அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்று வழுவூர். இது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் மார்க்கத்தில் சுமார் ஐந்து கி.மீ. தூரத்திலும், சாலையிலிருந்து மேற்கில் ஒரு கி.மீ. தூரத்திலும் இருக்கிறது. மிக பழமையான ஆலயம். ஆலயத்தின் முன்புறம் ஒரு திருக்குளம். இந்த ஊரின் சிறப்பு இங்கு கோயில் கொண்டிருப்பவர் கஜசம்ஹாரமூர்த்தி, கீர்த்திவாசன் என்ற பெயருடைய சிவபெருமான். அம்பாள் பெயர் இளங்கிளைநாயகி. அட்ட வீரட்டானம் என்பதிலிருந்தே, சிவன் தீமைகளைத் தீயவர்களைச் சம்ஹாரம் செய்த ஊர் என்பது தெரிகிறது. அதன் படி இங்கு அவர் கஜமுகாசுரனை வதம் செய்ததால் இது ஒரு வீரட்டானத் தலம்.
அட்டவீரட்டானத்
தலங்களாவன:--
1. திருக்கண்டியூர்
– இங்கு சிவபெருமான் பிரம்மனுடைய தலையைக் கொய்து அவர் செறுக்கை அழித்த தலம்.
2. திருக்கோவலூர்
– அந்தகாசுரனை வதம் செய்த இடம்.
3. திருவதிகை
– திரிபுரத்தை எரித்த இடம்.
4. திருப்பறியலூர்
– தட்சன் தலை யைத் தடிந்த தலம்.
5. திருவிற்குடி
– சலந்தராசுரனை வதைத்தத் தலம்.
6. திருவழுவூர்
– கஜமுகாசுரனைக் கொன்று அவன் தோலை மேலே போர்த்திக் கொண்ட தலம்.
7. திருக்குறுக்கை
– காமனைக் கடிந்தத் தலம்
8. திருக்கடவூர்
– மார்க்கண்டேயன் உயிரைக் காக்கக் காலனை உதைத்த இடம்.
இந்த வழுவூர்
ஒருகாலத்தில் தாருக வனம் எனப் பெயர் பெற்றிருந்தது.
தாருக வனத்தில் தவமிருந்த முனிவர்கள்,
தங்கள் தவ வலிமையால் உலகத்தைப் படைக்கவும், காக்கவும், அழிக்கவுமான தகுதிகளைப் பெற்றிருந்த
காரணத்தால், அவர்களுக்குத் தங்கள் தவ வலிமையின் மேல் இருந்த நம்பிக்கையால், தாங்களே
இறைவனுக்கும் மேலானவர்கள் என்ற அகந்தை உருவாகிவிட்டது. அவர்களுடைய அகந்தையை அழிக்க
சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் தீர்மானித்தார்கள்.
சிவபெருமான்
ஒரு நாள் பிக்ஷாடனராக, தங்க நிற மேனியுடன், மேலே சடாமுடி காற்றில் அசைய, கையில் கபாலத்தை
பிக்ஷைப் பாத்திரமாக ஏந்திக் கொண்டு தன் அழகிய மேனி தெரியும் வண்ணம் வந்து கொண்டிருந்தார்.
வேள்வி புரிந்து கொண்டிருந்த ரிஷிகள் தங்கள் பத்தினி மார்களை அழைத்தபோது அவர்கள் அங்கு
இல்லாமல் போகவே, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதைப் பார்ப்பதற்காக வெளியில் வந்து பார்த்தால்,
அங்கு காலை உதயசூரியனைப் போல தங்க நிறம் ஜ்வலிக்க, பொன்னிற மேனி தகதகக்க, ஒரு பிட்சாடனன்
நிர்வாணமாகத் தன் அழகிய உடலமைப்பு வெளியில் தெரிய கையில் ஓட்டோடு சென்று கொண்டிருப்பதையும்,
அவருடைய அழகில் மயங்கி ரிஷி பத்தினிகள் அவர் பின்னால் வைத்த கண் வாங்காமல் கூட்டமாகச்
சென்று கொண்டிருப்பதையும், அவர்கள் மனம் அந்த பிக்ஷாடனர் மீது படிந்து விட்ட படியால்
அவர்கள் தங்கள் அழைப்பைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை என்று கோபம் பொங்கி எழ ஆசிரமம்
திரும்பினர்.
அப்போது
மகாவிஷ்ணு ஒரு மோகினி வடிவம் எடுத்து, மலர்க்கொடி போன்ற அவள் உடலில் இடை உண்டோ இல்லையோ
எனும்படி ஆடி, அசைந்து மலர்க்கொடியொன்று வீதியில் வருவதைப் போல வருவதை அந்த தாருக வனத்து
முனிவர்கள் கண்டார்கள். அவ்வளவுதான், அத்தனை முனிவர்களின் கவனமும் அந்த பேரழகியின்
பால் ஈர்க்கப்பட்டு, இரும்பைச் சுண்டி யிழுக்கும் காந்தம் போல அந்த பெண்மணியின் ஈர்ப்பில்
அவளைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர்.
அந்த
மோஹினி எல்லா ரிஷிகளையும் தங்கள் வளர்ப்புப் பிராணிகளைப் போல அழைத்துச் சென்று உட்காரவைத்து
அவர்களுக்கு உணவளித்து உபசரிக்கிறாள்.
இறைவனிலும்
தாங்களே வலியவர்கள் என்ற அகந்தை கொண்ட தாருக வனத்து முனிவர்களின் அகந்தை ஒரு மோகினியின்
அழகு கொள்ளை கொண்டு போயிற்று. அவளை, அந்த மோகினியைத் தவிர அவர்கள் சிந்தனை வேறு எதிலும்
செல்லவில்லை. தாங்கள் அழிக்க நினைத்த சிவன் மனதில் தோன்றவில்லை, வாசலில் போன ஒரு பிட்சாடனரின்
பின்னால் ரிஷி பத்தினிகள் வரிசைகட்டிப் போனது நினைவில் இல்லை, தங்கள் எதிரில் தங்கத்தால்
உருக்குச் செய்த பாவை போல இருக்கும் இந்த மோகினியின் அழகே பிரதானமாக இருந்தது.
அவள்
சென்று மறைந்ததும் சுயநிலை எய்திய ரிஷிகளுக்கு அப்போதுதான் அந்த பிட்சாடனர் பின்னால்
சென்ற தங்கள் பத்தினிகளின் நினைவு வந்து ஓடிப்போய் அவர்களைத் தங்கள் பக்கம் அழைத்துக்
கொண்டு அந்த பிட்சாடனருக்கு ஏதேனும் தீங்கு செய்ய எண்ணி யாகம் வளர்த்தனர். அந்த யாக
குண்டத்திலிருந்து சிவனை அழிக்கப் பல ஆயுதங்களை வேண்டிப் பெற்றனர். முதலில் யாக குண்டத்திலிருந்து
அக்னி வெளிவந்தது. சிவனை அழிக்க அவர்கள் அந்த அக்னியை ஏவி விட்டனர். அவரோ அந்த அக்னியை
லாவகமாகத் தன் ஒரு கையில் எடுத்து வைத்துக் கொண்டார். தொடர்ந்து ஒரு கொடும் புலியை
யாக குண்டத்தில் வரவழைத்து சிவனைக் கொல்ல அனுப்பி வைத்தனர். அந்த புலியைத் தாக்கி அதன்
தோலை உரித்துத் தன் இடையில் உடுத்திக் கொண்டார் இறைவன். அடுத்து ஒரு மான் தோன்றியது
அதை ஏவிவிட்டதும், அது சிவபெருமான் அருகில் சென்று மிக அந்நியோன்னியமாக அவர் அருகில்
நின்று கொண்டது. பின்னர் ஒரு மழுவை வரவழைத்து அதை ஏவிவிட, அந்த மழுவோ, சிவனின் கரங்களில்
போய் அமர்ந்து கொண்டது. பயங்கரமான விஷப் பாம்பு ஒன்றை வரவழைத்து அதை ஏவிவிட, அதை சிவன்
பிடித்துத் தன் இடையில் கட்டிக் கொண்டு விட்டார். இவைகளால் கொல்ல முடியாத சிவனைக் கொல்ல
முயலகன் எனும் உலகின் தீமைகள் எல்லாம் உள்ளடக்கிய ஒரு உருவத்தை அனுப்ப, இறைவன் அந்த
முயலகனைத் தன் காலடியில் வைத்து ஒரு காலால் அழுத்திக் கொண்டு விட்டார்.
இப்படி
அவர்கள் ஏவிய அனைத்தும் சிவனைக் கொல்லாதது கண்டு இறுதி முயற்சியாக ஒரு யானையை வரவழைத்தனர்.
யானையாக வந்தவன் ஓர் அசுரன். அவன் மிகுந்த கோபத்துடன் சென்று சிவனைத் தாக்க முயல, சிவன்
அயர்ந்திருந்த நேரத்தில் அந்த கஜமுகாசுரன் இறைவனைத் தன் துதிக்கையால் எடுத்து வாயிலிட்டு
விழுங்கிவிட்டான்.
அவ்வளவுதான்,
அக்னிப் பிழம்பான பரமேஸ்வரனை விழுங்கிய யானை என்ன பாடு படும், அத்தனை பாடுகளையும் அது
பட்டுவிட்டது. வயிற்றில் எரிச்சல், எரிமலை போல பொங்கும் எரிச்சல் தாங்க முடியாமல் கஜமுகாசுரன்
ஓலமிட்டான். எதைச் செய்தால் தன் வயிற்றின் எரிச்சல் போகும் என்று அங்கிருந்த திருக்குளத்தில்
வீழ்ந்து மூழ்கினான். நீரின் குளிர்ச்சி அவனைக் குளிர்விப்பதற்கு பதிலாக அவன் எரிச்சலை
அதிகமாக்க யானை பிளிறியது.
கஜமுகாசுரன் சிவனை விழுங்கிய அடுத்த கணம் ஒளியிழந்த
உலகம் இருள் சூழ்ந்து விட்டது. பார்வதி தேவி தன் மக்கள் விநாயகன், குழந்தை இளம் முருகன்
ஆகியோருடன் விளையாடிக் கொண்டிருந்தவர், உலகம் இப்படி இருண்டு போக என்ன காரணம். தன்
கணவருக்கு என்னவாயிற்று என்று அதிர்ந்து திடுக்கிட்டு குழந்தை முருகனைத் தன் இடுப்பில்
சுமந்து கொண்டு, ஒரு கை விரலால் விநாயகன் கைகளைப் பிடித்துக் கொள்ளச் செல்லிவிட்டு
வேகமாகக் கணவனைத் தேடி வருகிறாள். எங்கும் ஒரே இருட்டு. அப்போதுதான் கஜமுகாசுரன் திருக்குளத்தில்
விழுந்து தன் உடல் எரிச்சலைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்கிறான். முடியவில்லை. அவன்
பிளிரல் மூவேழு உலகங்களுக்கும் கேட்கிறது. தேவர்கள் வந்து என்ன நேர்ந்தது என்று பார்க்கிறார்கள்.
உலகமோ இருண்டு கிடக்கிறது.
அப்போது யானையின்
வயிற்றில் இருந்த சிவபெருமான் அந்த கஜமுகாசுரனின் தலைமீது காலையூன்றி அவன் முதுகைக்
கிழித்து கொண்டு வெளிவருகிறார். அவர் யானையின் முதுகு வழியாக கிழித்துக் கொண்டு வரும்
அதே நேரத்தில் உலகமெங்கும் வெளிச்சம் பரவுகிறது. அந்த வெளிச்சத்தில் பார்வதி தேவியின்
இடுப்பில் இருக்கும் முருகப் பெருமான் குழந்தை வடிவில், முதலில் தன் தந்தை யானையைக்
கிழித்துக் கொண்டு வருவதைப் பார்த்து விட்டு “அதோ அப்பா!” என்கிறான். உடனே பார்வதி
கணபதியையும் அழைத்துக் கொண்டு விரந்தோடி குளத்திலிருந்து எழும் தன் கணவரைப் பார்க்கிறார். (இந்தக் காட்சியை விளக்கும் ஐம்பொன் சிலையொன்று
அந்தக் காலத்தில் வழுவூரில் இருந்தது பார்த்திருக்கிறேன். இடுப்பில் முருகன் ஒரு விரல்
நீட்டி அதோ அப்பா என்பது போல, மறு கையில் அம்மையின் ஒரு விரலைப் பிடித்துக் கொண்டு
நடந்து வரும் கணபதி. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது போய் கேட்டால், அப்படியொரு
சிலை அங்கு இல்லை என்கிறார்கள். அது என்ன ஆனது? இறைவனுக்கே வெளிச்சம். அல்லது பொன்.மாணிக்கவேல்
வெளிச்சம் காட்டலாம்).
மகிழ்ச்சியுடன்
பார்வதியும் குழந்தைகளும் ஓடிச் சென்று சிவனைக் கட்டிக் கொள்கிறார்கள். தங்கள் கர்வம்
அழிந்த தாருக வனத்து ரிஷிகள் இறைவன் பாதங்களில் விழுந்து பணிந்து எழுகிறார்கள். ரிஷி
பத்தினிகளும் தங்கள் தவற்றை உணர்ந்து ரிஷிகளை வணங்கி அவருடன் சேர்கிறார்கள்.
இவற்றுக் கிடையே
சிவபெருமானும், மோகினியாக வந்த விஷ்ணுவும் எங்கோ சென்று விடுகிறார்கள். அழகனும், அழகியுமாக
இணைந்த இவர்களுக்குத்தான் ஐயப்பன் பிறந்ததாக வரலாறு கூறுகிறது.
எழுத்து ஆக்கம்:
தஞ்சை வெ.கோபாலன், (இயக்குனர், பாரதி
இயக்கம், தலைவர், ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி, திருவையாறு), 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி
சாலை, தஞ்சாவூர் 613007. # 9486741885
No comments:
Post a Comment