ஓம், ஓம், ஓம் என்று கடல் ஒலிக்குது. காற்று சுழித்துச் சுழித்து வீசுது. மணல் பறக்குது, வான் இருளுது. மேகம் சூழுது. கடற்கரையில் காற்று வாங்க வந்த ஜனங்கள் கலைந்து வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
நானும், ராமராயரும் வேணு முதலியும், வாத்தியார் பிரமராய அய்யரும் இன்னும் சிலருமாகக் கடற்கரை மணல் மேலே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தோம். மின்னல் வெட்டு அதிகப்படுகிறது. ராத்திரி ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம்.
"நாமும் எழுந்து வீட்டுக்குப் போக வேண்டியதுதான்" என்று பிரமராய அய்யர் சொன்னார்.
வேணு முதலி பாடுகிறான்:
"காற்றடிக்குது கடல் குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகனே
தூற்றல் கதவு, சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது கூடத்திலே - மழை
தொளைத் தடிக்குது கூடத்திலே."
"பாட்டெல்லாம் சரிதான்; ஆனால் மழை பெய்யாது" என்று ராமராயர் மற்றொரு முறை வற்புறுத்திச் சொன்னார்.
"பந்தயம் என்ன போடுகிறீர்?" என்று பிரமராய அய்யர் கேட்டார்.
"மழை பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன்; அதாவது இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள் மழை பெய்யாது என்று நான் சொல்லுகிறேன்; பெய்தால் நான் உமக்குப் பத்து ரூபாய் கொடுப்பேன். பெய்யாவிட்டால் நீர் நமக்குப் பத்து ரூபாய் கொடுப்பீரா?" என்று ராமராயர் சொன்னார்.
பிரமராயர் "சரி" யென்றார். அப்போது என் தோல் மேலே ஒரு தூற்றல் சொட்டென்று விழுந்தது. நான் "தூற்றல் போடுகிறது" என்று சொன்னேன். "இல்லை" என்று ராமராயர் சொன்னார். "என் மேல் ஒரு தூற்றல் விழுந்தது" என்று சொன்னேன். அதற்கு ராமராயர் "அலையிலிருந்து ஒரு திவலை காற்றிலே வந்து பட்டிருக்கும். அது மழை தூற்றலன்று என்றார். "சரி" என்று சும்மா இருந்து விட்டேன்.
"என் மேலே ஒரு தூற்றல் விழுந்தது" என்று பிரமராய அய்யர் கூவினார்.
"இதுவும் அலையிலிருந்துதான் வந்திருக்கும்" என்று ராமராயர் சொன்னார்.
"அதெப்படி தெரியும்" என்று பிரமராய அய்யர் சொல்வதற்குள்ளாகவே தூற்றல் பத்துப் பன்னிரண்டு எல்லார் தலையிலும் விழுந்தது.
"ராமராயருக்குப் பந்தயம் தோற்றுப் போய்விட்டது" என்று நான் சொன்னேன்.
"இல்லை. இது தூற்றல். நான் சிறு தூற்றல் கூடப் போடாதென்று சொல்லவில்லை. மழை பெய்யாதென்று சொன்னேன். சிறு தூற்றல் மழையாக மாட்டாது. இன்னும் இரண்டு மணி நேரம் இங்கே இருக்கலாம். அதுவரை மழை பெய்யாது என்று நிச்சயமாக இப்போதும் சொல்லுகிறேன்" என்று ராமராயர் சித்தாந்தம் செய்தார். வானம் அதிகமாகக் கறுத்து விட்டது. இருள் கக்கிக் கொண்டு மேகத்திரள் யானைத்திரள் போலவே தலைமீது போகலாயிற்று. தூற்றல் போடவில்லை. நின்று போய்விட்டது. ஆனால் இருள் மேன்மேலும் அதிகப்படுகிறது.
அப்போது நான் சொன்னேன்; "மழை பெய்தாலும் சரி; பெய்யாவிட்டாலும் சரி, நாம் இங்கிருந்து புறப்பட வேண்டும்" என்று சொல்லி எழுந்தேன்.
"தாங்கள் முதலாவது போங்கள். நானும் பிரமராய அய்யரும் இங்கே கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வருகிறோம்" என்று ராமராயர் சொன்னார்.
சரியென்று சொல்லி நானும் வேணு முதலியும் புறப்பட்டோம். மற்றவர்கள் அத்தனை பேரும் பந்தய விஷயத்திலேயே கவனமாக அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் புறப்பட்டு நூறடி தூரம் வருமுன்னாகவே மழைத் தூற்றல் வலுக்கத் தொடங்கிற்று. கொஞ்சம் ஓடிக் கடற் பாலத்தருகே சுங்கச்சாவடியில் போய் ஒதுங்கினோம். மழை வர்ஷமாகச் சொரிந்தது. ராமராயரும், பிரமராய அய்யரும் மற்றோரும் குடல் தெரிக்க ஓடி வந்து சேர்ந்தார்கள். நானும் வேணு முதலியும் கொஞ்சம் நனைந்து போயிருந்தோம். மற்றவர்கள் ஊறுகாய் ஸ்திதியில் இருந்தார்கள்.
மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்.....
மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சிநேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை இடிபோலே கர்ஜனை செய்வதை யொட்டி, அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக்கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார். ராமராயருக்கு மனத்துக்குள்ளே பயம்; வெளிக்குப் பயத்தைக் காட்டினால் அவமானம் என்பது ராமராயருடைய கொள்கை. ஆதலால், அவர் வேஷ்டியைப் பிழிந்து தாடியைத் துவட்டிக் கொண்டு "ஓம் சக்தி" "ஓம் சக்தி" என்று சொல்லத் தலைப்பட்டார்.
வேணு முதலி பாடத் தொடங்கினான்:
"திக்குகள் எட்டும் சிதறி - தக
தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம்
பக்க மலைகள் உடைந்து - வெள்ளம்
பாயுது, பாயுது, பாயுது, தாம் தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது, சாயுது, சாயுது பேய் கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம் தரிகிட தாம் தரிகிட, தாம் தரிகிட, தாம் தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரை கொண்டு விண்ணை யடிக்குது
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச் சட, சட்டச் சட, டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத் திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!
தக்கத் தக, தக்கத் தக, தித்தோம்!
இவ்வாறு பாடிக்கொண்டு வேணு முதலி குதிக்கத் தொடங்கினான். காற்று ஹூ ஹூ ஹூ என்று கத்துகிறது. வேணு முதலியும் கூடவே கத்துகிறான். இடி நகைக்கிறது. வேணு முதலி அதனுடன் கூட நகைக்கிறான்.
இவன் குதிக்கிற மாதிரியைக் கண்டு பக்கத்தில் இருந்தவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயம் தெளிந்தது.
ராமராயர் "ஓம் சக்தி" மந்திரத்தாலே பயத்தை நிவிர்த்தி செய்து கொண்டு "மகா பிரகிருதி வீரரஸம் காட்டுகிறாள்" என்று சொன்னார். "ரெளத்ர ரஸம்" என்று பிரமராய அய்யர் திருத்திக் கொடுத்தார். "இரண்டும் ஒன்றுதான்" என்று ராமராயர் மனதறிந்து பொய் சொன்னார். எதிரியை வார்த்தை சொல்ல விடக் கூடாதென்பது ராம ராயருடைய கொள்கை. இப்படி யிருக்கையிலே மழை கொஞ்சம் கொஞ்சம் குறையலாயிற்று; நெடுநேரம் அங்கே நின்றோம். ராமராயருக்குச் சாயங்காலமே கொஞ்சம் ஜலதோஷம்; மழையில் உடம்பு விறைக்கத் தொடங்கிற்று. இதை வேணு முதலி கண்டு அவரை இரண்டு கையாலும் மூட்டை போலே தூக்கி நிமிர்த்தி நின்று தலைக்கு மேலே கையெட்டும் வரை கொண்டு போய்த் தொப்பென்று தரையின் மேலே போட்டான். "அட மூடா!" என்று சொல்லி ராமராயர் எழுந்து நின்றுகொண்டு, உடம்பெல்லாம் சுடக்கெடுத்தது போல் நேராய் விட்டது. உடம்பில் உஷ்ணம் ஏறிவிட்டது. இப்போது குளிர் தெரியவில்லை" என்று சொன்னார்.
சிறிது நேரத்துக்குப் பின் மழை நின்றது. நாங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். வரும் வழியே வேணு முதலி பாடுகிறான்.
"அண்டங் குலுங்குது தம்பி - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடுகின்றான் - திசை
வெற்புக் குதிக்குது வானத்துக் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார் - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்
கண்டோம், கண்டோம், கண்டோம் - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!
தக்கத் தகத் தக்கத்தக தித்தோம்.
மறுநாள் காலையில் ராமராயர் பிரமராய அய்யருக்கு பந்தய ரூபாய் பத்தும் செலுத்தி விட்டார்.
No comments:
Post a Comment