சோதிடந்தனை இகழ்.
எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன்.
அரசவை கூடியிருந்தது. அந்த ராஜ்யத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிரபலமான சோதிடர்கள் அங்கு வந்து கூடிவிட்டார்கள். மன்னர் மட்டும் இன்னும் அவைக்கு வரவில்லை.
கூடியிருந்த சோதிடர்கள் ஒவ்வொருவரும் மிகவும் திறமைசாலிகள் என்று பெயர் பெற்றவர்கள். சிலரிடம் சென்று சோதிடம் கேட்டுப் பலன் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பல நாட்கள் காத்திருந்துதான் சந்திக்க முடியும். சிலருக்கு சோதிடம் பார்ப்பதற்காக ஏராளமான பொற்காசுகள் கொடுக்க வேண்டியிருக்கும்.
சில காலத்திற்கு முன்னர் அரசவையில் ஓர் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு வந்திருந்த சோதிடர்களில் மிகவும் திறமைசாலியான கச்சபேஸ்வரர் என்பவர், மன்னரிடம் "அரசே தாங்கள் விரைந்து அரசியார் இருக்கும் அந்தப்புரம் செல்லுங்கள், அங்கு உங்களுக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது" என்றார்.
அரசியாருக்கு அப்போது பேறு காலம். ஒருக்கால் இந்த சோதிடர் அதனைக் குறிப்பிட்டுத்தான் இங்ஙனம் சொல்கிறார் போலும் என்று எண்ணிக்கொண்டே மன்னர் கேட்டார்: "ஏன்? எதற்காக?" என்று.
"அரசர் பெருமானே! பேறு காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் ராணியாருக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கப் போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் அங்கு இருப்பது நல்லது என்பதால் அப்படிச் சொன்னேன்" என்றார் சோதிடர்.
"அப்படியா? நல்லது; நான் போகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே, ராணியாருக்குக் குழந்தை பிறந்தவுடன் சொல்லி அனுப்புகிறேன். இந்த சோதிடருக்குத் தகுந்த வெகுமதிகளைக் கொடுத்து கெளரவப்படுத்தி அனுப்புங்கள்" என்று சொல்லிவிட்டு அரசன் அவசரமாக சபையைவிட்டுக் கிளம்பினான்.
சோதிடர் குறுக்கிட்டு, "மன்னா! சற்றுப் பொறுங்கள். முழுவதையும் கேட்டுவிட்டுச் செல்லுங்கள். தங்கள் அரசியாரின் பேறுகால கிரஹ நிலைமைகள் அரசிக்கு நல்லதாக அமையவில்லை. கெட்ட கிரஹங்களின் நீசப் பார்வை படுவதால், துன்பங்கள் நேரிடும் அபாயம் உள்ளது" என்றார்.
"அப்படியானால், என்ன சொல்ல வருகிறீர்கள்?" என்றான் மன்னன்.
"என்னை மன்னிக்க வேண்டும் அரசே! சோதிடரும், மருத்துவரும் உள்ளது உள்ளபடி சொல்லிவிடுவதுதான் நல்லது. எனவே உங்களிடம் இந்த செய்தியைச் சொல்வதற்காக மன்னிக்க வேண்டும். பிறக்கப்போகும் உங்கள் மகனுக்குப் பிறந்ததும் தாயின் முகத்தைப் பார்க்கக்கூடிய பாக்கியம் கிடையாது; எனினும் வளர்ந்து பெரியவனாக ஆனபின் புகழ்பெற்ற அரசனாகத் திகழ்வான்" என்றார் சோதிடர்.
"ஐயோ சோதிடரே! என்ன சொல்ல வருகிறீர்கள்?" என்றான் மன்னன்.
"தயைகூர்ந்து என்னை மன்னிக்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியோ, ஆத்திரமோ அடையவேண்டாம். அரசியார் பிரசவிக்கும் நேரத்தின் கிரஹநிலையும் அதன் அமைப்புகளும் அவரது உயிருக்கு ஆபத்து என்று கூறுகின்றன; அதனால்தான் தங்களை எச்சரிக்கவே இந்த முன்னறிவிப்பைக் கூறினேன்" என்றார்.
மன்னன் கலக்கமடைந்தான். அமைச்சரை அழைத்து நாட்டின் புகழ்பெற்ற வைத்தியர்களை உடனே அரண்மனைக்கு வரவழைத்தான். பலர் வந்து சேர்ந்தனர். என்ன செய்து என்ன பயன்? விதிப்படி எல்லாம் நடந்து முடிந்தது. சோதிடர் கச்சபேஸ்வரர் சொன்னது சரியாக நடந்தது. அரசி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டு மரணமடைந்தார். வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும் அவர் உயிரைக் காப்பாற்ற இயலவில்லை.
எல்லா காரியங்களும் முடிந்தன. அரசர் அன்று சோதிடம் சொன்ன கச்சபேஸ்வரரை சபைக்கு வரவழைத்து அவருடைய சோதிட ஞானத்தை வெகுவாகப் புகழ்ந்துவிட்டு, "சோதிடரே! நீங்கள் சொன்னவாறுதான் எல்லாமே நடைபெற்றது. சோதிட சாத்திரத்தில் இவ்வளவு சரியாக கணித்துச் சொல்ல முடியும் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். சோதிடம் பொய் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறதே, அது சரியில்லை என்பதைத் தாங்கள் நிரூபித்து விட்டீர்கள். எந்த கலையிலும், அப்பழுக்கிலாத முறையில் கற்றுத் தேர்ந்தால் அதில் முழு வெற்றி பெறலாம் என்பதற்குத் தாங்களே சான்று" என்று பாராட்டினான்.
"சோதிட சாத்திரத்தில் இவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டு எப்படி கூறமுடிகிறது?" என்றான் மன்னன்.
"முடியும் அரசே! ஆனால் நாம் கணக்கிடும் முறை, நேரம், காலம் இவை மிகச் சரியாகக் கணக்கிடப்படவேண்டும். அப்படி நாம் கணிக்கும் முறை சரியாக இருக்குமானால், பலன்களையும் மிகச் சரியாகச் சொல்லமுடியும்" என்றார் கச்சபேஸ்வரர்.
"அது சரி! குழந்தை பிறக்கும் நேரத்தை எப்படிச் சரியாகத் துல்லியமாகச் சொல்ல முடியும்? மருத்துவம் பார்ப்பவள் பிரசவ அறைக்கு வெளியே வந்து, குழந்தை பிறந்துவிட்டது என்று சொல்லும் போது, அந்த நேரத்தைத்தானே நாம் குறித்துக் கொள்கிறோம்."
"ஆம் மன்னா! இங்குதான் பலர் தவறு செய்துவிடுகிறார்கள். பிறக்கும் நேரம் என்பது குழந்தையின் சிரசு தாயின் கருப்பையிலிருந்து வெளியுலகத்துக்கு வரத் தொடங்கிய நேரமே சரியான ஜனன காலம் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். இது சற்று முன்பின்னாக இருக்குமானல் பலன்களும் பெரிதும் வேறுபடும். நாம் நேரத்தைச் சரியாகக் குறிக்காமல், பலன் சரியில்லை என்று சோதிட சாத்திரத்தைக் குறைகூறுவது சரியாக இருக்காது" என்றார் சோதிடர்.
"அரசியார் பிரசவத்தில் இறந்துவிடுவார் என்பதை எப்படிச் சரியாக கணக்கிட்டீர்கள்?" என்றான் மன்னன்.
"அரசே! தங்கள் ஜாதகப்படியும், தங்கள் மனைவியின் ஜாதகப்படியும், இவை நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கக்கூடியவையே. மேலும் குழந்தை பிறக்கும் நேரம் கிரஹ நிலைகளின்படி அது தாய்முகத்தைப் பார்க்கும் பாக்கியம் இல்லை என்பதையும் கணித்தேன்" என்றார்.
சோதிடர் கச்சபேஸ்வரர் அன்று முதல் அந்த ராஜ்யத்தின் ஆஸ்தான சோதிடராக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் அரசருக்குச் சோதிடத்தில் அபார நம்பிக்கையும், பிடிப்பும் ஏற்பட்டு விட்டது. அடிக்கடி திறமைவாய்ந்த சோதிடர்களை ஒன்றுகூட்டி 'சதஸ்' எனும் கருத்தரங்கை நடத்தி, அதில் சோதிட சாத்திரம் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதிக்க ஏற்பாடு செய்தார்.
அந்த முறையில்தான் இப்போது நடக்கும் 'சதசுக்கும்' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏராளமான சோதிடர்கள் வந்து குவிந்துவிட்டார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடம்பரமான பட்டும் பீதாம்பரமும் அரண்மனை முழுவதும் பிரகாசித்தது. கூடியிருந்த சோதிடர்கள் 'கசமுச' வென்று பேசிக்கொண்டிருந்தார்கள். விஷயம் என்னவென்றால், ஆஸ்தான சோதிடரான கச்சபேஸ்வரர் இன்னும் சபைக்கு வந்து சேரவில்லை என்பதுதான்.
வெகுதூரத்திலிருந்தெல்லாம்கூட சோதிடர்கள் வந்து குவிந்துவிட்ட பிறகும், ராஜாங்கத்தின் தலைநகரில் இருந்துகொண்டே, கச்சபேஸ்வரர் ஏன் இன்னும் வரவில்லை?
எல்லோருமாகச் சேர்ந்து ஒரு தூதுவனை அழைத்து அவருடைய இல்லத்திற்கு அனுப்பி மன்னர் வருவதற்குள் அழைத்து வந்துவிடலாம் என்று முடிவு செய்தனர். அப்படியே தூதன் ஒருவன் புறப்பட்டு அவர் வீட்டுக்குச் சென்றான்.
சென்றவன் சோதிடர் கச்சபேஸ்வரரைச் சந்தித்து, "ஐயனே! தங்களை எதிர்பார்த்து அரசவையில் சோதிடர்கள் எல்லோரும் காத்திருக்கிறார்கள். மன்னர் இன்னும் அவைக்கு வரவில்லை. நீங்களும் வந்தபிறகுதான் 'சதஸ்' தொடங்க வேண்டுமாம். தங்களை அழைத்து வருமாறு எனக்குக் கட்டளை" என்றான் தூதுவன்.
கச்சபேஸ்வரர் சொன்னார்: "தூதரே! எனக்கு இதிலெல்லாம் இஷ்டம் இல்லை. அரசர் வரவர கோணல் மாணலாக ஏதாவது கேட்டு, ஏடாகூடம் செய்கிறார். அவற்றில் ஈடுபட்டு என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. நீங்கள் போய் சாங்கோபாங்கமாக நான் வராததற்கு எனது உடல்நிலை சரியில்லாததுதான் காரணம் என்பதுபோல் சொல்லிச் சமாளியுங்கள். சதஸ் நடக்கட்டும்" என்றார்.
தூதன் திரும்பி வந்து சபையிலிருந்த முக்கியஸ்தர்களிடம் விவரத்தை எடுத்துச் சொன்னார். அப்போது சபையில் பரபரப்பு ஏற்பட்டது. மன்னர் வந்து சேர்ந்து விட்டார். அனைவரும் எழுந்து நின்று மன்னரின் வரவுக்கு மங்கள ஸ்லோகங்களைச் சொல்லி வரவேற்பளித்தனர். மன்னர் சென்று தன் ஆசனத்தில் அமர்ந்தார்.
கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த சோதிடர்களும், வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களும் அவரவர்கள் இடங்களில் அமர்ந்தனர். மன்னரின் கண்கள் அவையை பலமுறை சுற்றி சுற்றி நோட்டமிட்டன. யாரையோ தேடுகிறாரோ? ஆம்! அவர் கண்கள் ஆஸ்தான வித்வான் கச்சபேஸ்வரரைத்தான் தேடுகின்றன.
"எங்கே நமது ஆஸ்தான சோதிடர்? அவர் வரவில்லை போலிருக்கிறதே" என்றார் மன்னர்.
"அவருக்கு உடல்நிலை சரியில்லையாம். இப்போதுதான் ஒருவர் வந்து சொன்னார்" என்றார் அமைச்சர்.
"சரி பரவாயில்லை. இனி 'சதஸ்' தொடங்கலாம்" என்று அறிவித்தார் மன்னர்.
மன்னர் எழுந்து ஓர் அறிவிப்பு செய்தார். "எனதருமை சோதிடக் கலைஞர்களே! உங்கள் திறமையின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் உங்களிடம் ஒரு வேலையைத் தரப்போகிறேன். இது உங்கள் திறமையைச் சோதிக்கும் நோக்கத்தில் செய்யப்படவில்லை. சோதிட சாத்திரத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டவே இந்த முயற்சி; மேலும் சமீப காலமாக 'சோதிடந்தனை இகழ்' என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது, அதனையும் கருத்தில் கொண்டே இந்த சதஸ் சோதிடத்தை ஆராயவிருக்கிறது". இப்படிச் சொல்லிக்கொண்டே மன்னர் அமைச்சரிடம், "அமைச்சரே! எங்கே அந்த ஜாதகம். அதை எடுங்கள்" என்றார்.
ஓர் தந்தப் பேழையில் வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடியொன்றை அமைச்சர் எடுத்துக் கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்ட அரசன் சொன்னான்:
"எனதருமை சோதிடப் பெருமக்களே! நான் உங்களிடம் ஒரு ஜாதகத்தைத் தரப் போகிறேன். நீங்கள் அதற்குத் தனித்தனியாகப் பிரதி எடுத்துக்கொண்டு, அந்த ஜாதகர் பற்றிய எல்லா விவரங்களையும் கணித்து, அவருக்கான பலன்களையும் எழுதிக்கொண்டு வாருங்கள். ஜாதகர் யார், என்ன தொழில் செய்கிறார், என்ன பதவியில் இருக்கிறார், அவரது செல்வநிலை, அவரது எதிர்காலம் இவையனைத்தையும், உங்கள் கணிப்பில் கொண்டு வந்துவிடுங்கள். அவசரம் இல்லை. உங்களுக்குத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், உங்கள் கணிப்பு மிகச் சரியாக இருக்க வேண்டும். இன்று மாலை சதஸ் மீண்டும் கூடும். அப்போது ஒவ்வொருவரும் தத்தமது கணிப்புகளை விரிவாக எடுத்துச் சொல்லலாம். யாருடைய கணிப்பு மிகச் சரியாக அல்லது கிட்டத்தட்ட சரியாக இருக்கிறதோ அவருக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களும், சன்மானமும் வழங்கப்படும். இப்போது சபை கலையலாம். மாலை மீண்டும் கூடுவோம்" என்று சொல்லிவிட்டு மன்னர் சென்று விட்டார்.
மன்னர் காட்டிய ஜாதகத்தின் பிரதிகளை ஒவ்வொரு சோதிடரும் எடுத்துக் கொண்டு தனித்தனியாகப் போய் அமர்ந்துகொண்டு மிக கவனமாகப் பலன்களைக் கணிக்கத் தொடங்கினார்கள்.
மாலை நேரம் வந்தது. சபை மீண்டும் கூடியது. அப்போதும் ஆஸ்தான சோதிடர் கச்சபேஸ்வரர் வரவில்லை. மன்னர் வந்து அமர்ந்ததும் சதஸ் தொடங்கியது.
முதலில் ஒருவர் வந்தார். இந்த ஜாதகர் பெரும் செல்வந்தர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார். நிறைந்த செல்வங்களும், நிலபுலன்களும் அடையப் பெற்றவராக இருப்பார், நல்ல உயரம், நல்ல அழகான தோற்றம் இவற்றோடு விளங்குவார் என்றெல்லாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்.
அடுத்தவர் வந்தார். அவர் வேறு மாதிரியில் வித்தியாசமான விவரங்களைச் சொல்லிவிட்டுச் சென்றார். இப்படி ஒவ்வொருவராக வந்து தங்கள் கணிப்புகளை வெளியிட்டனர். ஒருவர் சொன்னதை மற்றவர் சொல்லவில்லை. எத்தனை பேர் சோதிடர்கள் வந்து கணிப்புகளைச் சொன்னார்களோ அத்தனை வகையில் அவர்கள் சொன்ன கதைகள் அமைந்திருந்தன.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மன்னர் சொன்னார். "நீங்களெல்லாம் உங்கள் சோதிடக் கணிப்புகளைச் சொல்லிவிட்டீர்கள். இருந்தாலும் நமது ஆஸ்தான சோதிடரின் கருத்தைச் கேட்காமல் முடிவு சொல்வதென்பது எனக்குச் சரியாகப் படவில்லை. ஆகையால் யாராவது ஒருவரை அவர் வீட்டிற்கு அனுப்பி சோதிடர் கச்சபேஸ்வரரை இங்கு சபைக்கு அழைத்து வரச் செய்யுங்கள்" என்று கட்டளையிட்டார்.
உடனே சோதிடரில் ஒருவர் எழுந்து போய் ஆஸ்தான வித்வான் வீட்டிற்குச் சென்று அவரிடம் நடந்தவற்றையெல்லாம் கூறி, தங்களை உடனே அழைத்து வரச் சொன்னார்கள் என்றார்.
தூதர் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு கச்சபேஸ்வரர் சொன்னார், "எனக்குத் தெரியும், இந்த ராஜா இது போல ஏதாவது ஏடாகூடம் செய்யத்தான் 'சதஸ்' கூட்டியிருக்கிறார் என்று. என்ன செய்வது? அவர் கூப்பிட்டனுப்பியும் வராமல் இருக்க முடியாது. அரண்மனை ஊழியன் அல்லவா? இதோ வருகிறேன், நீங்கள் போங்கள்" என்று வந்தவரை அனுப்பிவிட்டு, அவரும் கிளம்பிச் சென்றார்.
கச்சபேஸ்வரர் சபையுள் நுழையும் போது அனைவர் கவனமும் அவர் மீதே இருந்தது. மன்னர் ஆஸ்தான சோதிடரை வரவேற்று, "தங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் சிரமப்படுத்தி விட்டேன். தாங்கள் இல்லாத இந்த சபை முழுமையடையவில்லை. இங்கே நடந்தவற்றையெல்லாம் தங்களுக்குத் தெரிவித்தார்களல்லவா?" என்றார்.
"ஆமாம். சொன்னார்கள். எங்கே நீங்கள் கொடுத்த அந்த ஜாதகம், நான் பார்க்கிறேன்" என்றார்.
ஜாதகத்தின் ஒரு பிரதி அவரிடம் கொடுக்கப்பட்டது. சிறிது நேரம் அதை மிகக் கவனமாகப் பார்த்து ஏதேதோ கணக்குகள் விரலை மடக்கிப் போட்டார். பின்னர் மறுமுறையும் கூர்ந்து கவனித்தார். சுருங்கிக் கருத்திருந்த அவர் முகம் திடீரென்று பிரகாசமானது. ஜாதகத்தை கயிற்றில் சுற்றி வைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்.
அனைவர் கவனமும் அவர் மீதுதான். அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை அறியும் ஆவல் அவர்கள் முகங்களில்.
மன்னர் சொன்னார், "சுவாமி! நீங்கள் உங்கள் கணிப்பையும் சொல்லுங்கள். அதனைக் கேட்ட பிறகுதான் நான் இந்த ஜாதகரைப் பற்றிய முழு விவரங்களையும் சொல்ல வேண்டும்" என்றார்.
ஆஸ்தான சோதிடர் சொன்னார், "மன்னா! இந்த ஜாதகம் ஒரு மனிதனுடையது அல்ல. இது ஒரு எருமைக் கன்றுக்குட்டியின் ஜாதகம். அதுவும் இதே அரண்மனையில் வளரும் ஒரு எருமையின் கன்று. பிறந்து சில நாழிகையிலேயே அது பிராணனை விட்டுவிட்டது" என்றார்.
சபையிலிருந்த அனைவரும் திகைப்பில் ஆழ்ந்தனர். எங்கும் நிசப்தம். மன்னன் மட்டும் பரவசத்தோடு கரங்களைத் தட்டி சோதிடரைப் பாராட்டிவிட்டு "பலே! நீங்கள் ஆஸ்தான தலைமை சோதிடர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். தங்கள் திறமைக்கு ஈடு இணை உண்டோ? இது உங்களுக்கு வைக்கப்பட்ட சோதனை அல்ல. சோதிடம் பொய் என்ற எண்ணம் வளர்ந்து வரும் இந்த நேரத்தில், இது ஒரு கலை என்பதை மிக அழகாக நிரூபித்துவிட்டீர்கள். பலர் மனம்போன போக்கில் ஜோசியம் சொன்னாலும், எங்கோ ஓரிடத்தில் யாரோ ஒருவராவது மிகச் சரியாகக் கணித்து சோதிடம் சொல்லுவார் என்பதைத் தெரிந்து கொண்டோம். வான சாஸ்திரமும், கிரஹங்களின் சுழற்சியும் பூமியில் மனித இனத்தை மட்டுமல்ல மற்ற ஜீவராசிகளையும் பாதிக்கும் என்பதை நிலைநாட்டிவிட்டீர்கள். அது சரி, இது ஒரு மிருகத்தின் ஜாதகம் என்பதை எப்படி அறிந்தீர்கள்" என்றான் மன்னன்.
சோதிடர் சொன்னார், "அதற்கும் வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பூரணமாகக் கற்றுத்தெளிவாராயின் இதுபோல கண்டுபிடித்துச் சொல்லமுடியும் என்றார். ஆஸ்தான சோதிடரை அந்த சபை மனதார பாராட்டிவிட்டுக் கலைந்தது.
No comments:
Post a Comment