பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, November 4, 2011

சதயத் திருநாள்


தஞ்சை பெரியகோயிலில் ஐப்பசி சதயத் திருநாள்.
(4, 5 நவம்பர் 2011 வெள்ளி, சனி)

தஞ்சை பெரிய கோயிலில் சதய நட்சத்திரத்துக்கு என்ன முக்கியத்துவம்? எதற்காகச் சதயத் திருநாள் இங்கு கொண்டாடப் படுகிறது. இந்த வரலாறு தெரிந்திராத நண்பர்கள் மனதில் இந்த வினாக்கள் எழத்தான் செய்யும். இந்த ஆலயத்தை எடுப்பித்த மாமன்னன் மும்முடிச்சோழன் சிவபாதசேகரன் இராஜராஜ பெருவுடையாரின் 1026ஆவது சதயத் திருநாள் இன்று. இந்த நாளில் அந்த மாமன்னனை நினைவு கூர்வதில் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

உலகில் எத்தனையோ மன்னர்கள் வாழ்ந்தார்கள். செயற்கரிய சாதனைகளைச் செய்துவிட்டு மறைந்தார்கள். ஒரு அலெக்சாண்டரை, ஒரு நெப்போலியனை, வடநாட்டில் கோலோச்சிய அசோகச் சக்கரவர்த்தி உட்பட எத்தனை எத்தனை மன்னர்கள் இந்த பூமியில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இல்லாத பெருமை, 1026 ஆண்டுகள் கழிந்தும் விழா எடுத்துக் கொண்டாடும் அளவுக்கு அவன் செய்த சாதனைதான் என்ன? 

தஞ்சையில் நாம் செய்த புண்ணியத்தால் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எனும் தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர் தஞ்சை பெரிய கோயில் பற்றியும், இந்த மண்ணின் வரலாற்றைப் பற்றியும் மிக ஆழமாக ஆய்ந்து "இராஜராஜேச்சரம்" எனும் ஒரு அரிய நூலையும், "தஞ்சாவூர்" எனும் நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த இராஜராஜேச்சரம் நூலைப் பற்றிய சுருக்கமான கட்டுரையொன்றை இதே வலைப்பூவில் வேறொரு இடத்தில் முன்பே வெளியிட்டிருக்கிறேன். அதனை இதுவரை படிக்காத நண்பர்கள் தயைகூர்ந்து படித்துப் பார்த்து மாமன்னன் ராஜராஜனின் பெருமையை அறிந்து கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மாமன்னன் ராஜராஜனைப் பற்றி நினைக்கும்போதே, நம் உடல் சிலிர்க்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய வளர்ச்சியை காணாத அந்த பழைய சோழ நாட்டில் என்னவெல்லாம் செய்திருக்கிறான். எத்தனை திறமையாக, துல்லியமாக, ஆழ்ந்த கருத்தமைந்த ஆலயம், சிற்பம், கல்வெட்டு இவற்றை அமைத்தான். எத்தனை கலைகள் அத்தனை கலைகளையும் தழைக்கச் செய்தான் என்பதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு உடல் புல்லரிக்கிறது.

இந்த விழாவில் பேசும்போது முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். ஆலயத்தின் இரண்டாவது கோபுரம் ராஜராஜன் நுழைவாயில் என்பது. அதனுள் அமைந்துள்ள ஒரு சிற்பத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அந்தச் சிற்பம் ரிஷபத்தின் மீது விரித்த சடையுடன், ஒரு கையில் உடுக்கையும், மற்றொரு கையில் பாம்புகளைச் சுழற்றிக் கொண்டும், மற்றொரு கையில் வழியில் பெண்கள் நீண்ட அகப்பை கொண்டு கொடுக்கும் அன்னத்தை உண்டு கொண்டும், இரு கால்களையும் இரு புறமும் தொங்கவிட்டுக் கொண்டு, சுற்றிலும் பூத கணங்கள் குடை, வாத்தியக் கருவிகள் இவைகளையெல்லாம் வாசித்துக் கொண்டு ஷோடசோபசாரங்கள் செந்து கொண்டு வர, பக்கத்தில் பல பெண்கள் கையில் அகப்பை கொண்டு சிவனுக்கு உணவு தர வரும் காட்சியொன்றை சிற்ப வடிவில் வடித்து வைத்திருக்கிறான் மாமன்னன் ராஜராஜன். இந்த சிற்பம் எதைக் குறிக்கிறது? இதன் வரலாறு என்ன? ஏதோ, வேடிக்கைக்காக இப்படியொரு சிற்பத்தை வடித்தானா? என்றெல்லாம் நமக்கு நினைக்கத் தோன்றுகிறதல்லவா?

இந்தச் சிற்பத்தின் சிறப்பைக் குறிக்கும் விவரங்களை முனைவர் குடவாயில் வாக்கால் இப்போது பார்க்கலாம். "இராஜராஜேச்சரம்" நூலில் பிச்சதேவர் (பிக்ஷாடனர்) எனும் தலைப்பில் அவர் கொடுக்கும் செய்தி.

"தாருகாவனத்தில் பூர்வமீமாம்சை நெறியைப் பின்பற்றி நின்ற முனிபுங்கவர்களின் ஆணவத்தை அழிக்க விழைந்த சிவபெருமான் தாம் பிக்ஷாடனர் கோலம் பூண்டதோடு, திருமாலை மோகினியாக பெண்வடிவம் எடுக்கச் செய்து இருவரும் அவ்விடம் நோக்கிச் சென்றனர். வேள்வி புரியும் ரிஷிகள் முன்பு மோகினி நிற்க அவள் அழகில் மயங்கித் தங்கள் நிலை மறந்து அவர்கள் வேள்வியை மறந்தனர். அதே சமயம் பிக்ஷை உகக்கும் பெருமானாக ரிஷிகளின் குடில்கள் உள்ள வீதியில் சிவபெருமான் செல்ல, பிக்ஷையிட வந்த முனிபத்தினிகள் பரமனின் அழகில் மயங்கி அவர்மேல் காமுற்று விரகதாபத்தால் அப்பெண்கள் தங்கள் ஆடை நெகிழ, வளையல் கழல, பலியேற்கும் பெருமானுக்குச் சிலர் அன்னமிட்டனர்."

"தாங்கள் மாலவனின் மாயவடிவாலும், தங்கள் மனைவியர் பிக்ஷாடனரின் அழகில் மயங்கியும் அழிந்ததை உணர்ந்த முனிவர்கள் கோபமுற்றனர். சிவனை அழித்திட வேள்விபுரியத் தொடங்கினர். அவ்வேள்வித் தீயிலிருந்து புலி ஒன்று தோன்றி சிவன் மீது பாய்ந்தது. அதைத்தன் விரல் நகத்தால் கொன்று அதன் தோலை ஆடையாக அணிகிறார் சிவபெருமான். பின்னர் ஒரு கொடும் அரவத்தினை ஏவ, சீறிவந்த அந்தப் பாம்பைத் தன் இடையில் கச்சைபோல கட்டிக் கொண்டார். குள்ளமான பூதமொன்றை ஏவினர், அந்தப் பூதத்தைத் தன் காலடியில் இட்டு மிதித்து நடனம் புரிந்தார் சிவன். பின்னர் யாகத் தீயில் எழுந்த மானையும், மழுவையும் பிடித்துத் தன் கரங்களில் வைத்துக் கொண்டார்."

"இவ்வாறு சிவபெருமான் தாருகாவனத்து ரிஷிகள் வாழும் வீதியில் சென்றபோது, பூதகணங்கள் இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டு முன்செல்ல, ஈசன், வீணை, உடுக்கை போன்றவற்றை இசைத்தபடி சென்றார். கால்களில் பாதரக்ஷை (செருப்பு) தோளில் புரளும் சடைக்கற்றை, சூலம் இவற்றோடு சிவபெருமான் சென்றார்."

"ரிஷிகளால் ஏவப்பட்ட மான் சிவனின் கைவிரல்களை நாக்கால் வருடிக் கொடுத்தது. பூதகணமோ தலையில் பலிபாத்திரம் சுமந்து வந்தது. அதில் ரிஷிபத்தினிகள் அன்னமிட்டனர். பரமன் "வட்டணை"* எனும் ஒரு வகை நடனம் ஆடிக்கொண்டு வீதியில் சென்றார்." 

(வட்டணை என்பதற்கு அகராதியில் இசையோடு தாளமிட்டுப் பாடி ஆடுதல் என்று இருக்கிறது. Beating music with the aid oc cymbals.)

இந்தக் காட்சியைத்தான் மாமன்னன் ராஜராஜனின் சிற்பிகள் இவ்வாலயத்தில் இருவிடங்களில் செதுக்கி வைத்திருக்கின்றனர். இராஜராஜன் கோபுரத்தின் தெந்திசைப் பகுதியில் புடைப்புச் சிற்பமாக இந்தக் காட்சி செதுக்கப் பட்டிருக்கிறது. மேல் இருகரங்களில் டமருகம், பாம்பு ஏந்தியபடி, கீழ் இடக்கரத்தில் கபாலமும், வலக்கரத்தில் இட்ட பிக்ஷையை உண்டுகொண்டும் வரும் காட்சி அது. பூதகணங்களில் இருவர் குடைபிடிக்க, இரு பூதகணம் சங்கு முழங்க, ஒரு பூதம் தாளமிட, ஒரு பூதம் கையை உயர்த்திப் பாடும் காட்சியைக் கண்டு களிக்கலாம். ரிஷப வாகனத்தில் சிவபெருமான் எழுந்தருளும் இந்தக் காட்சியில் நான்கு பெண்கள் பிக்ஷை இடுகின்றனர்.

இந்தக் காட்சியை திருநாவுக்கரசர் பெருமான் பாடுகிறார்.

"கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி
கபாலம் கையேந்தி கணங்கள் பாட
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும்
உத்தமராய் நின்ற ஒருவனார் தாம்
சீர் ஆர் கழல் வணங்கும் தேவ தேவர்
திரு ஆரூர் திருமூலட்டானம் மேயார்
போர் ஆர் விடை ஏறிப் பூதம் சூழ
புலியூர் சிற்றம்பலம் புக்கார் தாமே."

சுந்தரமூர்த்தி நாயனாரும் இதே காட்சியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஒரு பாடலில். அந்தப் பாடல்.

"ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால்
பூட்டிக் கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால்
பாட்டிக் கொண்டு உண்பவர் பாழிதோறும் பல பாம்பு பற்றி
ஆட்டிக் கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படாமோ"

மற்ற மன்னர்களைக் காட்டிலும் சிறப்பும், பெருமையும் பெற்று இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தபின்னும் மாமன்னன் இராஜராஜனுக்கு விழா எடுப்பதன் நோக்கம், அவன் உருவாக்கிய ஒவ்வொரு சிற்பத்துக்குப் பின்னும் ஒரு வரலாற்றை உள்ளடக்கி வைத்திருக்கிறான் என்பதும் ஒரு காரணம். இராஜராஜன் சிதம்பரம் போய் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவார ஏடுகளை எடுத்து, அழிந்தது போக எஞ்சியவற்றை நம்பியாண்டார் நம்பிகள் மூலம் தொகுத்துக் கொடுத்ததாக சொல்லப் படுகிறது. ஏடுகள் வேண்டுமானால் அவர் வெளிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வாய்மொழியாக தேவாரம் பாடப்பட்டு வழிவழியாக ஆலயங்களில் ஓதிக்கொண்டு இருந்த காரணத்தால்தான் மன்னன் அந்தத் தேவாரப் பாடல்களுக்கேற்ப இந்தச் சிற்பங்களை வடித்திருக்கிறான்.

சூரிய சந்திரர் உள்ளவரை தஞ்சை பெருவுடையார் ஆலயம் இராஜராஜேச்சரமும், அதனை உருவாக்கிய மாமன்னன் இராஜராஜனின் பெருமையும் உலகத்தில் நிலைத்து நிற்கும். அவன் வாழ்ந்த பூமியில், அவன் நடமாடிய மண்ணில் நாமும் பிறந்து நடமாடிக் கொண்டிருக்கிறோம் என்பதே என்போன்றவர்களுக்குப் பெருமை. வாழ்க மாமன்னன் இராஜராஜன் புகழ்!


4 comments:

 1. Very informative! Absolutely great!Thanks for sharing. I only feel how exhilarating it should have been had I known these details in those days when atleast 1000 times I would have visited the great and holy temple.Yes; I do feel how fortunate I was and am when my feet touch the floor of the Rajarajeswaram!

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா,
  மிகவும் பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றிகள்.சிற்பங்களின் வாயிலாக பல வரலாற்று கதையை பல நூற்றாண்டுக்கு பின்னரும் மக்களும் அறிந்து கொள்ளா வேண்டி ராஜராஜன் எழுப்பிய கோவில் கட்டிடங்களை பற்றிய தகவலுக்கு நன்றிகள் ஐயா.
  ஐயா,
  நம் தமிழ்நாட்டை ஆண்ட பல மன்னர்களை பற்றியும் அவர்கள் எழுப்பிய கோவில்களையும் காணுகின்றோம்,ஆனால் அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் மட்டும் ஏன் நமக்கு காண கிடைக்கவில்லை.இது தமிழ்நாட்டுக்கும்,தமிழர்களுக்கும் கிடைத்த சாபமா? ஏனெனில் பிற மாநிலத்தில் குறைந்தது ஒன்றாவது மிஞ்சியிருக்கிற‌து அல்லவா,ந‌மக்கு அது கூட இல்லையே என்ற ஆதங்கம் தான் ஐயா.

  ReplyDelete
 3. உங்கள் ஐயம் நியாயமானது. பல காலங்களில் பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் வினா இது. ஆலயங்கள் நிலைத்திருக்க, அவர்கள் வாழ்ந்த நகரமும், அரண்மனைகளும் காணாமல் போனது ஏன்? அவசியம் விடை தெரிந்து கொள்ள வேண்டிய வினா. மாமன்னன் ராஜராஜனாகட்டும் வேறு பல தமிழக மூவேந்தர்கள், சிற்றரசர்கள் போன்ற அரசர்களாகட்டும், அடிக்கடி தம்முள் போர் செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் காலத்தில் போரில் சில தர்மங்கள் கடைபிடிக்கப்பட்டன. இன்னாரைத்தான் தாக்குவது, இன்னின்ன இடங்களைத்தான் இடிப்பது, அழிப்பது, தீயிட்டுக் கொளுத்துவது என்றெல்லாம் வரைமுறை இருந்தது. ராஜராஜனின் சகோதரன் மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னனைக் கொன்ற செய்தி வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் காலத்துக்குப் பின்னர் மதுரையிலிருந்து சுந்தர பாண்டியன் எனும் மன்னன் சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரையும், தஞ்சாவூரையும் மன்னனின் அரண்மனை, நகரம் உட்பட ஆலயங்கள் தவிர அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி, அரண்மனை, வீடுகள் அனைத்தையும் தரைமட்டமாக்கி, அவ்விடங்களை ஏர் கொண்டு உழுது அங்கு வரகு விதைத்துவிட்டுச் சென்றான். அரண்மனை அழிந்தது. ஊரும் அழிந்தது. ஆலயம் நின்றது. எதிரி நாட்டை வென்று அவன் தலைநகரை அழித்து, உழுது, வரகு அல்லது எருக்கு விதைப்பது என்பது அவர்களுக்குச் செய்யும் அவமானம். அப்படி தஞ்சையை அழித்த சுந்தரபாண்டியன் அருகில் ஒரு புதிய ஊரை நிர்மாணித்தான். அந்த இடம் தஞ்சையில் இப்போது இருக்கும் சாமந்தான் குளம், அங்குள்ள பெருமாள் கோயில் இவைகள்தான் அந்த இடம். தவிரவும் தஞ்சை பெருவுடையார் கோயிலில் அம்மனுக்குக் கோயில் எழுப்பியவனும் அவனே. இப்படி அந்தக் கால மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டு அரண்மனைகளையும், தலைநகரங்களையும் அழிப்பது வழக்கமாகக் கொண்டிருந்ததால் பெரும்பாலான இடங்கள் தரைமட்டமாயின. ஆலயங்கள் பொதுவானவை என்பதால் அவை அழிக்கப்படவில்லை. இதுகுறித்து விரிவான கட்டுரையொன்றை விரைவில் வலையேற்றுகிறேன்.

  ReplyDelete
 4. நல்ல விளக்கத்திற்க்கு நன்றி ஐயா.நானும் அந்த கட்டுரைக்காக ஆவலாக காத்திருக்கிறேன்.

  ReplyDelete

You can give your comments here