பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 24, 2010

செங்கமல நாச்சியம்மன் கோயில்

செங்கமல நாச்சியம்மன் கோயில்.
(சிங்கள நாச்சியம்மன் கோயில்)

தஞ்சை நகரம் 1960க்குப் பிறகுதான் மருத்துவக்கல்லூரி வந்த பிறகு, மேற்கு திசையில் வளர்ச்சியடைந்து பற்பல குடியிருப்புகள் தோன்றிவிட்டன. மேம்பாலம் தாண்டி ராஜப்பா நகர் என்பதுதான் தஞ்சை நகரத்தின் நகர்ப்புற வளர்ச்சியில் இந்தப் பகுதியில் முதன் முதலாகத் தோன்றியது. இதையடுத்து வல்லம் வரையில் ஒரே முந்திரிக்காடாக இருந்திருக்கிறது. இந்தக் காட்டுப் பகுதியில் இருந்ததுதான் செங்கமல நாச்சியம்மன் எனும் சிங்கள நாச்சியம்மன் கோயில். தற்சமயம் இந்தக் கோயில் குந்தவை நாச்சியார் அரசினர் பெண்கள் கல்லூரிக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது. மக்கள் இதனை செங்கநாச்சியம்மன் என்றே அழைக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு நேர் வடக்கு திசையில் அப்போது காடாக இருந்தமையால், முக்கிய சாலையில் (இப்போது மருத்துவக் கல்லூரி சாலை) ஓர் நடுகல் நடப்பட்டு, அந்த இடத்தைத் தாண்டும் போது, இந்த அம்மனை வழிபடுவதற்காக அமைக்கப்பட்டிருந்தது. அது இப்போதும் ராஜப்பா நகரில் காணலாம்.

இந்த ஆலயம் வடக்கு நோக்கிக் கட்டப்பட்ட ஆலயம். சுற்றுப்புற மக்களால் மிக சிறப்பாக தொன்று தொட்டு வழிபாடு நடத்தப்படும் ஆலயமாக இது திகழ்வதோடு, இங்கு மக்கள் மிகவும் பயபக்தியோடும், சுத்தமாகவும் வந்து வழிபாடு செய்து வருகிறார்கள். விசேஷ நாட்களில் பெண்கள் இவ்வாலயத்தின் முன்புறமுள்ள குளக்கரையில் திறந்த வெளியில் செங்கல் அடுப்பு வைத்து பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். தஞ்சை நகரத்திலுள்ள பல தெருவினர் இந்தக் கோயிலுக்கு பாற்குடம் காவடி எடுத்து வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்பகுதியிலுள்ள பெருவாரியான மக்கள் மிகுந்த பய பக்தியுடன் இந்த அம்மனை வழிபட வேண்டுமானால் அதற்கு முக்கியமான காரணம் இருக்க வேண்டுமல்லவா? ஏதோ ஒரு அச்சம் தரும் அல்லது பயங்கர நிகழ்வு இங்கு நடைபெற்றிருக்க வேண்டும், அதனையொட்டியே இங்கு காட்டுப் பகுதியாக இருந்தபோதும் இப்படியொரு கோயிலை அமைத்திருக்கிறார்கள். இது குறித்து ஒரு வரலாற்றுச் செய்தி கூறப்படுகிறது. இது எந்தவொரு சரித்திரக் குறிப்பு அல்லது ஆவணம் மூலம் நிரூபணம் ஆகாவிட்டாலும், செவி வழிச் செய்தியாக பரவியிருக்கிறது.

ஒரு காலத்தில் தஞ்சாவூருக்கு இலங்கையிலிருந்து ஒரு சிங்கள அரசன் தன் குடும்பத்துடனும், அமைச்சர் மற்றும் அவன் அரசவை அதிகாரிகள் பரிவாரங்கள் ஆகியோருடன் வந்ததாகவும், அப்போது இங்கு ஆட்சிபுரிந்து வந்த ஒரு சோழ அரசன் (விஜயாலயன் வம்சத்து அரசன்) இந்த சிங்கள அரசனை பலமுறை அழைத்தும் வராமல், இறுதியில் இங்கு வந்திருக்கிறான். அந்த சிங்கள அரசன் அப்போது இலங்கை முழுவதும் பரவியிருந்த சோழ சாம்ராஜ்யத்துக்குட்பட்ட ஒரு சிற்றரசனாக இருந்திருக்க வேண்டும். சக்கரவர்த்தி பலமுறை அழைத்தும் அவரை அவமரியாதை செய்வதைப் போல வராமல் இருந்துவிட்டு, வேறு வழியின்றி இறுதியில் வந்து சேர்ந்ததால், சக்கரவர்த்தியிடம் இருந்த பயத்தின் காரணமாகத் தன் குடும்பம் பரிவாரம் மற்றும் உடன் வந்தவர்களை தலைநகரான தஞ்சையை ஒட்டிய இந்தக் காட்டுப் பகுதியில் தங்க வைத்துவிட்டு அவன் மட்டும் ஒரே ஒரு அமைச்சரைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு அரண்மனை சென்று சக்கரவர்த்தியைக் கண்டானாம்.

அரண்மனையில் அமைச்சரை வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்ற சிங்கள அரசன் என்ன நேர்ந்ததோ தெரியவில்லை, அவன் வெளியே வரவேயில்லை. வெளியில் காத்திருந்த அமைச்சருக்கு பயமும் சந்தேகமும் ஏற்பட்டு, தங்கள் அரசன் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென்று நினைத்து அவ்விடத்தை விட்டு அகன்று காட்டிற்கு வந்து ராணி மற்றும் தங்கள் பரிவாரத்தாரிடம் செய்தியைச் சொல்லியிருக்கிறார். அமைச்சரும் மற்றவர்களும் தாங்கள் உடனே நாடு திரும்பிவிட வேண்டுமென்று கூற ராணி மட்டும் அரசனுக்கு ஏற்பட்ட கதியைத் தெரிந்து கொள்ளாமல் திரும்ப முடியாது என்று கூறியிருக்கிறாள். பிறகு அவ்விடத்திலேயே தனது பிராணனை விட்டுவிட்டதாகவும் தெரிகிறது. அந்த சிங்களப் பெண்மணி உயிர்த்தியாகம் செய்த அந்த இடத்தில்தான் சிங்கள நாச்சியார் கோயில் என்ற பெயரில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த ராணியின் தியாகம் பற்றிய அந்தக் கால கிராமப்புறப் பாடல்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். கல்வெட்டுகளிலும் இந்தச் செய்தி காணப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

மக்களிடம் உள்ள மற்றொரு நம்பிக்கை, இது ராஜராஜ சோழன் சிறு வயதாக இருந்தபோது சிங்கள நாட்டுக்குத் தன் படையோடு சென்றதாகவும், அங்கு அவனது உயிருக்கு ஆபத்து நேரவிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண் அவனைக் காப்பாற்றியதாகவும், அதற்குப்பின் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கமுடியாமல், அவள் நினைவாக இந்த ஆலயத்தை அவன் எழுப்பியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இந்தச் செய்தியை வலுப்படுத்தும் விதமாக ஆசிரியர் கல்கி அவர்கள் தனது பொன்னியின் செல்வன் நாவலில் அப்படியொரு சிங்களப் பெண்ணை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அது கற்பனைப் பாத்திரமா அல்லது நிஜமான பாத்திரத்தின் உருவகமா என்பது தெரியவில்லை. கல்கி ஆராய்ச்சியாளர்கள்தான் சொல்ல வேண்டும்.

இந்த ஆலயத்தில் அம்மன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். ஒரு காலை மடக்கியும் மற்றொரு காலை தொங்கவிட்டபடியும் அமர்ந்த கோலம். நான்கு கைகள், கைகளில் பாம்புடன் இணைந்த டமருகம், சூலம், பாசம், கபாலம் ஆகியவை அக்கரங்களில் உள்ளன. அம்மனின் தோற்றம் உக்கிரமாக இருப்பதைப் பார்க்கலாம். இவ்வாலயத்தின் உள் பட்டவன், மதுரைவீரன், ஆகியோருக்கும், பொம்மியம்மன், வெள்லையம்மன் ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன. பட்டவன் என்பது இறந்த ஒருவரின் சாம்பல் புதைக்கப்பட்டு, அதன் மேல் ஓர் கல் எழுப்பி அதனை பட்டவன் என்று சொல்லி அவரது குடும்பத்தார் வழிபடுவது. அத்தகைய பட்டவன் கற்கள் இங்கு உண்டு. உண்டிக்கருப்பு என்ற ஒரு சிலையும் இங்கு இருக்கிறது. இங்குள்ள சூலம், அடைக்கலம் காத்த ஐயனார் என்று வழிபடப்படுகிறார். பதினெட்டாம்படி கருப்பணசாமி என்றொரு சுதைச் சிற்பமும் இருக்கிறது. இவர் புலி மீது அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு பற்பல சூலங்கள் நடப்பட்டு அதன்மீது எலுமிச்சம்பழம் சொறுகி குங்குமம் இட்டு காணப்படுகின்றன. இங்கு சூலம் வாங்கி நடுவது என்பது ஒரு வேண்டுதலாகவே நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.

இக்கோயிலின் முன்பாக ஒரு குளம் இருக்கிறது. அதன் கரையில் தென்மேற்கு மூலையில் சுதையாலான ஒரு பெரிய 12 அடி உயரமுள்ள வேதமுனி எனும் சிலை வடிவம் காணப்படுகிறது. ஒரு கல் திண்ணையின் மீது அமர்ந்தவாறு காட்சியளிக்கும் இந்த வேதமுனியின் தோள்களில் பச்சைக்கிளிகள் உட்கார்ந்திருப்பது போல சிற்பம். காதுகளில் நாகங்கள். இருபுறமும் கோரைப் பற்கள். கையில் உயர்த்திப் பிடித்த வாள் ஒன்று. இடக்கையில் ஒரு புத்தகம். இந்த சிலையே பார்க்க பயங்கரமாக காட்சியளிக்கிறது. இப்போது இந்த இடத்தைச் சுற்றி வீடுகள் வந்துவிட்டன.

இங்கு நிதிய பூஜைகள் உண்டு. தை மாதத்தில் செவ்வாய்க்கிழமைகளில் கரகம் எடுக்கப்படுகிறது. சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிவலம் வருவதுண்டு. ஆடிமாதத்தில் காப்புக்கட்டியும் மற்ற பல மாதங்கள் பல தெருவார்கள் வந்து வழிபாடு செய்தும் வருகிறார்கள். பலகாலம் இங்கு ஆடு, கோழி இவை பலியிடப்பட்டு வந்தன. இதுவும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில் எனினும் பெரும்பாலன விசேஷங்கள் பொதுமக்களின் காணிக்கைகள் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன. இக்கோயிலின் முன்பு ஒரு பெரிய ஆலமரம் உண்டு. அதன் பரந்த நிழலில் மண்வெட்டி உடல் உழைப்பு செய்யும் பல கூலித் தொழிலாளிகள் தங்கள் தங்கும் இடமாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment

You can give your comments here