பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 7, 2020

கலைகளும், கலைஞர்களும் .


                                    
முற்காலத்தில் ஆலயங்களில் நடைபெறும் வழிபாடுகளில் இசையும் நடனமும் முக்கிய பங்கு வகித்தன. ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய ஆலயங்களில் கூட நாட்டியச் சிற்பங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. மேலும் இந்த நடனத்துக்கு மூலம் என்றால் சிவபெருமான் நடராஜப் பெருமானாக தில்லையில் ஆடிய ஆனந்த தாண்டவமே மூல முதல் நடனமாக இருந்திருக்கிறது. இந்தக் கலை பெரும்பாலும் ஆலயங்களில் நடைபெற்று வந்திருக்கின்றன.  சதிர் ஆடுபவர்கள் சதிர் ஆடுவதோடு ஆலயத்தின் இதர சில பணிகளையும் செய்ய தேவரடியார்கள் என்ற பெயரில் பணியில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கோயில் பூஜைகளில் கூட கும்ப ஆரத்தி எனும் தீபாரதனை எடுத்துக் கொடுக்கும் உரிமையும் இருந்திருக்கிறது. புனிதமான இந்த நாட்டிய நிகழ்ச்சி ஆலயங்களில் முறையாக நடந்து கொண்டிருந்த காலத்தில் அன்னியர்கள் போரிட்டோ அல்லது வாணிபம் செய்வதற்கென்றோ இங்கு நுழைந்து, சிறிது சிறிதாக நமது பண்பாடு, நாகரிகம், முதலிய அனைத்திலும் ஊடுறுவி இவற்றின் புனிதத்தை அதன் முக்கியத்துவம் தெரியாமல் அழித்து அல்லது சிறுமைப் படுத்தி விட்டார்கள்.

கல்வியில் மேம்பட்டு, உலகத்தில் மிக உயர்ந்த ஒருசில நாடுகளில் ஒன்றாக நம் பாரதநாடு விளங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டில் நமது பாரம்பரியமான கல்வி, கலைகள் இவற்றை சிறுமைப் படுத்தும் விதமாக அன்னியர்கள் நமது கல்வி முறையை மாற்றியும், அவர்கள் பண்பாட்டுத் திணிப்பினாலும்,  நமது சமூகம் குழப்ப நிலையை அடைந்தது. விளைவு நாம் புனிதமாக எண்ணியிருந்த கலைகள் அழியத் தொடங்கின. இந்த சதிர் கலையை நம்பி வாழ்ந்த தேவரடியார்கள் என்பவர்களை வேறு கண்கொண்டு பார்க்கும் நிலைமையை உருவாக்கி அவர்களையும் பிழைப்புக்கு வழியில்லாமல் செய்து, அவர்கள் கைக்கொண்டிருந்த கலையையும் அழித்து விட்டனர். அப்போதெல்லாம் நாட்டியம் என்பது ஆலயங்களில் ஆடப்படும் புனிதமான கலை என்பதால் அதை வீடுகளில் ஆடுவதில்லை. அரசவைகளில் ஆடுவதற்கு ராஜதாசிகள் இருந்தார்கள். ஆலயங்களில் ஆடுவோர் தேவதாசிகள் எனப்படுவார்கள்.

அன்னிய ஆட்சி நம் வாழ்க்கை முறையையும், கல்வி, கலாசாரம் அனைத்திலும் ஊடுறுவி நம் கல்வி, அவர்களுக்கு ஊழியம் செய்ய மட்டுமே பயன்படும்படியாக மாற்றி அமைக்கப் பட்டது. நம் கல்வி அனைத்துத் துறைகளையும் ஒருவன் அறிந்து கொள்ளும் விதத்தில் குருகுல முறையில் கற்பிக்கப்படது போக, மெக்காலேயின் கல்வித் திட்டம்  தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அன்னியர்களுக்குப் பணிபுரியும் தொண்டர்களை உருவாக்கும் கல்வியாக உருவெடுத்து விட்டது. அது போலவே அவர்களுக்குக் கலை என்பது பொழுது போக்குக் காகவும், மகிழ்ச்சியாகக் கொண்டாட்டங்களை கொண்டாடும்பொது கூடி ஆடிப் பாடி கும்மாளமடிக்க பயன்பட்டது போல் அன்றி நம் கலைகள் எல்லாமே இறைவனை மையப்படுத்தி, அனைத்தும் இறைவனுகே எனும் அர்ப்பணிப்பு உணர்வில் நடத்தப்பட்டவை. அதனால் தான் நாம் கொண்டாடும் தெய்வ உருவங்கள் அனைத்தின் கைகளிலும் அனேகமாக ஏதேனும் ஒரு இசைக் கருவி இருக்கும். சரஸ்வதி கையில் வீணை, கிருஷ்ணன் கையில் குழல், நாரதர் கையில் தும்புரு, நந்தி கையில் மத்தளம் இப்படி. இந்த சதிர் ஆலயங்களில் நடைபெற ஆடல் மகளிர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கி, வேளை தோறும் ஆலயங்களில் ஆடுகின்ற பணிகளும் வழங்கப்பட்டிருந்தது.

இப்படிக் குருவிக் கூடு போல அமைக்கப்பட்டிருந்த நமது கலை கலாச்சார அமைப்பு பிரித்தெறியப் பட்டு, அவர்கள் கலாச்சாரத்தை நுழைத்து விட்டனர். அதன் பயனாக நமது தெய்வீகக் கலைகள் ஓரம் கட்டப்பட்டு அதனை ஆடுவோர் தாழ்ந்தவர்கள் என்பது போன்ற நிலையை உருவக்கி, இசையையோ, நடனத்தையோ குடும்பப் பெண்கள் பாடக் கூடாது, ஆடக்கூடாது என்கிற மிக மோசமான பிற்போக்கு எண்ணம் விதைக்கப்பட்டது. இதன் விளைவாக ஆலயங்களில் தேவதாசி முறை சட்டப்படி இந்திய சுதந்திரத்துக்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு ஒழிக்கப்பட்டு ஆலயங்களில் இருந்த இவர்களை வெளியேற்றி விட்டார்கள். பல நூறு ஆண்டுகளாக அந்த கலைப் பணியைச் செய்து வந்த அந்த சமூகம் இதனை கைவிட்டதோடு ஒரு கட்டத்தில் அவர்கள் மற்றவர்களைப் போல பல துறைகளுக்கும் சென்று விட்டனர். ஆனால் கலை ஆர்வம் கொண்ட ருக்மணி தேவி, பாலசரஸ்வதி பொன்றோர் இந்த கலையை அழியவிடக் கூடாது என்று விடாப்பிடியாக இதனை வளர்க்கவும், பாதுகாக்கவும் சென்னையில் கலாக்ஷேத்ரா என்ற நிறுவனத்தில் இந்த நடனக் கலையை வளர்க்க ஏற்பாடு செய்து அவர்களும் ஆடத் தொடங்கிய பின் எல்லா தரத்தாரும் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு ஆடவும், நிகழ்ச்சிகளை நடத்தவும் தொடங்கினர்.

அந்த காலகட்டத்தில் சினிமா என்றொரு கலை வெகு வேகமாகப் பரவிய காரணத்தால் இந்த நடனங்கள் அதில் பயன்படுத்தப் பட்டு பிரபலமடையத் தொடங்கின. இந்தக் கலையில் வல்லவர்கள் பலர் அனைத்துத் தர மக்கள் மத்தியிலும் உருவானார்கள். சினிமா இதைப் பிரபலப் படுத்தியதன் பயனாகக் குழந்தைகள் ஆர்வத்தோடு தாங்களும் கற்றுக் கொள்ளத் தொடங்கினர். கடந்த அறுபது அல்லது எழுபது ஆண்டுகளில் லட்சக் கணக்கான பெண் குழந்தைகளும், ஆண்களும் கூட இந்தக் கலையில் ஆர்வத்தோடு கற்றுத் தேர்ந்து ஆடத் தொடங்கினார்கள். இன்று ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, எங்கும் நடன ஆசிரியர்கள், நடனப் பள்ளிகள், திறமையான குருமார்கள் ஏராளமான குழந்தைகளுக்குப் பயிற்று விக்கிறார்கள். இயல்பிலேயே இந்தக் கலை உணர்வு, ஆர்வம், திறமை உள்ளவர்கள் இதனை விரைவாகக் கற்றுக் கொண்டு உயர்ந்த நிலைமைக்குச் சென்று விடுகிறார்கள்.

சதிர் என்கிற பெயர் இப்போது பரதநாட்டியம் என்று பெயர் பெற்று விளங்குகிறது. முன்பெல்லாம் சதிர் ஆடுபவர் சமூகத்தில் யார் எவர் என்ற பேதம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஆடுபவர் ஒரு பரதக் கலைஞர் என்பதோடு சரி, அவர் யார், என்ன பிரிவு அல்லது என்ன  ஜாதி உயர்ந்தவரா தாழ்ந்தவரா என்பது போன்ற பேதங்கள் எல்லாம் அறவே கிடையாது. ஆங்கிலத்தில் Complex என்று சொல்லப்படும் உணர்வு ஒருசில இடங்களில் தனிப்பட்டவர்கள் மிதான குற்றம், குறைகளினாலோ அல்லது சிந்தனையின் விளைவாகவோ, சில வேறு பட்ட கருத்துக்களும் வெளியாகின்றன. கலைகளுக்கு எந்தவித பேதமும் கிடையாது. அது ஆடுபவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து போன அதுபோன்ற கருத்துக்கள் இருந்தால் அதனைச் சிறிது சிறிதாக நீக்கி அவர்கள் அனைவரும் கலைஞர்கள் என்கிற ஒரே இனம் என்பதை உருவாக்க வேண்டும். அப்படி ஒருக்கால் சிலருக்கு அதுபோன்ற ஏற்றத் தாழ்வு எண்ணம் இருக்குமானால்  உடனடியாக அதை எடுத்து எறிந்திட வேண்டும். கலையும் கலைஞர்களும் வளர வேண்டுமே தவிர இதுபோன்ற பேதங்கள் வளரவும் கூடாது, வளர்வதை ஆதரிக்கவும் முடியாது. கலைகள் தான் நமக்கு முக்கியம் பேதங்கள் அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து செயல்பட்டாலன்றி இதுபோன்ற பிளவுகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.

நம்மிடையே எத்தனையோ கலைகள் இப்போது வழக்கத்தில் இருக்கின்றன. கலைகள் என்ற கண்ணோட்டத்தில் அவை எல்லாமே சமமானவை என்று சொன்னாலும், அந்தந்த கலைகள் எங்கு எப்படி பயன்படுகிறது என்பதைப் பொறுத்து அதை நடத்தும் இடம், அதனை நடத்தும் கலைஞர்கள் ஆகியவர்கள் பார்க்கப்படுகிறார்கள். நம்மிடையே இன்று இருக்கும் சில கலைகள். 1. சதிர் 2. அதுவே பரதநாட்டியம் என்று ஆனது 3. கரகாட்டம்  4. தெருக்கூத்து  5. தேவராட்டம்  6. சிலம்பம்  7. பறையாட்டம்  8. காவடியாட்டம்  9. கும்மியாட்டம்  10. கோலாட்டம்  11. பொம்மலாட்டம்  12. புலிவேஷம் 13. மயிலாட்டம்  14. ஒயிலாட்டம்  15. பொய்க்கால் குதிரை ஆட்டம், 16. வில்லுப்பாட்டு.  இதுபோன்ற பல கலைகள் இருந்தாலும் இவற்றின் பயன்பாடு அதனதன் நோக்கத்துக்குத் தக்கதாக மாறுகிறது. இவை நடத்த வேண்டிய களங்களும் ஒன்றுக்கொன்று மாறுபடுகிறது. பரதக் கலை ஆலயங்களில் நடந்தது இப்போதெல்லாம் பெரிய அரங்குகளில் மேடைகளில் ஆடப்படுகின்றன. திருமணங்கள், ஆலய திருவிழாக்கள், சபாக்கள் நிகழ்ச்சிகளில் என்று இவை ஆடப்படுகின்றன. இதற்காக மத்திய மாநில அரசுகள் அமைப்புகளை உருவாக்கி இந்த கலைக்கும் கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதில் ஒரு குறையை அல்லது தவறைப் புரிந்து கொள்ள வேண்டும். பரதக் கலை ஆட வேண்டிய இடங்களை மேலே பார்த்தோம், அப்படி அதுபோன்ற இடங்களில் அல்லாமல் அவரவர் தேவைகளுக் கேற்ப இந்த கலைகளுக்குப் பொறுத்தமில்லாத இடங்களில் ஆட வைப்பது என்பது அந்தக் கலைக்குத் தரும் மரியாதையாகாது.

கரகாட்டம் என்பது நம் தமிழகத்தில் மாரியம்மன் கோயில்களில் வேண்டுதல் செய்துகொண்டு கடத்தில் நீர் நிரப்பி , மஞ்சள் பூசி, கடத்தில்  வேப்பிலை வைத்துக் கொண்டு போய் அபிஷேகம் செய்யக் கொடுப்பது. அதுவே நாளடைவில் குடத்தைத் தலையில் ஏந்தி ஆடும் பொது நிகழ்ச்சியாக கரகாட்டம் என்ற பெயரில் கிராம தேவதைகள் திருவிழாக்கள் சமயம் நடைபெறுகிறது. காவடியும் முருகனுக்கு வேண்டுதல் செய்துகொண்டு பழனி, திருத்தணி போன்ற கோயில்களுக்குப் போய் வந்தது போக இப்போது எல்லாவிடங்களிலும் காவடி ஆட்டம் வந்தாகி விட்டது. தேவராட்டம், ஒயிலாட்டம் இவைகள் எல்லாம் ஆலயங்கள் சம்பந்தப்பட்டவை. மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் பக்கங்களில் எல்லாம் ஒயிலாட்டம் கிராம கோயில்கள் திருவிழா சமயங்களில் ஆடுவதுண்டு. கும்மியும், கோலாட்டமும் பள்ளிக் கூடங்களிலேயே பெண் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவார்கள். இப்போது அதெல்லாம் போய்விட்டது. அம்மானை ஆடுவது, சோழி வைத்துப் பல்லாங்குழி விளையாடுவது என்பது போன்ற அறிவுக் கூர்மைக்குப் பயன்படும் பெண்கள் விளையாட்டுகள் கூட அழிந்து போய் விட்டன. பொம்மலாட்டம் நாடகம், தெருக்கூத்து போன்ற சில கலைகள் மட்டும் அவ்வப்போது சிலரால் அழகாக நடத்தப்பட்டு வந்தன, இப்போது எங்கும் இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. தெருக்கூத்து முன்பெல்லாம் கோடை காலத்தில் கிராமக் கோயில்கள் திருவிழா சமயத்தில் விடிய விடிய நடைபெறுவது உண்டு. கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில்களில் இரவு பத்து மணிக்கு மேல் உடுக்கு அடித்துக் கொண்டு அரவான் கதை என்பதைச் சொல்வதுண்டு.  இது மகாபாரத யுத்தம் தொடங்கும் போது அரவான் பலி கொடுக்கப்பட்ட கதை. விடிய விடிய அவர் பாடவும் மக்கள் கேட்கவும் அது ஓர் இனிய அனுபவமாக இருக்கும்.  அதுவும் இப்போதெல்லாம் நடப்பதாகத் தெரியவில்லை. பொய்க்கால் குதிரை சுவாமி ஊர்வலம், அரசியல் கட்சி ஊர்வலங்கள் போன்றவற்றிலும் திருவிழாக் காலங்களிலும் பெரிய பெரிய குதிரை பொம்மைகளுக்குள் புகுந்து கொண்டு காலில் கட்டை வைத்துக் கட்டிக் கொண்டு ஆடுவார்கள். அதுவும் இப்போது பரவலாக மறைந்து வருகிறது. நாட்டிய வகையில் குறவஞ்சி என்று ஒன்று உண்டு. குற்றாலக் குறவஞ்சி மிகப் பிரபலமானது. தஞ்சை சரபோஜிராஜ பூபால குறவஞ்சி, வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, தர்மாம்பாள் குறம் போன்ற பல குறவஞ்சி நாட்டிய நாடகங்கள் நடந்து வந்தன. இதன் உட்கருத்து ஒரே மாதிரியாகவும், யாரை மையப்படுத்தி ஆடப்படுவது என்பதைப் பொறுத்து சற்று மாறும். இதில் மலைவாழ் மக்களில் பெண் குறத்தி என்பார் வந்து குறி சொல்வது போன்ற காட்சிகள் இருக்கும்.  இவைகள் அனைத்துமே எந்த இடத்தில், எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தினால்தான் அதன் பெருமைகள் நிலைத்திருக்கும் இல்லையேல் அவை சிதைந்து போக வாய்ப்பாக அமைந்துவிடும்.

கலைகள் காப்பாற்றப்பட வேண்டும். கலைஞர்கள் வளர வேண்டும். கலைஞர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். கலை நிகழ்ச்சிகளை நடத்துவோர் எந்தக் கலையை எங்கு எப்படி நடத்த வேண்டுமென்கிற முறையறிந்து நடத்த வேண்டும். ஒன்று உயர்வு இன்னொன்று தாழ்வு என்பது அல்ல, அனைத்தும் கலைகள் என்றாலும் அவைகள் எங்கெங்கு நடத்த வேண்டுமோ, எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்தி வந்தால் கலைகள் நிரந்தரமாகச் சிறப்பாக இருந்து வரும். இதனைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகள் நடத்துவோரும் உணர்ந்து செயல்பட்டால் அனைத்துமே சிறப்பாக இருக்கும். எந்திரமயமான இந்த நாளில் மனித மனங்களைச் செம்மைப் படுத்தவும், உற்சாகமூட்டவும் இந்த கலைகள் பயன்படுவதால் அனைத்துத் தரப்பாரும் இந்த விஷயங்களில் ஒத்துழைப்பு நல்கி நடத்துவது கலைக்கு நாம் செய்யும் சேவையாக இருக்கும்.


கட்டுரை ஆக்கம்:
தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.  # 9486741885


No comments: