ணில்லா  கணவனை 
கண்ணில்  வைத்து  காக்கும்  -இந்த 
பெண்ணின முதல்வின் பதிபக்தியை!
 இம்மண்ணின்  பெரும்சக்தியை! 
 பார்க்கிறோம்  நேரினிலே.  

-தனுசு-  
Courtesy: Classroom 2007 & Dinamalar (pic)