மகாகவி பாரதியார் நம்முடைய நாட்டின் பெருமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட பல பெரியோர்கள் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறார். நாம் ஏன் பண்டைய பெரியோர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு விளக்கத்தையும் தருகிறார். அது ....
“அறிவுடையோரையும்,
லோகோபகாரிகளையும், வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்
போகும்”.
ஆகவேதான்
அவர்காலத்தில் வாழ்ந்த, அல்லது அதற்கும் முற்பட்ட பழம்பெரும் தலைவர்களைப் பற்றி பல்வேறு
சந்தர்ப்பங்களில் எழுதிச் சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட பெருந்தலைவர்கள் சிலரைப்
பற்றி பாரதி எழுதியிருக்கும் வரிகளை நாம் இப்போது பார்க்கலாம். முதலில் ......
லோகமான்ய பாலகங்காதர
திலகர்.
நமது தேசாபிமான திலகமாகிய ஸ்ரீமத் பால
கங்காதர திலகரின் 50-வது ஜன்ம தினம் புனா நகரத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.
“கால்” பத்திரிகையின் அதிபராகிய ஸ்ரீமத் பரஞ்ஜபேயும், வேறு பல மித்திரர்களும் ஆரம்பத்தில்
இந்த யோசனையைத் தொடங்கினார்கள். உடனே ஒரு பொதுக்கூட்டம் கூட்டப் பெற்றது. ஸ்ரீபரஞ்ஜபே
திலகரின் பிறந்தநாட் கொண்டாட்டத்தின் பொருட்டாகப் பணம் வேண்டுமென்று சொன்னவுடன், அந்த
ஸ்தலத்தில் வைத்தே 750 ரூபாய் சேர்ந்து விட்டது. அதற்கப்பாலும் மேற்படி பெருங் காரியத்தின்
பொருட்டுச் சிறிது சிறிதாகப் பணத் தொகைகள் சேர்ந்தன.
ஸ்ரீமான்
திலகரிடம் இந்த விஷயத்தைப் பற்றி ஒருவர் கேட்டபோது அவர் “எனக்கேன் இந்த ஆடம்பரமெல்லாம்?
அந்தப் பணத்தை ஏதேனும் வேறு உபயோகமான காரியத்தில் செலவிடலாகாதா?” என்றனராம். ஸ்ரீதிலகர்
சொல்லியும்கூட மேற்படி ஆலோசனையை பரஞ்ஜபே முதலானவர்கள் கைவிட்டுவிட வில்லை. தெய்வத்தினிடத்தில்
சம்மதம் கேட்டுக் கொண்டா நாம் அதற்குப் பூஜை நடத்துகிறோம்?
தெய்வ
பூஜையைக் காட்ட்லும், இப்போது நமது நாடிருக்கும் நிலைமைக்கு வீரபூஜை
(Hero-worship) அத்தியாவசியமாகும். ராமன், அர்ஜுனன், சிவாஜி, பிரதாபர் முதலிய யுத்த
வீரர்களும், புத்தர், சங்கரர் முதலிய ஞான வீரர்களும் வாழ்ந்த இந்தப் புண்ணிய தேசமானது
இப்போது வீர சூனியமாயிப் போய் விட்டது. அந்த ஸ்திதியில் ஈச்வர கடாக்ஷத்தினால் உதித்திருக்கின்ற
சாமானிய மஹான்களைக்கூட நாம் தக்கபடி கவுரவம் செய்யாமல் இருப்போமானால் நம்மை மிகவும்
இழிந்த குருடர்களென்று உலகத்தார் நிந்தனை புரிவார்கள். வீர பூஜையானது ஒரு தேசத்தின்
அபிவிருத்திக்கு இன்றியமையாததாகும். கார்லைல் (Carlyle) என்ற ஆங்கிலேய ஞானியார், வீர
பூஜையைப் பற்றி ஓர் முழு கிர்ந்தமெழுதியிருக்கின்றார். எந்தக் காலத்திலும், வீர பூஜை
விஷயத்தில் மிகுந்த சிரத்தை கொண்டிருந்த நமது நாட்டார்கள், அது மிகவும் அவசியமாயிருக்கும்
இந்தத் தருணத்தில் சும்மா இருந்து விடலாகாது. ஆதலால், பரஞ்ஜபே முதலானவர்கள் இந்த விஷயத்தில்
தக்க சிரமமெடுத்துக் கொண்டமை பற்றி அவர்களுக்கு எமது மகிழ்ச்சி யறிவிக்கிறோம்.
திலகர்
இந்த தேசத்தினிடம் வைத்திருக்கும் அபிமானத்தையும், அவர் அதன் பொருட்டு அடைந்திருக்கும்
கஷ்டங்களையும் விரித்துப் பேச வேண்டுமென்றால், நமது பத்திரிகை முழுமையும் இடம் போதமாட்டாது.
ஆரம்பத்தில்
இவருக்கு கவர்ன்மெண்டார் ஒரு ஸப்-ஜட்ஜி வேலை கொடுப்பதாகச் சொல்லியபோது இவர் அதனை விஷமாக
எண்ணி வேண்டாமென்று மறுத்து விட்டார். 1897-ம் வருஷத்திலே பம்பாய் மாகாணத்து மூட அதிகாரிகள்
இவரைப் படுத்திய பாட்டையெல்லாம் நினைக்கும்போதே மனம் பதறுகின்றது. அதற்கப்பால் இவர்
மீது ஒரு பொய்க் கேஸ் கொண்டு வந்தார்கள். அதனால் இவருக் கேற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் வரம்பில்லாதவையாகும்.
இவற்றை யெல்லாம் இப்போது நினைப்பூட்டுதல் அவசியமில்லை.
இந்த
மஹான் நனவிலும், கனவிலும், பாரத தேசத்தின் க்ஷேமத்திற்கும், பெருமைக்கும் சுயாதீனத்திற்கும்
பிரார்த்தனை புரிந்து வருகிறார். திலகர் சாமானியமாகத் தேசாபிமானிகளென்று சொல்லித் திரியும்
கூட்டத்தாரைச் சேர்ந்தவ ரல்லர். பயங்காளித்தனத்தைப் புத்தி சாதுரிய மென்றும், ஆண்மை
யற்றிருக்கும் அயோக்கியத் தன்மையைத் தீர்க்காலோசனையுடமை யென்றும் திலகர் நினைப்பவரில்லை.
சுதேசீய
தர்மத்துக்கு பிரதம குருவாக ஸ்ரீதிலகரைக் கருதலாம். மஹா வைதீகானுஷ்டானங் கொண்டவராகிய
திலக ரிஷி தற்காலத்துப் போலி வைதிகர்களைப் போல கண்மூடித்தனமான அகந்தையும் பொறாமையும்,
ஹிருதயக் குறுக்கமும் உடையவரில்லை. இவர் 50 வருஷங்கள் இருந்து தமது வலிமையையும் ஞானத்தையும்
தாய்த் தேசத்தின் அனுகூலத்திற்கு நிவேதனஞ் செய்து வந்ததுபோலவே இன்னும் எத்தனையோ வருஷ
காலம் ஜீவித்திருந்து நமக்கு ஹிதம் புரியுமாறு செய்ய வேண்டுமென்று ஸர்வேசுவரனது திருவடியைப்
பற்றிப் பிரார்த்தனை புரிகிறோம்.
தனக்கென்ற
எண்ணத்தை அடியோடு தொலைத்து, பிறர்க்கு என்று தமது உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்த
முற்றும் துறந்த முனிவர்களெல்லாம் காடே யாயினும், நாடே யாயினும், மாளிகை யாயினும்,
காராகிருகமாயினும் தமது திருத்தொண்டிற்குக் காலமும் இடமும் கண்டு ஓயாது பாடுபட்டு வருதல்
சகஜமே யன்றோ? அவர் உண்பதும் உறங்குவதுமே பிறர் பொருட்டாயின், பின் அவரது பெருஐயைக்
கணித்தற் கியலுமா? அத்தகையோர் இவ்வுலகத்து இடைக்கிடை உலவுவதா லன்றோ கொடுமை மிஞ்சிய
பிரளய காலங்களிலும்கூட இப் புவியணு மனத்தினாலும் அறிவினாலும் கணக்கிடற்கரிய அண்ட கோடிக்
குவியல்களின் நடுவில் அடிபட்டுத் தூள் மயமாகாது சுகமே சுழன்று கொண்டிருக்கிறது.
இது
பற்றி யன்றோ பெரியோரும்
“உண்டா
லம்ம விவ்வுலகம்
..............................................
தனக்கென
முயலா நோன்றாட்
பிறர்க்கென
முயலுநர் உண்மையானே”
என்று கூறியுள்ளார்.
இப்போது
நமது தேச குரு திலக மகரிஷியும் மாண்டலேயில் உடம்பு சுகமாகவே காலங் கழித்து வருகின்றார்.
தமது ஆச்சிரம வாசம் வீணாகாமல் சிஷ்ய கோடிகளுக்குப் பயன்படுமாறு ஸ்ரீ கிருஷ்ண பகவான்
உபதேசித்த ‘பகவத் கீதை’க்குத் தத்துவார்த்தம் எழுதிக் கொண்டிருக்கிறார். இவ் வேலை ஓய்வு
ஒழிவில்லாமல் நடந்து வருகிறதாம்.
(நன்றி:
பாரதியார் கட்டுரைகள்)
No comments:
Post a Comment