பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, April 6, 2015

14. பிங்கள வருஷம்

சித்திரை மாதம் பிறந்தால் புது பஞ்சாங்கம் வாங்குகிறோம். சித்திரை முதல் நாள் ஆலயங்களிலும், மடங்களிலும் பஞ்சாங்க படனம் என்று வருஷ பஞ்சாங்க பலன் படிக்கச் சொல்லி கேட்கிறோம். சில பஞ்சாங்கங்களில் அந்தந்த வருஷ பலன்களை ஒரு வெண்பாவில் கொடுத்துவிடுவார்கள். எடுத்துக் காட்டாக இம்மாதம் பிறக்கப் போகும் புது வருஷம் மன்மத வருஷமல்லவா. அதற்கான வெண்பா இதோ:

"மன்மதத்தின் மாரியுண்டு, வாழுமுயிரெல்லாமே
நன்மை மிகும், பல் பொருளு நண்ணுமே - மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு, தென் திசையில் காற்று மிகும்
கானப் பொருள் குறையுங் காண்"

இப்படி ஆண்டு பலன்களைப் படித்துவிட்டு மறந்து விடுவோம். அந்த ஆண்டு முடிந்தபின் அந்த வெண்பா சொன்னது போல பலன்கள் இருந்தனவா, நடந்தனவா என்பதை எத்தனை பேர் பார்ப்பார்களோ தெரியவில்லை. இதை நையாண்டி செய்து இதோ ஒரு கதையை மகாகவி பாரதி எழுதியிருக்கிறார். அவருடைய புதிய ஆத்திசூடியில் அவர் சொன்னது "சோதிடந்தனை இகழ்". இவை இரண்டையும் பொறுத்திப் பார்த்துவிட்டு இந்த பிங்கள வருஷம் கதையைப் படியுங்கள்.


பிங்கள வருஷம்

வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தில், சித்தாந்த சாமி கோயில் என்றொரு கோயில் இருக்கிறது. அதற்கருகே ஒரு மடம். அந்த மடத்தில் பல வருஷங்களுக்கு முன்பு சித்தாந்தசாமி என்ற பரதேசி ஒருவர் இருந்தார். அவருடைய சமாதியிலே தான் அந்தக் கோயில் கட்டியிருக்கிறது. கோயில் மூலஸ்தானத்துக்கு எதிரேயுள்ள மண்டபத்தில், நாளது சித்திரை மாதம் பதினோராந்தேதி திங்கட்கிழமை காலை ஒன்பது மணி நேரத்துக்கு முன்னாகவே நானும் என்னுடன் நாராயணசாமி என்றொரு பிராமணப் பிள்ளையும் வந்து உட்கார்ந்தோம். பகல் முழுதும் ஊருக்கு வெளியே தனியிடத்தில் போயிருந்து உல்லாசமாகப் பொழுது கழிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வந்தோம். எப்போதும் வழக்கம் எப்படியென்றால், மடுவில் ஸ்நானம் செய்துவிட்டு மாந்தோப்புக்களில் பொழுது போக்குவோம். புயற்காற்றடித்த பிறகு மாந்தோப்புகளில் உட்கார நிழல் கிடையாது. ஆதலால் மேற்படி கோயில் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தோம். கோயிலைச் சூழ நான்கு புறத்திலும் கண்ணுக் கெட்டினவரை தென்னை மரங்கள் விழுந்து கிடந்தன. பல வளைந்து நின்றன. சில மரங்கள் தலைதூக்கி நேரே நின்றன. புயற்காற்று சென்ற வருஷம் கார்த்திகை மாதத்தில் அடித்தது. அந்தாறு மாதங்களாயும், இன்னும் ஒடிந்து கிடைக்கும் மரங்களை யெடுத்து யாதேனும் பயன்படுத்த வழி செய்யாமல் ஜனங்கள் அவற்றை அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டு என்னோடிருந்த நாராயணசாமி சொல்லுகிறான்.

"கேட்டீரா, காளிதாஸரே, இந்த ஹிந்து ஜனங்களைப் போல சோம்பேறிகள் மூன்று லோகத்திலுமில்லை. இந்த மரங்களை வெட்டி யெடுத்துக் கொண்டு போய் எப்படியேனும் உபயோகப்படுத்தக் கூடாதா? விழுந்தால் விழுந்தது; கிடந்தால் கிடந்தது; ஏனென்று கேட்பவர் இந்தியாவில் இல்லை. பாமர தேசமையா பாமர தேசம்!" என்றான். நான் அங்கே தனிமையையும் மவுனத்தையும் வேண்டி வந்தவன். ஆனபடியினால் அவனை நோக்கி, "நாராயணா! ஹிந்துக்கள் எப்படியேனும் போகட்டும். தனியிடம்; இங்கு மனுஷ்ய வாசனை கிடையாது; எவ்விதமான தொந்தரவும் இல்லை. மடத்துப் பரதேசிகள் கூடப் பிச்சைக்குக் கிளம்பி யிருக்கிறார்கள். பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்கள். சிவசிவா என்று படுத்துத் தூங்கு" என்றேன். அவனும் அப்படியே சரியென்று சொல்லி மேல் உத்திரீயத்தை விரித்துப் படுத்தான். உடனே தூங்கிப் போய்விட்டான்.

என் கையில் "குருபரம்பரா ப்ரபாவம்" என்ற வைஷ்ணவ நூலொன்று கொண்டு வந்திருந்தேன். சட்டைத் துணிகளையெல்லாம் கழற்றித் தலைக்குயரமாக வைத்துக் கொண்டு நானும் படுக்கை போட்டேன். அந்தப் புஸ்தகத்தில் "பிரவேசம்" என்ற முகவுரையில் பாதி வாசிக்கும்போதே எனக்கும் நல்ல தூக்கம் வந்தது. ஜில்ஜில்லென்று காற்று சுற்றிச் சுற்றி யடித்தது. கண் சொக்கிச் சொக்கித் தூங்கிற்று. விழித்து விழித்துத் தூங்கிப் பின்பு கடைசியாக எழுந்தபோது பகல் பதினோரு மணியாய் விட்டது. எழுந்தவுடனே கோயிற் கிணற்றில் ஜல மிறைத்து ஸ்நானம் பண்ணினோம். அந்தக் கிணற்று ஜலம் மிகவும் ருசியுள்ளது. நன்றாகத் தெளிந்தது. ஸ்நானத்தினுடைய இன்பம் வர்ணிக்க முடியாது. பிறகு வேதபுரத்திலிருந்து ஒருவன் ஆகாரம் கொண்டு வந்தான். சாப்பிட்டுத் தாம்பூலம் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது கோயிலுக்கெதிரேயுள்ள அல்லிக் குளத்தில் நாலைந்து பேர் வந்து குளித்துக் கொண்டிருந்தார்கள். "நேர்த்தியான கிணற்று ஜலமிருக்கும் போது, அதை இறைத்துக் குளிக்காமல், அழுக்குக் குளத்திலே குளிக்கிற மூடர்களைப் பார்த்தீரா?" என்று நாராயணசாமி முணுமுணுத்தான். அந்த நால்வருடைய பெயரெல்லாம் நான் விசாரிக்கவில்லை. அவர்கள் அப்போது பிங்கள வருஷத்துப் பலாபலன்களைப் பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய சம்பாஷணையை இங்கு எழுத வேண்டுமாதலால், அவர்களுக்கு நெட்டையன், கட்டையன், சொரியன், கரியன் என்ற கற்பனைப் பெயர்கள் கொடுக்கிறேன்.

சொரியன் சொல்லுகிறான், "புது வருஷத்துப் பஞ்சாங்கம் கேட்டீர்களா? இந்த வருஷ மெப்படி? ஜனங்களுக்கு நல்லதா, கெட்டதா?"

கரியன், "நள வருஷத்திலே நாய் படும் கஷ்டம்; பிங்கள வருஷத்தில் பின்னுங் கொஞ்சம் கஷ்டம். ஜனங்களுக்கு சுகமேது?"

கட்டையன், "நேற்று பூமியிலே ஒரு நக்ஷத்திரம் வந்து மோதி, பூமி தூள் தூளாகச் சிதறிப் போகுமென்று ஒரு மாச காலமாக எங்கே பார்த்தாலும் ஒரே பேச்சாய்க் கிடந்தது. ஒன்றும் நடக்கவில்லை. பொய் என்கிறேன்."

நெட்டையன், "அட போடா! தூள் தூளாகப் போகுமென்று நம்ம தமிழ் சோசியன் சொல்லவில்லை. சீமைப் புளுகு!"

கட்டையன், "தமிழ்ச் சோசியனுக்கு இப்படிப் பெரிய பொய் சொல்லத் தெரியாது. அவன் புளுகுகிற விதம் வேறே!"

நெட்டையன், "அட போடா! தமிழனிலே ஒருத்தன் இரண்டு பேர் நிஜம் சொல்லுகிற சோசியனும் உண்டு. ஆனால் நிஜம் பேசுகிற சோசியனுக்கு ஊரிலே அதிக மதிப்புக் கிடையாது."

கட்டையன், "சோசிய சாஸ்திரமே பொய்யென்கிறேன்."

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் நாராயணசாமி ஒரு புறம் கிளம்பி விட்டான். அவன் சொல்லுகிறான்:

"ஏன் காளிதாசரே, அமெரிக்காவில் பெரிய பெரிய ஸயன்ஸ்கார சாஸ்திரிகள் கண்டுபிடித்துச் சொன்னது கூடப் போய்யாகி விட்டதே! இது பெரிய ஆச்சர்யம்! பூமி தூளாகா விட்டாலும் ஒரு பூகம்பமாவது நடக்குமென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நேற்று ராத்திரி நம்ம தெருவில் அநேகர் தூங்கவே யில்லை. குழந்தை குட்டிகளை யெல்லாம் விழிக்க வைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஸயன்ஸ் பண்டிதர்கள் கூடச் சில சமயங்களில் பொய் சொல்லத்தான் செய்கிறார்கள்" என்றான்.

நான் குளத்தில் குளித்தவர்களுடைய சம்பாஷணையில் கவனம் செலுத்தினேன்.

நெட்டையன் சொல்லுகிறான், "வேதபுரத்திலே வெங்காயக் கடைக்குப் பக்கத்து வீட்டிலே பெரியண்ண வாத்தியார் இருக்கிறாரே, தெரியுமா? அவர் சோசியம் தப்பவே செய்யாது. அவர் எங்கள் தாத்தா செத்துப்போன நாள், மணி எல்லாம் துல்யமாகச் சொன்னார். பூமி வெடிக்காதென்றும், அது சீமைப் புளுகென்றும், அதை நம்பக் கூடாதென்றும் அவர் என்னிடம் பத்து நாளுக்கு முந்தியே சொன்னார். பெரியண்ண வாத்தியார் நாளது பிங்கள வருஷத்துக்குச் சொல்லிய பலன்களை யெல்லாம் அப்படியே சொல்லுகிறேன், கவனமாகக் கேளுங்கள்".

"பிங்கள வருஷத்தில் நல்ல மழை பெய்யும், நாடு செழிக்கும், நாட்டுத் தானியம் வெளியே போகாது. ஏழைகளுக்குச் சோறு கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். பசு முதலிய நல்ல ஜந்துக்கள் விருத்தியாகும். துஷ்ட ஜந்துக்கள் எல்லாம் செத்துப் போகும். தேள், பாம்பு, நட்டுவாய்க்காலி முதலியவற்றின் பீடை குறைய்டும், பிணி குறையும், துர்மரணமும் அகால மரணமும் குறையும். வெளித் தேசங்களில் சண்டை நடக்கும்; நம்முடைய தேசத்தில் சண்டை நடக்காமலே பல மாறுதல் ஏற்படும். ஜாதி பேதம் குறையும். ஆணுக்கும் பெண்ணுக்கும் படிப்பு விருத்தியாகும். ஜனங்களுக்குள்ளே தைரியமும், பலமும், வீரியமும், தெய்வபக்தியும் அதிகப்படும். நம்முடைய தேசம் மேன்மை யடையும்" என்று பெரியண்ண வாத்தியார் சொன்னதாக நெட்டையன் சொன்னான்.

"நாராயணசாமி, கவனி" என்றேன்.

"பாமர ஜனங்களுடைய வார்த்தை" என்று நாராயணசாமி சொன்னான்.

"தெய்வ வாக்கு" என்று நான் சொன்னேன்.

பிறகு சிறிது நேரம் அந்தக் கோயிலில் சுகமாகப் போட்டிலும் பேச்சிலும் பொழுது கழித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டோம்.

No comments: