பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, January 7, 2020

திருவாடனை சிறை உடைப்பு.


                          
            1942 ஆகஸ்ட் புரட்சி தமிழ்நாட்டின் உட்பகுதியிலும் தீவிரமடைந்திருந்தது. அந்த நாள் காங்கிரஸ் கட்சியில் சின்ன அண்ணாமலை நன்கு பிரபலமான பெயர். ராஜாஜி, கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, ம.பொ.சி. ஆகியோருடன் நெருங்கிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் இவர். காரைக்குடி கம்பன் விழா நடத்தி வந்த திரு சா.கணேசன் அவர்களுடைய உறவினர் இவர். தேவகோட்டையைச் சேர்ந்தவர். இவர் பெயர் அண்ணாமலை என்பது, அதனுடன் “சின்ன” சேர்ந்த வரலாறு ஒன்று உண்டு. திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் கூட்டமொன்றில் ராஜாஜி தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலையில் பிரபலமான காங்கிரஸ் தலைவராக இருந்தவர் திரு அண்ணாமலை பிள்ளை என்பவர், அவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். ராஜாஜி எழுந்து இப்போது அண்ணாமலை பேசுவார் என்று அறிவித்தார். மக்கள் தங்கள் ஊர் அண்ணாமலை பிள்ளைதான் பேசப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இளைஞர் ஒருவர் வந்து மேடையில் மைக்கின் முன்பு நின்றார். மக்கள் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த ராஜாஜி மைக் முன்பு வந்து “நான் அறிவித்தது உங்கள் ஊர் அண்ணாமலை பிள்ளையை அல்ல, இதோ, இந்த “சின்ன” அண்ணாமலையைத்தான்” என்று சொன்னார். அது முதல் இந்த அண்ணாமலை சின்ன அண்ணாமலையாக அரசியல் களத்தில் தேசிய கூட்டங்களில் முழங்கிக் கொண்டிருந்தார்.

            இவருடைய உறவினர் திரு சா.கணேசன், காரைக்குடியில் கம்பன் கழகம் சார்பில் ஆண்டுதோறும் கம்பன் விழா நடத்தி வந்தவர். நமது சின்ன அண்ணாமலை அந்த தீவிர காங்கிரஸ் தலைவருடனேயே சுற்றி வந்து கொண்டிருந்ததால், அவரும் சா.கணேசனைப் போலவே தீவிர தேசபக்தராக விளங்கி வந்தார். இளமைப் பருவத்தில் மலேயாவில் படித்துவிட்டு அவருடைய சொந்த கிராமமான சிறுவயலுக்கு வந்து சேர்ந்தார். தேவகோட்டையில் இருந்த இன்னொரு குடும்பத்திற்கு இவர் சுவீகாரம் கொடுக்கப்பட்டுச் சென்றவர்.

            இனி இவருடைய காங்கிரஸ் வரலாற்றுக்கு வருவோம். 1942 ஆகஸ்டில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் “க்விட் இந்தியா” எனும் வெள்ளை ஆட்சியே இந்தியாவை விட்டு வெளியேறு எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில்தான் காந்திஜி “செய் அல்லது செத்து மடி” (Do or Die) என்கிற கோஷத்தை எழுப்பினார். எப்போதுமி இல்லாத வகையில் அந்த தீர்மானத்தில் மகாத்மா காந்தி சொன்ன ஒரு கருத்து பின்னாளில் முக்கியத்துவம் பெற்றது. அது இந்த போராட்டம் நமது சுதந்திரத்தை நோக்கிய இறுதி போராட்டம். இதில் வெற்றி அல்லது வீர மரணம் என்பதைக் குறிக்கவே அந்த கோஷத்தை அவர் எழுப்பியதோடு, அவர் சொன்னார், இந்த முடிவினால் காங்கிரஸ் தலைவர்கள் சிறை செல்ல நேர்ந்தாலும், தொண்டர்கள் அவரவர்க்கு முடிந்த வகையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி யிருந்தார்.

            ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றிரவே காந்திஜி உட்பட பல தலைவர்களும் கைது செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பப் பட்டு சிறை வைக்கப்பட்டனர். நாடெங்கும் பெரும் எழுச்சி ஏற்பட்டு, இந்த அநியாய கைது நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவரவர்க்கு முடிந்த வகைகளில் எல்லாம் போராட்டம் நடைபெற்றதால், எங்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் இல்லை. அதன் பாதிப்பு தமிழ்நாட்டிலும் ஏற்பட்டதன் விளைவு அதே நாள் இரவு தேவகோட்டையில் அப்போது பிரபலமான, இளம் காங்கிரஸ் தலைவராக இருந்த சின்ன அண்ணாமலையும் கைது செய்யப்பட்டார். இது குறித்து அவர் தன்னுடைய “சொன்னால் நம்பமாட்டீர்கள்” எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

            இவருடைய கைதுக்குக் காரணம் இவர் தேவகோட்டையில் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரிகள் உள்புகுந்து அப்போது 144 தடை சட்டம் இருப்பதால் கூட்டம் நடக்கக் கூடாது என்று சொன்னார்கள். போலீசார் நீட்டிய அந்த காகிதத்தை சின்ன அண்ணாமலை வாங்கி கிழித்துப் போட்டு விட்டார். இதனைக் கண்ட மக்கள் கூட்டம் போலீசாரைச் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்யத் தொடங்கி விட்டனர். வேறு வழியின்றி போலீசார் வெளியேறி, அன்று நள்ளிரவில் சின்ன அண்ணாமலையைக் கைது செய்து விட்டனர். அவரைக் கைது செய்த ரிசர்வ் போலீசார் இவர் கையில் விலங்கை மாட்டி “இராம விலாஸ்” எனும் பஸ்சில் ஏற்றி பலத்த காவலுடன் தேவகோட்டையிலிருந்து 22 கி.மீ தூரத்திலுள்ள திருவாடனையில் இருந்த சப் ஜெயிலுக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.

            மறுநாள் காலையில் கைது விஷயம் வெளியான பிறகு மக்கள் கொதித்தெழுந்து இவரை விடுதலை செய்யச் சொல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஊரில் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. அன்று காலை இவரை திருவாடனைக்குக் கொண்டு சென்ற “இராமவிலாஸ்” பஸ் தீயிட்டு எரிக்கப்பட்டது. கலவரம் கட்டுக்கடங்காமல் போகவே போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் பலர் இறந்து போனார்கள். செய்தியறிந்து இதர கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கட் கூட்டம் தேவகோட்டைக்கு வந்து அங்கிருந்து திருவாடனையை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள். பல்லாயிரம் மக்கள் ஒன்று திரண்டு திருவாடனைக்குச் சென்று அங்குள்ள சப் ஜெயிலை உடைத்து சின்ன அண்ணாமலையை வெளிக் கொண்டு வந்து விடவேண்டுமென்ற நோக்கத்துடன் வந்து கொண்டிருந்தனர். இந்த செய்தி அறிந்த திருவாடனை அரசாங்க அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அனைவரும் சப் ஜெயிலில் இருந்த சின்ன அண்ணாமலையிடம் நடந்து கொண்டிருக்கும் கலவரம் குறித்துச் சொல்லி, இப்போது என்ன செய்யலாம் என்று கலந்து ஆலோசித்தனர்.

            சின்ன அண்ணாமலை அவர்களிடம் வரும் கூட்டம் மிகப் பெரியது மட்டுமல்ல கோபத்தோடு வருகிறார்கள், அவர்களை அடக்குமுறையால் தடுத்துவிட நினைத்தால் அது மேலும் பெரும் கலவரமாக மாறிவிடும். ஆகவே மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தார் பாதுகாப்பு, அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

            சின்ன அண்ணாமலை கொடுத்த உறுதியை ஏற்று தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு போலீஸ்காரர்கள் தங்கள் காக்கி சீறுடைகளைக் கழற்றி அங்கு வைத்துவிட்டு கோபத்துடன் வரும் மக்கட் கூட்டம் தங்களையோ, குடியிருப்பில் இருக்கும் தங்கள் குடும்பங்களையோ தாக்காமல் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றனர்.

            சற்று நேரத்திற்கெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக வந்து கைகளில் பல்விதமான ஆயுதங்களுடன் சிறையை உடைக்கத் தயாராக வந்து சேர்ந்தனர். அந்தக் கூட்டத்தில் சின்ன அண்ணாமலையின் நண்பர் ஒருவர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லத்துரை என்பவரும் இருந்தார். அவர் மூலம் வந்த மக்களை சிறைக்கு முன்பாக இருந்த மைதானத்தில் அனைவரையும் உட்கார வைத்தார்கள். நண்பர் செல்லத்துரை சின்ன அண்ணாமலையிடம் இப்போது நாங்கள் சிறையை உடைத்து உங்களை வெளிக் கொண்டு வரப் போகிறோம் என்றார். அங்கிருந்த வார்டன் உடைக்க வேண்டாம் இதோ சிறையின் சாவிகள் என்று கொடுத்து விட்டுப் போய்விட்டார். ஆனால் மக்களோ சிறையை உடைத்தே உங்களை வெளிக் கொணர்வோம் என்று சொல்லி, பூட்டை உடைத்து கதவைத் திறந்து விட்டார்கள்.

            அன்று நண்பகலில் நடந்த இந்த களேபரத்தில் அருகில் இருந்த போலீஸ் குடியிருப்பில் இருந்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் பயத்தில் வீட்டுக்குள் பதுங்கியிருந்தனர். அங்கு போகவிருந்த கூட்டத்தினரைப் பார்த்து சின்ன அண்ணாமலை அங்கு போய் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம், அவர்கள் அனைவரும் நமக்கு ஒத்துழைப்பு தந்திருக்கிறார்கள், அவர்கள் விட்டுச் சென்ற சீருடை இங்கே இருக்கிறது பாருங்கள் என்றதும், அதை கூட்டம் தீ வைத்து எரித்தது.

            அனைத்தும் நடந்து முடிந்ததும் கூட்டத்தினர் இவரைத் தங்கள் தோளில் தாங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதற்குள் திருவாடனை சப் ஜெயிலும், அதனைச் சுற்றியிருந்த அரசாங்க அலுவலகங்களுக்கும் தீவைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தன. இந்த ஊர்வலம் ஊரைத் தாண்டி சென்றுகொண்டிருந்த சமயம் எதிரில் வெகு தூரத்தில் போலீஸ் லாரிகள் அணிவகுத்து வந்து கொண்டிருந்ததைக் கண்டனர். கூட்டத்தினர் இதனால் கோபாவேசம் கொண்டு, அவற்றைத் தாக்க வேண்டுமென்று கிளம்பிய போது சின்ன அண்ணாமலை அவர்களைத் தடுத்தார். போலீஸ் கலவரத்தை அடக்க வந்து கொண்டிருப்பதால், இப்போது போய் நீங்கள் அதனை எதிர்த்து ஏதேனும் செய்தால் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வார்கள், நம்மில் பலரும் இறக்க நேரிடும், ஆகையால் அனைவரும் ஆங்காங்கே சாலையோரத்திலுள்ள புதர்களில் ஒளிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.  எதிரில் வரும் மக்கள் கூட்டத்தை லாரிகளில் வந்த போலீசாரும் பார்த்துவிட்டனர். ஆகவே அவை இவர்கள் பதுங்கியிருந்த இடத்தை அடையும்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அதில் ஒரு குண்டு சின்ன அண்ணாமலையின் இடது கையில் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற பலரும் அவருக்கு முன்பாக வந்து நின்றதால் அவர்கள் அனைவரும் குண்டடி பட்டு இறந்து விழுந்தார்கள்.

            கூட்டம் சின்னாபின்னம் அடைந்தது. போலீசார் கண்மூடித்தனமாகக் கூட்டத்தைப் பார்த்து சுட்டுக் கொண்டு போய்விட்டார்கள். சுற்றிலும் ஒரே பிணக் குவியல், உயிர் போன உடல்களும் குண்டடிபட்டு ரத்தம் ஓட மயக்கமடைந்து கிடப்பவர்களுமாக அந்த இடமே யுத்த களம் போல் காணப்பட்டது. ஒரு தேசபக்தனைக் காப்பதற்காக இத்தனை உயிர்கள் பலியாவதா என்று சின்ன அண்ணாமலை மன வேதனை அடைந்தார். அங்கே நடந்தவைகளை நினைத்துக் கொண்டு அவரும் சிலரும் அங்கேயே வெகு நேரம் நின்றிருந்து விட்டு, நன்கு இருள் பரவியதும் அங்கிருந்து மெல்ல நடக்கத் தொடங்கினர்.

            நல்ல இருள், மேடு பள்ளம் தெரியாத நிலை, கால்களில் முட்கள் குத்தி ரத்தம் வரத் தொடங்கியது. இவருக்குக் கையில் குண்டு பாய்ந்து அதிகம் ரத்தம் கசிந்ததால் இவருக்கு மயக்கம் உண்டாகி வீழ்ந்து விட்டார். உடன் இருந்தவர்களும் மயக்க நிலையில் ஆங்காங்கே படுத்துவிட்டனர்.

            அங்கு எத்தனை நேரம் மயக்க நிலையில் கிடந்தார்களோ தெரியாது, அவர்களை யார் யாரோ வந்து தட்டி எழுப்பிக் கொண்டிருந்ததைக் கண்டு விழித்து எழுந்தனர். அங்கு சுமார் பத்து பதினைந்து பேர் சூற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் போலீசாரோ என்று இவர்களுக்குச் சந்தேகம், ஆனால் அவர்கள் போலீஸ் அல்ல. இறந்து போன அவர்களது உறவினர்க்கு பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்தவர்கள். அப்படியானால் அவர்கள் விழுந்து கிடந்த இடம் சுடுகாடு என்பதறிந்து அங்கேயா இரவு முழுவதும் விழுந்து கிடந்தோம் என்று அதிர்ச்சி அடைந்தார்கள்.

            இனி திருவாடனைக்கோ அல்லது தேவகோட்டைக்கோ, காரைக்குடிக்கோ சென்றால் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று இவர் திருச்சிக்குச் சென்று அங்கு இருந்த காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.அருணாசலம் என்பவரைச் சென்று சந்தித்து நடந்த விவரங்களைச் சொன்னார். இவருடைய குண்டடிபட்ட கையையும், ரத்தக் கறையோடு இவர் வந்து நிற்பதைக் கண்டு டி.எஸ்.அருணாசலம் இவரை டாக்டர் ஒருவரிடம் அழைத்துச் சென்று கையில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டை வெளியே எடுத்துவிட்டு கைக்குக் கட்டுப்போட்டு தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். டாக்டரும் ஒரு தேசபக்தர் என்பதால் இதை ரகசியமாகச் செய்து அவர்களை அனுப்பி விட்டார்.

            இவரைத் தேடி போலீஸ் பல இடங்களிலும் அலைந்து இவரைக் காணாமல் ஒரு அறிக்கை வெளியிட்டது. இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று அறிவித்தது. அந்த சூழ்நிலையில் அவர் திருச்சியில் தன்னுடன் இருந்தால் அவருக்கும் ஆபத்து என்று இவரை இன்னொருவர் வீட்டில் ரகசியமாகத் தங்க வைத்து விட்டார் டி.எஸ்.அருணாசலம்.

            அப்படியிருந்தும் போலீஸ் திரு அருணாசலத்தைக் கைது செய்து விட்டனர். இனி அங்கிருப்பது தனக்கு ஆபத்து என்று தெரிந்து சின்ன அண்ணாமலை அங்கிருந்து தெரிந்தவர் ஒருவருடைய காரில் கரூர் சென்றடைந்தார். அங்கு அப்போது டி.கே.சண்முகம் சகோதரர்களின் நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன. அவர்களிடம் போய் சின்ன அண்ணாமலை அடைக்கலம் புகுந்தார், அவர்களும் இவரை ஜாக்கிரதையாகப் பாதுகாத்தனர்.

            பிறகு கரூரிலிருந்து சென்னைக்குச் சென்று அங்கு சா.கணேசனைப் பார்த்து நடந்தவைகளைச் சொன்னார். அவர் இங்கு இருந்தால் போலீஸ் உன்னைப் பிடித்து விடுவார்கள், ஆகையால் நீ போய் காசியில் தங்கிக் கொள் என்று  ஒரு நண்பரையும் உடன் அனுப்பி சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இவரை தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன், ஏ.கே.செட்டியார், ராம்நாத் கோயங்கா ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

            இவர்கள் சென்ற ரயில் இட்டார்சி எனும் நிலையத்தோடு நின்றது. மறுநாள்தான் காசிக்கு ரயில் இருந்தது. அது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம், ஜப்பான் குண்டு போடும் என்று மக்கள் பயத்தில் இருந்த நேரம். ஆகையால் ராணுவத்தினரும், காவல் துறையினரும் அதிக நடமாட்டம் இருந்தது. இவர்கள் இட்டார்சி நிலையத்தில் இறங்கி அங்கிருந்த உணவு நிலையத்தில் போய் சாப்பிட உட்கார்ந்தார்கள். அவர்களுக்கு உணவு பரிமாறியவர் ஒரு தமிழர். இவர்களைக் கண்டதும் அவர் மகிழ்ச்சியோடு தானும் ஒரு தமிழன் ராமநாதபுரம் மாவட்டம் என்று சொல்லி அங்கு பெரிய கலவரமாமே, ஜெயிலை உடைத்து அங்கிருந்தவர்களை விடுதலை செய்து விட்டார்களாமே என்றதும், அப்படி விடுதலையானவர் தான் தான் என்று சின்ன அண்ணாமலை அறிமுகம் செய்து கொண்டதும் அந்த ஊழியருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் திருவாடனை ஜெயிலை உடைத்து மக்களால் விடுதலை செய்யப்பட்டவர் நீங்கள்தானா என்று அவரைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தாராம் அந்த ஊழியர்.

            இவர்களை அந்த ஊழியர் தன் முதலாளியிடம் சென்று அறிமுகம் செய்து வைக்க, அவரும் ஒரு தேசபக்தர் என்பதால் இவர்கள் தங்குவதற்கு ஒரு அறையைக் கொடுத்து ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொன்னாராம். அப்படி அங்கு அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நள்ளிரவுக்குப் பிறகு அந்த ஓட்டல் முதலாளியும், ஊழியரும் ஒரு போலீஸ் அதிகாரியுடன் உள்ளே நுழைந்தார்கள். அடடா! இவர்கள் நம்மைக் காட்டிக் கொடுத்து விட்டார்களோ என்ற சந்தேகம் இவருக்கு.

            ஆனால் அங்கு வந்த போலீஸ் அதிகாரி தமிழில் பேசினார். “இந்தத் தம்பி எல்லாம் சொன்னான். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி அவர்களைத் தனது வீட்டுக்கு வந்து தமிழ்நாட்டுச் சாப்பாடு சாப்பிட அழைத்தார் அந்த அதிகாரி. அவர் தன் பெயர் சுந்தர்சிங் என்றும் மதுரையைச் சேர்ந்த தான் காசியில் வியாபாரம் செய்ய வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், சோமசுந்தரம் என்கிற தன் பெயரை சுந்தர்சிங் என்று வைத்துக் கொண்டதாகவும் சொன்னார் அவர். அந்த அதிகாரியின் வீட்டில் இவரை அவர் மனைவி “வணக்கம்” என்று தமிழில் சொல்லி வரவேற்றதும் இவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அந்த அதிகாரி இவர்களுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து காசிக்கு வழி அனுப்பி வைத்தாராம்.

            காசியில் இவர் இருக்கும் நேரத்தில் அங்கு தேவகோட்டையில் போலீஸ் இவருடைய குடும்பத்தாரைத் துன்புறுத்தி இவர் இருக்குமிடம் கேட்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். அவருடைய தாயையும் துன்புறுத்திய செய்தி கேள்விப்பட்டு இவர் தானாகவே காசியிலிருந்து கிளம்பி அங்கு வந்து போலீசிடம் சரணடைந்தார். பின்னர் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இவரும் சிறைவாசம் செய்த பின் தமிழ்நாடு அரசியலில் காங்கிரசில் ஒரு சிறந்த பேச்சாளராக, பத்திரிகையாளராக, புத்தக வெளியீட்டாளராக விளங்கி வந்த ஒரு தேசிய வாதி. சின்ன அண்ணாமலையைப் போன்ற தேசிய வாதிகளின் வரலாற்றை இளைய சமூகம் தெரிந்து கொண்டால்தான் தேசபக்தி என்பதை நன்கு உணர்ந்து கொள்ள இயலும். அவரைப் போன்ற தியாகசீலர்களின் தியாகத்தால்தான் நாம் இன்றைய சுதந்திரத்தை அனுபவிக்கிறோம் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

No comments: