பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, November 2, 2011

விந்தன்


விந்தன்

"எதை எழுதினாலும் அதை நான்கு பேர் பாராட்ட வேண்டும்
அல்லது திட்ட வேண்டும். இரண்டும் இல்லையென்றால்
எழுதுவதைவிட எழுதாமல் இருப்பது நன்று!" 


இந்தப் பொன்மொழியை உதிர்த்தவர் அமரர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. உதிர்க்கப்பட்டவர் கல்கியில் உதவி ஆசிரியராக இருந்த விந்தன்.

சாதாரணமாக தமிழ் எழுத்தாளர்கள் என்றால் முன்பெல்லாம் ஒருவகையான உருவகம் கொடுத்திருந்தார்கள். அப்படிப்பட்ட உருவகங்களிலிருந்து பலர் மாறுபட்டனர். அவர்களில் முதன்மையானவராக ஜெயகாந்தனைச் சொல்லலாம். அப்படிப்பட்டவர்களில் நாம் பார்க்கப் போகும் விந்தனும் ஒருவர்.

செங்கற்பட்டுக்கு அருகில் நாவலூர் எனுமிடத்தில் 1916இல் தோன்றியவர் கோவிந்தன். பள்ளிக் கல்வி அதிகம் பயிலாத கோவிந்தன் உழைப்பை நம்பினார். இரவுப் பள்ளியில் படித்தார். ஓவியம் கற்கப் போய் அதையும் பாதியில் விட்டார். ஜெமினி ஸ்டுடியோவில் ஓவியப் பிரிவில் பணியில் அமர்ந்தார். அதிலிருந்து அச்சுக் கோர்க்கும் பணிக்குப் போனார். குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும் என்பார்கள். இவர் அச்சுக் கோத்தது 'ஆனந்தவிகடன்' பிரஸ்சில். இவருக்குத் திருமணம் ஆயிற்று.

1941இல் கல்கி பத்திரிகை தொடங்கப் பட்டது. இவர் அங்கு அச்சுக்கோக்கும் பணிக்குச் சென்றார். ஆசிரியர் கல்கியின் எழுத்துக்கள் படித்து ரசிக்க அருமையாக இருந்தபோதும், அந்த எழுத்துக்கள் பிரம்ம லிபியாக இருக்கும் என்பர். அப்படிப்பட்ட கல்கியின் கையெழுத்தை பிழையின்றி அச்சுக்கோத்து அவரிடம் ஷொட்டு வாங்கியவர் கோவிந்தன். 

புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஆசிரியர் கல்கி, தன் பிரஸ்சில் வேலைபார்க்கும் கோவிந்தனையும் அவர் கதைகள் எழுதுவார் என்று தெரிந்துகொண்டு ஒரு கதை எழுதிக் கொண்டுவரச் சொன்னார். ஏதோ மனத்தைச் செலுத்தி அவர் பாணியில் அவர் மொழியில் ஒரு கதை எழுதிக் கொண்டு போய் ஆசிரியரிடம் கொடுக்க அவர் சொன்னது, "பேஷ், ரொம்ப நன்னாயிருக்கே, தொடர்ந்து எழுது" என்பதுதான்.

கல்கியில் வி.கோவிந்தன் என்பதை வி.ஜி. என்று இவர் எழுத ஆசிரியர் சொன்னார் 'விந்தன்' என்று பெயரை வைத்துக் கொள் என்றார். நாமகரணம் ஆயிற்று. அதிலும் கல்கியினால்.

சில பிரச்சினைகளை அங்கு அவர் சந்திக்க நேர்ந்தாலும், கல்கியின் அன்பு அவரை பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக ஆக்கியது. கல்கியில் பணியாற்றிய சமயம் அவர் படைத்த பல படைப்புகள் பாராட்டுகளைப் பெற்றன. எதிர்ப்புகளும் தோன்றின. அவருடைய 'முல்லைக் கொடியாள்', 'பாலும் பாவையும்' போன்றவை வெளியாகின. இந்த நிலையில் சினிமாவில் சேரும் ஆசையில் கல்கியை விட்டு விலகினார்.

டி.ஆர்.ராமண்ணாவின் 'வாழப்பிறந்தவள்' எனும் படத்துக்கு வசனம் எழுதினார். 'அன்பு' என்றொரு படம், அதில் வசனத்தோடு ஒரு பாடலையும் எழுதினார். சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த 'கூண்டுக்கிளி' எனும் படத்தில் வசனமும் சில பாடல்களும் எழுதினார். இவற்றில் கிடைத்த வருமானம் தந்த உற்சாகத்தில் "மனிதன்" என்றொரு இதழை வெளியிட்டார். தொடர்ந்து 'மணமாலை, 'சொல்லு தம்பி சொல்லு', 'பார்த்திபன் கனவு', 'குழந்தைகள் கண்ட குடியரசு' போன்ற படங்களுக்கும் வசனம் எழுதினார்.

பிழைக்க வழி தேடி மறுபடி 'தினமணி கதிர்' இதழில் சேர்ந்தார். அதில் ஓ மனிதா!, பாட்டில் பாரதம், எம்.கே.டி.பாகவதர் கதை, எம்.ஆர்.ராதா சிறைச்சாலை சிந்தனைகள் இப்படி பலவற்றை எழுதினார். வாழ்க்கை ஓட்டத்தில் வயது ஆனதே தெரியவில்லை. மணிவிழா காணும் வயது வந்துவிட்டதாம். 1975இல் போதும் இந்த வாழ்க்கை என்றோ என்னவோ இவர் மாரடைப்பால் காலமாகிவிட்டார்.

விந்தன் எழுதிய எண்ணற்ற சிறு கதைகள் 92 கதைகள் அடங்கிய இரு பாகங்கள், ஆறு புதினங்கள், 'கண் திறக்குமா?', 'பாலும் பாவையும்', 'அன்பு அலறுகிறது', 'மனிதன் மாறவில்லை', 'காதலும் கல்யாணமும்', 'சுயம்வரம்' ஆகியவை அவர் பெயரைச் சொல்ல இருந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் 'பாலும் பாவையும்' கல்கியில் தொடராக வந்தது. இந்த நாவல் இவருக்குப் பெரும் புகழைச் சேர்த்துக் கொடுத்தது. விந்தன் எழுதிய திரைப்படப் பாடல்களில் சிறப்பாகக் குறிப்பிட வேண்டுமானால், 'கூண்டுக்கிளி' படத்தில் வந்த "கொஞ்சும் கிளியான பெண்ணைக் கூண்டுக்கிளி ஆக்கிவிட்டு கெட்டி மேளம் கொட்டுவது சரியா? தப்பா?" என்ற பாடலை சொல்லலாம்.

தமிழர்கள், தமிழில் எழுதி புகழ் சேர்த்த எழுத்தாளர்களை ஓரளவுக்கேனும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அந்த எண்ணத்தில்தான் 'விந்தனின்' வரலாறு தரப்படுகிறது. 

1 comment:

Unknown said...

எழுத்தாளர் "கோ"விந்தன் அவர்கள் பற்றிய அறிய தகவல் அடங்கியப் பதிவு...
என்னைப் போன்று இவரை அறிந்திடாதவர்களுக்கு நல்ல அறிமுகம்.
நன்றிகள் ஐயா!

வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்!!!