பட்டுக்கோட்டை நாடியம்மன்.
பட்டுக்கோட்டை என்றவுடன் நமது நினைவுக்கு முதலில் வருவது அங்கு கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் நாடியம்மனும், பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாவில் அந்த அம்மனுக்கு அணிவிக்கப்பெறும் வரகரிசி மாலையும்தான். பெரும்பாலும் நாடிமுத்து என்ற பெயர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்தான் வைத்துக் கொள்வார்கள். அந்தப் பெயரும் இந்த அம்மன் பெயரால் ஏற்பட்டதுதான். காலங்காலமாக இந்த அம்மனுக்கு கேழ்வரகு எனும் தானியத்தினால் ஆன மாலையை, அம்மன் வீதிஉலா வருகின்ற போது பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் அருகிலுள்ள செட்டித் தெருவில், பெரு நிலக்கிழாரும், செல்வந்தரும், முன்னாள் தஞ்சாவூர் ஜில்லா போர்டின் தலைவருமான காலஞ்சென்ற நாடிமுத்துப் பிள்ளையின் வீட்டினருகில் இந்த கோலகலமான வரகரிசி மாலை சூட்டும் விழா நள்ளிரவில் நடைபெறும். இதற்காக சுற்றுப்புற கிராமங்களிலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்து கண்டு அம்மனை தரிசித்துச் செல்வார்கள். திருவிழா அறிக்கையிலும் இந்த வரகரிசி மாலை நிகழ்ச்சியே மிகப் பிரதானமாகக் குறிப்பிடப்படும். அப்படி இந்த நாடியம்மனுக்கு இவ்வூரில் என்ன விசேஷம்.
பட்டுக்கோட்டை சமீப காலத்தில் பெருநகரமாகவும், தென்னாட்டு சிங்கப்பூர் என்றும், அதன் செல்வச் சிறப்பு காரணமாக அழைக்கப்படுகிறது. சுமார் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக இவ்வூர் மிகச் சிறிய ஊராக, ஊராட்சியாக, அரசாங்க அதிகாரிகளை தண்டனையாக மாற்றுவதற்குப் பயன்பட்டு வந்த இடம். கல்லணை கால்வாய் வெட்டப்பட்டு இவ்வூர் மிகச் செழிப்பாகவும், வியாபாரத் தொடர்பினாலும் இன்று செல்வச் செழிப்போடு திகழ்கிறது. இவ்வூரிலும், இதனைச் சுற்றிலுமுள்ள கிராமங்களிலும் கவிஞர்கள் அதிகமாகத் தோன்றி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகத்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திகழ்ந்திருக்கிறார். இந்த ஊரின் தென்புறத்தில், பட்டுக்கோட்டை அறந்தாங்கி ரயில்வே பாதைக்கும் தென்புறத்தில் ஒரு பெரிய ஏரிக்கரையில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தப் பகுதியில் அதிக குடியிருப்புகள் தோன்றிவிட்டன.
இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு மழவராயர்கள் எனும் மன்னர் வம்சம் ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவ்வூர் முற்காலத்தில் வனாந்திரமாக இருந்திருக்க வேண்டும், பின்னர் மெள்ள மெள்ள மக்கள் குடியேறி ஊர்களையும், நகரங்களையும் உருவாக்கி அங்கே தாங்கள் வழிபட ஆலயங்களையும் அமைத்தார்கள். அப்படி அமைக்கப்பட்ட ஆலயம்தான் நாடியம்மன் ஆலயம். இவ்வாலயம் தவிர இவ்வூரில் கோட்டை பெருமாள் கோயில், சிவன் கோயில், காசாங்குளக் கரையில் சிவன் கோயில், பெருமாள் கோயில் ஆகியவைகளும் அமைந்திருக்கின்றன.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் அவர்களது ராஜ்யத்தின் எல்லைக்குள் பற்பல ஆலயங்களைப் புதிது புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். சிவன் கோயில்கள் சோழ மன்னர்கள் காலத்திலும், பெருமாள் ஆலயங்கள் பெரும்பாலும் நாயக்க மன்னர்கள் காலத்திலும் சிறப்பாகக் கட்டப்பட்டு போற்றப்பட்டு வந்தன. இந்த மராட்டியர்களுக்கு குல தெய்வம் பெண்தெய்வம் என்பதால், இவர்கள் அதிகமாக கிராம பெண் தேவதைகளுக்கே ஆலயங்கள் கட்டி வைத்தனர். சமயபுரம், புன்னைநல்லூர் போன்ற ஊர்களில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொல்லப்படும் வரலாறு போலவே இந்த நாடியம்மன் கோயில் உருவானதற்கும் ஒரு கதை வழக்கில் இருக்கிறது.
ஒருமுறை தஞ்சை மராட்டிய மன்னன் ஒருவன் காட்டில் வேட்டையாடி வந்தபோது, அப்போது குறுக்கிட்ட ஒரு மிருகத்தைத் துரத்திக் கொண்டு சென்று, அது பிடிபடாமல் போகவே அதன்மீது குறிவைத்துத் தாக்க அது ஓர் புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டதாம். அது அடிபட்டிருந்தால் அந்தப் புதருக்குள்தான் இருக்க வேண்டுமென்று, மன்னன் ஆட்களை விட்டு அங்கு தேடச் சொன்னான். அப்போது ஆட்கள் புதரை நீக்கிப் பார்த்த போது அங்கு ரத்தம் ஒழுக ஓர் அழகிய பிடாரியம்மன் சிலை தென்பட்டதாம். அதிர்ச்சியடைந்த மன்னன் உடனே அந்த சிலையை வெளியே கொணர்ந்து அதனை சுத்தம் செய்து, பட்டுக்கோட்டையின் கோட்டைப் பகுதியில் இருந்த சிவன் கோயில் பூசாரிகளை அழைத்து பிடாரியம்மனுக்கு அது கிடைத்த இடத்திலேயே ஓர் ஆலயம் கட்டி பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டான். அவ்வண்ணமே, அந்த பிடாரி சிலை வனாந்திரமாய் இருந்த அந்த இடத்தில் கோயில் கொண்டது.
பிறகு காட்டில் இருந்த இந்த அம்மனுக்கு நித்தியப்படி பூசைகளும், விழாக்களும் கொண்டாடும் பொறுப்பையும், ஆலயத்தைக் கட்டி நிர்வகிக்கும் பொறுப்பையும் அவ்வூரிலிருந்த சின்னான் செட்டியார் என்பவரிடம் கொடுத்து பராமரிக்கும்படி ஆணையிட்டான் மன்னன். முதலில் காட்டில் கண்டெடுத்த கருங்கல் பிடாரியம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் செட்டியாரின் முயற்சியின் காரணமாக, இந்த அம்மனுக்கு ஓர் ஐம்பொன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபாடு நடத்தலாயினர். நாளடைவில் இந்த அம்மன் நாடியம்மன் என்ற பெயர் பெற்றாள். தன்னை நாடிவந்து தேடிக் கண்டுபிடித்து மன்னன் ஆலயம் எழுப்பியதனாலா? அல்லது நாடிவரும் பக்தர்களுக்கு நலமருளும் கருணையைக் கருதியா? நாடியம்மன் என்ற பெயர் எங்ஙனம் ஏற்பட்டது. இதற்கு பலரும் பல பதில்களைக் கூறுகிறார்கள். எனினும் நாடியவர்களுக்கு நலமருளும் நல்ல தாய் என்றே நாம் வழிபடலாம்.
பங்குனி மாதத்தில் இந்த அம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா தொடங்குகிறது. இது சித்திரை மாதத்திலும் தொடர்ந்து வரகரிசி மாலையுடன் உத்ஸவம் முடிவடைகிறது. திருவிழா காலங்களில் அம்மன் தனது ஆலயத்தை விட்டுக் குடிபெயர்ந்து பெரிய கடைத்தெருவின் நடுவிலுள்ள மண்டகப்படி எனும் மண்டபத்தில் குடியேறி, விடையேற்றி விழா முடிந்த பிறகுதான் ஆலயம் திரும்புகிறாள். திருவிழா அனைத்து நாட்களிலும் இரவில் அம்மன் நகர்வலம் வருகிறாள். அந்தக் காலத்தில் நாதசுர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை முதல் அனைத்து பெரிய வித்வான்களும் இரவில் அம்மன் புறப்பாட்டின்போது நடந்து வந்தே விடிய விடிய நாதசுரம் வாசித்த வரலாறு உண்டு. ஆங்காங்கே இவர்களுக்கு பெஞ்சுகளைக் கொண்டு மேடை அமைக்கப்பட்டு தொடர்ந்து பலமணி நேரம் வாசிப்பதும் உண்டு. வெண்ணைத்தாழி, தேரோட்டம் முதலான விசேஷங்களும் திருவிழா நாட்களில் உண்டு. வெண்ணைத்தாழியின் போது அம்மன் ஸ்ரீ கிருஷ்ணனைப் போல, வெண்ணைப் பானையை அணைத்துக் கொண்ட கோலத்தில் வீதிவலம் வருகையில், அவ்வூரிலுள்ளோர் வேண்டுதலையொட்டி அம்மனுக்குப் பட்டுத் துணிகளை வாங்கி அணிவிப்பார்கள். தினமும் மாலை வேளைகளில் மண்டகப்படி மண்டபத்தில் இன்னிசை விருந்தும் நடைபெறும்.
அம்மனின் ஐம்பொன் உற்சவ விக்கிரகம் கோட்டை சிவன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். திருவிழா காலங்களில் மட்டும் மண்டகப்படிக்குக் கொண்டு வரப்படும். இந்த அம்மனின் விழாவையொட்டி, அம்மன் விக்கிரகம் கோட்டை பெருமாள் கோயிலுக்குச் சென்று சீர்வரிசை பெற்று வரும் நிகழ்ச்சியும், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சியையும், பெருமாள் தங்கைக்குச் சீர்வரிசை செய்யும் காட்சியும் நம் நினைவுக்கு வரும்.
நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்தவளாக இந்த அம்மன் விளங்குவதால், பக்தர்கள் இவளை வணங்காமல் இவ்வூரில் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை. பரம்பரை தர்மகர்த்தாக்களாக விளங்கும் இவ்வூர் பிரபலஸ்தர்கள் ஆண்டுதோறும், இவ்வாலயத் திருவிழாவைச் சிறப்பாகச் செய்து வருவதோடு, மக்களும் நாடியம்மன் திருவிழா எப்போது என்று காத்திருப்பார்கள். நாடியம்மன் மக்களுக்கு நல்லருள் வழங்கி பாதுகாத்து வரவேண்டுமென்று நாமும் வேண்டுவோம்.
No comments:
Post a Comment