பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 30, 2015

5. ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்.

மகாகவி பாரதியார் கதைகள்.

5. ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்.

வேதபுரி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரும் ஒரு செட்டியாரும் சிநேகமாக இருந்தார்கள். வாத்தியார் செட்டியாரிடம் கொஞ்சம் கடன் வாங்கி யிருந்தார். செட்டியாருக்கு ஒரு நாள் காலிலே முள் தைத்துப் பிரமாதமாக வீங்கியிருந்தது.

"செட்டியாரே, கால் ஏன் வீங்கி யிருக்கிறது?" என்று வாத்தியார் கேட்டார்.

"எல்லாத்துக்கும் காரணம் கையிலே பணமில்லாததுதான்" என்று செட்டியார் சொன்னார்.

சில தினங்களுக்குப் பின் வாத்தியாருக்குப் பலமான ஜலதோஷம் பிடித்திருந்தது. செட்டியார் வந்தார். "ஏன் ஐயரே, ஜலதோஷம் பலமாக இருக்கிறதே" என்று கேட்டார்.

"கையிலே பணமில்லை. அதுதான் சகலத்துக்கும் காரணம்" என்று வாத்தியார் சொன்னார். செட்டியார் புன்சிரிப்புடன் போய் விட்டார்.

மகாகவி பாரதியார் கதைகள். 3 & 4


3. அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்.

சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள், "உங்களுடைய சீன தேசத்தில் கலியாணமாகும்வரை மணப்பெண் தனது புருஷன் முகத்தைப் பார்ப்பது வழக்கமில்லையாமே! மெய்தானா?" என்று கேட்டாள். அதற்கு ராஜகுமாரன், "உங்கள் தேசத்தில் சில பெண்கள் கலியாணமான பிறகு தன் புருஷன் முகத்தைப் பார்ப்பதேயில்லை என்று கேள்விப்படுகிறேன். அது மெய்தானா?" என்றான்.

4. சாஸ்திரியார் மகன்.

ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால், அதைப் பார்த்து அழுதுகொண்டு ந்ன்றான். அதைக் கண்ட ஒரு சிப்பாய், "குழந்தாய், ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.

பையன்: "வண்டி ஒடிஞ்சுப் போச்சு"

சிப்பாய்: "இதற்காக அழாதே. வீட்டிற்குப் போ. உன்னுடைய தகப்பனார் அதைச் செப்பனிட்டுக் கொடுத்து விடுவார்."

பையன்: "எங்கப்பா சாஸ்திரியார்; அவராலே வண்டியை நேர்ப்படுத்திக் கொடுக்க முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கிக் கொண்டு வருவார். வேறே ஒரு எழவும் தெரியாது" என்று விம்மி விம்மி அழுதான். சிப்பாய் சிரித்துக் கொண்டே போய் விட்டான்.

2. கவிராயனும் கொல்லனும்

பாரதியார் கதைகள்
2. கவிராயனும் கொல்லனும்

ஐரோப்பாவிலே மகா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம் கேட்டது. கவிராயர் உற்றுக் கேட்டார். உள்ளே கொல்லன் பாடிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டு அந்தக் கவிராயராலே எழுதப்பட்டது. அதை அவன் பல வார்த்தைகளைச் சிதைத்தும் மாற்றியும் சந்தந் தவறியும் மனம் போன படிக்கெல்லாம் பாடிக் கொண்டிருந்தான். கவிராயருக்கு மகா கோபம் வந்துவிட்டது; உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறையிலிருந்த சாமான்களையும் கருவிகளையும் தாறுமாறாக மாற்றி வைத்துக் குழப்ப முண்டாக்கத் தொடங்கினார்.

கொல்லன் கோபத்துடன், "நீ யாரடா, பயித்தியம் கொண்டவன், என்னுடைய சாமான்களை யெல்லாம் கலத்தி வேலையைக் கெடுக்கிறாய்?" என்றான்.

"உனக்கென்ன?" என்று கேட்டார் கவிராயர்.

"எனக்கென்னவா! என்னுடைய சொத்து தம்பீ, என்னுடைய ஜீவனம்!" என்றான் கொல்லன்.

அதற்குக் கவிராயர்: "அதுபோலவேதான், என்னுடைய பாட்டும். நீ சில நிமிஷங்களுக்கு முன்பு பாடிக் கொண்டிருந்த பாட்டை உண்டாக்கிய கவிராயன் நானே; என்னுடைய பாட்டை நீ தாறுமாறாகக் கலைத்தாய், எனக்கு அதுதான் ஜீவனம். இனிமேல் நீ சரியாகப் படித்துக் கொள்ளாமல் ஒருவனுடைய பாட்டைக் கொலை செய்யாதே" என்று சொல்லிவிட்டுப் போனார்.

பாரதியார் கதைகள்.

மகாகவி பாரதியார் கவிதைகள் மட்டுமல்ல, ஏராளமான கட்டுரைகளும், பல சுவாரசியமான கதைகளுக் எழுதியுள்ளார். அவருடைய கதைகளில் ஞானரதம், சின்னச்சங்கரன் கதை, சந்திரிகையின் கதை, நவதந்திரக் கதைகள் போன்றவை சற்று பெரிய கதைகள். இவை தவிர 'சில வேடிக்கைக் கதைகள்' எனும் தலைப்பில் அவர் எழுதிய பல கதைகளும் படிக்க வேடிக்கையாக இருக்கும் ஆனால் அவைகளின் உட்கருத்து பல உண்மைகளை நமக்குப் புலப்படுத்தும் விதத்தில் அமைந்தவை. அப்படிப்பட்ட சில வேடிக்கைக் கதைகளை இனி தொடர்ந்து படிக்கலாம். முதல் கதையாக 'ஆனைக்கால் உதை' எனும் இந்தக் கதை நம் மனோபாவத்தை விளக்குவதாக அமைந்திருக்கிறது. மகாகவி பாரதியாருக்கு யானைக்கால் உள்ளவர்களைப் பார்த்தால் பிடிக்காது. யானைக்கால் உள்ள ஒருவனைப் பற்றிய கதை இது. படித்துப் பாருங்கள்.

                                              1. ஆனைக்கால் உதை.
                                      எழுதியவர்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்தத் தெருவின் வழியாக சில பிள்ளைகள் அடிக்கடி போவது உண்டு. போகும்போதெல்லாம் அவர்களுக்கு அந்தப் பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்ற விருப்பம் உண்டாயிற்று. கிட்டப் போனால் ஆனைக்கால்காரன் தனது பிரம்மாண்டமான காலைக் காட்டிப் "பயல்களே, கூடையில் கை வைத்தால் உதைப்பேன், ஜாக்கிரதை!" என்பான்.

"சாதாரணக் காலால் அடித்தால்கூட எவ்வளவோ நோகிறதே, இந்த ஆனைக் காலால் அடிபட்டால் நாம் செத்தே போவோம்" என்று பயந்து பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.

இப்படியிருக்கையில் ஒரு நாள் கடைக்காரன் பராக்காக இருக்கும் சமயம் பார்த்து, ஒரு பையன் மெல்லப் போய்க் கூடையிலிருந்து ஒரு பழத்தைக் கையிலெடுத்தான். இதற்குள் கடைக்காரன் திரும்பிப் பார்த்து, தனது பெரிய காலைச் சிரமத்துடன் தூக்கிப் பையனை ஒரு அடி அடித்தான். பஞ்சுத் தலையணையால் அடித்ததுபோலே அடி மெத்தென்று விழுந்தது. பையன் கலகல வென்று சிரித்துத் தெரு முனையிலே இருந்த தனது நண்பர்களைக் கூவி "அடே, எல்லோரும் வாருங்களடா! வெறும் சதை; எலும்பில்லை" என்றான். மனிதர்களெல்லோரும் பல விஷயங்களில் குழந்தைகளைப் போலவே காணப்படுகிறார்கள். "வெறும் சதை"யாக இருக்கும் கஷ்டங்களைத் தூரத்திலிருந்து "எலும்புள்ள" கஷ்டங்களாக நினைத்துப் பிறர் அவதிப்படுவதை நாம் பார்த்ததில்லையா? நாம் அங்ஙனம் அவதிப் பட்டதில்லையா?.

Wednesday, March 18, 2015

பகவத் கீதை -- பதினெட்டாம் அத்தியாயம்

                                                      பகவத் கீதை
                                                      பதினெட்டாம் அத்தியாயம்
                                                   
மோக்ஷ சந்யாச யோகம்

"சந்நியாச மென்றாலும், தியாக மென்றாலும் ஒன்றே. ஆனால், காம்ய கர்மத்தை அடியோடு விட்டுவிடுவது நந்நியாசமென்றும், நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறியவேண்டும். எல்லாக் கர்மங்களையும் விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும். செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான். அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தாமசம் என்று மூவகைப் பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம்."

இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. உயர் புயத்தோய்! கண்ணா! கேசியைக் கொன்றாய், *சந்நியாசத்தின் இயல்பையும், ^தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.
(*சந்நியாசம் = துறவு. ^தியாகம் = விடுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

2. விருப்பத்தால் செய்யப்படும் செய்கைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிந்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்து விடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.

3. சில அறிஞர் செய்கையைக் குற்றம் போல கருதி விட்டுவிட வேண்டும் என்கிறார்கள், வேறு சிலர் 'வேள்வி' தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது, என்கிறார்கள்.

4. பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே! தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள். தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டுள்ளது.

5. வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும், தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.

6. ஆனால், பார்த்தா! இச்செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.

7. *நியமத்தின்படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது; மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
(*நியமம் = ஒழுங்கு, சட்டம், சாஸ்திர விதி.)

8. உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டுவிடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின்பாற் பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.

9. நியமத்துக் கிணங்கிய செய்கையை, 'இது செய்தற்குரியது' என்னு மெண்ணத்தால் செய்து, அதில் *ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.
(*ஒட்டுதல் = விருப்பம்)

10. சத்வ குணத்திலிசைந்து, மேதாவியாய் ஐயங்களையறுத்த தியாகி இன்பமுற்ற செய்கையைப் பகைப்பதில்லை; இன்பமுடைய செய்கையில் *நசையுறுவதில்லை.
(*நசை = பற்றுதல்.)

11. (மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.

12. வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.

13. எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்!

14. அவை* இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.
(*கர்த்தா = தொழில் செய்வோன்; கரணம் = கருவி. உட்கரணங்களாவன: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்; புறக்கரணங்கள் புலன்களும் பூதக் கருவிகளுமாம், "தைவம்" இயற்கை.)

15. மனிதன் உடம்பாலும், வாக்காலும், மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும், விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.

16. இங்ஙனமிருக்கையில் தனிப் பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ, அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.

17. 'நான்' எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்ற மதியுடையான். அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளியாகான், கட்டுப்பட மாட்டான்.

18. அறிவு, அறியப்படு பொருள், அறிவோன் -- என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் சமைப்பு மூன்று பகுதிப் பட்டது.

19. குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா, இவை குணபேதங்களால் இம்மூன்று வகைப்படும். அவற்றை உள்ளபடி கேள்.

20. பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.

21. உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜச மென்றுணர்.

22. காரணங் கருதாமல், யாதேனும் ஒன்ற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையது ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.

23. பயன்களை வேண்டாதா நொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை சாத்விக மெனப்படும்.

24. விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயாசத்துக் கிடமான செய்கை ராஜச மெனப்படும்.

25. செய்கையின் பின் விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும் துன்பத்தையும் செய்வானது திறமையையும் கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படும் கர்மம் தாமசமெனப்படும்.

26. நசைகளற்றான், நானென்ப தற்றான்
உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான் -
இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
ஒளியியல் யுடையானென்ப.

27. வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூமையற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசபட்டோன் இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.

28. யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வ்ஞ்சகன், பொறாமை யுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக் கொண்டே போவோன் -- இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையர் எனப்படுவான்.

29. குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன் தனஞ்ஜயா! கேள்.

30. தொழிலெது, ஒழிவு யாது, செய்யத் தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலையெது -- என்பவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா! சாதிவிக புத்தியாம்.

31. தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா!

32. பார்த்தா! இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.

33. மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்விகமாவது, பார்த்தா!

34. பார்த்தா! பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங் களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாம்.

35. பார்த்தா, உறக்கத்தையும், அச்சத்தையும், துயரத்தையும், ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.

36. பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,

37. எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய் விளைவில் அமிர்த மொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

38. விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜச மெனப்படும்.

39. தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலினின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.

40. இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலத்தில் தேவருள்ளேயுமில்லை.

41. பரந்தபா! பிராம்மணர் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்;

42. அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் -- இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.

43. சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை; இறைமை -- இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாம்.

44. உழவு, பசுக் காத்தல், வாணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசிய கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.

45. தனக்கு, தனக்குரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தி யடைகிறானென்பதை சொல்லுகிறேன், கேள்.

46. உயிர்களுக்கெல்லாம் பிறப்பிடமாய், இவ்வையகமனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.

47. பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றி செய்தலும் நன்று. இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவ மடைய மாட்டான்.

48. குந்தி மகனே! இயல்பான தொழில் குறையுடையதாயினும் அதைக் கைவிடலாகாது. தீயைப் புகை சூழ்ந்திருப்பது போல் எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.

49. யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்த்து பின்னர்ச் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.

50. சித்தி யடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவானென்பதைக் கூறுகிறேன், கேள்.

51. தூய்மை பெற்ற புத்தியுடையவனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,

52. தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று தியான யோகத்தில் ஈடுபட்டு, எப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,

53. அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் -- இவற்றைவிட்டு, *மமகாரம் நீங்கி, சாந்த நிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.
(*மமகாரம் = உடைமையுணர்ச்சி)

54. பிரம்மநிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.

55. யான் எவ்வளவுடையோன், யாவன் என என்னையொருவன் உள்ளபடி பக்தியாலே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்துகொண்ட பின்னர் 'தத்' (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.

56. எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்திய பதவியை எய்துகிறான்.

57. அறிவினால் செயல்களையெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.

58. என்னை சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய், அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயெனில் பெரிய நாசத்தை அடைவாய்.

59. நீ அகங்காரதிலகப்பட்டு, "இனிப் போர் புரியேன்" என்ற துணிவு பொய்மைப்பட்டுப் போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.

60. இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.

61. அர்ஜுனா! எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான்; மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

62. பாரதா! எல்லா வடிவங்களும் அவனையே சரணெய்து. அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.

63. இங்ஙனம் ரகசியத்தாலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.

64. மீண்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன் ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.

65. உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. என்னை யெய்துவாய். உண்மை இஃதே. உனக்கிது சபதமுரைக்கிறேன். நீ எனக்கினியை.

66. எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னயே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே.

67. இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும், என்பால் பொறாமை யுடையோனுகும் சொல்லாதே.

68. இந்தப் பரம இரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்வேன். என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான்; ஐயமில்லை.

69. மானுடருக்குள்ளே, அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.

70. நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன்; இஃதென் கொள்கை.

71. நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி, இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான். அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணும் நல்லுலகங்க ளெய்துவான்.

72. பார்த்தா! சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?

அர்ஜுனன் சொல்லுகிறான்:

73. மயக்க மழிந்தது நின்னருளாலே அச்சுதா! நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்:

74. இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான -- புளகந் தரக்கூடிய -- அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.

75. யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.

76. அரசனே! கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து, நான் மீண்டும் மீண்டும் களிப்பெய்துகிறேன்.

77. அரசனே! ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரிய முண்டாகிறது! மீண்டும் மீண்டும் களிப்படைகிறேன்.

78. கண்ணன் யோகக் கடவுள், எங்குமுளன், வில்லினையேந்திய விஜயன் தன்னோடும், அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும், இஃதென் மதம்.

                                                ஸ்ரீமத் பகவத் கீதை நிறைவு பெற்றது.
                                                                        ஓம் தத்ஸத்.

                                            

பகவத் கீதை -- பதினேழாம் அத்தியாயம்

                                                       பகவத் கீதை
                                                       பதினேழாம் அத்தியாயம்
                                                               
சிரத்தாத்ர விபாக யோகம்

வரவர் குணங்களுக் கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர், சாஸ்திரத்தைத் தழுவித் தேவர்களை வணங்குவர். ராஜசச் சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவர். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவர். அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.

ஸ்ரீஅர்ஜுனன் சொல்லுகிறான்:

1. கண்ணா! சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

2. ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்வீகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்.

3. பாரத! யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் *சிரத்தை மயமானவன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளே தான் ஆகிறான். (*நம்பிக்கை)

4. ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர், யக்ஷர்களுக்கும், ராக்ஷதருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.

5. (சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமு முடையோராய், விருப்பத்திலும், விழைவிலும் சார்புற்றவர்களாய் கோரமான தவஞ் செய்கிறார்கள்.

6. இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.

7. ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்றுவகைப் படுகிறது. வேள்வியும், தவமும், தானமும், அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.

8. உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி இவற்றை மிகுதிப் படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உளமுகந்தன -- இவ்வுணவு சத்துவ குணமுடையோருக்குப் பிரியமானவை.

9. கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன -- இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைப்பன.

10. பழையது, சுவையற்றது, அருகியது, கெட்டுப் போனது, எச்சில், அசுத்தம் -- இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.

11. பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி, விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.

12. பயனைக் குறித்தெனினும், ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜசமென்றுணர், பாரதரிற் சிறந்தாய்!

13. விதி தவறியது, பிறர்க்குணவு தராதது, மந்திரமற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது -- இத்தகைய வேள்வியைத் தாமசமென்பர்.

14. தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை -- இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.

15. சினத்தை விளைக்காததும், உண்மையுடையதும், இனியதும், நலங்கருதியதுமாகிய சொல்லல், கல்விப் பயிற்சி இவை வாக்குத் தவமெனப்படும்.

16. மன அமைதி, மகிழ்ச்சி, மெளனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை -- இவை மனத் தவமெனப்படும்.

17. பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்விக மெனப்படும்.

18. மதிப்பையும், பெருமையையும், பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காகச் செய்வதுமாகிய தவம் ரஜோ வெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.

19. மூடக் கொள்கையுடன் தன்னைத்தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமச மெனப்படும்.

20. கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்விக மென்பர்.

21. கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், கிலேசத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜச மென்பர்.

22. தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதார்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமச மெனப்படும்.

23. 'ஓம் தத் ஸத்' என்ற மும்மைப் பெயர் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால், முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் வகுக்கப்பட்டன.

24. ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் 'ஓம்' என்று தொடங்கி செய்யப்படுகின்றன.

25. 'தத்' என்ற சொல்லை உச்சரித்துப் பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.

26. 'ஸத்' என்ற சொல் உண்மையென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா! புகழ்வதற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் 'ஸத்' என்ற சொல் வழங்குகிறது.

27. வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் 'ஸத்' எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாக செய்யும் கர்மமும் 'ஸத்' என்றே சொல்லப்படும்.

28. அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும், தானமும், தவமும், கர்மமும் 'அஸத்' எனப்படும். பார்த்தா! அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா.


பகவத் கீதை -- பதினாறாம் அத்தியாயம்

                                                        பகவத் கீதை
                                                           பதினாறாம் அத்தியாயம்
                                            தெய்வாசுர சம்பத் விபாக யோகம்

முதற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத்தன்மை யுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார், பொறுமை இரக்கம் பெற்றிருப்பார். அசுரத் தன்மை யுடையோரே டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத்தன்மை யுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார். மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும், தங்களுக்கு நிகர் எவருமில்லையென்றும் எண்ணிக்கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது. தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கோ சாஸ்திரமே பிரமாணமாகும்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

1. அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, வேதங் கற்றல், தவம், நேர்மை,

2. கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,

3. ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை -- இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன, பாரதா!

4. டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் -- இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன பார்த்தா!

5. தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம். அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்தை எய்திவிட்டாய்; துயரப்படாதே.

6. இவ்வுலகத்தில் உயிர்ப் படைப்பு இரண்டு வகைப்படும்; தேவ இயல் கொண்டது, அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன். பார்த்தா! அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

7. அசுரத் தன்மை கொண்டோர், தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும், வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.

8. அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும், நிலையற்றதென்றும், கடவுளற்றதென்றும் சொல்லுகிறார்கள். இது தொடர்பின்றிப் பிறந்த தென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.

9. இந்தக் காட்சியில் நிலைபெற்று, அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய், அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.

10. நிரப்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும் பொருந்தியவராய், மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.

11. பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய், 'உண்மையே இவ்வளவுதான்' எற நிச்சயமுடையோராய்,

12. நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு, காமத்துக்கும், சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ் செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.

13. "இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னவையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்,

14. இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன், நான் ஆள்வோன், நான் போகி, நான் சித்தன், நான் பலவான், நான் சுக புருஷன்,

15. நான் செல்வன், இனப்பெருக்க முடையான், எனக்கு நிகர் யாருளர்? வேட்கிறேன்; கொடுப்பேன்; களிப்பேன்" என்று அஞ்ஞானங்களால் மயங்கினோர்,

16. பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் -- இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.

17. இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.

18. அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், இனத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.

19. இங்ஙனம் பகைக்கும் கொடியோரை -- உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை, நான் எப்போதும் அசுரப் பிறப்புக்களில் எறிகிறேன்.

20. பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர், என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதையைச் சேர்கிறார்கள், குந்தியின் மகனே!

21. ஆத்ம நாசத்துக்கிடமான இம்மூன்று வாயில்களுடையது நரகம்; (அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால் இம்மூன்றையும் விடுக.

22. இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந் தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.

23. சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.

24. ஆதலால், எது செய்யத் தக்கது, எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதை யறிந்து சாஸ்திர் விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.

பகவத் கீதை -- பதினைந்தாம் அத்தியாயம்

                                                     பகவத் கீதை
                                                      பதினைந்தாம் அத்தியாயம்
                                                      
புருஷோத்தம யோகம்

பிரகிருதி, ஆத்மா இவ்விரண்டையும் தன் வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புருஷோத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார். அரசம் வித்து முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவி யிருப்பதுபோல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ மனுஷ்ய யக்ஷ ராக்ஷதாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது. இந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில் வெட்டி முறிக்க வேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளை சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண்டு வகைப் பட்டவர்கள்; கடவுளோ இவ்விரண்டுவித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

1. *அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர், அதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேதமறிவோன்.
*(அவ்யக்தம் = ஜகத்தின் தெளிவுபடாத உள்நிலை)

2. அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் கீழும் மேலும் பரந்து கிடக்கின்றன. அதன் வேர்கள் கீழ் நோக்கிப் பல்கி மனித உலகத்தில் கர்மத்தொடுப்புகளாகின்றன.

3. ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை. நான்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப் பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டியெறிந்துவிட்டு,

4. அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப் பதமுடையோனாகிய) எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.

5. செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களையெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர், விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர், மடமையற்றோர் - இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர். 

6. அதற்கு சூரியனும் சந்திரனும் தீயும் ஒளியேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ அதுவே என் பரமபதம்.

7. எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கையிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.

8. கந்தங்களைக் காற்று தோய்வினால் பற்றிச் செல்வது போல் ஈசுவரன் யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.

9. கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் -- இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடக்கிறான்.

10. அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.

11. முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். முயற்சியுடையோராயினும் தம்மைத் தாம் சமைக்காத அஞ்ஞானிகள் இவனைக் காண்கிலர்.

12. சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும், சந்திரனிடத்துள்ளதும், தீயிலுள்ளதும் -- அவ்வொளி யெல்லாம் என்னுடையதே யென்றுணர்.

13. நான் பூமியினுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்; ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளையெல்லாம் வளர்க்கிறேன்.

14. நானே *வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன். பிராணன், அபானன் என்ற வாயுக்களுடன் கூட நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.
(*வைசுவாநரன் = எல்லா நரரிடத்துமுள்ள கடவுள்)

15. எல்லாருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நிலைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் -- என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேதமுணர்ந்தோன் யானே.

16. உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர், *அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என, க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையும் குறிக்கும்; கூடஸ்தனே அக்ஷர புருஷன்.               
(*க்ஷரம் = அழிவது; அக்ஷரம் = அழியாதது; கூடஸ்தன் = சிகரத்திலுள்ளோன், மாறுதலற்றோன்)

17. இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தரிக்கிற கேடற்ற ஈசுவரன்.

18. நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.

19. மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்பதை அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.

20. குற்றமற்றோய்! இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்த சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா! இதையுணர்ந்தோன் புத்திமானாவான்; ஆனே செய்யத் தக்கது செய்தான்.

பகவத் கீதை -- பதிநான்காம் அத்தியாயம்

                                                      பகவத் கீதை
                                                         பதிநான்காம் அத்தியாயம்
                                                    
குணத்ரய விபாக யோகம்

தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முன்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தைப் படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும் ஜீவனையும் சேர்க்கிறார். பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மை காமத்துக் கேற்ப தேவ மனுஷ்ய பசு பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது. ரஜஸ், அவா, பற்றுதல் முதலிய குணங்களை யளித்து கர்மங்களில் தூண்டுகிறது. தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளை தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

1. ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீண்டும் உரைக்கிறேன். அதையறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஈடேற்றம் பெற்றிருக்கிறார்கள்.

2. இந்த ஞானத்தையடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர் படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.

3. பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா! எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.

4. எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரம்மமே பெரிய காரணம். நான் விதை தரும் பிதா.

5. சத்துவம், ரஜஸ், தமஸ் -- இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய்! இவையே உடம்பினுடன் அழிவற்ற ஆத்மாவைப் பிணிக்கின்றன.

6. அவற்றுள்ளே சத்துவம் நிர்மலத் தன்மையால் ஒளி கொண்டது; நோவற்றது. பாவமற்றோய்! அது இன்பச் சேர்க்கையாலும், ஞானச் சேர்க்கையாலும் கட்டுப் படுத்துவது.

7. ரஜோ குணம் விருப்ப இயல்புடையது; அவாவின் சேர்க்கையால் பிறப்பது. குந்தி மகனே! அது ஆத்மாவைத் தொழிற் சேர்க்கையால் கட்டுகிறது.

8. தமோ குணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். (இதுவே) எல்லா ஜீவர்களையும் மயங்கச் செய்வது. தவறுதலாலும், சோம்பராலும், உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது, பாரதா!

9. சத்துவம் இன்பத்திலே பற்றுதல் விளைவிக்கிறது. பாரதா! ரஜோ குணம் செய்கையில் பற்றுறுத்துகிறது. தமோ குணம் ஞானத்தைச் சூழ்ந்து (ஜீவனை) மயக்கத்தில் பிணிக்கிறது.

10. பாரதா! (சில வேளை) ரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் அடக்கி சத்துவம் இயல்கிறது. (சில வேளை) சத்துவத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது. அங்ங்கனமே, சத்துவத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.

11. இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின், அப்போது சத்துவ குணம் வளர்ச்சி பெற்றதென்றறியக் கடவாய்.

12. அவா, முயற்சி, தொழிலெடுப்பு, அமைதியின்மை, விருப்பம், இவை ரஜோ குணம் மிகுதிப்படுவதிலிருந்து தோன்றுகின்றன, பாரதர் காளையே!

13. ஒளியின்மை, முயற்சியின்மை, தவறுதல், மயக்கம், இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன, குருகுலச் செல்வமே!

14. சத்துவம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றனவாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.

15. ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமசில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.

16. சத்துவ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.

17. சத்துவத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவா; தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

18. சத்துவ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.

19. குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான். 

20. உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையுங் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டோன் அமிர்த நிலையடைகிறான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

21. இறைவனே, மூன்று குணங்களையுங் கடந்தோன் என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?

கடவுள் சொல்லுகிறான்:

22. ஒளி, தொழில், மயக்கம், இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.

23. புறக்கணித்தான் போலேயிருப்பான், குணங்களால் சலிப்படையான், "குணங்கள் சுழல்கின்றன" என்றெண்ணி அசைவற்று நிற்பான்.

24. துன்பத்தையும் இன்பத்தையும் நிகராகக் கொண்டோன், தன்னிலையில் நிற்பான், ஓட்டையும் கல்லையும் பொன்னையும் நிகராகக் காண்பான், இனியவரிடத்தும் இன்னாதவரிடத்தும் சமானமாக நடக்குந் தீரன், இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் நிகராகக் கணிப்பான்;

25. மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான், நண்பரிடத்தும் பகைவரிடத்தும் நடுநிலைமை பூண்டான், எல்லாவிதத் தொழிலெடுப்புக்களையுந் துறந்தான் -- அவனே குணங்களைக் கடந்தவனென்றும் சொல்லப்படுகிறான்.

26. வேறுபாடில்லாத பக்தி யோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத் தன்மை பெறத் தகுவான்.

27. சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமை யின்பத்துக்கும் நானே இடம்.

பகவத் கீதை -- பதின்மூன்றாம் அத்தியாயம்

                                                       பகவத் கீதை
                                                      பதின்மூன்றாம் அத்தியாயம்
                                     
க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

தில் தேகம் ஆத்மா இவைகளுடைய சொரூபமும், இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினொரு புலன்களும் அடங்கியது. இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவுக்கு இவை ஒன்றும் இல்லை. அத்தகைய நிலையைப் பெறவேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேணும். ஆசாரியனைப் பணிந்து அவனருளால் தூய்மைப் பெற்று புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேக சம்பந்தமே பிறப்பெனவும் அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும். அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்திலும், ஞான யோகத்திலும் பெறலாம். *தாவர ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன. 

(பதிப்பாளர் விளக்கம்: *தாவர ஜங்கமம் என்றால் நிலைத்திணை, இயங்குதிணைப் பொருட்கள் i.e. the immovables and the movables. நிலம் வீடு போன்ற அசையாப் பொருட்களும், நகை, பொன், பொருட்கள் போன்ற அசையும் பொருட்களும் என்று பொருள்) 

(க்ஷேத்திரம் = இடம். க்ஷேத்திரக்ஞன் = இடத்தை அறிவோன். பிரகிருதி = இயற்கை.     புருஷன் = ஆத்மா       ஞானம் = அறிவு. ஞேயம் = அறியப்படு பொருள்.)


அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன், ஞானம், ஞேயம் என்னுமிவற்றை அறிய விரும்புகிறேன்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

2. குந்தி மகனே! இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை க்ஷேத்திரக்ஞனென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.

3. பாரதா! எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்றுணர். க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.

4. அந்த க்ஷேத்திரமென்பது யாது? எவ்வகைப் பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் யார்? அவர் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.

5. அது (க்ஷேத்திரம்) ரிஷிகளால் பல வகைகளிலே பலவேறு சந்தங்களில் பாடப்பட்டது. ஊகம் நிறைந்தனவும், நிச்சயமுடையவனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் இசைக்கப்பட்டது.

6. மகா பூதங்கள், அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரிந்திரியங்கள், இந்திரிய நிலங்கள் ஐந்து,

7. வேட்கை, பகைமை, இன்பம், டுன்பம், உடம்பு, உணர்வு, உள்ளத்துறுதி -- இவையே க்ஷேத்திரமும் அதன் மாறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.

8. கர்வமின்மை, டம்பமின்மை, இம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்,

9. இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை,

10. பற்றின்மை, மகனையும் மனைவியையும் வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும், விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை,

11. பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடம் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை,

12. ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு -- இவை ஞானமெனப்படும். இவற்றினின்றும் வேறுபட்டது அஞ்ஞானம்.

13. ஞேயம் எதுவென்பதைச் சொல்லுகிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அது அநாதியாகிய பரப்பிரம்மம். அதை 'சத்' என்பதுமில்லை, 'அசத்' என்பதுமில்லை.

14. அது எங்கும் கைகால்களுடையது; எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்து நிற்பது;

15. எல்லா இந்திரிய குணங்களும் வாய்ந்தொளிர்வது; எல்லா இந்திரியங்களுக்கும் புறம்பானது; பற்றில்லாதது; அனைத்தையும் பொறுப்பது; குணமற்றது; குணங்களைத் துய்ப்பது;

16. பூதங்களுக்கு உள்ளும் புறமுமாவது; அசரமும் சரமுமாவது; நுண்மையால் அறிவரியது; தூரமானது; அருகிலிருப்பது;

17. உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டது போல் நிற்பது; அதுவே பூதங்களைத் தாங்குவது, அவற்றை உண்பது, பிறப்பிப்பது என்றறி.

18. ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; இருளிலும் உயர்ந்த தென்ப. அதுவே ஞானம்; ஞேயம்; ஞானத்தால் எய்தப்படு பொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது.

19. இங்ஙனம் க்ஷேத்திரம், ஞானம், ஞேயம் என்பவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.

20. பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலே பிறப்பனவென்றுணர்.

21. காரிய காரணங்களை ஆக்கும் ஏது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஏது புருஷனென்பர்.

22. புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜன்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.

23. மேற்பார்ப்போன்; அனுமதி தருவோன், சுமப்பான், உண்பான், மகேசுவரன் -- இங்ஙனம் உடம்பிலுள்ள பரம புருஷன் பரமாத்மாவென்றே சொல்லப்படுகிறான்.

24. இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்கு வானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.

25. சிலர் ஆத்மாவில், ஆத்மாவால், ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால்.

26. இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அன்னியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்த சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.

27. பரதக் காளையே! ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின், அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.

28. எல்லாப் பூதங்களிலும் சமமாக நிற்போன் பரமேசுவரன். ஐவனவற்றில் அவன் அழியான். அவனைக் காண்போனே காட்சியுடையான்.

29. எங்கும் சமானமாக ஈசன் நிற்பது காண்பான். தன்னைத்தான் துன்பப்படுத்திக் கொள்ளமாட்டான். அதனால் பரகதி அடைகிறான்.

30. எங்கும் தொழில்கள் இயற்கையாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால்தான் கர்த்தா இல்லையென்று காண்பானே காட்சியுடையான்.

31. பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான பிரம்மத்தை அடைகிறான்.

32. ஆதியின்மையால், குணமின்மையால், இந்தப் பரமாத்மா கேடற்றான். இவன் உடம்பிலிருந்தாலும் செயலற்றான்; பற்றற்றான்.

33. எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுவதிலன்.

34. சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுதையும் எங்ஙனம் ஒளியுறச் செய்கிறானோ, அதுபோல் க்ஷேத்திரத்தையுடையோன் க்ஷேத்திர முழுதையும் ஒளியுறச் செய்கிறான்.

35. ஞானக் கண்ணால் இவ்வாறு க்ஷேத்திரத்துக்கும் க்ஷேத்திரக்ஞனுக்குமுள்ள வேற்றுமையை அறிவோர் பூதபிரகிருதியினின்றும் விடுதலை பெற்றுப் பரம்பொருளை அடைகின்றனர்.

பகவத் கீதை -- பனிரெண்டாம் அத்தியாயம்


                                                      பகவத் கீதை
                                                        பனிரெண்டாம் அத்தியாயம்
                                           பக்தி யோகம்

ஞான யோக, பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பயனளிக்கு மென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தி யோகமோ கடுகப் பலனையளிக்கு மென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமான தென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன, பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்காரமற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க வேண்டும். தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில்தான் கடவுளுக்கு அதிகப் பிரீதி.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா, அல்லது நாசமற்ற 'அவ்யக்த' வஸ்துவை வழிபடுவோரா, இவ்விரு திறத்தாரில் யோகஞானத்திலே மேம்பட்டார் யாவர்?

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

2. என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய், உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவரோ, அவர்களே யோகத்தில் சிறந்தாரென நான் கருதுகிறேன்.

3. இனி அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதி கொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ,

4. இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய், எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்.

5. ஆனால், 'அவ்யக்த'த்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லை யதிகம். உடம்பெடுத்தோர் 'அவ்யக்த' நெறியெய்துதல் மிகவும் கஷ்டம்.

6. எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக் கொண்டு, பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவரோ,

7. என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்.

8. மனதை என்பால் நிறுத்தி; மதியை என்னுட் புகுத்து; இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.

9. என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னை யடைய விரும்பு.

10. பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின், என் பொருட்டுத் தொழில் செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் தொழில்கள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.

11. இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால் என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி, எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.

12. பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தைக் காட்டிலும் செய்கைப் பயன்களைத் துறந்து விடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.

13. எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,

14. எப்போதும் மகிழ்ச்சியுடையவனாய், தன்னைக் கட்டியவனாய், திட நிச்சயமுடையவனாய் என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்ப்பணம் செய்து என் தொண்டனாகிய யோகி எனக்கினியவன்.

15. எவனை உலகத்தார் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களியானாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ, அவனே எனக்கினியவன்.

16. எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரத்தையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக்கினியவன்.

17. களித்தலும், பகைத்தலும், துயர்ப்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையுந் தீமையுந் துறந்த தொண்டனே எனக்கினியவன்.

18. பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும் சமப்பட்டவன் பற்றுவிட்டவன்.

19. புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மெளனி, யாது வரினும் அதில் மகிழ்ச்சியுறுவான், குறியற்றான், ஸ்திர புத்தியுடையான் இத்தகைய பக்தன் எனக்கினியவன்.

20. இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.


பகவத் கீதை -- பதினொன்றாம் அத்தியாயம்


                                                      பகவத் கீதை
                                                        பதினொன்றாம் அத்தியாயம்
                                                          
விசுவரூப தரிசனம்

ங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட அவன் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறான். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான். விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான். பிறகு அர்ஜுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தனது விசுவரூபத்தைச் சுருக்கிக் கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு சக்கரங்களையுமேந்தி நின்று, தனது உண்மையான சொரூபத்தைக் காணவும் தன்னைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தன்னையே நேசித்திருக்கும்படி அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. என் மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு, என் மயக்கம் தீர்ந்து போயிற்று.

2. உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.

3. பரமேசுவரா, புருஷோத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே, நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.

4. இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

5.           பல நூறாகவும், பல்லாயிரமாகவும்
             வகை பல, நிறம் பல, அளவு பலவாகும்
             என் திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா!

6. ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார். மருத்துக்களைப் பார்; பாரதா! இதற்குமுன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.

7. அர்ஜுனா! இன்று, இங்கே, என்னுடலில் சராசரமான உலக முழுதும் ஒருங்கு நிற்பதைப் பார்; இன்னும் வேறு நீ எதைக் காண விரும்பினும், அதை இங்கு காண்.

8. உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்:

9. அரசனே இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத் தலைவனாகிய ஹரி பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.

10. (அவ்வடிவம்) பல வாய்களும், பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீகப் படைகள் ஏந்தியது.

11. திவிய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவ ரூபம்.

12. வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.

13. அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுதும் அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.

14. அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

15. தேவனே! நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன். பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்கு காண்கிறேன்.

16. பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நின்னை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும், தொடக்கமேனும் காண்கிலேன்.

17. மகுடமும் தண்டும் *வலயமும் தரித்தாய். ஒளித்திரளாகி யாங்கணும் ஒளிர்வாய். தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன். (*வலயம் = சக்கரம்)

18. அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தாய்; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்றுமியல் அறத்தினைக் காப்பாய்; 'சநாதன புருஷன்' நீயெனக் கொண்டேன்.

19. ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறவினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாகக் கொண்டனை; எரியுங் கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙன முன்னைக் காண்கிறேன்.

20. வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசையும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.

21. இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றனர்.

22. *ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவே தேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர், இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.

(*இங்கே கூறப்படும் ருத்திரர் முதலானோர் தேவ வகுப்புகளாவார்)

23. பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. யானும் அங்ஙனமே.

24. வானைத் தீண்டுவது, தழல்வது, பல வர்ணங்களுடையது. திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது. இனைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை. யான் அமைதி காணவில்லை.

25. அஞ்சு தரும் பற்களையுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே, எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க!

26. இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்த கர்ணனும் நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்,

27. கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர்.

28. பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல் இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.

29. விளக்குப் பூச்சிகள் மிகவும் விரவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போல, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.

30. கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் தங்கதிர்களால் வைய முழுதையும் நிரப்பிச் சுடுகின்றன.

31. உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக, தேவற்களிற் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள் புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

32. உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிருதிறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்ச மாட்டார்கள்.

33. ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள். நான் இவர்களை ஏற்கனவே கொன்றாய் விட்டது. *இடக்கை வீரா, நீ வெளிக்காரணமாக மட்டும் நின்று தொழில் செய். 

(*இடக்கைவீரன் என்பது பார்த்தனுக்கு ஒரு பெயர்)

34. துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல்; அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்.

சஞ்சயன் சொல்லுகிறான்:

35. கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீட்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

36. *இருஷிகேசா! உன் பெருங்கீர்த்தியில் உலகங் களிப்பதும் இன்புறுவதும் பொருந்தும். ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள். சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.

(இருஷிகேசன் (ரிஷிகேசன்) என்பது கண்ணனுக்கு ஒரு பெயர்)

37. மகாத்மாவே! நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய். அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம்.

38. நீ ஆதிதேவன், தொல்லோன், நீ இந்த அகிலத்தின் பரம நிலையம். நீ அறிவோன், நீ அறிபடு பொருள். நீ பரமபதம். அநந்த ரூபா நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்.

39. நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டனாகிய பிரமன் நீ. உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீண்டு மீண்டும் உனக்கு "நமோ நம:"

40. உன்னை முன்புறத்தே கும்பிடுகிறேன்; உன்னைப் பின்புறத்தே கும்பிடுகிறேன். எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் கும்பிடுகிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலியுடையாய், சர்வத்திலும் நிறைந்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன்.

41. இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல் நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, "ஏ கண்ணா! ஏ யாதவா! ஏ தோழா!" என்று தவறுதலாவேனும் அன்பாலேனும் நான் சொல்லியிருப்பதையும்,

42. விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னே யெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் -- அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன், அளவற்றோய்!

43. சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய், இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை, எனில் உனக்கு மேல் வேறு யாவர்? மூன்று உலகங்களையும் ஒப்பற்ற பெருமை உடையவனே!

44. ஆதலால், உடல் குனிய வணங்கி நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா, வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனை தோழன் போலும், அன்பனை யன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.

45. இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்ச்சியுறுகிறேன் எனினும், என் மனம் அச்சத்தால் சோர்கிறது. தேவா, எனக்கு, நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே, எனக்கருள் செய்க.

46. முன்போலவே, கிரீடமும், தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே, ஆயிரந்தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

47. அர்ஜுனா! யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய், அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ்வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது. 

48. வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா!

49. இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே. அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை இதோ பார்.

சஞ்ஜயன் சொல்லுகிறான்:

50. இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடம் கூறி மீண்டும் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

51. ஜனார்த்தனா! நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

52. காண்பதற்கரிய என் வடிவத்தை இங்கு கண்டனை, தேவர்கள்கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள்.

53. என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும், தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது.

54. பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும், என்னுட் புகுதலும் இயலும்.

55.           என் தொழில் செய்வான், எனைத்தலைக் கொண்டோன்
                 என்னுடை அடியான், பற்றெலாம் இற்றான்
                 எவ்வுயிரி டத்தும் பகைமை யிலாதான்
                 யாவன், பாண்டவ! அவனென்னை எய்துவான்.


பகவத் கீதை -- பத்தாம் அத்தியாயம்

                                                   பகவத் கீதை
                                                      பத்தாம் அத்தியாயம்
                                                       
விபூதி யோகம்

க்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. அவரே அமரர்க்கும் முன்னோர். அவரே பிறப்பிலர். அவரே இறைவன். அவரே உயிர்களனைத்தின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆத்மா. அவரே வேதங்களுள் சிறந்த சாம வேதம். தேவரில் இந்திரன். ருத்திரர்களில் சங்கரன். மலைகளில் மேருமலை. சப்தங்களுள் பிரணவம். ஸ்தாவரங்களுள் இமயமலை. மரங்களுள் அரசமரம். மனிதர்களுள் அரசன். பசுக்களுள் காமதேனு. அசுரருள் பிரகலாதான். பறவைகளுள் கருடன். வீரர்களுள் ராமன். எழுத்துக்களுள் 'அ' என்னும் முதலெழுத்து. மாதங்களுள் மார்கழி. மேற்கூறியவையெல்லாம் உதாரணமாக ஒவ்வொன்றிலும் சிறந்தவையாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. அவரின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம். எந்த அசைபொருளும் அசையாப் பொருளும் அவரைவிட்டுத் தனித்து நிற்க முடியாது.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

1. பெருந்தோளுடையாய்! பின்னுமோர் முறை நான் சொல்லப்புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்; நீ எனக்கு உகந்தவன்; ஆதலால் நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே.

2. வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவரு முணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே.

3. பிறப்பதில்லான்; தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனை யுணர்வோன். மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான், பாவமனைத்தினும் விடுதலைப் பட்டான்.

4. மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும், 

5. துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலபடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள்.

6. முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம் மக்களெல்லாரும்.

7. இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுணர்வோன் அசைவிலா யோகத்தமர்வான்; இதிலோர் ஐயமில்லை.

8. நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார்.

9. அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரையொருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.

10. எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னையவர் எய்துவார்.

11. அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

12. நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மையனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே "நித்தியபுருஷ" னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும்,

13. முனிவரெல்லாரும் மொழிகிறார்; தேவரிஷி நாரதருமங்ஙனமே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய்.

14. கேசவா! நினது *கிளவி யனைத்தையும் மெய்யெனக் கொண்டேன். பகவனே! விண்ணவரும் அசுரரு நின் விளக்கத்தை யறிவாரோ? (*கிளவி = சொல்)

15.            புருஷோத்தமா, உன்னை நீயே அறிவாய்
                 பூதங்களானாய்! பூதத் தலைவனே
                 தேவ தேவ! வையத் திறைவா!

16. எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.

17. யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எவ்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்?

18. ஜனார்த்தனா! நின் யோகத்தையும், பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க. அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

19. அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே, அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.

20. அர்ஜுனா! உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான், இடையும் அவற்றின் இறுதியும் நானே.

21. ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.

22. வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.

23. ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன்; வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு.

24. பார்த்தா! புரோகிதர்களில் தலைவனாகிய பிருகஸ்பதி நான் என்றுணர். படைத் தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல்.

25. மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான் "ஓம்" என்ற ஓரெழுத்து. யக்ஞங்களில் நான் ஜபயக்ஜம்; ஸ்தாவரங்களில் நான் இமாலயம்.

26. மரங்களனைத்திலும் நான் அரசமரம்; தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்தரகுப்தன்; சித்தர்களில் கபிலமுனி.

27. குதிரைகளினிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி.

28. ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி.

29. நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தம்மைக் கட்டினவர்களில் நான் யமன்.

30. அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குவனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.

31. தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; படை தரித்தோரில் நான் ராமன்; மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை.

32. படைப்புக்களின் ஆதியும் அந்தமும் நான், அர்ஜுனா! வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு.

33. எழுத்துக்களில் நான் 'அகரம்'; புணர்ப்புக்களில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே.

34. எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை, ஸ்திதி, பொறை.

35. அங்ஙனமே, சாமங்களில் நான் "பிருகத்சாமம்" என்ற பெரிய சாமம்; சந்தஸ்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர்சான்ற இளவேனில்.

36. வஞ்சகரின் சூது நான்; ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி, நான் நிச்சயம்; உண்மையுடையோரின் உண்மை நான்.

37. விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்ஜயன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிரகவி.

38. ஆள்வோரிடத்தே கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மெளனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.

39. எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா! சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றில்லை.

40. பார்த்தா! என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.

41. எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து -- அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.

42. அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.


பகவத் கீதை -- ஒன்பதாம் அத்தியாயம்

                                                      பகவத் கீதை
                                                         ஒன்பதாம் அத்தியாயம்
                                    
ராஜ வித்தியாச ராஜ குஹ்ய யோகம்

ங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தி யோகத்தில் இறங்குவோன், அதில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். பின்வரும் கடவுள் பெருமைகளையும் நன்குணரவேண்டும். கடவுள் எங்கும் நிறைந்த பரம்பொருள். உலகமனைத்தும் அவரிடத்திலேயே நிலைபெற்று நிற்கிறது. பிரளய காலத்தில் உலகங்கள் அனைத்தும் அவற்றின் முதற்கிழங்காகிய பிரகிருதியில் மறைகின்றன. சிருஷ்டி காலத்தில் கடவுள் அவைகளை பிரகிருதியினின்றும் வெளிப்படுத்துகிறார். உலகத்திற்கு இறைவனும், இருப்பிடமும், சரணும், தோழனும் கடவுளே. பக்தர்கள் தங்கள் செயல்களனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். மற்ற விஷயங்களைத் துறந்து கடவுளையே தியானம் செய்பவன் எத்தகைய கொடிய பாவியாயினும் நல்லோன் என்றே கருதப்பட வேண்டும். கடவுளிடத்திலேயே மனதைச் செலுத்த வேண்டும். கடவுளையே நேசிக்க வேண்டும். கடவுளையே வணங்க வேண்டும். இப்படி இருப்பவன் கடவுளை அடைவான்.

கடவுள் சொல்லுகிறான்:

1. அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து விடுபடுவாய்.

2. ராஜவித்தை, ராஜரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது, கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது, செய்தற்கு மிக எளிது, அழிவற்றது.

3. பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற மனிதர் என்னை எய்தாமல் மீண்டும் நரக சம்சாரப் பாதைகளில் மீளுகின்றனர்.

4. அவ்யக்த வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என் நிலை.

5. (மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்னுள் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்கு பார், பூதங்களைத் தரிக்கிறேன், அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது.

6. எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் நிலைபெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்து கொள்.

7. குந்தி மகனே, கற்ப நாசத்தால் எல்லா உயிர்களும் என் இயல்பை எய்துகின்றன. மறுபடி கற்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.

8. என் சக்தியில் உறுதிகொண்டு மீட்டு மீட்டும் பூதத் தொகுதி முழுதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.

9. தனஞ்சயா! என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா, அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன்போல் அமர்ந்திருக்கிறேன்.

10. என் மேற்பார்வையில் *சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே! இந்த ஏதுவால் உலகம் சுழல்கிறது.

(*சக்தி, இயற்கை, பிரகிருதி (Nature) என்ற சொற்கள் ஒரே பொருளுடையன. அஃதே, ஏது அல்லது காரணம் என்றும் சொல்லப்படும். உலகத் தோற்றத்துக்கு அதுவே காரணமாதலாலும், பிரம்மம் குணாதீத மாகையால் காரணமென்று சொல்லத் தகாதலாலும், பிரம்மம் பரம்பொருள்; சுத்த சாக்ஷி.)

11. மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரம நிலையை அவர்கள் அறிகிலர்.

12. வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத ஆசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, ஆசுர, மோகினி சக்திகளாவன -- அவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்)

13. பார்த்தா! மகாத்மாக்கள் தெய்வீக இயல்பைக் கைக்கொண்டு பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறான்.

14. திட விரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.

15. வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள்.

16. நான் ஓமம்; நான் யாகம்; நான் 'ஸ்வதா' என்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய், நான் தீ; நான் ஆவி.

17. இந்த உலகத்தின் அப்பன் நான்; இதன் அம்மா நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர்.

18. இவ்வுலகத்தின் புகழ், இதனிறைவன், இதன் கரி, இதனுறையுள், இதன் சரண், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை.

19. நான் வெப்பம் தருகிறேன்; மழையை நான் கட்டிவிடுகிறேன். நான் அதனைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா! உள்ளதும் யான்; இல்லதும் யான்.

20. சோமமுண்டார், பாவமகன்றார், மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால் வேண்டி வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.

21. விரிவாகிய வானுலகிலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.

22. வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன்.

23. அன்னிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே! விதி வழுவி என்னையே தொழுகின்றனர்.

24. நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன். நானே தலைவன்; என்னை மனிதர் உல்ளபடி அறியார்; ஆதலால் நழுவி வீழ்வார்.

25.           தேவ விரதிகள் தேவரை எய்துவார்;
                பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்;
                பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்;
                என்னை வேட்போர் என்னை எய்துவார்.

26. இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.

27. நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஓமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே! கடவுளுக்கர்ப்பணமென்று செய்.

28. இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய், என்னையும் பெறுவாய்.

29. நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை, ஆனால், என்னை அன்புடன் தொழுவோர் -- அன்னவர் என்னகத் தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன்.

30. மிகவும் கொடிய நடையோனாயினும், பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக; ஏனெனில் நன்கு முயல்கின்றான். ஆதலின்

31.           அன்னவன் விரைவிலே அறவானாவான்,
                நித்திய சாந்தியு மெய்துவான்,
                குந்தி மகனே; குறிக்கொள்!
                என தன்பன் சாகமாட்டான்.

32.           பாவிகளென்னைப் பணிவாராயினும்
                மாதரேனும், வைசியரேனும்
                சூத்திரரும் பரகதி பெறுவார்.

33.           அப்படி யிருக்கத் தூய்மையார்ந்த
                அந்தணரும் ராஜரிஷிகளும்
                எனக் கன்பராயின், என்னே! ஆதலால்;
                நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
                இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
                என்னை வழிபடக் கடவாய்.

34. மனத்தை எனக்காக்கிவிடு; பக்தியை எனக்காக்கு, என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.


பகவத் கீதை -- எட்டாம் அத்தியாயம்


                                                    பகவத் கீதை 
                                                      எட்டாம் அத்தியாயம்
                                              
அக்ஷர பிரம்ம யோகம்

முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும், அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்கையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் மனிதனின் மனதுக்குள் இருக்கின்றதோ, அத்தகைய பலனையே மறுபிறவியில் பெறுவானாதலால் பக்தர்கள் இறக்கும் தருணத்தில், கடவுளைத் தியானித்திருப்பது அவசியம். வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். ஆகையால் பக்தர் அனைவரும் தங்கள் வாழ்நாட்களில் மனதால் கடவுளை தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டும். நான்காவது வகையான பக்தர்கள் பெறும் பரமபதம்தான் அழிவற்றது. மற்ற பலனெல்லாம் அழிவுற்றது. பக்தர்கள் இறந்த பிறகு ஆத்மா செல்லும் வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பி வராத வீட்டைப் பெறலாம். மற்றொன்றில் சென்றால், காலக்கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடையலாம்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:

1. அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புருஷோத்தம, கர்மமென்பது யாது? பூதஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை?

2. யாக ஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவ தெங்கனம்?

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:

3. அழிவற்ற பரம்பொருளே பிரம்மம், அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.

4. அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூதஞானம். புருஷனைப் பற்றியது தேவஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! உடம்புக்குள் என்னை யறிதல் யாகஞானம்.

5. இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான், இதில் ஐயமில்லை.

6. ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பனாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.

7. ஆதலால் எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.

8. வேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்.

9. கவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை, எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கிறானோ;

10. இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ, அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.

11. எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்றதென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர், எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.

12. எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதிபெற்று,

13. "ஓ" என்ற பிரம்ம எழுத்தை ஒன்றையே ஜபித்துக் கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகின்றான்.

14. நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா,

15. என்னை யடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறுபிறப்பை யடையமாட்டார்.

16. அர்ஜுனா! பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.

17. பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. இதை யறிந்தோரே இராப்பகலின் இயல்பறிவார்.

18. 'அவ்யக்தம்', அதாவது மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. *இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்து விடுகின்றன.

19. இந்த பூதத் தொகுதி ஆகியாகித் தன் வசமின்றியே * இரவு வந்தவுடன் அழிகிறது; பார்த்தா! *பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது.

(*இங்கு, பகலும் இரவுமான மேற்கூறியபடி பிரம்மத்தின் பகலிரவுகளாகிய யுக சகஸ்ரங்கள்.)

20. அவ்யக்தத்தினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது.

21. அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தியபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.

22. வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா! அந்தப் பரமபுருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.

23. யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.

24. தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தையடைகிறார்கள்.

25. புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான்.

26. உலகத்தில் இந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந்தருவது.

27. இவ்வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுனா, எப்போதும் யோகத்தில் கலந்திரு.

28. இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.