கரிச்சான்குஞ்சு
என்னதான் ஒரு எழுத்தாளர் சிறப்பாக எழுதியிருந்தாலும், அவருடைய படைப்புகளைப் பற்றி நான்கு பேர் பெருமைபட பேசினால்தான் அவர் யார் என்பது உலகுக்குத் தெரிய வரும். மக்களாகத் தேடிப் போய் ஒருவரிடம் இருக்கும் திறமையைப் போற்றும் வழக்கம் என்றும் இருந்ததில்லை. நான் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருந்து வந்தேன். அதன் தலைவர் அடிக்கடி சுற்றறிக்கைகள் ஆங்கிலத்தில் எழுதுவார். அவைகளைப் படித்தபின் உறுப்பினர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தன்னுடைய எழுத்துக்களை ஆகா, ஊகூ என்றெல்லாம் மற்றவர்கள் பாராட்டவேண்டும், தன்னுடைய ஆங்கிலப் புலமையை மற்றவர்கள் புகழ்ந்து பேச வேண்டும் அதன் மூலம் தான் ஒரு சிறந்த தலைவர் என்பது நிலைநாட்டப்பட வேண்டுமென்பது அவருடைய கருத்து. அதற்காக ஒருசிலரைத் தூண்டிவிட்டு ஆங்காங்கே பேச வைத்தார். இந்த கைத்தடிகள் ஒவ்வொரு உறுப்பினரிடமும் சென்று சுற்றறிக்கை படித்தீர்களா, அடடா, என்ன ஆங்கில நடை. இதுபோல எழுத யாருக்கு வரும் என்றெல்லாம் பேசித்திரிவார்கள். கால ஓட்டத்தில் சும்மா கிடந்தவனுக்கும், ஓகோ, இவர் நன்றாக ஆங்கிலம் எழுதுகிறார் போலிருக்கிறது என்கிற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இது ஒரு வகை!
ஆனால், நான் இப்போது சொல்லப்போவது மற்றொரு வகை. கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற சிறந்த கதாசிரியர்கள் போல தமிழகத்தில் கரிச்சான்குஞ்சு என்கிற புனைப் பெயரில் கதைகள் எழுதிவந்த ஒரு சிறந்த கதாசிரியரும் இருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை, அவரைப் பற்றி அதிகம் யாரும் பேசக்காணோம். ஆகையால் அவரைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கத்தை இங்கு வெளியிடலாம் என்று இதனை எழுதுகிறேன்.
கரிச்சான்குஞ்சு எனும் இந்த மூத்த தலைமுறை எழுத்தாளரை வயதில் மூத்த சிலர் நினைவில் வைத்திருக்கலாம். ஆனால் இளைஞர்களுக்கு இவரைப் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. கரிச்சான்குஞ்சுவின் இயற்பெயர் ஆர்.நாராயணசாமி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை பேராசிரியர் கே.ஜி.சேஷாத்ரி எழுதி சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கிறது.
இவர் மன்னார்குடியில் இருக்கும் தேசிய உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர். இவர் பிறந்தது நன்னிலம் அருகிலுள்ள சேதினிபுரம். 1919 ஜூலை 10 இவர் பிறந்த நாள். தந்தையார் இராமாமிருத சாஸ்திரி, தாய் ஈஸ்வரி அம்மாள். தந்தையார் இளமையிலேயே மறைந்துவிட்டதால், தாயார் வறுமை காரணமாக குடந்தையில் ஒரு சத்திரத்தில் சமையல் வேலை செய்து வந்தார். வறுமை காரணமாக இவர் தாய்மாமன் இருந்த பெங்களூரில் சம்ஸ்கிருதம், வேதம் பயின்றார். மதுரையில் வந்து தமிழும், சம்ஸ்கிருதமும் பயின்று வித்வான் சிரோமணி பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில் சென்னையில் இராமகிருஷ்ணா பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அதன்பின் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளி, விஷ்ணுபுரம் உயர்நிலைப் பள்ளி அதன்பின் தொடர்ச்சியாக மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியில் என்று ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டார்.
இவருடைய எழுத்துப் பணி "மலர்ச்சி" எனும் கலைமகளில் 1940இல் வெளியான கதையோடு ஆரம்பமாகியது. இவருடைய சமகால எழுத்தாளர்களாக இருந்த தி.ஜானகிராமன், கு.ப.ராஜகோபாலன், எம்.வி.வெங்கட்ராம், ஆகியோரும் இவருடைய நண்பர்களே. அந்தக் காலத்தில் திருச்சியிலிருந்து "சிவாஜி" எனும் இதழ் வெளியாகியது. இதன் ஆசிரியர் திருலோக சீதாராம். இந்த "சிவாஜி"யில் இவர் தொடர்ந்து எழுதினார்.
வாழ்க்கையில் கஷ்டம் ஒன்றையே கண்டுவந்த இவருக்கு நல்ல மகள் கிடைத்து, அவர் மூலம் இவருக்கு நிம்மதியான வாழ்க்கையும் அமைந்தது. இவருடைய வாழ்வு 1992 ஜனவரி 19ஆம் தேதி முடிவடைந்தது. இவர் தனது வாழ்நாளில் சுமார் 200 சிறுகதைகளும், ஒரு புதினம், பல மொழிபெயர்ப்புகள் இவற்றைத் தமிழ் மொழிக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
கரிச்சான்குஞ்சுவின் சிறுகதைத் தொகுதிகள் 11 வெளியாகியிருக்கின்றன. அவை:--
1. காதல் கல்பம்
2. குபேர தரிசனம்
3. வம்ச ரத்தினம்
4. தெய்வீகம்
5. அன்றிரவே
6. கரிச்சான்குஞ்சு கதைகள்
7. சுகவாசிகள்
8. தெளிவு
9. கழுகு
10. ஒரு மாதிரியான கூட்டம்
11. அம்மா இட்ட கட்டளை
புதினம்: "பசித்த மானிடம்".
வரலாறு: 1. சங்கரர் 2. கு.ப.ரா. 3. பாரதி தேடியதும் கண்டதும்
மொழிபெயர்ப்புகள்: 1. இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்.
2. தொனி விளக்கு
இவருடைய "காதல் கல்பம்" எனும் சிறுகதை ஒரு கப்பல் பயணம் பற்றியது. இங்கிலாந்திலிருந்து கிளம்பிய பாய்மரக் கப்பலில் இந்தியா வந்தவர்கள் பற்றிய இந்தக் கதையில் பயணம் செய்யும் ஆங்கிலேயர்களுக்கு இருந்த அபிப்பிராயம், உதவாக்கறை ஆட்களும் இந்தியா சென்றால் செல்வந்தனாகலாம் என்பதுதானாம். அதில் பயணம் செய்த ஒரு இளைஞன் பற்றிய கதை இது. இந்தக் கதையில் கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் கிடையாது.
"லக்ஷப்பாட்டி" என்றொரு கதை. 1967 "சிவாஜி" ஆண்டு மலரில் வெளியானது. அதில் ஒரு பாட்டி, தன் ஏழை பேரனுக்கு, அவன் தனக்கு சேவை செய்ததைப் பாராட்டி "இதோ பார் அம்பி! உனக்கு இரண்டு லட்சம் தருகிறேன். இனிமேல் உனக்கு முன்னேற்றம்தான்" என்று ஒரு பொட்டணத்தைக் கொடுக்கிறாள். பேரன் பிரித்துப் பார்க்க அதில் இருந்தது திருநீறு. அதில் அவள் லக்ஷம் தடவை ராமநாமாவை எழுதி எழுதி வைத்ததாம். இப்படி முடிகிறது கதை.
"அம்மா" என்றொரு கதை. வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அன்றைய நடுத்தர குடும்பத்தின் வறுமை, கஷ்டங்கள், பெண்களின் தியாகம் இவற்றை விளக்கும் கதை இது.
"காதல் காவியம்" என்ற கதை 1973இல் வெளிவந்தது. இந்தக் கதை மனவருத்தத்தில் இருந்த ஒரு தம்பதியரை இணைத்து வைத்ததாம். அதுதான் கதை.
"புதிய நசிகேதன்" எனும் கதை 1973இல் வெளிவந்ததுதான். பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் பற்றிய கதை இது. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இந்தியா நோக்கி வந்த ஜப்பானிய படைக்கும், இந்தியப் படைக்கும் நடந்த போர் பற்றிய விவரங்கள். வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியது இது.
கரிச்சான்குஞ்சுவின் கதைகள் பெரும்பாலும் மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அவர் காலத்தில் இவருடைய பெருமையை எழுதுலகம் நன்கு புரிந்து கொண்டிருந்தது. இதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சொல்லலாம். ஒருமுறை இவர் சென்னை சென்றார். கையில் இருந்த பணமெல்லாம் செலவாகிவிட்டது. ஊர் திரும்ப பணம் இல்லை. இவர் "ஆனந்தவிகடன்" அலுவலகம் சென்றார். அங்கு போய் ஆசிரியரிடம் ஐந்து ருபாய் பணம் கடனாக வேண்டும், ஊர் போய்ச்சேர்ந்து கதை எழுதி அனுப்பி கடனைத் தீர்த்து விடுகிறேன் என்றாராம். அவரோ, அங்கேயே உட்கார்ந்து கதையை எழுதிக் கொடுத்துவிட்டுப் பணம் வாங்கிச் செல்லும்படி சொன்னார். இவரும் அப்படியே அங்கேயே உட்கார்ந்து ஒரு கதை எழுதிக் கொடுத்துவிட்டுப் பணம் வாங்கிக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தாராம். எப்படி இருக்கு?
இவரைப் பற்றி இன்னொரு செய்தியும் கூட சுவாரசியமானது. இவருடைய தோற்றம் தலையில் குடுமி, வேதப் படிப்பு, நெற்றியில் பட்டை திருநீறு, சந்தனக் கீற்று, ஆனால் இவர் ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி. கும்பகோணத்தில் ஒரு சமயம் கம்யூனிச இயக்கம் சார்ந்த பீப்பிள்ஸ் வார் குரூப் நடத்திய ஊர்வலத்தில் "புரட்சி ஓங்குக!" என்று கோஷமிட்டுக் கொண்டு முன்வரிசையில் சென்றவர் இந்தக் கரிச்சான்குஞ்சு. இப்போது புரிகிறதா கரிச்சான்குஞ்சு யார் என்று?
4 comments:
கரிச்சான்குஞ்சு பற்றிய தகவல்கள் அருமை!
கலைமகள் கடாட்சம் அவரோடு இருந்ததால்
வேண்டும் போது லக்ஷ்மி கடாட்சத்தை
பெற்றிருக்கிறார்....
கதையை வாங்கிக் கொண்டு பணம் தந்தது!!!!
பத்திரிகை வியாபாரியை சரியாக காட்டுகிறது!
பெரும்பாலும் வம்படியாகப் பேசுபவர்கள்
இரண்டையும் முழுவதுமாகப் படிக்காமல்
பேசுபவர்களே...
நல்ல ஆன்மீக வாதி என்பவன் கம்யூனிசன் தான்
இரண்டின் நோக்கும் போக்கும் ஒன்றே என்பதை
இரண்டையும் படித்தவர்கள் உணர்வார்கள்.
இயற்கையோடு இயற்கையாக எல்லாவற்றையும்
பொதுவில் கொண்டு இயற்கை எப்படி இயற்கையாகவே தனது
கடமைகளை செய்து வாழ்கின்றனவோ அப்படித் தானே வாழ
ஆன்மீகமும் கூறுகிறது... என்ன அது அடுத்தப் படிக்கு போகிறது
உலகாயப் பொருள்களின் சமத்துவம் மட்டும் பேசுகின்ற
கம்யூனிஷம்... ஆன்மிகம் கூறும் இன்னொரு பக்கத்திற்கு
அது பிறந்து வளர்ந்த சூழலில் வராமல் இருந்துவிட்டது.
இருந்தும் அந்தக் கருத்துக்கள் முழுவதும் மறுக்கப் பட்டு இருந்தால்
கம்யூனிஸ நாடுகளில் தர்காக்களும், தேவாலயங்களும்
மண்ணோடு மண்ணாக்கப் பட்டு இருந்திருக்க வேண்டும் அல்லவா!
இடையில் நடக்கும், திருகுதாளங்கள், குழப்பங்கள்
சுயநல விரும்பிகளின் அரங்கேற்றமே அன்றி வேறல்ல..
அந்த வகையிலே தன்னை காவி வேஷ்டிக் கட்டிய
கம்யூனிஷ்ட் என்று குன்றக்குடி அடிகளார்
அவர்கள் (முன்னவர்) கூறியதைக் கேட்டுள்ளேன்,
அதைப் போல குடுமிகொண்ட வேதம் படித்த
திருநீறு இட்ட கம்யூனிஷ்ட் கரிச்சான்குஞ்சு
என்பதும் சிறப்பே!
நல்ல பதிவு,
நன்றிகள் ஐயா!
வாழ்க! வளர்க!! பாரதி இலக்கியப் பயிலகம்!!!
தங்களது கரிச்சான்குஞ்சு பற்றிய பதிவு மகிழ்ச்சி அளித்தது. அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தவன் என்கிற முறையில் அவரோடு எனக்குக் கிடைத்த அனுபவங்களையும் இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கீழே அதற்கான link-ஐ அளித்திருக்கிறேன்.
http://smaraman.blogspot.in/2010/11/katithangal.html
எஸ்.எம்.ஏ.ராம்'
சென்னை-43.
தங்களது கரிச்சான் குஞ்சு பற்றிய பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றவன் என்கிற முறையில், அவரோடு எனக்கு நேர்ந்த மறக்கவியலாத அனுபங்களையும் இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 1992-ஆம் வருஷம் அவர் மறைந்த போது, அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நான் எழுதிக் கணையாழியில் வெளி வந்த இந்தக் கடிதத்தில் அவரைப் பற்றிய எனது பார்வைகளை நான் பதிவு செய்திருக்கிறேன்.
அதற்கான link: http://smaraman.blogspot.in/2010/11/katithangal.html
இப்படிக்கு,
எஸ்.எம்.ஏ.ராம்,
சென்னை-43.
வணக்கம்
இன்று உங்களின் வலைப்பக்கம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் அருமையான பதிவு உங்களின் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/02/6.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment