பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 9, 2020

சுவாமி இருக்கிறார்! - சிறுகதை


                                                                       
அன்று ஞாயிற்றுக் கிழமை வீட்டில் அப்பா, அண்ணன் ஆகியோரும் ஓய்வாக இருந்தனர். அம்மா வழக்கம் போல அடுக்களையில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
அண்ணன் அம்மாவை அழைத்து “ஏம்மா! இன்னைக்கு ஒரு நாளாவது வந்து ஒண்ணா உட்கார்ந்து பேசினால் என்ன, எப்போதும் அடுப்பங்கரையை நோண்டிக் கொண்டு அப்படி என்ன வேலை?” என்றான்.
“உங்களுக்கெல்லாம் பசிக்காதா, சாப்பாடு யார் வந்து தயார் செய்வாங்க, கொஞ்சம் இரு, இதோ முடிஞ்சு போச்சு, வரேன்” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையில் ஈடு பட்டாள்.
அப்பா சொன்னார் “கணேசா! நம்ம குலதெய்வ வழிபாடு இரண்டு வருஷமா செய்யலையே, இந்த வருஷமாவது திருப்பதி போய் பெருமாளை தரிசனம் செஞ்சுட்டு வரலாமா, உனக்கு எப்போ லீவு கிடைக்கும்?” என்றார்.
கணேசன் என் அண்ணன். அவன் ஒரு வங்கியில் மேலாளராக இருப்பதால் அவனால் அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாது, அதோடு அவன் வேறு ஊர்களுக்கும் அடிக்கடி மாற்றலாகிச் செல்வதால், குலதெய்வ வழிபாடு சிறிது காலம் தடைபட்டிருந்தது.
அண்ணன் சொன்னான், “சரி அப்பா! அடுத்த வாரம் மூன்று நாட்கள் லீவு எடுத்து விடுகிறேன், தம்பிக்கும் இப்போ விடுமுறைதானே, காலேஜும் கிடையாது, நாம் நாலுபேரும் திருப்பதிக்குப் போய் வேண்டுதலைச் செய்துவிட்டு வந்து விடலாம், நீ என்னடா சொல்றே?” என்றான் என்னிடம்.
“தாராளமா போகலாம், அதைவிட வேறென்ன வேலை எனக்கு, அம்மாவுக்கும் ஒரு மூணு நாள் விடுமுறையும் ஆச்சு, அடுப்பளையை விட்டுக் கொஞ்சம் வெளியே வருவாள்” என்றேன்.
அடுத்த வாரம் அண்ணன் சொன்னபடி மூன்று நாட்கள் விடுமுறை எடுத்தான். சனி, ஞாயிறும் விடுமுறையாகிப் போனதால் திங்கள் முதல் புதன் விடுப்பும் சேர்த்து மொத்தம் ஐந்து நாட்கள் கிடைத்ததால் இரண்டு நாட்கள் திருப்பதியில் தங்கியிருந்து மேலே பெருமாள் சந்நிதியில் அங்கப் பிரதட்சணம் செய்து இரண்டு நாளும் தரிசனம் செய்துவிட்டு, கீழ் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், மங்கத்தாயாரு சந்நிதிகளுக்கும் சென்று வரவேண்டுமென்று திட்டமிட்டோம்.
அதன்படி சனிக்கிழமை மாலை திருப்பதி ரயிலில் சென்று கீழ் திருப்பதியை அடைந்தோம். அங்கிருந்து மேல் திருப்பதிக்குச் சென்று அங்கு ஏற்கனவே ரிசர்வ் செய்திருந்த காட்டேஜுக்குச் சென்று அன்று தங்கிவிட்டோம்.
மறுநாள் ஞாயிறு விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்து போய் புஷ்கரணியில் ஸ்நானம் செய்துவிட்டு அங்கிருந்து உள்ளே அங்கப்பிரதட்சணம் செய்யப் போகும் பாதை வழியாக பெருமாள் சந்நிதியைச் சுற்றியிருந்த பிரகாரத்தை அடைந்தோம்.
நானும், அண்ணனும் மட்டும் தான் அங்கப் பிரதட்சணம் செய்யப்போவதாக இருந்ததால் நாங்கள் மட்டும் ஈரத் துணியுடன் குளிரில் நடுங்கிக் கொண்டு போய் நின்றோம்.
அப்போது எங்களுக்கு முன்பாகவே பலரும் அங்கு வந்து அங்கப் பிரதட்சணத்துக்குத் தயாராகப் வரிசையில் படுத்திருந்தார்கள். வரிசை நிரம்பவில்லை, ஆங்காங்கே நிறைய இடைவெளி இருந்தது. நாங்கள் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு போய் கலந்து கொள்ள எண்ணி அருகில் சென்ற போது அங்கிருந்த சில இளைஞர்கள், “இங்கெல்லாம் “ஆள் வராங்க” இங்கே சேர்ந்துக்க முடியாது, வேற இடம் பாருங்க” என்று எங்களை அந்த வரிசையில் சேர முடியாமல் விரட்டினார்கள்.
நாங்கள் தொடர்ந்து வேறு காலியாக இருந்த இடங்களிலும் சென்று வரிசையில் சேர முயன்ற போது அங்கும் இதுபோல சில இளைஞர்கள் எங்களைத் தடுத்து அனுப்பி விட்டனர்.
ஏன் இப்படி, இத்தனை இடங்கள் இடைவெளி இருக்கும் போது ஏன் எங்களை இவர்கள் தடுக்க வேண்டும்?
அங்கு நின்றுகொண்டிருந்த சிலரது பேச்சிலிருந்து அவர்கள் இரண்டு மூன்று பேருந்துகளில் சென்னையிலிருந்து வந்திருக்கும் பக்தர்கள் என்றும், இன்னும் சிலர் குளித்துவிட்டு வரவேண்டியிருந்ததால், அவர்களுக்காக இடம் ரிசர்வ் செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.
“இது என்ன உங்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இடமா என்ன? நாங்களும் இதற்காகத்தானே வந்திருக்கிறோம், இங்கு இத்தனை இடம் இருக்கும் போது, எங்களை தடுப்பது என்ன நியாயம்?” என்று அவர்களைக் கேட்டான் அண்ணன்.
“நாங்கள் ஒரே க்ரூப்பாக வந்திருக்கிறோம். அதனால் தான் நாங்கள் பலர் வந்து மற்றவர்களுக்கு இடம் போட்டிருக்கிறோம். நீங்கள் வேறு இடத்தில் போய் சேர்ந்து கொள்ளுங்க” என்றார் ஒருவர்.
நாங்களும் தொடர்ந்து பிரகாரத்தில் படுத்திருக்கும் கூட்டத்தில் நெடுக சென்று பார்த்தும் எங்கும் எங்களை உள்ளே விடவில்லை. அவரவர் வரிசையில் படுத்து நேரம் வந்ததும் அவர்கள் உருண்டு செல்லத் தொடங்கினர். அப்போது ஏற்பட்ட இடை வெளியில் நாங்கள் இருவரும் உட்புகுந்து சேர்ந்து கொள்ள முயன்ற போது, ஒருவன் பலமாக எங்கள் மார்பைப் பிடித்துப் பின்னால் தள்ளிவிட்டான்.
அண்ணன் கீழே விழுந்து நல்ல அடி, எனக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. தள்ளிவிட்டவனை ஏசத் தொடங்கினேன்.
அதற்குள் கோயில் பணியாளர்கள் சிலர் ஓடிவந்து “இங்கே சத்தம் கித்தம் பொட்டு கலாட்டா செய்தால் பிடித்துக் கொண்டு போய் வெளியே தள்ளிவிடுவோம்” என்று தெலுங்கில் எச்சரித்தார்கள்.
எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டு என்ன செய்வதென்று திணறிக் கொண்டிருந்தேன். என் அண்ணனுக்கு கீழே விழுந்ததால் ஏற்பட்ட அடியினால் வலியில் உட்கார்ந்து காலைப் பிடித்துக் கொண்டிருந்தான்.
அப்பா சொன்னார், “போதும்பா! இவுங்க அத்தனை பேரும் இங்கே புண்ணியம் சம்பாதிக்க வந்த பக்தர்கள். பெருமாள் இவுங்களை மட்டும் தான் பிரார்த்தனை செய்ய அனுமதிச்சிருக்கார் போல இருக்கு. வாங்க! நாம போகலாம் அப்புறமா வந்து வரிசையிலே நின்னு தரிசனமாவது பண்ணிட்டு போகலாம். நமக்கு இந்த அங்கப் பிரதட்சணம் வேண்டாம்” என்று எங்களை அழைத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்.
நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று உடைமாற்றிக் கொண்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டு காலை ஏழு மணிக்கு மேல் தர்ம சரிசனம் வரிசையில் போய் நின்று கொண்டோம். அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் விடுமுறை கூட்டம். மெல்ல மெல்ல நகர்ந்து ஒவ்வொரு மண்டபமாக உட்கார்ந்து, நின்று, நடந்து, மெல்ல நாங்கள் சந்நிதிக்குச் செல்லும் போது அன்றைய பொழுது கிட்டத்தட்ட முடிந்து போயிருந்தது.
இப்போது போல அப்போதெல்லாம், மணியைக் குறித்துக் கொடுத்து தரிசனம் அனுமதிக்கும் வழக்கம் அமலில் இல்லை. ஆகையால் பசி, ஓய்ச்சல், மனவருத்தம் இவைகளோடு பெருமாளைத் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து தங்குமிடம் சென்று ஓய்வெடுத்துக் கொண்டுவிட்டு கீழ் திருப்பதிக்குத் திரும்பினோம்.
அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்துக் கொண்டு தங்கி அங்கிருந்து கோவிந்தராஜ பெருமாளையும், அலமேலுமங்கா தாயாரையும் தரிசனம் செய்து அன்றைய பொழுதைக் கழித்துவிட்டு, மறுநாள் சென்னை திரும்பினோம்.
அப்பா சொன்னார் “இந்த வருஷம் பெருமாள் நம்மை பிரார்த்தனையை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை, அடுத்த மாதமாவது சென்று அதை முடித்துக் கொள்ளலாம், என்ன சொல்றீங்க?” என்று எங்களிடம் கேட்டார்.
அண்ணன் சொன்னான், “அப்பா! நாமெல்லாம் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு பக்தி சிரத்தையோடு, பெருமாளுக்கு அங்கப் பிரதட்சணம் செய்யணும்னு போய் நம்ம கடமையை செய்துட்டோம். அவருக்கு மனசு இல்லையோ, அல்லது சுவாமியைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட அராஜகக் கும்பலுக்கு நம்மை அனுமதிக்க முடியலையோ, எதுவாயிருந்தாலும், இனி அங்கே போய் நாம் அவஸ்தை படவேணாம்னு நினைக்ககிறேன்” என்றான்.
அம்மா மட்டும், “அப்படில்லாம் சொல்லாதேடா கணேசா! சுவாமி காரியம் அப்படில்லாம் பேசப்படாது. எப்போ முடியறதோ, அப்போ போயிட்டுப் போறோம். விடு. நடந்ததை நெனச்சு வருத்தப்படாதே!” என்றாள்.
அப்பா சொன்னார், “நீ சும்மா இரு! கணேசன் சொல்றதுதான் சரி. எப்போ நாம பக்தி சிரத்தையோடு போயி பிரார்த்தனை செய்ய நெனச்ச போது சுயநலக்கார மனுஷாளை வச்சு சுவாமி தடுத்தாரோ, இனி நாம போய் அங்கே தரிசனம் செய்யணுங்கறது இல்லை. சுவாமி இல்லாத இடம் எது? எல்லா இடத்திலும் தான் இருக்கார். ஏன், நம்ம வீட்டிலேயே சுவாமி வச்சு பூஜையெல்லாம் செய்யலையா என்ன? இங்கேயே வேண்டிண்டா போச்சு” என்றார்.
“அப்படியில்லைண்ணா, கோயில்னு இருக்கும் போது அங்க போய் தரிசனம் செஞ்சாதானே சரி” என்று தர்மம் பேசினாள் அம்மா.
அண்ணன் சொன்னான், “அப்பா! நீங்க சொல்றதும் சரி, அம்மாவும் சரி. இனிமே ஒண்ணு செய்யலாம். கூட்டத்துல போயி, தள்ளிவிட்டு அடிபட்டு தரிசனம் பண்றதை விட, எல்லா ஊர்லயும் பெருமாள் இருக்கார், கோயில்கள் இருக்கு அங்கெல்லாம் இதைப் போல கூட்டமா இருக்கு. அதப்போல எங்கேயாவது ஒரு கோயிலுக்குப் போயி இதே வேண்டுதலை செய்துட்டு வந்தாப் போச்சு” என்றான்.
அம்மா சொன்னாள், “திருப்பதிக்கு வேண்டிண்டு வேற இடத்துல போய் செய்ய முடியுமா?” என்றாள்.
“முடியும், அந்தக் காலத்துல திருப்பதி மலைக்கு யாத்திரை போவது ரொம்ப சிரமம் என்பதால, சீர்காழி கிட்டே திருநாங்கூர் தலத்தில் அண்ணன் கோயில் என்ற திருவெள்ளக் குளம் இருக்கு அங்கே சீனிவாசப் பெருமாள் இருக்கார், அவர் திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று சொல்லி அவரை அண்ணன் பெருமாள்ங்கறாங்க. அவரைப் போயி பார்க்கலாம். இல்லைன்னா, ஒப்பிலியப்பன் கோயில் இருக்கு, திருச்சிக்குப் பக்கத்துல குணசீலம் இருக்கு தான்தோன்றிமலை இருக்கு. இங்கெல்லாம் திருப்பதிக்கு வேண்டிண்டு போகமுடியலைன்னா, இந்த தலங்கள்ளே வந்து பிரார்த்தனை செய்துக்கலாம். அதனால நாம இதுல ஏதாவது ஒரு ஊருக்குப் போயி தரிசனம் பண்ணிண்டு வருவோம்” என்றார்.
“அது சரி அப்பா! ஆனால் சுவாமி தரிசனம் செய்ய விடாமல் தாங்கள் தான் குத்தகைக்கு எடுத்த மாதிரி அராஜகம் செஞ்ச அந்தக் கூட்டத்துக்கு சுவாமி தண்டனை எதுவும் கொடுக்க மாட்டாரா?” என்றேன்.
“நிச்சயம் நடக்கும்பா, நடக்காம போகாது. பக்திங்கறது, மத்தவங்களை தடுத்து நிறுத்தி தங்களுக்கு மட்டும்தான்னு நெனைக்கறது பைத்தியக்காரத் தனம். அறியாமையா, அல்லது திமிரா எதுவோ, அதுக்கான தண்டனை அவுங்களுக்குக் கிடைக்காம போகாது” என்றார்.
“அது எப்படிப்பா, அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க, அதுக்கு ஏதாவது பழைய நிகழ்ச்சி உதாரணமா இருக்கா?” என்றான் அண்ணன்.
“இருக்குப்பா. நான் உன்னை மாதிரி இருந்தப்போ, அலகாபாத்துல சங்கம் துறையில் நீராடப் போயிருந்தோம். அங்கே யமுனை கங்கையோட சங்கமம் ஆகிறது தெரியும் இல்லையா. யமுனை நதி நீர் மெல்ல ஓடிவரும், கங்கை பாய்ந்து வரும். இரண்டும் சேர்கிற இடத்துக்கு ஒரு படகில் போகணும். நாங்க போனபோது ஒரு படகில் நம்ம சென்னையிலிருந்து போயிருந்த ஒரு கூட்டம் உட்கார்ந்து கொண்டிருந்தது. நாங்கள் நாலைந்து பேர் போய் அதில் ஏறும்போது, நாங்க ஒரு க்ரூப்பா போறோம், நீங்க அடுத்த படகுல வாங்கன்னு அவுங்க படகை எடுக்கச் சொல்லிட்டாங்க. அந்த படகு போய் கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க ஒரு பத்து பதினைந்து பேர் அடுத்த படகில் சென்று இறங்கினோம். அங்கே இரண்டு பெரிய படகுகளை இணைத்து ஒரு பாலம் போல மேடை கட்டி அதில் இறங்கி குளிக்கச் சொன்னார்கள். நாங்க இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது, எங்களை படகில் ஏற விடாமல் தடுத்த கூட்டம் குளித்து முடித்து அவர்கள் படகில் ஏறி உட்கார்ந்து விட்டார்கள். படகு குளிக்கும் மேடையருகில் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. கட்டு அவிழ்ந்து கங்கையின் வேகத்தில் அந்தப் படகு வேகமாக செல்லத் தொடங்கியது. படகுக்காரன் அதில் இல்லை. படகில் இருந்தவர்கள் குய்யோ முறையோனு கூச்சலிட, படகுக்காரன் என்ன செய்வதென்று தெரியாமல் நாங்கள் இருந்த குளியல் மேடைக்கருகில் தவித்தான். அவர்கள் படகு வேகமாகச் சென்று கங்கையின் ராட்சச வேகத்துச் சுழலில் சிக்கி சுற்றிக் கொண்டே போகத் தொடங்கியது. அதிலிருந்த அத்தனை பேரும் மரணக் கூச்சலிட, எல்லோரும் வேடிக்கைப் பார்ப்பது தவிர வேறென்ன செய்ய முடியும்.”
“அப்புறம் என்ன நடந்தது?” அண்ணன் கேட்டான்.
“நல்ல காலம் அப்போது கங்கையில் அங்கங்கே சிறு படகுகளை ஓட்டிக் கொண்டிருந்த சில மீனவர்கள் வேகமாகத் தங்கள் படகைச் செலுத்திக் கொண்டு போய் அந்த பெரிய படகில் ஏறி, அதைக் கட்டுப்படுத்தி, மெல்ல பெரும்பாடு பட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள். “
“அப்புறம்?”
“அவர்கள் கரைசேரும் முன்பே நாங்கள் கரையேறி, உடைமாற்றி, தமிழ் மடத்துக்குச் சாப்பிடப் புறப்பட்டு விட்டோம். செத்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் அன்று கரையேறியிருப்பார்கள்”
“பெருமாள் இருக்கார், யார் தப்பு செய்தாலும் தண்டனை கொடுப்பார், அது அவர் சந்நிதியில் நடந்தாலும் செரி, வெளில நடந்தாலும் சரி. அதனால நாம யாரைப் பற்றியும் கவலைப் படாமல், அடுத்த வாரம் சீர்காழி அண்ணங்கோயிலுக்கு அல்லது நான் சொன்ன மற்ற கோயில்களுக்கோ போய் பிரார்த்தனை செய்துவிட்டு வந்துடுவோம், என்ன?” என்றாள் அம்மா.
“சரி! அப்படியே செய்துடுவோம்” என்று கோரசாக முழங்கினர்.
                                                --------oooOooo-------
தஞ்சை வெ.கோபாலன்,   இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007. #9486741885

No comments: