தஞ்சை ராஜராஜேச்சரத்தில் பாண்டிய மன்னன் எடுப்பித்த அம்மன் கோயில்
தஞ்சை பெரிய கோயில் சதயத் திருவிழா பற்றிய என்னுடைய கட்டுரையைப் பாராட்டி ஒரு அன்பர் பின்னூட்டம் எழுதியிருந்தார். அவர் எழுப்பியிருந்த நியாயமான கேள்வி, பண்டைய மன்னர்கள் கட்டிய ஆலயங்கள் அப்படியே இருக்க, அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள், தலைநகரம் ஆகியவை மட்டும் அழிந்து போகக் காரணம் என்ன என்பது. அதற்கு நான் எழுதிய பதில் இதோ:---
"உங்கள் ஐயம் நியாயமானது. பல காலங்களில் பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் வினா இது. ஆலயங்கள் நிலைத்திருக்க, அவர்கள் வாழ்ந்த நகரமும், அரண்மனைகளும் காணாமல் போனது ஏன்? அவசியம் விடை தெரிந்து கொள்ள வேண்டிய வினா. மாமன்னன் ராஜராஜனாகட்டும் வேறு பல தமிழக மூவேந்தர்கள், சிற்றரசர்கள் போன்ற அரசர்களாகட்டும், அடிக்கடி தம்முள் போர் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் போரில் சில தர்மங்கள் கடைபிடிக்கப்பட்டன. இன்னாரைத்தான் தாக்குவது, இன்னின்ன இடங்களைத்தான் இடிப்பது, அழிப்பது, தீயிட்டுக் கொளுத்துவது என்றெல்லாம் வரைமுறை இருந்தது. ராஜராஜனின் சகோதரன் மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னனைக் கொன்ற செய்தி வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் காலத்துக்குப் பின்னர் மதுரையிலிருந்து சுந்தர பாண்டியன் எனும் மன்னன் சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரையும், தஞ்சாவூரையும் மன்னனின் அரண்மனை, நகரம் உட்பட ஆலயங்கள் தவிர அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி, அரண்மனை, வீடுகள் அனைத்தையும் தரைமட்டமாக்கி, அவ்விடங்களை ஏர் கொண்டு உழுது அங்கு வரகு விதைத்துவிட்டுச் சென்றான். அரண்மனை அழிந்தது. ஊரும் அழிந்தது. ஆலயம் நின்றது. எதிரி நாட்டை வென்று அவன் தலைநகரை அழித்து, உழுது, வரகு அல்லது எருக்கு விதைப்பது என்பது அவர்களுக்குச் செய்யும் அவமானம். அப்படி தஞ்சையை அழித்த சுந்தரபாண்டியன் அருகில் ஒரு புதிய ஊரை நிர்மாணித்தான். அந்த இடம் தஞ்சையில் இப்போது இருக்கும் சாமந்தான் குளம், அங்குள்ள பெருமாள் கோயில் இவைகள்தான் அந்த இடம். தவிரவும் தஞ்சை பெருவுடையார் கோயிலில் அம்மனுக்குக் கோயில் எழுப்பியவனும் அவனே. இப்படி அந்தக் கால மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டு அரண்மனைகளையும், தலைநகரங்களையும் அழிப்பது வழக்கமாகக் கொண்டிருந்ததால் பெரும்பாலான இடங்கள் தரைமட்டமாயின. ஆலயங்கள் பொதுவானவை என்பதால் அவை அழிக்கப்படவில்லை. இதுகுறித்து விரிவான கட்டுரையொன்றை விரைவில் வலையேற்றுகிறேன்."
மேலே கண்ட பதிலில் தஞ்சை பெரிய கோயிலில் நந்தி மண்டபத்துக்கு வடக்குப் புறத்தில் இப்போது காணப்பெறும் அம்மன் கோயிலை பாண்டிய மன்னன் கட்டிவைத்தான் என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
சோழப் பேரரசன் மூன்றாம் குலோத்துங்கன் மதுரை அரசன் குலசேகர பாண்டியனோடு 1202இல் போர் செய்தான். அப்போது அந்தப் போரில் வெற்றி பெற்ற சோழ அரசன் பாண்டியனுடைய அரண்மனையை தரைமட்டமாக இடித்து அவர்களுடைய பண்டாரங்களில் (Treasury) இருந்த ஏராளமான செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டான். அங்கிருந்து சோழ மன்னன் சென்ற இடம் ஆலவாயானும், மீனாட்சியும் வீற்றிருக்கும் திருக்கோயிலாகும். அங்கு சென்று தான் பாண்டிய அரண்மனை பண்டாரங்களில் இருந்து கவர்ந்த அத்தனை செல்வங்களையும் ஆலவாயான் சோமசுந்தரக் கடவுளுக்கும், மீனாட்சி அம்மைக்குமாக அளித்து விட்டான். ஆலயத்திலிருந்து ஈசனையும், அம்பாளையும் வீதி உலா எழுந்தருளச் செய்து கண்ணாரக் கண்டு மகிழ்ந்து பக்திவசப் பட்டிருக்கிறான். இந்தச் செய்தியை தன் மெய்க்கீர்த்திப் பாடல்களில் மன்னன் வெளியிட்டிருக்கிறான்.
பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின் பாண்டிய மன்னர்கள் வலிமை பெற்றார்கள். அப்போது மன்னனாக இருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பான், மூன்றாம் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1219இல் சோழநாட்டின் படைஎடுத்த்டு வந்து சோழப் படையை வென்று அவனுடைய தலைநகரமான உறையூரையும், தஞ்சையையும் செந்தழலிட்டு அழித்ததோடு, அரண்மனையையும் தரைமட்டமாக்கினான். தான் சோழநாட்டில் கவர்ந்த செல்வங்களையெல்லாம் கொண்டு போய் பாண்டியன் தில்லை நடேசப் பெருமானுக்கு அளித்து வணங்கி மகிழ்ந்தான்.
திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் பாதையில் 'திருவெள்ளறை' எனும் ஒரு வைணவத் தலம் உள்ளது. அந்த ஆலயத்தில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டுக் கூறும் செய்தியாவது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டில் அரசுக்குச் சொந்தமான பல இடங்களை அழித்தான் என்றும், அப்படி அழிவினைச் செய்தபோது ஒரே ஒரு மண்டபத்தை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவைத்தான் எனவும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது. அப்படி பாண்டியன் விட்டு வைத்த இடம் எது தெரியுமா? அந்த பாண்டியன் வாழ்ந்த காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் கரிகால் பெருவளத்தான் எனும் புகழ்மிக்க சோழமன்னனைப் புகழ்ந்து "பட்டினப்பாலை" எனும் பாடலை உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் பாடியதற்காக, சோழன் கரிகாலன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகளையும், பதினாறு கால் மண்டபம் ஒன்றையும் அந்தப் புலவருக்கு அளித்திருந்தான். அந்த மண்டபத்தை பாண்டியன் இப்போது அழிக்காமல் விட்டுவைத்தான் என்றும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது.
திருவெள்ளறையில் காணப்படும் அந்தக் கல்வெட்டுப் பாடலைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது அல்லவா? இதோ அந்தப் பாட்டு.
"வெறியார் தவளத் தொடைசெயமாறன் வெகுண்ட தொன்றும்
அறியாத செம்பியன் காவிரி நாட்டிலர மியத்துப்
பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று
நெறியால் விடுந்தூண் பதினாறுமே யங்கு நின்றனவேய்."
மன்னர்கள் பழிவாங்க பல செயல்களைச் செய்தாலும், அதிலும் சில தர்மங்களைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதை இந்த செயல் காட்டுகிறதன்றோ?
அம்மன் கோயிலின் கருவறையின் மேற்குப் புறத்துச் சுவற்றில் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இதனை ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் தன்னுடைய "ராஜராஜேச்சரம்" எனும் நூலில்விரிவாக எடுத்துக் காட்டியிருக்கிறார். அந்தக் கல்வெட்டுச் செய்தியாவது:---
"ஸ்வஸ்தி ஸ்ரீ கொட்டகர்க்குடியான உலகாண்டநாயகி நல்லூர்க்கு
எழுதின திருமுகப்படி. திருபுவனச் சக்கரவர்த்திகள் கோ
நேரின்மை கொண்டான் தஞ்சாவூர் உடையார் ஸ்ரீ இராஜ
ராஜீஸ்வரமுடையார் கோயில் தாணத்தார்க்கு
இக்கோயிலில் நாம் எழுந்தருளுவித்த உலக முழுதுமுடைய நாச்சி
யார்க்கு அமுது உள்ளிட்டு வேண்டும் அவையிற்றுக்கு அரு
மொழிதேவ வளநாட்டு மேல்கூறு விடையபுரப்பற்றிலே
கொட்டகர்க்குடியிலே பதின் ஒரு வேலி நிலம் இறையிலி
யாக இரண்டாவது வைகாசி மாதம் முதல் கொடுத்
தோம் இந்நிலம் பதின் ஒரு வேலியும் சந்திராத்தவற்
செல்லுவதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க
இந்நிலத்திற்கு காசுகடமை மரவடை புன்பயிர் குளவடை
அளவுவற்கம், உறைநாழி வெட்டி, மேற்பாடிகாவல்
அரைக்கால்வாசி உள்ளிட்ட அனைத்து வற்கமும் உட்பட்ட
தும் இவ்வூர் நத்தத்தில் ஒருபாதியும் உட்பட இறையிலி
யாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளச்
சொன்னோம் இப்படிக்கு இவை பழந்திபராயர் எழுத்து
இந்நிலத்துக்கு நான்கெல்லையும் திருச்சூலக்கல்லும்
நாட்டிக் கொள்க இவை கொடுமளூர் உடையான்
எழுத்து இவைகயலூர் உடையான் எழுத்து
யாண்டு இரண்டாவது நாள்."
முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுடைய ஆய்வின் முடிவில் இக்கல்வெட்டின் எழுத்தமைதி கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று அறிஞர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறுகிறார். இந்த அடிப்படையில் பார்த்தால் இக்கல்வெட்டு பாண்டிய மன்னன் ஒருவனுடைய கல்வெட்டு என்று கருத வேண்டியிருக்கிறது. மன்னனுடைய பெயர் குறிக்கப் பெறாமல் அவனது ஆணையாக மட்டும் இந்தச் சாசனம் இருந்தாலும், இவனே தற்போதுள்ள இந்த அம்மன் ஆலயத்தை எடுப்பித்தவன் என்பதையும் அறிய முடிகிறது.
தஞ்சை பெரிய கோயிலை "ஸ்ரீ ராஜராஜீஸ்வரம்" என்றே இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அம்மனுடைய திருநாமத்தை "உலகு முழுதும் உடைய நாச்சியார்" என்று குறிக்கிறது. இவ்வாறு எடுக்கப் பெற்ற இந்தக் கோயிலின் பூசைகளுக்காக அருமொழித்தேவ வளநாட்டில் மேற்கூறாகத் திகழும் விடையபுரத்துக் கொட்டகர்க்குடி எனும் ஊரில் பதினொரு வேலி நிலம் அளித்ததையும் இந்தக் கல்வெட்டு விவரிக்கிறது. தஞ்சை பெரும் கோயிலுக்குப் பாண்டிய மன்னன் ஒருவன் அளித்த கொடையே இந்த அம்மன் ஆலயமாகும். இதுதான் குடவாயிலாரின் முடிவு.
இராஜராஜன் திருச்சுற்று மாளிகையில் 'பரிவாராலயத்து உமாபட்டராகி' எனும் பெயரில் ஒரு அம்மன் கோயில் ஏற்கனவே இருந்திருக்கிறது. அந்த அம்மன் கோயிலுக்கு முன்புறமாக 14ஆம் நூற்றாண்டில் இக்கோயில் எழுந்துள்ளது. இந்த அம்மன் கோயில் எழுப்பப்படுவதற்கு முன்பாகவே, பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகையும் மகாமண்டபமும் சூறையாடப்பட்டு அழிவுக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறார் ஆய்வாளர்.
இந்த அம்மன் கோயிலின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகளே கி.பி.14ஆம் நூற்றாண்டுக் கட்டுமானப் பகுதிகளாகத் தோற்றமளிக்கின்றன. மகாமண்டபத்துடன் இணைந்து மிகப்பெரிய அளவில் எழில்மிகு தூண்கள், நீண்டு வளைந்த கொடுங்கைகள் ஆகியவற்றுடன் திகழும் முகமண்டபம் பிற்காலப் பணியாகத் தோற்றமளிக்கிறது. விஜயநகர சாம்ராஜ்ய அரசர்கள் காலத்தியதாக இருக்கலாம். கருவறை விமானத்தின் சிகரம் இங்குள்ள சண்டீசர் விமானத்தின் கலைப் பாணியிலேயே அமைக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் எழுதுகிறார்.
கருவறையில் ஏழு அடிக்கும் மேற்பட்ட உயரமுள்ள நின்றகோலத்தில் அமைந்த அம்மன் திருவுருவம் மிகவும் எழிலோடு காட்சியளிக்கிறது. 'உலகமுழுதுடையநாச்சியார்' என்ற திருநாமமும் இதனை நிறுவிய பாண்டிய மன்னனால் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பெயர் பிற்காலத்தில் பெரியநாயகி என்றும், சம்ஸ்கிருத மொழியில் 'ப்ருஹந்நாயகி' என்றும் மக்கள் அழைக்கின்றனர். இப்போதும் இந்தப் பெயர்தான் வழங்கப் படுகிறது.
இவ்வாலயம் பற்றிய இன்னும் பல வரலாற்றுச் செய்திகளை இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.
3 comments:
வணக்கம் ஐயா,
என் போன்று பலருக்கும் ஏற்பட்ட இந்த ஐயத்தை போக்கி அருமையான வரலாற்று உண்மைகளை கூறி விளக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா.
////மன்னனின் அரண்மனை, நகரம் உட்பட ஆலயங்கள் தவிர அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி, அரண்மனை, வீடுகள் அனைத்தையும் தரைமட்டமாக்கி, அவ்விடங்களை ஏர் கொண்டு உழுது அங்கு வரகு விதைத்துவிட்டுச் சென்றான். அரண்மனை அழிந்தது./////
இப்படியாக, மன்னர்கள் அழிப்பதும் உருவாக்குவதுமான கட்டிடங்களாலும், அரண்மனைகளாலும், பலருக்கும் பல ஆண்டுகள் வேலைகள் கிடைக்க வழியும் பிறந்திருக்கிறது என்பதையும் உணர முடிகிறது. பொருளாதாரத்தில் இது புது சுழற்சியையும், பரிவர்த்தனையும் உண்டாக்கி மக்களின் வாழ்வாதாரமும் வளர்ந்திருக்கும் என்பதையும் அறிய முடிகிறது.
////பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டில் அரசுக்குச் சொந்தமான பல இடங்களை அழித்தான் என்றும், அப்படி அழிவினைச் செய்தபோது ஒரே ஒரு மண்டபத்தை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டுவைத்தான் எனவும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது. அப்படி பாண்டியன் விட்டு வைத்த இடம் எது தெரியுமா? அந்த பாண்டியன் வாழ்ந்த காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் கரிகால் பெருவளத்தான் எனும் புகழ்மிக்க சோழமன்னனைப் புகழ்ந்து "பட்டினப்பாலை" எனும் பாடலை உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் பாடியதற்காக, சோழன் கரிகாலன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகளையும், பதினாறு கால் மண்டபம் ஒன்றையும் அந்தப் புலவருக்கு அளித்திருந்தான். அந்த மண்டபத்தை பாண்டியன் இப்போது அழிக்காமல் விட்டுவைத்தான் ////
இங்கே பதினாறு லட்சம் பொற்காசுகளையும், பதினாறு கால் மண்டபமும் பரிசளித்த அந்த கரிகால் பெருவலத்தானினும் இந்த சுந்தரபாண்டி பெயருக்குத் தகுந்தார் போல் அழகாக உயர்ந்து நிற்கிறான் என்பது மிகவும் நன்று.
வெஞ்சினத்தால் வெகுண்டெழுந்த வேங்கைகளாய் வீரி எழுந்து வாளால் வென்றாலும் செங்கோலை மறவாத சிங்காரத் தமிழர்கள் நம் முன்னோர் என்பது மிகவும் பெருமிதம் கொள்ளச் செகிறது. இதிலே அரும் பெரும் சிறப்பு எவற்றையெல்லாம் அழிக்க வேண்டும் என்பதை பொதுவாக கோவிலைத் தவிர்த்து என்று கொள்ளாமல்.. அழிக்கும் முன் நிதானமாக ஒவ்வொரு கட்டிடமும் அதன் பின்னணியும் அறிந்து அதை அழித்திருக்கிறார்கள். அதிலும் மேலும் சிறப்பு என்னவென்றால், போருக்கு வரும்போது அரண்மனையில் இருந்து கல்வியாளர்களை அழைத்து வருவதில்லை, அப்போதைக்கப்போது அத்தனை தகவல்களையும் தகவல்களை திரட்டி எதை எதை விட வேண்டும் என்று யோசித்து முடிவெடுக்கவும் கால அவகாசம் மில்லை காரணம் வென்றபோது இருக்கும் வேகம் நேரம் போக குறையலாம்.. இருந்தும் இவைகள் எப்படி சாத்தியம்!? சாத்தியமாகி இருக்கிறதே என்றால்... மன்னன் அததனையும் கற்று அறிந்து வைத்திருந்திருக்கிறான், அவனோடு வரும் போர் தளபதிகளும் இவைகளை கற்று தெரிந்தே வைத்தும் இருந்திருக்கிறார்கள் என்பதே நமக்கு விளங்கும் செய்தி.
அரசு கட்டிலிலே அயர்ந்து தூங்கிய புலவனுக்கு வெண்சாமரம் வீசிய மன்னன்கள் வாழ்ந்த பூமியல்லவா! நமது பூமி.
நல்ல பதிவு, நன்றிகள் ஐயா!
வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்!!!
Post a Comment