பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, May 24, 2010

ஸ்ரீ ஆதி மாரியம்மன் துதி

ஸ்ரீ ஆதி மாரியம்மன் துதி.
(இயற்றியவர் வெ.கோபாலன்)

காப்பு

ஆதிப்பரம் பொருளின் ஞானத் திருமகனே
மாதுஉமை யவளின் மோனக் கரிமுகனே
வேதப்பொருள் விளங்கும் நாதன் பதம்பாடி
மாதவளைப் பணிந்திடவே ஞான மருள்வாயே!

நூல்

1. விஞ்சுபுகழ் முத்தமிழும் விளங்குகின்ற தஞ்சையிலே
இஞ்சிசூழ் பெருநகரை யாண்டுவந்த பேரரசன்
கொஞ்சுதமிழ் துளஜாவின் கனவிலே காட்சிதந்து
அஞ்சன எழில்விழியைக் காட்டி அருள்புரிந்தாய்!

2. உன்னெண்ணம் நிறைவேற்ற மாமன்னன் உறுதிபூண்டு
தன்வெள்ளைப் புரவியில் தனிப்பாதை செல்கையிலே
தென்கரம்பை வெளியினில் தனித்துவந்து காட்சிதந்து
அன்புறுவாய் தவமிருக்கும் குருநிழலைக் காட்டிச்சென்றாய்!

3. விந்தையை என்சொல்வேன் வேங்கை மரநிழலில்
வந்துநின்ற மன்னனுக்குக் காசிநகர் சித்தர்பிரான்
பந்தமறு சதாசிவ பிரம்மேந்திரர் உருவம்காட்டி
இவ்விடமே யாம்கோயில் கொள்ளும் இடமென்றாய்.

4. அவ்வண்ணம் நின்பணியை அகமகிழ்ந்து மேற்கொண்டு
நல்வண்ணம் திருப்பணியை மாமன்னன் செய்விக்க
உன்வண்ணம் காட்டிநின்றாய் உலகத்து நாயகியே!
இவ்வண்ணம் நின்பாதம் பணிகின்றோம் நித்தமுமே.

5. மட்டாரும் தென்கரம்பை பதியினிலே தோன்றியின்று
பட்டாடை யுடுத்தநின்றன் பேரெழிலின் உருவைக்கண்டு
கட்டுண்டார் அடியார்கள் கனிகின்றார் அன்பினிலே!
எட்டு திசைகளிலும் நாட்டுவித்தாய் நின்புகழை!

6. பாங்குயர் ராணிபெயர் தாங்கிநிற்கும் ஏரியிலே
ஓங்குயர் நினதுபுகழ் கருணையெனும் சமுத்திரமாய்
தாங்கிய சூலமும் உடுக்கையும் நின்கையில்
பாங்குறவே ஏந்திநின்றாய் காத்திடுவாய் எங்களையே!

7. காந்தம் நினதுகண்கள் கருணைமழை பெய்விக்கும்
பாந்தம் நினதுபதம் பாவங்கள் மறைந்தழியும்
வேந்தன் அமைத்தநிலை வரமருளும் நின்கரங்கள்
காந்தும் இடர்களெல்லாம் உன்றனது சந்நிதியில்!

8. நிலமளந்த நின்புகழோ எல்லையற்ற பெருவெளியாம்
பலமதத்து மாந்தர்களும் நின்பாதம் பணிகின்றார்
சலனமே யில்லாமல் தீர்க்கின்றாய் அவர்துயரம்
உலகத்து நாயகியே வடவாற்று மாரியம்மா!

9. செகத்துக்குத் தாயெனவே துலங்கிடும் தெள்ளமுதே
அகத்துக்குத் தெளிவளிக்கும் ஆதிமுத்து மாரியம்மா
மகமாயித் தாயே எங்கள் மனவிருளை நீக்கியுன்றன்
முகமலரால் இந்த வையத்தைப் காப்பாய்!

10. கண்டவர் மனம்மீண்டும் கண்டிடவே துடிக்கும்
சண்டையிடும் மாந்தரும்நின் அடிபணிந்து கிடப்பர்
விண்ணுயர ஓங்கிநிற்கும் வடிவழகித் தாயே!
உன்னடியே சரணமிந்த உலகினையே காப்பாய்!

11. தாயே மலைமகளே செங்கண்மால் திருவே
மாயே மகமாயி திரிசூலி மாரி
சேய்கள் எமக்குமுன்றன் திருவருளைக் காட்டி
நேயப் படுத்தியநின் திருவருளைப் புகழ்வோம்!

12. மறந்தும் உய்ந்திடுமோ மன்னுலக மெல்லாம்
வெறுத்தும் வாழ்பவர்கள் நின்னருளை நாடி
கருத்த மனம்மாறி நின்னடியைப் பணிவர்
விரும்பி யழைத்தநின் விளையாடல் என்னே?

13. தாயென்று அடைந்தோர்க்கு தண்ணென நீராவாய்,
பேயென்று வாழ்வோர்க்கு நெற்றி நெருப்பாவாய்
காயத்தை மெய்யனவே நம்புகின்ற மாந்தரெலாம்
தாயுன்றன் பதம்பணிய நற்கதிக்கு ஆளாவார்!

14. ஒளியாவாள் ஒளிருகின்ற பொருளாவாள் நெஞ்சில்
களியாவாள் களிதரும்நல் செயலாவாள் வான
வெளியாவாள் வெளியிலுறும் ஒலியாவாள் மனத்தின்
தெளிவாவாள் நன்நெறியில் உய்விப்பாள் தாய்!

15. நினைத்தால் நெஞ்சினிக்கும் சொன்னால் வாய்மணக்கும்
என்னாளும் இன்னருளால் மூவுலகும் பரிமளிக்கும்
தென்கரம்பை வடவாற்றில் குடிகொண்ட மாமணியே
மன்னுயிர்கள் கடைத்தேற கலங்கரை விளக்கம்நீயே!

16. பட்டமரம் துளிர்க்கும் பேரெழிலே நின்னருளால்
கெட்டமனம் திருந்தும் நின்பெயரைக் கேட்டபின்னால்
மட்டற்ற அருள்தருவாய் நின்றன் அடியார்க்கு
வெட்டி வீழ்த்திடுவோம் தீமைகள் யாவையுமே!

17. புத்தியில் ஒளிதருவாள் பொய்யாத சொல்தருவாள்
எத்திக்கும் புகழ்மணக்கும் ஏற்றமிகு பெயர்தருவாள்
முத்தனைய மக்களொடு மனைச்செல்வம் தான்தருவாள்
புத்தினிலே தோன்றியயெம் ஆதிமகா மாரியம்மா!

18. அல்லும் பகலும் நின்னடியைப் போற்றிடுவோம்
விலக்கினோம் இவ்வுலகம் பழிக்கும் செயலையெல்லாம்
உலகத்தை வாழ்விக்க இயற்றிடுவோம் தவவேள்வி
நல்வாழ்வு இவ்வுலகில் நிலைத்திடச் செய்திடம்மா!

19. பசியென்று வருவோர்க்கு வயிறார உணவளிப்பாய்
கசிந்து நிற்போர்க்கு கருணை மனமருள்வாய்
நசிந்த கடையோர்க்கு நல்வாக்கு நீயருள்வாய்
தேசு விளங்கிடவே செய்திடுவாய் மாரியம்மா!

20. காட்சிக்கு எளியநல் கலையுடைய நாயகியே
மாட்சியை என்சொல்வோம் நின்பாதம் சரணம்
வேட்கையை அழித்துயெம் நல்லுள்ளம் தந்தோம்
கேட்டை விளைவிக்கும் தீமனத்தை அழித்தோம்!

21. பொய்யாத நின்னடியார் போற்றிடவே வாழ்வோம்
செய்யாத செயல்களையாம் செய்திடவே துணியோம்
மெய்யான வாழ்க்கையையே மேற்கொண்டு வாழ்வோம்
தெய்வத்தை மறவாமல் நற்தொண்டு புரிவோம்!

22. சேய்பிழை செய்தாலும் பொறுப்பதுன்றன் கடமை
தேய்பிறை போலழியாமல் எம்வாழ்வைக் காப்பாய்
வாய்நிறைய நினதுபுகழ் எப்போதும் உரைப்போம்
தாயுன்றன் அருள்நாடி தவமிருப்போம் நாளும்!

23. கண்களே தீவினைகள் காணாதீர் இனிமேல்
புண்ணாகும் சொற்களைநீ பேசாதே நாவே,
வீணான செயல்களை எண்ணாதே மனமே
அன்னையவள் பாதங்களைப் பணிந்திடுவோம் தினமே!

24. அன்னையை அருளுருவை அனுதினமும் வழிபட்டால்
மன்னுபுகழ் வாழ்வுதரும் வாழ்க்கை வளம்பெருகும்
இன்பநிலை எய்திடுவர் நெறியோடு செயல்படுவர்
அன்போடு அறமும் அனைவரையும் காக்கும்.

நூற்பயன்.

அன்பெனும் சொல்லெடுத்து ஆர்வத்தால் கவியாக்கி
உன்னையே பாடுகின்றேன் என்னாளும் - அன்னையே
மன்னுலகில் மாந்தரெலாம் துன்பவிருள் நீங்கி
இன்பநிலை எய்திடச் செய்.

No comments:

Post a Comment

You can give your comments here