இருபதாம் நூற்றாண்டின்
முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தேசபக்தர்கள் மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால்,
தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய
சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி
சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.
இப்போது 'வீரமுரசு'
எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் தெரிந்து
கொள்ள வேண்டும், காரணம் இவரைப் பற்றி இன்றைய சூழலில் எவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
சுதந்திரப் போராட்டம் தொடங்கிய காலத்தில், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சர்வ
வல்லமை பொருந்திய ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுக்க தென்னாட்டில்
உருவான ஒருசில வீரர்களில் இவரும் ஒருவர். . இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்றால்
“வீரத் துறவி” என்றழைக்கப்பட என்ன காரணம் எனும் ஐயப்பாடு எழலாம். ஆம்! இவர் அரசியலையும்
ஆன்மீகத்தையும் இணைத்தே இவரது போராட்டம் அமைந்திருந்தது.
இவர் பிறந்த
ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்.
இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன்
என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில்
தோல்வியுற்று, பின்னர் பிழைப்புக்காகத் தூத்துக்குடியில்
போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார்.
இவருக்கு வாழ்க்கையில்
விரக்தி ஏற்பட்டுத் துறவியாக ஆனார்.அவர் நினைவாக
வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு இவர் பெயர்
சூட்டப்பட்டிருக்கிறது. சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு
இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் நாட்டில்
எழுச்சியுற்று வரும் சுதந்திர உணர்வினால் இவருக்கும் தேசபக்தி வேகம் இயல்பாக உண்டாகியது.
தேசபக்தியின் காரணமாக இவர் ஊர் ஊராகச் சென்று
பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.
1906இல் கர்சான்
வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிரித்த காரணத்தால் நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக்
கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோஷம்
எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக்
கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம்
இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.
சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில்
இருந்த வேகமும் தேசபக்தியும் மக்களைக் கவர்ந்திழுத்தது. அந்த சமயம் சென்னை கடற்கரையில்
தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் வ.உ.சிதம்பரம்
பிள்ளையின் செயல்பாடுகளும், சென்னையில் விபின் சந்திர பாலரின் சொற்பொழிவும் சேர்ந்து
சிவாவின் உள்ளத்தில் சுதந்திர தாகம் ஏற்பட்டது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ்
மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் செல்வாக்கு அதிகரித்தது. அப்போது தூத்துக்குடியில்
சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரத்துக்காக முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல்
மில்சில் வ.உ.சி. அறிவித்திருந்த வேலை நிறுத்தப்
போராட்டம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தேச விடுதலை வேட்கையோடு தொழிலாளர் பிரச்சினையிலும்
இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள்
பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக 'வந்தேமாதரம்', 'அல்லஹுஅக்பர்',
என்று முழக்கமிடுவார். தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத
ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில்
வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும்.
சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று
ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர்
அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும்
தொழுநோய். இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில்
குறிப்பிடுகிறார்.
1912இல் இவர்
சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன்
ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட்ரோமாக்ஸ்
விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் இடத்தில்
மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம்.
அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வார். இப்படித்
தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார்.
இரண்டாம் முறையாக
இவர் இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை பெற்று நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த
பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு"
எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த
பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் 'பிரபஞ்சமித்திரன்' எனும் பெயரிலும்
இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின்
கடுமையான பாதிப்பினால், இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த
பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார்.
அதற்காக பிரபல காங்கிரஸ் தலைவர் சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து
1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.
மறுபடியும்
சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஓராண்டு சிறைவாசம். தனது தண்டனையை எதிர்த்து
இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவருக்கு மகாத்மா காந்தியின்
அகிம்சை வழிப் போராட்டத்தில் நம்பிக்கை இல்லை. பால கங்காதர திலகர் மீது நம்பிக்கை கொண்டவர்.
இவர் தொழுநோயினால்
பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு, ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது.
எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு
வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது
அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய நோய், ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப்
பயணம் இவற்றல் ஓய்ந்து போனார். இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக
முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியடிகளின் அகிம்சை வழியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் மீது அக்கறை காட்டவில்லை.
மனம் உடைந்து ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த சுப்ரமணிய சிவா 1925
ஜூலை மாதம் 23ஆம் நாள் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.
கப்பலோட்டிய
தமிழன் என்று ம.பொ.சி. அவர்களால் புகழப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளையுடனான சிவாவின் தொடர்பு
பற்றிய எரியும் சுதந்திரத் தீயின் வீரியத்தை அதிகரிப்பதாக அமைந்தது. வ.உசி.யுடன் இவர்
தனது 23ஆம் வயதில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த இளைய வயதில்
இவர் துறவு மேற்கொண்டது இவருடைய மன உறுதியைக் காட்டுவதாக அமைந்தது. இவருடைய தீரமிக்க
உரைகள் வ.உ.சியை மிகவும் கவர்ந்தது, அதனால் அவரைத் தன்னுடன் இருந்து காங்கிரஸ் இயக்கத்தில்
ஈடுபடச் செய்தார்.
தூத்துக்குடியில்
இருந்த வெள்ளைக்காரர்களின் கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடந்தது. அதை வ.உ.சியும்
சிவாவும் ஒருங்கிணைத்துப் போராடி வெற்றி பெற்றனர். சுதந்திரப் போராட்டம் சூடுபிடிக்கத்
தொடங்கிய அந்த ஆரம்ப காலகட்டத்தில் இவ்விருவரும் இந்தியாவின் தென் கோடியில் பிரிட்டிஷ்
அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தனர். இவர்களுடைய நடவடிக்கைகள் பிரிட்டிஷ் அரசுக்கு
ஆத்திரத்தை உண்டாக்கியது.
1908ஆம் ஆண்டில்
வங்கத்து தேசபக்தர் விபின் சந்த்ர பால் சிறையிலிருந்து விடுதலையானார். அதனைக் கொண்டாடுவதற்காக
தூத்துக்குடியில் வ.உ.சி அவர்கள் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அரசாங்கம்
அதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே வ.உ.சி. அந்தக் கூட்டத்தைத் திருநெல்வேலியில் நடத்த
ஏற்பாடுகள் செய்தார். அதில் சுப்ரமணிய சிவாவும் கலந்து கொண்டார். ஏற்கனவே பிரிட்டிஷ்
கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக கப்பல் கம்பெனி தொடங்கிய வ.உ.சி. மீது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு
கோபம் இருந்தது. எனவே அவர்கள் வ.உ.சி. மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க நேரம் பார்த்துக்
கொண்டிருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்தபடி வ.உ.சியும், சிவாவும்
திருநெல்வேலியில் நடத்தவிருந்த பொதுக்கூட்டத்தைக் காரணம் காட்டி அவர்களைப் பழிவாங்கத்
திட்டமிட்டு, இருவரையும் கைது செய்தனர். இதைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்தனர். திருநெல்வேலி
நகரம் முழ்வதும் போராட்ட களமாக மாறியது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, கடைகள் அடைக்கப்பட்டன,
எங்கெங்கு பார்த்தாலும் மக்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு துணை கலெக்டராக
இருந்த ஆஷ் எனும் பிரிட்டிஷ்காரர் போலீஸ் படையுடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்
மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டனர். கண்மூடித்தனமாக சுடப்பட்டதில் சிறுவர்கள்
உட்பட நால்வர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த வீர தீரச் செயலுக்காக ஆஷ்
துணை கலெக்டர் பதவியிலிருந்து திருநெல்வேலி கலெக்டராகப் பதவி உயர்வு பெற்றார். வ.உ.சியும்
சிவாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1908ஆம் ஆண்டு
மே மாதம் 2ஆம் தேதி மகாகவி பாரதியார் தனது “இந்தியா” பத்திரிகையில் கீழ்வருமாறு எழுதியிருந்தார்.
“திங்கட்கிழமை காலை பாளையன்கோட்டை சிறைக்குச் சென்று
சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா ஆகியோரைக் கண்டு பேசினேன். முன்பு அவருடைய முகம்
எவ்வளவு பிரசன்னமாகவும், தேஜசுடன் விளங்கியதோ அதே போல இப்போதும் இருக்கக் கண்டேன்.
உடனே என் மனதில் தோன்றிய ஒரு கம்பராமாயணப் பாடல்:
“மெய்த்திருப்
பதமே வென்ற போழ்தினும் இத்திருத் துறந்து ஏகு என்ற காலையும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவான்”
கம்ப ராமாயணத்தில்
வரும் இந்தப் பாடல் சொல்லும் கருத்து, இராமனுக்கு முடிசூட்டல் என்று சொன்ன பொதும் சரி,
இல்லை உனக்கு ராஜ்யம் இல்லை காட்டிற்குச் செல் என்றபோதும் சரி அவர் முகம் எந்த வருத்தத்தையும்
காட்டாமல் அன்று புதிதாய் மலர்ந்த செந்தாமரைப் போல இருந்ததைப் போல, அவ்விருவர் முகமும்
இருந்தது என்பதை எடுத்துக்காட்டாகச் சொல்லி போற்றியிருக்கிறார் பாரதியார்.
இவ்விருவர்
மீதும் நடந்த நெல்லை சதி வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக காவல் துறை அதிகாரியாக இருந்த
வேங்கடவரதாச்சாரியார் என்பவர் சாட்சியம் சொன்னார். அப்போது வேளாளரான வ.உ.சி. பிராமணரான
சுப்ரமணிய சிவாவுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார் என்று சொன்னதைக் குறித்து
மகாகவி பாரதி தன் “இந்தியா” பத்திரிகையில் எழுதியிருந்த வரிகள் இவை:
“இன்னுமொரு போலீஸ்காரர், ஸ்ரீசிவம் தூத்துக்குடியில்
ஸ்ரீசிதம்பரம் பிள்ளையோடு, ஒரே வீட்டில் வாசம் செய்துகொண்டு இருந்தாரென்றும், இது வர்ணாசிரம
தர்மத்துக்கு விரோதமென்றும், இதன் பொருட்டு ஸ்ரீசிவம் ஜாதியினின்றும் பகிஷ்காரம் செய்யப்படுவதற்குத்
தகுதியுடையவராவார் என்றும் சொல்லியிருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கு மனுதர்ம சாஸ்திரத்தில்,
இத்தனை தூரம் ஆழமான ஞானம் இருப்பது பற்றி சந்தோஷம் அடைகிறோம்! அதிவர்ணாசிரமியாக, சந்யாச
நிலை பெற்றவர்களுக்கு வர்ணாசிரம பேதம் கிடையாதென்று இந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது
போலும்! போலீஸ் மனுநீதியில் மேற்படி விஷயம் சொல்லப்படவில்லையென்று தோன்றுகிறது. பிராமண
ஜென்மம் எடுத்துப் போலீஸ் உடை தரித்துக் கொண்டு, ஒரு மிலேச்ச அதிகாரியின் கீழ் கைகட்டி
நின்று காவல் வேலை செய்வது, சாஸ்திரத்துக்கு ஏற்றதுதானோ? இதைப் பற்றி இந்த வேங்கடவரதாச்சாரியார்
என்ற போலீஸ்காரர் படித்திருக்கும் மனுதர்ம சாஸ்திரத்திலே, என்ன சொல்லியிருக்கிறதென்று
அறிய விரும்புகிறோம்”.
அதே காலகட்டத்தில்
தூத்துக்குடியில் தலைமைக் காவலராக குருநாத ஐயர் என்பார் இருந்தார். இவர் போலீசில் இருந்தாலும்
தேசபக்தி மிக்கவர். வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் அதிக மரியாதை கொண்டவர். பிள்ளை அவர்கள்
கைது செய்யப்பட்டவுடன் இவர் தனது போலீஸ் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு வெளியேறியவர். இவருடைய செயலைக் கண்டித்து அப்போதைய அரசாங்கம் இவருக்கு
ஆறுமாத சிறை தண்டனை விதித்தது. அவரையும் பாரதியார் சிறையில் சந்தித்துப் பேசிவிட்டு,
அதுபற்றி தனது “இந்தியா” பத்திரிகையில் எழுதியுள்ள பகுதி.
“சிறையில் நான் தலைமைக் காவலராக இருந்த குருநாத ஐயரைச்
சந்தித்தேன். அவர் என்னைக் கண்டவுடன் “வந்தேமாதரம்” என்று முழங்கினார். அவரது குரல்
சிறைச்சாலை முழுவதும் எதிரொலித்தது. அவருக்கு இந்த சத்திரிய பார்வையும், சத்திரிய நடையும்
எப்படி வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை”
(இந்தியா 2-5-1908)
வ.உ.சி. அவர்கள்
மீது பிரிட்டிஷ் அரசாங்கம் 1908இல் ஒரு வழக்கைத் தொடுத்தது. அது இந்திய தண்டனைச் சட்டம்
124-ஏ, 109 பிரிவுகளின்படியும், அந்தணரான சுப்ரமணிய சிவாவுக்கு தங்க இடமும், உணவும்
அளித்து ஊக்குவித்தமைக்காக 153-ஏ பிரிவின்படியும், சிதம்பரம் பிள்ளை மீது குற்றச்சாட்டை
முன்வைத்தனர். சிவா மீது ராஜத் துவேஷ வழக்கு
பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில்
வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோர் சார்பில் தஞ்சையைச் சேர்ந்த வக்கீல் என்.கே.ராமசாமி,
ஆர்.சடகோபாச்சாரியார், சி.நரசிம்மாச்சாரியார், வி.வெங்கட்டராமையர், மதுரை சோமசுந்தர
பாரதியார், எஸ்.டி.கிருஷ்ண ஐயங்கார், டி.ஆர்.மகாதேவய்யர் ஆகியோர் ஆஜராகி வழக்கை நடத்தினர்.
அரசாங்கம் சார்பாக பாரிஸ்டர் பவல் ஆஜரானார். வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே
என்பார் முன்பு நடைபெற்றது. இரண்டு மாத காலம் நடைபெற்ற இந்த வழக்கைப் பற்றி பாரதியார்
தனது “இந்தியா” பத்திரிகையில் எழுதியது:
“ஸ்ரீசிதம்பரம்
பிள்ளை வழக்கு விசாரணையை ‘ஒரு கேலிக்கூத்து’ என்று சொல்லியது முழுவதும் ஒக்கும். கேஸ்
நடவடிக்கைகளைப் படித்துப் பார்க்கும்போது வெகு ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்ரீசிதம்பரம்
பிள்ளை பேசியதில் ராஜத் துவேஷம் ஒன்றும் இல்லாவிட்டாலும், இவரது பிரசங்கத்தினால்தான்
கலகம் உண்டாயிற்று என்று ஸ்தாபிக்கப் பார்க்கிறார்கள். ஸ்ரீபிள்ளையின் அறிவையும் அவரது
பெருந்தன்மையையும் கவனிக்கும் போது, அளவற்ற மனக் குழப்பம் ஒரு புறத்திலும், சந்தோஷம்
ஒரு புறத்திலுமாக உதிக்கின்றன”. (இந்தியா
18-4-1908)
இந்த வழக்கில்
சுப்ரமணிய சிவா அளித்த வாக்குமூலத்தையும் “இந்தியா” பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதன்
சுருக்கம் இதுதான்:
“நான்
ஒரு சந்நியாசி. ‘முக்தி’யின் விதிகளைப் பற்றியும், அதை அடைவதற்குரிய மார்க்கங்களைப்
பற்றியும் பிரசாரம் செய்வதே என் பணியாகும். ஒரு ஆன்மாவிற்கு “முக்தி” என்பது அதற்கு
அந்நியமான சகல கட்டுகளிலிருந்தும் விடுபடுவதாகும். ஒரு தேசத்திற்கு “முக்தி” என்றால்
சகலவிதமான அந்நிய அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவது – அதாவது ‘பரிபூரண சுயராஜ்யம்’
என்றே பொருள். அதன் பிரகாரம் சுயராஜ்யத் தத்துவத்தையும், அதை அடைவதற்கான வழிவகைகளையும்
பற்றியும் நான் எனது நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொன்னேன். எனது நாடு சுயராஜ்யம் அடைவதற்கு
தடங்கலாக நிற்கும் அனைத்தையும் பகிஷ்கரிக்கும்படி – மறியல் முறை – சாத்வீக எதிர்ப்பு
– தேசியக் கல்வி இயக்கம் பற்றி பிரசாரம் செய்தேன்.
எனது
சொற்பொழிவுகள் அமைதியைக் குலைத்தன, ராஜபக்தியை சிதைத்தன, சர்க்காருக்கும், ஐரோப்பியருக்கும்
எதிரான உணர்ச்சிகளை உண்டாக்கின என்று கூறுவது சிரிப்பிற்குரியதே!
ஒரு
மனிதன் உண்மையிலேயே ஒரு நோயினால் கஷ்டப்பட்டாலொழிய, அந்த நோயின் வேதனையை அவன் உணரும்படி
மற்றவர்களால் செய்ய இயலாது. அதே மாதிரி, மக்களிடையே அமைதியின்மை முதலியற்றிற்கு உண்மையான
காரணங்கள் இருந்தாலொழிய வாய்ப்பேச்சு மூலம் அவற்றை தூண்டிவிட முடியுமென்று சொல்வது
மடத்தனம்.
ஆங்கிலேயர்கள்
இந்நாட்டைப் போர் புரிந்து வெற்றி மூலம் பெற்றாரில்லை. தானமாகவும் அடைந்தாரில்லை. ஆனால்,
அரசாண்டவர்களிடமிருந்து, தளபதிகளை வஞ்சகமாகப் பிரித்தும், பொய்ப் பத்திரங்கள் தயாரித்தும்,
கள்ளக் கையெழுத்திட்டும், எளிய மனம் படைத்தோரை ஏய்த்தும் இன்னோரன்ன தந்திரங்களும்,
துரோகங்களும் பலப்பல செய்ததன் பயனாகவே, இந்நாட்டை அடைந்துள்ளனர். இத அதிருப்தி மக்களின்
உள்ளத்தில் அதிகமாக வளர்ந்து, 1857இல் எரிமலையாக வெடிக்கும் அளவிற்கு வளர்ந்தது.
இம்மண்ணிலே
பிறந்து வளர்ந்த மக்களுக்கு இல்லாமல், வாழவந்த ஐரோப்பியர்களுக்கே அதிகமான சலுகைகளையும்,
உரிமைகளையும் வழங்கும் சட்டங்கள் பல உருவாக்கப்பட்டன. பலவிதமான வரிகளின் பெயரால், மக்களின்
ஜீவரத்தம் உறிஞ்சப்பட்டது. பஞ்சமும், கொடுநோயும், உள்நாட்டுக் குழப்பங்களும், இந்நாட்டையே
தங்களது நிரந்தர குடியிருப்பாகக் கொண்டுவிட்டன.
மக்களின்
தலைவர்கள் பலர், சட்டத்தின் பொய்யான ஏமாற்றான, சில காரணங்களால் காட்டப்பெற்று, சிறையில்
தள்ளப்பட்டிருக்கிறார்கள். கிரிமினல் வழக்கு விசாரணைகள் வெறும் கேலிக் கூத்துகளாகி
விட்டன.
இத்தகைய
மனிதத் தன்மையற்ற கொடிய நடவடிக்கைகளெல்லாம் சேர்ந்து, ஆட்சிப் பொறுப்பின் கொடுங்கோன்மையையும்,
அது மாற வேண்டிய அவசியத்தையும் மக்கள் உணரும்படி செய்தன. மக்கள் அவிவித உணர்ச்சி பெறுவது
இயல்பேயாகும்.
அநியாயத்தை
அகற்றிவிட்டு, தர்மத்தை அதன் இடத்திலே நிலைநிறுத்தவே, நேர்மையான சிந்தனையாளன் ஒவ்வொருவனும்
பாடுபடுவான். அவ்வாறே இந்திய நாட்டினரும் அந்நிய ஆட்சியை அகற்றிவிட்டு தங்கள் சுயராஜ்யத்தை
அமைப்பதற்காக, இப்பொழுது உழைத்து வருகிறார்கள்.”
இதுதான் சிவா
நீதிமன்றத்தில் எடுத்துரைத்த வாதம். இதனைத் தொடர்ந்து 1908 ஜூலை 7இல் நீதிபதி பின்ஹே
தனது தீர்ப்பை வழங்கினார். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இரண்டு ஜென்ம தண்டனை, அதாவது நாற்பதாண்டு
கால சிறைவாசம், சிவாவுக்கு பத்தாண்டு காலம் தீவாந்திர தண்டனையும் வழங்கினார். இந்திய
சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே இதுபோன்ற நாற்பதாண்டு கால சிறை தண்டனை என்பது எவருக்குமே
கொடுக்கப்பட்டதில்லை.
நீதிமன்றத்தில் இந்த தண்டனை விவரங்களைக்
கேட்டுக் கொண்டிருந்த வ.உ.சியின் தம்பி மீனாட்சிசுந்தரம் என்பார் தனது சகோதரருக்கு
அளிக்கப்பட்ட கொடிய தண்டனையைக் கேட்டு மனம் பேதலித்து வாழ்நாள் முழுவதும் மனம் கலங்கியவராகவே
வாழ்ந்தார். இந்தத் தீர்ப்பை அந்நிய நாட்டு பத்திரிகைகள் உட்பட இந்திய பத்திரிகைகள்
அமிர்தபஜார் பத்ரிகா, சுதேசமித்திரன், ஸ்டேட்ஸ்மென், ஸ்டாண்டார்டு போன்றவை கண்டித்து
எழுதின. இந்த தீர்ப்பு அப்போது லண்டனில் இருந்த இந்தியா மந்திரியான லார்ட் மார்லியைக்
கூட அதிர்ச்சியடைய செய்து விட்டது. இந்த தண்டனையைச் சிறிதும் ஆதரிக்க இயலாது, இந்த
தவறு திருத்தப்பட வேண்டுமென்று கருத்து வெளியிட்டார். அதன் விளைவாக நீதிபதி பின்ஹே
அங்கிருந்து மாற்றப்பட்டார். வ.உ.சியும் சிவாவும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளை
எதிர்த்து மேல் முறையீடு செய்தார்கள். அதில் இருவருக்கும் தலா ஆறாண்டுகள் தண்டனையாகக்
குறைக்கப்பட்டது.
வ.உ.சி. கோவை சிறையிலும், கண்ணனூர் சிறையிலும்
வைத்திருந்தனர். சிறையில் அவருக்கு செக்கிழுக்கும் பணி கொடுக்கப்பட்டது கொடுமையிலும்
கொடுமை. சிவா திருச்சி சிறையில் மாவு அறைத்தல்,
கல் உடைத்தல் போன்ற கடுமையான பணிகளைச் செய்து உடல் நலம் கெட்டார். சிறையில் தொழு நோய்
உண்டாகி அவர்களுக்கான தனிச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இப்படி இவ்விருவரும் சிறைகளில் பட்ட பாடுகளைக்
கேள்விப்பட்டுதான் மகாகவு பாரதியார் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” எனும் பாடலில்
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ!”
என்று பாடினார். சிறைவாசம் சிவாவின் உடலை மிகவும் மோசமாக பாதித்து விட்டது. சிறையிலிருந்து
வெளிவந்த பிறகு “ஞானபானு”, “பிரபஞ்சமித்திரன்” ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். சிறைவாசத்தின்போது
இவர் பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.
1921ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் காரைக்குடியில்
தனது ஆசிரமத்தில் இருந்த சிவாவை மீண்டும் கைது செய்தனர். வழக்கு நடந்து இவருக்கு ரூ.500
அபராதமும் கட்டத் தவறினால் ஆறுமாத தண்டனையும் அளித்தார்கள். அபராதத் தொகை கட்ட இயலாமல் அவர் மீண்டும் திருச்சி
சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருடைய உடல் நிலை மிகவும் அபாயகரமான நிலைமைக்குச்
சென்றதால் மருத்துவர் சிபாரிசில் 1922 ஜனவரி 12இல் விடுதலை செய்யப்பட்டார்.
பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் எழுப்ப
அவர் எடுத்த முயற்சிகள் அவர் காலத்தில் நடைபெறவில்லை. நோயின் கடுமையினால் இவர் தனது
41ஆம் வயதில் 1925 ஜூலை 23ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். இப்போது பாப்பாரப்பட்டியில்
சிவாவின் நினைவாக எழுப்பப் பட்டிருக்கும் மணிமண்டபம் அவர் நினைவை போற்றி பாதுகாத்துக்
கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment