புன்னைநல்லூர் மாரியம்மன்.
தமிழ்நாட்டில் மாரியம்மன் வழிபாடு என்பது வழிவழியாக வந்திருக்கும் செய்தி நமக்கெல்லாம் தெரியும். பூம்புகார் செல்வி கண்ணகி தன் கணவன் கோவலனுடன் பாண்டியநாடு சென்று, அங்கு கோவலன் தன் மனைவியின் சிலம்பை விற்க முயன்றபோது சூதினால் கள்வன் என்று சந்தேகிக்கப்பட்டு, பாண்டியன் நெடுஞ்செழியனால் அநியாயமாக அவசரப்பட்டு கொலை தண்டனைக்கு ஆளானான். செய்தி கேட்டு குமுறி எழுந்த கண்ணகி மதுரைக்குத் தீமூட்டிவிட்டு பேரியாற்றின் கரையோரமாகவே பயணம் செய்து சேர நாட்டைச் சென்றடைந்தாள். அதுமுதல் பாண்டியநாடு மழை வளம் நீங்கி வரட்சியின் பிடியில் சிக்கித் தவித்தது. சேரநாட்டில் கோயில் கொண்டுவிட்ட கண்ணகியின் சாபம்தான் பாண்டிய நாட்டின் மழையின்மைக்குக் காரணம் என்று, அந்த பத்தினித் தெய்வத்துக்கு விழா எடுத்து வழிபட, மழை பெய்து நாடு மீண்டும் வளம் பெற்றதாகக் கூறுவார்கள். அதுமுதல் அந்த தெய்வம் மாரியம்மன் முதலான பல்வேறு பெயர்களில் இலங்கை மற்றும் தமிழகம் முழுவதும் கோயில் கொள்ளவும், மக்கள் கோடை காலத்தில் அந்த தெய்வத்தை வேண்டி அந்த ஆண்டில் நல்ல மழை பெய்ய வழிபாடு செய்து வரலானார்கள். இந்த தெய்வம் தான் உஷ்ணத்தின் காரணமாக வரும் அம்மை நோயைத் தீர்க்க வல்லவள் என்றும் நம்பிக்கை ஏற்பட்டு உடலில் ஏற்படும் அம்மை முத்துக்களை இந்த முத்துமாரியம்மன் தீர்த்து வைப்பதாகவும் நம்பிக்கையில் வழிபாடு செய்து வருகிறார்கள். இவ்வுண்மையை வலியுறுத்தும் வகையில் புன்னைநல்லூரிலும் சரி, திருச்சிராப்பள்ளியை அடுத்த சமயபுரத்திலும் சரி, ஆங்கிலேயர்களுக்கும் தன் சக்தியை இந்த மாரியம்மன் காட்டியதாகவும் கதைகள் உண்டு.
அத்தகைய தமிழ்நாட்டு மாரியம்மன் கோயில்களில் பல மிகவும் புகழ் வாய்ந்தவை. திருச்சியை அடுத்த சமயபுரத்தில் கோயில் கொண்டுள்ள சமயபுரத்தாள், வலங்கைமானில் பாடைக்காவடிக்குப் பெயர் பெற்ற மாரியம்மன், இவை தவிர தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் கோயில் கொண்டுள்ள மாரியம்மன் இவர்களைக் குறிப்பாகச் சொல்லலாம். இந்த மாரியம்மனின் புகழ் மிகப் பழைமையான காலத்தில் ஏற்பட்டதல்ல, தஞ்சைப் பகுதியை பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்களின் மேற்பார்வையில் ஆண்டுவந்த போது, அவர்களுக்குப் பிரத்தியக்ஷமாக காட்சியளித்து அருள் பாலித்ததாக வரலாறு கூறுகிறது. இந்த புன்னை நல்லூராள் பற்றிய சில விவரங்களை இப்போது பார்க்கலாம்.
மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆள்வதற்கு முன்பு, இங்கு நாயக்க மன்னர்களின் பிரதிநிதிகள் ஆண்டு வந்தனர். அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடைச் சோழ மன்னர்கள் புகழ் வாய்ந்த விஜயாலயன் வம்சத்தினர், குறிப்பாக ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் ஆண்ட செய்தி நமக்கெல்லாம் தெரியும். இந்த கடைச் சோழர்களுக்கு காளியே குல தெய்வம் என்பதையும் நாம் முன்பே பார்த்தோம். அப்படி அவர்கள் தங்கள் தலை நகரைச் சுற்றி பல காளிகோயில்களை எழுப்பியிருந்தனர். அவை அந்த நாட்டின் எல்லைத் தெய்வங்களாகப் போற்றி வணங்கப்பட்டன.
அப்படி நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்ததுதான் இந்த அம்மன் கோயில். இது ஒரு காலத்தில் புகழ் மிக்கதாக விளங்கி, பின்பு நாளாவட்டத்தில் கவனிப்பாரின்றி போய், இதனைச் சுற்றி காட்டுப் பகுதி அடர்ந்து வளர்ந்து விட்டது. மக்கள் போக்கு வரத்தும் இதனால் இங்கு இல்லாமல் போய்விட்டது. மராட்டிய மன்னர் ஒருவர் தனது ஆட்சிக் காலத்தில் மாரியம்மனை வழிபடுவதற்காக திருச்சியை அடுத்த சமயபுரத்துக்கு அடிக்கடி போய் அம்மனை தரிசித்து வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அப்படி ஒரு முறை அவர் அங்கு சென்றபோது இரவு அர்த்தஜாம பூஜை முடிந்து ஆலயத்தை மூடிவிட்டனர். சந்நிதி ஜாம பூஜைகள் முடிந்து நடை சாத்திவிட்டால் அடுத்த ஜாம பூஜைக்குத்தான் திறக்க வேண்டுமென்பது சாத்திரங்களில் கூறப்பட்ட விதி. அதன்படி இரவு அந்த கோயிலிலேயே அந்த மன்னன் தங்கிவிட்டு மறுநாள் காலை தரிசிக்கலாம் என்று அந்த ஆலயத்திலேயே படுத்து தூங்கிவிட்டார்.
அவர் தூக்கத்தில் ஏற்பட்ட நிழலான நினைவில், அது கனவு என்றுகூட சொல்லலாம், அதில் அம்மன் அரசனிடம் அசரீரியாக தான் அவனது தலைநகரத்துக்கு மிக அருகில் ஊருக்குக் கிழக்கே ஐந்தாறு கல் தொலைவில் புற்றுக்குள் மறைந்திருப்பதாகவும், தன்னை வெளிக் கொணர்ந்து மக்கள் வழிபடும் விதத்தில் ஓர் ஆலயம் அமைத்து தினமும் வழிபடலாமே என்று கூறினாளாராம். தூக்கம் கலைந்து எழுந்த மன்னனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அன்னை தன்னிடம் பேசினாளா. அது கனவா? அல்லது உண்மையா? தஞ்சைக்குக் கிழக்கே அன்னை கூறிய இடம் எதுவாக இருக்கும்? இப்படி அவன் மனதில் குழப்பத்தோடு தலைநகர் திரும்பினான்.
தன் வெள்ளை புரவியின் மீதேறிக் கொண்டு அன்னை கூறிய இடம் எது என்று தேடிக் கொண்டு வனாந்தரப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஒரு சிறு பெண் நன்கு அலங்கரித்துக் கொண்டு அவன் குதிரையின் முன்பு வந்தாள். இந்த காட்டில் இந்த சிறு பெண்ணுக்கு என்ன வேலை என்று, மன்னன் அவளைக் கேட்டான், அதற்கு அவள், தான் அங்குதான் அருகில் இருப்பதாகக் கூறி, அவனுக்கு வழிகாட்டிக் கொண்டு சென்று ஓர் வேப்ப மரத்தின் அடியில் இருந்த புற்றுக்கு அருகில் சென்றதும் மறைந்துவிட்டாள். மன்னன் உடல் புல்லரித்தது. எனக்கு அன்னையே வந்து வழிகாட்டினாளா? மன்னன் உடனே காசிநகரத்திலிருந்து அங்கு வந்திருந்த மகா புருஷரும் பெரும் தவசியும், அவதூதருமான சதாசிவ பிரம்மேந்திரரை அழைத்து அந்த புற்றில் அம்மனை பிரதிஷ்டை செய்யச் சொல்ல, அவரும் அங்ஙனமே செய்து முடித்தார். அந்த பிம்பம்தான் இப்போதும் புன்னைநல்லூர் ஆலயத்தில் புற்றாகக் காட்சியளிக்கும் மாரியம்மன். இந்த ஆலயம் மராட்டியர் காலத்தில் நன்றாகக் கட்டப்பட்டது. பிறகு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நாட்டிய தாரகையாக விளங்கிய வைஜயந்திமாலா அவர்கள் முன்மண்டம் கட்டித் தந்தார்கள். பலமுறை கும்பாபிஷேகம் கண்ட இந்த மாரியம்மனின் சக்தி பற்றி பல கதைகள் கூறப்படுகின்றன.
மராட்டிய மன்னன் துளஜேந்திரராஜாவின் புதல்விக்கு கண்பார்வை அம்மை நோயினால் போய்விட்டதாகவும், அவன் அன்னையை மனமுருக வேண்டி அவள் சந்நிதியில் மன்றாடியபோது, அந்தப் பெண்ணுக்குக் கண்பார்வை வந்துவிட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு. மன்னன் துளஜேந்திர ராஜா அன்னைக்கு அழகிய கோயிலை எழுப்பினான். புன்னை வனத்தில் மறைந்திருந்ததால் அவள் புன்னைநல்லூராள் என்றே அழைக்கப்பட்டாள். தஞ்சையில் மராட்டிய மன்னர்கள் காலத்தில் ரெசிடெண்ட் என்ற அந்தஸ்த்தில் இருந்த ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கும் இந்த அம்மன் தனது சக்தியைக் காட்டியதாகவும், அதுமுதல் அந்த ஆங்கிலேயனும் அன்னையின் அடிபணிந்து பக்தனாக இருந்ததாகவும் தெரிகிறது. இவ்வாலயத்துக்கு சுற்று வட்டாரத்திலிருந்தும் வெகு தூரத்திலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இங்கு மதங்களைக் கடந்து அம்மாவைத் தரிசிக்கவும், பிரார்த்தனைகளைச் செலுத்தவும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இவ்வலயத்துக்கு அருகிலேயே உள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தில் அம்மனுக்கு ஒவ்வோராண்டும் தெப்போத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது. அதன் அருகிலேயே ஒரு சிவன் கோயிலும் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment