பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, November 19, 2011

நூற்றாண்டு விழா காணும் ஒரு துவக்கப் பள்ளி.


நூற்றாண்டு விழா காணும் ஒரு துவக்கப் பள்ளி.

திருவையாறு ஊரை அனைவரும் அறிவர். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்து ஆயிரக்கணக்கான சாகித்யங்களை இயற்றி இசை மழை பொழிந்த மண். இசையும், நாட்டியமும் திருஞானசம்பந்தர் காலத்திலேயே முழங்கி வந்த அற்புதமான வளம் கொழிக்கும் பூமி. காவிரி பாய்ந்து பச்சை வயல்களையும் பொழில்களையும் இருபுறமும் பரப்பிச் செல்லும் எழில் பிரதேசம். நந்தி அவதரித்த ஊர். திருமழபாடியில் திருமணம் முடிந்து ஏழூர் பயணம் செய்யும் நந்தியும் ஐயாறப்பனும் சப்தஸ்தானம் செல்லும் விழா நகரம். 

அந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அளித்த குளமொன்று இருக்கிறது. கோயிலின் மேற்புறம் உள்ள மேட்டுத் தெருவில் அந்த குளமும் எதிரில் ஒரு வினாயகர் ஆலயமும் இருக்கிறது. அதே தெருவில் "சரஸ்வதி அம்பாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி" யொன்று இருக்கிறது.

இந்த சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளி 1912இல் துவங்கப் பட்டது. அதனைத் தொடங்கியவர் பிரணதார்த்திஹர ஐயர் என்பவர். கிராமம் கிராமமாகச் சென்று வீடுதேடி குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டி, இலவசமாகக் கல்வி பயிற்று வந்தார். அந்தப் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிகவும் ஏழை பின் தங்கிய பிள்ளைகளை வீடுதேடிச் சென்று அழைத்து வந்து உயர்தர கல்வியைப் புகட்டி வரும் அரும் பணியை இந்தப் பள்ளி இப்போதும் செய்து வருகிறது. 1929இல் இந்தப் பள்ளியைத் துவக்கிய பிரணதார்த்திஹர ஐயர் ஹரிஜனப் பிள்ளைகளை வீடு தேடிச் சென்று அழைத்து வந்து பள்ளியில் சேர்த்த வரலாற்று ஆவணங்கள் இருக்கின்றன. அவை நூற்றாண்டு கண்காட்சியில் வைக்கப்பட விருக்கின்றன.

2012 பிப்ரவரி மாதம் இந்தப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகளை இதன் தாளாளர் திரு கணேசன் அவர்களும் தலைமை ஆசிரியர் திரு பஞ்சநதம் அவர்களும் மற்ற ஆசிரியர்களும் செய்து வருகிறார்கள். திருவையாற்றைச் சேர்ந்த அன்பர்களும், இந்த பள்ளியின் பழைய மாணவர்களும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு கடந்த நுற்றாண்டில் இந்தப் பள்ளி செய்திருக்கும் சேவைக்கு நன்றி செலுத்தும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம். தொடர்புக்கு:- திரு வி.பஞ்சநதம், தலைமை ஆசிரியர், சரஸ்வதி அம்பாள் உதவிபெறும் துவக்கப் பள்ளி, மேட்டுத் தெரு, திருவையாறு 613202.

இஙஙனம்,
பாரதி இயக்கம், திருவையாறு.

1 comment:

Unknown said...

"............................................................
அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
..................................................................
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத் தறிவித்தல்"

புண்ணிய ஆத்மாக்களால் தான் இந்த பூமியும் மழை பெறுகிறது!...