பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 30, 2020

தேசியம் வளர்த்த தமிழ்


                                            
            தமிழ் மொழி தோன்றிய காலம் எது என்பதை யாராலும் சொல்ல இயலாது. கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி என்று நமது வரலாற்றின் தொன்மையைக் கூறுவார்கள். அப்படித் தமிழின் தொன்மையை முழுவதுமாக அறிந்து சொன்னவர் எவரும் இல்லை. மகாகவி பாரதி சொல்கிறார் “ஆதிசிவன் பெற்றுவிட்டான், என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே, நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்” என்று. சிவபெருமான் உருவாக்கிய தமிழ், அகத்தியன் இலக்கணம் கண்ட தமிழ். இதன் தோற்றம் வளர்ச்சி இவற்றை மனித வாழ்வின் தொடக்க காலத்தில் இருந்தே உருவானதாகச் சொல்ல முடியும். அப்படிப்பட்ட தமிழ்மொழி, காலத்தால் அழியாமல், அவ்வப்போது உருமாறி, சொற்களின் அமைப்புகள் மாறி, பேசுகின்ற, எழுதுகின்ற, பாடுகின்ற முறைகளில் மாற்றங்களைச் சந்தித்து இன்றைய கால கட்டத்தில் இருபத்தியோராம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கிற மாறுதல்களுக்கேற்ப உருப்பெற்று வந்திருக்கிறது.

            தமிழைத் தாய் என்கிறார்கள் புலவர்கள். இந்தத் தாய் தோன்றியது எப்போது என்பதை ஆராய்ந்து பார்த்தால் பாரதி பாடிய “எங்கள் தாய்” எனும் பாடலில் வரும் வரிகள்தான் நம் நினைவுக்கு வரும். “தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினள் எங்கள் தாய்” என்கிறார் அவர்.

            அப்படி என்றோ காலத்தால் முந்தி உருவான தமிழ் மொழி எத்தனை பிரளயங்கள், எத்தனை அழிவுகள், எத்தனை போர்கள், இவை அத்தனையையும் தாங்கி இன்றும் என்றும் இளமைத் தோற்றத்துடன் எழுந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம் இம் மொழியின் வளம்தான். தொடக்க காலத்தில் தமிழ் எப்படி பேசப்பட்டது? தெரியாது. எப்படி எழுதப் பட்டது அதுவும் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் பழமையின் மணத்தோடு கவிதை வடிவில் தோற்றுவித்த பல்வித தமிழ்க் கவிதைகள்தான்.  முதன் முதல் தோன்றிய தமிழை மூன்று குலத் தமிழ் மன்னர் மூண்ட நல் அன்போடு எடுத்து வளர்த்தார்; ஆன்ற மொழிகளுக்குள்ளே தமிழ் உயர் ஆரியத்துக்கு நிகரென வாழ்ந்தது எனும் வரிகளால் ஆதியில் தமிழும் சம்ஸ்கிருத மொழியும் இணையாக வளர்ந்து வந்திருப்பதை அறிகிறோம். வடமொழி கற்பது என்பது தமிழின் வளத்தைக் கூட்டுவதாக அமைந்தது. அதனாலன்றோ கம்பன் வான்மீகத்தைக் கற்றதால் கம்ப ராமாயணம் இயற்ற முடிந்தது. நளவெண்பா, வில்லிபுத்தூரார் பாரதம் என வடமொழியில் தோன்றிய காப்பியங்கள் தமிழில் உருப்பெற்றன. மொழி வெறுப்பு, மொழி எதிர்ப்பு என்பது இங்கிருந்திருக்குமானால் நாம் தனிமைப் படுத்தப் பட்டிருப்போம். அதற்காக மொழி ஒற்றுமை எனும் நோக்கில் பிறமொழி நம் தமிழ் மொழியை அடிமை கொள்ளுமானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்ஸ்கிருத மொழியின் தாக்கம் இங்கே மணிப்பிரவாளம் எனும் தமிழ் நடை தோன்றியது. அது காலப்போக்கில் தனித்தமிழ் ஆர்வத்தால் மறைந்து தமிழைத் தமிழாகப் பேச முடிந்தது. ஆனால் அந்தோ சம்ஸ்கிருத மொழியை விரட்டிய ஆர்வம் ஆங்கிலத்தை அகற்ற முடியாததன் தாக்கம் இன்று நாம் தமிழை மறந்து ஆங்கில மோகத்தால் தவித்து வருகிறோம். புனிதமான நம் தமிழ்மொழியும் உருமாறி தங்கிலீஷாக மாறிப் போயிருக்கிறதே. அதிலும் நகர்ப்புறங்களில் தமிழ் பேச யாரும் இல்லை.

            சங்கத் தமிழ் நூல்கள் இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. இன்றைய தமிழுணர்ந்தோர் அதனைப் படித்துப் பொருள் உணர புலவர்களை நாடவேண்டியிருக்கிறது. காலத்தால் அந்த சங்கத் தமிழ் மாறி இன்று நாம் பேசும் எழுதும் எளிய தமிழாக உருமாறி இருப்பதால்தான் அந்த நிலைமை. கல்வெட்டுகளில் காணப்படும் தமிழ் இன்று பொருளுணர்வதற்கு அவற்றைப் படித்துப் பொருள் சொல்லும் வல்லுனர்களை நாட வேண்டியிருக்கிறது.

            தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் இங்கு எத்தனையோ படையெடுப்புகள். பிறமொழியாளர்கள் வந்து இங்கே ஆண்டு வந்திருக்கிறார்கள். அவற்றால் எல்லாம் நம் தாய் மொழி பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. பிறமொழிச் சேர்க்கையால் தமிழ்மொழி வளம் பெற்றதா, உருச் சிதைந்ததா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். வேறு எத்துணை மொழிகள் வந்து இங்கே ஆக்கிரமித்திருந்தாலும் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப் படுத்தி ஆளத் தொடங்கிய பிறகுதான் தமிழுக்கு ஏற்பட்ட இழப்பே அதிகம் என்று சொல்லலாம். இன்று தமிழன் பேசுவது தமிழா என்றுகூட நமக்கெல்லாம் ஐயமேற்படத்தான் செய்கிறது. சமீபத்தில் ஒரு பாடலைக் கேட்டேன். அது “தமிழா நீ பேசுவது தமிழா?” என்று தொடங்குகிறது.

தமிழா நீ பேசுவது தமிழா ?
தமிழா நீ பேசுவது தமிழா ?

அன்னையை தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய்
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்
இன்னுயிர் தமிழை கொன்று தொலைத்தாய்

தமிழா நீ பேசுவது தமிழா ?

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை
மனைவியை ஒய்ஃப் என்றாய் பார் உந்தன் போக்கை
இரவை நைட் என்றாய்,  விடியாது வாழ்க்கை
இனிப்பை ஸ்வீட் என்றாய்,  அறுத்தெறி உன் நாக்கை

தமிழா நீ பேசுவது தமிழா ?

வண்டிக்காரர் கேட்டார் லெஃப்டா ரைட்டா
வழக்கறிஞர் கேட்டார் என்ன தம்பி ஃபைட்டா
துண்டுக்காரர் கேட்டார் கூட்டத்துக்கு லேட்டா
தொலையாதா தமிழ் மொழி,  இப்படிக் கேட்டா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?

அருமை நண்பனை ஃபிரெண்டு எனச் சொல்வதா?
தெய்வத்தமிழ் மொழியை, ஆங்கிலம் தின்பதா
கண்டவரை எல்லாம் “சார்” என்று சொல்வதா
கண்முன்னே நம் தாய்மொழி, சாவது நல்லதா

தமிழா நீ பேசுவது தமிழா ?

பாட்டன் கையிலே வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டியின் உதட்டிலே வண்ண லிப்ஸ்டிக்கா
வீட்டிலே பெண்களின் தலையிலே ரிப்பனா
வெள்ளைக்காரன்தான் நமக்கென்ன அப்பனா ???

தமிழா நீ பேசுவது தமிழா ?

இந்தப் பாடலில் காண்பது போல தமிழன் ஆங்கிலத்தில் தமிழைப் புகுத்தி உரையாடுவது நமக்குக் கேவலம் இல்லையா?. இதனைத்தான் தங்கிலீஷ் என்கிறார்கள். இந்த நிலைமை உருவாவதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் நம்முடைய ஆங்கில மோகம் தான். ஆங்கில மோகம் வரக் காரணம் ஆங்கிலேயர்களிடம் நாம் அடிமைகளாக வாழ்ந்ததுதான். இந்தியா முழுவதும் சுதந்திரம் அடைந்தாலும் தமிழகம் மட்டும் (அல்லது திராவிடம் மட்டும்) ஆங்கிலேயர்களின் அரவணைப்பில்தான் வாழ்வோம் என்று சிலர் திருவாய் மலர்ந்தருளிய போது, தமிழ் உணர்வும், தமிழன் என்கிற பெருமையும் எங்கே போயிற்று?
            ஆங்கிலேயர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது, அப்படி அவர்கள் வெளியேறுவதாயிருந்தாலும் தமிழ் நாட்டையாவது தங்களது ஆட்சியின் பிடியில் வைத்திருக்க வேண்டுமென்று இங்கே ஒரு கோரிக்கை எழுந்தது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்றது; அப்போழுதாவது நமது சுதேசி மொழிகள் வளம்பெற்று வாழ்ந்திருக்க வேண்டுமல்லவா? ஆம்! தமிழ் தவிர இதர மொழிகள் வளம்பெறத் தொடங்கின. ஆங்கிலக் கலப்பில்லாமல் அவரவர் மொழியை அவர்கள் செம்மையாகப் பேசவும் எழுதவும் தொடங்கினர். திராவிட மொழிகள் எனப்படும் தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் பேசுகையில் இயன்றவரை ஆங்கிலம் கலக்காமல் அவர்களால் பேச முடிகிறது. ஆனால் இங்கே, தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே வேண்டும், இந்தி ஒழிக! மும்மொழித் திட்டம் வேண்டாம் என்றெல்லாம் குரல் எழுப்பியதன் விளைவு, தாய்மொழி சிதைந்து ஆங்கிலம் உட்புகுந்து புதியதொரு மொழியாக “தங்கிலீஷ்” உதயமாயிற்று. இந்த நிலை ஏற்படாமல் போயிருந்தால் பிற இந்திய மொழிகளைப் போல நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் வளம் பெற்றிருக்கும், அதன் சிறப்பும், வளமையும் வெளியுலகத்துக்குத் தெரிந்திருக்கும்.
            பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தான் இந்தியர்களுக்கு சுய உணர்வு வந்து தாங்கள் ஆங்கிலேயர்களின் நுகத்தடியில் கட்டப்பட்டு அடிமை வாழ்வு வாந்துகொண்டிருக்கிறோம் என்ற அறிவு உதயமானது. 13ஆம் நூற்றாண்டின் இறுதியோடு தமிழகம் குறிப்பாக சோழ நாடு தன் சுய மொழி ஆளுமைகளை இழந்து, இதர மொழி பேசும் மக்களுக்கு அடிமையாகிப் போனது. அவர்கள் மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் இங்கு தோன்றி தமிழையும், தமிழர் பண்பாட்டையும் அடியோடு புரட்டிப் போட்டு விட்டது. சோழ வம்சம் அழிந்தொழிந்த பின்னர் எத்தனையெத்தனை அந்நியர்கள் இங்கே வந்தார்கள். தெலுங்கு மொழி பேசும் விஜயநகர சாம்ராஜ்ய ஆளுமை, பிறகு மராத்திய மன்னர்களின் ஆட்சி. இப்படி அவர்கள் 1855 வரை இந்த நாட்டை அடிமைப் படுத்தி வைத்திருந்த வரையில் தமிழ் கொச்சை மொழியாக அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கமாகியிருந்தது.
            19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் நம் தேசம் அடிமைப் பட்டுக் கிடப்பதையும், நமது தாய் மொழி அழிந்தொழிந்து போகும் அவல நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதையும் உணர்ந்த பல தேசபக்தர்கள், மொழிப் பற்றாளர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டினை மறக்க முடியாது. அவர்களில் முதன்மை யானவர் தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர். அவர் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வில்லையானால் நமக்குப் பல பழைய காலத்து தமிழிலக்கியங்கள் கிடைக்காமலே போயிருக்கலாம். ரா.பி.சேதுப் பிள்ளை, தெ.போ.மீனாட்சிசுந்தரனார் போன்ற தமிழ்ப் புலவர்கள் தமிழின் செம்மைக்கு அணிசேர்த்தனர். ம.பொ.சிவஞான கிராமணியார், தமிழன் தன் சுய உணர்வற்று அடிமைப் பட்டு கிடந்த நிலைமை கண்டு பொங்கி எழுந்து தமிழனுக்கு நாம் தமிழன் எனும் உணர்வை ஊட்டியவர். சிலப்பதிகாரத்தை இழித்தும் பழித்தும் வந்த தமிழகத்து சிலரது வாதங்களை முறியடித்துக் கண்ணகியின் பெருமையை ஊரறியச் செய்தவர். தமிழ், தமிழ்நாடு, அதன் எல்லைகள் இவற்றுக்காகத் தன் வாழ்நாளை முழுவதுமாகச் செலவு செய்தவர் சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுகின்ற ம.பொ.சிவஞான கிராமணியார்.
            இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் ஒன்றுபட்ட தேசியத்துக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்ட போது மொழிப்பற்றை ஆதாரமாகக் கொண்டு தேசிய ஒருமைப் பாட்டை வலியுறுத்தியவர் ம.பொ.சி. மக்களால் மறக்கப்பட்ட பல தேசிய இயக்கங்களை, போராட்டங்களை தலைவர்களை மக்களுக்கு நினைவு படுத்தியவர் இவர். வ.உ.சி.யின் தியாகம், கட்டபொம்மனின் வீரம், மகாகவி பாரதியின் தேசியம் ஆகியவைகளைப் பற்றி மக்களுக்கு விரிவாக எடுத்துக் காட்டியவர் ம.பொ.சி. தமிழ் என்றதும் நினைவுகு வரும் தேசியவாதி ம.பொ.சி.
            பத்திரிகை, எழுத்து இவற்றால் தமிழ் வளர்த்த சான்றோர்கள் ஏராளமாக இருந்திருக்கிறார்கள். தேசிய எழுச்சியில் ராஜாஜிக்கு வலது கரமாக இருந்தவர் கல்கி ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தி. இவருடைய எழுத்துக்கள், வரலாற்று நவீனங்கள் ஆகியவை மக்கள் மனங்களில் ஆழமாக நிலைகொண்டு இருக்கின்றன. தமிழகத்தின் வரலாற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும்படி அவருடைய வரலாற்று நவீனங்கள் அமைந்திருக்கின்றன. ர.சு.நல்லபெருமாள் எனும் தேசிய உணர்வுடைய வழக்கறிஞர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் அவருடைய புதினங்கள் அனைத்துமே தேசிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாக இருக்கும். கவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவருடன் தமிழ் படித்த கு.ராஜவேலு போன்றவர்கள் தேசபக்தியை வளர்க்கக் கூடிய கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்கினர்.
            திராவிட இயக்கம் வளர்ந்து வந்த ஐம்பதுகளில் பல திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதிக் குவித்த வைகளுக்கு எதிராக தேசிய உணர்வினைத் தூண்டும் அற்புதமான எழுத்துக்களைக் கொடுத்தவர்கள் கவி கா.மு.ஷெரீப், ஏ.பி.நாகராஜன் போன்றவர்கள்.
            இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தமிழ் கடுந்தமிழ் பேசும் பெரும் பண்டிதர்களின் கரங்களில் மாட்டிக் கொண்டு பாமரனுக்கு அது பயன்படாத அளவில் போய்க்கொண்டிருந்தது. பண்டிதர்கள் எழுதுகின்ற தமிழ், ஆழ்ந்த தமிழ் கற்ற புலவர்களுக்குக் கூட புரியாதபடி வேண்டுமென்றே அதனை பாமரனுக்கு எட்டாத வகையில் கையாண்டு வந்தார்கள். மகாகவி பாரதிகூட முதன் முதலில் எழுதி மதுரையில் வெளியான கவிதை இந்த பண்டிதர்களின் கடின தமிழ் மொழியில்தான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் மகாகவி பாரதி நம் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து சுதந்திரப் பறவைகளாக மாறவேண்டி பாடத் தொடங்கினான். அந்தப் பாடல்கள் பண்டிதர்கள் காதில் விழுவதற்காக அல்ல, அடிமட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மண்ணின் மைந்தனாம் பாமரனும் பாடிப் பரவசப் பட்டு நாடு இருக்கும் இழிநிலை கண்டு பொங்கி எழுவதற்காக. அவன் பாட்டு பாமரனைச் சென்று அடைந்தது. பயன் அடிமட்டத் தொண்டன் கூட விடுதலை விடுதலை என்று முழங்கத் தொடங்கினான். பண்டிதன் தமிழ் அன்று முதல் பாமரனின் தமிழாக மாறியது.
            இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழ் இருந்த நிலைமையை பாரதி எடுத்துரைக்கிறான். வருத்தம் மிகுந்த தொனியில் அவன் கருத்துக்கள் வெளிவருகின்றன. அவன் சொல்கிறான் “புத்தம் புதிய கலைகள், பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே, அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவும் கூடுவதில்லை, அவை சொல்லும் திறமை, தமிழ் மொழிக்கில்லை” இப்படி யாரோ ஒருவன் சொன்னானாம். பாரதியின் மனம் கோபத்தால் கொதித்தது. இப்படி சொன்னதோடு நிறுத்தியிருந்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம்; அவன் மேலும் சொன்னது பாரதியின் மனதைப் புண்படுத்திவிட்டது. அவன் சொன்னான்: “மெல்லத் தமிழ் இனி சாகும்; அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்” என்று சொன்னான் அந்தப் பேதை. சொல்லலாமா? சொல்ல விடலாமா?
            பாரதி உணர்ச்சிவசப்படுகிறான்: “ஆ! இந்த வசை எனக்கு எய்திடலாமோ?” என்று உணர்ச்சி மிகுதியோடு கேட்டுவிட்டு நம்மிடம் சொல்கிறான் “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” அப்படிச் செய்தோமானால், நம் தந்தையர் அருள் வலியாலும், சார்ந்த புலவர் தவவலியாலும் இந்தப் பெரும்பழி தீரும்!” என்று நமக்கு வழிகாட்டியது பாரதியின் தேசியப் பார்வை.
            பெரும்பாலும் பாரதியார் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பாமர மக்களுக்குப் புரியும் வகையில் தமிழைப் பயன்படுத்தவில்லை. மாறாகத் தத்தமது பெரும் புலமையை வெளிக்காட்டும் வண்ணம் கடுந்தமிழில் கவிதை புனையவும், புரியாத முறையில் தமிழை எழுதவும் பழக்கப்படுத்தி வைத்திருந்தனர். அந்த நிலைமையை முதன் முதலில் மாற்றி அமைத்த பெருமை மகாகவி பாரதியாரையே சேரும்.
            உடனே நமக்குத் தமிழை மேம்படுத்த என்னென்ன வழிகள் என்பதை பட்டியலிடுகிறான். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை, திறமான புலமையெனில் வெளிநாட்டார், அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்று நம் எதிர்கால திட்டத்தை அழகாக வடிவமைத்துக் கொடுக்கிறான் பாரதி.
            இந்தியா சுதந்திரம் அடைவதற்கு வெகுகாலம் முன்பே ஆங்கிலம் ஆக்கிரமித்திருந்த தமிழ் மொழியில் புத்தம் புதிய தமிழ் சொற்களை அறிமுகம் செய்திட வேண்டுமென்று சேலத்தில் சி.ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) எடுத்த முயற்சிகளைப் பற்றி பாரதி தன்னுடைய காலத்திலேயே அதைப் போற்றி பாராட்டிப் பேசுகிறார்.
            அறிவியலின் வளர்ச்சி பெருகத் தொடங்கிய காலத்தில் நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். ஆகையால் அந்த அறிவியல் சொற்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருந்ததன் பயனாக நம் தாய்மொழியாம் தமிழில் அவை உருவாகாத நிலை இருந்து வந்தது. அது குறித்து பஞ்ச பூதங்களின் இயற்கையைப் பற்றிய ஆய்வுகள் நம்மைக் காட்டிலும் ஐரோப்பியர்களே முன்னிலை வகித்தார்கள். அவற்றைத் தமிழில் ஆர்வம் கொண்டோர் மொழிபெயர்த்தார்கள். இந்த முயற்சி மேன்மேலும் வளரும், வளர்ந்தே தீரவேண்டுமென்ற எண்ணம் அப்போது எழுந்தது. அப்படி புதிய சொற்கள், அறிவியல் குறிப்புகள் தமிழில் வெளிவரவேண்டுமென்றால் அதற்குரிய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற கருத்து தேசியவாதிகள் மத்தியில் உருப்பெற்றிருந்தது. இந்த கருத்தினைச் செயல்வடிவம் கொண்டு வர சேலத்தில் வக்கீல் ஸ்ரீசக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும், ஸ்ரீ வெங்கடசுப்பையரும் சேர்ந்து ஒரு மாதப் பத்திரிகையைத் தொடங்கினார்கள்” என்கிறார் பாரதி.
இதன்படி அறிவியல் சம்பந்தமான சொற்கள் தமிழில் புதிதாக உருப்பெறத் தொடங்கின, பிறகு இதுவே இந்திய சுதந்திரம் பெறும் சமயத்தில் நாட்டை ஆளத் தொடங்கிய சுதேசி தேசியவாதிகள் “கலைச்சொற்கள்” உருவாக்கத்துக்காக ஒரு குழுவினை அமைத்து, புதிது புதிதான கலைச் சொற்களை உருவாக்கினார்கள்.
            இந்தியாவில் மொத்தமுள்ள மொழிகள் மூவாயிரத்துச் சொச்சம். அதில் 216 மொழிகளை பத்தாயிரத்துக்கும் குறைவானவர்கள் பேசுகிறார்கள். 22 மொழிகள் அரசு அங்கீகாரம் பெற்ற ஆட்சி மொழிகள். மீதமுள்ளவை பேச்சு மொழிகள் மட்டுமே. அதிகபட்சமாக இந்தியாவில் இந்தி மொழி பேசுவோர் 41%.பேர். இரண்டாம் இடம் வங்க மொழிக்கு, மூன்றாமிடம் தெலுங்கு, நான்காம் இடம் மராத்தி, ஐந்தாமிடம் நம் தமிழ் மொழிக்கு.
            சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட்டத்தின் தலைவரை “அக்கிராசனர்” என்றும் தேர்தலில் போட்டியிடுபவரை “அபேட்சகர்” என்றும் இப்படி பலவாறாக இருந்த சொற்களை நல்ல தமிழில் இயற்ற இதுபோன்ற கலைச்சொற்கள் குழு முனைந்தது. அலுவலக அன்றாட நடைமுறையில் ஆங்கிலத்தின் இடத்தைத் தமிழ் பிடிக்க வேண்டுமென்பதற்காக புதிய சொற்கள் வெளியிடத் தொடங்கினார்கள். மெல்ல மெல்ல தமிழ் இருள் சூழ்ந்த இருட்டறையிலிருந்து, சிறிது சிறிதாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.
            ஒரு காலத்தில் இந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழிகளின் எண்ணிக்கையை பாரதி “செப்பு மொழி பதினெட்டுடையாள்” என்று பதினெட்டு மொழிகளைக் குறிப்பிடுகிறார். இன்றைய நிலையில் இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள சுதேசி மொழிகளின் எண்ணிக்கை ஏராளம். காலப்போக்கில் இந்த பிரதேச மொழிகள் அனைத்தும் வளம்பெற்று சிறந்து விளங்க வேண்டுமென்றால், ஆங்கிலம் ஆக்கிரமித்துள்ள இடம் இந்த பிரதேச மொழிகளால் நிரப்பப்பட வேண்டுமென்கிற கருத்து தேசியத் தலைமைக்கு ஏற்பட்டது. ஆகையால் ஆங்கிலம் வகித்து வந்த இணைப்பு மொழிக்கு பதிலாக இந்தியாவில் அதிக அளவில் பேசப்படும் இந்தி மொழியை இணைப்பு மொழியாக்கி அந்தந்த பிரதேச மொழிகளுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கினார்கள். இந்தப் பணியைச் செயல்படுத்த மும்மொழித் திட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள். அந்த மும்மொழித் திட்டத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டதன் பயனாக அந்தந்த பிரதேச மொழிகள் வளம்பெற்று விளங்கத் தொடங்கின. ஆங்கிலம் வகித்த தொடர்பு நிலை இந்தி மொழிக்குக் கிடைத்தது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஆங்கிலம் இங்கு தொடர்ந்து இருக்க வேண்டும், இந்தி மொழி திணிப்புக் கூடாது என்ற நிலை எடுத்ததன் பயன், ஆங்கிலம் நம் தமிழை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. ஆங்கிலத்தில் முழுமையாகப் பேசி வந்தவர்கள் கூட தமிழில் பேசமுடியாமல் ஆங்கிலம் கலந்த ஒரு புதிய மொழியைப் பேசத் தொடங்கியதன் விளைவு இன்று தமிழ் மொழி மெல்ல இனிச் சாகும் எனும் நிலைமைக்குக் கொண்டு போய் விட்டு விட்டது.
            பாரதியின் காலத்துக்குப் பிறகு தமிழில் எளிய கவிதைகளை எழுத கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை போன்றவர்கள் தோன்றினார்கள். மிக எளிய நடையில் இருந்த இவர்களது பாடல்கள் பொதுமக்கள் நாவில் தவழ்ந்து விளையாடத் தொடங்கின. ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தமிழ் இருந்திருந்தால் வளர்ந்திருக்க வேண்டிய தமிழ், சுதந்திரத்துக்குப் பிறகு ஏராளமான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எனும் ஆங்கில வழிக் கல்வி போதிக்கும் பள்ளிக்கூடங்கள் செழித்து வளரத் தொடங்கின. விளைவு தமிழ் பேசும் குழந்தைகளைக் காண்பதே அரிதாகப் போய்விட்டது. ஆங்கிலப் பள்ளிகளில் படிப்பது ஒரு Status symbol என்ற எண்ணம் உதயமாகியது. தங்கள் குழந்தைகள் தாய் தந்தையரைக் கூட தமிழில் அம்மா அப்பா என்று கூப்பிடக் கூடாது என்று “மம்மி டாடி” எனக் கூப்பிட வைத்தனர். படித்தவர்களுக்குக் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் தமிழில் பேசினால் கெளரவம் இல்லை என்று ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாகக் கொண்டிருந்தனர். தேசிய உணர்வு உள்ளவர்கள் சுதேசிகள் சுதந்திரத்துக்காகப் போராடிக் கொண்டிருந்த போதே அந்த சுதந்திர உணர்வை தூண்டிவிடுவதற்காக தெசியப் பள்ளிகளை அதிகம் தொடங்கினார்கள். அங்கெல்லாம் தமிழைக் கற்கத் தொடங்கியவர்கள் பிற்காலத்தில் தலைசிறந்த நிர்வாகிகளாகவும் தலைமைப் பொறுப்புக்கும் தகுதியுள்ளவர்கள் ஆனார்கள்.
            ஆங்கில வழியில் கற்றால்தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம் நம்மில் இருக்கிறது. இது குறித்து மகாத்மா காந்தி சொன்ன கருத்து கவனிக்கத் தக்கது: “ஆங்கிலக் கல்வி காரணமாக நாம் நமது ஆண்மையை இழந்துவிட்டோம்; நமது அறிவு குன்றிப்போய் விட்டது. இக்கல்வி முறை காரணமாக நாம் பேடிகளாக்கப்பட்டு விட்டோம். சுதந்திரம் எனும் தென்றலில் நாம் உலவ விரும்புகிறோம். ஆனால் ஆங்கிலக் கல்வி நம்மை அடிமைத்தனத்தில் தள்ளி விட்டது. நமது சமுதாயம் உண்மையை இழந்து விட்டது. இதற்கு முன்பு அந்நியர்கள் நம் மீது படையெடுத்து வந்த காலத்திலும் நாம் அடிமைகளாக இருந்ததில்லை. முகலாயர் ஆட்சியின் கீழ் கூட நமக்குச் சுதந்திரம் இருந்தது. அக்பர் காலத்தில் பிரதாபசிம்மன் தோன்றவில்லையா? ஒளரங்கசீப் காலத்தில் ஒரு சிவாஜி மகராஜ் தோன்றவில்லையா? ஆனால் ஆங்கிலேயர்களின் இந்த ஆட்சிக் காலத்தில் ஒரு சிவாஜியையோ ஒரு பிரதாபசிம்மனையோ நம்மிடையே காணமுடியவில்லையே ஏன், என்ன காரணம்? இந்த அடிமைக் கல்வி முறைதான்”.
            சுப்ரமணிய சிவா ஒரு தீவிர தேசபக்தர். அவர் சொன்னார், “ஒரு சமூகத்துக்கு உயிர் அதன் மொழிதான். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும் அழிந்து போகும். எனவே நாவே தமிழே பேசுக! உங்கள் கையில் ஏந்தும் இறகு தமிழே எழுதுக! உங்கள் இதயம் தமிழையே நாடுக”.
            தமிழ் வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே தேசிய வாதிகள் வலியுறுத்தி வந்தார்கள். அவர்கள் கூற்றுப்படி அன்றைய தினம் “தமிழர்கள் “கான்பரென்ஸ்” என்றும் “மீட்டிங்” என்றும் கூட்டங்கள் கூடி விடிய விடிய வார்த்தை சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்கள். படிப்பில்லாத ஜனங்கள் மிருகங்களுக்குச் சமானமென்று திருவள்ளுவர் பச்சைத் தமிழில் சொல்லுகிறார். நமக்குள் எத்தனையோ புத்திமான்கள் இருந்தும், நம்மிலே முக்காற் பங்குக்கு மேலே மிருகங்களாக இருக்கும் அவமானத்தைத் தீர்க்க ஒரு வழி பிறக்கவில்லையே! ஏன்? எதனால்? காரணம் தான் என்ன?” இப்படி நம் கல்வி முறையை மாற்றி அமைக்க அன்றைய தேசபக்தர்கள் எழுதினார்கள், பேசினார்கள்.
            தேசபக்தர்களுள் முதன்மையானவராக மகாத்மா காந்தியைச் சொல்கிறோம். அவர் தாய் மொழி குஜராத்தி. தமிழ் அவருக்கு அந்நியமான மொழியாக இருந்த போதும் இந்த மொழியின் பால் அவருக்கிருந்த பற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது அவர் கருத்து. தமிழ் இலக்கிய வளமிக்க மொழி என்பதால், பிற மொழியாளரும் தமிழின்பால் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்கிறார் காந்தி.
            ஒரு முறை தமிழகத்தில் காந்திக்கு வரவேற்பு வழங்கப்பட்டது. அதுபற்றி அவர் கூறிய கருத்து கவனிக்கத் தக்கது. அவர் சொன்னார் “உங்கள் வரவேற்பில் திருக்குறள் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். இருபதாண்டுகளுக்கு முன்பே நான் தமிழ் படிக்கத் தொடங்கினேன். ஆனால் தமிழை முழுமையாகக் கற்கும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. அதனால் நான் அடைந்த வருத்தத்துக்கு அளவில்லை” என்கிறார்.
            திரு வி.க. ஒரு தேசிய வாதி, காந்தியப் பற்றாளர். அவர் சொல்கிறார்: “ஆங்கிலம் பயின்ற தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் தமிழ்த் தாயை மாசு படர்ந்த துச்சலில் இறுத்தி, அவளுக்கு உணவும் உடையும் அளியாது வருத்தி, அயல் மாதை வீட்டில் அமர்த்தி, அம்மாதுக்கு நல் உணவும், உடையும் தந்து மலர் சூட்டி அவளை வழிபடுதல் நம் மக்களின் அறிவைப் புலப்படுத்துகிறதா? அல்லது அறியாமையைப் புலப்படுத்துகிறதா?” என்கிறார்.
            தமிழைப் பண்டிதர் கரங்களில் இருந்து வாங்கி எளிய பாமரன் கையில் கொடுத்து அதை அவர்கள் சொத்து என்று விளக்கிய சான்றோர் வரிசையில் மகாகவி பாரதி தொடங்கி எத்தனையெத்தனைச் சான்றோர்கள், அவர்கள் அத்தனை பேரின் நல்லெண்ணம், வாழ்த்து, முயற்சி இவைகளால் தான் இன்று தமிழ் உச்சத்தில் இருக்கிறது. இன்னமும் ஆங்கிலத்தின் தாக்கத்தை மட்டுப் படுத்தித் தமிழை புனிதமாகப் போற்றும் காலம் தான் தமிழின் பொற்காலம் எனலாம்.
            காலமெல்லாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கெனப் பாடுபட்டு, தமிழனத்தின் வாழ்வுக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நம் முன்னோர்களின் அறிவுரைகளைப் புறக்கணிப்போர் தம்மைத் “தமிழர்” என்று கூறிக் கொள்ளும் தகுதியுடையோர் அல்லர். தற்போது தமிழ் மக்களிடையே தாய் மொழிப் பற்று வளர்ந்து வருகிறதென்றாலும், தமிழகத்தில் ஆங்கிலம் முதலிடம் பெற்று வரும் கொடுமையையும், அதனால் விளைகின்ற கேடுகளையும் தேசப்பற்று மிக்கவர்கள் சரியாக உணர்ந்து செயல்பட வேண்டும். வேதனை தரும் இன்றைய நிலை விரைவில் மாறினாலொழிய தமிழினத்துக்கு விமோசனமில்லை.
          வாழ்க தமிழ் மொழி,   வாழிய பாரதம்,   வந்தேமாதரம்!  

No comments: