கர்நாடக
சங்கீதம் தமிழ்நாட்டில் பெரிதும் வளரவும், அதில் பல அரிய பாடல்களைப் பாடி இன்றளவும்
நிலைத்து நிற்கும்படி செய்தவர்களில் ‘கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்’ என்று போற்றப்படுபவர்கள் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், ஸ்ரீமுத்துசாமி
தீக்ஷிதர், ஸ்ரீசியாமா சாஸ்திரி ஆகியோராவர். இவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர்
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள். இவர் திருவாரூரில் பிறந்து பின் திருவையாற்றில் தன் வாணாளை
இராம பக்தி சாம்ராஜ்யத்தில் ராமபிரானை முன்னிருத்தி பல அரிய பாடல்களைப் புனைந்து பாடியவர்.
இவர் அப்போது தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களின் தயவையோ, அல்லது தான் பாடுவதை மக்கள்
கேட்டு மகிழவேண்டுமென்கிற நோக்கத்திலோ அல்லாமல், தன் மனதிற்குகந்த ஸ்ரீராமபிரானை மனதில்
வைத்து, அவரைப் பல்வகையாலும் பக்தி செய்து பாடிய பாடல்கள் மூலம் இசையுலகில் ஓர் உயர்ந்த
பீடத்தைப் பிடித்தவர். அவருடைய இஷ்ட தெய்வமான ராமபிரானை எப்படியெல்லாம் வழிபட்டு பாடியிருக்கிறார்
என்பதைப் பார்க்க வேண்டுமானால் அவருடைய ஏராளமான கீர்த்தங்களையும், அதில் பீரிட்டெழும்
பக்தி உணர்வையும் நாம் கேட்டும் பாடியும் உணர வேண்டும்.
ஸ்ரீதியாகராஜ
சுவாமிகள் 1767ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாள் திருவாரூரில், ராமபிரம்மம் என்பவருக்கு
மகனாகப் பிறந்தார். இவருடைய பாட்டனார் சம்ஸ்கிருத மொழியில் புலமை வாய்ந்த அரசவைப் புலவர்
கிரிராஜகவி என்பார். இவர் பிறந்தது திருவாரூர் என்றாலும் இவருடைய குடும்பம் இருந்த
திருவையாற்றில் தான் இவர் தன் வாணாளைக் கழித்தார். திருவையாற்றில் தஞ்சை மராத்திய மன்னர்களின்
அரசவைக் கலைஞராக இருந்த சொண்டி வெங்கடரமணைய்யா என்பவர் தன் மாணவர்களுக்கு இசைப் பயிற்சி
அளிப்பதை நன்கு கவனித்து அதனால் ஈர்க்கப்பட்டு தியாகராஜரின் தந்தையார் இவரையும் அவரிடம்
சீடராக சேர்த்து இசை பயில வைத்தார். குருநாதர் தன்னிடம் சீடனாக வந்து சேர்ந்த தியாகராஜர்
இயற்கையிலேயே இசையில் வல்லவராக இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். தன் சீடனுடைய
இசைத் திறமையை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் விதமாக பல இசைக் கலைஞர்கள் இருந்த அவையொன்றில்
இவரைப் பாடவைத்தார். அப்போது தியாகராஜர் பிலஹரி ராகத்தில் அமைந்த “தொரகுணா இடுவண்டி சேவா” எனும் கீர்த்தனையைப்
பாடி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தார்.
தியாகராஜருடைய
இசைத் திறமையைக் கேள்விப்பட்ட தஞ்சை மராத்திய மன்னர் சரபோஜி ராஜா, அவரைத் தன் அரசவைக்கு
வந்து பாடும்படி அழைத்தார். அரசரின் தூதர்கள் அவரை மன்னர் அவைக்கு வருமாறு திருவையாற்றுக்கு
வந்து அழைத்தபோது, அவருக்கு தன் இஷ்ட தெய்வமான இராமனைத் தனிமையில் அவன் புகழைப் பாடுவதைத்
தவிர, பெயர், புகழ் இவற்றை விரும்பி மன்னன் அவைக்குச் சென்று பாட விரும்பவில்லை. அரசரின்
அழைப்பை ஏற்க விரும்பாமல் தான் வழிபடும் இறைவன் ராமபிரானின் புகழைப் பாடுவதல்லாம்,
பணம் காசுக்காக அங்கு வந்து பாடுவது சாத்தியமில்லை என்பதை “நிதி
சால சுகமா” என்ற கிருதியைப் பாடித் தன் இயலாமையை அந்த தூதர்களுக்குத்
தெரிவித்தார். இதனால் சரபோஜி மன்னர் மனவருத்தம் அடைந்தாலும், தியாகராஜரின் பக்தியைப்
பாராட்டி அவருக்குத் துன்பம் இழைக்கவில்லை.
திருவையாற்றில்
வசித்து வந்த தியாகராஜ சுவாமிகள் அவ்வப்போது திருவையாற்றின் தெருக்களில் ராமநாம மகிமைகளைப்
பாடல்களாகப் பாடிக்கொண்டு உஞ்சிவிருத்தி எடுத்து வந்தார். அப்போது அவருடைய பெருமையை
உணர்ந்த துறவி ஒருவர், இவரை ‘ராம’ நாமத்தைப்
பலகோடி முறை உச்சாடனம் செய்யச் சொல்ல்ச் சென்றார். அதன்படி தியாகராஜர் ‘ராம’ நாமத்தை உச்சரித்து உன்னத பலன்களைப்
பெற்றார். அதன் மூலம் அவர் பெற்ற தெய்வானுபவத்தை “பாலகனகமய” எனும் கீர்த்தனையை அடாணா ராகத்தில் பாடி மகிழ்ந்தார்.
இவருக்கு
நல்ல திறமை வாய்ந்த சில சீடர்கள் அமைந்தனர். அவர்களெல்லாம் தில்லைத்தானம், உமையாள்புரம்,
வாலாஜாபேட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள். தியாகராஜ சுவாமிகளின் மகள் திருமணத்தின்
போது அவருடைய சீடர் வெங்கடரமண பாகவதர் ஒரு ராம பட்டாபிஷேகப் படத்தைப் பரிசளித்தார்.
அந்த சீடர் வாலாஜாபேட்டையிலிருந்து நடந்தே திருவையாற்றுக்கு வந்து இந்தப் படத்தை அளித்ததும்
தியாகராஜர் மனம் மகிழ்ந்து அந்த அயோத்தி ராமபிரானே தன் இல்லம் தேடி வந்திருப்பதாக மனம்
மகிழ்ந்து “நனுபாலிம்ப நடசிவச்சிதிவோ” என்ற
கீர்த்தனையைப் பாடி வணங்கினார்.
தியாகராஜரின்
தந்தையின் நண்பர் ஒரு மகான் இவரை அழைத்த போது காஞ்சிபுரம் சென்றார். மற்றொரு வள்ளல்
அவரது ஊரான கோவூருக்கு இவரை அழைத்து அவருடைய ஊரில் தங்க வைத்து மரியாதைகளைச் செய்து
அனுப்பினார். அங்கிருந்து அவர் பல்லக்கில் திருப்பதி சென்று அங்கு பெருமாளை தரிசிக்கச்
சென்றார். அங்கு இவர் சென்றபோது திருப்பதி பெருமாளுக்கு திரை போட்டு மறைத்திருந்தனர்.
அப்போது இவர் மனதில் இறைவனை அடைய முடியாமல் ஜீவாத்மாக்கள் தங்கள் ஆசாபாசங்கள் எனும்
திரையினால் மூடப்பட்டு மறைக்கிறதோ, அதைப் போல இங்கே இறைவனை தரிசிக்க முடியாமல் திரை
போடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி “தெரதீயகராதா” எனும் கீர்த்தனையைப் பாடினார். சிலர் சொல்வது போல், அவர் அந்த
சந்நிதியில் திரை அறுந்து விழும்படி பாடியதாகச் சொல்வது தவறு, தன்னுடைய மனதில் அஞ்ஞானம்
எனும் திரை இறைவன் ஒளியை தரிசிக்க விடாமல் தடுக்கிறது என்ற போருளில் தான் அந்தப் பாடலைப்
பாடியிருக்கிறாரே தவிர சந்நிதியில் திரை மறைப்பதைக் குறிப்பதாகக் கொள்ள முடியாது. ஒரு
பக்தன் இறைவன் சந்நிதியில் எதற்காகத் திரைபோட்டு மறைப்பார்கள் என்பது கூடவா தியாகராஜருக்குத்
தெரியாது. அவருக்குத் தெரியும், அவர் அந்தத் திரையை தன்னுடைய அஞ்ஞானமெனும் திரைக்கு
உதாரணமாகச் சொல்லித்தான் அந்த கீர்த்தனத்தைப் பாடியிருக்கிறார்.
அவர்
கோவூருக்குப் போயிருந்த பொது கோவூர் பஞ்சரத்னம் என்று ஐந்து அரிய கீர்த்தனைகளை இயற்றிப்
பாடினார். அவை பந்துவராளி ராகத்தில் “சம்போ மகாதேவா”, சஹானாவில் “ஈவசுதா நீவண்டி”, கரஹரப்பிரியாவில் “கோரி சேவிம்பராரே”, சங்கராபரண ராகத்தில் “சுந்தரேசருதி”, கல்யாணி ராகத்தில் “நம்மிவச்சின” எனும் கீர்த்தனைகள்.
இவருடைய
நூற்றுக்கணக்கான கீர்த்தனங்கள் அனைத்துமே பெரும்பாலும் தெலுங்கு மொழியிலும், ஒருசில
சம்ஸ்கிருதத்திலும் அமைந்துள்ளன. இவை அனைத்தையும் பல்வேறு அரிய ராகங்களில் பாடிய பெருமை
தியாகராஜருக்கு உண்டு. ஸ்ரீரங்கம் பஞ்சரத்னம் என்று ஐந்து பாடல்களையும், லால்குடி பஞ்சரத்னம்
என்று இன்னொரு ஐந்து பாடல்களையும் பாடிச் சிறப்பித்துள்ளார்.
திருவையாற்றில்
பாடியுள்ள பஞ்சரத்ன கீர்த்தனைகள் இப்போது அவருடைய ஆராதனை சமயத்தில் இசைக் கலைஞர்கள்
அனைவரும் ஒருங்கிணைந்து பாடி வருகிறார்கள். அவை ஐந்தும் கன ராகங்களாகக் கருதப்படும்
நாட்டை, ஆரபி, கெளளை, வராளி, ஸ்ரீ ராகம் ஆகியவற்றில் பாடப்பட்டவை. அவற்றின் சிறப்பையொட்டி
அவ்வைந்து கீர்த்தனைகளையும் பஞ்சரத்னம் என்ற பெயரில் அவர் ஆராதனையில் பாடி இறைவனைத்
துதிக்கிறார்கள்.
இவருடைய
கீர்த்தனைகளில் எல்லாம் மிக உயர்ந்த பக்தி நெறிகளையும், கருத்துக்களையும் வைத்துப்
பாடியிருக்கிறார். காலத்தால் அழியாத அரிய கீர்த்தனைகள் தியாகராஜரின் கீர்த்தனைகள்.
அவர் தெலுங்கு மொழி பேசுபவர் என்பதால் அவர் கீர்த்தனைகள் அனைத்துமே தெலுங்கில் அமைந்திருக்கின்றன.
அவருக்கு மரியாதை செலுத்த ஆராதனை நடத்துகின்றபோது அவர் எந்த மொழியில் பாடினாரோ, அந்தப்
பாடல்களை அதே மொழியில் பாடி ஆராதனை செய்வதென்பது வழக்கத்தில் உள்ளது.
இசைக்
கலையில் தலைசிறந்தவர்கள் மத்தியில் யார் பெரியவர் என்ற போட்டியும் கூட சில சமயங்களில்
தலைகாட்டும். அதைப் போல இவருடைய காலத்தில் பொப்பிலி எனும் தெலுங்கு பேசும் பகுதியிலிருந்து
ஒரு இசைக் கலைஞர் மிகுந்த படாடோபத்துடன் பல்லக்கில் வந்து தியாகராஜருடைய இசைத் திறமையைச்
சோதிக்க அவர் வீட்டு வாசலில் வந்து இறங்கினார். அப்போதுதான் காலையில் சீடர்களுக்குப்
பாட்டுச் சொல்லிக் கொடுத்துவிட்டு, காவிரியில் ஸ்நானம் செய்வதற்காக வாசலுக்கு வந்த
தியாகராஜர் தன் வீட்டின் வாசலில் பல்லக்கில் வந்து ஒருவர் இறங்குவதைக் கண்டு தயங்கி
நின்றார். வந்தவர் பட்டு, பீதாம்பரம் அணிந்து தங்க ஆபரணங்களை அணிந்து வாசனைத் திரவியங்களின்
வாசனை இவரை முந்திக் கொண்டு வர இவரைப் பார்த்து, “இங்கு தியாகராஜர்
என்பவர் யார்?” என்றார்.
தியாகராஜர்
மிகுந்த பணிவோடு “அடியேன் தான் தியாகராஜன்” என்று பதிலளித்தார்.
“நீர் ஏதோ கீர்த்தனைகள் எல்லாம் பாடுகிறீர்களாமே, நான் ஒரு இசை சாம்ராட்.
எல்லா மகானுபாவர்களும் என்னை ஒரு தலைசிறந்த இசைக் கலைஞராகப் போற்றுகிறார்கள். நீங்கள்
அப்படி என்ன பாடுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு போகவே வந்தேன்” என்றார்.
தியாகராஜர்
மிகுந்த அடக்கத்துடன் சொன்னார், “நான் ஏதோ எனக்குத் தெரிந்த
கீர்த்தனைகளை என் இராமனுக்காகப் பாடிக் கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்” என்றார்.
பிறகு
வந்த பாகவதரை தியாகராஜர் உள்ளே அழைத்துச் சென்று உட்காரச் சொன்னார், வந்தவர் தியாகராஜரைப்
பாடச் சொல்லிக் கேட்டார். முதலில் ஒரு கீர்த்தனையைப் பாடிவிட்டு, அடுத்ததாக, வந்தவர்
சொன்னாரல்லவா, எல்லா மகானுபாவர்களும் என்னைத்தான் சங்கீத சாம்ராட் என்று போற்றுகிறார்கள்
என்று அதை மனதில் வைத்து அந்த மகானுபாவர்களுக்கெல்லாம் என் நமஸ்காரங்கள் என்ற பொருள்படும்
“எந்தரோ மகானுபாவுலு” எனும் கீர்த்தனையைப்
பாடப்பாட, வந்தவர் தியாகராஜரின் உயரிய சங்கீதத் திறமையைக் கண்டு தன் உடலில் இருந்த
ஆடம்பரமான ஆபரணங்கள் ஒவ்வொன்றாக எடுத்து அவர் முன்பாக வைத்துவிட்டு, இறுதியாக அவர்
பாடி முடித்தவுடன் அவரைப் பணிந்து வணங்கிப் போற்றினாராம்.
இத்தனை
சிறப்புகளைக் கொண்ட தியாகராஜ சுவாமிகள் 1847ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 6ஆம் நாள் இவ்வுலக
வாழ்வை நீத்து அவர் காலமெல்லாம் வணங்கி வந்த ராமனின் பாதாரவிந்தங்களைச் சென்றடைந்தார்.
அவர் மறைந்த நாளில்தான் திருவையாற்றில் அவரது சமாதி அமைந்த இடத்தில் அவருக்கு இசை ஆராதனை
நடைபெற்று வருகிறது. இதனை நடத்துவதற்கென்று ஸ்ரீதியாகராஜ ஆராதனைக் கமிட்டி ஒன்று உருவாகி
பல காலமாக நடந்து வருகிறது. முன்பு கபிஸ்தலம் ஜி.கே.மூப்பனாரும், பிறகு அவர் இளவல்
ரங்கசாமி மூப்பனாரும், இப்போது ஜி.கே.வாசன் அவர்களும் தலைவராக இருந்து இவ்விழாவினை
சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறார். இம்மாதம் 11ஆம் நாள் இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா
நாயுடு அவர்கள் தொடங்கி வைக்கப்போகும் இந்த இசை ஆராதனை விழா 15-1-2020 புதன்கிழமை வரை
நடைபெறவிருக்கிறது. இவ்விழாவுக்காக பல ஊர்களில் இருந்தும் இசைப் பிரியர்கள் வந்து திருவையாற்றில்
குவிந்து காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள அவரது சமாதியருகில் அமைந்திருக்கும் பந்தலில்
இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்வார்கள். விழா நடைபெறும் ஐந்து நாட்களும் தியாகராஜர்
சமாதியைச் சுற்றிலும் பல ஸ்டால்களும் அமைத்து இசைத் தகடுகள், பூஜை சாமான்கள், புத்தகக்
கண்காட்சி ஆகியவை நடைபெறும். புத்தகக் கண்காட்சியை திருவையாறு பாரதி இயக்கம் பல ஆண்டுகளாக
நடத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இசை கேட்க வருபவர்கள் நல்ல புத்தகங்கள் வாங்கிச்
செல்வது இங்கு வழக்கமாக இருக்கிறது. இவ்வாண்டு தியாராஜ ஆராதனையின் 173ஆம் ஆண்டு விழா
கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
கட்டுரை ஆக்கம்:
தஞ்சை
வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக்
கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.
#9486741885 email:
www.privarsh@gmail.com
No comments:
Post a Comment