ஸ்ரீமான் லஜ்பத்ராயரை மாண்டலே கோட்டைக்குள் அடைத்து வைக்கப் போவதாக ஆரம்பத்திலே அங்குக் கொண்டு சென்றார்கள். இப்பொழுது அங்கேயிருந்து கடத்திச் சென்றுவிட்டார்களென்று ஓர் தந்தி சொல்லுகிறது. அனேகமாக இவரை ஷான் நாடுகள் என்ற பிரதேசத்துக்கு அனுப்பியிருக்கலாமென்று தோன்றுகிறது. கீழே இந்த மஹானது சரித்திரத்தைச் சுருக்கமாகத் தருகின்றோம்.
இவருடைய
தந்தை ஓர் சர்க்கார் பாடசாலையில் உபாத்தியாயரா விருக்கிறார். மிகவும் விருத்தராய் விட்ட
போதிலும் சத்காரியங்களிலே மிகுந்த முயற்சி யுடையவரா யிருக்கின்றார்.
லாலா
லஜ்பத்ராய் 1865-ம் வருஷத்தில் பிறந்தார். எனவே இப்போழுது வயது 41 ஆகிறது. (பாரதி இதை எழுதிய காலத்தில்). குழந்தைப் பிராயத்திலே
லஜ்பத்ராய் பலக்குறைவு உடையவராகவும் ஏழையாகவு மிருந்தபோதிலும் நன்றாக வித்தியாப்பியாசம்
செய்து அரிய தேர்ச்சி கொண்டு விட்டார். 18-ம் வயதிலேயே வக்கீல் வேலை பார்க்கத் தொடங்கினார்.
1892
வரையில் ஹிஸார் என்ற ஊரிலே வக்கீல்களுக்குள் முதன்மைப் பட்டவராக விளங்கினார்.
1892-ம் வருஷத்துக் கப்பால் இவர் லாஹோர் சீப் கோர்ட்டிலே போய் வக்கீலாக அமர்ந்தார்.
சிறிது காலத்திற்குள்ளே மிகவும் பிரசித்தராய் விட்டனர். 1892-ம் வருஷம் முதல் 1902-ம்
வருஷம் வரை 10 வருஷங்களுக்குள் இவர் மிகுந்த கீர்த்தியும், செல்வமும் அடைந்தவராயினர்.
1902-க்கப்பால்
பொதுஜனங்கலுக் கனுகூலமான விஷயங்களிலே விசேஷ சிரத்தை கொள்ளத் தொடங்கினார். பாலியத்திலேயே
ஆரிய சமாஜத்திலே சேர்ந்து கொண்ட இவர் மேற்படி சமாஜத்தினபிவிர்த்தியின் பொருட்டாக எவ்வளவோ
முயற்சி செய்திருக்கின்றார். லாஹோரில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் தயானந்த ஆங்கிலோ வைதிக
காலேஜை உன்னத நிலைமைக்குக் கொண்டு வரும் பொருட்டு இவர் அளவற்ற பரிசிரமம் எடுத்திருக்கின்றார்.
பஞ்சக்
காலத்தில் இவர் இன்னும் சில ஆரிய சமாஜிகளின் கூடச் சேர்ந்துகொண்டு பஞ்சத்தால் பீடிக்கப்பட்டு
வருந்தும் ஜனங்களுக்குதவி செய்து அவர்களைக் கிருஸ்துவப் பாதிரிகளின் வலையினின்றும்
காப்பாற்றினார். இக்காரணம் பற்றியே பாதிரிகள் இன்று வரையும் கூட லாலா லஜ்பத்ராயரிடத்திலும்
ஆரிய சமாஜத்தாரிடத்திலும் கெட்ட எண்ணம் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.இவர்
பஞ்சாப் நாஷனல் பாங்க், பருத்தி நூல் யந்திரசாலைகள் என்பவற்றின் டைரக்டர்களிலே ஒருவர்.
மேலும் மேற்படி யந்திரசாலைகளிலே இவர் நெருங்கிய சம்பந்தங்கொண்டு பல விதங்களிலேயும்
உழைத்து வந்தார்.
இடாலி
தேசத்தைக் கொடுங்கோன்மையினின்றும் விடுவித்து ஸ்வராஜ்ய ஸ்தாபனம் செய்தவர்களாகிய மாஸினி
(Mazzini), காரிபால்டி (Garibaldi) என்ற மஹான்களின் சரித்திரத்தை லாலா லஜ்பத்ராய் உருது
(ஹிந்துஸ்தானி) பாஷையிலே எழுதியிருக்கின்றார். மகமதிய ராஜாக்கள் கொடுங்கோன்மையிலே விருப்பங்
கொண்ட காலத்தில் அவர்களுடைய ஹிம்ஸையினின்றும் நாட்டை விடுவித்து, மஹாராஷ்டிர ஸ்தாபனம்
செய்த சிவாஜி மஹாராஜாவின் திவ்விய சரித்திரத்தை ஹிந்துஸ்தானியிலே எழுதி *உபகரித்திருக்கின்றார். ஆரிய ஸமாஜத்தின்
ஸ்தாபனாச்சார்யராகிய மஹரிஷி தயாநந்த ஸரஸ்வதியின் சரித்திரமும் இவரால் எழுதப்பட்டிருக்கின்றன.
இதுவன்றியும் இங்கிலீஷ் பாஷையிலும் பஞ்சாபி பாஷையிலும் பல அரிய உபந்நியாசங்க ளெழுதிப்
பிரசித்தி பெற்றிருக்கின்றார். 1888-ம் வருஷத்திலேதான் அலஹாபாத்திலே நடந்த காங்கிரஸ்
சபைக்கு வந்து இவர் ராஜாங்க விசாரணைகளில் பஹிரங்கமாகத் தலையிடத் தொடங்கினார். அதுமுதலாக
ராஜநீதி சம்பந்தமான விஷயங்களிலே ஓயாது கவனம் செலுத்தி வருகின்றார்.
1905-ம்
வருஷத்திலே இவர் நாஷனல் காங்கிரஸின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகி, கோகலேயுடன்
இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே பாரத நாட்டின் ராஜநீதி விஷயங்களைப் பற்றிப் பலவிடங்களிலே
உபந்நியாசம் புரிந்தார். இதே சமயத்தில் அமெரிக்கா தேசத்துக் கல்வி முறைகளை நன்கு தேர்ந்து
வரவேண்டு மென்றெண்ணி அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இங்கிலாந்து,
அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து லாலா லஜ்பத்ராய் நமது நவீனக் கோட்பாடுகளை இந்நாட்டாருக்குப்
பிரசங்கிப்பாராயினர். ஸ்வதேசியம் அந்நிய வஸ்து பஹிஷ்காரம் என்ற தேசபக்தி முறைமைகளிலே
இவர் மிகுந்த அன்பு கொண்டவர். பாரத நாட்டின் தற்கால இழிந்த நிலைமையைக் கருதி மனம் பொங்கி
ஆற்றாமையுடன் இவர் எழுதியிருக்கும் சில வசனங்கள் இப்போழுது நமக்கு முன்பாக விருக்கின்றன.
அவ்வசனங்க ளெப்போதும் நமது நினைப்பினின்றும் நீங்க காட்டா. அளவிறந்த தேசபக்தி கொண்டவரா
யிருப்பினும் ஸ்வாதந்திரியமடைவதற்கு இவர் சாந்தமான உபாயங்களையே நாடி யிருந்தனர். ஸர்க்காருக்கு
விரோதமாக இவர் கலகம் எழுப்ப முயன்றார் என்பதை எவரும் நம்ப மாட்டார்கள்.
எனினும்
என்ன எண்ணம் கொண்டோ இவரைக் கவர்ன்மெண்டார் திப்பாந்தரத்துக்கு ஏற்றியனுப்பி விட்டார்கள்.
இவர் கடைசியாகச் சொல்லிய வாக்கியத்தை நாம் இந்தச் சமயத்தில் மறக்கலாகாது. “கடவுள் செய்வதெல்லாம்
நன்மையின் பொருட்டாகவே செய்கின்றார்.”
No comments:
Post a Comment