பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, May 23, 2010

கீழவாசல் கருவக்காடு நிசும்பசூதனி ஆலயம்

கீழவாசல் கருவக்காடு நிசும்பசூதனி ஆலயம்.
(உக்கிர காளியம்மன் மற்றும் வடபத்ர காளியம்மன்)

திருவாலங்காட்டுச் செப்பேடுகளின்படி கடைச்சோழர் வம்சத்தைத் தோற்றுவித்த விஜயாலயன் தன் தலைநகரை பழையாறையிலிருந்து தஞ்சைக்கு மாற்றிக் கொண்டபோது, அந்த நகரின் கிழக்கில் அமைந்திருந்த நகரப் பகுதியில் தன் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஓர் ஆலயம் எடுப்பித்தான் என்பது தெளிவாகிறது. கால ஓட்டத்தில் இப்பகுதி வனாந்திரமாக மாறி இப்போது கருவக்காடு நிறைந்திருக்கிறது. இதுபோலவே தஞ்சை பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் மற்றொரு ஆலயம் பத்ர காளியம்மன் என்ற பெயரில் இருந்து வருகிறது. இதில் எது விஜயாலயன் எழுப்பிய நிசும்பசூதனி ஆலயம் என்ற சர்ச்சை இருந்தாலும், ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கருவக்காட்டில் எழுந்தருளியிருக்கும் உக்கிர காளியம்மனே நிசும்பசூதனி என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. இந்தச் செய்தியை 'தமிழக வரலாற்றுச் செய்திகள்' எனும் நூலில் பேராசிரியர் கோவிந்தராசனார் எழுதியிருக்கிறார். 'சோழர் கலை' பற்றி எழுதிய எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் அவர்களும் இந்த கருவக்காட்டு ஆலயமே நிசும்பசூதனி என்று கூறுகிறார். தற்போது தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கும் ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் கருத்தும் அஃதே.

கருவக்காடு உக்கிர காளியம்மன் என்று வழங்கப்படும் நிசும்பசூதனி ஆலயம் கீழவாசல் பகுதியில் குயவர் தெரு எனுமிடத்தில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் நீளம் 36 அடியாகவும், அகலம் 18 அடியாகவும் இருக்கிறது. இந்த கோயில் மிகப் பழமைவாய்ந்ததாக 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாயினும், பின்னர் இந்த ஆலயத்துக்கு முன் மண்டபம் முதலான கட்டுமானங்கள் மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. கருவறையில் நிசும்பசூதனி அம்மனின் உருவம் கூட சோழர் கால சிற்பத்திற்கு பதிலாக மராட்டியர் காலத்தில் நிருவப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. சோழர் காலத்திய அம்மன் சிலையும் அதே ஆலயத்தில் முன்மண்டபத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒருக்கால் இந்த அம்மன் ஆலயம் பிரிதோர் இடத்தில் இருந்து, அது சிதிலமாகி, புதிதாக இவ்வாலயம் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டு, புதிய அம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பழைய சிலையையும் பாதுகாத்து வைத்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தப் பகுதிகளில் முகலாயர் படையெடுப்பின் போது பல ஆலயங்கள் தகர்க்கப்பட்டதாகவும், அந்த இடிபாடுகளிலிருந்து கிடைத்த கற்கள் தூண்கள் இவைகளைக் கொண்டு ஒரு சில ஆலயங்களே புதுப்பிக்கப்பட்டன என்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் கூறுகிறார். அப்படிப்பட்ட ஒரு சிவாலயம்தான் செந்தலை எனும் கிராமத்தில் அமைந்திருப்பது என்று அவர் கூறுகிறார். அதுபோலவே நிசும்பசூதனி ஆலயமும் உடைக்கப்பட்டு, பிறகு நீண்ட காலம் கழித்து அந்த இடிபாடுகளிலிருந்து மராட்டியர் இந்த ஆலயத்தை நிருவியிருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் நிசும்பசூதனி எனும் காளிதான் சோழர்களின் குலதெய்வம், அதற்கு சாட்சியமாக இந்த ஆலயம் விளங்குகிறது என்றும் சொல்லலாம்.

கருவறையில் அம்மன் உக்கிரமான பார்வையோடு, நான்கு கரங்களோடு, அவற்றில் பல ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு வீற்றிருக்கிறாள். வலது கால் தரையில் பட அதனடியில் ஒரு மனித உருவமும், அதுபோலவே இடது காலின் கீழும் மற்றொரு உருவமும் அமைந்திருக்கின்றன. இவர்கள் மக்களுக்குத் தீங்கு விளைத்து வந்து அசுரர்கள் என்று கருதப்படுகின்றனர். முன் மண்டபத்தில் விநாயகர் சிலையும், கேதாரியம்மன் எனும் அம்மனும் நிருவப்பட்டிருக்கின்றனர். ஆரம்ப கால சோழர்கள் சிற்பங்கள் பாணியில் இவ்வம்மனுக்குத் தலையில் ஜடாபாரம் அமைந்திருக்கிறது. கருவறையில் உள்ள நிசும்பசூதனி உருவம் மராட்டிய ராணியார் ஒருவரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிதாக நிறுவப்பட்டிருக்கிறது. இவ்வாலயத்தின் முன் மண்டபத்திலேயே பழைய சோழர் கால நிசும்பசூதனி சிற்பமும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில் இருந்ததாகக் கூறப்படும் பல சிற்பங்கள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாலயம் வெண்ணாற்றின் கைரைல் அமைந்திருப்பதால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு கூட இவ்வாலயம் அழிந்துபட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கு ஒரு சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் இருந்ததாகவும் அவை அழிந்துபட்டுப் போயிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாலயம் அதிகமாக மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் பற்பல பாம்புப் புற்றுகள் உள்ளன. இவற்றிற்கு மக்கள் பால் முட்டை முதலியனவற்றைப் படைக்கிறார்கள். இவ்வாலயத்தில் ஆடிமாதம் பூச்சொறிதலும் நவராத்திரி காலத்தில் அஷ்டலக்ஷ்மி அலங்காரம் செய்யப்பட்டும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இங்கு பாற்குடம் முதலியன எடுத்து அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த ஆலயம் தற்போது தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்டிருக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோயிலில் ஒரு சைவ வெளாளர் மரபினர் பூசாரியாக இருந்து சிறப்பாக பூசை முதலானவற்றை நிர்வகித்து வருகிறார்.

இவ்வாலயம் தவிர கீழவாசல் பூமால் ராவுத்தன் கோயில் தெருவில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு கோயிலையும் நிசும்பசூதனி என்றே கூறுகின்றனர். இது வடபத்ரகாளி என்றும் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்து தெய்வத்தை மக்கள் "ராஜா காளி" என்றே அழைக்கின்றனர். இதுதான் முதலில் விஜயாலயன் எழுப்பிய நிசும்பசூதனி ஆலயம் என்பது ஆய்வாளர் நாகசாமி அவர்களின் கருத்து. இங்குள்ள காளி சிலை எட்டு கரங்களுடன், அவற்றில் ஆயுதங்களுடனும் காணப்படுகிறாள். இவற்றில் எது உண்மையாக சோழ மன்னனால் கட்டப்பட்டதோ, எனினும் இவை இரண்டையுமே மக்கள் பக்தி சிரத்தையோடு வழிபடுவதையும், கோலாகலமாக திருவிழாக்கள் நடைபெறுவதையும், வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ நாட்களிலும் இங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து வழிபடுவதையும் பார்க்க முடிகிறது.

2 comments:

Unknown said...

தொல்லியல் ஆய்வாளர் திரு.நாகசாமி அவர்கள் எழுதிய "நிசும்பசூதனி" புத்தகம் உங்களிடம் கிடைக்குமா. இந்த புத்தகத்தை பற்றி திரு.பாலகுமாரன் அவர்கள் "உடையார்" நாவலில் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதனால் ஆவல்.
அடியேன் திரு.ரெகுநாதன் மதுரை.

Unknown said...

தொல்லியல் ஆய்வாளர் திரு.நாகசாமி அவர்கள் எழுதிய "நிசும்பசூதனி" புத்தகம் உங்களிடம் கிடைக்குமா. இந்த புத்தகத்தை பற்றி திரு.பாலகுமாரன் அவர்கள் "உடையார்" நாவலில் மேற்கோள் காட்டியிருக்கிறார். அதனால் ஆவல்.
அடியேன் திரு.ரெகுநாதன் மதுரை.