பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, November 14, 2011

பூலித்தேவன்


'நெற்கட்டும்செவ்வல்' பூலித்தேவன்

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்கள், வரலாற்றிலும் மறைக்கப்பட்டு, மக்களாலும் மறக்கப்பட்ட சில சுதந்திரப் போர் வீரர்களை வெளிச்சத்துக் கொண்டு வந்தார். அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோராவர். அப்படி அவர் இந்த சுதந்திரப் போர் வீரர்களை பல இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளுக்குமிடையே பரப்பி வந்த நேரத்தில் என்ன காரணத்தினாலோ தமிழ் எழுத்தாளரும், கல்கண்டு பத்திரிகை ஆசிரியருமான தமிழ்வாணன் அவர்கள் கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்று எழுதி வரலானார். ஒரு காலகட்டத்தில் ம.பொ.சி. ஒருபுறம் கட்டபொம்மனை உயர்த்தி எழுத, தமிழ்வாணன் கட்டபொம்மனை கொள்ளக்காரன் என்று எழுதியதோடு, தென் தமிழ்நாட்டில் சுதந்திரக் குரல் எழுப்பிய முதல் பாளையக்காரன் "நெய்க்கட்டான்சேவல் பூலித்தேவன்" என்றே வலியுறுத்தி எழுதி வந்தார். ஆனால் நாளடைவில் சிலம்புச் செல்வரின் குரல்தான் ஓங்கி ஒலித்தது, ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்வாணன் தூக்கிப் பிடித்த புலித்தேவனும் சுதந்திர வேகம் கொண்டவர்தான்; அதிலொன்றும் மறுப்பு இல்லை. ஆனால் கட்டபொம்மன் வரலாற்றில் அவருடைய அமைச்சர் தானாவதி பிள்ளை செய்த ஒரு காரியம், கட்டபொம்மனுக்குக் கொள்ளைக்காரன் என்ற அவப் பெயரை ஆங்கிலக் கும்பினியார் கொடுத்து விட்டனர். அதுவும் சிலர் நெஞ்சில் நிலைத்து விட்டது. என்றாலும் இருள் ஒரு நாள் அகலும், ஒளி அன்று உண்மையை விளக்கும் என்பது சரியாகிவிட்டது.

சரி, இப்போது நெய்க்கட்டான்சேவல் பூலித்தேவன் என அழைக்கப்படும் வீரன் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலுக்கு வடமேற்கில் ஆவுடையார்புரம் எனும் பெயருடைய "நெற்கட்டும் செவ்வல்" எனும் பாளையம் இருக்கிறது. இந்த பாளையத்தின் அதிபதியாக, அதாவது பாளையக்காரராக சித்திரபுத்திர தேவர் என்பவர் இருந்தார். இவரது மனைவியின் பெயர் சிவஞான நாச்சியார். இந்த பாளையக்காரருக்கு 1715இல் ஒரு வீர மகன் பிறந்தான். அந்த மகன் தான் நாம் இப்போது பார்க்கப் போகும் பூலித்தேவன்.

பாளையக்காரரின் மகன் அல்லவா? வீரம் செறிந்த நெல்லை மண்ணில் பிறந்த இந்தக் குழந்தை சிறு வயதிலேயே போர்ப் பயிற்சிகள் அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். வீர விளையாட்டுக்களிலும், வேட்டையாடுவதிலும் ஆர்வமுடைய இந்த பூலித்தேவன் ஒரு முறை காட்டிலிலுருந்து தப்பிவந்து கிராமங்களுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வந்த புலியொன்றைத் தன் கட்டாரியால் குத்திக் கொன்றாராம். அந்தப் பகுதி மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாதலின், இந்தச் செய்தியைக் கேள்விப் பட்ட நாயக்க அரசர் இந்த வீரனை அழைத்து அவனுக்கு "வடக்கத்தான் பூலித்தேவன்" என்று பட்டமளித்தாராம். அன்று முதல் இவனை பூலித்தேவன் என்றும், புலித்தேவன் என்றும் ஏதோ வாயில் நுழைந்த வகையில் மக்கள் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்கள்.

இதே வலைத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிற தஞ்சை மராத்தியர் வரலாற்றைப் படித்தவர்களுக்கு நாம் இப்போது சொல்லப்போகிற செய்தி தெரிந்திருக்கும். அதாவது ஆற்காட்டு நவாப் முகமது அலியின் அண்ணன் மாபூஸ்கான், தளபது யூசூப்கான் ஆகியோர் அவர்களது எஜமானர்களான கிழக்கிந்திய கம்பெனியின் தளபது கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான் என்பவனின் ஆணைப்படி தென் தமிழ்நாட்டு பாளையக் காரர்களிடமிருந்தெல்லாம் கிஸ்தி வசூல் செய்வதற்காக தென்னகம் நோக்கி படையெடுத்து வந்தார்கள். இது நடந்தது 1755ஆம் ஆண்டில். அதுவரை டில்லி பாதுஷாவுக்குக் கட்டுப்பட்ட, நிஜாமும், நிஜாமின் கீழ் பணியாற்றிய ஆற்காடு நவாபும், ஆங்கிலேய கம்பெனியாரிடம் வாங்கிய கடனுக்காக நேரடியாக தென் தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்துகொண்டு தங்கள் கடனை நேர் செய்துகொள்ள அனுமதி அளித்தனர். அதன் பலனாக அந்த ஆற்காட்டுப் படை முதன் முதல் தென்கோடி தமிழ்ப் பிரதேசத்துக்குள் படையெடுத்து நுழைந்தது. அவர்களிடம் வரிவசூல் செய்துகொள்வது, இல்லையேல், அவர்களது நாட்டை கபளீகரம் செய்துகொள்வது என்பது அவர்களது நோக்கம்.

மக்கள் வரிப்பணத்தை வசூல் செய்துகொண்டு ஆடம்பர வாழ்க்கையில் சுகபோகமாக இருந்த சில பாளையக்காரர்கள், ஆற்காட்டுப் படைக்கும், ஆங்கில கம்பெனியார் படைக்கும் பயந்துகொண்டு கேட்ட கிஸ்தியை அவர்களுக்குக் காணிக்கையாக்கி பணிந்து போயினர். இந்த மதார்ப்பில் ஆங்கில கம்பெனிப் படை நெற்கட்டும் செவ்வலைச் சென்றடைந்தது மாபூஸ்கான் தலைமையில். பாளையக்காரர் புலித்தேவனுக்குத் தகவல் கிடைத்ததும் கொதித்தெழுந்தார். "வரி, கிஸ்தி என்று எவனாவது என் ஆட்சிக்குரிய நிலத்தில் கால்வைத்தால் அவன் திரும்ப மாட்டான்" என்று உறுமினார். "வரியாவது, வட்டியாவது? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? வரி என்ற பெயரில் ஒரு மணி நெல்கூட இவர்களுக்குத் தரமுடியாது" என்று கர்ஜித்தார் பூலித்தேவர். 

தன்னுடைய படைகளை ஒன்று திரட்டினார். தனது மண்ணில் நுழைந்துவிட்ட அந்நியப் படையை எதிர்கொண்டு இவரே போய் அவர்களை வெறிகொண்டு தாக்கித் தோற்கடித்தார். கம்பெனிப் படைகளும், மாபூஸ்கான் படைகளும் தாங்கள் கொண்டு வந்த பீரங்கிகளையும், வெடி மருந்துகளையும் போட்டது போட்டபடி போர்க்களத்தைவிட்டு ஓட்டமெடுத்தனர். 

ஒடிப்போன மாபூஸ்கான் தன் எஜமானன் அலெக்சாண்டர் ஹெரானிடம் போய் புகார் செய்தான். ஆத்திர மடைந்த அந்த ஆங்கில கர்னல் தன்னுடைய படைகளை அழைத்துக் கொண்டு மீண்டும் பூலித்தேவனை எதிர்க்க வந்து சேர்ந்தான். என்னதான் நவீன எந்திரங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தினாலும் பூலித்தேவனின் வீரமிக்க வீரகளின் சாதாரண கத்தி ஈட்டிகளின் முன்பாக நிற்க முடியவில்லை. தோற்றுப் போன ஹெரான் சமாதானம் பேசினான். என்னவென்று? தான் தன்னுடைய மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். வெறும் இருபதினாயிரம் ரூபாயைக் கப்பமாகக் கட்டிவிட்டால் அதை வாங்கிக் கொண்டு தான் திரும்பிப் போய்விடுவதாக அவன் கூறினான். இந்த மண்ணில் வாழ்வோர் தமிழர். உழைப்பவர் தமிழர். அந்த உழைப்பை எந்தவொரு அன்னியனும் திருடிச் செல்ல தமிழ் வீரர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று பதில் சொன்னார் பூலித்தேவன். தோல்வியில் துவண்டு போய் ஹெரான் ஆற்காட்டுப் படைகளுடன் மதுரைக்குத் திரும்பிச் சென்றான்.

1756ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் திருநெல்வேலியில் மாபூஸ்கானுக்கும் பூலித்தேவருக்கும் ஒரு கடுமையான சண்டை நடந்தது. அதில் பூலித்தேவரின் நெருங்கிய தோழனொருவன் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டான். நண்பனின் மரணம் பூலித்தேவரைச் சோர்வடைய வைத்துவிட்டது. தோல்வியால் துவண்டு ஊர் திரும்பினார் பூலித்தேவர்.

அதன் பிறகு 1766இல் காப்டன் பெரிட்சன் எனும் ஆங்கில தளபதி வாசுதேவநல்லூரைத் தாக்கினான். அங்கு நடந்த போரிலும் ஆங்கில கம்பெனிப் படை தோல்வியடைந்தது. பூலித்தேவனை அடக்க என்ன வழி என்று கம்பெனியார் ஆலோசனை நடத்தினர். அவனைத் தனிமைப் படுத்தி, அவனைச் சுற்றி இருக்கும் பாளையங்களைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டால் அவனை அடக்கிவிடலாம் என்று திட்டமிட்டனர். 

1767இல் டொனால்டு காம்ப்பெல் எனும் ஆங்கில தளபதியின் தலைமையில் மேஜர் பிளிண்ட், கேப்டன் ஹார்பர் ஆகியோர் ஒரு பெரும் படையுடன் வந்து வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கத் தொடங்கினார். பீரங்கி குண்டுகள் தாக்கி சேதமடைந்த கோட்டைச் சுவர்களை, பூலித்தேவனின் ஆட்கள் உடனுக்குடன் களிமண், வைக்கோல் கொண்டு அடைத்து சீர் செய்தனர். அவசரத்துக்கு மண்ணும், வைக்கோலும் கிடைக்காத நேரத்தில் வீரர்கள் தங்கள் உடலையே அந்த இடிபாடுகளில் வைத்து அடைத்தனர். ஒரு வாரகாலம் போர் நடைபெற்றது. அது நல்ல மழைக் காலம் பூலித்தேவர் மலைப் பகுதிகளுக்குச் சென்று மறைவாக ஒளிந்து கொண்டார்.

எப்போதுமே இவர்களுக்கு ஒரு துரோகி கிடைத்துவிடுவான் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு துரோகி பூலித்தேவன் பதுங்கி இருக்கும் இடத்தை ஆங்கில கும்பெனியாரிடம் காட்டிக் கொடுத்துவிட்டான். கட்டபொம்மனுக்கு எட்டப்பனைப் போல, இவருக்கும் ஒரு குட்டப்பன் வந்து சேர்ந்தான். சதிசெய்து, சூதால் பூலித்தேவன் கைது செய்யப்பட்டு கும்பெனியாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

போகும் வழியில் தங்கள் குலதெய்வமான சங்கரன்கோயிலுக்குச் சென்று வழிபட ஆங்கிலேயர்களிடம் அனுமதி பெற்று கோயிலினுள் நுழைந்தார் பூலித்தேவர். போனவர் போனவர்தான். அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்பது யாருக்குமே தெரியவில்லை. அந்த மர்மம் இன்றுவரை தெரியவில்லை என்கின்றனர் பூலித்தேவனின் வரலாற்றை உணர்ந்தவர்கள். வாழ்க பூலித்தேவன் புகழ்.2 comments:

  1. Aiya,my hometown was Tirunelveli and it was really nice to know some unknown good infos about the Legendary people around Tirunelveli...

    ReplyDelete
  2. புலித் தேவனைப் பற்றிய புதிய பதிவு
    புரிய வைத்தது அவனின் வீரச் செறிவு.

    நன்றிகள் ஐயா

    ReplyDelete

You can give your comments here