பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 30, 2020

ரமணி வனம்


           ரமணி வனம் புதுப்பட்டினமாகி, பிறகு நியு டவுனாக பெயரெடுத்து                           அது அருளானந்த நகர்/வ.உ.சி.நகர்/ராஜப்பா நகர் என பெயர் பெற்ற வரலாறு.
                                                 ------------------------------------
            மராத்திய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்டுவந்த காலத்தில் இவ்வூரைச் சுற்றிலும் ஏழு வனாந்திரப் பகுதிகள் இருந்தன, அவற்றில் ஒன்று ரமணி வனம் எனப்படும். பிறகு 1855இல் சரபோஜியின் புதல்வர் இரண்டாம் சிவாஜி ராஜா காலமான பிறகு பிரிட்டிஷார் மராட்டிய வம்சத்தாரிடமிருந்து தஞ்சை ராஜ்யத்தை எடுத்துக் கொண்ட காலத்தில் இந்தப் பகுதி புதுப்பட்டினம், நாஞ்சிக்கோட்டை எனும் பெயர்கள் கொண்ட கிராமங்களாக மாறின.  அப்போது தஞ்சையை நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்  பெரும்பாலும் புதுப்பட்டினம் என வழங்கியப் பகுதியில் தான் வாசம் செய்து வந்தார்கள். தஞ்சாவூரின் தென் புறத்தில் அமைந்திருந்த இந்தப் பகுதிகளை மக்கள் குடியிருப்புகளாக மாற்றி புதுப் பட்டினம் எனும் தமிழ்ப் பெயரை ஆங்கிலத்தில் நியு டவுன் என அழைக்கத் தொடங்கினார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தஞ்சாவூர் நகராட்சி அரசாங்கத்துக்கு உரிய நிலப் பகுதிகளையும், தென் இந்திய ரயில்வேக்குச் சொந்தமான நிலங்களையும் கையகப் படுத்தி, அங்கெல்லாம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் மூலம் மக்கள் குடியிருக்க, வீட்டு மனைகளை உருவாக்கினார்கள். அப்போதுதான் இப்போதைய ராஜப்பா நகர், வ.உ.சி.நகர் ஆகிய பகுதிகள் தஞ்சை நகராட்சியால் உருவாக்கப் பட்டன. முன்பு இந்தப் பகுதிகள்தான் நியு டவுன் என பெயரிட்டு அழைக்கப்பட்ட பகுதிகள். இங்கு பிரிக்கப்பட்ட வீட்டு மனைகள் பெரிதாக இருந்தன. அவற்றை விற்பனை செய்த நகராட்சி நிர்வாகம் அங்கு நிலம் வாங்குபவர்களை வீடுகளைக் கட்டிக் கொள்ள ஊக்கமளித்தது. தரிசு நிலமாகவும், சப்பாத்திக் காடு என்று அறியப்பட்ட, முட்செடிகள் நிறைந்து காணப்பட்ட இந்த பகுதிகள் குடியிருப்பாக மாறியது அப்போதுதான். அந்த காலத்திய இந்த செய்திகளை பழைய தஞ்சை வாசிகள் நினைவில் வைத்திருப்பார்கள். 

தஞ்சாவூரில் நகரப் பேருந்து எண் 6 அப்போதைய பேருந்து நிலையமான (முதல் பேருந்து நிலையம் தஞ்சாவூரில் கீழ்ப்பாலம் எனப்படும் Low Bridge அருகிலுள்ள பக்கிரி லாரி ஷெட் என அழைக்கப்பட்ட பகுதி, அது இப்போது டி.பாலசுப்ரமணியம் பெட்ரோல் பங்க், ஆர்.செங்கமலம் மோஹன் லாரி ஸ்டேண்டில் இருந்தது) இங்கிருந்து புறப்பட்டு பூக்காரத் தெரு, திருச்சி சாலை, மேம்பாலம் வழியாக ராஜப்பா நகர் வரை இயக்கப் பட்டது. பிறகு 1950இல் முதல் கூட்டுறவு வீடுகட்டும் சங்கம் தொடங்கப்பட்ட போது, அது அருளானந்த நகர் வீட்டு வசதி சொசைட்டி எனும் பெயருடன் ஆரம்பிக்கப் பட்டது. இந்த சொசைட்டி அருளானந்த நகர் பகுதிகளை ராவ் பகதூர் ஏ.ஒய்.அருளானந்தசாமி நாடார் குடும்பத்தாரிடமிருந்து பெற்றார்கள். முன்பு இந்த இடங்கள் முந்திரிக் காடாக இருந்தது, பிறகு வீட்டு மனைகளாக மாற்றப் பட்டன. “அருளானந்த நாடார் வீட்டு வசதி சொசைட்டி” வீடுகள், அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராஜ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது நிலத்தின் விலை சதுர அடிக்கு (தயவு செய்து கேட்டு மயக்கம் போட்டு விடாதீர்கள்!) ஒண்ணரை அணாவுக்குச் சமமான இப்போதைய பத்து பைசா.

No comments: