பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, April 20, 2015

16. ''சந்திரிகையின் கதை'' - முதல் அத்தியாயம் - பூகம்பம்

                        மகாகவி பாரதியார் எழுதியுள்ள நெடுங்கதைகளில் "சந்திரிகையின் கதை"யும் ஒன்று. அவர் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் சிலரை இக்கதையில் கதாபாத்திரங்களாகவும் படைத்திருக்கிறார். சமூக மாற்றத்தில் மகாகவிக்கு இருந்த ஆர்வம் இந்தக் கதையை எழுதத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால் இதில் ஒரு வருத்தம், இந்த நெடுங்கதை முடிவதற்குள் அவர் காலமாகிவிட்டதால், கதை அந்தரத்தில் தொங்குகிறது. இருந்தாலும் படியுங்கள்.
      
                                             முதல் அத்தியாயம் - பூகம்பம்

பொதியை மலைச்சாரலில் வேளாண்குடி என்றொரு அழகான கிராமம் இருக்கிறது. அதற்கருகே, ஒரு சிறிய நதி ஓடுகிறது. நான்கு திசைகளையும் நோக்கினால், நீல மலைச் சிகரங்களும் குன்றுகளும் தோன்றும். ஊரெங்கும் தோப்புக்கள். எனவே, காலையில் எழுந்தால் மாலைவரை எப்போதும் ரமணீயமான பட்சிகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டிருக்கும்.

இந்த ஊரில் மற்ற வீதிகளின்றும் ஒதுக்கமாக, மேற்றிசையில், நதிக்கருகே ஓர் அக்ரஹாரம் அதாவது பிராமணர் வீதி, இருந்தது. அந்த அக்ரஹாரத்தில் குழந்தைகளெல்லாம் எப்போதும் பட்சிகளின் நாதங்களுக்கிடையே வளர்ந்தது பற்றியோ, வேறு எந்தக் காரணத்தாலோ, மிகவும் இனிய குரலுடையனவாயிருந்தன. அக்குழந்தைகள்-விசேஷமாகப் பெண் குழந்தைகள்- பேசும்போது சாதாரணமாக நம்மைப் போலவே, மனுஷத் தமிழ் பாஷையே பேசுமெனினும், அந்த பாஷையைக் குயில்கள் போலவும் கிளிகள் போலவும் நாகணவாய்ப் புட்கள் போலவும் அற்புதமான குரலில் பேசின.

அந்த அக்ரஹாரத்தின் மேலோரத்திலே கிழக்கைப் பார்த்த ஒரு கிருஷ்ணன் கோயில் இருந்தது. கோயிலுக்கெதிரே புல் ஏராளமாக வளர்ந்து கிடக்கும். அங்கு பசுக்களும் ஒரு சில கழுதைகளும் மேய்ந்து கொண்டிருக்கும். அல்லது, சில பசுக்கள் கிருஷ்ணன் சந்நிதிக்கெதிரே படுத்துக்கொண்டு சுவாமியை நோக்கி ஜபம் பண்ணிக் கொண்டிருப்பது போல் அசைபோட்டுக் கொண்டிருக்கும். அவற்றின்மீது காக்கைகள் வந்து உண்ணிகளைக் கொத்தி இன்புறுத்தும். சில சமயங்களில் கண்ணோரத்தைக் கொத்துவது போல் விளையாடி மாட்டுக்குப் பொழுது போகச் செய்துகொண்டிருக்கும். இதையெல்லாம் மரக் கிளைகளின் மீதுள்ள பட்சிகள் பார்த்து வியப்புரை கூறிக்கொண்டிருக்கும்.

அன்புக்கும் அமைதிக்கும் சாந்திக்கும் அழகுக்கும் இலக்கியமாகத் திகழ்ந்தது அவ்வேளாண்குடியூர் அக்ரஹாரம். அங்கு, பெண்மக்கள் எல்லாரும் மகாசுந்தரிகள். ஆண்மக்கள் மிகவும் நல்ல குணமுடையோர், ஆனால் பெரும்பாலும் பரம ஏழைகள். பூர்வீக சொத்து, நிலம், தோட்டம் முதலியன-எல்லோருக்கும் சிறிது சிறிதுண்டு. ஆனால், அதிலிருந்து வரும் வரும்படி வெறுமே போஜனத்துக்குக் கூடக் காணாது. இதில் வேஷ்டிகள், புடவைகள், ரவிக்கைகள், பாவாடைகள், குடுமிக் கலியாணம், பூணூல் கலியாணம், விவாகங்கள், ருது ஸ்நானங்கள், ருதுசாந்திகள், சீமந்தங்கள், பல பல பண்டிகைகள், உற்சவங்கள், விழாக்கள் என்பன ஓயாமல் நிகழுமாதலால், அவ்வூர் கிருஹஸ்தர்கள், மேன்மேலும் தம் நில முதலியன சுருங்கவும் வறுமை மேன்மேலும் வளரவும், ஏக்கம் பிடித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், வயது முதிர்ந்தோரிடையே இத்தனை ஏக்கமும் மனக்குறைவும் குடிகொண்டிருந்தன என்ற செய்தி அவ்வூர்க் குழந்தைகளுக்குத் தெரியாது; பட்சிகளுக்குந் தெரியாது, கோயிலெதிரே எப்போதும் செழுமையாக வளர்ந்த புற்றரைகளில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கும், கழுதைகளுக்கும் தெரியாது. இவை எப்போதும் மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், பாட்டிலும், ஆனந்தக் களியிலும் மூழ்கிக் கிடந்தன.

இந்த அக்ரஹாரத்தில் மற்றெல்லா பிராமணர்களைக் காட்டிலும் அதிக ஏழையான மகாலிங்கையர் என்பவர் ஒருவர் இருந்தார். அவருடைய குடும்பம் மிகப் பெரிது. வீடு மிகச் சிறிது. அவருடைய கிழத் தாய் தந்தையர் இருவர்; விதவையான தங்கை ஒருத்தி; சுமார் முப்பது வயதுள்ள மனைவி ஒருத்தி; அவளுக்கு ஐந்து பெண் குழந்தைகள். ஆறாவது பிரசவம் நெருங்கிய சமயம்.

இத்தனை பேருக்கும் ஆகாரம் வேண்டுமே? மகாலிங்கையருக்கு பூர்வ சொத்துக் கிடையாது. இளமையும், ஊக்கமும், எப்படியேனும் பணம் சம்பாதிக்கலாமென்ற நம்பிக்கையும் அவரை விட்டுப் பிரிந்து நெடுங்காலமாய் விட்டது. அவருக்கு சுமார் நாற்பது வயதுக்கு மேலாகவில்லை. அதற்குள்ளே குழந்தைகளின் தொகை வலியாலும், மனைவியின் வாய் வலியாலும், தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் மகாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலைமயிரெல்லாம் அன்னத் தூவிபோல் நரைத்துக் கூனிக்குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸமிகுதியால் மேகநோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப்படைகளுடையவராய் விளங்கினார்.

இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்திரவில், வானம் மைபோல் இருண்டிருந்தது. நட்சத்திரங்களெவையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கிராமத்தாரெல்லாரும் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெருமழையும் சூறைக் காற்றும் மிகவும் உக்ரமாக வீசத் தொடங்கின. இரண்டு கணத்துக்கு ஒரு முறை, உலகம் தகர்ந்து விடச் செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக் குன்றுகள் ஒன்றுக்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று.

அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்து போய்விட்டது என்று தம் மனதில் நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். குழந்தைகளெல்லாம் பயமிகுதியால் கோ கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண்மக்கள் விம்மினர். சூறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது.

இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ரஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறிப் போயின. அத்தனை ஜனங்களும் மடிந்து போயினர்.

மகாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு ரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மகாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள் - எல்லார்மீதும் வீடு விழுந்து, அவர்களத்தனை பேரும் பிணங்களாகக் கிடந்தனர். வாயிற் குச்சிலில் பிரசவ வேதனையிலிருந்த மகாலிங்கயைருடைய மனைவியும் அவளுக்குத் துணையாக அவருடைய விதவைத் தங்கையுமிருந்தனர்.

இரவு சுமார் ஏழு மணிக்குத் தொடங்கிய சூறைக்காற்றும், மழையும், காலை நான்கு மணி சுமாருக்கு, பூகம்பத்துடன் முடிவுபெற்றன. அரைமணி நேரத்துக்கெல்லாம் உலகம் அமைதி பெற்று விட்டது. மறுநாள் பொழுது விடிந்தது. விதவைத் தங்கை-அவள் பெயர் விசாலாட்சி-வெளியே வந்து பார்த்தாள்.

எல்லா வீடுகளும் விழுந்திருந்தன. எங்கும் மனிதருடல்களும், மிருக பட்சிகளின் உடம்புகளும் பிரேதங்களாக விழுந்து கிடந்தன. முழுக்காட்சியும் அவள் பார்க்க நேரமில்லை. காற்றினாலும் மழையினாலும் மோதுண்டு வீதியில் வந்து கிடந்த பிரேதங்களை மாத்திரமே அவள் கண்டாள். இடிந்த வீடுகளுக்குள்ளே செத்துக் கிடக்கும் ஜனங்களை அவள் காணவில்லை. எனினும், தன் வீட்டில் எல்லாரும் செத்தது அவளுக்குத் தெரியுமாதலால், மற்ற வீடுகளிலும் அப்படியே நடந்திருக்க வேண்டுமென்றும் அதுகொண்டே தெருவில் ஆட்களைக் காணவில்லையென்றும் அவள் ஊகித்துக் கொண்டாள். அப்பொழுது மீண்டும் அவளுடைய மனதில், சென்ற பயங்கரமான இரவில் நிகழ்ந்த பயங்கரமான செய்திகள் நினைப்புறலாயின. பூகம்பம் தோன்றினவுடனே மகாலிங்கையருடைய தந்தையாகிய கிழவர், ''ஐயையோ, பூமி ஆடுகிறதே! நாமெல்லாரும் வாயிற்புறத்திலுள்ள குச்சிலுக்குப் போய் விடுவோம். அதுதான் இவ்வீட்டில் சற்றே உறுதியான இடம். என்னை அங்கே கொண்டு விடுங்கள்'' என்று அலறினார். அந்தச் சத்தம் மாத்திரம் விசாலாட்சியின் செவியிற்பட்டது. அப்புறம் நடந்த பேச்சொன்றும் அவள் செவியிற் படவில்லை. வாயிற் குச்சிலுக்குள் வெளித் திண்ணை வழியாகத்தான் புகலாம். வீட்டுக்குள்ளிருந்தபடியே அங்குவர வழியில்லை. எனிலும், ஒரு சாளரப் பொந்து வழியாக அந்தக் கிழவருடைய பேரோலம் மாத்திரம் புயற் காற்றொலியையும் மிஞ்சி அவளுடைய செவியிற்பட்டது.

ஆனால், 'அங்ஙனம் அவர்கள் குச்சிலுக்குள் வருவது மாத்திரம் சாத்தியமில்லை' யென்பதை அவள் உடனே ஊகித்துக் கொண்டாள். ஏனெனில், உள்ளேயிருந்தவர்கள் வீட்டு வாயிற்கதவைத் திறந்தன்றோ, திண்ணையிலேறி அதன் வழியாகக் குச்சிலுக்குள் வரவேண்டும்? வாயிற்கதவைத் திறந்த மாத்திரத்திலே சப்த மேகங்களும், ஊழிக்காற்றும் வீட்டுக்குள் புகுந்து விடுமன்றோ? ஆதலால், அவர்கள் வெளியேற வில்லையென்று நினைத்துக் கொண்டாள். ஓரிரண்டு கணங்களில் திடீரென்று உள் வீட¦ல்லாம் இடிந்து விழுந்த ஒலியும், அங்கிருந்தோர் எல்லாம் கூடியலறிய பேரொலியும், அவள் செவியிற்பட்டன. எல்லோரும் செத்தார்கள் என்று நிச்சயித்துக் கொண்டாள். தானிருந்த குச்சிலும் விழுமென்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள். அது விழவில்லை. அதற்குள்ளே பூகம்பம் நின்று போய்விட்டது. சிறிது நேரத்துக்கெல்லாம் புயற்காற்றும் மழையும் அடங்கிப் போயின.

இச்செய்திகளையெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டு விசாலாட்சி தன்னைச் சூழ இடிந்து கிடக்கும் வீடுகளையும் ஒடிந்து கிடக்கும் மரங்களையும் பார்த்து நிற்கையிலே, குச்சிலுக்குள்ளிருந்து ''குவா!குவா!'' என்ற சத்தம் வந்தது. உள்ளே போய்ப் பார்த்தாள். அண்ணன் மனைவியாகிய கோமதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து கிடந்தது. விசாலாட்சி அதற்கு வேண்டிய சிகிச்சைகளெல்லாம் செய்து கொண்டிருக்கையில், கோமதிக்கு மரணாவஸ்தை நேர்ந்துவிட்டது. அவள் சாகும்போது:-''விசாலாட்சி!விசாலாட்சி! நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகு முன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்து கொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாதத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக, நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை'' என்றாள்.

விசாலாட்சி 'சரி' என்றாள். கோமதியின் உயிர் பரலோகஞ் சென்று விட்டது. 

Sunday, April 19, 2015

15. காக்காய்ப் பார்லிமெண்ட்.


நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். "உம்முடைய பெயரென்ன?" என்று கேட்டேன். "நாராயண பரமஹம்சர்" என்று சொன்னார். "நீர் எங்கே வந்தீர்?" என்று கேட்டேன். "உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேப்ன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்" என்று சொன்னார். "சரி, கற்றுக் கொடும்" என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார்.

காக்காய் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

"கா" என்றால் 'சோறு வேண்டும்' என்றர்த்தம். "கக்கா" என்றால் 'என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே' என்றர்த்தம். "காக்கா" என்றால் 'எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே' என்றர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. "காஹகா" என்றால் 'சண்டை போடுவோம்' என்றர்த்தம். "ஹாகா" என்றால் 'உதைப்பேன்' என்றர்த்தம். இந்தப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுதும் காக்கை பாஷையிலே, க, ஹா, க்ஹ -- முதலிய ஏழெட்டுஅக்ஷரங்களைப் பல வேறு விதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுதும் மற்றவர்களுக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை. பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாராயண பரம ஹம்சருக்குத் தமிழ் தெரியாது. ஆகையால் அவர் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக் எழுதினதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய் விடும். ஒரு வார்த்தை கூட மற்றவர்களுக்குச் சொல்லக் கூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார், "போனால் போகட்டும், ஐயோ, பாவம்" என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன்.

இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீக்ஷை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. "நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?" என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வது தான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. "போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு. அந்த நாற்பதில் ஒரு கிழக்காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: "மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தைவிட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பதி இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி. மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்."

"இந்த 120 கக்ஷியார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல் 'இந்தியாவுக்குப் போவோம். அங்கேதான் சண்டையில்லாத இடம். இமயமலைப் பொந்தில் வசிப்போம்' என்று வந்ததாம். அது சும்மா பட்டணத்துக்கு வந்து அனிபெஸண்ட் அம்மாளுடைய தியஸாபிகல் சங்கத்துத் தோட்டத்தில் சில காலம் வசிக்க வந்தது. அந்தத் தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய்ச் சிலகாலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்த தோஷம் நீங்கி விடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலே கேள்விப்பட்டதாம்." 

"கேட்டீர்களா, காகங்களே, அந்த ருஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலே கூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள்."

"நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஒரு இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்!"

"ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழு பேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம். இப்போது என் குடும்பத்துக் காக்கைகளுக்கும் மற்ற காகங்களுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை. ஏழெட்டு நாளுக்கு முந்தி ஒரு வீட்டுக் கொல்லையிலே கிடந்தது; அது சோறில்லை; கறிய்டில்லை; எலும்பில்லை, ஒன்றுமில்லை; அசுத்த வஸ்து கிடந்தது. அதைத் தின்னப் போனேன். அங்கே ஒரு கிழவன் வந்து கல்லை எறிந்தான். என் மேலே இந்த வலச்சிறகிலே காயம். இது சரிப்படாது. இனிமேல் எனக்குப் பிரஜைகள் ஆறில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும்" என்று சொல்லிற்று.

இதைக் கேட்டவுடன் ஒரு கிழக் காகம் சொல்லுகிறது:

"மகாராஜா, தாங்கள் இதுவரை யில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை.. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டுச் சொல்லுகிறீர்கள். அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என் போன்ற மந்திரியாருக்கும் அவசரமுண்டென்பதைத் தாங்கள் மறந்து விட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திரிமார் செலவுக்குக் கொடுக்க வேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது" என்று சொல்லிற்று. 

அப்பொழுது ஒரு அண்டங்காக்கை எழுந்து, "கக்கஹா, கக்கஹா, நீங்கள் இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்கள்; உங்களை உதைப்பேன்" என்றது. வேறொரு காகம் எழுந்து சமாதானப்படுத்திற்று. இதற்குள் மற்றொரு காகம் என்னைச் சுட்டிக் காட்டி, "அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம்" என்றது.

உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து போய்விட்டன. (இது நிஜமாக நடந்த விஷயமில்லை; கற்பனைக் கதை) 

"



Monday, April 6, 2015

14. பிங்கள வருஷம்

சித்திரை மாதம் பிறந்தால் புது பஞ்சாங்கம் வாங்குகிறோம். சித்திரை முதல் நாள் ஆலயங்களிலும், மடங்களிலும் பஞ்சாங்க படனம் என்று வருஷ பஞ்சாங்க பலன் படிக்கச் சொல்லி கேட்கிறோம். சில பஞ்சாங்கங்களில் அந்தந்த வருஷ பலன்களை ஒரு வெண்பாவில் கொடுத்துவிடுவார்கள். எடுத்துக் காட்டாக இம்மாதம் பிறக்கப் போகும் புது வருஷம் மன்மத வருஷமல்லவா. அதற்கான வெண்பா இதோ:

"மன்மதத்தின் மாரியுண்டு, வாழுமுயிரெல்லாமே
நன்மை மிகும், பல் பொருளு நண்ணுமே - மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு, தென் திசையில் காற்று மிகும்
கானப் பொருள் குறையுங் காண்"

இப்படி ஆண்டு பலன்களைப் படித்துவிட்டு மறந்து விடுவோம். அந்த ஆண்டு முடிந்தபின் அந்த வெண்பா சொன்னது போல பலன்கள் இருந்தனவா, நடந்தனவா என்பதை எத்தனை பேர் பார்ப்பார்களோ தெரியவில்லை. இதை நையாண்டி செய்து இதோ ஒரு கதையை மகாகவி பாரதி எழுதியிருக்கிறார். அவருடைய புதிய ஆத்திசூடியில் அவர் சொன்னது "சோதிடந்தனை இகழ்". இவை இரண்டையும் பொறுத்திப் பார்த்துவிட்டு இந்த பிங்கள வருஷம் கதையைப் படியுங்கள்.


பிங்கள வருஷம்

வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தில், சித்தாந்த சாமி கோயில் என்றொரு கோயில் இருக்கிறது. அதற்கருகே ஒரு மடம். அந்த மடத்தில் பல வருஷங்களுக்கு முன்பு சித்தாந்தசாமி என்ற பரதேசி ஒருவர் இருந்தார். அவருடைய சமாதியிலே தான் அந்தக் கோயில் கட்டியிருக்கிறது. கோயில் மூலஸ்தானத்துக்கு எதிரேயுள்ள மண்டபத்தில், நாளது சித்திரை மாதம் பதினோராந்தேதி திங்கட்கிழமை காலை ஒன்பது மணி நேரத்துக்கு முன்னாகவே நானும் என்னுடன் நாராயணசாமி என்றொரு பிராமணப் பிள்ளையும் வந்து உட்கார்ந்தோம். பகல் முழுதும் ஊருக்கு வெளியே தனியிடத்தில் போயிருந்து உல்லாசமாகப் பொழுது கழிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வந்தோம். எப்போதும் வழக்கம் எப்படியென்றால், மடுவில் ஸ்நானம் செய்துவிட்டு மாந்தோப்புக்களில் பொழுது போக்குவோம். புயற்காற்றடித்த பிறகு மாந்தோப்புகளில் உட்கார நிழல் கிடையாது. ஆதலால் மேற்படி கோயில் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தோம். கோயிலைச் சூழ நான்கு புறத்திலும் கண்ணுக் கெட்டினவரை தென்னை மரங்கள் விழுந்து கிடந்தன. பல வளைந்து நின்றன. சில மரங்கள் தலைதூக்கி நேரே நின்றன. புயற்காற்று சென்ற வருஷம் கார்த்திகை மாதத்தில் அடித்தது. அந்தாறு மாதங்களாயும், இன்னும் ஒடிந்து கிடைக்கும் மரங்களை யெடுத்து யாதேனும் பயன்படுத்த வழி செய்யாமல் ஜனங்கள் அவற்றை அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டு என்னோடிருந்த நாராயணசாமி சொல்லுகிறான்.

"கேட்டீரா, காளிதாஸரே, இந்த ஹிந்து ஜனங்களைப் போல சோம்பேறிகள் மூன்று லோகத்திலுமில்லை. இந்த மரங்களை வெட்டி யெடுத்துக் கொண்டு போய் எப்படியேனும் உபயோகப்படுத்தக் கூடாதா? விழுந்தால் விழுந்தது; கிடந்தால் கிடந்தது; ஏனென்று கேட்பவர் இந்தியாவில் இல்லை. பாமர தேசமையா பாமர தேசம்!" என்றான். நான் அங்கே தனிமையையும் மவுனத்தையும் வேண்டி வந்தவன். ஆனபடியினால் அவனை நோக்கி, "நாராயணா! ஹிந்துக்கள் எப்படியேனும் போகட்டும். தனியிடம்; இங்கு மனுஷ்ய வாசனை கிடையாது; எவ்விதமான தொந்தரவும் இல்லை. மடத்துப் பரதேசிகள் கூடப் பிச்சைக்குக் கிளம்பி யிருக்கிறார்கள். பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்கள். சிவசிவா என்று படுத்துத் தூங்கு" என்றேன். அவனும் அப்படியே சரியென்று சொல்லி மேல் உத்திரீயத்தை விரித்துப் படுத்தான். உடனே தூங்கிப் போய்விட்டான்.

என் கையில் "குருபரம்பரா ப்ரபாவம்" என்ற வைஷ்ணவ நூலொன்று கொண்டு வந்திருந்தேன். சட்டைத் துணிகளையெல்லாம் கழற்றித் தலைக்குயரமாக வைத்துக் கொண்டு நானும் படுக்கை போட்டேன். அந்தப் புஸ்தகத்தில் "பிரவேசம்" என்ற முகவுரையில் பாதி வாசிக்கும்போதே எனக்கும் நல்ல தூக்கம் வந்தது. ஜில்ஜில்லென்று காற்று சுற்றிச் சுற்றி யடித்தது. கண் சொக்கிச் சொக்கித் தூங்கிற்று. விழித்து விழித்துத் தூங்கிப் பின்பு கடைசியாக எழுந்தபோது பகல் பதினோரு மணியாய் விட்டது. எழுந்தவுடனே கோயிற் கிணற்றில் ஜல மிறைத்து ஸ்நானம் பண்ணினோம். அந்தக் கிணற்று ஜலம் மிகவும் ருசியுள்ளது. நன்றாகத் தெளிந்தது. ஸ்நானத்தினுடைய இன்பம் வர்ணிக்க முடியாது. பிறகு வேதபுரத்திலிருந்து ஒருவன் ஆகாரம் கொண்டு வந்தான். சாப்பிட்டுத் தாம்பூலம் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது கோயிலுக்கெதிரேயுள்ள அல்லிக் குளத்தில் நாலைந்து பேர் வந்து குளித்துக் கொண்டிருந்தார்கள். "நேர்த்தியான கிணற்று ஜலமிருக்கும் போது, அதை இறைத்துக் குளிக்காமல், அழுக்குக் குளத்திலே குளிக்கிற மூடர்களைப் பார்த்தீரா?" என்று நாராயணசாமி முணுமுணுத்தான். அந்த நால்வருடைய பெயரெல்லாம் நான் விசாரிக்கவில்லை. அவர்கள் அப்போது பிங்கள வருஷத்துப் பலாபலன்களைப் பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய சம்பாஷணையை இங்கு எழுத வேண்டுமாதலால், அவர்களுக்கு நெட்டையன், கட்டையன், சொரியன், கரியன் என்ற கற்பனைப் பெயர்கள் கொடுக்கிறேன்.

சொரியன் சொல்லுகிறான், "புது வருஷத்துப் பஞ்சாங்கம் கேட்டீர்களா? இந்த வருஷ மெப்படி? ஜனங்களுக்கு நல்லதா, கெட்டதா?"

கரியன், "நள வருஷத்திலே நாய் படும் கஷ்டம்; பிங்கள வருஷத்தில் பின்னுங் கொஞ்சம் கஷ்டம். ஜனங்களுக்கு சுகமேது?"

கட்டையன், "நேற்று பூமியிலே ஒரு நக்ஷத்திரம் வந்து மோதி, பூமி தூள் தூளாகச் சிதறிப் போகுமென்று ஒரு மாச காலமாக எங்கே பார்த்தாலும் ஒரே பேச்சாய்க் கிடந்தது. ஒன்றும் நடக்கவில்லை. பொய் என்கிறேன்."

நெட்டையன், "அட போடா! தூள் தூளாகப் போகுமென்று நம்ம தமிழ் சோசியன் சொல்லவில்லை. சீமைப் புளுகு!"

கட்டையன், "தமிழ்ச் சோசியனுக்கு இப்படிப் பெரிய பொய் சொல்லத் தெரியாது. அவன் புளுகுகிற விதம் வேறே!"

நெட்டையன், "அட போடா! தமிழனிலே ஒருத்தன் இரண்டு பேர் நிஜம் சொல்லுகிற சோசியனும் உண்டு. ஆனால் நிஜம் பேசுகிற சோசியனுக்கு ஊரிலே அதிக மதிப்புக் கிடையாது."

கட்டையன், "சோசிய சாஸ்திரமே பொய்யென்கிறேன்."

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் நாராயணசாமி ஒரு புறம் கிளம்பி விட்டான். அவன் சொல்லுகிறான்:

"ஏன் காளிதாசரே, அமெரிக்காவில் பெரிய பெரிய ஸயன்ஸ்கார சாஸ்திரிகள் கண்டுபிடித்துச் சொன்னது கூடப் போய்யாகி விட்டதே! இது பெரிய ஆச்சர்யம்! பூமி தூளாகா விட்டாலும் ஒரு பூகம்பமாவது நடக்குமென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நேற்று ராத்திரி நம்ம தெருவில் அநேகர் தூங்கவே யில்லை. குழந்தை குட்டிகளை யெல்லாம் விழிக்க வைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஸயன்ஸ் பண்டிதர்கள் கூடச் சில சமயங்களில் பொய் சொல்லத்தான் செய்கிறார்கள்" என்றான்.

நான் குளத்தில் குளித்தவர்களுடைய சம்பாஷணையில் கவனம் செலுத்தினேன்.

நெட்டையன் சொல்லுகிறான், "வேதபுரத்திலே வெங்காயக் கடைக்குப் பக்கத்து வீட்டிலே பெரியண்ண வாத்தியார் இருக்கிறாரே, தெரியுமா? அவர் சோசியம் தப்பவே செய்யாது. அவர் எங்கள் தாத்தா செத்துப்போன நாள், மணி எல்லாம் துல்யமாகச் சொன்னார். பூமி வெடிக்காதென்றும், அது சீமைப் புளுகென்றும், அதை நம்பக் கூடாதென்றும் அவர் என்னிடம் பத்து நாளுக்கு முந்தியே சொன்னார். பெரியண்ண வாத்தியார் நாளது பிங்கள வருஷத்துக்குச் சொல்லிய பலன்களை யெல்லாம் அப்படியே சொல்லுகிறேன், கவனமாகக் கேளுங்கள்".

"பிங்கள வருஷத்தில் நல்ல மழை பெய்யும், நாடு செழிக்கும், நாட்டுத் தானியம் வெளியே போகாது. ஏழைகளுக்குச் சோறு கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். பசு முதலிய நல்ல ஜந்துக்கள் விருத்தியாகும். துஷ்ட ஜந்துக்கள் எல்லாம் செத்துப் போகும். தேள், பாம்பு, நட்டுவாய்க்காலி முதலியவற்றின் பீடை குறைய்டும், பிணி குறையும், துர்மரணமும் அகால மரணமும் குறையும். வெளித் தேசங்களில் சண்டை நடக்கும்; நம்முடைய தேசத்தில் சண்டை நடக்காமலே பல மாறுதல் ஏற்படும். ஜாதி பேதம் குறையும். ஆணுக்கும் பெண்ணுக்கும் படிப்பு விருத்தியாகும். ஜனங்களுக்குள்ளே தைரியமும், பலமும், வீரியமும், தெய்வபக்தியும் அதிகப்படும். நம்முடைய தேசம் மேன்மை யடையும்" என்று பெரியண்ண வாத்தியார் சொன்னதாக நெட்டையன் சொன்னான்.

"நாராயணசாமி, கவனி" என்றேன்.

"பாமர ஜனங்களுடைய வார்த்தை" என்று நாராயணசாமி சொன்னான்.

"தெய்வ வாக்கு" என்று நான் சொன்னேன்.

பிறகு சிறிது நேரம் அந்தக் கோயிலில் சுகமாகப் போட்டிலும் பேச்சிலும் பொழுது கழித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டோம்.

ஒரு முக்கிய பிரச்னை.......

மின் தமிழ் குழுமத்தில் திரு வீ.சீனிவாசன் அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் மறுபதிப்பு இது: நன்றி திரு வீ.சீனிவாசன்.   "Bharathi Payilagam.blogspot.com


தேசத்தின் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு முக்கிய பிரச்னை.......

Inbox
x

Srinivasan. V.

13:33 (1 hour ago)
to ஆரூர், me, ஜெய், மாமாஸ்ரீ
---------- Forwarded message ----------
From: "sridhar krishnan" <yeskay996@gmail.com>
Date: 22-Feb-2015 8:28 PM
Subject: Fwd: Fw: Fwd: பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்
To: 
பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்
February 19, 2015
- பேரா. ப.கனகசபாபதி 

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான  நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் திருச்செங்கோடு. திருச்செங்கோடு என்றவுடனே நினைவுக்கு வருவது அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில்தான். ஆணும் பெண்ணும் சரிபாதி என்னும் உயர்ந்த தத்துவத்தை நிலைநாட்டும் வகையில் மாதொரு பாகனாக ஆண்டவன் அங்கே காட்சி தருகிறார். இன்று வரைக்கும் கொங்கு நாட்டுக் கிராமங்கள் பலவற்றுக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுடனான தொப்புள்கொடி உறவு தொடர்ந்து இருந்து வருகிறது.

திருச்செங்கோடு  பகுதி விவசாயம் சார்ந்ததாகவே இருந்து வந்தது. கடந்த காலங்களில் போதிய நீர்வளம் இல்லாததால் மக்கள் வெவ்வேறு தொழில்களுக்கு மாறினார்கள். தங்களின் கடினமான உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வினால் இன்று வெவ்வேறு  தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் அறிந்த வரை அந்தப்பகுதி மக்களின் தொழில் திறமை தமிழகத்தின் பிற பகுதிகளை விடவும் அதிகம். அவர்களிடத்தில் அசாத்தியமான தொழில் முனையும் தன்மை உள்ளது. சென்ற 2011-ஆம் வருடம் வடகிழக்கு மாநிலங்களுக்கு இரண்டு வாரப் பயணமாகச் சென்றிருந்தோம். முதல் நாள் அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரான இடாநகரில் கருத்தரங்கு முடிந்து விடுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அங்கு வழியில் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம் வேலை செய்து கொண்டிருந்தது.    அருகில் சென்ற பார்த்தபோது அது திருச்செங்கோட்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. இவ்வாறு அப்பகுதி மக்கள் ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலை நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆகையால் இப்போது திருச்செங்கோடு நாடு முழுவதும் அறியப்படும் நகரமாக உள்ளது.  போக்குவரத்து, ஜவுளி, விசைத்தறி உள்ளிட்ட பல தொழில்களை  இன்று அவர்கள் செய்து  வருகின்றனர்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில் மற்றும் தொழில் முனையும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நாடு முழுவதும் பெருமையுடன் அறியப்பட்டு வந்த திருச்செங்கோடு,  கடந்த இரண்டு மாதங்களாக வேறொரு காரணத்துக்காக வெளியில் பரவலாகப் பேசப்பட்டு  வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகள், தேசிய மற்றும் மாநில ஊடகங்கள்  எனப் பலவற்றிலும் கட்டுரைகளும், விவாதங்களும், செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன.

அதன் பின்னணியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியரான பெருமாள் முருகன் என்பவர் எழுதிய  ‘மாதொரு பாகன்’ என்னும் நாவல் உள்ளது. அவரது புத்தகத்தில்  எழுபது வருடங்களுக்கு முன்னால் அங்கு நடந்தவற்றைச் சொல்வதாகக் கதையைப் படைத்துள்ளார். அது திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள கிராமப் பகுதியில்  வாழ்ந்த மக்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

> தனது நாவலுக்காகக்  கள ஆய்வுகள் மூலம் தகவல்களைச் சேகரித்ததாக அவர் முன்னுரையில் கூறுகிறார். மேலும் அதை எழுதுவதற்காக ஒரு குறிப்பிட்ட அமைப்பில் நிதி பெற்றிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகம் வெளிநாட்டு வாசகர்களுக்காகப் பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
> நாவலின் கதாநாயகர்கள் அங்கு பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். அந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகிப்  பல வருடங்களாகக் குழந்தை பிறக்கவில்லை.  தம்பதியினர் திருமணமாகி குழந்தைப் பேற்றுக்காக இறைவனை வேண்டுவதும், மலைக்கு மேலே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சென்று வழிபடுவதும் காலம் காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம்.

நாவலில் குழந்தைப் பேறு தாமதமானதால், கதாநாயகி கோவில் தேர்த் திருவிழாவின் பதினான்காம் நாளன்று இரவு முகம் தெரியாத வேறு  ஏதாவது ஆணுடன் உறவு கொள்ளுமாறு உறவினர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே, அது குழந்தைப் பேறு தாமதமானவர்களுக்கு வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடை முறைதான் என்றும், அதற்காகவே அன்று ஆங்காங்கு ஆண்கள் இரவு நேரத்தில் காத்துக் கிடப்பார்கள் என்றும், எனவே அதில் தவறு இல்லை எனவும் சொல்லப்படுகிறது.  மேலும் அப்படிப் பிறக்கும் குழந்தைகள் ‘சாமி குழந்தைகள்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் நாவல் கூறுகிறது.

திருச்செங்கோடு பகுதியைப் பொறுத்தவரையில் அங்கு வருடா வருடம் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் முக்கியமானது. பதினைந்து நாட்கள் நடை பெறும் அந்த விழாவில் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து அது மிகவும்  விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

> இந்தப் பிரச்னையின் பின்னணியை அறிந்துகொள்ள இரு வாரங்களுக்கு முன் ஈரோடு பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழில் துறை நண்பர்களுடன் திருச்செங்கோடு சென்றிருந்தேன். அப்போது அங்கு வாழும் பல சமூகங்களைச் சேர்ந்த மக்களையும், கோவில் கட்டளைதாரர்களையும் சந்தித்தோம். அவர்கள் சொன்ன சில விஷயங்கள் மிகவும் வருத்தப்பட வைத்தன.

சென்ற வருட இறுதியில் அந்த நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை சிங்கப்பூரில் வாழும் அந்த ஊரைச் சேர்ந்தவர் படித்திருக்கிறார். அதன் பின் அவர் இங்குள்ள  தனக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு, அந்தப் புத்தகத்தின் மூலமான தமிழ் நாவலைப் படிக்குமாறு சொல்லியிருக்கிறார். அதன் பின்னரே அதிலுள்ள விஷயம் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

காலங்காலமாக தாங்கள் பிரதானமாக வழிபட்டு வரும் தெய்வத்தின் தேர்த் திருவிழா நிகழ்வுகள் பற்றியும், தங்கள் ஊர்ப் பெண்களின் கற்பு பற்றியும் மிகவும் கேவலமாகச்  சித்தரித்துள்ளதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே அவர்களில் சிலர் நாவலாசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்டுள்ள விபரங்களுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். அவர் அதற்கு முறையாகப் பதில் அளிக்காமல், இணைப்பையும் துண்டித்து விட்டதாகச் சொல்கின்றனர். அங்கு நாங்கள் சந்தித்த இரண்டு பேர்   அவரிடம் பேசியதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர், தான் நாவலாசிரியரை நன்கு அறிந்தவர்  என்றும் கூறினார்.

பின்னர் உண்மையை அறியும் நோக்கில் ஊர் மக்கள் கூடிப் பேசி  காவல் துறையை அணுகி நாவலாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியுள்ளனர். நாட்கள் கடந்த பின்னரும், அங்கு எதுவும் நடக்காததால், திருச்செங்கோடு நகரில் அவர்கள் ஒரு நாள் கடையடைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடையடைப்பு அனைவரின் ஒருமனதான ஆதரவாலும் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

நிலைமையின் தன்மையைப் புரிந்து கொண்ட மாவட்ட நிர்வாகம், அதன் பின்னர் பிரச்னையைத் தீர்த்து வைக்க எழுத்தாளரிடமும் பொது மக்கள் பிரதிநிதிகளுடனும் தனித் தனியாகப் பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளது. பொதுமக்கள் தரப்பில் புத்தகத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ள விசயங்களுக்கு நாவலாசிரியர் ஆதாரம் காட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இல்லையெனில், தவறாகக் குறிப்பிட்டுள்ள பத்திகளை நீக்க வேண்டும் எனவும், அடுத்த பதிப்புகளில் அவை இடம் பெறக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அப்போது சம்பந்தப்பட்ட  அதிகாரியின் முன்னிலையில் நாவலாசிரியர் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் கற்பனையென்றும், அந்தப் புத்தகத்தின் விற்காத பிரதிகளைக் கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுக்  கொள்வதாகவும் எழுதிக் கொடுத்துள்ளார்.  பொதுமக்கள் தரப்பில் இனிமேல் எந்தவிதப்  போராட்டமும் நடத்தப்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது. அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவற்றை ஓர் ஒப்பந்தமாக அந்த அரசு அதிகாரி இரு தரப்பிலும் கையெழுத்துகளை வாங்கி முடித்துள்ளார்.

மறுநாள் பெருமாள் முருகன் தனது முகநூல் பக்கத்தில் தனக்குள்ளிருந்த நாவலாசிரியர் செத்து விட்டதாகவும், இனிமேல் ஒரு கல்லூரி ஆசிரியராக மட்டுமே அவர் செயல்படுவாரென்றும் அறிவித்தார். உடனே அந்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள்,  ஊடகங்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால்  அது எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதற்காகப் பல கட்டுரைகள் எழுதப்பட்டன; நாடு முழுவதும் செய்திகள் வந்தன. தேசிய அளவிலான ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலிருந்து, தமிழகத் தொலைக்காட்சிகள் வரை பலவற்றிலும் விவாதங்கள் நடத்தப் பட்டன.  மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கூட்டங்கள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.  சர்வதேச அளவில் பி.பி.சி. மற்றும் பாகிஸ்தான் பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன.

அவை எல்லாவற்றிலும் முக்கியமாக உள்ளூர் மக்கள் ஜாதியவாதிகளாகவும், மதவெறி பிடித்தவர்களாகவும் ஒருமனதாகச்சித்தரிக்கப்பட்டனர்.  ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி அவர்களை ‘லும்பென்’ (lumpen) என மோசமாகக் குறிப்பிட்டது. தமிழகத்தின் ஒரு இடதுசாரி அறிவுஜீவி ‘பாசிசக் குழு’ என அம்மக்களை வர்ணித்ததாக பத்திரிகைச் செய்தி வந்தது.

நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் நாவலாசிரியரின் எழுத்துரிமைக்கு என்று சொல்லி  வாதாடும்  அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா?

தாங்கள் புனிதமாக வழிபடும் தெய்வத்தின் தேர்த் திருவிழா பற்றியும், தங்கள் பகுதிப் பெண்களின் மானம் பற்றியும் வரலாறு என்று சொல்லித் தவறுதலாகச் சித்தரித்ததற்கு, எழுதியவரிடம்  ஆதாரம் கேட்க அவர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லையா?

ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு  எந்தவிதமான  ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.  அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும்  பொறுப்புக்கள் உள்ளன. அதற்கான கட்டளைகள் அவர்கள் அனைவருக்கும் காலங்காலமாக இருந்து வருகிறது.

மேலும் தாங்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை என அவர்கள் கூறுகின்றனர். அமைதியான முறையில் தமது எதிர்ப்புகளை சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள்  தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு நாள் அனைவரும் ஒன்று சேர்ந்து  ஊர்வலமாகச் சென்றபோது, சிலர் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களின் பிரதிகளை எரித்துள்ளனர்.

எனவே அவர்கள் வன்முறையாளர்கள் என ஊடகங்கள் மூலம் சித்தரிக்கப்படுவது  குறித்து மிகவும் கவலை  தெரிவிக்கின்றனர். அந்த  மக்களைப் பற்றி எவ்வளவோ குறைகளைச் சொல்லும் ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன?
புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்த் திருவிழாவின் பதினான்காவது நாள் நிகழ்ச்சிக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும், அது முற்றிலும் தவறானது என்றும் மக்கள் கூறுகின்றனர். புலவர் செ.இராசு கொங்கு நாட்டின் முக்கியமான சமகால வரலாற்றாசிரியர். தமிழ் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் துறையின் தலைவராக இருந்தவர்; நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். தமிழக அரசின் முதல் உவேசா விருதினைப்  பெற்றவர்.  திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள மாவட்டமான ஈரோட்டைச் சேர்ந்தவர்.

அவர் நாவலில் குறிப்பிட்டுள்ள அந்த விஷயங்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார்.  மேலும்கொங்கு நாட்டுப் பெண்கள் ஆரம்ப முதலே தமது உயிரை விடவும் மானத்தைப் பெரிதாகக் கருதி வாழ்ந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கிறார். அங்குள்ள வயதில் மூத்தவர்களும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள மாதிரி எதுவும் இருந்ததாக  தாங்கள் இதுவரை கேள்விப்பட்டதே  இல்லை எனக் கூறுகின்றனர்.

மேலும் அந்த நாவலில் வரலாற்றுப் பிழைகள் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக அங்கு  ‘தேவடியாள் தெரு’ என ஒன்று இருந்ததாகப் புத்தகத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது.  தேவரடியார்கள் சமூகத்தைச் சேர்ந்தவரும், கோவில் கட்டளைதாரருமான ஏ. கோபால கிருஷ்ணன் அது முற்றிலும் தவறு என மறுக்கிறார். அது தேரடித் தெரு என்றும், அதிலுள்ள முதல் வீடே அந்த நகரத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் அவர்களுக்குச் சேர்ந்தது என்றும், இன்னமும் அது அவர்களின் குடும்பத்திடமே இருந்து வருகிறது என்றும் கூறுகிறார்.

சுப்பராயன் அவர்கள் 1926 முதல் 1930 வரை மெட்ராஸ் பிரசிடென்சியில் முதலமைச்சராகவும், பின்னர் நேருவின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், இந்தோனேசியா நாட்டுக்கு நமது தூதராகவும் பல பொறுப்புகளில் இருந்தவர். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இன்று வரை அரசாங்கத்தில்  முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.

நன்கு படித்து சொந்தமாகத் தொழில் புரியும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்னிடத்தில் சொன்னார். “ சார், திருமணமாகி ஆறு வருடங்களாக எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காகத் தினமும் நான்  மாதொருபாகனை வேண்டி வருகிறேன். எனக்குக் குழந்தை பிறக்கும் போது, இந்த உலகம் என்னை எப்படிப் பார்க்க வேண்டுமென இந்த அறிவுலக வாதிகள் விரும்புகிறார்கள்?” அப்படிச் சொல்லும் போதே அவர் கண்களில் நீர் ததும்பியது. நானும் கண்ணீரை அடக்கச் சிரமப்பட்டேன்.

பிரபல சமூகவியலாளர் பிரான்சிஸ் புகுயாமா சொல்கிறார்: “சமூகங்களை எளிதில் அழித்து விடலாம். ஆனால் அவற்றை மீண்டும் உருவாக்குவது எளிதான காரியமல்ல”. இந்திய தேசம் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும்  அமைதியான முறையில் இயங்கி, மக்கள் தங்களின் வாழ்க்கையைத் தமது கலாசாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றையொட்டித் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். அவர்கள் அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வதில்லை; அரசாங்கத்தைக் கூடச் சார்ந்து நிற்பதில்லை.

இந்தப் பண்புகள் தான் இன்று உலக அளவில் நமது தேசத்தின் மிகப் பெரிய பலம். நமது சமூகங்கள் தேசத்தின் அமைதிக்கும்  பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு ஆற்றி வரும் பங்கு பற்றி ஆய்வுகள் வந்து கொண்டுள்ளன.   அப்படித்தான் திருச்செங்கோடு, நாமக்கல் ஆகியன இன்று தேசப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. அதற்கு அந்த மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கை நெறிகள் ஆகியவையே காரணமாக இருந்து வருகின்றன.

எனவே தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி  வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள்  மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?

ஊடகத்தின் மூலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்பில்லாத மக்களின் கருத்துக்களைத் தெரிவிக்க உதவுவதுதான் அறிவுலகவாதிகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே அது முற்றிலும் மாறாக நடக்கிறதே?

கொலைக் குற்றவாளிக்குக் கூட  அவனது கருத்தைச் சொல்ல வாய்ப்புக் கொடுத்த பின்னரே தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் எந்தவித வாய்ப்பும் கொடுக்கப்படாமல் அந்த ஊர் மக்கள் அனைவர் மீதும் தொடர்ந்து  குற்றம் சாட்டிக் கொண்டே செல்வது எந்த வகையில் நியாயமாகும்?

நமது தேசத்தின் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பிரச்னையாக இது தெரிகிறது.

Saturday, April 4, 2015

13. மழை


ஓம், ஓம், ஓம் என்று கடல் ஒலிக்குது. காற்று சுழித்துச் சுழித்து வீசுது. மணல் பறக்குது, வான் இருளுது. மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.

நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் இன்னும் சிலருமாகக் கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். மின்னல் வெட்டு அதிகப்படுகிறது. ராத்திரி ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம்.

"நாமும் எழுந்து வீட்டுக்குப் போக வேண்டியதுதான்" என்று பிரமராய அய்யர் சொன்னார்.

வேணு முதலி பாடுகிறான்:

"காற்றடிக்குது கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே
தூற்றல் கதவு, சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது கூடத்திலே - மழை
தொளைத் தடிக்குது கூடத்திலே."

"பாட்டெல்லாம் சரிதான்; ஆனால் மழை பெய்யாது" என்று ராமராயர் மற்றொரு முறை வற்புறுத்திச் சொன்னார்.

"பந்தயம் என்ன போடுகிறீர்?" என்று பிரமராய அய்யர் கேட்டார்.

"மழை பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன்; அதாவது இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் மழை பெய்யாது என்று நான் சொல்லுகிறேன்; பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுப்பேன். பெய்யாவிட்டால் நீர் நமக்குப் பத்து ரூபாய் கொடுப்பீரா?" என்று ராமராயர் சொன்னார்.

பிரமராயர் "சரி" யென்றார். அப்போது என் தோல் மேலே ஒரு தூற்றல் சொட்டென்று விழுந்தது. நான் "தூற்றல் போடுகிறது" என்று சொன்னேன். "இல்லை" என்று ராமராயர் சொன்னார். "என் மேல் ஒரு தூற்றல் விழுந்தது" என்று சொன்னேன். அதற்கு ராமராயர் "அலையிலிருந்து ஒரு திவலை காற்றிலே வந்து பட்டிருக்கும். அது மழை தூற்றலன்று என்றார். "சரி" என்று சும்மா இருந்து விட்டேன்.

"என் மேலே ஒரு தூற்றல் விழுந்தது" என்று பிரமராய அய்யர் கூவினார்.

"இதுவும் அலையிலிருந்துதான் வந்திருக்கும்" என்று ராமராயர் சொன்னார்.

"அதெப்படி தெரியும்" என்று பிரமராய அய்யர் சொல்வதற்குள்ளாகவே தூற்றல் பத்துப் பன்னிரண்டு எல்லார் தலையிலும் விழுந்தது.

"ராமராயருக்குப் பந்தயம் தோற்றுப் போய்விட்டது" என்று நான் சொன்னேன்.

"இல்லை. இது தூற்றல். நான் சிறு தூற்றல் கூடப் போடாதென்று சொல்லவில்லை. மழை பெய்யாதென்று சொன்னேன். சிறு தூற்றல் மழையாக மாட்டாது. இன்னும் இரண்டு மணி நேரம் இங்கே இருக்கலாம். அதுவரை மழை பெய்யாது என்று நிச்சயமாக இப்போதும் சொல்லுகிறேன்" என்று ராமராயர் சித்தாந்தம் செய்தார். வானம் அதிகமாகக் கறுத்து விட்டது. இருள் கக்கிக் கொண்டு மேகத்திரள் யானைத்திரள் போலவே தலைமீது போகலாயிற்று. தூற்றல் போடவில்லை. நின்று போய்விட்டது. ஆனால் இருள் மேன்மேலும் அதிகப்படுகிறது.

அப்போது நான் சொன்னேன்; "மழை பெய்தாலும் சரி; பெய்யாவிட்டாலும் சரி, நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும்" என்று சொல்லி எழுந்தேன்.

"தாங்கள் முதலாவது போங்கள். நானும் பிரமராய அய்யரும் இங்கே கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வருகிறோம்" என்று ராமராயர் சொன்னார்.

சரியென்று சொல்லி நானும் வேணு முதலியும் புறப்பட்டோம். மற்றவர்கள் அத்தனை பேரும் பந்தய விஷயத்திலேயே கவனமாக அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் புறப்பட்டு நூறடி தூரம் வருமுன்னாகவே மழைத் தூற்றல் வலுக்கத் தொடங்கிற்று. கொஞ்சம் ஓடிக் கடற் பாலத்தருகே சுங்கச்சாவடியில் போய் ஒதுங்கினோம். மழை வர்ஷமாகச் சொரிந்தது. ராமராயரும், பிரமராய அய்யரும் மற்றோரும் குடல் தெரிக்க ஓடி வந்து சேர்ந்தார்கள். நானும் வேணு முதலியும் கொஞ்சம் நனைந்து போயிருந்தோம். மற்றவர்கள் ஊறுகாய் ஸ்திதியில் இருந்தார்கள்.

மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்.....

மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சிநேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை இடிபோலே கர்ஜனை செய்வதை யொட்டி, அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக்கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார். ராமராயருக்கு மனத்துக்குள்ளே பயம்; வெளிக்குப் பயத்தைக் காட்டினால் அவமானம் என்பது ராமராயருடைய கொள்கை. ஆதலால், அவர் வேஷ்டியைப் பிழிந்து தாடியைத் துவட்டிக் கொண்டு "ஓம் சக்தி" "ஓம் சக்தி" என்று சொல்லத் தலைப்பட்டார்.

வேணு முதலி பாடத் தொடங்கினான்:

"திக்குகள் எட்டும் சிதறி - தக
தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம்
பக்க மலைகள் உடைந்து - வெள்ளம்
பாயுது, பாயுது, பாயுது, தாம் தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது, சாயுது, சாயுது பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம் தரிகிட தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரை கொண்டு விண்ணை யடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச் சட, சட்டச் சட, டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!
தக்கத் தக, தக்கத் தக, தித்தோம்!

இவ்வாறு பாடிக்கொண்டு வேணு முதலி குதிக்கத் தொடங்கினான். காற்று ஹூ ஹூ ஹூ என்று கத்துகிறது. வேணு முதலியும் கூடவே கத்துகிறான். இடி நகைக்கிறது. வேணு முதலி அதனுடன் கூட நகைக்கிறான்.

இவன் குதிக்கிற மாதிரியைக் கண்டு பக்கத்தில் இருந்தவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயம் தெளிந்தது.

ராமராயர் "ஓம் சக்தி" மந்திரத்தாலே பயத்தை நிவிர்த்தி செய்து கொண்டு "மகா பிரகிருதி வீரரஸம் காட்டுகிறாள்" என்று சொன்னார். "ரெளத்ர ரஸம்" என்று பிரமராய அய்யர் திருத்திக் கொடுத்தார். "இரண்டும் ஒன்றுதான்" என்று ராமராயர் மனதறிந்து பொய் சொன்னார். எதிரியை வார்த்தை சொல்ல விடக் கூடாதென்பது ராம ராயருடைய கொள்கை. இப்படி யிருக்கையிலே மழை கொஞ்சம் கொஞ்சம் குறையலாயிற்று; நெடுநேரம் அங்கே நின்றோம். ராமராயருக்குச் சாயங்காலமே கொஞ்சம் ஜலதோஷம்; மழையில் உடம்பு விறைக்கத் தொடங்கிற்று. இதை வேணு முதலி கண்டு அவரை இரண்டு கையாலும் மூட்டை போலே தூக்கி நிமிர்த்தி நின்று தலைக்கு மேலே கையெட்டும் வரை கொண்டு போய்த் தொப்பென்று தரையின் மேலே போட்டான். "அட மூடா!" என்று சொல்லி ராமராயர் எழுந்து நின்றுகொண்டு, உடம்பெல்லாம் சுடக்கெடுத்தது போல் நேராய் விட்டது. உடம்பில் உஷ்ணம் ஏறிவிட்டது. இப்போது குளிர் தெரியவில்லை" என்று சொன்னார்.

சிறிது நேரத்துக்குப் பின் மழை நின்றது. நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். வரும் வழியே வேணு முதலி பாடுகிறான்.

"அண்டங் குலுங்குது தம்பி - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடுகின்றான் - திசை
வெற்புக் குதிக்குது வானத்துக் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார் - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம், கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
தக்கத் தகத் தக்கத்தக தித்தோம்.

மறுநாள் காலையில் ராமராயர் பிரமராய அய்யருக்கு பந்தய ரூபாய் பத்தும் செலுத்தி விட்டார்.

12. அபயம்

காட்டில் ஒரு ரிஷி பதினாறு வருஷம் கந்தமூலங்களை உண்டு தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவருக்குப் பார்வதி பரமேசுவரர் பிரத்யக்ஷமாகி, "உமக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்கள்.

"நான் எக்காலத்திலும் சாகாமல் இருக்க வேண்டும்" என்று வாமதேவரிஷி சொன்னார். அந்தப்படியே வரம் கொடுத்துவிட்டுப் பார்வதி பரமேசுவரர் அந்தர்த்தானமாய் விட்டனர்.

அந்த வரத்தை வாங்கிக் கொண்டு வாமதேவரிஷி காசி நகரத்தில் கங்காநதி தீரத்தில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு அங்கே குடியிருந்தார். அவரிடத்தில் காசிராஜன் வந்து தனக்கு ஆத்ம ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று கேட்டான்.

அப்போது வாமதேவர் சொல்லுகிறார், "ராஜனே! எப்போதும் பயப்படாமல் இரு; பயமில்லாத நிலைமையே தெய்வம். பயத்தை விட்டவன் தெய்வத்தைக் காண்பான்" என்றார்.

இதுகேட்டுக் காசிராஜன் சொல்லுகிறான், "முனிவரே! நான் ஏற்கனவே பூமண்டலாதிபதியாக வாழ்கிறேன். எனக்கு எதிலும் பயமில்லை" என்றான்.

வாமதேவர், "நீ பூமி முழுவதையும் ஆளவில்லை. உன்னைவிடப் பெரிய மன்னர் பூமியில் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் எவனாவது உன் மீது படையெடுத்து வந்தால் நீ நடுங்கிப் போவாய். மேலும் இந்த நிலையில் நீ உனது பத்தினிக்குப் பயப்படுகிறாய். மந்திரிகளுக்குப் பயப்படுகிறாய். வேலைக்காரருக்குப் பயப்படுகிறாய். குடிகளுக்கெல்லாம் பயப்படுகிறாய். விஷ ஜந்துகளுக்குப் பயப்படுகிறாய். மரணத்துக்குப் பயப்படுகிறாய். நீ பயமில்லை என்று சொல்வது எனக்கு நகைப்பை உண்டாக்குகிறது" என்றார்.

இதைக் கேட்டு காசிராஜன், "இவ்விதமான பயங்க தீர்வதற்கு வழியுண்டோ?" என்று வினவினான்.

அதற்கு வாமதேவர் சொல்லுகிறார், "அடே ராஜா! நீ மூடன்" என்றார்.

காசிராஜா அவரைக் கையினாலே ஒரு அடி அடித்தான்.

அப்போது வாமதேவர், "அடே ராஜா! நீ எத்தனை அடி அடித்த போதிலும் மூடன் தான்" என்று சொன்னார். காசிராஜன் தலை தெரியாமல் கோபப்பட்டு வாமதேவர் கையிலிருந்த வேத புஸ்தகத்தை வாங்கிக் கிழித்துப் போட்டான்.

அப்போது வாமதேவர், "அடே ராஜா! வேதத்தை கிழித்தாய். இதற்குத் தெய்வத்தின் தண்டனை உண்டாகலாம்" என்று சொன்னார்.

அதற்குக் காசிராஜா, "ஏ வேதரிஷீ! தெய்வத்துக்குக் கண் உண்டு. அறியாமல் செய்த குற்றத்துக்குத் தண்டனை இல்லை. நான் வேதநூல் என்பதைப் பார்க்கவில்லை. அடித்தும் பயன்படாத உன்னை என்ன செய்வதென்று தெரியாமல் கோபாக்கிரந்தனாய் அஞ்ஞானத்திலே செய்தேன். என்னைத் தெய்வம் க்ஷமிக்கும். உனக்கும் க்ஷமை யுண்டாகுக" என்றான்.

அப்போது வாமதேவர், "அடே ராஜா! நீ நம்முடைய சிஷ்யனாகத் தகும். கோபம் வருவது க்ஷத்திரிய குணம்; அதே க்ஷத்திரிய தர்மம்; அதைக் கைவிடாதே. இதற்கு மேல் மற்றொரு விஷயம் சொல்லுகிறேன் கேள். நமக்கு இந்த உலகம் கடுகு மாத்திரம். உலகம் சின்னக் கடுகு. அதற்கு வெளிப் புறத்திலே நாம் நின்று அதனை நாம் பார்வையிடுகிறோம். நாம் நிற்பது பிரம்ம ஸாயுஜ்ய பதவியிலே. பிரம்ம ஸாயுஜ்ய பதவியிலே இருப்பவன் பிராம்மணன். இந்தக் கொள்கையை நீயும் கூடியவரை அனுசரித்தால் உனக்கும் நன்மையுண்டாகும். இந்தச் சமயம் உனக்கு நாம் அபயம் கொடுத்தோம். நமக்குப் பார்வதி-பரமேசுவரர் சாகாத வரம் கொடுத்திருக்கிறார்கள். அதிலே உனக்கும் பாகம் கொடுத்தோம். ஏனென்றால் அது வற்றாத அமிர்தம். இனிமேல் பிராமணர்களை அவசரப்பட்டு அடிக்காதே; செளக்கியமாக அமிர்தமுண்டிரு" என்று சொல்லிவிட்டுப் போனதாக ஒரு பெரியவர் என்னிடம் ஒரு கதை சொன்னார்.

11. தேவ விகடம்.














நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நத்திகேசுரர் அவரை நோக்கி, "நாரதரே, இப்போது ஸ்வாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப் புரத்தில் ஸ்வாமியும் தேவியும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு ஜாமம் சென்ற பிறகு தான் பார்க்க முடியும். அதுவரை இங்கு உட்கார்ந்திரும், ஏதேனும் வார்த்தை சொல்லிக் கொண்டிருக்கலாம்" என்றார். அப்படியே நாரதர் வலப்பக்கம் உட்கார்ந்தார். அங்கே பிள்ளையாரும் வந்து சேர்ந்தார். பக்கத்தில் நின்ற பூதமொன்றை நோக்கி நந்திகேசுரர் "முப்பது வண்டி கொழுக்கட்டையும், முந்நூறு குடத்தில் பாயசமும் ஒரு வண்டி நிறைய வெற்றிலை பாக்கும் கொண்டு வா" என்று கட்டளை யிட்டார்.

இமைத்த கண் மூடுமுன்பாக மேற்படி பூதம் பக்ஷணாதிகளைக் கொண்டு வைத்தது. பிள்ளையார் கொஞ்சம் சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டார். நாரதரோ ஒரு கொழுக்கட்டை யெடுத்துத் தின்று அரைக்கிண்ணம் ஜலத்தைக் குடித்தார். நந்திகேசுரர் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்த இரண்டு மூட்டை பருத்திக் கொட்டையையும், இரண்டு கொள்ளு மூட்டைகளையும், அப்படியே இரண்டு மூட்டை உளுந்தையும் இரண்டு மூன்று கட்டுப் புல்லையும் ஒரு திரணம்போலே விழுங்கிவிட்டுக் கொஞ்சம் தீர்த்தம் சாப்பிட்டார்.

பிறகு வார்த்தை சொல்லத் தொடங்கினார்கள்.

பிள்ளையார் கேட்டார், "நாரதரே! சமீபத்தில் ஏதேனும் கோள் இழுத்து விட்டீரா? எங்கேனும் கலகம் விளைவித்தீரா?"

நாரதர் சொல்லுகிறார், "கிடையாது ஸ்வாமி. நான் அந்தத் தொழிலையே விட்டுவிடப் போகிறேன். இப்போதெல்லாம் தேவாசுரர்களுக்குள்ளே சண்டை மூட்டும் தொழிலை ஏறக்குறைய நிறுத்தியாய் விட்டது. மனுஷ்யர்களுக்குள்ளே தான் நடத்தி வருகிறேன்."

பிள்ளையார், "சமீபத்தில் நடந்ததைச் சொல்லும்".

நாரதர் சொல்லுகிறார், "விழுப்புரத்திலே ஒரு செட்டியார், அவன் பெரிய லோபி; தஞ்சாவூரிலே ஒரு சாஸ்திரி, அவன் பெரிய கர்வி. செட்டிக்குச் செலவு மிகுதிப்பட்டுப் பார்ப்பானுக்குக் கர்வம் குறையும்படி செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. ஆறு மாதத்துக்கு முன்பு இந்த யோசனை யெடுத்தேன். நேற்றுதான் முடிவு பெற்றது. முதலாவது, பார்ப்பான் விழுப்புரத்துக்கு வரும்படி செய்தேன்.

பிள்ளையார், "எப்படி?"

நாரதர், "செட்டியின் சொப்பனத்திலே போய்த் தஞ்சாவூரில் இன்ன தெருவில் இன்ன பெயருள்ள சாஸ்திரி யிருக்கிறார். அவரைக் கூப்பிட்டால், உனக்குப் பலவிதமான தோஷ சாந்திகள் செய்வித்து ஆண் பிள்ளை பிறக்கும்படி செய்வார் என்று சொன்னேன். அப்படியே செட்டியினிடம் போனால் உனக்குப் பணமும் கீர்த்தியும் மிகுதிப்பட வழியுண்டென்று பார்ப்பானுடைய கனவிலே போய்ச் சொன்னேன். செட்டி காயிதம் போடு முன்பாகவே பார்ப்பான் விழுப்புரத்தில் செட்டி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். செட்டி குழந்தை பிறக்கும்படி ஹோமம் பண்ணத் தொடங்கினான். பார்ப்பான் காசை அதிகமாகக் கேட்டான். பாதியிலே செட்டி ஹோமத்தை நிறுத்திவிட்டுப் பார்ப்பானை வீட்டுக்குப் போகும்படி சொல்லிவிட்டான். பிறகு பக்கத்துத் தெருவில் ஒரு வீட்டில் ஒரு வருஷ காலமிருந்து பகவத்கீதை பிரசங்கம் செய்யும்படி சாஸ்திரியை அந்த வீட்டுப் பிரபு வேண்டிக் கொண்டான். மேற்பட் பிரபுவுக்கும் அந்த செட்டிக்கும் ஏற்கனவே மனஸ்தாபம். செட்டி தனக்கு முப்பதினாயிரம் பொன் கொடுக்க வேண்டுமென்று அந்தப் பிரபு நியாயஸ்தலத்தில் வழக்குப் போட்டிருந்தான். செட்டி அந்தப் பணத்தைத் தான் கொடுத்து விட்டதாகவும், நம்பிக்கையினால் கையெழுத்து வாங்கத் தவறினதாகவும் வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை என்றும் சொன்னான். நியாயஸ்தலத்தில் செட்டி வாதத்திற்குத் தக்க ஆதாரமில்லை என்றும், பிரபுவுக்குப் பணம் சிலவுட்பட கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயிற்று.

செட்டியினிடமிருந்த (கழனித் தொழில்) அடிமையொருவன் கள்ளுக்குக் காசு வாங்குவதற்காக இவனிடம் வந்து செட்டியாருக்கு யாரோ ஒரு அய்யர் சூனியம் வைக்கிறாரென்று மாரியம்மன் ஆவேசம் வந்தபோது தன்னுடைய பெண்டாட்டி சொன்னதாகச் சொல்லி விட்டான். செட்டி தன்னுடைய எதிரி வீட்டிலே போய் இருந்து தஞ்சாவூர்ப் பார்ப்பானே சூனியம் வைக்கிறானென்றும், அதனாலேதான் எதிரிக்கு வழக்கு ஜயமாகித் தனக்குத் தோற்றுப்போய் விட்டதென்றும் உறுதியாக நினைத்துக் கொண்டான். ஒரு மனுஷ்யனை அனுப்பித் தன் எதிரியின் வீட்டிலே, எதிரியும் சாஸ்திரியும் என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு வரும்படி ஏற்பாடு செய்தான். அந்த ஆளுக்கு மூன்று பொன் கொடுத்தான். இந்த வேவுகாரன் போய்க் கேட்கையிலே அந்த சாஸ்திரியும் வீட்டுக்காரப் பிரபுவும் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"பிரமந்தான் சத்தியம்
மற்றதெல்லாம் சூன்யம்"

என்று சாஸ்திரி சொன்னான். இதைக் கேட்டு வேவுகாரன், செட்டியினிடம் வந்து எதிரிபக்கத்துக்குச் சூனியம் வைக்க வேண்டுமென்று பேசிக் கொள்ளுகிறார்கள் என்று கதை சொன்னான். செட்டி, "பிரமாணம் பண்ணுவாயா?" என்று கேட்டான். "நிச்சயமாகப் பிரமாணம் பண்ணுவேன். சாஸ்திரி வாயினால் சூனியம் என்று சொன்னதை என்னுடைய காதினால் கேட்டேன். நான் சொல்வது பொய்யானால் என் பெண்டாட்டி வாங்கியிருக்கும் கடன்களையெல்லாம் மோட்டுத் தெருப் பிள்ளையார் கொடுக்கக் கடவது" என்று வேவுகாரன் சொன்னான்; இப்படி நாரதர் சொல்லி வருகையிலே, பிள்ளையார் புன்சிரிப்புடன், "அடடா! துஷ்டப் பயலே! அவன் பெண்டாட்டியினுடைய கடன்களை யெல்லாம் நானா தீர்க்க வேண்டும்! இருக்கட்டும். அவனுக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

அப்பாலே நாரதர் சொல்லுகிறார், "மேற்படி வேவுகாரன் வார்த்தையைக் கொண்டு செட்டி தன் எதிரியையும் எதிரிக்குத் துணையான தஞ்சாவூர் சாஸ்திரியையும் பெரிய நஷ்டத்துக்கும் அவமானத்துக்கும் இடமாக்கிவிட வேண்டுமென்று துணிவு செய்து கொண்டான். ஒரு கள்ளனைக் கூப்பிட்டுத் தன் எதிரி வீட்டில் போய்க் கொள்ளையிடும்படிக்கும் சாஸ்திரியின் குடுமியை நறுக்கிக் கொண்டு வரும்படிக்கும் சொல்லிக் கைக்கூலியாக நூறு பொன் கொடுத்தான். இதுவரை செட்டியின் அழுக்குத் துணியையும், முகவளைவையும் கண்டு செட்டி ஏழையென்று நினைத்திருந்த கள்ளன் செட்டி நூறு பொன்னைக் கொடுத்ததிலிருந்து இவனிடத்திலே பொற்குவை யிருக்கிறதென்று தெரிந்து கொண்டான். மறுநாள் இரவிலே நான்கு திருடரை அனுப்பிச் செட்டி வீட்டிலிருந்த பொன்னையெல்லாம் கொள்ளைகொண்டு போய்விட்டான்.

செட்டியினிடம் கொண்ட பொருளுக்குக் கைம்மாறாக அவனிடம் ஏதேனும் கொடுக்க வேண்டுமென்று நினைத்துச் செட்டியின் கட்டளைப்படியே சாஸ்திரியின் குடுமியை நறுக்கிச் செட்டியிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். பொன் களவு போன பெட்டியிலே இந்தக் குடுமியை வாங்கிச் செட்டி பூட்டி வைத்துக் கொண்டான். பார்ப்பான் கர்வமடங்கித் தஞ்சாவூருக்குப் போய்ச் சேர்ந்தான். நேற்று மாலையிலே தான் தஞ்சாவூரில் தன் வீட்டில் போய் உட்கார்ந்து, "தெய்வமே, நான் யாருக்கும் ஒரு தீங்கு நினைத்ததில்லையே! அப்படியிருந்தும் எனக்கு இந்த அவமானம் வரலாமா?' என்று நினைத்து அழுது கொண்டிருந்தான். அப்போது நான் ஒரு பிச்சைக்காரன் வேஷத்துடன் வீதியிலே பின்வரும் பாட்டைப் பாடிக்கொண்டு போனேன்.

"கடலைப் போலே கற்றோ மென்றே
கருவங் கொண்டாயே
கல்லா ரென்றே நல்லார் தம்மைக்
கடுமை செய்தாயே"

இவ்வாறு நாரதர் சொல்லியபோது நந்திகேசுரர் "இந்தக் கதை நடந்ததா? கற்பனையா?" என்று கேட்டார். நாரதர் "கற்பனைதான்; சந்தேகமென்ன?" என்றார். பிள்ளையார் கோபத்துடன் "ஏன் காணும்! நிஜம் போல் சொல்லிக் கொண்டிருந்தீரே! உண்மை யென்றல்லவோ நான் இதுவரை செவி கொடுத்துக் கேட்டேன். இதெல்லாம் என்ன, குறும்பா உமக்கு?" என்றார்.

"குறும்பில்லை. வேண்டுமென்றுதான் பொய்க் கதை சொன்னேன்" என்று நாரதர் சொன்னார்.

"ஏன்?" என்றார் பிள்ளையார்.

அதற்கு நாரதர், "நந்திகேசுரருக்குப் பொழுது போக்கும் பொருட்டாகக் கதை சொல்லச் சொன்னார்; சொன்னேன். தாங்கள் கேட்டதையும் அதோடு சேர்த்துக் கொண்டேன்" என்றார்.

"நான் கேட்டதை விளையாட்டாக்கி நீர் நந்திக்குத் திருப்தி பண்ணினீரா? என்ன நந்தி இது? எஜமான் பிள்ளை நானா நீயா?" என்று பிள்ளையார் கோபித்தார்.

அப்போது நந்திகேசுரர் முகத்தைச் சுளித்துக் கொண்டு, "பிள்ளையாரே, உனக்கு எவ்வளவு கொழுக்கட்டை கொடுத்தாலும் ஞாபகமிருப்பதில்லை. வாயில் காக்கம் வேலை எனக்கு; உனக்குப் போது போகாது போனால் வேலை செய்பவரை வந்து தொல்லைப் படுத்துகிறாயா? முருகக் கடவுள் இப்படியெல்லாம் செய்வது கிடையாது. அவர் மேலேதான் அம்மைக்குப் பக்ஷம். நீர் இங்கிருந்து போம். இல்லாவிட்டால் அம்மையிடம் போய்ச் சொல்லுவேன்" என்றார்.

அப்போது நாரதர் சிரித்து, "தேவர்களுக்குள்ளே கலகமுண்டாக்கும் தொழிலை நான் முழுதும் நிறுத்தி விடவில்லை" என்றார்.

பிள்ளையாரும், நந்திகேசுரரும் வெட்கமடைந்து நாரதருடைய தலையில் இலேசான வேடிக்கைக் குட்டு இரண்டு குட்டினார்கள்.

அப்போது நாரதர் சிரித்துக் கொண்டு சொல்லுகிறார், "நேற்றுக் காலையிலே பிருஹஸ்பதியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் இன்று என்னுடைய ஜன்ம நக்ஷத்திரத்திற்குள்ளே அவருடைய கிரகம் நுழையப் போகிறதென்றும், அதனால் இன்று என்னுடைய தலையில் நந்திகேசுரரும், பிள்ளையாரும் குட்டுவார்களென்றும் சோதிடத்திலே பார்த்துச் சொன்னார். உம்முடைய கிரகசாரங்களெல்லாம் நம்மிடத்திலே நடக்காதென்று சொன்னேன். பந்தயம் போட்டோம். நீங்கள் இருவரும் என்னைக் குட்டினால் நான் அவரிடத்தில் பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்குவதாக ஒப்புக் கொண்டேன். நீங்கள் குட்டாவிட்டால் நமக்கு தேவலோகத்தில் ஆறு சங்கீதக் கச்சேரி இந்த மாதத்தில் ஏற்படுத்திக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தார். அவர் கக்ஷி வென்றது. பதினாயிரம் பஞ்சாங்கம் விலைக்கு வாங்க வேண்டும்."

அப்போது பிள்ளையார் இரக்கத்துடன், "பதினாயிரம் பஞ்சாங்கத்துக்கு விலை யென்ன?" என்று கேட்டார்.

நாரதர், "இருபதினாயிரம் பொன்னாகும்" என்றார். பிள்ளையார் உடனே ஒரு பூதத்தைக் கொண்டு நாரதரிடம் இருபதினாயிரம் பொன் கொடுத்துவிடச் சொன்னார். பூதம் அப்படியே அரண்மனைப் பணப் பெட்டியிலிருந்து இருபதினாயிரம் பொன் நாரதரிடம் கொடுத்துப் பிள்ளையார் தர்மச் செலவு என்று கணக்கெழுதி விட்டது. பிற்கு பிள்ளையார் நாரதரை நோக்கி, "இந்தப் பந்தயக் கதை மெய்யா? அல்லது இதுவும் பொய்தானா" என்று கேட்டார்.

"பொய்தான்; சந்தேகமென்ன?" என்று சொல்லிப் பணத்தைக் கீழே போட்டுவிட்டு நாரதர் ஓடியே போய்விட்டார்.