பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 14, 2020

பாரதி புதுவை வந்து சேர்ந்த வரலாறு.

 

                                                   ஸ்ரீஸ்ரீ ஆச்சார்யா.

            பாரதியார் வாழ்வில் சென்னையிலிருந்து அவர் புதுவை சென்றது மிக முக்கியமான சம்பவமாகும். புதுவையில் இருந்ததன் காரணமாகவே, அரவிந்தர்,வ.வெ.சு. ஐயர், பாரதி என்ற தேசபக்த மும்மூர்த்திகள் அங்கே சந்தித்து ஒன்றாக வாழும் சந்தர்ப்பமும், பாக்கியமும் ஏற்பட்டன.

            புதுவையில் பாரதியாருக்கு உற்ற துணைவர்களாக இருந்தவர்களில், சென்னையிலிருந்து பாரதியாருடன் அங்கு சென்று குடியேறிய மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார் முக்கியமானவர் ஆவார். இவர் தூத்துக்குடி சுதேசிக் கப்பல் முயற்சியில் லட்சக் கணக்கில் நஷ்டமடைந்த தேசபக்தர்கள் குடும்பத்தில் உதித்தவர், திருவல்லிக்கேணியில், பேயாழ்வார் கோயில் தெருவில் 3ஆம் எண்ணுள்ள வீட்டில் வசித்து வந்தார்.

            அவர் தம் கட்டுரையில், பாரதி புதுவை வந்த வரலாற்றை விவரிக்கிறார்:--

            சென்னையில் 1908ஆம் வருடத்தில் இந்தியாபத்திரிகையின் மேல் ராஜத்துவேஷ வழக்கு ஆரம்பித்த போது, அதன் முக்கிய எழுத்தாளரான பாரதியார் பேரிலும் வாரண்ட்பிறப்பித்திருந்தது. அவருக்கு சிறைவாசங்களின் கஷ்டம் தெரியும். நமது நண்பர் சிதம்பரம் பிள்ளை, சுப்ரமண்ய சிவா முதலானோர்களை சிறையில் கண்டு சம்பாஷித்திருக்கிறார். அங்குள்ள கஷ்டங்களுக்கு அவர் பயப்படவில்லை. அவரது வாழ்க்கையே எப்போதும் எளிய வாழ்க்கை, கிடைத்தது உண்டு, கிடைத்த இடத்தில் படுப்பார். வேண்டியிருந்தால் பட்டினியாகவும்கூட நாட்களைத் தள்ளுவார். ஆனால் கட்டுக்கு அடங்கி இருப்பது என்பது அவருடைய இயற்கைக்கு அடியோடு விரோதமானது.

            தம் குடும்பத்தாரையோ, நண்பர்களையோ பிரிந்து தனித்திருப்பதற்கும் அவர் அஞ்சவில்லை. ஆனால் சிறையில் தம் இஷ்டம்போல் உலாவவும், உண்ணவும், படுக்கவும், எழுந்திருக்கவும் விடமாட்டார்களே, அதற்கென்ன செய்வது? தமக்கிஷ்ட மில்லாத ஒரு வேலையைக் கொடுத்து அதைக் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பார்களே, அதற்குத் தாம் எப்படி உட்படுவது? இந்தப் பயம்தான் அவருக்கிருந்தது.

            இப்படிக் கட்டுப்பட்டுப் பிழைப்பதைவிட எங்காவது ஓடிப்போய் பட்டினி கிடந்தாவது வாழலாம் எனத் தீர்மானித்தார் அவர். அச்சமயத்தில் சிலர், புதுச்சேரி அந்நிய ராஜாங்கமாகையால், அங்கு சென்று பகிரங்கமாக ஒரு பயமுமின்றி அவர் வசிக்கலாம் என்றர்கள். அதற்கு இசைந்து, சிட்டி குப்புசாமி ஐயங்கார் என்பவருக்கு (இவர் குவளை கிருஷ்ணமாச்சாரியாருக்கு ஷட்டகர் முறை) தம் நண்பர் ஒருவர் கொடுத்த கடிதத்தோடு அங்கு சென்றார். புதுவை நகர், அதுவரை கடன்பட்டுத் திண்டாடு வோருக்குப் புகலிடம் என்ற பெயர்தான் பெற்றிருந்தது. பாரதியார் அங்கு சென்றதிலிருந்து அதனுடைய பெருமை அதிகரித்தது. அதன் அந்நிய ஆட்சியில் சரண்புகும் அரசியல் வாதிகளை பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் ஒன்றும் செய்ய இயலாது என்னும் விஷயம், பாரதியார் அங்கு சென்று தங்கினதிலிருந்துதான் இந்தியா பூராவும் தெரியவந்தது. என்ன புரட்சி எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், அகிம்சை வழியில் நடக்கும் எந்த அரசியல் வாதியும் அங்கு நிர்பயமாக வசிக்கலாம் என்பது அவரால் உறுதி பெற்றது. இரண்டு வருஷங்களுக்குப் பிறகு ஸ்ரீ அரவிந்தர் அங்கு வந்து தங்கியதற்கும் இதுவே காரணம் எனலாம்.

            பாரதியார் புதுவை சென்ற செய்தி இரண்டு நாட்களுக்கெல்லாம் சென்னை போலீசுக்குத் தெரிந்து விட்டது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்த விரும்பவில்லை. கோர்ட்டில் வழக்கு நடக்கையில் அதைக் கூறுவது அவசியமானபோது கூட, வெளிப்படையாகச் சொல்லாது, அதை மழுப்பிவிட்டார்கள். அரசியல் வாதிகளுக்கு இப்படி ஒரு புகலிடம் இருப்பது நாடெங்கும் தெரியாமலிருப்பது மேலென அவர்கள் எண்ணினார்களோ என்னவோ! ஆனால், பாரதியாரின் பெயர் தமிழ் நாடெங்கும் பரவியிருந்தபடியால் அவருடைய புதுவை வாசம் வெகு சீக்கிரத்தில் யாவருக்கும் தெரிந்து விட்டது.

            பாரதியார் மனதில் ஒரு எண்ணம் புகுந்தால் அது இடைவிடாது வேலை செய்துகொண்டே இருக்கும். போலீஸ்காரானிடம் சிக்காது ஊர்போய்ச் சேரவேண்டுமெனக் கருதியதனால் ரயிலில் தம்மருகில் எவன் வந்தாலும் அவன் போலீஸ்காரனாயிருப்பானோ என்ற ஐயம்தான் முதலில் அவருக்குப் பிறக்குமாம். சற்று நேரம் அவனோடு பேசியும் அவன் நடத்தையைக் கவனித்தும் பார்த்த பிறகுதான் சந்தேகம் நிவர்த்தியாகுமாம்.

            நேரில் சென்னையில் ரயில் ஏறாமல் சைதாப்பேட்டை சென்று அங்கிருந்துதான் புதுவைக்குப் புறப்பட்டார் பாரதி. இரவெல்லாம் கண்விழித்து அயர்ந்து, விடியுமுன் புதுவை போய்ச் சேர்ந்தார். அங்கு ஸ்டேஷனில் பொழுது நன்றாக விடியும் வரை இருந்துவிட்டு காலையில் குப்புசாமி ஐயங்கார் வீடு போய்ச்சேர்ந்தார். அங்கு அவரால் வரவேற்கப்பட்டு போஜனத்திற்காகக் கூடக் கவலைப்படாமல், தன் அலுப்புதீர அன்று பகல் பொழுதெல்லாம் படுத்துறங்கினார். இப்படி இரண்டு நாட்கள் கழிந்தன.

            இதற்குள் சென்னை போலீசுக்கு செய்தி எட்டிவிட்டது. அதைப் பெரிதாகப் பாராட்டாதவர்கள் போல வெளிக்கு அவர்கள் காட்டிக் கொண்டாலும், தக்க வேவுகாரர்களை அங்கு அனுப்பிவிட்டார்கள். இதற்கு முன் அரசியல் விஷயமாக அங்கு பலமுறை வேவுகாரர்கள் அனுப்பப்பட்டதும் உண்டு. பர்மிய அரசராகிய தீபா என்பவரைச் சிறைப்படுத்தி அந்நாட்டைக் கைவசப் படுத்திக் கொண்டபோது, அதன் அரசுரிமை கொண்ட மிங்கூன் என்னும் ஓர் அரசிளங்குமரர் கல்கத்தாவிலிருந்து சந்தனநகர் (சந்திரநாகூர்) தப்பியோடி அங்கிருந்து புதுவை வந்தார். அவரை வேவு பார்க்க ஒருசில போலீஸ் ஆட்கள் அனுப்பப்பட்டார்கள். அவ்வரசிளங்குமாரர் இந்தோசைனா தலைநகராகிய சைகோனுக்குத் தப்பியோடியதும், அவ்வேவுகாரர்கள் எடுபட்டுப் போனார்கள். இம்முறை பாரதியாருக்காக அனுப்பப்பட்ட வேவுகாரர்கள் படை அன்றுமுதல் அங்கு நன்றாக வேரூன்ற ஆரம்பித்துவிட்டது. அத்தினத்தை அப்படையின் அங்குரார்ப்பண தினமாகக் கொள்ளலாம். அன்று சென்னை வேவு போலீசுக்கும் புதுவைக்கும் ஏற்பட்ட நெருங்கிய சம்பந்தம் வெள்ளை ஆட்சி நீங்கும் வரை நீடித்தது. இடையில் லட்சக்கணக்கான பெரும் பணச் செலவோடு மகத்தான ஒரு வேவு படை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

            ஒரு புதிய இடத்தில் சில வேவுகாரர்களை நியமித்துவிட்டால், அவர்கள் மேலதிகாரிகளுக்கு ஏதாவது வேலை செய்ததாகக் காட்ட வேண்டியிருக்கிறது. அதனால் அவர்கள் சும்மா இருப்பதில்லை. சரியான வழிகளில் தேடிப்பார்த்து ஒரு குற்றமும் இல்லை என்று ஏற்பட்டாலும், சில குறுக்கு வழிகளில் சென்று குற்றங்கள் இருப்பதாக எண்ணி அவற்றைக் கண்டுபிடிக்க முயல்வார்கள். பாரதியார் அங்கு ஆங்கில சர்க்காருக்கு விரோதமாக ஏதாவது சதி செய்கிறாரா என்பதைக் கவனிப்பது அவர்கள் கடமை. அதைச் செய்வதைவிட்டு, அங்கு அவர், நிம்மதியாக வாழாமலிருப்பதற்கு வேண்டிய இடைஞ்சல்களை உண்டுபண்ண முயன்றார்கள். அவருக்கு இடம் கொடுத்த ஐயங்காரை அழைத்து பயமுறுத்தும்படி பிரெஞ்சு போலீசைத் தூண்டினார்கள்.

            குப்புசாமி ஐயங்கார் சென்னை அரசியல் விஷயங்களில் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவரன்று. அவர் ஒரு சிறு வியாபாரி. ரஸவாதத்தில் நம்பிக்கை வைத்து அதில் அதிக பணம் செலவழித்து ஏழையானவர். சங்கீதத்தில் ஞானமுண்டு. நன்றாகப் பாடுவார். வைதீக ஆசாரங்களில் பற்றுடையவர். ஆங்கிலத்திலும், ப்ரெஞ்சிலும் சிறிது பயிற்சியுண்டு. சற்று பயந்த பேர்வழி. போலீஸ் என்றால் கிட்டக்கூட போகமாட்டார். இப்பேர்பட்டவரை போலீஸ் தலைவன் அழைத்து விசாரித்தால் பயந்து போகாமல் வேறென்ன செய்வார்?

            பாரதியை உமக்கு முன்னே தெரியுமா? அவரை நீர் ஏன் வீட்டில் வைத்திருக்கிறீர்?என்று கேப்டன் கேட்டதற்கு, தமக்கு அவரைத் தெரியாதென்றும் தமது நண்பரொருவர் தம்மிடம் அனுப்பியதால் அவருக்கு இடம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

            பாரதி இங்கிலீஷ் சர்க்காருக்கு விரோதமாகப் பிரசாரம் செய்துவிட்டு இங்கு வந்து தங்கியிருக்கிறார், நீர் அவரை வீட்டில் வைத்திருக்கலாகாது. அதனால் உமக்குக் கஷ்டம் நேரக்கூடும். அவரை வெளியே அனுப்பிவிடும்என்று அரைவாசி புத்திமதியாகவும், அரைவாசி மிரட்டலாகவும் காப்டன் சொன்னார்.

            ஐயங்காருக்கு தர்மசங்கடமாய் விட்டது. வீட்டுக்கு வந்தவரை எப்படி வெளியே போகச் சொல்வது? தம்மிடம் அவரை அனுப்பிய நண்பர் என்ன நினைப்பார்? என்று ஆலோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார். அங்கு பாரதியாரிடம், ஐயா, போலீஸ்காரனோ என்னை பயமுறுத்துகிறான். எனக்கு உங்கள் விஷயம் ஒன்றும் தெரியாது. இன்னது செய்வதென்று எனக்குப் புரியவில்லை. ஆகையால் நீங்கள் வேறிடம் பார்த்துக் கொள்வது நலம்என்று ஐயங்கார் சொல்ல ஆரம்பித்தார்.

            விஷயங்களில் ஏதாவது கோணல் ஏற்பட்டால் பாரதியார் முதலில் அதைப்பற்றி மிதமிஞ்சி கலவரப்படுவது வழக்கம். சிறிது நேரம் கழிந்ததும் அதைப்பற்றி தீர ஆலோசித்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, தைரியமாயிருப்பார். ஆனால் அந்தச் சிறிது நேரத்திற்குள் அவர் படும் மனவேதனை சொல்லி முடியாது. நாட்டின் விடுதலைக்காகப் போராட முனைந்தால், வெளிநாட்டிலுமா நிற்க நிழலில்லாமற் போகவேண்டும் என்ற ஆத்திரம் அவர் மனதைப் புண்படுத்திற்று. ஐயங்காருக்கு பதில் சொல்ல அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. இனும் இரண்டு நாட்கள் பொறும். ஏதாவது தனியாக ஏற்பாடு செய்து கொண்டு விடுகிறேன்என்று அப்பொழுது சொல்லிவிட்டார்.

            இரண்டு நாட்களும் கழிந்தன. அவ்விரண்டு நாட்களும் அவருக்கு இரண்டு யுகமாயிருந்தது. என்ன ஆலோசித்தும் அவருக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. ஊர் புதிது; ஒரு நண்பருமில்லை; தெரிந்த மனிதனொருவனும் கிடையாது; இந்த நிலையில் ஐயங்கார் தம்மிடம் வரவரக் கடுமையாக நடந்து கொள்வதை உணர்ந்தார். பாரதியாருக்குத் தம் வாழ்க்கையில் என்றும் காணாத ஒரு புதிய அனுபவமாக இருந்தது இது. தம்மை வேண்டாதவரோடு அவர் அரை நொடிகூட சகவாசம் செய்யமாட்டார். எவ்வளவோ பெரிய ஜமீன்தார்களைக்கூட அலட்சியம் செய்திருக்கிறார். அவருக்குக் கோபம் இப்பொழுது பொங்கி எழுந்தாலும், தம்மை முதலில் வரவேற்று இடம் தந்தவரை எப்படிக் கடிந்து கொள்வது? அவரோ பயந்த பேர்வழி; போலீஸ் வற்புறுத்தலுக்கு எதிர்த்து பதில் சொல்லத் திறமையற்றவர் என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டு, இன்னும் ஆழ்ந்து, ஏதாவது வழியுண்டா என்று ஆலோசிக்கலானார்.

            இங்கிலீஷ் போலீஸ் சும்மா இருக்கவில்லை. மறுபடி பிரெஞ்சு போலீசைத் தூண்டினார்கள். ஐயங்கார் மறுபடி வரவழைக்கப்பட்டார். பின்னும் கடினமாக மிரட்டப்பட்டு வீடு திரும்பினார். ஐயங்கார் திரும்பியபோது வாய் திறந்து ஒன்றும் சொல்லாவிடினும், முகம் அவர் மனநிலையைக் காட்டிவிட்டது. பாரதியாருக்கு நெஞ்சு துடிதுடித்தது. தமிழ் நாட்டில் வீர சுதந்திர எண்ணம் பரப்பிய தமக்கு, புதுவையில் அவ்வுணர்ச்சி கொண்ட ஒருவனும் கண்ணில் படவில்லையே என்று தவிக்கலானார். தாம் சென்னையை விட்டு வரும்போது இந்தியாபத்திரிகைக்கு புதுவையில் சந்தாதாரராக இருந்தவர்கள் பெயரைக் குறித்துக் கொள்ளாமற் போனோமே என வருந்தினார். அவர்களில் ஒருவரிடம் சென்றிருந்தால் இவ்வளவு எளிதில் தம்மை கைவிடமாட்டார்கள் என்று தோன்றிற்று.

            இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, தெய்வம் ஏதாவது வழிகாட்டும் என்று அன்றிரவு பெருங் கவலையோடு வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அப்போது திண்ணைக்குப் பக்கத்திலிருந்த குறடு வழியாகச் சென்ற ஸ்ரீகுவளை கிருஷ்ணமாச்சாரியார் அவரைக் கண்டு பேசினார். பாரதியைக் கவிந்திருந்த இருள் நீங்கிற்று; ஒளி உதயமாயிற்று. கவலை தீரும் வழி தெரிந்தது.

            ஸ்ரீகுவளை கிருஷ்ணமாச்சாரியார் பாரதியை சுந்தரேசய்யரிடம் அழைத்துச் சென்றார். சுந்தரேசய்யர் மூலம் வேறொரு வீட்டில் அன்றிரவே பாரதியார் தங்க ஏற்பாடாயிற்று.

            இந்த சமயத்தில், சில மாதங்கள் புதுச்சேரியில் சென்று கழிக்கவேண்டுமென்று நானும் அங்கு போய் பாரதியாரோடு தங்கினேன். சிறுவயதில் அங்கு படித்தவனாகையால் எனக்கு அவ்வூரில் பலரைத் தெரியும். என்ன கஷ்டம் வந்தாலும் இனி சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் பாரதியாருக்குப் பிறந்துவிட்டது. சில நாட்களுக்கு முன் அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து இனிமையாய்க் காலம் கழிக்க சில சந்தர்ப்பங்களும் வந்து கூடின.

            இச்சமயத்தில் சென்னையில் ராஜத்துவேஷ வழக்குக்காக ரிமாண்டிலிருந்த ஸ்ரீ ஜி.சுப்பிரமணியருக்காக சில பெரிய மனுஷர்கள் குறுக்கிட்டு சர்க்காரோடு மன்றாடி, அவருக்கு மன்னிப்பும், விடுதலையும் பெற்றுக் கொடுத்தனர். அதே மாதிரி பாரதியாரும் ஒப்புக்கொண்டால் பலரைக் கொண்டு முயற்சி செய்வதென்று தீர்மானித்துக் கொண்டு பாரதியின் மாமனார் செல்லப்பையரும், மைத்துனர் அப்பாதுரையும் வந்திருந்தார்கள். பாரதியார் சிறிதும் இடம் கொடுக்கவில்லை.

            இங்கு நான் என்ன கஷ்டப்படுகிறேன்? அங்கு வந்து நான் என்ன சுகப்படப் போகிறேன்? அங்கேயானால் எந்த வேளையில் போலீஸ் என்ன செய்யுமோ என்று திகில் பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இங்கு இந்த அழகிய பங்களாவில் நான் சுகமாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையோ?என்று கேட்டார்.

            பாரதியார் புதுவை சென்ற ஒரு மாதத்திற்குள் இந்தியா பத்திரிகையின் சொந்தக்காரரான ஸ்ரீ ந.திருமலாச்சாரியாரும் அங்கு வந்து சேர்ந்தார்.  அவர் தமது பத்திரிகையை சென்னையிலிருந்து புதுவைக்கே கொண்டு வந்து விடுவதென்ற தீர்மானத்தோடு வந்தார். சென்னையிலிருந்தால் அதற்கு நித்தியகண்டமாயிருக்கும். இங்கு பாரதியாரும் இருப்பதனால் அது ஒழுங்காக நடக்கக் கூடும் என்று எண்ணினார். பாரதியாரும் அதை ஆமோதித்தார்.

            ஆனால், இடையில் எங்களுக்குள் ஒரு சிறு யோசனை நடந்து கொண்டிருந்தது. திருமலாச்சாரியாரும் அதில் கலந்து கொண்டார். மூவருமாக ஐரோப்பா சென்று சுற்றுப்பிரயாணம் செய்து வருவது என்றும், அதற்கு முன் இந்தியாபத்திரிகையைப் புதுவையில் நடத்த தக்கபடி ஏற்பாடு செய்துவிட்டுப் போவதென்றும் பேசிக்கொண்டோம்.

            சென்னையில் வழக்கு நடந்தாலும் இந்தியாபத்திரிகை தப்பாமல் வெளிவந்து கொண்டேயிருந்தது. அதை சரிவர நடத்தி மேற்பார்வை பார்த்து வந்தார் ஸ்ரீ எம்.பி.டி.ஆச்சார்யா என்பவர். அவர் திருமலாச்சாரியாரின் சிறிய தகப்பனார் மகன். அவரோடு திருமலாச்சாரியார் தம்பி போல் பழகி வந்தார். அதனால் அவரைக்கொண்டே பத்திரிகையைப் புதுவையில் நடத்தச் செய்வது என்று திருமலாச்சாரியார் கருதினார். அதற்கேற்ற ஏற்பாடுகளைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கையில், ஸ்ரீ எம்.பி.டி. ஆச்சார்யாவே திடுமென்று அங்கு வந்து சேர்ந்தார்.

            பத்திரிகைக்கு மறுபடி ஏதாவது ஆபத்து வந்ததோ என்று நாங்கள் பரபரப்புடன் அவரைக் கேட்டோம். அப்படிக்கொன்றுமில்லை என்றும், தாம் இங்கிலாந்து செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறபடியால் தமால் பத்திரிகையைப் பார்த்துக் கொள்ள முடியாதென்றும் கூறினார். தாம் கொழும்பு வழியாகச் செல்ல உத்தேசித்ததனால் நடுவில் புதுவையில் எங்களோடு சில நாட்கள் தங்கியிருந்து போவதென்று தாம் வந்ததாகவும் கூறினார்.

            இவர் தனது வெளிநாட்டு யாத்திரையைப்பற்றி திருமலாச்சாரியாரோடு சில மாதங்களுக்கு முந்தியே பேசியிருந்தார். அப்போது அவர் வேண்டாமென்று தடுத்ததனால் நின்று போயிற்று. இப்போது என்ன சொல்லியும் கேட்கவில்லை. தம் தாய் தந்தையரோடு கலந்து ம்டிவு செய்துகொண்டு வந்திருப்பதாகவும், இனி அதை நிறுத்த முடியாதென்றும் அவர் கூறினார்.

            இதனால் எங்கள் யோசனைகள் எல்லாம் தடுமாறிப் போயின. பாரதியாருக்கு ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்துவர வேண்டும் என்று ஆவல் வெகு அதிகமாயிருந்தது. அச்சமயம் அவரது பந்துவும் அவருக்கு அவ்வப்போது பண உதவி செய்து வந்தவருமான ஸ்ரீ லக்ஷ்மணய்யர் என்பவர் அங்கு வந்திருந்தார். அவரிடமிருந்து சிறு உதவியும், அவர் மூலம் தமது வெளி நண்பர்களிடமிருந்து சிறு உதவியும் பெற்று, போதும் போதாதற்கு, திருமலாச்சாரியாரும் நானும் பார்த்துக்கொள்வதென்று முடிவு செய்திருந்தோம். இதற்கெல்லாம் சிறிது காலம் வேண்டியிருந்தது. அவர் மனைவி செல்லம்மாள் கர்ப்பாயிருந்தது, இரண்டாவது பெண் சகுந்தலா பிறக்கும் தருணமாயிருந்தபடியால் அதுவரை வெளிநாடு செல்வதை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாபத்திரிகையை புதுவைக்குக் கொண்டு வருவதைப் பற்றி தீவிரமாய் எல்லா ஏற்பாடுகளும் செய்யத் தொடங்கினோம்.

            ஸ்ரீ எம்.பி.டி.ஆசார்யா அதைவிட்டு வந்தபடியால் அதற்குச் செய்ய வேண்டியிருந்ததை முதலில் கவனிக்க வேண்டியிருந்தது. பிரெஞ்சு சட்டப்படி புதுவையில் ஒரு பத்திரிகை நடக்க வேண்டுமானால் அதற்குப் பொறுப்பாளியாக ப்ரெஞ்சு இந்தியக் குடி ஒருவர் இருந்தாக வேண்டும். வில்வநல்லூரில் வசித்துவந்த எனது பழைய நண்பரான ஸ்ரீ எஸ்.லக்ஷ்மிநாராயண ஐயர் அப்பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டார்.

            திருமலாச்சாரியாரும் புதுவையில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திவிட்டு, அச்சு சாமான்களை அங்கு அனுப்ப சென்னை வந்து சேர்ந்தார். அவை அங்கு போய்ச் சேர்ந்ததும் ஸ்ரீசங்கரநாராயணய்யர் என்னும் நண்பரைப் புதுவைக்கு அனுப்பி பாரதியோடு கலந்துகொண்டு இந்தியாபத்திரிகையைக் கூடிய சீக்கிரம் வெளியிடும்படி திருமலாச்சாரியார் சொன்னார். சில நாட்களுக்குள் தாமும் அங்கு சென்று பத்திரிகையை வெளியிடலானார்.

            இந்தியாஅங்கிருந்து வெளிவரத் தொடங்கியதிலிருந்து பாரதியாருக்கு ஒருவித மன நிம்மதி ஏற்படலாயிற்று. பிற்காலங்களில் அவர் இயற்றிய பெருங்காவியங்களுக்கு அம்மனவமைதி இன்றியமையாததாக இருந்தது. பாரதியார் சென்னையில் இருந்திருந்தால் கூட்டங் கூட்டுவதிலும் மேடைகள் மேல் உபந்நியாசங்கள் செய்வதிலுமே காலம் கழிந்திருக்கும். இப்பொழுது போல ஆழ்ந்த உள்ளுணர்வுகளை இனிய பாடல்கள் மூலம் வெளியிட தமக்கு அவகாசம் கிடைத்திராது என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார்.

           

           

           

 

 

           

 

No comments: