பாரதி புதுவை வந்து சேர்ந்த வரலாறு. ஸ்ரீஸ்ரீ ஆச்சார்யா.
பாரதியார் வாழ்வில் சென்னையிலிருந்து அவர்
புதுவை சென்றது மிக முக்கியமான சம்பவமாகும். புதுவையில் இருந்ததன் காரணமாகவே, அரவிந்தர்,
ஐயர், பாரதி என்ற தேசபக்த மும்மூர்த்திகள் அங்கே சந்தித்து ஒன்றாக வாழும் சந்தர்ப்பமும்,
பாக்கியமும் ஏற்பட்டன.
புதுவையில் பாரதியாருக்கு உற்ற துணைவர்களாக
இருந்தவர்களில், சென்னையிலிருந்து பாரதியாருடன் அங்கு சென்று குடியேறிய மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார்
முக்கியமானவர் ஆவார். இவர் தூத்துக்குடி சுதேசிக் கப்பல் முயற்சியில் லட்சக் கணக்கில்
நஷ்டமடைந்த தேசபக்தர்கள் குடும்பத்தில் உதித்தவர், திருவல்லிக்கேணியில், பேயாழ்வார்
கோயில் தெருவில் 3ஆம் எண்ணுள்ள வீட்டில் வசித்து வந்தார்.
அவர் தம் கட்டுரையில், பாரதி புதுவை வந்த
வரலாற்றை விவரிக்கிறார்:--
சென்னையில் 1908ஆம் வருடத்தில் “இந்தியா” பத்திரிகையின் மேல் ராஜத்துவேஷ
வழக்கு ஆரம்பித்த போது, அதன் முக்கிய எழுத்தாளரான பாரதியார் பேரிலும் ‘வாரண்ட்’ பிறப்பித்திருந்தது. அவருக்கு
சிறைவாசங்களின் கஷ்டம் தெரியும். நமது நண்பர் சிதம்பரம் பிள்ளை, சுப்ரமண்ய சிவா முதலானோர்களை
சிறையில் கண்டு சம்பாஷித்திருக்கிறார். அங்குள்ள கஷ்டங்களுக்கு அவர் பயப்படவில்லை.
அவரது வாழ்க்கையே எப்போதும் எளிய வாழ்க்கை, கிடைத்தது உண்டு, கிடைத்த இடத்தில் படுப்பார்.
வேண்டியிருந்தால் பட்டினியாகவும்கூட நாட்களைத் தள்ளுவார். ஆனால் கட்டுக்கு அடங்கி இருப்பது
என்பது அவருடைய இயற்கைக்கு அடியோடு விரோதமானது.
தம் குடும்பத்தாரையோ, நண்பர்களையோ பிரிந்து
தனித்திருப்பதற்கும் அவர் அஞ்சவில்லை. ஆனால் சிறையில் தம் இஷ்டம்போல் உலாவவும், உண்ணவும்,
படுக்கவும், எழுந்திருக்கவும் விடமாட்டார்களே, அதற்கென்ன செய்வது? தமக்கிஷ்ட மில்லாத
ஒரு வேலையைக் கொடுத்து அதைக் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பார்களே, அதற்குத்
தாம் எப்படி உட்படுவது? இந்தப் பயம்தான் அவருக்கிருந்தது.
இப்படிக் கட்டுப்பட்டுப் பிழைப்பதைவிட
எங்காவது ஓடிப்போய் பட்டினி கிடந்தாவது வாழலாம் எனத் தீர்மானித்தார் அவர். அச்சமயத்தில்
சிலர், புதுச்சேரி அந்நிய ராஜாங்கமாகையால், அங்கு சென்று பகிரங்கமாக ஒரு பயமுமின்றி
அவர் வசிக்கலாம் என்றர்கள். அதற்கு இசைந்து, சிட்டி குப்புசாமி ஐயங்கார் என்பவருக்கு
(இவர் குவளை கிருஷ்ணமாச்சாரியாருக்கு ஷட்டகர் முறை) தம் நண்பர் ஒருவர் கொடுத்த கடிதத்தோடு
அங்கு சென்றார். புதுவை நகர், அதுவரை கடன்பட்டுத் திண்டாடு வோருக்குப் புகலிடம் என்ற
பெயர்தான் பெற்றிருந்தது. பாரதியார் அங்கு சென்றதிலிருந்து அதனுடைய பெருமை அதிகரித்தது.
அதன் அந்நிய ஆட்சியில் சரண்புகும் அரசியல் வாதிகளை பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் ஒன்றும்
செய்ய இயலாது என்னும் விஷயம், பாரதியார் அங்கு சென்று தங்கினதிலிருந்துதான் இந்தியா
பூராவும் தெரியவந்தது. என்ன புரட்சி எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், அகிம்சை வழியில்
நடக்கும் எந்த அரசியல் வாதியும் அங்கு நிர்பயமாக வசிக்கலாம் என்பது அவரால் உறுதி பெற்றது.
இரண்டு வருஷங்களுக்குப் பிறகு ஸ்ரீ அரவிந்தர் அங்கு வந்து தங்கியதற்கும் இதுவே காரணம்
எனலாம்.
பாரதியார் புதுவை சென்ற செய்தி இரண்டு
நாட்களுக்கெல்லாம் சென்னை போலீசுக்குத் தெரிந்து விட்டது. ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்த
விரும்ப வில்லை. கோர்ட்டில் வழக்கு நடக்கையில் அதைக் கூறுவது அவசியமானபோது கூட, வெளிப்படையாகச்
சொல்லாது, அதை மழுப்பிவிட்டார்கள். அரசியல் வாதிகளுக்கு இப்படி ஒரு புகலிடம் இருப்பது
நாடெங்கும் தெரியாமலிருப்பது மேலென அவர்கள் எண்ணினார்களோ என்னவோ! ஆனால், பாரதியாரின்
பெயர் தமிழ் நாடெங்கும் பரவியிருந்தபடியால் அவருடைய புதுவை வாசம் வெகு சீக்கிரத்தில்
யாவருக்கும் தெரிந்து விட்டது.
பாரதியார் மனதில் ஒரு எண்ணம் புகுந்தால்
அது இடைவிடாது வேலை செய்துகொண்டே இருக்கும். போலீஸ்காரானிடம் சிக்காது ஊர்போய்ச் சேரவேண்டு
மெனக் கருதியதனால் ரயிலில் தம்மருகில் எவன் வந்தாலும் அவன் போலீஸ்காரனா யிருப்பானோ
என்ற ஐயம்தான் முதலில் அவருக்குப் பிறக்குமாம். சற்று நேரம் அவனோடு பேசியும் அவன் நடத்தையைக்
கவனித்தும் பார்த்த பிறகுதான் சந்தேகம் நிவர்த்தியாகுமாம்.
நேரில் சென்னையில் ரயில் ஏறாமல் சைதாப்பேட்டை
சென்று அங்கிருந்துதான் புதுவைக்குப் புறப்பட்டார் பாரதி. இரவெல்லாம் கண்விழித்து அயர்ந்து,
விடியுமுன் புதுவை போய்ச் சேர்ந்தார். அங்கு ஸ்டேஷனில் பொழுது நன்றாக விடியும் வரை
இருந்துவிட்டு காலையில் குப்புசாமி ஐயங்கார் வீடு போய்ச்சேர்ந்தார். அங்கு அவரால் வரவேற்கப்பட்டு
போஜனத்திற்காகக் கூடக் கவலைப்படாமல், தன் அலுப்புதீர அன்று பகல் பொழுதெல்லாம் படுத்துறங்கினார்.
இப்படி இரண்டு நாட்கள் கழிந்தன.
இதற்குள் சென்னை போலீசுக்கு செய்தி எட்டிவிட்டது.
அதைப் பெரிதாகப் பாராட்டாதவர்கள் போல வெளிக்கு அவர்கள் காட்டிக் கொண்டாலும், தக்க வேவுகாரர்களை
அங்கு அனுப்பிவிட்டார்கள். இதற்கு முன் அரசியல் விஷயமாக அங்கு பலமுறை வேவுகாரர்கள்
அனுப்பப்பட்டதும் உண்டு. பர்மிய அரசராகிய தீபா என்பவரைச் சிறைப்படுத்தி அந்நாட்டைக்
கைவசப் படுத்திக் கொண்டபோது, அதன் அரசுரிமை கொண்ட மிங்கூன் என்னும் ஓர் அரசிளங்குமரர்
கல்கத்தாவிலிருந்து சந்தனநகர் (சந்திரநாகூர்) தப்பியோடி அங்கிருந்து புதுவை வந்தார்.
அவரை வேவு பார்க்க ஒருசில போலீஸ் ஆட்கள் அனுப்பப்பட்டார்கள். அவ்வரசிளங்குமாரர் இந்தோசைனா
தலைநகராகிய சைகோனுக்குத் தப்பியோடியதும், அவ்வேவுகாரர்கள் எடுபட்டுப் போனார்கள். இம்முறை
பாரதியாருக்காக அனுப்பப்பட்ட வேவுகாரர்கள் படை அன்றுமுதல் அங்கு நன்றாக வேரூன்ற ஆரம்பித்துவிட்டது.
அத்தினத்தை அப்படையின் அங்குரார்ப்பண தினமாகக் கொள்ளலாம். அன்று சென்னை வேவு போலீசுக்கும்
புதுவைக்கும் ஏற்பட்ட நெருங்கிய சம்பந்தம் வெள்ளை ஆட்சி நீங்கும் வரை நீடித்தது. இடையில்
லட்சக்கணக்கான பெரும் பணச் செலவோடு மகத்தான ஒரு வேவு படை அங்கு வைக்கப்பட்டிருந்தது.
ஒரு புதிய இடத்தில் சில வேவுகாரர்களை நியமித்துவிட்டால்,
அவர்கள் மேலதிகாரிகளுக்கு ஏதாவது வேலை செய்ததாகக் காட்ட வேண்டியிருக்கிறது. அதனால்
அவர்கள் சும்மா இருப்பதில்லை. சரியான வழிகளில் தேடிப்பார்த்து ஒரு குற்றமும் இல்லை
என்று ஏற்பட்டாலும், சில குறுக்கு வழிகளில் சென்று குற்றங்கள் இருப்பதாக எண்ணி அவற்றைக்
கண்டுபிடிக்க முயல்வார்கள். பாரதியார் அங்கு ஆங்கில சர்க்காருக்கு விரோதமாக ஏதாவது
சதி செய்கிறாரா என்பதைக் கவனிப்பது அவர்கள் கடமை. அதைச் செய்வதைவிட்டு, அங்கு அவர்,
நிம்மதியாக வாழாமலிருப்பதற்கு வேண்டிய இடைஞ்சல்களை உண்டுபண்ண முயன்றார்கள். அவருக்கு
இடம் கொடுத்த ஐயங்காரை அழைத்து பயமுறுத்தும்படி பிரெஞ்சு போலீசைத் தூண்டினார்கள்.
குப்புசாமி ஐயங்கார் சென்னை அரசியல் விஷயங்களில்
எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டவரன்று. அவர் ஒரு சிறு வியாபாரி. ரஸவாதத்தில் நம்பிக்கை
வைத்து அதில் அதிக பணம் செலவழித்து ஏழையானவர். சங்கீதத்தில் ஞானமுண்டு. நன்றாகப் பாடுவார்.
வைதீக ஆசாரங்களில் பற்றுடையவர். ஆங்கிலத்திலும், ப்ரெஞ்சிலும் சிறிது பயிற்சியுண்டு.
சற்று பயந்த பேர்வழி. போலீஸ் என்றால் கிட்டக்கூட போகமாட்டார். இப்பேர்பட்டவரை போலீஸ்
தலைவன் அழைத்து விசாரித்தால் பயந்து போகாமல் வேறென்ன செய்வார்?
‘பாரதியை உமக்கு
முன்னே தெரியுமா? அவரை நீர் ஏன் வீட்டில் வைத்திருக்கிறீர்?’ என்று
கேப்டன் கேட்டதற்கு, தமக்கு அவரைத் தெரியாதென்றும் தமது நண்பரொருவர் தம்மிடம் அனுப்பியதால்
அவருக்கு இடம் கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
‘பாரதி இங்கிலீஷ்
சர்க்காருக்கு விரோதமாகப் பிரசாரம் செய்துவிட்டு இங்கு வந்து தங்கியிருக்கிறார், நீர்
அவரை வீட்டில் வைத்திருக்கலாகாது. அதனால் உமக்குக் கஷ்டம் நேரக்கூடும். அவரை வெளியே
அனுப்பிவிடும்’ என்று அரைவாசி புத்திமதி யாகவும், அரைவாசி
மிரட்டலாகவும் காப்டன் சொன்னார்.
ஐயங்காருக்கு தர்மசங்கடமாய் விட்டது. ‘வீட்டுக்கு வந்தவரை எப்படி வெளியே போகச் சொல்வது? தம்மிடம் அவரை
அனுப்பிய நண்பர் என்ன நினைப்பார்? என்று ஆலோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தார்.
அங்கு பாரதியாரிடம், “ஐயா, போலீஸ்காரனோ என்னை பயமுறுத்துகிறான்.
எனக்கு உங்கள் விஷயம் ஒன்றும் தெரியாது. இன்னது செய்வதென்று எனக்குப் புரியவில்லை.
ஆகையால் நீங்கள் வேறிடம் பார்த்துக் கொள்வது நலம்” என்று ஐயங்கார்
சொல்ல ஆரம்பித்தார்.
விஷயங்களில் ஏதாவது கோணல் ஏற்பட்டால் பாரதியார்
முதலில் அதைப்பற்றி மிதமிஞ்சி கலவரப்படுவது வழக்கம். சிறிது நேரம் கழிந்ததும் அதைப்பற்றி
தீர ஆலோசித்து மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, தைரியமாயிருப்பார். ஆனால் அந்தச் சிறிது
நேரத்திற்குள் அவர் படும் மனவேதனை சொல்லி முடியாது. நாட்டின் விடுதலைக்காகப் போராட
முனைந்தால், வெளிநாட்டிலுமா நிற்க நிழலில்லாமற் போகவேண்டும் என்ற ஆத்திரம் அவர் மனதைப்
புண்படுத்திற்று. ஐயங்காருக்கு பதில் சொல்ல அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. “இனும் இரண்டு நாட்கள் பொறும். ஏதாவது தனியாக ஏற்பாடு செய்து கொண்டு
விடுகிறேன்” என்று அப்பொழுது சொல்லிவிட்டார்.
இரண்டு நாட்களும் கழிந்தன. அவ்விரண்டு
நாட்களும் அவருக்கு இரண்டு யுகமாயிருந்தது. என்ன ஆலோசித்தும் அவருக்கு ஒரு வழியும்
தோன்றவில்லை. ஊர் புதிது; ஒரு நண்பருமில்லை; தெரிந்த மனிதனொருவனும் கிடையாது; இந்த
நிலையில் ஐயங்கார் தம்மிடம் வரவரக் கடுமையாக நடந்து கொள்வதை உணர்ந்தார். பாரதியாருக்குத்
தம் வாழ்க்கையில் என்றும் காணாத ஒரு புதிய அனுபவமாக இருந்தது இது. தம்மை வேண்டாதவரோடு
அவர் அரை நொடிகூட சகவாசம் செய்யமாட்டார். எவ்வளவோ பெரிய ஜமீன்தார்களைக்கூட அலட்சியம்
செய்திருக்கிறார். அவருக்குக் கோபம் இப்பொழுது பொங்கி எழுந்தாலும், தம்மை முதலில் வரவேற்று
இடம் தந்தவரை எப்படிக் கடிந்து கொள்வது? அவரோ பயந்த பேர்வழி; போலீஸ் வற்புறுத்தலுக்கு
எதிர்த்து பதில் சொல்லத் திறமையற்றவர் என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டு, இன்னும் ஆழ்ந்து,
ஏதாவது வழியுண்டா என்று ஆலோசிக்கலானார்.
இங்கிலீஷ் போலீஸ் சும்மா இருக்கவில்லை.
மறுபடி பிரெஞ்சு போலீசைத் தூண்டினார்கள். ஐயங்கார் மறுபடி வரவழைக்கப்பட்டார். பின்னும்
கடினமாக மிரட்டப்பட்டு வீடு திரும்பினார். ஐயங்கார் திரும்பியபோது வாய் திறந்து ஒன்றும்
சொல்லாவிடினும், முகம் அவர் மனநிலையைக் காட்டிவிட்டது. பாரதியாருக்கு நெஞ்சு துடிதுடித்தது.
தமிழ் நாட்டில் வீர சுதந்திர எண்ணம் பரப்பிய தமக்கு, புதுவையில் அவ்வுணர்ச்சி கொண்ட
ஒருவனும் கண்ணில் படவில்லையே என்று தவிக்கலானார். தாம் சென்னையை விட்டு வரும்போது “இந்தியா” பத்திரிகைக்கு புதுவையில் சந்தாதாரராக
இருந்தவர்கள் பெயரைக் குறித்துக் கொள்ளாமற் போனோமே என வருந்தினார். அவர்களில் ஒருவரிடம்
சென்றிருந்தால் இவ்வளவு எளிதில் தம்மை கைவிடமாட்டார்கள் என்று தோன்றிற்று.
இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, தெய்வம்
ஏதாவது வழிகாட்டும் என்று அன்றிரவு பெருங் கவலையோடு வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது திண்ணைக்குப் பக்கத்திலிருந்த குறடு வழியாகச் சென்ற ஸ்ரீகுவளை கிருஷ்ணமாச்சாரியார்
அவரைக் கண்டு பேசினார். பாரதியைக் கவிந்திருந்த இருள் நீங்கிற்று; ஒளி உதயமாயிற்று.
கவலை தீரும் வழி தெரிந்தது.
ஸ்ரீகுவளை கிருஷ்ணமாச்சாரியார் பாரதியை
சுந்தரேசய்யரிடம் அழைத்துச் சென்றார். சுந்தரேசய்யர் மூலம் வேறொரு வீட்டில் அன்றிரவே
பாரதியார் தங்க ஏற்பாடாயிற்று.
இந்த சமயத்தில், சில மாதங்கள் புதுச்சேரியில்
சென்று கழிக்கவேண்டுமென்று நானும் அங்கு போய் பாரதியாரோடு தங்கினேன். சிறுவயதில் அங்கு
படித்தவனாகை யால் எனக்கு அவ்வூரில் பலரைத் தெரியும். என்ன கஷ்டம் வந்தாலும் இனி சமாளித்துக்
கொள்ளலாம் என்ற தைரியம் பாரதியாருக்குப் பிறந்துவிட்டது. சில நாட்களுக்கு முன் அவர்
பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து இனிமையாய்க் காலம் கழிக்க சில சந்தர்ப்பங்களும் வந்து
கூடின.
இச்சமயத்தில் சென்னையில் ராஜத்துவேஷ வழக்குக்காக
ரிமாண்டிலிருந்த ஸ்ரீ ஜி.சுப்பிரமணியருக்காக சில பெரிய மனுஷர்கள் குறுக்கிட்டு சர்க்காரோடு
மன்றாடி, அவருக்கு மன்னிப்பும், விடுதலையும் பெற்றுக் கொடுத்தனர். அதே மாதிரி பாரதியாரும்
ஒப்புக்கொண்டால் பலரைக் கொண்டு முயற்சி செய்வதென்று தீர்மானித்துக் கொண்டு பாரதியின்
மாமனார் செல்லப்பையரும், மைத்துனர் அப்பாதுரையும் வந்திருந்தார்கள். பாரதியார் சிறிதும்
இடம் கொடுக்கவில்லை.
“இங்கு நான் என்ன
கஷ்டப்படுகிறேன்? அங்கு வந்து நான் என்ன சுகப்படப் போகிறேன்? அங்கேயானால் எந்த வேளையில்
போலீஸ் என்ன செய்யுமோ என்று திகில் பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இங்கு இந்த அழகிய
பங்களாவில் நான் சுகமாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையோ?”
என்று கேட்டார்.
பாரதியார் புதுவை சென்ற ஒரு மாதத்திற்குள்
இந்தியா பத்திரிகையின் சொந்தக்காரரான ஸ்ரீ ந.திருமலாச்சாரியாரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் தமது பத்திரிகையை சென்னையிலிருந்து புதுவைக்கே
கொண்டு வந்து விடுவதென்ற தீர்மானத்தோடு வந்தார். சென்னையிலிருந்தால் அதற்கு நித்தியகண்டமாயிருக்கும்.
இங்கு பாரதியாரும் இருப்பதனால் அது ஒழுங்காக நடக்கக் கூடும் என்று எண்ணினார். பாரதியாரும்
அதை ஆமோதித்தார்.
ஆனால், இடையில் எங்களுக்குள் ஒரு சிறு
யோசனை நடந்து கொண்டிருந்தது. திருமலாச்சாரியாரும் அதில் கலந்து கொண்டார். மூவருமாக
ஐரோப்பா சென்று சுற்றுப்பிரயாணம் செய்து வருவது என்றும், அதற்கு முன் “இந்தியா” பத்திரிகையைப் புதுவையில் நடத்த
தக்கபடி ஏற்பாடு செய்துவிட்டுப் போவதென்றும் பேசிக்கொண்டோம்.
சென்னையில் வழக்கு நடந்தாலும் “இந்தியா” பத்திரிகை தப்பாமல் வெளிவந்து
கொண்டேயிருந்தது. அதை சரிவர நடத்தி மேற்பார்வை பார்த்து வந்தார் ஸ்ரீ எம்.பி.டி.ஆச்சார்யா
என்பவர். அவர் திருமலாச்சாரியாரின் சிறிய தகப்பனார் மகன். அவரோடு திருமலாச்சாரியார்
தம்பி போல் பழகி வந்தார். அதனால் அவரைக் கொண்டே பத்திரிகையைப் புதுவையில் நடத்தச் செய்வது
என்று திருமலாச்சாரியார் கருதினார். அதற்கேற்ற ஏற்பாடுகளைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கையில்,
ஸ்ரீ எம்.பி.டி. ஆச்சார்யாவே திடுமென்று அங்கு வந்து சேர்ந்தார்.
பத்திரிகைக்கு மறுபடி ஏதாவது ஆபத்து வந்ததோ
என்று நாங்கள் பரபரப்புடன் அவரைக் கேட்டோம். அப்படிக்கொன்றுமில்லை என்றும், தாம் இங்கிலாந்து
செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறபடியால் தமால் பத்திரிகையைப் பார்த்துக் கொள்ள முடியாதென்றும்
கூறினார். தாம் கொழும்பு வழியாகச் செல்ல உத்தேசித்ததனால் நடுவில் புதுவையில் எங்களோடு
சில நாட்கள் தங்கியிருந்து போவதென்று தாம் வந்ததாகவும் கூறினார்.
இவர் தனது வெளிநாட்டு யாத்திரையைப்பற்றி
திருமலாச்சாரியாரோடு சில மாதங்களுக்கு முந்தியே பேசியிருந்தார். அப்போது அவர் வேண்டாமென்று
தடுத்ததனால் நின்று போயிற்று. இப்போது என்ன சொல்லியும் கேட்கவில்லை. தம் தாய் தந்தையரோடு
கலந்து ம்டிவு செய்துகொண்டு வந்திருப்பதாகவும், இனி அதை நிறுத்த முடியாதென்றும் அவர்
கூறினார்.
இதனால் எங்கள் யோசனைகள் எல்லாம் தடுமாறிப்
போயின. பாரதியாருக்கு ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்துவர வேண்டும் என்று ஆவல்
வெகு அதிகமாயிருந்தது. அச்சமயம் அவரது பந்துவும் அவருக்கு அவ்வப்போது பண உதவி செய்து
வந்தவருமான ஸ்ரீ லக்ஷ்மணய்யர் என்பவர் அங்கு வந்திருந்தார். அவரிடமிருந்து சிறு உதவியும்,
அவர் மூலம் தமது வெளி நண்பர்களிடமிருந்து சிறு உதவியும் பெற்று, போதும் போதாதற்கு,
திருமலாச்சாரியாரும் நானும் பார்த்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தோம். இதற்கெல்லாம்
சிறிது காலம் வேண்டி யிருந்தது. அவர் மனைவி செல்லம்மாள் கர்ப்பாயிருந்தது, இரண்டாவது
பெண் சகுந்தலா பிறக்கும் தருணமாயிருந்தபடியால் அதுவரை வெளிநாடு செல்வதை ஒதுக்கி வைத்துவிட்டு,
“இந்தியா” பத்திரிகையை புதுவைக்குக்
கொண்டு வருவதைப் பற்றி தீவிரமாய் எல்லா ஏற்பாடுகளும் செய்யத் தொடங்கினோம்.
ஸ்ரீ எம்.பி.டி.ஆசார்யா அதைவிட்டு வந்தபடியால்
அதற்குச் செய்ய வேண்டியிருந்ததை முதலில் கவனிக்க வேண்டியிருந்தது. பிரெஞ்சு சட்டப்படி
புதுவையில் ஒரு பத்திரிகை நடக்க வேண்டுமானால் அதற்குப் பொறுப்பாளியாக ப்ரெஞ்சு இந்தியக்
குடி ஒருவர் இருந்தாக வேண்டும். வில்வநல்லூரில் வசித்துவந்த எனது பழைய நண்பரான ஸ்ரீ
எஸ்.லக்ஷ்மிநாராயண ஐயர் அப்பொறுப்பை ஏற்க ஒப்புக்கொண்டார்.
திருமலாச்சாரியாரும் புதுவையில் ஒரு வீட்டை
வாடகைக்கு அமர்த்திவிட்டு, அச்சு சாமான்களை அங்கு அனுப்ப சென்னை வந்து சேர்ந்தார்.
அவை அங்கு போய்ச் சேர்ந்ததும் ஸ்ரீசங்கரநாராயணய்யர் என்னும் நண்பரைப் புதுவைக்கு அனுப்பி
பாரதியோடு கலந்துகொண்டு “இந்தியா” பத்திரிகையைக்
கூடிய சீக்கிரம் வெளியிடும்படி திருமலாச்சாரியார் சொன்னார். சில நாட்களுக்குள் தாமும்
அங்கு சென்று பத்திரிகையை வெளியிடலானார்.
“இந்தியா” அங்கிருந்து வெளிவரத் தொடங்கியதிலிருந்து பாரதியாருக்கு ஒருவித
மன நிம்மதி ஏற்படலாயிற்று. பிற்காலங்களில் அவர் இயற்றிய பெருங்காவியங்களுக்கு அம்மனவமைதி
இன்றியமையாததாக இருந்தது. பாரதியார் சென்னையில் இருந்திருந்தால் கூட்டங் கூட்டுவதிலும்
மேடைகள் மேல் உபந்நியாசங்கள் செய்வதிலுமே காலம் கழிந்திருக்கும். இப்பொழுது போல ஆழ்ந்த
உள்ளுணர்வுகளை இனிய பாடல்கள் மூலம் வெளியிட தமக்கு அவகாசம் கிடைத்திராது என்று அவரே
பலமுறை கூறியிருக்கிறார்.
2. புதுச்சேரியில்
பாரதிக்கு உதவிய நண்பர்கள்.
“வெல்லச்சு” கிருஷ்ணசாமி செட்டியார்.
புதுவையில்
பணநெருக்கடி காலத்தில், பாரதியாருக்கு உற்ற துணைவர்களாயிருந்து சலிக்காமல் பணவுதவி
செய்தவர்களில் இருவர் பெயரை முதன்மையாகக் குறிப்பிட வேண்டும். ஒருவர் ‘முத்தியாலுபேட்டை’
என்று வழங்கப்பட்ட ஸ்ரீ வெ.கிருஷ்ணசாமி செட்டியார். இவரை பாரதி ‘வெல்லச்சு செட்டியார்’
என்றுதான் அழைப்பார்.மற்றவர் ஸ்ரீ சுந்தரேசய்யர். புதுச்சேரிக்கு, ஒரு மைல் வடக்கே,
முத்தியாலுபேட்டை என்று ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் கிருஷ்ணசாமி செட்டியார் என்று
ஒரு இளைஞர் இருந்தார். அவருக்குத்தான் ‘வெல்லச்சுச் செட்டியார்’ என்ற அருமையான செல்லப்
பெயரை பாரதியார் வைத்தார்.
கிருஷ்ணசாமி
செட்டியார் ரொம்ப ‘குள்ளை’. நல்ல கெட்டியான இரட்டை நாடி உடம்பு. அவருக்கு உடலிலும்,
மனதிலும் சோர்வை ஒருநாளும் நான் பார்த்ததில்லை. அவருக்குச் செல்லப் பெயர் அமைந்தது,
அவருடைய உறுதியின் காரணத்தால். இந்தச் செட்டியாருக்குத் தொழில் நெசவு. கொஞ்சம் பூஸ்திதியும்
பணமும் உண்டு. துணி வியாபாரமும் நடந்துகொண்டு வந்தது. இவர் அடிக்கடி பாரதியார் வீட்டுக்கு
வந்துவிடுவார். எத்தனை நாழிகை வேண்டுமானாலும், மெளனமாய் உட்கார்ந்திருப்பார். முதலில்
பாரதியாரை “ஸ்வாமி” என்று கும்பிட்டதோடு சரி.
பாரதியாருக்கு அவரிடம் ரொம்பப் பிரியம்.
அவரிடம் தாம் பாடிய பாடல்களைப் படித்துக் காண்பிப்பதில் பாரதியாருக்கு ரொம்ப திருப்தி.
செட்டியாரின் முகத்தைப் பார்த்தால், அவர் ஒரு இலக்கிய ரசிகராகவே தோன்றாது. செட்டியாருக்கு
அப்பொழுது (1910-11) வயது சுமார் இருபது இருக்கலாம். இவரிடத்தில் பாரதியார் வீணாக வாசித்துக்
காண்பிக்கிறாரே என்று எங்களில் சிலர் எண்ணியதுண்டு. ஆனால், சிரிக்க வேண்டிய பகுதியில்,
எங்களுக்கு முன்னமேயே செட்டியார் ‘களுக்’கென்று சிரித்துவிடுவார். சோக ரசகட்டம் வந்தால்,
செட்டியாராலே முகத்தை கண்கொண்டு பார்க்க முடியாது. முகத்திலே உருக்கம் தாண்டவமாடும்.
பார்வையிலே நாம் எவ்வளவு ஏமாந்து போகிறோம்
என்பதற்கு கிருஷ்ணசாமி செட்டியாரை, ஒரு உதாரணமாக பாரதியார் அடிக்கடி சொல்வார். ‘எந்தப்
புற்றில் என்ன பாம்பு இருக்குமோ யார் கண்டது?’ என்று பேச்சை முடித்துவிடுவார் பாரதியார்.
இந்த மாதிரி சமயங்களில், பாரதியார் சில கதைகள் சொல்லுவார். செட்டியாரைக் குத்துகிறது
போலவும், தூக்கிப் பேசுகிற மாதிரியும் பாரதியார் ஒரு சிறுகதை சொல்லுவார். அது பழைய
கதைதான். நண்பர் செட்டியாருக்கு, அதை பாரதியார் பிரயோகச் செய்ததால், அதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இரண்டு பேர்கள், காட்டுப்பாதையாகப்
போய்க்கொண்டிருந்தார்களாம். ஒருவர் குடியானவன், மற்றவர் செட்டியார். காட்டுப் பாதையில்
திருடர் பயம் ஜாஸ்தி. இருட்டுக்குமுன் கடந்து விடலாம் என்று இருவரும் பயணம் புறப்பட்டார்கள்.
ஏதோ அவகேட்டால், இருட்டிப்போன பிறகுதான், அவர்கள் காட்டுக்குள் நுழைந்தார்கள்.
“ஏன் செட்டியாரே! கதை சரியாகச்
சொல்ல வேண்டுமானால் இந்த சமய திருடர்கள் வரலாமா அல்லது கொஞ்ச தூரம் வழிநடந்து, சிறிது
காலமான பிறகு வரலாமா?” என்று பாரதியார் கேட்பார்.
“எந்த சமயத்தில் வந்தாலென்ன? நான்
பாரதியாரோடு வழிப்பிரயாணம் செய்கிற செட்டி, எனக்கு என்ன பயம்? என்பார் செட்டியார்.
“அச்சா! அப்படிச் சொல்லப்பா, தங்கமே!”
என்று பாரதியார் விழுந்து விழுந்து சிரிப்பார். நாங்கள் மட்டும் சிரிக்காமல் இருப்போமா?
திருடர்கள் குடியானவனை நையப்புடைத்து அவனிடமிருந்ததைப்
பிடுங்கிக் கொண்டார்கள். செட்டியார் (கதையில் வரும் செட்டியார்) பார்த்தார். மூச்சை
உள்ளே வெளியே விடாமல் படுத்துக் கொண்டார். திருடர்கள் செட்டியாரைக் கோலால் தட்டிப்பார்த்து
‘கட்டை கிடக்கிறது’ என்றார்கள்.
“உங்கள்
வீட்டுக் கட்டை பத்து ரூபாய் பணத்தை மடியில் கட்டிக்கொண்டுதான் படுத்துக் கிடக்குமோ?”
என்றார் செட்டியார்.
“என்ன
செட்டியாரே! சரிதானே கதை?” என்பார் பாரதியார்.
“கதை எப்படி இருந்தாலும் அது இப்பொழுதுதான்
முடிந்தது” என்று சொல்லிக்கொண்டு செட்டியார், மடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து
பாரதியாரிடம் கொடுப்பார். ’கதையில் திருடர்கள், நான் பகல் கொள்ளைக்காரன்1” என்று சொல்லி
பாரதியார் கடகடவென்று சிரிப்பார். பாரதியார் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதில்
செட்டியாருக்கு பிரம்மானந்தம். செட்டியார் கண்கொட்ட மாட்டார். பாரதியாரின் முகத்தை
அப்படியே அள்ளி விழுங்கிவிடுவதைப் போல, பாரதியாரின் முகத்தில் செட்டியார் லயித்துப்
போயிருப்பார். அத்தகைய பக்தியை, செட்டியாரிடம் தவிர, வேறு யாரிடமும் அவ்வளவாகப் பார்த்ததில்லை.
என்ன ஆச்சரியம்! செட்டியாரைப் பார்த்தால்,
ஒன்றுமே தெரியாத, ஒன்றுமே விளங்காத அப்பாவியைப் போல இருப்பார். ஆனால் அவர் செய்கிற
காரியமோ, அபாரமாயிருக்கும். பாரதியார் சொல்லிய கவிதையை, செட்டியார் எவ்வளவு நேர்த்தியான
நகைச்சுவையுடன் முடித்தார். விளையாட்டுக்காக, செட்டியார் பாரதியாரிடம் அந்த ரூபாயைக்
கொடுக்கவில்லை. பாரதியாரின் நிலைமை அறிந்தே அவருக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தார்.
மாலை வேளைகளில், நண்பர்கள் கூடிக்கொண்டால்,
அவர்களுக்கு ஏதேனும் சிற்றுண்டிகள் வழங்கவேண்டும் என்று பாரதியாருக்கு ஆசை உண்டாகும்.
அந்த சமயத்தில் அருமை கிருஷ்ணசாமி செட்டியார் அங்கே அனேகமாய் இருப்பார். பாரதியாரிடம்
ஏதாவது எல்லாப் பணமிருக்கும். அதை எடுத்து நண்பர்களிடம் காட்டி, “இது செல்லுமா, பார்த்துச்
சொல்லுங்கள்” என்பார். நண்பர்கள் செல்லாது என்றால், “செல்லும் செல்லாததற்கு செட்டியார்
அதோ இருக்கிறார்” என்று பாரதியார் வாஞ்சையுடன் “வெல்லச்சு” நண்பரைச் சுட்டிக் காண்பிப்பார்.
மகா சூட்சுமக்கிராகியான கிருஷ்ணசாமி
செட்டியாருக்கு இந்தக் குறிப்பு தெரியாதா? உடனே, நோட்டோ, பணமோ வெளியே வரும். பணமில்லாமல்
பாரதியாரிடம் வரலாகாது என்பது செட்டியாரின் சங்கற்பமா? செட்டியார் மடியில் எப்பொழுதும்
பணம் இருக்கும் என்பது பாரதியாரின் நம்பிக்கையா? செட்டியாரைப் போல அபூர்வமான குணங்களைப்
படைத்தவர் நம் நாட்டில் சில பேர்களே.
3. தேசம்
பூராவுமே என் மக்கள். தங்கம்மாள் பாரதி (பாரதியாரின் மூத்த மகள்)
பாரதியாரைப் பற்றியும் அவரது குணாதிசயங்களைப்
பற்றியும் எழுத எழுத வளர்ந்து கொண்டே போகும். ஸ்ரீராமரது ஸெளந்தர்யத்தை சீதாபிராட்டியாரிடம்
வர்ணித்துக் கடைசியில் ‘அந்த ராம ஸெளந்தரியம் என்னால் அறிந்து சொல்லப் போமோ, அம்மா!”
என்று கூறிய அனுமாரைப் போல நானும் உணர்கிறேன்.
பாரதி! உன்னைப் புகழ்வதற்கு எங்களது
மொழிகளைக் காட்டிலும் உனது பொன்மொழிகளாலே புகழ்ந்தால்தான் என் காதுகளும் குளிரும்,
மனதும் மகிழும்.
“போற்றி போற்றி யோராயிரம் போற்றி – நின் பொன்னடிக்குப்
பல்லாயிரம் போற்றி காண் சேற்றிலே புதிதாக முளைத்தோர் செய் தாமரைத் தேமலர் போலொளி -
தோற்றி
நின்றனை பாரத நாட்டிலே துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை பாரதீ! எங்கள்
சாதி
செய்த தவப்பயன் வாழி நீ!”
1882ஆம் வருஷம் ஜனங்கள் அறியாமை என்னும்
மடுவில் மூழ்கி அடிமைச் சேற்றில் புதையுண்டு வருந்தினர். பழந்தமிழின், சுவையறியாராயினர்.
தனது அருமைப் புதல்வர், புதல்வியர்கள் யாவரும், அடிமைகளாக, ஊமையராய்ச், செவிடர்களாய்,
குருடர்களாய் வாழ்வது கண்டு பாரதமாதா வருந்தி, நமது “கவிப்பிரம்மா”வைத் தோற்றுவித்தாள்.
மங்கியதோர் நிலவினிலே – கனவில் தோன்றி “உறங்கும் உன் தேசத்தாரை விழிப்புறுத்து” என்றான்.
கோர்ட்டில் வக்கீல் கேள்வி போடுவது போல, மாதாவிடம் “ஞாலத்தில் விரும்பியது நண்ணிடுமோ?
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?” எனவும் “எண்ணினால் எண்ணியது நண்ணும் காண்” என்று தைரியமூட்டினாள்
அன்னை.
குழந்தை உள்ளம் படைத்து, கோழைத்தனத்தைச்
சீறிவிழுந்து, விடுதலை முரசறைந்து, ஜயபேரிகை கொட்டி, பால சூரியன் தனது பொற்கிரணங்களால்
இருளைக் கிழிப்பது போல மாந்தரின் மடவிருளைப் போக்கினார் பாரதி. ஹிருதயத்தில் இருந்து
பொங்கி வழியும் சுதந்திர தாகத்தை, தனது விறுவிறுப்பான சொற்களால் சிறப்பாகத் தமிழருக்கும்,
பொதுவாக ஹிந்துக்கள் யாவருக்குமே உபதேசித்தார். தனது “இறவாத புகழுடைய” புதுத் தமிழால்
மக்கள் வீறுகொண் டெழும்படி செய்தார்.
ஜீவப் பிராணிகளிடம் பாரதியார் தாயன்பு
கொண்டவர். தன் மனதுக்குத் தோன்றும் எண்ணங்கள் எதுவானாலும் பிறருகு ஓயாமல் அவர் உபதேசிப்பார்.
பிறர் தன்னை எப்படி மதித்தாலும் சரி, அதற்காகத் தனது லட்சியத்தை விடமாட்டார். பிறர்
துக்கப்படுவதைப் பார்க்கும்பொழுது உள்ளந்துடித்து அதை உடனே நீக்க வழி தேடுவார்.
புதுவையில் ஒரு நபரின் மகனுக்குத் திடீரென்று
பைத்தியம் பிடித்தது. அவர் எங்கள் வீட்டிற்கு அந்தப் பையனைக் கூட்டி வந்தார். புத்த
பகவானைப்போல உடனே மனம் கசிந்து “அன்பா, உனது சரீரத்தைப் பராசக்திக்கு அர்ப்பணம் செய்,
முழு ஹிருதயத்தோடு, உன் மகனது நோய் நீங்கிவிடும்” என்றார் பாரதியார். மேற்படி நண்பர்,
“ஸ்வாமி! புத்தர்பிரான் போலே, பாரதி ஆத்ம சமர்ப்பணம்” என்னால் எப்படி அர்ப்பணம் செய்ய
முடியும்? எனக்காகத் தாங்களே சக்தியைப் பிரார்த்தியுங்கள்” என்றார். உடனே பராசக்திக்கு “ ஆத்ம சமர்ப்பணம்” என்ற பாடலை
பாரதி காளமேகமென வர்ஷித்தார். மறுநாளே பையனுக்குக் குணமாகி விட்டது.
சென்னைப்பட்டணத்தில் தேள், கொள்ளியெறும்பு
முதலியன அதிகம். அதிலும் எங்கள் வீட்டில் அடிக்கடி தேள் வருவதுண்டு. என் தாயார் தேளை
அடிக்கப்போவார். உடனே தந்தை அதை அடிக்கவிடாமல் தடுத்து, தேளை ஒரு காகிதத்தில் குச்சியால்
தள்ளி, கொல்லைப்புறங்களில் பொந்துகளில் கொண்டுபோய் விடுவார். எறும்பு சுரீரென்று கடித்தாலும்,
அதைக் கோபத்தோடு எடுத்து நசுக்காமல் நகை முகத்தோடு மெதுவாக எடுத்து நல்ல ஈரமில்லாத
இடத்தில் கொண்டு போய் விடுவார். காக்கைகள் அசுத்தமான பதார்த்தங்களைப் புசிப்பது கண்டு
வருத்தமுற்று, தான் சாப்பிடும் எந்த நல்ல பதார்த்தமானாலும் (ஜிலேபி, அல்வா, பர்பி உள்பட)
காக்கைக்குப் போடாமல் உண்ணமாட்டார்.
இதனால் என் தாயாருக்குக் கோபம் வந்து,
“நமக்கு ஆண் குழந்தைகள் இல்லாமையால், பிற்காலத்தில் சிராத்தம் பண்ண முடியாதே என்று
இப்போதே தானே காக்கைக்குப் போடுகிறீர்கள் போலும்!” என்பார்.
“நீ கவலைப்படாதே ராஜா! நமக்குப் பிள்ளைகள்
இல்லையென்றால் தேசம் பூராவுமே நமக்கு சிரார்த்தம் செய்வார்கள். நானோ இந்த ஜன்மத்திலே
இறக்கப் போவதில்லை; ஒருக்கால் அப்படி நேர்ந்தால் – நீ பார், பாரதத் தாயின் புதல்வர்
யாவரும் எனது புதல்வர்களேயாவர்” என்றார் பாரதி ஒரு சமயம். இன்று அந்த வார்த்தை அப்படியே
மெய்யாகியிருப்பதைக் காண்கிறோம்.
(குறிப்பு:-
பாரதி முக்காலமும் உணர்ந்தவனோ? அவர் தன் மனைவியிடம் கூறியபடி அவருக்கு பிள்ளை இல்லையென்ற
போதும் அவருக்கு சிரார்த்தம் செய்ய திரிலோக சீதாராம் அவர்கள் ஆண்டுதோறும் அந்த காரியத்தைச்
செய்து வந்ததும், அந்த நிகச்சிக்கு செல்லம்மா
பாரதியும் சில முறை வந்திருந்ததையும் கவிஞர் திரிலோக சீதாராம் சொல்லியிருக்கிறார்.)
பாரதி ஏழையல்ல, கர்ணனே! ஸ்ரீமதி
பாக்யலட்சுமி அம்மாள்
(இந்தக்
கட்டுரை ஆசிரியர் திருமதி பாக்யலட்சுமி அம்மாள் வ.வெ.சு.ஐயரின் மனைவி. புதுச்சேரியில் பாரதியார் வாழ்ந்து வந்த காலத்தில்
இவருடைய குடும்பமும் வ.வெ.சு.ஐயர் குடும்பமும் நெருங்கிப் பழகியவர்கள். பாரதியார் திருமதி
பாகியலட்சுமி அம்மாளை “தங்கச்சியம்மா” என்றுதான் அழைப்பார். பாரதியாரை வ.வெ.சு.ஐயர்
இல்லத்தில் பலமுறை உணவளித்து உபசரித்திருக்கிறார். பாரதியர் புதுச்சேரியில் ‘பெண்கள்
முன்னேற்ற சங்கம்’ என்று ஒரு அமைப்பை நடத்தி வந்தார், அதில் வ.வெ.சு.ஐயரின் மனைவி பாக்யலட்சுமி
அம்மாள் பங்கெடுத்து வந்தார். அவர் பாரதியார் பற்றிய எழுதிய கட்டுரை இது)
ஸ்ரீ பாரதியை நான் 1910 நவம்பரில் முதன்
முதலில் பார்த்தேன். அன்று அவர் எங்கள் வீட்டிற்கு வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் போனபிறகு அவர் யாரென ஐயரைக் (வ.வெ.சு.ஐயரை) கேட்டேன். அவர்தான் சுப்ரமண்ய ஐயர்
என்று ஐயர் பதில் சொன்னார். நான் ஜி.சுப்ரமணிய ஐயரைப் படத்தில் பார்த்திருக்கிறேன்,
படத்தில் இருப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறதே என ஐயரை
மறுபடி கேட்டதற்கு ஐயர், “அவர் ஜி.சுப்ரமணிய ஐயர், இவர் சி.சுப்ரமணிய பாரதி. இருவரும்
வேறு வேறு” என்று பதில் சொன்னார்.
பாரதி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.
அவர் மனைவி செல்லம்மாளும் எங்களுக்குப் பழக்கமான பிறகு, பாரதி, ஸ்ரீநிவாசாச்சாரியார்,
ஐயர் மூன்று வீட்டுக்காரர்களும் ஒரு குடும்பம் போல பழகிவந்தோம். பாரதி களங்கமற்ற ஒரு
சின்னக் குழந்தைபோல இருப்பார். எப்போழுதும் வீரம் நிறைந்த தொனியோடு பேசுவார், என்றும்
ஒரே குதூகலமாயிருப்பார்.
பார்த்த அளவில், எண்ணின மாத்திரத்தில்
கவிகட்டும் திறமை அவருக்கு உண்டு. யோசித்துத்தான் எழுத வேண்டுமென்பதில்லை. அநேக நாட்களில்
எங்கள் வீட்டில் பேசிக்கொண்டு ஐயரோடு எதையேனும் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே,
ஒரு பாட்டு அவர் உள்ளத்தில் தோன்றிவிடும். உடனே எழுதிவிடுவார். தன் மனதில் எழுந்த அந்தப்
பாட்டின் சுவையைத் தானே அனுபவித்து தன்னையும் மறந்து இரைந்து பாடிக்கொண்டே குதிப்பார்.
அவர் கபடமற்ற குணமுடையவர். மனதில் எண்ணங்களை
வைத்துக்கொள்ளத் தெரியாது. தான் எத்தனை வறுமையோடிருந்த போதிலும் அதற்காக அவர் சற்றும்
வருந்தியனவரல்ல.
பாரதி எல்லோரையும் ஒன்றாகப் பாவிப்பார்.
வித்தியாசம் பார்க்கத் தெரியாது. ஒவ்வொரு நாள் எங்கள் வீட்டிறு வரும் போது கோட் ஸ்டாண்டில்
இருக்கும் துணிகளில் ஏதேனும் தனக்கு வேண்டுமென ஆசை உண்டானால், அதை எடுத்து, தான் அணிந்து
கண்ணாடி எதிரில் நின்று பார்த்துக்கொண்டு, “ஐயரே! இது எனக்கு நன்றாயிருக்கிறது – எனக்கு
நன்றாயிருக்கிறது – எனக்குத்தான், கொடுக்கமாட்டேன்” என்று. அவருடைய மனோபாவம் அறியும்
சக்தி உள்ளவர்கள், அவரை ஒரு சகோதரனாக உரிமையோடு எடுத்துச் சென்றதற்கு சந்தோஷப்படுவார்களே
தவிர, அவரைக் கோபிக்கமாட்டார்கள்.
பாரதியை ஏழை என்று சொல்வது தகாது. அதற்கு
மாறாக அவரைக் கர்ணனென்றுதான் சொல்ல வேண்டும். அவர் அத்தனை ஆசையோடு எடுத்துச் சென்றதைக்கூடத்
தனக்கு வேண்டுமென வைத்துக்கொள்ள மாட்டார். லங்கோடு, வேஷ்டி, ஷர்ட்டு, கோட்டு, தலைப்பாகை
இத்தனையும் தரித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்படுவார். வீடு திரும்பும்போது, அத்தனையும்
அணிந்திருப்பார் என்பது சந்தேகமே. எவனாவது வழியில் வேஷ்டியில்லை என்பான் – தலைப்பாகையை
அவனுக்குக் கொடுத்து விடுவார். இன்னும் கொஞ்ச தூரம் போகையில், குளிர் தாங்கமுடியவில்லை
என்பான் இன்னொருவன். கோட்டு அவனுக்கு தானம் செய்தாகிவிடும். இவ்விதமாக ஒருநாள் வெறும்
லங்கோடோடு வீடு வந்து சேர்ந்ததாக பாரதியே ஐயரிடம் ஒருநாள் சொல்லியிருக்கிறார்.
அந்த கஷ்டமான காலங்களில்கூட ஒவ்வொரு சமயம்
யாரேனும் சிநேகிதர், வீட்டுக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு சாப்பாட்டைப் பங்கிட்டுக்
கொடுப்பார் பாரதி. ஈகை கவிதாசக்தி போலவே, அவருடைய பிறவிக்குணம். பாரதி போன்ற நிஷ்களங்கமான,
இரக்கமான ஹிருதயம் காண்பது அரிது.
நாங்களெல்லாம் அனேகமாய் தினம் கடற்கரைக்குப்
போவோம். பாரதி அங்கு கடலையும், வானத்தையும் கண்டு தன்னை மறந்து பாட ஆரம்பித்துவிடுவார்.
அவர் தீரமான குரல் இப்பொழுதும் காதில் கேட்கிறது. அவருடைய பாட்டுகளை எத்தனையோ பேர்கள்
பாடுகிறார்கள். ஆனால் அவைகளுக்கிருக்கும் பொருள் நயத்தை அனுபவித்துப் பாடுகிறவர்கள்
சிலரே.
உணர்ச்சிமேலிட்டு, வீரமுடைய நெஞ்சம் வேண்டுமென்று
மார்பை உயர்த்திக் கொண்டு பாரதி பாடுவார். அப்பொழுது அவரைப் பார்த்தால் கோழைக்கும்
வீரமூட்டும் சக்தி அவருக்கிருப்பதுபோல் தோன்றும். எவ்விதமான கஷ்ட நிலைமையிலும் அவர்
உள்ளத்தில் உற்சாகம் மாத்திரம் குறையாது.
பாரதி பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்
கொண்டிருந்தார். ஆனால் வீட்டில் தங்கவே மாட்டார். ஒருநாள் ஐயர், “நீங்கள்தான் வீட்டிலேயே
இருப்பதில்லையே, எதற்கு அத்தனை பெரிய வீடு?” என்று கேட்டார்.
அதற்கு பாரதி, “சின்னவீடு எனக்குப் பிடிப்பதிலை.
வீட்டுக்கார விளக்கெண்ணெய் செட்டிக்கோ வாயிதா எட்டு மாதம் வரை சொல்லலாம்.”
ஐயர் சொன்னார், “வீட்டிலாவது சுகமாக இருக்கக்
கூடாதா? ஏன் இப்படி வெயிலில் அலைகிறீர்கள்?” என்று.
அதற்கு பாரதி, “வீட்டில் இருக்கலாம், ஆனால்
முட்டைப் பூச்சிக்கடி, ஈ கடி, எறும்புக் கடி என்று அடுக்கிக்கொண்டே போனார்.
ஐயர், கடன்காரர் கடியும் இதில் சேர்ந்ததுதானோ?”
என்று கேலியாகக் கேட்டார்.
அதற்கு பாரதி உரக்கச் சிரித்துவிட்டு,
“உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே!”
என்று பாடினார்.
பாரதி சிறந்த கவி என்பது அவர் பாட்டுக்களைப்
படித்தவர்கள் அறிவார்கள். ஆனால் அவருடைய உயர்ந்த குணத்தையும், உணர்ச்சிகளின் மேன்மையையும்
அறிந்தவர் மிகவும் குறைவு. பாரதி உயிருடனிருந்த காலத்தில் அவரைப் போற்றாமலிருந்ததால்
பாரதி சிறிதும் நஷ்டமடைய வில்லை. தமிழ்நாடுதான் நஷ்டம் அடைந்தது.
“தோன்றி யழிவது வாழ்க்கை – இதில் துன்பத்தோடின்பம்
பெருமையென்றோதும் மூன்றி லெதுவருமேனும் களி மூழ்கி
நடத்தல் பரசிவ முக்தி. (பாரதி)
பாரதியைப் பற்றி பாரதிதாசன் கனகசுப்புரத்தினம் (பாரதிதாசன்)
(புதுச்சேரியில்
பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு கனகசுப்புரத்தினம் பாரதியாரைப்
பற்றியும் அவருடைய கவிதைகளைப் படித்து அவரை நேரில் பார்க்காமலே அவரைப் பற்றி மரியாதை
வைத்திருந்தவர். அவரை முதன்முதலில் சந்தித்த நிகழ்ச்சியை சுப்புரத்தினம் பின்னாளில்
பாரதிதாசனாக ஆகப்போகிறவர் சொல்வதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.)
“இந்தியா” பத்திரிகை நின்றுவிட்டது. அதன்
பிறகு பாரதியார் சின்னையா ரத்தினசாமி நாயுடுவுடன் ஆரம்பித்து நடத்தி வந்த “சூரியோதயமும்”
நின்றுவிட்டது.
“இந்தியா” பத்திரிகையைத்தான் எனக்கு நன்றாகத்
தெரியும். அப்போதெல்லாம் நான் சர்க்கார் தமிழாசிரியனாகி விட்டேன். இந்தியா பத்திரிகையில்
படம் வெளிவரும். சித்திர விளக்கமும் தெளிவாக எழுதியிருக்கும். படங்கள் ராஜிய சம்பந்தமானவை.
அர்த்தபுஷ்டியுள்ளவை. பத்திரிகை வெளிவருவதை வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். படத்தை
வெட்டி அட்டையில் ஒட்டிவிட்டுச் சுவரில் தொங்கவிட்டு வைப்பார்கள். ஒவ்வொரு படமும் இங்கிலீஷ்காரனுக்கும்
இந்தியனுக்கும் உள்ள சம்பந்தத்தை, இங்கிலீஷ்காரனிடம் இந்தியன் அனுபவிப்பதை, குத்தலாக
எடுத்துக்காட்டுவதுதான் அந்தப் பத்திரிகையிலேயே சுவையான பகுதி. அந்தச் சித்திரந்தான்
முதலில் என்னைத் தன் பரிவாரங்களின் பக்கமாக இழுத்தது. அந்தச் சித்திரந்தான், நான் இன்னானென்று
எனக்குக் கூறிற்று. சிறு சிறுகதைகள். இங்கிலீஷ்காரனை நெட்டுடைக்கும் வரலாற்றுத் துணுக்குகள்.
நாளடைவில் இவைகளின் பொருளையும் என்னால் சுவைக்க முடிந்தது.
இந்தியா நின்றபின் எழுந்த சூரியோதயமும்
நின்று சுமார் ஓராண்டும் ஆயிற்று. புதுவையில் தேசிய உணர்ச்சி மெதுவாக மறைந்துபோக வேண்டியதுதான்.
ஆனால், அது மறையாமல் காத்த பெருமை இங்கிலீஷ்காரரையே சேரும். அரவிந்த கோஷ் வீட்டுக்கெதிரில்
சுமார் பதினைந்து பிரிட்டிஷ் ரகசியப் போலீஸ்காரர்கள் ஸ்திரமாகப் போட்டு வைத்தார்கள்.
ஈசுவரன் தருமராஜா கோயில் தெருவில் சுமார் பத்து ரகசியப் போலீஸ்காரர்களைத் திரியவிட்டு
வைத்தார்கள்.
இப்போதெல்லாம் புதுவை ஈசுவரன் தருமராஜாகோயில்
வீதி சுதேசிகளின் சுகவாசத்திற்குப் பேர்போனது. பாரதியார் வீடு, வ.வெ.சு.ஐயர் வீடு,
பொன்னு முருகேசம் பிள்ளை வீடு, வாத்தியார் சுப்ரமணிய ஐயர் வீடு, ஆறுமுகம் செட்டியார்
வீடு, நாகசாமி ஐயர் வீடு அனைத்தும் அந்தத் தெருவில்தான். இவர்களுக்கெல்லாம் சி.ஐ.டி.போட்டிருந்தார்கள்.
மேற்சொன்ன வீட்டுக்காரர்களுடன் சேர்த்து
எண்ணப்பட்ட சிவக்கொழுந்து நாயகர், சிவா நாயகர், முத்தியாலுபேட்டை கிருஷ்ணசாமி செட்டியார்,
அரவிந்த கோஷ் வீட்டு ராமசாமி ஐயங்கார் (வ.ரா.) லோகநாத முதலியார், ஜெயராம் பிள்ளை, குவளை
கிருஷ்ணன், கோவிந்தராஜுலு நாயுடு, கொட்டடி கருடிக்கூடம் வாத்தியார் வேணு நாயக்கர் முதலியவர்கள்
சதா இந்த வீதியில் பெரும்பாலும் பாரதியார் வீட்டில் இருப்பார்கள். இவர்கள் எல்லோரும்
பாரதியாரைச் சந்திக்காத நாள் பஞ்சாங்கத்தில் கிடையாது.
கலவை சங்கர செட்டியார், அன்பு டாக்டர்,
டாக்டர் நாராயணசாமி நாயுடு, டாக்டர் கோபால்சாமி நாயுடு, ஆகிய பட்டம் பதவி செல்வாக்குள்ளவர்கள்கூட
பசியோடு பாரதியாரை நோக்கி வருவார்கள். பாரதியாரைக் கண்டு பேசிய பின்பே அவர்கள் பசி
தீரும் பாரதியாருக்குப் புதுவையில் படித்தவர்களிடத்தில், விஷயம் அறிந்தவர்களிடத்தில்
நல்ல செல்வாக்கு இருந்தது. பாரதியார் வசித்ததால்தான் ஈசுவரன் தருமராஜா கோவில் வீதி
குறிப்பிடக் கூடியதாயிற்று.
பாரதியார் வெளியில் புறப்படுவார், சி.ஐ.டி.
பின்தொடர்வான். சட்டப்படி அவன் பாரதியாரை அதிகமாக நெருங்கலாகாது. கொஞ்சம் எட்டியே தொடரவேண்டும்.
அவன் நெருங்கிவிடும் நேரமோ, அவன் தொந்தரவு படும் நேரமாகும். பாரதியார் அவனைத் திரும்பிப்
பார்ப்பார். அவரின் விழி கோபத்தையடையும். அவன் செய்வது குற்றம் என்று அர்த்தம். நேர்ந்தது
தொல்லை சி.ஐ.டி.க்கு. சி.ஐ.டி.யோடு கைகலந்த ஒரு மனிதான் யார்? பாரதியாருக்கு அந்தத்
தெரு மனிதனைத் தெரியாது. பாரதியாருக்கு அத்தனை செல்வாக்கு. பொன்னு முருகேசம் பிள்ளை,
அவர் குமாரர்கள் ராஜாபாதர் பிள்ளை, கனகராஜா பிள்ளை ஆகியோர் பாரதியாருக்கு எல்லா விஷயத்திலும்
காப்பாளர் என்றால் பிழையாகாது. முத்தியாலுபேட்டை கிருஷ்ணசாமி செட்டியார் விசேஷ பொருளுதவி
செய்து வந்தார். சங்கர செட்டியாரும் உதவியாளரே. பிரபலஸ்தர்கள் அனைவரும் பாரதியார் மேல்
உயிர். பாரதியாருக்குய் இருந்த செல்வாக்கு பாரதியாருக்குத் தெரிந்திருந்ததைவிட பிரிட்டிஷ்காரர்களுக்கு
நன்றாகத் தெரியும்.
பாரதியாரை, சுதேசிகளை, ஒரு பிரிட்டிஷ்
சி.ஐ.டி. அவமதிப்பானானால் புதுவையில் உள்ள பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் ஆணிவேர் ஆடும்.
பாரதியாரும், தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளையும்
சேர்ந்து பாடி வெளியிட்ட “சுதேச கீதங்கள்” புதுச்சேரியில் படித்தவர்களிடை உலவியிருந்தது.
குவளை கிருஷ்ணன் அந்தப் பாட்டுகளில் சிலவற்றைக் கூவிப்பாட நான் கேட்டிருக்கிறேன். என்
ஆசைக்கு ஒரு புத்தகம் கிடைத்தது ஒரு நாள்.
சுதேசகீதங்களை நான் படித்து வந்தேன். ராகத்தோடு
முணுமுணுத்து வந்தேன். இந்தியா பத்திரிகையின் சித்திர விளக்கங்கள், சிறுகதைகள், ஈசுவரன்
தருமராஜா கோயில் தெருவின் விளைவுகள். குவளையின் கூச்சல் இவைகள் எல்லாம் சுதேசகீதத்தின்
உட்பொருளை எனக்கு விளக்கின. அதன் பிறகு கொஞ்சம் விஷமமான உணர்வோடும் “நான் ஓர் இந்தியன்”
என்ற அகம்பாவத்தோடும் அப்பாடல்களை என்னால் பாடமுடிந்தது நாளடைவில்.
எனது கொட்டடி வாத்தியார் வேணு நாயக்கருக்கு
கல்யாணம் வந்தது. மாலை மூன்று மணிக்கு கல்யாணப் பந்தலில் பாட்டுக் கச்சேரி நடந்தது.
பாடகரில் நானும் ஒருவன். கணீரென்று ஆரம்பித்தேன். “வீர சுதந்திரம் வேண்டி நின்றார்
பின்னர் வேறொன்றும் கொள்வாரோ?” என்பதை. அப்போது என் பின்புறமாக, இதற்கு முன் நான் வீதியில்
பார்த்த சில உருவங்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றில் ஒன்று “ரவிவர்மா பரமசிவம்”.
வேணு நாயக்கர் “இன்னும் பாடு, சுப்பு”
என்றார்.
நான் “தொன்று நிகழ்ந்த தனைத்தும்” என்ற
பாட்டைப் பாடினேன்.
சபையில் இருந்தவர்கள் மொத்தம் முப்பது
பேர்கள் இருக்கும். முப்பது பேர்வழிகளில் சுமார் இருபத்தைந்து பேர்கள் நான் பாடும்போது,
அந்த ரவிவர்மா பரமசிவத்தையே பார்க்கிறார்கள். அந்த ரவிவர்மா பரமசிவத்தின் பெயர், விலாசம்
என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், அவர் ஒரு குறிப்பிடத் தக்கவராய் இருக்கலாம்
என்று தோன்றிற்று.
என்னை மேலும் பாடச் சொன்னார் வேணு நாயக்கர்,
நானும் பாடினேன். அப்போது வேணு நாயக்கர் “அவுங்க யார் தெரியுமில்லே?” என்று கேட்டார்.
“தெரியாது” என்றுகூட நான் சொல்லி முடிக்கவில்லை.
ரவிவர்மாப் பரமசிவம் “நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ?” என்று என்னைக் கேட்டார்.
நான் “கொஞ்சம்”.
படம் “உணர்ந்து பாடுகிறீர்கள்”
வேணு நாயக்கர் அப்போது “அவுங்கதானே அந்தப்
பாட்டெல்லாம் போட்டது. சுப்ரமணிய பாரதி என்று சொல்றாங்கல்ல?” என்று பரமசிவம் படத்தை
எனக்கு அறிமுகப்படுத்தினார்.
எனக்கு நாணம், சந்தோஷம், பயம், அப்போது
என் மூஞ்சியை நான் கண்ணாடி எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியமேயில்லை. நான்
ஒரு அசல் இஞ்சி தின்ற குரங்கு. பாரதியார் என்னென்ன என்னிடம் சொன்னார், நான் அப்போது
என்ன பதில் சொன்னேன் என்பவைகளைக் கேட்டால் அப்போதே எனக்குச் சொல்ல முடியாது, இப்போது
என்னால் சொல்ல முடியுமா?
கடைசியாகப் பாரதியார் சொல்லிய வார்த்தையை
மாத்திரம் நான் மறந்து போகவில்லை. அது என் ஆவலைப் பூர்த்தி செய்யும் வார்த்தை. அந்த
வார்த்தையை அவர் வெளியிட்டவுடன் என் நினைவில் அது தங்காமல் என்னை ஏமாற்றிவிடக்கூடும்
என்று அதன் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்து அமிழ்த்திக் கொண்டேன்.
அதாவது, “வேணு, ஏன் இவரை நம் வீட்டுக்கு
நீ அழைத்து வரலே?”
நான் வீதியில் அடிக்கடி பார்த்து இவர்
ரவிவர்மா படத்தில் காணும் பரமசிவம் போல இருக்கிறார் என்று ஒப்புக்கூட்டி நினத்த மனிதர்,
பாரதியார் என்று தெரிந்து கொண்டது ஒன்று, அவர் ஒரு சுதேசி என்பது ஒன்று, அந்தப் புத்தகத்தின்
ஆசிரியர் என்பது ஒன்று, அவர் எங்கள் ஊர்ப் பிரபலஸ்தர் பொன்னு முருகேசம் பிள்ளை முதலியவர்களால்
பாராட்டப்படுகிறவர் என்பது ஒன்று – அத்தனையும் என் மனத்தில் சேர்ந்துகொள்ள என்னைச்
சந்தோஷ மயமாக்கிவிட்டன. மறுநாள் காலையில் நான் வேணு நாயக்கருடன் பாரதியார் வீட்டுக்குப்
போகப் போகிறேன். மறுநாள் என்பது சீக்கிரம் வரவில்லையே என்பதுதான் என் கவலையாகக் கிடந்தது.
நானும் வேணு நாயக்கரும் பாரதியார் வீட்டு
மாடியில் ஏறிப்போனோம். வீணையின் தொனி. ஆனால் அதில் எழுத்துக்களின் உச்சரிப்பு என் காதில்
கேட்கிறது. நான் மாடியின் கூடத்தில் பாரதியாரை அவர் பக்கத்தில் பாடிக்கொண்டிருக்கும்
சிவா நாயகரை, வாத்தியார் சுப்ரமணிய ஐயர் தம்பியை, கோவிந்தராஜுலு நாயுடு இவர்களையெல்லாம்
பார்த்தேன். நாயகர் பாட்டுக்கு பாரதியார் ‘ஆஹா!” போடும்போது நான் கும்பிட்டேன். பாரதியார்
கும்பிட்டு “வாருங்கோ! உட்காருங்கோ, வேணு உட்கார், குயில் பாடுகிறது கேளுங்கோ” (சிவா
நாயகருக்கு பாரதியார் குயில் என்று பெயர் வைத்திருந்தார்) என்றார்.
பிறகு சிறிது நேரம் சிவா நாயகர் பாட்டு.
அதன் பிறகு என்னைப் பற்றிய விவரம் நடந்தது. கொஞ்ச நேரம், “எனக்கு உத்தரவு கொடுங்கள்” என்று பாரதியார் அதே கூடத்தில்
ஒரு புறமாக உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார். மீதியுள்ள நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
எனக்குப் பேச்சு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அங்கு ஒரு மூலையில் கிடந்த கையெழுத்துப்
புத்தகத்தைப் பார்க்கவேண்டுமென்பதிலேயே என் எண்ணம் சென்று கொன்டிருந்தது. மெதுவாக நகர்ந்து
அந்தப் புத்தகத்தின் பக்கத்தில் உட்கார்ந்தேன். பிறகு அதைக் கையில் எடுத்தேன், விரித்தேன்,
என் வசமிழந்தேன்.
நான் அதற்கு முன் இலக்கிய இலக்கணத்திலே
என் காலத்தைக் கடத்தியிருந்தவன். என் ஆசிரியரும், புதுச்சேரியில் பிரபல வித்துவானுமாகிய
பங்காருப் பத்தர், மகாவித்வான். பு.அ.பெரியசாமிப் பிள்ளை இவர்களால் நடத்தப்படும் கலைமகள்
கழகத்தின் அங்கத்தினன். பழந் தமிழ் செய்யுட்கள்
போலவே யாருக்கும் புரியாதபடி எழுதுவதுதான் கவி என்ற அபிப்பிராயம் உள்ளவன். கடிதம் எழுதும்போது
கூட கடுமையான நடையை உபயோகிப்பதுதான் கெளரவம் என்ற தப்பெண்ண முடையவன்.
பாரதியார் புத்தகம் என்னைப் புதியதோர்
உலகில் சேர்த்தது.
நானும் பாரதியார் பாடல்கள் எழுதி வைத்துள்ள
கையெழுத்துப் புத்தகமும் ஒரு பக்கம்; என் அறிவும் அதனுட் புகுந்து அதை விரிவுபடுத்தும்
விஷயமும் ஒரு பக்கம்; என் உள்ளமும் அதில் இனிப்பைச் சேர்க்கும் சிறு சிறு முடிவுள்ள
எளிய சொற்களும் ஒரு பக்கம் லயித்துப் போய்க் கிடந்தன. பாரதியாரை, அங்கிருந்த மற்றவர்களை,
அவர்களின் வார்த்தைகளை கவனிக்க என்னிடம் மீத்திருந்த உறுப்புக்கள் ஒன்றுமில்லை. இப்படி
வெகு நேரம்.
இதற்குள் பாரதியார் எழுதியது முடிந்தது.
மற்றவர்களுடன் அவர் வெளி விஷயங்களைப் பற்றி பேசியிருந்தது முடிந்தது. கோவிந்தராஜுலு
நாயுடு பீடி பிடித்தாயிற்று. பாரதியாரும் சிவா நாயகரும் சுருட்டுப் பிடித்தாயிற்று.
மணியும் பதினொன்று ஆயிற்று. கடைசியாக சிவா நாயகர் என்னைப் பாரதியாருக்குச் சுட்டிக்காட்டி
“இவர் தமிழ் அதிகம் வாசித்தவர் சுவாமி” என்றார். அதற்கு பாரதியார் “அல்லாவிட்டால் என்
கையெழுத்துப் புத்தகத்தில் அவருக்கு என்ன இருக்கிறது” என்றார் அன்புடன், நல்லெண்ணத்துடன்.
அதன் பிறகு நான் “போய் வருகிறேன் சுவாமி”
என்றேன். பாரதியார் “சரி, நேரமாகிறதா? நீங்கள் ஓய்வுள்ள நேரத்திலெல்லாம் இங்கு வரணும்”
என்று கும்பிட்டார். அதைவிட வணக்கமாக என்னால் கும்பிட முடியவில்லை. “நமஸ்காரம், நமஸ்காரம்”
என்று துரிதமாய்ச் சொல்லிப் பிரிய எண்ணமில்லாது பிரிந்தேன். என்னுடன் மற்றவர்களும்
எழுந்தார்கள்.
நாயகர், சாமிநாத ஐயர் (வாத்தியார் ஐயர்
தம்பி) நாயுடு அனைவரும் வழி முழுவதும் பாரதியாரின் குணாதிசயங்களை விவரித்தார்கள். நான்
பாரதியாரின் விழிகளில் சற்று நேரத்தில் தரிசித்தவைகட்கு மேல் நூதனமாக ஒன்றும் கூறவில்லை.
No comments:
Post a Comment